1.

அன்று நாங்கள் பிடித்த சுண்டெலிகள் மட்டும் எப்படியும் ஐம்பதாவது இருக்கும். ‘நாங்கள்’ என்றால் நான் முருகன், பொன்னன். எனக்கு பெயர் தேவையில்லையென்று நினைக்கிறேன். ‘நான்’ நான்தான்.

 வேர்க்கடலை போட்டு புடுங்கிய காடு என்பதால் எல்லா எலிகளுமே நன்கு விளைந்தவைகளாக இருந்தன. காடு முழுக்க சுண்டெலிகள் வலை அமைத்து ராஜாங்கம் நடத்தியிருக்கின்றன. தோண்டும் தோட்டுகளில் எல்லாம் கிலோ கணக்கில் வேர்கடலைகளையும் அதன் துதிகளையும் பார்க்க முடிந்தது. ஒரு தோட்டுக்கு எப்படியும் ஆறு ஏழு எலிகளாவது கிடைத்திருக்கும். எலி பிடித்து ஓய்ந்த நாங்கள் கிளுவை வேலியோரம் வான்தொட வளர்ந்திருந்த ஒற்றைப்பனை காய்ந்த தன் மட்டைகளை உதிர்த்திருக்க அதில் ஒன்றை கொண்டுவந்து வைத்து தீ மூட்டினோம். மட்டை மேலே பிடித்த எல்லா சுண்டெலிகளையும் படர்த்தி வைத்திருந்தோம். தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கி பிறகு வேகம் கொண்டது. எல்லா சுண்டெலிகளும் சகட்டுக்கும் தீயில் பொசுங்கி வெந்தன.  அவற்றின் சிறு வால்களும் கால்களும் கருகி உதிர்வதை பார்க்க முடிந்தது. சுண்டெலிகளின் தேகம் வேகும் மணம் நாவில் எச்சில் கூட்டியது. பொன்னன்தான் பச்சை புளியங்குச்சிகளை ஒடித்து தீயில் வெந்துகிடந்த சுண்டெலிகள் ஒவ்வொன்றையும் கிளறிக் கிளறி தேடி எடுத்து ஏற்கனவே ஒடித்து வைத்திருந்த பப்பாளி இலையில் சாம்பல்களை ஊதிவிட்டு வைத்தான். வால் மற்றும் கால்கள் உதிர்ந்த நிலையில் வெறும் முண்டமாய் கோலிக்குண்டுக் கணக்கில் எல்லா எலிகளும் மல்லாந்தும் அட்டம் சாய்த்தும் குப்புறவுமாக கிடந்தன. சில எலிகளின் வயிறு வெடித்து குடல் தள்ளி கிடந்தன. வெளித்தள்ளிய குடல்களும் லேசாய் கருகிய நிலையில் தென்பட்ட எலிகளைப் பார்க்கும்போது எலிகள் நன்றாக வெந்துவிட்டன என்றுபட்டது. குடல்களை எடுத்து நாயிக்கு போடவும் மனமில்லை. சுண்டெலி குடல் அவ்வளவு பெரிதா என்ன. அதிலும் வேர்க்கடலையைத் தவிர வேறு எவற்றையுமே திங்காத சுண்டெலிகளை குடலோடு அப்படியே திண்றால்தான் ருசி, அதுதான் சத்தும் கூட என்று நாங்களாகவே அபிப்ராயங்களை பகிர்ந்துகொண்டு கூடி உட்கார்ந்து எலிகளை மூன்று பங்காகப்போட்டுக்கொண்டு நறுக்முறுக்கென்று கடித்து புசித்து விழுங்கினோம். சுண்டெலியின் எலும்புகள் மாவுபோல நொறுங்கி நாவுக்கும் தொண்டைக்கும் சுவை கூட்டியது. குறிப்பாக சுண்டெலிக் குடல் மணமாகவும் அதீத சுவையாகவும் இருந்தது. தலையை கடிக்கும்போது சுண்டெலியின் மூளை விநோத சுவையோடு நாவில் படர்ந்து வயிற்றுக்குள் பயணப்பட்டது. நாங்கள்  எல்லாம் முடிந்து கிளம்பிய வேளையில் பொழுது சாய்ந்திருந்தது. வானம் சிவப்பும் மஞ்சளுமாய் வர்ணஜாலம் காட்டுவதை அதிசியத்து பார்த்துக்கொண்டே கீழ்வயல் வரப்பு வழியே ஊர்போகும் பாதை நோக்கி நடந்தோம். தூரத்தில் லாலாகிருஷ்ணா தியேட்டரில் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே…’ என்ற ரிக்கார்டு படித்தது காற்றின் வழியே கசிந்து எங்கள் செவி உரசியதும் முருகன்தான் கேட்டான்… “விநாயகர் காலடில உட்கார்ந்திருப்பது பெருச்சாலியா சுண்டெலியா?” என. நான் பெருக்கான் என்றேன். பொன்னன் சுண்டெலி என்றான். ‘ஆகமொத்தத்துல அது எலி’ என்று கூறி முடித்துவைத்தான் முருகன்.

 சுண்டெலியைக்காட்டிலும் வெள்ளெலிக்கறி அணிக்கறி போலவே நல்ல சுவையாக இருக்கும். துருதுருவென முட்டைக்கண்களோடும் நீண்ட வாலோடும் சற்றே பெரிய காதுகளோடும் இருக்கும் வெள்ளெலி பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். மழை பெய்து ஓய்ந்த இரவுகளில் நீங்கள் ஒற்றையடிப்பாதைகளில் பயணித்தவராய் இருந்தால் நிச்சயம் உங்கள் கண்களுக்கு வெள்ளெலி தட்டுப்பட்டிருக்கும். காலுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாய் ஓடும். டார்ச் லைட்டை அதன் மேல் அடித்தால் எங்கிட்டும் ஓடாமல் அதே இடத்தில் அமர்ந்துகொண்டு லைட்டையே குறுகுறுவென பார்க்கும். வெள்ளெலி வேட்டைக்கு கொஞ்சமாவது தூத்தல் விழுந்திருக்க வேண்டும். நிலம் குளிர சலும்பப் பெய்த மழையெல்லாம் தேவையில்லை. மண்புரண்டிருந்தால் போதுமானது. வேலிகள், முள்காடுகள், ரோட்டோரங்களென்று அதுபாட்டுக்கு கும்மாளம் போட்டுத் திரியும்… அதன் அடிவயிறு பால்போன்ற வெண்ரோமங்களால் ஆனது. மேலே முதுகுப்பக்கம் சாம்பல் நிறத்திலும் கருஞ் செவலை நிறத்திலும் இருக்கும். கறி பஞ்சுபோன்று மிருதுவாக இருக்கும். வெள்ளெலி எலும்புகளும் கூட கடினத்தன்மை கொண்டதெல்லாம் இல்லை. அப்பளம் உடைவது போலத்தான்.

அன்று மழை பிடித்து அடித்த வேகத்திலேயே விலகியும் விட்டது. வெக்கை வெளியெல்லாம் நிரம்பிவிட்டது. வீட்டுக்குள் இருக்க முடியவில்லை. அப்படி இப்படியென்று புரண்டுபடுத்தாலும் தூக்கமும் வந்தபாடில்லை. வெளியே வந்து திண்ணையில் அமர்ந்திருந்தேன். அந்த நேரத்தில் தோதாக பொன்னன் வர, பேசி முடித்து வெள்ளெலி வேட்டைக்கு கிளம்பினோம். கூடவே நாய்களும் சேர்ந்துகொண்டன.

வரட்டாற்றங்கரையோரம் நிறைய சீமைக்கருவேல மரங்கள் காய்பிடித்து தரை தவழ அடர்ந்து கிடந்தன. கரைக்கு அந்தப்பக்கம் சுடுகாட்டு பகுதிக்கு போனால் வெள்ளெலிகள் நிறைய கிடைக்கலாம் என்று பட்டது. பொன்னன் தமது எவரடி லைட்டை கொண்டுவந்திருந்தான். நான்கு பேட்டரி கட்டைகள் போடும்படியான லைட். அடித்தால் அம்பு குத்தியது போல அவ்வளவு கூர்மையாக இருக்கும். வெள்ளெலி மீதெல்லாம் அடித்தால் அதன் கண்கள் பொட்டையாகப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு பவர். வேட்டை உபகரணங்களென்று எதையும் தேடிக்கொள்ளவில்லை. வெள்ளெலிக்கு லைட்டும் ஒரு கவண் வில்லும் இருந்தால் போதுமானது. எதிர்பார்த்தது போலவே சுடுகாட்டு சங்கம் புதர்களில் நிறைய வெள்ளெலிகள் தென்பட்டன. அவ்வளவும் நன்கு விளைந்தவை. பொன்னன் லைட் போட நான் கவண் வில்லில்  குறிபார்த்து எறிந்தே பதினெட்டு உருப்புடிகளுக்கு மேல் எடுத்தோம். வீடு திரும்பும்போது அவனுக்கு எட்டு எலிகளை கொடுத்துவிட்டு பத்தை நான் கொண்டுவந்துவிட்டேன். எலிக்குழம்பு வச்சே சமையல் சாமான்களெல்லாம் காலியாவதாக அம்மா எரிச்சல்படுவது வாடிக்கை. அன்றும் எனது கைகளில் எலியைப் பார்த்தவுடன் அஞ்சறைப்பெட்டியைப் பார்த்தவாறே புலம்பினாள்.

2.

அது நல்ல உறைபனி காலம். வயலில் நெல் பயிர்கள் பூட்டெடுத்து பால் வைத்திருந்தது. எங்கள் தோட்டத்தின்  மூன்றுபக்கமும் ‘ப’ வடிவில் தென்னம்பிள்ளைகள் காவல் வீரர்கள் போன்று நிமிர்ந்து நிற்பதை மேட்டுப்பகுதிகளில் இருந்து பார்க்கும்போது அழகு பட்டுத்தெறிக்கும். நடுவில் துண்டு துண்டாக பிரிக்கப்பட்ட எல்லா வயல்களிலுமே அப்பா  நெல்தான் பயிரிடுவார். ஊடுபயிர்களுக்கு வேலையில்லை. கிணற்று மேட்டில் இருந்த சிறு துண்டு நிலத்தில் மட்டும் வீட்டு குழம்புக்கு ஆகுமே என்று கொஞ்சமாய் தக்காளி வெங்காயம் கத்திரி வெண்டைக்காய் பத்து மிளகாய் செடிகள் என்று வைத்திருப்பார். என்றாலும் நெல்தான் பிரதானம். நெல் பால் பிடித்து முற்றி கதிராகிக்கொண்டிருந்த நாட்களில் எலிகளின் தொல்லை அதிகமாகியது. நெற்பயிர்களை இஷ்டத்திற்கு தமது கத்தரிப் பற்களில் கடித்து நாசம் பண்ணிக்கொண்டிருந்தது அப்பாவுக்கு நிரம்ப வெசனத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். எலிகளை எப்படியும் காலிபண்ணியாக வேண்டும் என்ற முடிவோடு இருந்தார். பொட்டுணம் கட்ட உதவும் நூல் அளவிலான கம்பி அப்போது கடைவீதியில் எல்லா கடைகளிலுமே கிடைத்தது. அதில் நான்கைந்து பண்டல்களை வாங்கிவந்தார். சிறு சிறு குச்சிகளை கூராய் செதுக்கி நெல்வயலின் வரப்போரங்களில் எல்லாம் நான்கு அடிக்கு ஒரு குச்சியென்று ஆழமாய் ஊன்றி அதில் தரைக்கு மேலே இரண்டு இஞ்ச் அளவில் இடைவெளிவிட்டு தோட்டம் முழுக்க லைன் இழுத்தார். கம்பியின் மறுமுனையை மோட்டார் ரூம் அருகில் இருந்த வாகை மரத்தடியில் கொண்டுபோய் போட்டிருந்தார்.

அன்று பகலெல்லாம் வயலுக்கு கரண்ட் கம்பி லைன் இழுக்கும் வேலையிலேயே கழிந்தது. எல்லா வேலையையும் முடித்துவிட்டு இறுதி வேலையாக தோட்டத்தைச் சுற்றிலும் அவசர ஆத்திரத்திற்கு வெளியே போகும் கிளை பாதைகளில் சீமக்கருவேல முற்களை வெட்டிப்போட்டு அடர்த்தியாக வேலி போல தடுப்பு அமைத்தவர் அப்படியே தோட்டத்தைச் சுற்றி இருந்த ஒன்றிரண்டு வீட்டுக்காரர்களிடம் போய் “இரவு தோட்டத்துக்குள் யாரும் வராமல் பாத்துக்கங்க எலித்தொல்லை தாங்கல… அதான் கரண்ட் போடலாம்னு இருக்கேன்” என்று சொல்லி வைத்தார். ‘திருட்டுப் பொணச்சலுக்கு இடம் கிடைக்காமல் யாரும் பொம்பளைய கூட்டிக்கிட்டு தோட்டத்துக்குள்ள வந்து எலிக்கு போட்ட கரண்ட் லைன்ல அடிபட்டுச் செத்தா அப்றம் கோர்ட் கேசுனு நாம அலைஞ்சி சாகனும்’ என்று அவராகவே புலம்பியும் கொண்டார்.

அன்று இரவு பத்துமணிக்கு மேல் ஊர் அடங்கிய நேரத்தில் அப்பா என்னையும் அண்ணனையும் அழைக்க, மூவருமாய் தோட்டத்திற்கு சென்றோம். காற்றில் ஈரம் முழுதாய் நிரம்பியிருக்க உடம்பெல்லாம் ஜில்லிட்டது. சில் வண்டுகளின் ஓசை விடாது கேட்டுக்கொண்டேயிருக்க அப்பா “காலடியைப் பார்த்து சூதானமா வாங்க. பூச்சி பொட்டு கெடக்கும்” என்றார். பக்கத்து தோட்டக்காரர்களின் மோட்டார் ரூம்களில் குண்டுபல்புகள் தூங்குமூஞ்சிக்கணக்காய் மிகவும் கஷ்டப்பட்டு ஒளியை வெளித்தள்ளிக்கொண்டிருந்தது. 

வயலில் போட்ட லைன் கம்பியின் மறுமுனையை எடுத்து தொரட்டியில் சுற்றி அதை டார்ச் லைட் வெளிச்ச உதவியோடு மிக கவனமாக போஸ்ட் மர கரண்ட் கம்பிகளில் ஒன்றின் மீது கொக்கி போட்டார். அப்போது சில தீப்பொறிகள் பறந்தது. தற்போது வயலைச் சுற்றி கரண்ட் பாய்வது உறுதியானது. அன்று சாமம்வரை தோட்டத்துக் கொட்டகையிலேயே இருந்தோம். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் பனி மிகக்கடுமையாக கொட்டியது. நானும் அண்ணனும் தோட்டத்து கொட்டகையிலேயே எப்போதும் கிடக்கும் கருப்புநிற கம்பளியை இறுகப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டோம். அப்பா மட்டும் கொட்டக்கொட்ட விழித்தபடி பீடியை ஊதிக்கொண்டு அந்தக் கொட்டும் பனியிலும் நெல் வயல்களையே வெறித்துக்கொண்டிருந்தார்.

அன்று இரவு அதிகாலை மூன்றுமணிக்கு மேல் வயல்களைச் சுற்றிப் பாய்ந்த கரண்டை அப்பா துண்டித்து விட்டார். இந்நேரம் வயலில் அழிச்சாட்டியம் செய்த எலிகள் காலியாகியிருக்கும் என்பது அப்பாவின் நம்பிக்கை. பிறகு அப்பா “விடிந்ததும் வயலைச் சுற்றிப்பார்த்துவிட்டு எலி எதுவும் கரண்டில் பட்டுக் கிடந்தால் எடுத்திட்டு வீடுவந்து சேருங்க” என்று சொல்லிவிட்டு பீடி வாங்கவென்று தக்கிடி தோப்பின் வழியே ரோடேறி கடைவீதி போய்விட்டார்.

பனியில் வெளியெல்லாம் உறைந்திருப்பதை பார்க்க முடிந்தது. பளபளவென விடிந்த பொழுதில் நானும் அண்ணனும் எலி பொறுக்குவதற்கென்றே ஒரு கட்டைப்பையை எடுத்துக்கொண்டு வயலைச் சுற்றி வந்தோம். கேணி மேட்டுக்கு பக்கத்தில் இருந்த வயலிலேயே எட்டு பெருச்சாலிகள் கம்பிமேல் விறைத்துக்கிடந்தன. அப்படியே சுற்றிவந்தால் வரப்பெலி, சுண்டெலி, மூஞ்சுறு, முகட்டெலி என்று சகட்டுக்கும் கம்பியில் பலியாகிக் கிடந்தன. தவளைகளோ எண்ணிக்கையற்று சரஞ்சரமாக பாய்ந்த வாக்கிலேயே இறந்துகிடந்தன. வரப்பில் முழங்கால் உயரத்திற்கு வளர்ந்திருந்த அருகம்புற்களில் பனி உறைந்து சளி போல திட்டுத்திட்டாய் படிந்திருந்தது கால்களில் பட்டு நசநசத்தது. முகட்டெலி, மூஞ்சுறுகளையெல்லாம் தூக்கி வேலியில் வீசிவிட்டு அண்ணன் பெருச்சாலிகளையும் வரப்பெலிகளையும் மட்டும் கட்டைப்பையில் போட்டுக்கொண்டான். பனைமரத்து வயல் மூலையில் பெரியதொரு சாரைப்பாம்பு கரண்டில் சிக்கி இறந்து கிடந்தது கண்டு நானும் அண்ணனும் ஒரு நொடி ஆடிப்போனோம். பிறகு அதையும் அண்ணன் வாலைப்பிடித்து இழுத்து வேலிக்கு வெளியே சீமைக்கருவேல புதருக்குள் வீசியெறிந்தான்.

எப்படியும் ஐம்பது எலிகள்வரை தேறும். வரும் வழியிலேயே சித்தப்பா வீட்டுக்கு மூன்று பெருக்கானும் ஐந்து வரப்பெலிகளையும் கொடுத்துவிட்டு வந்தோம். வீட்டுக்கு வந்து எலிகளை திண்ணையில் கொட்டும்போது   அம்மா அதிசயித்துப்பார்த்தாள். ‘இவ்வளவு எலிகளும் நாசம் பண்ணினா அந்த வயல் என்னத்துக்கு ஆகும்’ என்று புலம்பினாள். ‘விளையிற நெல்லையெல்லாம் இந்த எலிகளே சாப்பிட்டுச்சுனா நமக்கு மசுருதான் மிச்சமாகும்’ என்றபடியே அண்ணன் அடுத்தகட்ட வேலைகளுக்கு ஆயத்தமானான்.

வீட்டின் பின்புறம் காய்ந்த தென்னை மட்டைகளைப்போட்டு எல்லா எலிகளையும் வாட்டி சுத்தம் பண்ணினோம். வாட்டும்போதே தம்பி எலி வால்களை பிய்த்து கஷ்டப்பட்டு மென்று தின்றான். உள்ளதிலேயே சிறு எலிகளாய்ப் பார்த்தெடுத்து அதன் குடலை நீக்கிவிட்டு உள்ளே உப்பு, மிளகாய்ப்பொடி வைத்து எண்ணை வடிய நன்கு வேகும்படி சுட்டு ஆளுக்கொன்றாய் தின்றோம். கருகல் மணம் நாசியை தூக்க அவ்வளவு ருசி அந்த எலிகள். பெருவெட்டு எலிகளையெல்லாம் அதன் ரோமங்கள் போகும்படி நன்கு வாட்டி குடலெடுத்து சுத்தம் பண்ணி மஞ்சள் பொடி போட்டு தேய்த்து கழுவும்போது எலிகளின் தேகங்கள் குமரிப்பொண்ணு  கணக்காய் மினுமினுத்தன. கறி வெட்டுவதற்கென்றே வீட்டில் எப்போதுமிருக்கும் வெட்டுக்கட்டையில் அண்ணன்தான் எலிகளை பல துண்டுகளாக அல்வாத்துண்டுகள் கணக்காய் வெட்டி குத்துச்சட்டியில் போட்டான். ரொம்பவும் சிறிய துண்டுகளாக வெட்டினால் சரிப்படாது என்றும் சற்று பெரிய பீஸ்களாக இருந்தால்தான் கையில் எடுத்துப் பிடித்து  கடிக்க நன்றாக இருக்கும் என்றும் அப்பா அடிக்கடி சொல்வதை நினைவில் வைத்துக்கொண்டு அண்ணன் அதற்கு தகுந்தாற்போன்றே வெட்டினான். வெட்டிய கறியால் ஒரு குத்துச்சட்டியும் நிரம்பிவிட்டது. பக்கத்து வீடு, எதுத்த வீடு, சொந்தம் பந்தமென்று கொடுத்தது போக மிச்சமிருந்த எலிகளே ஒரு குத்துச்சட்டி நிரம்பிவிட்டது என்றால் எல்லா எலிகளையும் நாமே குழம்பு வைக்க நினைத்தால் தனியே சமையலுக்கு ரெண்டு ஆட்களைப்போட்டுத்தான் சமைக்கவேண்டும் என்ற நினைப்பு வேறு உள்ளுக்குள் ஓடியது.

அம்மா அடுக்களையில் குழம்புக்கான வேலையில் மும்மரமாய் இருந்தாள். அக்கா வெங்காயம் பூண்டு உரித்தபடியே இலங்கை வானொலியில் ‘கவிதைச்செண்டு’ நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தாள். அம்மா மொளகா செலவுகள் அம்மியில் அரைக்கும் சத்தம் சங்கீதமாக வீடெல்லாம் பரவியது. பத்து மணி வாக்கிலெல்லாம் எலிக்குழம்பு வாசம் தெருவே மணத்தது.

எலிக்குழம்புக்கு அரிசிச்சோற்றை விட கேப்பைக்கூழ், கம்பங்கூழ்தான் நல்ல இணையாய் இருக்கும். என்றாலும் அம்மா உரலில் குத்தி புடைத்து பச்சரிசி சோறு வடித்திருந்தாள். சோற்றில் ஆவி அலையலையாய் எழும்பிக்கொண்டிருந்தது. எல்லோர் தட்டிலேயும் சோற்றுக்கு மேலே எலிக்கறி மலைபோல குவிந்திருந்தது. வீட்டில் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்துகொண்டு எலிக்கறியை ஒரு புடி புடித்தோம். தக்கை தக்கையான பெருக்கான் கறி மசால் மணத்தோடு சாப்பிடச் சாப்பிட அமிர்தமாய் தொண்டைக்குள் கரைந்தது.

தம்பி புறங்கையில் குழம்பு வடிய வடிய எலி மண்டையை கரண்டிக்கொண்டிருந்தான். நாய் பூனைகளெல்லாம் எங்களுக்கு எலும்பாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் வீட்டையே சுற்றிக்கொண்டிருந்தன…

3.

ஊரில் எலி பிடிக்கவென்றே சித்தன் என்பவர் இருந்தார். அவரிடம் நூற்றுக்கணக்கில் இடுக்கிகள் இருந்தன. கரண்டு போட்டு எலியை அழிக்கத்தெரியாத தோட்டத்துக்காரர்கள் பெரும்பாலும் சித்தனையே அனுகினார்கள். திருச்சி வானொலியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் எத்தனை முறை எலி ஒழிப்பு முறை குறித்து விளக்கினாலும் அதெல்லாம் வேலைக்கு ஆகாததாகவே இருந்தது. ஒரு எலி பிடித்தால் சித்தனுக்கு ஐந்து ரூபா கூலி. தினமும் அவர் வைக்கும் இடுக்கிகளில் குறைந்தது இருபது எலிகளாவது சிக்கிவிடும். இப்படியே தினமும் எரனூறு முந்நூறு சம்பாதிப்பவராக இருந்தார் சித்தன். இவருக்கு ஒருவகையில் டபுள் வருமானம். எலி பிடித்தாலும் காசு, பிடித்த எலியை வெளியே விற்றாலும் காசு.

அப்பாவும் சித்தனும் நல்ல நெருக்கத்தோடிருந்தார்கள். ஒருவகையில் சொந்தம் வேறு. எங்கு எலி கிடைத்தாலும் சித்தன் அப்பாவிடம் கொண்டுவந்து கொடுத்துவிடுவார். அப்பாவும் வேட்டைப் பண்டத்தை சும்மா வாங்கக்கூடாது என்று கையில் கிடைத்த இருபதையோ முப்பதையோ கொடுத்துவிடுவார். எலிக்குழம்புக்கு மிளகாய் செலவுகள் அரைத்து அரைத்தே அம்மாவின் கைகால்கள் ஓயும். அடிக்கடி இதனால் அப்பா அம்மாவுக்கு இடையே சண்டைகளும் மூளும். ஆனால் அம்மா கோபமேதுமின்றி விரும்பி குழம்பு வைத்தால் அந்தக்குழம்பு தேன் ரகம்தான். எலிக்குழம்பின் போதெல்லாம் எங்களுக்கு ஏனோ திருவிழா கணக்காய் வீடு கலைகட்டியிருப்பதாகப்படும்.

பொழுது சாயும் நேரங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடிக்கிகளை தூக்கி தோளில் சுமந்தவாறே சித்தன் வயல் வரப்புகளில் திரிவது ஒரு சித்திரம்போல மனதில் பதிந்துவிட்டது. வயல் அல்லாத பிற இடங்களில் வசிக்கும் பெருச்சாலிகள் தேங்காய்ப்பருப்பை விரும்பி உண்பவைகளாக இருந்தன. அதிலும் அதை நெருப்பில் சுட்டு வைத்தால் அந்த மணத்திற்கு எங்கிருக்கும் பெருக்கான்களும் ஓடிவந்து இடுக்கியில் தலையைக்கொடுக்கும். வயல் எலிகளுக்கு அரிசியை வறுத்து வைக்கலாம், அல்லது தேங்காய் எண்ணெயில் குழப்பி வைக்கலாம். இந்த இரண்டு முறைகளுமே எலிகளை சுண்டி இழுப்பவைகளாக இருந்தன.  வேர்க்கடலையை இளஞ்சூட்டில் வறுத்து வைத்தாலும் காடே மணக்க எப்படிப்பட்ட எலிகளும் வந்து மாட்டித்தான் ஆகவேண்டும். வீட்டெலிகள் மற்றும் நகர்புறத்து எலிகளுக்கு தக்காளிப்பழம்தான் பெஸ்ட். தமது வெள்ளாமைகளை காக்க எல்லாத் தோட்டத்துக்காரர்களுக்குமே சித்தனின் தயவு தேவையாய் இருந்தது. எலிகளுக்கோ சித்தனைத் தவிர வேறு எமன் எங்கேயும் இல்லை.

4.

பிற்பாடு நானும் எலிவேட்டையில் ஆர்வம் காட்டிய நாட்களில் என்னிடம் சிக்கியதெல்லாம் வெறும் முகட்டெலிகள் மட்டும்தான். வரப்பெலி, கொராப்பெலி, பெருச்சாலி எல்லாம் நிலத்தில் வலை அமைத்து வாழும்போது இந்த முகட்டெலிகள் மட்டும் மரங்களில் அணில்போல கூடமைத்து வாழும். வீடுகளில், குறிப்பாய் ஓட்டு வீடுகளின் முகடுகளில்  அடிக்கடி இந்த எலிகள் தென்படும். இதை வீட்டெலிகள் என்றும் சொல்வதுண்டு. மா, உசிலை, குவாப்புல், வேம்பு, வாகைகளில் இந்த முகட்டெலிகள் விரும்பி கூடமைத்து வாழும்.

மூங்கில் டப்பைகள் மற்றும் பொரசங்குச்சியை வைத்து செய்யப்படுகின்ற இடுக்கிகளுக்கு மாற்றாக ரப்பரை பயன்படுத்தி நான் செய்த இடுக்கிகளை எங்கள் பகுதி தோட்டத்துக்காரர்கள் அதிசயமாய்ப்பார்த்து வியந்தார்கள். என்னை பெரும் திறமைக்காரனாகவும் அங்கீகரித்து பாராட்டினார்கள். ரப்பர் கொண்டு நான் செய்யும் இடுக்கிக்கு ‘கம்ப்யூட்டர் இடுக்கி’ என்று நானே பெயர் சூட்டிக்கொண்டேன். பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மரம் மட்டைகளில்  நான் வைத்த கம்ப்யூட்டர் இடுக்கிகளில் அடிக்கடி முகட்டெலிகள் மாட்டுவதுண்டு. அதை குளத்தங்கரைகளிலும், ஆற்றோடைகளிலும், தரிசுநிலப்பகுதிகளிலும் தீமூட்டி உப்புவைத்து சுட்டுத்தின்றே இந்த உயிர் வளர்த்திருக்கிறேன்… பலரும் அப்படித்தான் உயிர் வளர்த்தோம், கறி ஆசையை போக்கினோம்.

ஊருக்குள் எல்லோருக்குமே விருப்பமான கறியாக எலிக்கறியே இருந்தது. ஆடி அம்மாவாசைகளில் ஊர் வாலிப பசங்களெல்லாம் திரண்டு எலிவேட்டைக்கு கிளம்புவதை பார்க்கும்போது ஏதோ போருக்குப் போவது போலவே இருக்கும். எலி பிடிப்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நுட்பத்தை கற்று தேர்ந்திருந்தார்கள். ஓடும் எலிகளை மடக்கிப்பிடிக்க இவர்கள் வகுக்கும் வியூகங்கள் ஏராளம்… வீட்டுக்கு நான்கு நாய்களாவது வளர்த்தார்கள். எங்கள் வீட்டிலும் கூட மூன்று நாய்கள் இருந்தது. எப்படி எலிகளையும் விரட்டிப் பிடிக்கும் அவைகள் கவ்வி தின்றுவிடாமல் லாவகமாய் தமது எஜமானர்களிடம் ஒப்படைத்து மகிழ்கின்றவைகளாக  திகழ்ந்தன. ஆட்டுக்கறி கோழிகறிகளுக்கு பெரும்பாலும் வேலையில்லை. கூலிக்கு மாரடிப்பவன் தொடங்கி செல்வச்செழிப்பில் கொழிப்பவர்கள் வரை எலிக்கறியை விரும்பி உண்பவர்களாகவே எங்கள் பகுதிக்காரர்கள் இருந்தார்கள். வயலில் கிடைக்கும் தானியங்களை உண்பது போலவே அவர்கள் வயலில் விளையும் எலிகளையும் விரும்பி உண்டார்கள்.

கல்லெலி என்று ஒரு ரகம் உண்டு. இது மலைப்பகுதிகளில் உள்ள பெரும் பாறைகளுக்கிடையில் வாழும். அதேபோல சரளைக்கற்கள் நிறைந்த தரிசு நிலப்பகுதிகளிலும் கற்களுக்குள் வலையமைத்து இருக்கும். இதைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கற்களை புரட்டி புரட்டியே கைகளெல்லாம் பொத்துக்கொள்ளும். ஒரு கல்லை எடுத்தால் லேசாக வால் தெரியும். மறு கல்லை எடுத்தால் இன்னும் சற்று ஆழம் போய் கால் தெரியும். அடுத்த கல்லை எடுத்தால் எலியின் கண்கள் மட்டும் நம்மை குறுகுறுவென பார்ப்பது தெரியும். இப்படியே அநியாயத்திற்கு போக்குக்காட்டி நம்மை அலைகழிக்கும். நாய்களுக்கு ‘ப்ர்ரு.. ப்ர்ருனு…’ கற்களுக்கிடையில் மோப்பம் பிடித்து மூஞ்சியை சிராய்த்துக்கொள்வதுதான் பலவேளைகளில் மிச்சமாக இருக்கும்.

இந்த கல்லெலிகள் சரியான மட்ட மத்தியானங்களில் வெளியே வந்து அடர்ந்த முள்வேலிகளுக்குள் விளையாடும். ஆள் அரவம் கண்டால் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தும் போகும். நீண்ட வேலிகளுக்குள் தடம் அமைத்து இவை புழக்கம் வைத்திருப்பதை எலி வேட்டையில் கில்லாடியாய் இருந்த எங்கள் மாமன் மகன் ராஜா எளிதாக  கண்டுகொண்டு நாய்களின் துணையோடு மிகச்சரியாக  வேட்டையாடுவான். அவனிடம் நிறைய எலிக்கதைகள் இருந்தன. அவன் சொல்லும் ஒவ்வொரு கதைகளும் வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். அதிலும் எலிகளின் செக்ஸ் பற்றி அவன் சொல்லுவது விழுந்து விழுந்து சிரிக்கும்படியாக இருக்கும். மலைப்பக்கம் ஆடோட்டிக்கொண்டு போயிருந்த ஒருநாளில் ராஜாவும் என்னோடு சேர்ந்துகொண்டான். சுண்டமலைக்கு அந்தப்பக்கம் நாய்க்கர் தோட்டத்து சீத்தை முள் வேலிகளில் நாய்களை உசுப்பி, வேலிகளை கழைத்து ஏழெட்டு கல்லெலிகளைப் பிடித்துக்கொடுத்தான். அந்த எலிகள் தலைமுதல் பின்னங்கால்கள் வரை மேடுபள்ளமில்லாமல் ஒரே அளவில் இருக்கும். மண்டை சற்று பெரிதாகவும் பற்களும் மொக்கை மொக்கையாய் கூர்மையாக கோரம் காட்டுவது நமக்கே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும்.

பிறகு அந்த கல்லெலிகளையெல்லாம் மலையிலேயே ஒரு கள்ளிமரத்துக்கு அடியில் நெருப்பு மூட்டி சுட்டுத்தின்றோம். சிறுமலை பக்கம் வேட்டைக்கு போனால் அவசியம் முள்ளெலி பிடித்துவந்து தருவதாக சத்தியப்பிரமாணம் செய்து அவன் விடைபெற்று கிளம்புகையில் வானம் லேசாய் இருண்டுகொண்டு வந்தது. நான் ஆடுகளை அவசர அவசரமாக மலையிலிருந்து கீழிறக்கினேன். கிழக்கே வக்கீல் தோட்டத்து உளுந்தங்காட்டுப் பக்கம் எது கண்டோ கத்திய கவுதாரிகளால் மலையே அதிர்ந்தது.

5.

ஊரில் அவ்வப்போது அரசியல் சண்டைகளும் மூளும். அவை கோஷ்டி சண்டைகளாகப் பிரிந்து சாதி சண்டைகளாக உருவெடுக்கும்.  அதுமாதிரியான நேரங்களில் ‘எலிக்கறி திங்கிற நாய்களுக்கு திமிரப்பாரு’ என்ற வசனம் அடிக்கடி ஒலிக்கும். அப்போதெல்லாம் எமக்கு ஏனோ  சுரீரென்று இருக்கும். ஆனால் அப்படிப்பேசும் அந்த கட்டை மீசைக்கார பஞ்சாயத்துத்தலைவர் எங்க ஊர் சின்னானிடம் ரகசியமாய் பெருச்சாலி கறி வறுத்துக்கொண்டுவந்து தரச்சொல்லி சக்கை மாட்டு மாட்டுவதும் எமக்குத் தெரியாமலில்லை.

பக்கத்து வீட்டு தனசேகர் ஒருமுறை தன்வீட்டு ரேடியோப் பெட்டியை தூக்கிப்போட்டு உடைத்துவிட்டதை அவன் தாய் நல்லம்மாள் மிகுந்த வெசனத்தோடே சொன்னாள். ‘வயசுக்கு மூத்தவன் நீ அவனுக்கு நல்ல புத்திமதிய சொல்லக்கூடாதா’ என்று வேறு இறைஞ்சினாள். அதற்கான வாய்ப்புக் கிட்டிய ஒருநாளில் அவனிடம் பேசினேன்.

“பின்ன என்ணண்ணா.. எப்பப் பாத்தாலும் இந்த ரேடியோவுல டிவில எல்லாம் எலிக்கறி திங்கறத கேவலமாகவே பேசுறாங்க. வறுமைனால எலிக்கறி திங்கறதாவும் அதனால தேசமே கூனிக் குறுகுவதாகவும் இஷ்டத்துக்கு அள்ளி விடுறாங்க. டெல்டாவில் விவசாயம் பொய்த்துப்போனதால எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு வறுமை தாண்டவமாடுறதா சொல்றாங்க. எலிக்கறினால கண்ட நோய்க பரவுதுனு எதையாவது கட்டி விடுறாங்க. எலி சாப்பிடுபவர்கள் இழிவான மனிதர்கள் போலவும் நாகரீகமற்றவர்கள் போலவும் பேசி தொடர்ந்து நம்மை நம் மூதாதையர்கள அற்பப்புழுவுக்கு நிகரா ஆக்குறாங்க. ஆட்டுக்கறி கோழிக்கறி திங்கிறது ஒசத்தினும், எலிக்கறி திங்கிறது இழிவுனும் எவண்ணா இவிங்கள சட்சுமெண்டு சொல்லச் சொன்னது? இந்த உலகத்தில பறப்பன நடப்பன ஊர்வன என்று எல்லாத்தையுமே திங்கிற, தின்னுகிட்டு இருக்கும் மனுஷங்கள இவிங்களுக்கு தெரியுமா தெரியாதா? அன்னைக்கு கூட பாருங்க, டிவில வயல் எலிகளை திங்கும் விநோத மனிதர்கள்னு ஒருத்தி பல்லக்கெஞ்சிகிட்டு செய்தி வாசிக்கிறா… நாம என்னணா விநோதமாப் போயிட்டோம்.. நாம வாழ்றது வாழ்க்கையில்லையா? எவன்கிட்டேயும் பிச்சையா எடுக்குறோம்… தோட்டம் தொறவுனு டவுனுப் பயல்கள விட இயற்கையோட இணைஞ்சுதானண்ணா வாழ்றோம்…”

என்று மூச்சுவிடாமல் பேசினான். அவன் அமைதியாகட்டும் என்று நான் பேசாமலிருந்துவிட்டேன். அவன் எண்ணங்களுக்கு எதிராக பேசவும் எம்மிடம் ஏதும் இருக்கவில்லை.

6.

காலம் மாறிக்கொண்டேயிருந்தது.

எலிவேட்டைகள் முன்பு போல அவ்வளவாய் சோபிப்பதில்லை. இரண்டோ மூன்றோ கிடைக்கும். அதை நாயிக்கு தீனியாக்கிவிட்டு வெறுங்கையோடு வீடுவந்து சேர்வதான நிலை நீடித்துக்கொண்டேயிருந்தது. டவுனுப்பக்கம் பட்டப்பகலிலேயே பெருச்சாளிகள் திரிவதாக கல்லூரி போகும் ஊர்ப் பசங்கள் சொல்வது கேட்டு எங்கள் ஊர்க்காரர்கள் வண்டி பிடித்து அதில் நாய்களையும் ஏற்றிக்கொண்டு போனார்கள். டவுனின் அகண்ட கடைவீதிகளில் சந்துபொந்தெல்லாம் பூந்து பெரிய சைஸிலான பெருச்சாளிகளை நாய்கள் கவ்விக்கொண்டு வந்தன. எல்லாம்  மனுஷப்பிள்ளைக்கணக்காய் கனத்தன. மளிகை கடைகளில் புகுந்து கண்டதையும் தின்று பெருத்த பெருச்சாளிகளை குட்டிச்சாக்கு ரொம்பப்பிடித்து கொண்டுவந்து ஊருக்குள் தள்ளினார்கள். தலை லைட்டோடு நாய்கள் படைசூழ அம்புக்காளி கொரட்டாந்தடி கொட்டாப்புடி சகிதமாய் இவர்கள் நகர வீதிகளில் நள்ளிரவு நேரங்களில் அலைவதை நகரத்து மனிதர்கள் வேடிக்கையாகப் பார்த்தார்கள். இவர்கள் எலிதான் பிடிக்கிறார்கள் என்பது கண்டு அசூசையும் முகச்சுளிப்பும் கலந்த நமட்டுச் சிரிப்போடு கடந்தார்கள். இவர்களின் நாய்களைக்கண்ட பணக்கார நாய்கள் வீடுவீட்டுக்கு இடைவிடாது குரைத்தன…

டவுனுக்குள் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மனிதர்கள் நாய்களோடு திரிவதாகவும், அது மக்களை அச்சப்படுத்துவதாகவும் இதனால் எல்லோரும் தூக்கமிழப்பதாகவும், மேலும் இதையொட்டி ஆங்காங்கே திருட்டுச்சம்பவங்கள் நடப்பதாகவும் எந்த மகாராசனோ மாவட்ட எஸ்பியிடம் சொல்லப் போய் எலிவேட்டைக்குப் போனவர்களையெல்லாம் போலீஸ் கூண்டோடு பிடித்து ஸ்டேசனில் வைத்து இரண்டு நாட்கள் கட்டிவைத்து உரித்து அலைகழித்ததற்குப்பிறகு எங்களவர்கள் டவுனு வேட்டையையும் தலைமுழுகிவிட்டனர்.

 7.

அப்பா தவறியதற்குப் பிறகு எல்லாப் பொறுப்புகளும் என்னிடம் வந்து குவிந்தன. ஊரிலிருந்த நிறைய சம்சாரிகள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி (அப்படி என்ன எதிர்காலமோ) இடம்பெயர்ந்து டவுனுப்பக்கம் குடும்பத்தோடு போய்விட்டனர். அண்ணன் மாமனார் வீட்டோடே செட்டிலாகிவிட்டான். வயல்வெளிகளெல்லாம் வீட்டுமனைகளாகிக்கொண்டிருந்தது. உழைப்பை கைவிட்ட மனிதர்கள் சக மனிதர்கள் மேலேயே வன்மம் வளர்த்துக்கொண்டு திரிந்தார்கள்.

சின்ன ஊராய் இருந்த எங்கள் ஊரே இப்போது ஒரு குட்டி டவுன்போல காட்சியளிக்கிறது. வீடு வீட்டுக்கு கார்கள் நிற்கின்றன. தெருவெல்லாம் ஆட்டோக்களின் சத்தம் ஓயாது சடசடக்கின்றன. மூலை மூலைக்கு கறிக்கடைகள் தென்படுகின்றன. வறட்சியான காற்று ஓயாது அடித்தபடியிருக்கிறது. தோட்டத்திலும் பாடுபட முடியவில்லை. வடக்குப்புறமாய் இருந்த நிலத்தில் அரை ஏக்கரை விற்று கடனடைத்தோம். கிணற்றிலும் தண்ணீர் அடி ஆழத்துக்குப் போய்விட்டது. நிலத்தை வருத்தி போர்போட்டு விவசாயம் செய்யவும் மனமில்லை. ஊருக்குள் புதிதாய் டாஸ்மாக்கும் வந்துவிட்டது. ஊர்ப் பசங்கள் வேட்டை மறந்து சோம்பேறிகளாகி குடியும் புகையுமாய் பொழுதைக் கழிக்கின்றனர்.

அன்று தம்பி மேல்படிப்பை முடித்த கையோடு வேலையும் கிடைத்துவிட்டதாய் சொல்லிக்கொண்டு டவுனிலிருந்து ஊருக்கு வந்திருந்தான். எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி. ஏதாவது கறி சமைத்துப்போட்டால் தேவலாம் என்று பட்டது. கடைவீதியில் போய் ஆட்டுக்கறி எடுத்துவரச் சொன்னாள் இல்லாள். தம்பி குறுக்கிட்டு “எலிக்கறி தின்னு ரொம்ப நாளாச்சுணா” என்றான். நான் உயிரற்று கிடக்கும் என் வயல்களை நினைத்துக்கொண்டேன். வெளியே மழை இறங்கியிருந்தது. நான் மழையைப் பார்க்கும் சாக்கில் வெளியேறி என் கண்களை துடைத்துக்கொண்டேன்.

●●

கவியோவியத்தமிழன்

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே குளத்துப்பட்டி எனும் சிற்றூரில் பிறந்து அங்கேயே  வசிப்பவர். இதுவரை: சாம்பலாடை (கவிதை), ஊடாடும் வாழ்வு (சிறுகதை), விதைத்த காடும் பசித்த பறவைகளும் (கவிதை), மூங்கில் சுமக்கும் புல்லாங்குழல்கள் (ஹைக்கூ), பறவைகளின் அட்மின் (கவிதை), நீ வரைந்த வாழ்க்கை (கவிதை), நிலாச்சொல் (கட்டுரை), இந்த மின்னல்கள் மறைவதற்கில்லை (கவிதை) ஆகிய நூல்கள் எழுதி வெளிவந்துள்ளன. சேலம் எழுத்துக்களம் இலக்கிய விருது, திருப்பூர் முத்தமிழ் சங்க இலக்கிய விருது, சிறந்த இலக்கியச்செயல்பாட்டுக்கான பன்முகமேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

One thought on “எலிக்கறி

  1. சிறப்பாக எழுதி உள்ளார். நல்ல விபரமான தகவல்கள். நடை அருமை. மொழியும் நன்று. மனம் ஒன்றிப் படித்தேன். பரவலாக பரப்ப வேண்டிய சிறுகதை.
    நன்றாக வெந்து விட்டால் எல்லா சதைகளும் உடலுக்கேற்ற உணவு தான்.
    சைவம் சாப்பிடுபவர்கள் எல்லாரும் ஒரே பிரிவுதான்.
    ஆனால் அசைவம் சாப்பிடும் பலரும் பலவிதமான கறிகளின் மேல் தீண்டாமை கடைப் பிடிக்கிறார்கள்.
    ஆட்டுக் கறியில் குரும்பை செம்மறி வெள்ளாடு விலை அதிகம்
    கோழியில் நாட்டு கோழி விலை அதிகம்
    ஏழைக்கு பிராய்லர் கோழி.
    மீன்கள் சாமானிய கனவு
    ஏழைக்கு கருவாடு
    ஆனால்
    மாடு
    பன்றி
    எலி இவை மதம் சாதி தாழ்வு கற்பிக்கப் பட்டு மலிவாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *