அவ ஓடிக்கிட்டே இருந்தாள்! அந்த யானை துரத்திக்கிட்டே இருந்தது!
++
கருப்பாயி ஒலகந் தெரியாதவதான்
ஆனாப் புள்ளைங்கதான் ஒலகம்னு வாழ்ந்தவ
புருசஞ் செத்த நாளில இருந்து
அவ போவாத ஊரு இல்ல
படாத பாடு இல்ல
தோளில மாட்டிருக்கும் அருவாள்
எப்போதும் பளப்பளனுதானிருக்கும்
அந்த அருவாள் துருயேறனுன்னா
அவச் சீக்குப் படுத்தாத்தேன் உண்டு!
எண்ணவெல்லாம் நெனைச்சு
அன்னிக்கு பொன்னிமலக் கரட்டோரம் நடந்தாளோ!
பாறையுச்சியில தொப்புத் தொப்புனு வளர்ந்திருந்த
கொலக்கட்டான் பில்லறுத்து
ஆளொயரச் சொமையாகக் கட்டினாள்
மூச்சு முட்டித் தூக்கயில்ல
நடுமண்ட சுள்ளுன்னு கிறுகிறுக்கும்
கட்டுக்குத் தென்னஞ் சோகை
கை வேகம் கூடுச்சுனா
கட்டு அவுந்து போவும்
அதனால புள்ளைத் தூக்குற கணக்காத்தான்
புல்லுக்கட்டைத் தூக்கனும்
பில்லுச் செமையத் தலையில் வச்சி
புள்ளைச் செமைய இக்கத்தில வச்சி
உச்சி வெயிலில நடந்தா
கண்ணாமுளியே நட்டுக்கும்!
மண்ட உச்சி நுறுக்குன்னு குத்தும்!
எல்லாம் தாங்கிக்கிட்டு
எட்டி வச்சு நடக்கையில
காட்டு வழி யான தொரத்த
தலைச் சொமையோடு புள்ளைச் சொமையும்
தூக்கிக்கிட்டே ஓடியவதான்
அவ ஓடிக்கிட்டே இருந்தாள்!
அந்த யானை துரத்திக்கிட்டே இருந்தது!
++

எஸ்.உதயபாலா (1992)
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்திலுள்ள கீரனூரில் சுப்பிரமணி கண்டியம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாய் பிறந்தவர். கணிதவியலில் ஆசிரியர் பட்டப் படிப்பினை முடித்துவிட்டு தற்போது தென்னக ரயில்வேயில் தண்டவாளப் பராமரிப்பு பணியாளராக பணிசெய்துவருகிறார்.
பள்ளிக் கல்லூரி காலம் தொட்டே கவிதைகள் எழுதிவரும் இவர் நிலாச்சோறு, லப் டப், முற்றுப்புள்ளி, கீரனூர் சீமை, கருத்தீ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
குறும் படங்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதி வரும் இவர் வெள்ளித் திரையிலும் தனது பயணத்தைத் துவங்கியிருக்கிறார். இவர் எழுதிய முதல் பாடல் “யாமன்” என்ற திரைப்படத்தில் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.