வந்ததிலிருந்தே தனது விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பையை தருமாறு அடம்பிடித்துக் கொண்டிருந்தான் ஒன்றாம் வகுப்பு மாணவனான எழில். திருவிழாக் கடைகளிலிருந்து ஒவ்வொரு பொருளாய் வாங்கி சேகரித்துக் கொண்டிருந்தபோதே மனதளவில் புதியதொரு உலகத்தைப் படைத்துக் கொண்டிருந்தன அவனது கற்பனைகள்.
முதலில் கை கால் கழுவிட்டு வா தருகிறேன் என்றாள். அறக்கப்பறக்க தண்ணீரை மொண்டு கை கால்களில் ஊற்றிக்கொண்டு ஈரம் சொட்டியபடி ‘ஈய்..’ என்று அவன் முன் நின்றவனைப் பார்த்து, ‘ஏண்டா இப்புடி அமர்க்களப்படுத்துற?” என்றவாறு லேஞ்சித் துண்டால் அவனை துடைத்துவிட்டாள். தயாராக வைத்திருந்த பால் டம்ளரை நீட்டி குடிடா..!’ சம்மணமிட்டு அமரும்படிச் சொல்லி அவன் முன் நகர்த்தி வைத்தாள்.
“முதல்ல வெளாட்டு ஜாமான தாம்மா..!” என்று சிணுங்க ஆரம்பித்தான்.
“போன எடத்துலையும் எதுவும் திங்கல, குடிக்கல. ராட்டினம் கீட்டினம்னு வயித்த காயப்போட்டுட்ட. போதாத கொறைக்கு பிடிச்ச பிடிக்கு ஒண்ணுத்தையும் விட்டு வைக்கல. அனிமல்ஸ், காரு கீருன்னு கண்டதையெல்லாம் வாங்கியாச்சி. வெறுங்கொடலோட என்னடா வெளாட்டு? பாலக் குடிடா.. கொண்டு வரேன்..!” என்றபடி கொலுவியில் மாட்டியிருந்த கட்டைப்பையை இறக்கினாள். அவனுடைய முகம் பிரகாசமானது. ஆனால் பால்தான் இறங்கவில்லை. அவசர அவசரமாய் பருகியதில் வாயிக்கும் தாடைக்கும் படிகளில் இறங்கும் ஊற்று போல் வழிந்துக் கொண்டிருந்தது.
தனது அம்மாவின் அதட்டலுக்கு அடங்கி பாதி குவளை குடித்து முடித்தவன், பொறுமையில்லாமல் சட்டென பையை தூக்கிக் கொண்டு தான் வழக்கமாக விளையாடும் கொல்லைக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட தாழ்வாரம் பக்கம் சென்று அமர்ந்து கொண்டான்.
மகனின் சிறுபிள்ளைக்குரிய அவசரத்தையும் விளையாட்டுத்தனத்தையும் ரசித்தபடி புன்னகையோடு மற்ற மற்ற வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள் பெற்றவள்.
பையைக் கவிழ்த்தான். கார்கள் விர்ரென ரோதைகள் முளைத்து திசைக்கொன்றாய் ஓடிக்கொண்டிருந்தன. இன்னொருபுறம் ஆடு, மாடு, சிங்கம், புலி, மான், கரடி, யானையென விதவிதமான வண்ணங்களிலும் உருவங்களிலும் இஷ்ட விலங்குகள் அவனது கண்களை விரிய வைத்துக் கொண்டிருந்தன.
எந்த பிராணியும் நிலையில் நிற்க முடியாமல், அவன் கவிழ்த்த கவிழ்ப்பில் தட்டுத் தடுமாறி விழுந்து காலங்களை பக்கவாட்டிலும் செங்குத்தாவும் நீட்டிக் கொண்டு ஹோவெனவும் ஆவெனவும் கிடந்தன. தங்களை ஒழுங்காக இருத்தி வைக்கச் சொல்லி ஆடும் மாடும் மட்டுமே கத்திய சத்தம் அவன் காதில் கேட்டது.
மான் எப்படி கத்துமென அவனுக்குத் தெரியவில்லை அதனால் உடல் வாகை வைத்து ஆட்டின் ஒலியை பொருத்திக் கொண்டான்.
மற்ற விலங்குகளைப் பற்றி பள்ளியில் படித்திருக்கிறான். டிவியில் பார்த்திருக்கிறான். மிகவும் பலம் வாய்ந்தவை என்பதால் வலித்திருக்காது என அவனே நினைத்துக் கொண்டான். சிங்கத்தை நிற்க வைத்தபோது தன்னிச்சையாகவே அவன் உடலிலும் ஒரு கம்பீரம் ஊடுருவிக் கொண்டது.
கையடக்க யானை பொம்மையை எடுத்து தும்பிக்கையை தொட்டுப் பார்த்தான்.. என்றோ ஒருநாள் தெரு பக்கம் வந்திருந்த யானைக்கு காசுப் போட்டபோது தும்பிக்கையால் அவனது தலையைத் தொட்டது ஞாபகம் வந்தது. தலையில் அந்த கூச்சம் சட்டென எழுந்து மறைந்தது. அதன் வாலசைவும், கண்களில் காட்டிய குறும்புச் சிரிப்பும், ஒய்யார நடையும் அந்த வீதி உலாவை ஒரு முறை அசைப்போட வைத்தன.
வரிப்புலியைப் பார்க்க இயல்பாகவே அவனது பார்வை மான் பக்கம் சென்றது. இரண்டையும் அருகருகே நிற்க வைக்க யோசித்தான். ஆனால் மானோ மரங்கள் நிறைந்திருந்த அந்த கொல்லையை வேடிக்கைப் பார்த்தபடி அங்கே சென்று விளையாடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. விட்டால் போதும் துள்ளாட்டமொன்று போட்டுவரும் அளவிற்கு அதன் குளம்புகள் லேசாக டக் டக்கென சத்தமிட்டமிட்டபடி விரைய தயாராகிக் கொண்டிருந்தன.
“நண்பா பயப்படாதே..! எங்கள் பக்கத்திலேயே மானையும் மற்ற விலங்குளையும் விட்டுவிடு! நாங்கள் ஒன்றும் செய்துவிட மாட்டோம்!” என்று புலியும் சிங்கமும் தலைகளை ஆட்டியபடி ஒன்றையொன்றுப் பார்த்துக் கொண்டன. மானுக்கு கிடைத்த வாழ்வில் அதை காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே தெரியவில்லை. ஏனென்றால் ஊரூராய் வியாபாரி சுமந்துச் செல்லும் மூட்டைகளில் ஒன்றொடொன்று உருண்டு புரண்டு மூச்சுமுட்டி எல்லா விலங்குகளுக்கும் படுத்துவிட்டன.
செல்லுமிடங்களிலெல்லாம் ஒலிப்பெருக்கிகளின் சத்தங்கள் வேறு. இதுப் போன்ற ஒரு அமைதி சூழ் சரணாலயத்தைதான் நெடுங்காலமாக தேடிக் கொண்டிருந்தோமென சிங்கமும் புலி சொல்லச் சொல்ல, கரடியும் உர் உர் என்று எல்லாவற்றையும் ஆமோதித்துக் கொண்டிருந்தது.
“எப்படி உங்களை நம்புவது? நீங்களெல்லாம் ஆடு மாடு மான் போன்றவற்றை வேட்டையாடுவீர்களென எங்கள் டீச்சர் சொல்லியிருக்காங்களே..?”
“ஆம் நண்பா..! நாங்க முதன்முறையாக பார்த்துக் கொண்டபோதுதான் அந்த உணர்வு மேலெழுந்தது. எங்களின் குணாதிசயங்களை அறிந்து வைத்திருந்த எங்களின் எஜமானன் அதாவது உன்னிடம் விற்ற அந்த வியாபாரி, இவைகளை நாங்கள் வேட்டையாட நினைக்கும் முன்னமே எங்களை எல்லாம் ஒரு தேசத்து பிள்ளைகளென பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தார். எப்படி என்று கேட்டோம் ‘இதுவரை உங்களுக்கு பரிச்சயமான காட்டில் உங்கள் அறிவுப்படி வாழ்ந்து வந்திருக்கலாம். இது மனிதர்கள் வாழும் நாடு, அடைக்கலமாக எங்கள் வசம் வந்துவிட்டீர்கள். எங்களில் ஒருவராக நீங்கள் மாறிவிட்டீர்கள். எங்களின் அன்பின் தேசத்தில் இனி நீங்களும் பிரஜைகளே! இதில் முதன்மையானது ஒருவருக்கொருவர் நேசம் பாராட்டிக் கொள்வது.. சகோதரத்துவம் பேணுவது. உங்களை வேறொருவரிடம் ஒப்படைத்தாலும் இந்த விதி பொருந்தும்’.
உங்கள் இனங்களுக்குள் காட்டிக் கொள்ளும் அன்பும் கருணையும் போன்றே மற்ற மற்ற இனங்களிடமும் அதன் தேவையிருக்கிறது. மேலும் உங்களை தினந்தோறும் கொஞ்சி உறவாடி கொண்டாட போகிறவர்கள் குழந்தைகளே! அவர்கள் கள்ளம் கபடமற்றவர்கள். இவ்வளவு போதனை சொல்லும் வியாபாரியான என்னை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர்கள். அவர்களோடு பழக பழக உங்கள் மனமும் குழந்தையாகிவிடும் பாருங்கள்! என்றுதான் எங்களை வளர்த்தும் வந்தார். ஆனாலும் நரி பொம்மை எங்கள் மனங்களை அவ்வப்போது கலைக்க முயற்சித்ததுமுண்டு! அதைதான் நீ வாங்கவில்லையே!” என்றது சிங்கம் மிகவும் பெருமிதத்துடன்.
“ஆமாம் நரியின் குணத்தைப் பற்றியும் பாடத்தில் படித்திருக்கிறேன். மிகவும் தந்திரம் மிக்கது. அதனால்தான் அந்த பொம்மையை நான் வாங்கவில்லை!” அதற்கு யானை ‘ஷப்பாஷ்ஷ்..!’ என்று தும்பிக்கையை தூக்கி பிளிறியது! ஆடும் மாடும் பற்கள் தெரிய ஹாஹாவெனச் சிரித்தன.
++
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.
நல்ல கதை, நல்ல முயற்சி.
வாழ்த்துகள் இத்ரீஸ்.