எளியவர்களின் வழியே உயிர்பெறும் ஏற்றமிகு சிந்தனைகள்

கதைகள் காலத்தின் போக்கை கணிக்கவல்ல பேரதிசயமாகக் கருதப்பட்ட தருணங்கள் உண்டு. கதைகளின் வழியே வரலாற்றை அறிந்த தமிழினம் கதைகளினூடே தன்னை வளர்த்துக்கொண்டு வந்திருக்கிறது. வாழ்வியலை, வாழ்தலின் நகர்தலை, சமூகத்தின் இருப்பை, தனி நபர்களின் பொறுப்பை, தேசத்தின் மீதான மனிதர்களின் நேசத்தை, குடும்பத்தை பராமரிப்பதன் அவசியத்தை என கதைகள் அவனை வழிநடத்திச் சென்ற பொழுதுகள் ஏராளம். அத்தகு கதைகளுக்குள் தன் மண் சார்ந்த அனுபவங்களையும் தன் வட்டாரம் சார்ந்த செயல்பாடுகளையும் இணைக்கும் போது ஒவ்வொரு எழுத்தாளனுக்குள்ளும் புதிய புதிய கருக்கள் உற்பத்தியாகின்றன. ஆடம்பரமும் பகட்டும் ஆணவமும் ஒரு சேர அமைந்திருக்கும் பல உயர் குடிகளை அவர்களின் பகட்டுத்தன்மையை வெளிப்படுத்தாமல் எளிய மக்களின் அன்றைய இடர்பாடுகளுடன் கூடிய வாழ்வின் நகர்தலை அவர்களின் மொழியில் எழுதப்படும் கதைகளுக்கு வீரியம் அதிகம். இத்தகு கதைகள் தங்களது வாழ்வை தாங்களே திரும்பிப் பார்க்கும்படியான வாய்ப்பை எளிய மக்களுக்கு வழங்கிவிடும் காரணத்தினால் சிறப்பான வரவேற்பையும் பெறுகின்றன. வாழ்வின் அடையாளம் நூலின் வழியாக எளிய மனிதர்களின் உணர்வுகளையும் அவர்களுக்குள் உறைந்து கிடந்து வெளிப்படும் குண நலன்களையும் நேர்மறை எண்ணங்களுடன் இணைத்து 15 சிறுகதைகளை கவிஞர் செல்வகுமார் எழுதியிருக்கிறார்.

ஒவ்வொரு கதையின் நகர்வும் வாசிக்கும் நமக்குள் முழுமையான நேர்மறை சிந்தனைகளையே விதைத்து விடுவது அவற்றின் தனிச்சிறப்பாக கைக்கொள்ளலாம். எந்தக் கதையிலும் எதிர்மறை சிந்தனைகளுடன் மனிதர்கள் தென்படவில்லை. இப்படியான கதைகளை வாசிக்கும் போது நமக்கும் நம் வாழ்வின் பயணம் இதேபோல நேர்க்கோட்டில் பயணிக்கும் போது அருமையானதாக இருக்கும் என்ற பேராசையும் பிறந்து விடுகிறது. மலைச்சாலை பயணங்களில் நாம் அறியாமல் வருகின்ற திருப்ப வளைவுகள் நமக்குள் பயம் கலந்த மர்மத்தையும் பேராவலையும் ஏற்படுத்தி விடும். அதே சமயம் சமவெளியில் நேர்க்கோட்டின் பயணம் நம்மை முழுமையான நிம்மதியில் வைத்து நம் மனதை சமநிலைப்படுத்தி விடும். வளைவுப் பயணங்களும் நேர்க்கோட்டு பயணங்களும் ஒவ்வொருவர் வாழ்விலும் சந்திப்பை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன ஆனால் வாழ்வின் அடையாளம் நூலோ கதையின் போக்கில் எந்த திருப்பமும் இல்லாமலும் எவ்விதத் தொய்வும் இல்லாமலும் திடுக்கிடலும் தேடுதலும் இல்லாமலும் கண் முன்னே நிகழும் அனுதின வாழ்வின் நகர்தலை வாழ்வு எப்படியெல்லாம் எளிய மனிதர்களை காற்றில் விரியும் சிறகின் பயணத்தைப் போல உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றன என்பதையும் விவரிப்பது தனிக்கலையாகவே அறிய வைக்கிறது.

ஒவ்வொரு கதையும் பல அறச் செயல்பாடுகளை நமக்குள் நுழைய வைத்து விடுகின்றது.. இந்த சிந்தனைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகவும் மாறி நிற்பது சாலச் சிறந்தது. தனிமனிதனின் உழைப்பு, தொழிலின் மீது மனிதன் வைத்திருக்கும் பற்று, கடமையைச் செய்தால் மட்டும் போதும் என்ற மனநிலையில் இருந்து பாராட்டுதலே ஒவ்வொரு மனிதனையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பதை உணர்த்தும் வகையிலும் அரசின் செயல்பாடுகளும் ஆன்மீகத்தின் அவசியமும் வாழும் மண் சார்ந்த பதிவுகளும் என நூல் பல்வேறு தளங்களில் பயணப்பட்டு ஒவ்வொரு கதைக்குள்ளும் பல எண்ணங்களை புதைத்து வைத்திருக்கின்றது.

#உடனடிச்சேவை

அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும்  சேவையைப் பற்றி மக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் ரத்தக்கொடையாளர்களின் ஈகை பற்றியும்

மகனுக்கு வாழ்வின் அர்த்தங்களையும் தாங்கள் கடந்து வந்த பாதையையும் ஊட்டி வளர்க்காத பெற்றோர்கள் படும்பாட்டைப் பற்றியும் இளமைக் கொண்டாட்டத்தில் சமூகத்தையும் குடும்பச் சூழலையும் எண்ணிப் பார்க்காமல் குழந்தைகள் போடும் ஆட்டம் எப்படி அவர்களது வாழ்வில் பாதகங்களை ஏற்படுத்தி விடுகிறது என்பதையும் இக்கதை வெளிப்படுத்துகிறது.

#கதம்பம்

அபலைகளைச் சுற்றும் சபல ஆசாமிகள் எப்படியெல்லாம் அவர்களது வாழ்வை பாதிக்கிறார்கள் என்பதன் கதையும் ஆலய தரிசனத்தின் நடைமுறைகளையும் முதலாளிக்கு விசுவாசம் காட்டும் தொழிலாளியின் நேசமென கார் ஓட்டுநரின் செயல்களையும் இக்கதை பேசிச்செல்கிறது.

#நல்லிணக்கம்

ஊரில் திருவிழா நடத்துவதில் உள்ள நடைமுறைகள், பொது நிகழ்வில் இளைய தலைமுறையினரை ஈடுபடுத்தி அவர்களுக்கு அனுபவத்தை பெற வைத்தல், இனம் சாதி அடையாளங்கள் துறந்து பொதுக் காரியங்களில் மக்களின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நிலை நாட்டல் போன்ற செயல்பாடுகளை விவரிக்கிறது கதை.

#வாழ்வின்அடையாளம்

நூலின் தலைப்புக் கதையான இதில் மரம் நடுவதை மாபெரும் நிகழ்வாக மாற்றும் மனங்களை அறிமுகப்படுத்தி மனிதப் பிறப்பின் மகத்துவத்தை இயற்கையைப் பேணுதலே அடையாளம் என்பதை நிலை நிறுத்தும் தலைசிறந்த பண்பை வெளிப்படுத்துகிறது. அத்துடன் இயற்கை உணவுகளைப் பின்பற்றுவதில் எதிர்காலம் சிறப்புற அமைவதன் அவசியம், தொடர் முயறசியும் கூட்டு உழைப்பும் எப்போதும் சிறந்த பலனைத் தரும் என்பதையும் கடமையைச் செய்தால் மட்டும் போதுமல்ல அதற்கான பாராட்டுதல்களே மேலும் பலரையும் அதை நோக்கி ஈர்த்து விடும் என்பதையும் உணர்த்தி விடும் கதையம்சத்தோடு விளங்குகிறது.

#குழந்தைமனம்

தெரு நாய்களின் தொல்லையிலிருந்து விடுபடும் யோசனைகள் எல்லா உயிர்களையும் மதித்துப் பார்க்கும் கருணையை குழந்தைகள் மனதில் விதைத்தல் குழந்தைகளின் எண்ணங்களில் எல்லோரையும் மதிக்கும் குணங்களை விதைத்தல் போன்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்டு கருணையை விதைத்துச் செல்கிறது.

#கடற்கரை

ஒன்றுபட்ட உழைப்பு எப்போதும் உயர்வையே தரும். குடும்பத்தின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆரம்பப் புள்ளியாக அமையும். ‘வானத்தைப்போல’ விக்ரமன் படம் பார்த்ததைப் போல எதிர்ப்படும் எல்லோரும் நல்லவராய் இருந்து நமக்குள்ளும் நேர்மறை எண்ணங்களை விதைத்து  விடுகிறது கதை. பெற்றோரையே வயதானவர்கள் என்று அனாதை இல்லங்களில் கொண்டு சேர்க்கும் பிள்ளைகள் இருக்கையில் இங்கே தனது மனைவியின் பெற்றோரையும் தன்னுடனே வைத்து அவர்களால் முன்னேறும் நாயகனின் மனம் கடலின் அளவைவிடப் பெரிதாகிக் கொண்டே நீண்டு விடுகிறது.

#செல்லாக்காசு

போதையின் வீரியமும் அறம் தவறிய செயல்களும் மனிதர்களைத் தண்டிப்பதோடு குடும்பத்தையும் நிலைகுலைய வைத்து ஏதுமற்ற நிலைக்கு அவர்களைத் தள்ளி விடுகிறது. கூடா நட்பும் பேராசையும் கேட்டில்தான் முடியும். எதிர்மறை குணங்களுடன் நடமாடும் மனிதர்கள் இந்த கதையின் மட்டுமே தென்படுகிறார்கள். தனக்கான பணியில் மற்றவர்களை ஏமாற்றி வாழ்வாங்கு வாழ்பவர்கள் குடும்பம் ஒருபோதும் உயரத்தை அடைவதே இல்லை. பணத்தை தொலைத்தவர்கள் அல்லது பிறரின் பணத்தால் வாழ்ந்தவர்கள் எப்போதும் பிறரது சாபத்திலிருந்து தமது வாழ்வைக் காப்பாற்ற முடிவதில்லை என்பதும் செல்லாக்காசின் வழியே வெளிப்படுகிறது.

#தொடர்முயற்சி

இந்தியாவை விவசாய நாடு என்கிறோம். விவசாய மக்களே இந்தியாவின் ஆணிவேராக இருந்து அதன் முன்னேற்றத்திற்கு அரும்பாடு படுகிறார்கள். ஆனால் உழவனின் செயல்பாடுகளும் அவனது வியர்வை உழைப்பும் அவனுக்கு முழுமையானதொரு பலனை எப்போதுமே வழங்குவதில்லை.  ஆயினும் லாபம் கிடைக்காத தொழில் என்றாலும் அதை விட்டு விடுவதற்கு எந்த உழவனும் தயாராவதில்லை. தொடர்ந்தது தொடர்ந்து எந்த மண் தன்னை ஏமாற்றுகிறதோ அந்த மண்ணிலேயே தனது உழைப்பை மேலும் மேலும் செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது உழவனின் மனம்.. உழவனுக்கு மண்ணும் அரசும் மேன்மையைக் கொடுக்காமல் போனாலும் உழவின் மீதான பற்றும் ஈர்ப்பும் அழியாமல் தொழிலைத் தொடர்ந்து செய்யும் உழவர்களின் மனநிலையை விவரிக்கிறது இந்தக்கதை.

#மெழுகுவர்த்தி

குடும்பத்திற்காகவும் அதன் அன்றாட வாழ்நிலையை நகர்த்தலுக்காகவும் தன்னையே தியாகம் செய்த ஆணின் வாழ்வு முழுமையானதொரு தியாகத்தை பறைசாற்றுகிறது. கடைகளில் புத்தகங்கள் வைத்திருந்து கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் காட்சி அமைப்பு இந்த கதையில் மிகச் சிறப்பான திரைக்கதையாக கோர்க்கப்பட்டு இருக்கிறது. இப்போதெல்லாம் எந்த திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் ஏன் கதை நூல்களிலும் கூட யாரும் நூல்களைப் படிப்பது போன்றோ நூல்களைப் பற்றி பேசுவது போன்றோ காட்சி அமைப்புகளும் இடம் பெறுவதில்லை. நூலிலும்  இடம்பெறுவதில்லை. பிறகு எப்படி எல்லோரையும் வாசிப்பின் பக்கம் நாம் அழைத்து வர முடியும் என்ற சிந்தனையையும் இந்தக் காட்சி நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது..

#சமஉரிமை

பெற்றோர்களின் சொத்துகளில் அவர்களது உழைப்பில் கிடைத்த ஊதியத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளும் உலகம் பெற்றோர்களின் இறுதிச்சடங்குக்கு பெண்களை அனுமதிக்க மறுக்கிறது என்பதை எப்படி நாம் ஏற்றுக்கொள்கிறோம். அங்கேயும் அவர்களுக்கான சமூக உரிமையை கொடுத்தல் முறை தானே என்ற புரட்சிகர விதையைத் தூவுகிறது கதை.

#இயற்கையை கைவிட்டுட்டோமோ?

     செயற்கை உரங்களின் வரவு மண்ணை மலடாக்கி விட்டு மனிதர்களுக்கு நோய்களைக் கொடுத்து பூமியை முடமாக்கி விடுகின்றன. இயற்கையின் அளப்பரிய கொடையை மனிதன் பேராசையினால் ஒட்டுமொத்தமாக அழிக்கப் பார்க்கிறான். இயற்கையை பேணிக் காக்காமல் எவ்வளவுதான் அறிவியல் முன்னேற்றத்தில் ஈடுபட்டாலும் நோய்கள் பெருகிக்கொண்டே தான் இருக்கும் என்பதையும் மனிதனின் ஆரோக்கியம் சீர்கெட்டுக் கொண்டே போகும் என்பதையும் எச்சரிக்கை செய்யும் இந்தக் கதை இயற்கையைப் போற்றி வணங்குவதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது..

#மதுச்சாலை

இன்றைய காலகட்டத்தில் மதுவின் கொடூரம் பல்வேறு குடும்பங்களை எவ்விதம் பாதிக்கிறது என்பதையும் சமூக சீர்கேடுகள் எப்படி மலிந்து விடுகின்றன என்பதையும் அதன் தொடர்ச்சியாக கொலைகள் கொள்ளைகள் போன்ற தீய சம்பவங்கள் அரங்கேறுவதன் பின்னணியையும் ஆராயத் தருகிறது மதுச்சாலை கதை.

#விதையில்லா உலகம்

செயற்கை சுவாசம் செயற்கை மாத்திரைகள் என எதிர்காலத்தில் உலவப்போகும் இன்றைய‌ மனிதனின் இயற்கையை பாழ்படுத்திய செயல்பாடுகளால் எதிர்காலம் எப்படி சிறப்பாக இருக்கும்? உயிரின் தொடக்கமே விதையின் செழிப்பில் இருக்கையில் விதையற்ற உலகில் வேறு என்ன விளையும்?

#வாழ்வியல் முரண்

   ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான்? எத்தகு சூழல் அவனை எழுத வைக்கிறது? என்பதை தனது வாழ்வையே மையக் கருத்தாக கொண்டு எழுத்தாளர் எழுதியிருக்கும் கதை இது.

#குருவி வீடு

ஒரு பெண்ணின் உழைப்பை நன்கு அறிந்த குடும்பம் அந்த பெண்ணிற்கு எப்போதும் நிம்மதியைத் தருவதையே  ஆனந்தமாகக் கொள்ளும். பெண்களை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆண்கள் இருக்கும் குடும்பம் எப்போதும் எவ்வித பேராபத்து வந்தாலும் அதிலிருந்து மீண்டு விடும் பேராற்றலைப் பெற்று விடும். பெண் ஆண் வேலை என தரம் பிரிக்காமல் எல்லா வேலைகளையும் பிரித்துக் கொண்டு செய்கையில் குடும்பமே நிம்மதியில் மகிழும் என்பதை குருவிக்கூடு கதை விவரிக்கிறது.

அறத்தைத் துறந்த செயல்பாடுகளோ பொதுநலத்தை சீர்குலைக்கும் வன்முறை எண்ணங்களோ பழிவாங்கும் போக்கை அதிகப்படுத்தும் பயங்கர நிகழ்வுகளோ நடைபெறாமல் குடும்பத்தில் நிகழும் நல்ல எண்ணங்களையும் சமூகத்தில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு உழைப்பின் கனவுகளையும் சுமந்து வந்திருக்கிறது வாழ்வின் அடையாளம் நூல். பூமிப்பந்தில் பகுத்தறிந்து உணர்ந்து செயல்படும் ஒற்றைப் பிறவியாக பிறந்திருக்கும் மனிதனுக்கு பிறப்பின் தேவை என்ன? பிறந்ததன் அடையாளத்தை எங்கே அமைத்துச் செல்வது? என்பதையும் உணர்த்தி விடுகிறது நூல்.

கதைகளுக்கு தொடர் வாசிப்பை இடைநிறுத்தும்படியான சந்திப்பிழைகளும் ஒற்றுப் பிழைகளும் சரி செய்யப்பட்டிருந்தால் கதை முழுமையான வாசிப்பில் நம்மை இழுத்துச் சென்று நேர்மறை எண்ணங்களை மேலும் மேலும் நமக்குள் புதுப்பித்துக் கொள்வதற்கு வசதி அமைத்துக் கொடுத்திருக்கும்.

நிறைய கவிதை நூல்களையும் ஆன்மீகம் சார்ந்த நூல்களையும் எழுதி இருக்கும் கவிஞர் மா செல்வகுமார் அவர்கள் சிறுகதை உலகிலும் நுழைந்து தனது முதல் சிறுகதைத் தொகுப்பான இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார். தனது மண் சார்ந்த நிகழ்வுகளை கதைகளில் நுழைத்து தனது கவிதைத்தனத்தையும் ஆங்காங்கே உரையாடல்களில் காட்டியிருப்பது பாராட்டுதலுக்குரியது..

வாழ்வின் அடையாளம்

சிறுகதைகள் தொகுப்பு

மா. செல்வகுமார்

வெளியீடு மௌவல் பதிப்பகம், முதல் பதிப்பு செப்டம்பர் 2025, பக்கம் 146, விலை ரூபாய் 170

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.  மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *