ஒரு அடையாளமற்றவனின் டைரிக் குறிப்புகள்

காலிங் பெல் சப்தம் கேட்டு கதவை திறந்தாள் .மதுமதி

-வணக்கம் மேடம்.

-வணக்கம் தம்பி, எப்படிப்பா இருக்க? உங்க சாரோட உன்னை  கடைசியா பார்த்தது .எப்படி இருக்க ,உன் திரைப்பட வேலையெல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு .

-சாரோட ஆசிர்வாதத்தாலும், உங்களை மாதிரி பெரியவங்க பிராத்தனையாலும் பேர் சொல்லுற அளவுக்கு நல்லபடியா அடுத்த சினிமா வேலைகள் எல்லாம் சிறப்பா போய்க்கிட்டு இருக்கு மேடம் ஆனா சார் நம்ம கூட இல்லைன்னு நினைக்கிறப்ப வர்ற வருத்தம் தான் என்னவோ மனசை பண்ணுது. கூட அசிஸ்டண்ட்டா ஒரு சில வருஷம் இருந்த என்னாலேயே அறிவழகன் சாரோட பிரிவை தாங்க முடியலையே ஒரு இருபத்தி அஞ்சு வருஷம் கூடவே வாழ்ந்த உங்களால எப்படி இருக்க முடியும்? வாழுற ஒவ்வொரு வினாடியும் நரகமா தான் இருக்கும் ..

-தம்பி முத்துக்குமாரு உங்க சாருக்கு அவரு பெத்த பிள்ளையை விட உன்னைய தான் ரொம்ப பிடிக்கும் ஏன் தெரியுமா ? அவரை மாதிரி நீயும், காசுக்கு பெருசா ஆசை பட மாட்டே, சினிமாவோட தமிழையும் நேசிச்ச, வெறும் காசும் மட்டும் தான் முக்கியம்ன்னா பணம் பண்ணுற மாதிரி பல குப்பை படங்களை கமர்ஷியலா எடுத்திட்டு இந்நேரம் ஒரு பெரிய பாப்புலர் டைரக்டரா இருந்திருப்ப. அந்த மனுஷனும் இருக்கிற காலம் வரைக்கும் செந்தமிழின் சங்க இலக்கியம், , தமிழர்களின் உண்மையான வரலாறை புத்தகமாக்கவும் அது மட்டுமின்றி எளிய மனிதர்கள் வரை சென்றடைய இந்த சினிமா துறையையும் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினார் .

அவர் ஆசை இந்த கொரோனாவால் நிராசையா போயிடிச்சு. நல்லா இருந்த மனுஷன் இப்படி நம்மளை விட்டிட்டு போவாருன்னு யாரு கனவு கண்டா ?

இருக்கிற ஒரு பையனையும்  அவரு பேச்சு கேட்காமல் அமெரிக்காவுல  செட்டிலான பொண்ணுக்கு  கட்டி கொடுத்திட்டு இப்படி ஒண்டியா வயசான காலத்துல தவிக்குறேன். அவரு இருந்த வரைக்கும் அடிக்கடி வந்து போனவன் இப்போவெல்லாம் வர்றதே இல்லையப்பா .

-அப்படியெல்லாம் இல்லை மேடம். சார் போனதுக்கு அப்புறம் வாழ்க்கையே வெறுமையா தெரிஞ்சிச்சு. ஆனா இப்படி உடைஞ்சு நின்னா சாரோட ஆசைய யாரு நிறைவேத்துறது .

சார் வேணா நம்மை விட்டு போய் இருக்கலாம் ஆனா சாரோட நினைவுகளை சென்னை அண்ணாநகர் காலத்துக்கும் பெயர் சொல்லும். சாதி,மதம் பார்க்காம, பணத்தை எதிர்ப்பார்க்காம சினிமா கனவுகளோட கஷ்டப்பட்டு வரும் எத்தனையோ ஏழைகளுக்கு அவர் சொந்த செலவில் உருவாக்கின மேன்ஷன் வேடந்தாங்கலாகவும், அன்னச்சத்திர விடுதியாகவும் தான் இருந்தது. இன்னைக்கு வீடு,வாசல்,காருன்னு பல பேர் நல்லா இருக்கிறதுக்கு அறிவழகன் சாரும் ஒரு காரணம் .

-எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நீங்களெல்லாம் நல்லா வரணும், நீங்களெல்லாம் ஜெயிச்சிட்டா கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்யுங்க, உங்க அறிவு மட்டுமல்ல,  நீங்கள் பிரதிபலன் பாராமல் செய்யுற உதவி கூட உங்களை உயர்த்தும்னு சொன்ன மனுஷன் யார் கண்ணு பட்டதோ அநியாயமா அந்த பாழாய் போன  கொரோனா வந்து கொண்டு போயிடிச்சு.

-அவரு போனாலும் அவருடைய ஆசைய நிராசையா ஆக்கிட கூடாது மேடம் . இலக்கியத்தனமான செந்தமிழை ,அதன் கவிதைகளை ,செந்தமிழின் பல அரிய நூல்களை  எளிமைப்படுத்தி சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சார் சேகரித்த எல்லா தகவல்களையும் நூலாக்கி எல்லா மக்களிடத்திலும் கொண்டு சேர்த்திட வேண்டும். அவருடைய கதையை நிச்சயம் ஒரு நாள்  நான் சினிமாவா  எடுப்பேன் மேடம் .

