“எங்களுக்கு மூணாவது மாடி தான் வேணும் ராஜா” மான்கள் அழுதன.

“அப்ப நாங்க மட்டும் ஏழாவது மாடி வரைக்கும் தினமும் ஏறி இறங்கணுமா?” கொதித்தெழுந்தன சிறுத்தைகள்.

“அடடா, நீங்க ஏன் மாடி ஏறி இறங்கணும்? அதான் லிஃப்ட் வசதி இருக்குமில்ல” என்றார் மந்திரியார் நரி.

அப்ப இந்த மான்கள் ஏன் மேல் தளங்களுக்குப் போக விரும்பவில்லை என தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டு இருந்தன முயல்கள்.

”தங்களை வேட்டையாடும் விலங்குகள் மேல் தளத்தில் தான் இருக்கணுமாம். அப்பத்தான், ஏதாவது அவசரம் என்றாலோ ஆபத்து என்றால், மான்கள் முதலில் ஓட முடியுமாம்” என்றது ஒரு வயதான கரடி.

முயல்களும் அந்தக் கருத்து சரியென நினைத்து, “எங்களுக்கும் இரண்டாவது அல்லது மூன்றாவது மாடி தான் வேண்டும்” எனக் கத்தின.

சிங்க ராஜா ஹூங் என்று உறுமியது.

“அமைதி, அமைதி” நரியார்.

“மந்திரியாரே, என்ன ஆயிற்று நம் குடிமக்களுக்கு? மனிதர்கள் அடுக்கு மாடிகளில் குடியிருப்பது போலே நாமும் வாழ வேண்டும் என அனைவரும் விரும்பியதால் தானே, நாம் இந்த அடுக்ககத்தை நிறுவியுள்ளோம். இதில் விருப்பம் இல்லை எனில், இப்புதுக்கட்டிடத்தைத் தரை மட்டமாக்கவும் நான் தயார் தான்!”

“மன்னிக்க வேண்டும் ராஜா, தங்களுக்கு ஒதுக்கப் போகும் வீடு, தளம் மற்றும் வசதிகள் பற்றித்தான் விலங்குகளுக்குக் கவலை. மற்றபடி, இந்தப் புதிய அடுக்ககம் அனைவருக்கும் விருப்பமே!“ என்றது குலகுரு வரிக்குதிரை.

”நமது காடு அமைதியாக இருக்கிறது. அவரவர் அவருக்கான இருப்பிடத்தில் இருக்கிறோம். எதற்காக மனிதர்களைப் போல அடுக்ககம் கட்ட வேண்டும்? மன்னா, தேவையற்ற விவாதங்களும் வாக்குவாதங்களுமே நாம் கண்ட பலன்!” என்றது மதிநுட்ப ஆந்தை.

“நீர் சொல்வது சரியே, ஆந்தையாரே! ஆனாலும், மாறும் காலத்துக்கேற்ப நமது அமைவிடங்களை அமைத்துக் கொள்வதில் பிழை ஒன்றும் இல்லையே! அதில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க நமது மன்னரால் இயலும். தங்களைப் போன்ற அறிவாளிகளும் அதற்கு உதவலாம்” என்று ஒரே நேரத்தில் ராஜாவையும் ஆந்தையாரையும் ஐஸ் வைத்து வாயை அடைத்தது நரி.

எந்தெந்த விலங்குகளுக்கு எந்தெந்தத் தளம், அடுக்ககத்தில் கடைபிடிக்க வேண்டிய பொது விதிகள் என்ன என்பது பற்றி விவாதம் தொடர்ந்தது.

“நாங்கள் தரை தளத்துக்கும் கீழே, பூமிக்கு அடியில் இருக்கிறோம் ராஜா, ஆனால், எல்லா தளங்களுக்கும் வந்து செல்லும் உரிமை எங்களுக்கு வேண்டும்” எலிகள்.

அப்போது தான் யானைக் கூட்டம் வந்தது.

மிக ஆக்ரோஷமாக பிளிறின யானைகள். ராஜா சிங்கத்துக்கே அதைக் கேட்டு சற்று பயமாக இருந்தது.

“வாருங்கள் யானைகளே! ஏன் இவ்வளவு கோபமாக வருகிறீர்கள்?” என்ற சிங்க ராஜாவிடம், “எங்களுக்கு எந்த தளமுமே ஒதுக்கப்படவில்லையா?” எனக் குமுறின யானைகள்.

“யாருக்கு என்ன விருப்பம் என இறுதி செய்யவே இந்த அமர்வு” என்றது வரிக்குதிரை.

“யானை அண்ணா, அடுக்ககத்தை ஒட்டிய பார்க் ஏரியா தான் தங்கள் தகுதிக்கு ஏற்ற இடம்! கானகத்திலே தங்கள் விருப்பம் போல உலாவது போல அந்த பார்க் அதாவது பூங்காவில் உலாவலாம்” என்றது நரி.

“இது அநியாயம், யானைகளுக்கு ஒரு தளம் ஒதுக்க வேண்டும்” என்றது மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த குரங்கு.

எகிறிக் குதித்து அந்தக் குரங்கை அப்படியே தன் வாயால் கவ்வி இழுத்து அதன் காதில், “அறிவு கெட்ட குரங்கே! யானைகள் அத்தனையும் உள்ளே வந்தால், குடியிருப்பு ஆட்டம் கண்டுவிடும். உன் வாயை முடிக் கொண்டு இரு.” என்றது கரடி.

மந்திரியான நரியை மறுபடி முறைத்துப் பார்த்தது சிங்க ராஜா.

”மன்னரே, என்னை முறைத்துப் பார்க்காதீர்கள். இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்”

“ஒரு முட்டாளை, மந்திரியாக்கிவிட்டால், ராஜா வேறு என்ன செய்ய முடியும்? வாயை முடிக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டியது தான் நான் தனியாக இந்தக் கட்டிடத்தை இடிக்க ஆணையிட வேண்டியதே இல்லை. யானைகளே இடித்துத் தள்ளி விடும்“ ராஜா உறுமியது.

நரி குரலை உயர்த்தியது. அதே சமயம் தேன் போல குழைவுடன், “யானையாரே, தங்களுக்கு ராஜா மனதில் ஒரு தனி இடம் இருப்பதை மறந்து விடாதீர்கள்! அடுக்ககத்தின் முதன்மை இடம் அந்த பூஞ்சோலை பார்க் தான்! எப்போதும் முதலிடம் தங்களுக்குத் தானே! அதனால் தான்,உங்களுக்கு  அந்த பார்க் ஏரியாவை ஒதுக்கி இருக்கிறார் மன்னர் பெருமான்!”

சிங்கத்துக்கே இப்போது தான் இப்படி எல்லாம் இதற்கு ஒரு விளக்கம் அளிக்க முடியும் எனப் புரிந்தது.

இன்னும் ஒரு படி மேலே போனது நரியாரின் அடுத்த மூவ்.

“மன்னா, தங்கள் அனுமதியுடன், இந்த விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன்! நம் சிறப்பு மிக்க அடுக்ககத்துக்கு ‘எலிபெண்டா டவர்ஸ்’ என்ற ஸ்டைலான பெயர்! யானைகளின் உயர்வை நாம் எல்லோரும் அறிவோம்! இந்த உலகம் அறிய வேண்டாமா? ஆங்கிலத்தில் எலிஃபெண்ட் என்றால் யானை என்பது உங்களுக்குத் தெரியும் தானே!” என நரி சொல்ல,

“வாவ்! எலிஃபெண்டா டவர்ஸ்! சூப்பர் பெயர்” என்றது எல்லாம் தெரிந்த ஆந்தை!

யானைகளுக்குப் பெருமை தாங்க முடியவில்லை. சிங்க ராஜாவுக்குத் தங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் உறுதியளித்து ஆடிய படி நடை போட்டன யானைகள்.

“எங்களுக்கு எந்த மரியாதையும் இல்லயா? நாங்களும் வீரத்தில் ராஜாவுக்குச் சற்றும் சளைத்தவர்கள் இல்லயே“ எனப் புலிக் கூட்டம் தன் வருத்தத்தைப் பதிவு செய்தது.

யானைகள் ப்ளாட்டு எனப்படும் குடியிருப்பு பகுதிக்கு வந்தால் ஆட்டம் கண்டுவிடும் என்ற ரகசியத்தை எல்லா விலங்குகளுக்கும், சிறு விலங்குகளை வேட்டையாட, தேடி அலைய வேண்டி இருக்க வேண்டியிருக்காது என்பதை வேட்டையாடும் விலங்குகளுக்கும் நரியின் அடியாட்கள் காதோடு காதாக சொன்னதால், எல்லா விலங்குகளும் அமைதி அடைந்தன.

அடுத்து, பொது விதிகள் தயாரிக்க ஒரு குழு அமைக்கப் பெற்றது.

சிறுத்தை, புலி, சிங்கம், சிறுத்தைப் புலி போன்றவை வலது பக்க லிஃப்ட் தான் உபயோகிக்க வேண்டும். தோட்டப்பகுதிகளை பரமாரிக்க சுழல் முறையில் தொண்டு செய்ய வேண்டும். இன்னும் இது போன்ற பல விதிகள் உருவாக்கப்படும்.

ஃபாக்ஸ் ஃபூட் ஃபேண்டசி சப்ளை செய்த ஆலு டிக்கி, ப்ரெட் பஜ்ஜி, குழிப்பணியாரம், ப்ரூட் சாலட், பில்டர் காபி அல்லது பலூடா எல்லோருக்கும் தரப்பட்டது. கூட்டம் இனிதே நிறைவுற்றது.

“ஏம்பா, சிங்கா, எதுக்கு நமக்கு மல்டி-ஸ்டோரி பில்டிங் அப்படின்னு நா கேட்டதுக்கு பதிலே சொல்ல வில்லையே?” என ஆந்தயார் மீண்டும் கேட்க, “தாத்தா, உங்களுக்கு வயது ஆகிவிட்டது, எதுவும் புரிவதில்லை . காடே அழிஞ்சு கிட்ட இருக்கு. மரங்கள் இல்லை, தண்ணி இல்லை… இதப் பத்தி என் குடி மக்கள் என் கிட்ட கேள்வி கேக்கலாம். அதுக்கு முன்னாடி அவங்க கவனத்தை வேறு பிரச்சினைலே திருப்பி விட்டு விடனும். அதான் இப்ப ட்ரெண்ட்!” என்றது சிங்கம்.

“ஆமா, பக்கத்து காட்டுல இரண்டு இளம் ஆந்தைகள் சோசியல் இன்ஃப்ளுயன்ஸர்களாக சூப்பரா ஐடியா சொல்றாங்க. அவங்கள ஒருத்தர நாங்க எங்களுக்கும் ஐடியா கொடுக்கச் சொன்னோம். அவங்க ஐடியா தான் இது” என்றது நரி.

அடுத்ததாக, ‘வாக் டாக்’ அப்படின்னு ஒரு செயலி அதான் ஆப்பு… ஒண்ணு கொண்டு வந்திட்டா, நம்ம விலங்குகள் அதுல மூழ்கிடுவாங்க” என்றது வரிக்குதிரை.

“ராஜாவுக்கேத்த அடிவருடிகள்! “என்று எண்ணியபடியே, “சரி, சரி, ஆந்தைகள் எங்கே தங்க வேண்டும் எலிபெண்டா டவர்ஸிலே?” என்றது ஆந்தையார்.

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், இந்து தமிழ்திசையின் மாயாபஜார் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *