பிறருக்காக
ஆழம் அகலம்
நீளம் உயரம்
அவர்களே
அளவெடுத்துக் கொள்கிறார்கள்
கிழக்கு மேற்கு
வடக்கு தெற்கு
திசை தோறும் கவனமாக காத்திருக்கிறார்கள்
முனைப்பு ஒன்றுதான்
முகங்கள் தான் வெவ்வேறானவை
பிறருக்காக தோண்டுவதில்தான்
எத்தனை ஆனந்தம்
வச்சக்குறி தப்பவில்லை எனில்
அதைவிட பேரானந்தம்
தானாகவே விழுகிறார்கள் சிலர்
இழுத்து வரப்படுகிறார்கள் சிலர்
தள்ளிவிடப் படுகிறார்கள் சிலர்
தப்பித்து விடுகிறார்கள் சிலர்
தான் தோண்டிய இடத்தில்
தானே விழுந்து விடுகிறார்கள் சிலர்
துரதிர்ஷ்டவசமாக
அதற்காகவே காத்திருந்ததைப்போல
கூட இருப்பவர்களே
மண்ணள்ளிப் போட்டு
மூடி விடுகிறார்கள்
மொத்தத்தில்
முகமூடிகள் இல்லாதவை
தோண்டப்படும் குழிகள்…
00

இதுவரை “இலையளவு நிழல்” “புன்னகையின் நிறங்கள்” ஆகிய
இரு கவிதை நூல்கள் வெளி வந்திருக்கின்றன. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.
பல கவிதைத் தொகுப்புகளில் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.பல வார மாத இதழ்களிலும் கவிதைகள் வெளிவந்து கொண்டிக்கின்றன.