-அந்த ஆண்டவன் தான் அவருடைய ஆசைகளை உன் மூலமா நிறைவு செய்ய வைக்கணும்ப்பா .

அறிவழகன் சேகரித்த எல்லா தகவல்களையும் இரவு , பகல் பாராமல் முறைப்படி வரிசைப்படுத்தி , சில திருத்தங்கள் செய்து எல்லோரும் வாங்கும் வகையில் குறைந்த விலையில் புத்தகமாக வெளியிட்டான் முத்துக்குமார் .

அந்த நூல் சிறப்பாக தமிழின் தொன்மையை எளிமைப்படுத்தி சொல்லியதால் எளிய மக்களிடத்திலும் பிரபலம் அடைந்தது.  ஆனால் அந்த நூலின்  ஆசிரியரான அறிவழகன் சாரின் பெயரோ , இவ்வளவு விபரங்களை சேகரித்த முத்துக்குமார் பெயரோ இடம் பெறவில்லை.  காரணம் தமிழ் மொழி உலகுக்கெல்லாம் பொதுமொழி . என் தமிழ்மொழி கொடுத்த அருங்கொடை எல்லோருக்கும் பொதுவானதாக , எல்லோரும் உரிமை கொள்ளும் ஒரு  நூலாக அந்நூல் விளங்க வேண்டும் என அறிவழகன் இறப்பிற்கு முன் எண்ணினார்.  அதனால் தான் அறிவுசாரின்  ஆசையை நிறைவேற்ற அடையாளமற்றவர் எழுதியது போல் எந்த பெயரும் குறிப்பிடாமல் நூலை வெளியிட்டான் .

சங்க இலக்கியங்களின் அறிவார்ந்த கருத்துக்களால்  அந்த நூல் அந்த வருடத்தின் ஆகச்சிறந்த நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நூல் ஆசிரியர் குடும்பமும் ,முத்துக்குமாரும்  எந்த உரிமையும் கோராததாலும் அந்த நூல் நாட்டுடைமையாக்கப்பட்டது . மண்ணில் மறைந்தாலும் மகத்தான மனிதன் அறிவு சாரின் கனவு நிஜமானது !

தும்பி பிடிக்கையில

பம்மி தான் நிக்கலையே

ஆயாவின் மடியினிலே

தலை சாய்ந்து படுக்கையில

மல்லாக் கொட்டையின்

வாசனை தான் வீசுதடி

ஆடி மாசம் கழிஞ்சு வந்த

புது மாப்பிள்ளைக்கும் தான்

சம்பா சோறு

கொள்ளையில வேகுதடி

அசைபோட

பனங்கிழங்கும்

ஆட்டம்போட

ஆலமரமும் வானுயரத்தில் நிக்குதடி

நடந்து சென்ற

வாய்க்காலில் கெண்டையும் தான்

நக்கலாத் தான் பார்க்குதடி

மீசை வச்ச கழுத்தியும்

கொழுப்புல தான்

கடிச்சு விட்டு செல்லுதடி 

ஒத்தை காலுல நிக்குற கொக்கு  கூட

நத்தைய தான்

வேட்டையாட நிக்குதடி

மழை ஓஞ்சதுக்கு அப்புறம் -வண்ண

மயில் கூட

நடனம் தான் ஆடுதடி

மார்கழி வாடையில

ஊர் வாசம் வீசுதடி

அடுக்குமாடி மதராஸ்ல

ஆடம்பரம் இருந்தாலும்

என் ஊர் சுகம் கிடைக்குமாடி !

என்ற எளிய கவிதையுடன் அந்த நூல் முடிவு பெற்று இருந்தது. அடையாளமற்றவர்களின் டைரிக்குறிப்புகள் தான் எவ்வளவு சுவாரஸ்யமாய் தான் இருக்கிறது !

+++

லி .நௌஷாத் அலி  (புனைப்பெயர் லி .நௌஷாத் கான் ) என்கிற நான் முது நிலை மேலாண்மை பட்டப் படிப்பு முடித்தவன் .கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்தவன், வந்தாரை வாழ வைக்கும் வந்தவாசியில் வளர்ந்தவன்.

இதுவரை கவிதை -கதை என என்னுடைய படைப்புகள் நூற்றுக்கும் மேற்பட்டவை பல தினசரி நாளிதழிலும் ,வார இதழ்களிலும் ,மாத இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளது .

கவிதை -கதை என இதுவரை  இருபதுக்கும்  மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறேன் …

என்னுடைய படைப்புகளை  மணிமேலை பிரசுரம் 11 புத்தகங்களையும் , காகிதம் பதிப்பகம் மூன்று புத்தகங்களையும் , ஓவியா பதிப்பகம் ஒரு புத்தகத்தையும் – PGK  ஆர்ட்ஸ் ஒரு புத்தகத்தையும் , நண்பர்கள் பதிப்பகம் நான்கு புத்தகத்தினையும் வெளியிட்டு உள்ளது. .மதி பதிப்பகம் வெளியிட்ட ஐம்பது படைப்பாளிகளின் இரண்டு கவிதை தொகுப்பு நூல்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *