விந்திய மலைகளுக்கு அப்பால் கவிதை ….
பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி
“கவிதை புற உலக நிஜத்தை ஊன்றிப் பார்த்து உள்ளபடியே பதிவு செய்யும் போது அது வேறு நிஜங்களின் உருவமாகவோ , குறியீடாகவோ உக்கிரம் பெற்று அந்த வேறு நிஜங்களின் குணாம்சங்கள் குறை நிறைகளை நிறுக்கும் சாதனம் ஆகிறது”
— எஸ். ஆல்பெர்ட்
தமிழில் பல மொழிகளில் எழுதப்பட்ட கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப்படும் மொழியாக மலையாளம் உள்ளது. ஆங்கிலம் வழியாக மொழிபெயர்க்கப்படும் பிற நாட்டு கவிதைகள் உதிரிகளாகவும், தொகுப்பாகவும் கிடைக்கின்றன. இந்தி உட்பட பிற இந்திய மொழி சிறுகதைகள், நாவல்கள் NBT மற்றும் சாகித்திய அகடெமி மூலம் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் புனைவுகள் மொழிபெயர்க்கப்படும் அளவிற்கு பிற மொழி கவிதைகள் மொழிபெயர்க்கப்படுவதில்லை…
இந்த சூழலில் தான் சென்ற ஆண்டு கவிஞர் . க. மோகனரங்கன் வட இந்தியாவில் பரவலாக அறியப்பட்ட சத்ஸயி பிஹாரியின் ரீதிகால இந்தி அகப் பாடல்களை மொழிபெயர்த்து இருந்தார். அதற்கு சற்று முன்பாக எழுத்தாளர் செங்கதிர் கபீரின் பாடல்களை மொழிபெயர்த்து இருந்தார் . அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தி மொழியை நன்கு கற்றறிந்தவரும் தமிழின் சிறந்த நாவலாசிரியரும் , சிறுகதையாசிரியரும் ,தன் படைப்பிற்காக இளவயதிலேயே பல உயரிய விருதுகளை பெற்றவருமான எம்.கோபாலகிருஷ்ணன் இந்திக் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார் .
நமக்கு அதிகம் பரிச்சயமற்ற இக்கவிதைகளை மொழிபெயர்ப்பதன் அவசியம் பற்றியும் கவிதைகளின் காலம்,அழகியல், களம், நிலப்பரப்பு என இந்திக் கவிதையின் வரலாற்று பின்புலத்தைப் பற்றி ஒவ்வொரு காலகட்டமாக சிறு குறிப்பாக முன்னுரையில் சொல்லிச் செல்லும் மொழிபெயர்ப்பாளர், 1960 க்குப் பிந்திய கவிதைகளே சமகாலக் கவிதைகள் என வரையறுக்கிறார். 1965-1975 காலகட்டம் இந்திய சமூகத்தின் கொந்தளிப்பான காலகட்டம். அரசியல் , பொருளாதாரம், பண்பாட்டுச் சூழல் உட்பட அனைத்தையும் கேள்விக்கும், மறுபரிசீலனைக்கும் உட்படுத்திய காலம். அக்காலகட்டத்தில் ஓங்கி ஒலித்த “எதிர்கவிதை” இயக்கத்தின்பால் அதிருப்தி கொண்ட முற்போக்கு கவிஞர்களின் குரலையே இத்தொகுப்பு அதிகமும் பிரதிபலிக்கிறது எனலாம் . புரையோடிப்போன பொருளாதாரத்தால் உண்டாகும் சமூக பிரச்சனைகளை ரொமாண்டிசைஸ் பண்ணுவதிலிருந்து விலகிய பார்வை கொண்டவர்களே சிறந்த சமூக அக்கறை சார்ந்த கவிதைகளை எழுதிட முடியும் ..
8 பெண்கவிஞர்கள் உட்பட 23 கவிஞர்களின் 179 கவிதைகள் கொண்ட விரிவான தொகுப்பு இந்நூல்.
1917ல் பிறந்த மூத்த கவி கஜானன் மாதவ் முக்திபோத்லிருந்து துவங்கி மிக இளைய கவியான 1991ல் பிறந்த சுபம்ஶ்ரீ வரை கிட்டத்தட்ட 75 ஆண்டு கால இந்திக் கவிஞர்களின் கவிதைகள் பிரதிநிதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெடிய கால அளவு அம்மொழியில் மாறிவரும் சமூக, அரசியல், பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப கவிதை மொழி எவ்வாறு மாறுகிறது, பயன்படுத்தும் வார்த்தைகளின் அர்த்தம் எப்படி வேறுபடுகிறது என்பதையும் , கவிஞர்களின் மீதான சமூகப் பார்வையும் அதற்கான கவிஞர்களின் எதிர்வினையையும் அனுமானிக்க உதவுகிறது.
பெரும்பான்மையான கவிதைகள் நீள் கவிதைகளாக அமைந்திருப்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இதன் மூலம் ஒரு பெரிய பரப்பில் ஓவியன் பல வண்ணங்களை பல அடுக்குகளாக தீட்டுவதன் மூலம் ஓர் காட்சியை தான் விரும்பிய வண்ணம் முழுமையாக பார்வையாளனுக்கு தருவது போல் கவிஞன் வெற்றுக் கோஷங்களின்றி, பாவனைகளின்றி, பூச்சுகளற்று சொல்ல வருவதை நேரடியாக சொல்ல முடிகிறது.
“குறியீடுகளையும் படிமங்களையும் பயன்படுத்துவதை விடுத்து தனிப்பட்ட நேரடியான அனுபவங்களின் விவரணைகள் நுட்பமாக சித்தரிக்கப்படுகின்றன” என எம்.கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த கவிஞர் அனுஜ் லுகனின்” அம்மா எப்போதாவது பலகாரம் செய்கிறாள் “ என்ற கவிதையை இதற்கு சரியான உதாரணமாக சொல்லலாம். அதுமட்டுமின்றி சமையலறைக்கு தன்னை தின்னக் கொடுக்கும் அம்மாக்களின் நிலையை ஆழமாக கூறிடும் கவிதையும்கூட. அவரது “என் அம்மாவும் நானும் நரிகளும்” கவிதை ஜார்கண்டில் , சடீஸ்கரில்,உத்தரகாண்டில் பல பழங்குடி சமூகப் பெண்கள் ஏன் ஆயுதம் ஏந்தி போராட நேர்கிறது அதன்பின்னிருக்கும் அதிகாரவர்க்கத்தின் , சாதி மற்றும் பொருளாதார நிலையில் உயரடுக்கில் இருப்பவர்களின் அத்துமீறல்களை குரலை உயர்த்தாமல் உள்ளது உள்ளபடி எளிய வார்த்தைகளில் உணர்த்திடுகிறது.
ஞானபீட விருது பெற்ற கவிஞர் அக்ஞேய வின் எளிய கவிதை
“மலை நடுங்கவில்லை
மரமும் மலை அடிவாரமும் கூட
நடுங்கவில்லை.
நடுங்குகிறது
மலைச்சரிவிலுள்ள வீட்டிலிருந்து
கீழே ஏரியின் மீது விழும்
தீபச் சுடரின்
சின்னஞ்சிறு பிம்பம்” .
மனதில் அழகான காட்சியாக விரியும் இந்த கவிதையை வாசித்தவுடன் நம்மை அறியாமல் ஒரு மெளனம் நம்மை சூழ்ந்து கொள்கிறது. அச்சுடர் ஊஞ்சலைப் போல்அசைந்துக் கொண்டே இருக்கிறது .
கவிஞர் கேதார்நாத் சிங்கின் புலி எனும் தலைப்பிலான கவிதை புலிக்கும் புத்தருக்குமான உறவை, புலிக்கும்அச்சிறிய நகரத்திற்குமான உறவை விளித்துச் சொல்லும் இரண்டு பகுதிகளை கொண்ட நீண்ட கவிதை, இத்தொகுப்பின் முக்கியமான கவிதை.
“……புத்தருக்குத் தெரியுமா புலியின் பாஷை என
மக்கள் கவலையுற்றிருக்க
பாவப்பட்ட புலிக்கு
புத்தரின் பாலி மொழி
புற்களைப்போல அழகாக இருந்தபோதும்
புசிக்கத்தகுந்ததாய் இல்லை.
ஒரு பக்கம் பசியோ பசி
மறுபக்கம் கருணையோ கருணை
இருவருக்குமிடையே
இவ்வாறு இருவருக்குமிடையே
விநோதமான உறவு…………”
எளிய சொற்கள் ஆனால் மீண்டும் மீண்டும் வாசிக்கையில் பல விஷயங்களை துலக்கி வாழ்வின் அபத்தத்தை மனதை கவ்வும் நிஜத்தை முன்னிருத்தும் உருவகங்களாக புலியும் புத்தரும்.
கவிஞர் மங்கலேஷ் டப்ராலினின் “எமது சாமிகள்” கவிதை பெருந்தெய்வங்கள் எப்படி சிறு தெய்வ வழிபாட்டு முறையையும் பண்பாடு கலாச்சாரத்தையும் பழங்குடி மனிதனுக்கும் அத்தெய்வங்களுக்குமான நெருக்கத்தை துடைத்தெறிகின்றன என்பதை மிக துயரத்துடன் முன் வைக்கிறது.
“பெருந்தெய்வங்கள் பள்ளியறையில் சுகமான மஞ்சத்தில்
சயனம் கொள்ளும் இரவுகளில்
எமது சாமிகள் துயரத்துடன் விழித்துக் கிடக்கிறார்கள்
தமக்கென இருக்கும் கையளவு பூமியையும் எல்லையையும்
அடித்துப் பறிக்கவென ஆற்றல் மிக்க பெருந்தெய்வங்கள்
படைநடத்தி வருகிறார்களோ என.
தாங்கள் அனுபவிக்கும் துயரங்களை
யாரிடமும் சொல்ல முடியாத
எமது சாமிகளின் மனத்துள்ளிருந்து
எப்போதேனும் கேட்க முடிகிறது
வேதனைமிக்க கூக்குரலை.”
……
நம் கிராமத்து தெய்வங்களின் நிலையும் இதுதான். அவர்களின் கூக்குரல் பெருந்தெய்வங்களின் ஆரவாரத்தில் அமுங்கி கிடக்கிறது. அவர்களால் இன்று முணுமுணுக்க கூட முடியவில்லை.
கவிஞர் கிரிராஜ் கிராதுவின் கவிஞன் பற்றிய கவிதை
“தினமும் அவனுக்கு நினைவுபடுத்தவேண்டியுள்ளது
கவிமொழியில் இல்லை
கவிஞனின் கடமை
அதைக் கண்டு கூசுவதே என”
தமிழ்கவிஞர்களுக்கு இது அதிகமும் பொருந்தும். அவருடைய இன்னொரு கவிதை இப்படி சொல்லிச் செல்கிறது
“அவளது உடலில் மறைந்துள்ள பிரார்த்தனைகளை என்னால்
கேட்கவோ புரிந்துகொள்ளவோ இயலவில்லை
நான் என்னுடலை சோதிக்கிறேன்
பிரார்த்தனைகள் எதுவும் எங்கும் மறைந்திருக்கவில்லை
‘முந்தைய பிரார்த்தனையின் முணுமுணுப்புகள் உன்உடலில்’
‘காஃபிர்களால் கேட்க முடியாது அவற்றை,
அவள் எனது இச்சைகளை ஆடைகளைப் போல் போர்த்தி
தன்னையே மூடிக்கொள்கிறாள்
நான் அவளது காஃபிர் உடலில் மறைந்துள்ள பிரார்த்தனைகளில்
இறங்குகிறேன்.
இவரின் பெரும்பாலான கவிதைகள் உரைநடை பாணியில் அமைந்தவை . இவரும் மங்களேஷ் டப்ராலும் புகழ் பெற்ற உரைநடை கவிஞர்கள்.
பெண்கவிஞர்களின் பெண் சார்ந்த கவிதைகளில் கூட பெண்ணுடலை மையப்படுத்தாமல் சுயம் நசித்தலின்றி தன் ஆளுமையை முன்னிறுத்தி பேச முடிகிறது .வீடென்பது பெண்களுக்கானது என்ற பொதுபுத்தி சார்ந்த கருத்தை அதே வீட்டீல் கூட அவளுக்கென்று ஓரிடம் இல்லை என்பதை இப்படி வெளிப்படுத்துகிறார் கவிஞர் அனாமிகா
“பெண்கள்
காற்றையும் வெளியையும்
மண்ணையும் போன்றவர்கள்
அவர்களுக்கென வீடுகள் கிடையாது
வீடே இல்லாதவர்கள்
இடத்தைப் பற்றி என்ன கேட்க முடியும்? “
அனாமிகாவின் கவிதைகள் “போர்வை”, “பெண்கள்”, “ இடமற்றவர்கள்” ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக ஒலிப்பவை.
இத்தொகுப்பில் வரும் பல அம்மா பற்றிய கவிதைகளிலும் “அம்மா” சமையலறையில் முடங்கிப் போனவராகவே இருப்பது அங்கு நிலவும் சமூக சூழலையே பிரதிபலிக்கிறது.
“சமையலின் அந்த இறுதி நொடியை தவற விடும் போது
நறுமணத்தை நுகர்ந்து கண்ணயரும் போது
கொதிக்கும் குழம்பைக் கண்டு எரிச்சல் மேலிடும்போது
சமையலறையின் ஜன்னல்களை திறந்து வைக்கிறாள் அவள்
அந்த நாள் முழுவதும் கழிகிறது வருத்தத்துடனே”
சமையலறையிலிருந்து விடுபடமுடியாத பெண்களின் நிலையை வியர்வையின் நசநசப்புடன் நம்முன் நிறுத்தும் கவிஞர் மோனிகா குமார் இன்னுமொரு பெண்குரல்.
கவிஞர் நிர்மலா கார்கின் சிறுகவிதைகளின் சொற்சிக்கனம் மிகுந்த அர்த்தச் செறிவு கொண்டவை
“பூகம்பம் வருவதற்கு முன்பு
எலிகள் வளையைவிட்டு ஓடுவதுபோல
வார்த்தைகளை விட்டு நீங்குகின்றன
அர்த்தங்கள்“
……..
“தனிமைக்கும் உண்டு
தன் பிடிவாதம்”
……
“என் சொல்லகராதியிலிருந்து
காற்றாடிகளைப்போல் பறந்துவிட்டன
ஏராளமான சொற்கள்”
………
கவிதை தொகுப்புகள் பற்றிய இவரது கவிதை
“ஃபேர் அன்ட் லவ்லியின்
அழகுப் பொருட்களின் விற்பனை
எட்டாயிரம் கோடி
கவிதைத் தொகுப்புகள்
அச்சிடுவதோ
முந்நூறு பிரதிகள்”
ஆக எல்லா மொழியிலும் கவிதை தொகுப்புகளின் நிலை இதுதான் போலும் .

நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்களில் இறப்போரை விட கடவுளின் பெயரால் இறப்போர் அதிகம் இல்லையா? இன்றைய சூழலில் அதிக பொருத்தமுடையது இக்கவிதை.
“அமைதி வேண்டி
கடவுளை கற்பனை செய்தேன்
கடவுளின் மாண்புக்கென
கணக்கற்ற யுத்தங்கள் புரிந்தேன்”.
இளம் கவியான சுபம்ஶ்ரீ கவிதைகள் நவீன யுகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கருவாக கொண்டவை. “எனது பாய்ஃபிரண்ட”, “விடுதியின் துப்புரவுப் பணியாளர் சேனிடரி நேப்கினை அப்புறப்படுத்த மறுத்து விட்டார்”எனும் நீண்ட தலைப்பு கொண்ட கவிதையும் சிறப்பானவை.
கவிஞர் ஶ்ரீகாந்த் வர்மா முக்கியமான கவி அவரின் கலிங்கம் எனும் கவிதை.
“அசோகன் மட்டுமே திரும்பி வருகிறான்
மற்றனைவரும்
கலிங்கம் எங்கே என கேட்கிறார்கள்
அசோகன் மட்டுமே தலை குனிந்திருக்கிறான்
மற்றனைவரும்
வென்றவர்களாய் வீறுநடைபோடுகிறார்கள்
அசோகனின் செவிகளில் மட்டுமே
அழுகுரல்கள் ஒலிக்கின்றன
மற்றனைவரும் சிரித்தபடி
வெற்றிமுழக்கம் எழுப்புகிறார்கள்
அசோகன் மட்டுமே ஆயுதங்களைத் துறந்திருக்கிறான்
போரிட்டுக் கொண்டிருந்தவன்
அசோகன் மட்டுமே…..”
போர் என்றாலே வெற்றியும் வீழ்ச்சியும் மட்டுமல்ல. அதைத் தொடர்ந்து நிகழும் வக்கிரங்களும், அட்டூழியமும், அடாவடித்தனமும்தான் என போரின் அவலத்தை அபத்தத்தை அசோகனின் மனநிலையில் சொல்லும் அபாரமான கவிதை இது.
மழை பொய்த்துப் போவது ஆதிவாசிகள் தங்கள் வாழ்விடத்திலிருந்து விரட்டப்பட்டதே காரணமாக இருக்கக் கூடுமோ என கேள்வி எழுப்புவதன் மூலம் ஆதிவாசிகளை அதிகாரவர்க்கத்தின் , கார்ப்பரேட்களின் இரும்புக் கரங்களால் வனங்களிருந்து , வன தேவதைகளிடமிருந்து பிடுங்கி வீசியெறிந்து நிர்மூலமாக்குவதன் மூலம் வனங்கள் மூளியாக்கப் படுகின்றன என்கிறார் கவிஞர்.விநோத் குமார் சுக்லா. ஆதிவாசிகளின் சோகத்தை, மனதாக்கத்தை அழுத்தமாக சுக்லாவின் “இன்னும் மழை வரவில்லை” பதிவு செய்கிறது.
“ஆதிவாசிகளே, மரங்கள் உங்களை விட்டுச் செல்லவில்லை
நீங்களும் காடுகளைவிட்டு நீங்களாக நீங்கவில்லை
நகரத்தின் நடைபாதைகளில்
அரைநிர்வாணக் குழந்தைகள்கொண்ட குடும்பத்துடன்
நீங்கள் தட்டுப்படுகிறீர்கள் இந்த வருடம்
இதுவும் காரணமாக இருக்கக்கூடுமோ?”. ……,
……..
ஆதிவாசி இனமே இல்லாமல் போவதற்கான ஆபத்தின் அறிகுறியல்லவா இது??
வாழவும் முடியாத, இறக்கவும் வழியற்ற கையறு நிலையை விளித்துச் சொல்லும் கவிதை அதிகாரவர்க்கத்திற்கெதிரான வலிமையற்றவர்களின் இயலாமையை காட்சிபடுத்துகிறது.
தொகுப்பின் முதல் கவிதையாக உள்ளது மூத்த கவி கஜானன் மாதவ் முக்தி போத்தின் “பிரம்மராக்ஷஸ்” நீண்ட கவிதை . மேன்மையான , அபாரமான கவிதை. அதில் ஓர் பகுதி
“நூற்றாண்டுகளின் புண்ணியத்தின் சுவடுகள்
வனத்தின் பச்சை வாசனையில் உறைந்து
காற்றில் நீந்தி வந்து
பலத்த சந்தேகத்தை எழுப்புகின்றன
யாருமறியாத காலாவாதியான அந்தப் பழஞ்சிறப்பை
பெரும் கவலையைப் போல்
பாய்ச்சுகிறதோ
இருதயத்தில்”
…………..
பாழ்கிணற்றின் ஆழத்தின் வெறுமையில்
உட்கார்ந்திருக்கிறான் ஒரு பிரம்மராக்ஷஸ்………
தேஜி குரோவரின் “முடிவின் கவிதை” ,பிரபாத்தின் “ விடைபெறுதல் கவிதை”, “நடந்து செல்வதற்கு ஒரு கவிதை”, அசோக் வாஜ்பாயின் “எஞ்சியிருப்பது “, சந்தாலி இனத்தை சேர்ந்த நிர்மலா புதுலின் “நீ என்னிடத்தில் இருப்பாயானால்” ,ஞானபீட விருது பெற்ற கவிஞர் குன்வர் நாராயணனின் “மீதிக் கவிதை”என பல முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை கொண்ட தொகுப்பு.
இக்கவிதைகள் எழுதப்படுவதற்கான சூழலில் பல்வேறு புறம்சார்ந்த காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ஆயுமேந்திய இனக்குழுக்கள், குழந்தை திருமணம், பலதார மண முடிப்பு, உறவுமுறை சார்ந்த சிக்கல்கள் , கல்விச்சூழல்,பொருளாதார, சாதிய அடுக்குமுறைகள், அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறை,பழங்குடி,ஆதிவாசிகளின் இழப்பு, பெண்களின் நிலை எனபலவும் பாடு பொருளுக்கு காரணமாகிறது.சொற்சிக்கனத்தையும், இறுக்கமான வடிவத்தையும் விடுத்து நெகிழ்வான, நேரடியான கூறல் முறை கொண்டவைகளாகவே இக்கவிதைகள் அமைந்துள்ளன. இதுவே இவற்றின் பலமும் பலவீனமும்.
தமிழிற்கு என நீண்ட கவிதை மரபு உள்ளது. அதன் செழுமையை தமிழ் நவீன கவிதையின் வளர்ச்சிப் போக்கில் நாம் அடையாளம் காணவியலும். மேலும் பல மொழி கவிதைப் போக்குகளின் அறிமுகம் வாயிலாக பரிசோதனை முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது. இன்று தமிழ் கவிதைகள் அவற்றின் பாடு பொருள், சொற்சிக்கனம், கூறல்முறை, புதுமை நாட்டம் எனப் பலவகைகளிலும் முன்னோக்கி நகர்ந்துள்ளது. பிற இந்திய மொழிக் கவிதைகளோடு ஒப்பிட்டு நோக்குவதன் வாயிலாகவே நமது தமிழ்க் கவிதை அடைந்திருக்கும் சிறப்புகளையும் அது இன்னும் எட்டவேண்டிய உயரங்களையும் நாம் அடையாளம் காணமுடியும். அதற்கு கோபால கிருஷ்ணனின் இத் தொகுப்பு நமக்கு மிகவும் உதவுகிறது. .வாழ்த்துகள் கோபாலகிருஷ்ணன்.
சிறப்பாக வடிவமைத்து பதிப்பித்த நூல்வனம் மணிகண்டனுக்கும் வாழ்த்துகள்.
—

அ.முனவர் கான்
முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர்.