கோவிந்தன், சிகரெட் பற்றவைக்க வீட்டுக்கு வெளியே ஒதுங்கியபோது, சுதாகரனிடம் அந்தப்பெண், “அட நீங்கதானா அது? உங்களோட கேமராவைத்தான் இவன் போனமாசம் கொண்டுவந்து கொடுத்து, ஐநூறு ரூபா அவசரத்தேவை – ன்னு வாங்கிட்டுப்போனவன், இன்னிக்குத்தான் வந்திருக்கான்..” என்று குரலைத்தாழ்த்திச் சொன்னாள்.
கோவிந்தன், சுதாகரனிடம் ஒரு மாதத்திற்கு முன்பு, “நண்பா, உங்களோட கேமராவை ஒருவாரம் ஓசியா கொடுத்தீங்கன்னா, எங்க ஃபேமிலி டூர் முடிச்சுட்டு திரும்பக் கொடுத்திடறேன்..” என்று உரிமையோடுகேட்டு வாங்கிப் போனான்.
கோவி சொன்ன ஒரு வாரம் கழிந்து, இரண்டு வாரமும் கழிந்து, ஒருமாதம் ஆகிவிட்டது. அந்த ரஷ்யன் மேட் ஜெனித் ஆட்டோமேட்டிக் கேமரா வந்தபாடில்லை. சுதாகரன் கொஞ்சம் டென்ஷனாகி கேட்டபோதெல்லாம், ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, இவனுக்கு தின்பதற்கு ஏதாவது வாங்கிக்கொடுத்து, கூல் பண்ணுவதில் சமர்த்தாக இருந்தான் கோவி.
கேமரா என்னாச்சு – என்று சுதாகரன் வீட்டில் வற்புறுத்திக் கேட்டதோடு நில்லாமல், ‘ஏமாந்த சோணகிரி’ பட்டம் வேறு கொடுக்கப்பட்டது. அதனாலும், மற்றும் சுதாகரன் உண்மையிலேயே பலமுறை ஏமாந்த சோணகிரி பட்டத்தை தக்கவைத்து இருப்பதன் ரோஷத்தாலும், அன்று கொஞ்சம் ஓவராகவே, கோவியிடம் கேமரா உடனே வேண்டுமென்று கடிந்துகொண்டு கேட்டான்.
கோவி என்ன நினைத்தானோ, தெரியவில்லை, இவனைத் தன் ஹீரோஹோண்டாவில் ஏற்றிக்கொண்டு, அரைமணிநேரப் பயணத்திற்குப்பின், மேற்சொன்ன பெண்ணின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். நெடுஞ்சாலையின் ஒதுக்குப்புறமாக அந்தப் பெண்ணின் வீடு இருந்தது.
இவர்களை பார்த்தபின் அந்தப்பெண், கோவியின்மேல் ஒரு ஸ்நேகமான பார்வையை வீசிவிட்டு, வீட்டிற்குள் அழைத்துப் போனாள். கோவி அவளிடம் சுதாகரனை தனது நெருங்கிய நண்பன் என்று அறிமுகப்படுத்திவிட்டு ,
“மதியம் என்ன ஸ்பெஷல்? சாப்பிட்டாச்சா..?” என்று ஒரு செயற்கைப் புன்சிரிப்பை உதிர்த்தான்.
“அதெல்லாம் ஒருமணிக்கே, ரெண்டு கட்டி கம்மஞ்சோறு கரைச்சு குடிச்சாச்சு..” என்றாள் அவள்.
கோவி, அந்தப்பெண்ணிடம் ஏதேதோ ஊர்க் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தான். இவன் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியிலேயே நெளிந்துகொண்டிருந்தான். அப்போதுதான் இக்கதையின் ஆரம்ப வரி நிகழ்வும் உரையாடலும், நடந்துமுடிந்தன.
ஒரு கட்டத்தில் அவர்களின் அரட்டை முடிவுக்கு வந்தது. கோவியும் அந்தப் பெண்ணும் எழுந்து உள்ளறைக்குள் போனார்கள். போவதற்கு முன்பு, கோவி இவனைப்பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புடன், “இருங்க நண்பரே..கொஞ்ச நேரத்தில் வந்திடறேன்..” என்று சொல்லிவிட்டுப் போனான்.
சுதாகரனுக்கு, உள்ளுக்குள் ஆற்றாமையும் கோபமும் பொங்கின.
சுற்றிலும் நிதானமாகப் பார்த்தான். அந்த ஓட்டுவீட்டுக்கூரையில் உட்புறமாக மாலை வெய்யிலின் வெளிச்சம் ஆங்காங்கே கசிந்து கொண்டிருந்தது. விட்டத்தில் நூலாம்படைகள் தொங்கின. சுவற்றில் இரண்டு கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. ஒரு படத்தில் இந்தப்பெண்ணும், ஒரு மீசைக்காரரும் ஜோடியாக இருந்தார்கள். மீசைக்காரர் விறைத்த பார்வையுடன் சலனமற்று போஸ் கொடுத்திருந்தார். இன்னொரு படத்தில் ஒரு தாவணிப்பெண், கண்களில் அப்பிய மையுடன் சிரித்துக்கொண்டிருந்தாள்.
சுதாகரனுக்கு, கோவிந்தனுடனான நட்பு நினைவிற்கு வந்தது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, சுதாகரன் தனது தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு மதியவேளையில், அவனைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக, அலுவலக உதவியாளர் சொன்னார். நம்மை இங்கே வந்து யார் பார்க்க வந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டே, சுதாகரன் வரவேற்பறைக்கு வந்தான். அங்கே முப்பது வயது மதிக்கத்தக்க, மாநிறத்தில் வாட்டசாட்டமாக ஒரு வாலிபன், இவனுக்காக காத்திருந்தான்.
“ஹலோ சார்..நான் கோவி @ கோவிந்தன்.. கோவையிலிருந்து நண்பர் அன்வர் பாட்சா உங்களைப்பற்றி விபரம் சொல்லி, எனது பிஸினெஸ் விஷயமாக உங்களை சந்திக்கச் சொன்னார்..” என்று அந்த வாலிபன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அன்வர் பெயரைச் சொன்னதும் இவனுக்கு வந்தவன்மீது ஏதோ நம்பிக்கை வந்தது. அவனை வரவேற்று அமரச்சொல்லிவிட்டு, காஃபி வரவழைத்துக்கொடுத்தான்.
கோவி, தான்இங்கே ஒரு சீட்டுக்கம்பெனியில் பணிபுரிவதாகவும், தனது கம்பெனிக்காக புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துவிட வேண்டி, இவனை அன்வர் பாட்சா பரிந்துரைத்தாக சொல்லி, தனது சீட்டுக்கம்பெனி கேட்லாக் ஒன்றை இவனிடம் கொடுத்து, சார்..உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களை, எனது சார்பில் வாடிக்கையாளராக சேர்த்துவிடுங்கள்..உங்களுக்கும் மூன்று பர்சென்ட் கமிஷன் கிடைக்க ஏற்பாடுசெய்கிறேன்..” என்றான்.
சுதாகரனுக்கு அந்த அன்வர்மீது இப்போது இனம்புரியாத எரிச்சல் வந்தது. தேவையில்லாமல் ஒரு புதுத்தொல்லையை அவர் தனக்குக் கொடுத்திருப்பதாக அவரை நினைத்து நொந்துகொண்டான்.
“சரிங்க சார்..உங்க போன்நெம்பர் கொடுத்திட்டுப்போங்க..யாராச்சும் சேர விருப்பப்பட்டால் உங்களுக்குத் தகவல் கொடுக்கிறேன்” என்று சொல்லி, அவனது விசிட்டிங்கார்டை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிவைத்தான்.
கோவி, தனது மோட்டார்பைக்கினை கிளப்பிக்கொண்டு போனான். இவன், அந்த விசிட்டிங்கார்டை இரண்டுமுறை திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு , அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு திரும்பி நடந்தான்.
சிலநாட்களுக்குப்பிறகு, இவன் ரோட்டில் தனியாக நடந்து போகும்போது,
“சுதாகரன் சார்.. சௌக்கியமா?” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அதே, கோவி @ கோவிந்தன்..! நலம் விசாரித்தபின், இருவரும் சேர்ந்து காபி சாப்பிட்டனர். ” சதாகரன் சார், நாளைக்கு சண்டே, நீங்க ஃப்ரீதானே.. வாங்க சார், ஒரு நல்ல நான்வெஜ் மீல்ஸ் சாப்பிடலாம்..எனக்கும் கம்பெனி கிடைச்சமாதிரி இருக்கும்..நீங்க விரும்பினால் எனது நண்பரை சந்திக்கலாம்..” என்று நிறுத்தாமல் பேசினான்.
இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சரி பார்க்கலாம் என்று மட்டும் சொன்னான். “ஓ.கே. சார், அப்படீன்னா, நாளைக்கு ஒரு பனிரெண்டு மணிக்கு இதே இடத்தில் சந்திக்கலாம்” என்று சொல்லிவிட்டு, அவன் வேகமாக போய்விட்டான்.
அடுத்தநாள், இவனுக்கு போர் அடித்ததால், கோவி வரச்சொன்னது நினைவில் வர, அவனைச் சந்திக்க கிளம்பிவிட்டான்.
இருவரும் சந்தித்து, தலப்பாகட்டி பிரியாணி ஹோட்டலுக்குச் சென்று, சிறப்பாக சாப்பிட்டார்கள். கோவி தான் பில்லுக்கு பணம் கொடுத்தான்.
“அப்புறம்..சார், எனது நண்பனை பார்க்கப்போலாமா..? உங்களுக்கும் அறிமுகப்படுத்திய மாதிரி இருக்கும்..!” என்று சொல்லிக்கொண்டே இவனது பதிலை எதிர்பார்க்காமல், வண்டியை கிளப்பி, இவனை அமரச் சொன்னான்.
கால்மணி நேரம் பயணித்து, ஒரு வீட்டிற்கு வெளியே வண்டியை நிறுத்திவிட்டு, இருவரும் உள்ளே சென்றார்கள்.
அங்கே இருந்த ஒரு பெண்மணி, இருவரையும் வரவேற்று அமரச்சொல்லிவிட்டு “இருங்க, காபி போட்டு எடுத்திட்டு வரேன்” என்று உள்ளே சென்றாள். கோவி, சிறிதும் தாமதிக்காமல் அவள் பின்னாலேயே சென்றான். சுதாகரனுக்கு எதுவும் புரியவில்லை. என்ன நடக்கிறதென்றும் தெரியவில்லை. அமைதியாக அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்க்க முடிவு செய்துகொண்டான்.
ஐந்து நிமிடத்தில் காபி வந்தது. இருவரும் சாப்பிட்டார்கள். கோவி மட்டும் உள்ளே போய் அந்தப்பெண்ணிடம் ஏதோ பேசிவிட்டு வந்தான். “சரிங்க சார்..வந்த நேரம் சரியில்லை ..நாம் கிளம்பலாம்” என்று சொன்னான். இருவரும் வெளியே வந்தார்கள். அந்தப் பெண்மணி, கேட்டை சாத்திவிட்டு உள்ளே போய்விட்டாள்.
இவன் என்னவென்று கேட்காமல் அவனே விபரம் சொன்னான். சீட்டு கேன்வாசிற்காகத்தான் நண்பரை சந்திக்க அங்கே போனதாகவும், நண்பன் இல்லாததால் திரும்பிவிட்டதாகவும் சொன்னான். ஆனால் அவன் சொன்னதை, இவன் நம்பவில்லை. காட்டிக்கொள்ளவுமில்லை.
இதுபோல பல நிகழ்வுகள், இருவரையும் இணைபிரியாத நண்பர்களாக சேர்த்துவைத்தன. பணம் தொடர்பாக இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்ந்தது. கோவியிடம் கொடுத்த பணம் பெரும்பாலும் திரும்பிவராது. ஆனாலும் இருவருமே அதை பொருட்படுத்தமாட்டார்கள்.
அப்படித்தான் ஒருநாள் இவனுடைய ரஷ்யன் மேட் ஆட்டோமேட்டிக் ஜெனித் கேமராவை, கோவி இரவல் வாங்கிக்கொண்டு போனான்.
அரைமணி நேரம் சென்றிருக்கும். சுதாகரன் நிமிர்ந்து பார்த்தான்.
எதிர்ச் சுவரிலிருந்த புகைப்படத் தாவணிப்பெண் இவனைப்பார்த்துச் சிரிப்பது போல இருந்தது.
கோவி, அறையைவிட்டு வெளியே வந்தான்.
“ஃப்ரண்ட், நீங்க கொஞ்சநேரம் இருந்தபிறகு வாங்க..நான் அவசரமாப் போகவேண்டியிருக்கு.. நாளைக்கு உங்களை வந்து பார்க்கிறேன்..” என்று சொல்லிவிட்டு, இவனது பதிலை எதிர்பார்க்காமல், வேகமாக வண்டியை கிளப்பிக்கொண்டு போய்விட்டான்.
இதுமாதிரி அவன் போனது இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.
அந்தப்பெண், சற்றுநேரத்தில் வெளியே வந்து இவனருகில் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தாள். இவனையே இமைக்காமல் பார்த்தாள்.
“அவன் இப்படித்தான்.. என் வீட்டுக்காரர் இறந்துபோன பின், அடிக்கடி வந்து எனக்கு ஆறுதலா இருந்திட்டுப் போவான். என் வீட்டுக்காரரும் இவனும் ஒரே கம்பெனியில் வேலை செய்தவங்க.. எனக்கு குழந்தைங்க இல்லை.. ஆயா மட்டுதான் இருக்கிறாங்க.. அப்பப்போ வந்து பாத்திட்டு போய்டுவாங்க.. நான் இங்கே ஒரு மில்லில் வேலைக்குப் போறேன்..கோவி தான் எனக்கு எப்பவும் துணையா இருக்கிறான்.. என்னைவிட அவன் அஞ்சுவயசு சின்னவன்.. ஆனாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை…உங்களைப் பத்தியும் சொல்லியிருக்கிறான். கேமிரா உங்களோடதுதான்னு சொன்னான்.. ஆனாலும் அவனுக்கு பணப் பிரச்சனை வரும்போதெல்லாம் என்கிட்டதான் கேட்டு வாங்குவான்..” என்று அவள் பேசிக்கொண்டே போனாள்.
அப்போதுதான் அவளை இவன் நன்றாகப் பார்த்தான்.
வயது சுமார் நாற்பது இருக்கும். மாநிறமாக, நல்ல உடற்கட்டுடன் இருந்தாள். அவளுடைய வலது புருவத்திற்கு மேல், நெற்றியில் மிளகு அளவு கருப்பு மரு இருந்தது. அதையே இவன் உற்றுப்பார்ப்பதை அவள் கவனித்தாள். அனிச்சையாக அந்த மருவினை விரல்களால் திருகி தடவிக்கொடுத்தாள்.
இவனுக்கும் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவளுடைய முகத்தையும், கைகளையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தனது சொந்தக்கதையை சொல்லிக்கொண்டே வந்தவள், சட்டென்று அவனது இரண்டு கைகளையும் விரல்களுடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டாள். பிறகு மெதுவாக அவனது ஒவ்வொரு விரல்களையும் மடக்கி நெட்டி முறித்தாள். சுதாகரனுக்கு உடல் சிலிர்த்தது. புறங்கை மயிர்கள் எழுந்து நின்றன.
நேரம் போனதே தெரியவில்லை. இருவரும் வியர்வையில் நனைந்திருந்தார்கள். சுதாகரன் மெதுவாக, “சரி..நான் கிளம்பறேன்..பஸ் ஸ்டாப் எங்கேயிருக்கு..? ” என்று அவள் நெற்றியிலிருக்கும் மருவை பார்வையால் நெருடிக்கொண்டே கேட்டான்.
அவள் புன்னகைத்தபடியே, எதுவும் சொல்லாமல் அவனுக்கு வலதுபுறமாக கையைக்காட்டினாள்.
அவன் வெளியே வந்து செருப்பை காலில் போடும்போது, உள்ளேயிருந்து அவளின் குரல் கேட்டது. “இருங்க..வரேன்..”
அவள் வெளியே வந்து அவனிடம் ஒரு பையைக் கொடுத்தாள். “உங்க கேமரா இந்தாங்க ..பத்திரமா வெச்சுக்கோங்க.. யாருக்குமே இரவல் தராதீங்க…!”
இவனுக்கு மறுபடியும் உடம்பு சிலிர்த்தது.
+++
சக மனிதர்களையும், அவர்கள் வாழ்க்கையை நேசிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வமாய் இருக்கும் ஆர் வி.ராஜேந்திரன் நல்ல வாசகர். பிறப்பிடம் காவிரி ஆற்றின் முழுகடைக்கு அருகிலுள்ள கொளத்தூர். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். முன்பாக 2020-ல் ‘கல் மரங்கள் பூத்த காடு’ கவிதைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.