அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பா ஒரு தினக்கூலி. சுற்றுவட்டாரத்திலுள்ள கவுண்டர்களின் தோட்டங்களுக்கே பெரும்பாலும் தோட்டவேலைக்குச் செல்வார். வேலைக்குச் செல்வதோடு அல்லாமல் வேலைக்கு ஆட்களையும் அழைத்துச் செல்வார். அவ்வாறு அழைத்துச் செல்லும்போது அந்த வேலையை குத்தகைக்குப் பேசிமுடித்து வருவார்.
குத்தகை வேலை என்பது பத்து இருபது ஆட்களை தன்வசம் வைத்துக்கொண்டு செய்ய வேண்டிய வேலையை பேசிய தொகைக்கு குறைந்த நாட்களில் பேசியபடி சிறப்பாக முடித்துத் தருவதாகும். பிறகு, பேசிய பணத்தைப் பெற்று ஒருநாள் கூலியை மொத்தமாக வேலைசெய்த நாட்களோடு கணக்கிட்டு வேலையாட்களுக்குச் சம்பளத்தைக் கொடுத்துவிட்டு மீதம் இருக்கிற பணத்தில் தன்னுடைய சம்பளத்தோடு இலாபத்தையும் பெற்றுக்கொள்வதாகும்.
தினமும் கூலி 300ரூபாய். கூலி வேலைக்குச் செல்பவர்கள் அனைவருமே, காலையில் ஒன்பது மணிக்குச் சென்றால் பொழுதுசாயும் நேரம் முன் நான்கு மணிவரை வேலை செய்வார்கள். பார்போடுதல், வரப்புக் கட்டுதல், வாழைத்தார் அறுத்தல், வாழைக்காடு அழித்தல், வாழை நடுதல், கரனை போடுதல், மஞ்சள் வெட்டு, மஞ்சள் வேவித்தல், சோளம் விதைத்தல், சோளம் அறுத்தல், கரும்பு வெட்டுதல், களை எடுத்தல், மருந்தடித்தல், தோகை உரித்தல், தண்ணீர் கட்டுதல், வெங்காயம் ஊனுதல் ஊரிலுள்ள ஆண்களும் பெண்களும் தங்களுக்கேற்ற வேலைகளுக்குச் செல்வர். இவற்றுள் ஆண்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளும் அப்பாவிற்கு நன்கு தெரியும்.
காலகாலமாக செய்துவந்த மரமேறுகிற தொழிலை அப்பா முறையாகப் பழகிக்கொள்ளவில்லை. காரணம் என்னவென்று ஒருமுறை நான் கேட்டபோது,
‘தம்பி அது நல்ல வேலைதான். சொந்தத்தொழில்டா. எவன நம்பியும் வாழ வேண்டியது இல்ல. சொந்தமா நாலு மரமிருந்தாப் போதும், அதைய ஏறி தெளுவு எறக்கி கருப்பட்டி காய்ச்சி வித்தாப் போதும் நம்ம பொழப்பு ஓட,
சுத்திலும் இத்தன தோட்டங்காட்டுக் காரங்க இருக்காங்க, எல்லாரும் நம்ம ஆளுங்களத்தான் எப்படியும் கூப்பிட்டாகோணும், ஆனாலு நான் ஏறிப்பழகல, காரணம் இந்தப் போலீசு நாய்ங்க தொல்லைதான், சரி அதவிடு, நீ நல்லாப் படி, படிச்சு நல்ல உத்தியோகத்துக்குப் போ, பேர் சொல்றமாதிரி வாழ்ந்து காட்டு அது போதும் அப்பாவுக்கு’ என்றார்.
‘அப்பா தெளுவு வேற கள்ளு வேறைங்களா?’னு கேட்டவுடனேயே ‘தம்பி அதெல்லாம் எதுக்கு உனக்கு, படிக்கிறதமட்டும் பாரு’ என்று என் வாயடைத்துவிட்டார்.
பார் என்றால் வரப்பு கட்டுதல் அல்லது உழவு செய்யப்பட்ட காட்டில் தண்ணீர் பாய்ச்சவும் சரிவர நேராக வாழையோ, கரும்போ, மஞ்சளோ எது பயிர்செய்யப்படுகிறதோ அவற்றை நடுவதற்கு ஏற்றவாறு நேர்த்தியாக வரப்புகளைச் சீவுதல்.
கூசான் பார்ப்பதற்கு மெலிதான உடல்வாகு கொண்டவர். தட்டையான முகம், கண்கள் சற்று நீலநிறம் கலந்த மத்தியில் கருமை படிந்தவை. சன்னமான குரலுடன் எப்போதும் அன்பாகவே என்னிடம் பேசுவார். கூசானின் மகன் மணிகண்டன் என்னுடைய வகுப்புத்தோழன். நாங்கள் மிகவும் நெருக்கமான நண்பர்கள். ஒன்றாம் வகுப்பு முதலே ஒரே வகுப்பில்தான் பயின்றோம். ஆறாம் வகுப்புப் படிக்க பொலவக்காளிபாளையம் அரசுமேல்நிலைப் பள்ளியில் எங்களிருவரையும் சேர்த்தபோது A, B பிரிவுகளில் பிரித்துவிட்டனர்.
பிறகு, பிரிவுத்துயர் தாளாமல் மணிகண்டன் கண்ணீர்மல்க ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் அறைக்குச்சென்று சங்கீதா டீச்சரிடம் விவரத்தைச் சொல்லியழுதான்.
‘ச்சேரி சேரி போச்சாது அழதாபோடா க்ளாஸுக்கு, உன்னைய நெகிழனோட A கிளாஸ்க்கே மாத்திடறேன்’ என்றார். அதுமுதல் இப்போது வரைக்கும் இணைபிரியாமல் இருக்கிறோம்.
ஒருமுறை வகுப்பறையில் இடைவேளை நேரம் அது. நரேன் என்பவனுடைய அழி இரப்பர் திருடு போனது. அவன் வரிசையில் அமர்ந்திருந்த அனைவரது பைகளிலும் சோதனையிட்டான். அவனுக்கு முன்னால் வரிசையில் நான் அமர்ந்திருப்பதால், சந்தேகித்த நரேன் என்னுடைய ஜாமென்றிப் பெட்டியைத் திறந்து சோதனையிட்டான். இரப்பர் அதிலில்லை. அதுவொரு பொம்மை வடிவிலான இரப்பர் என்பதால் அது உறுதியாக எனக்குப் பிடித்துப்போனதாகவே இருக்கக்கூடுமென்று எண்ணி சந்தேகித்தவன், என்னுடைய புத்தகப் பையை தலைகீழாகக் கவிழ்த்து அனைத்தையும் நடு வகுப்பறையில் கொட்டினான். அனைத்துப் புத்தகங்களும் தொப்… தொப்பென்று ஒவ்வொன்றாக விழுகிறபோது , நரேனுடைய இரப்பர் கீழேவந்து குதித்துக் குதித்து விழுந்தது. அடுத்த கணமே, நரேன் என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான். நான் விர்ர்..ரென்று அழத்தொடங்கிவிட்டேன். இதைப்பார்த்துக்கொண்டிருந்த மணிகண்டன் நரேனின் மார்பில் பலமாக தன் கைகளை முறுக்கிக் குத்திக்கீழே தள்ளினான்.
சிறுநீர் கழிக்கச் சென்றவர்கள் ஒவ்வொருவராக வகுப்பறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கடுமையான சண்டை ஏற்பட்டதை அனைவரும் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
கீழே விழுந்தவன் பல்லைக்கடித்துக்கொண்டு ‘டேய் மணி…’ சத்தமாகக் கத்திகொண்டு திருப்பித்தாக்க எழுந்துநின்றான்.
ஆசிரியர் மேசைமீதிருந்த பெரம்புத் தடியை நரேன் கையிலெடுத்தான். மணிகண்டனது கண்கள் அப்போது கோபத்தில் உக்கிரமாக இருந்தது. நரேன் பெரம்பால் மணிகண்டனை நாலைந்து அடி வைத்துவிட்டான். வலி பொறுக்கமுடியாத மணிகண்டன் பெரம்பைப் பிடித்துவிட்டான். பிடித்தவுடன் தன் ஒருகாலால் நரேனின் வயிற்றில் ஒரு எத்து எத்தினான். சுருண்டுவிழுந்த நரேன் துடிதுடித்துக் கத்தினான்.
பெண்தோழிகள் அலறியடித்துக்கொண்டு வகுப்பறையின் ஒரு மூலையில் ஓரமாகக் குவிந்துநின்றுகொண்டனர். அப்போது அனைவரது முகத்திலும் அச்சம் அப்பியிருந்தது. வலியில் துடித்துக்கிடந்த நரேன் மேலே எழ முடியாமல் திக்கித்திணறி அருகிலிருந்த டேபிளைப் பிடித்தெழுந்து நின்றான்.
கீழே கொட்டிக்கிடந்த புத்தகங்களுக்கு அருகில் ஜாமென்றிப் பெட்டி திறந்து கிடந்தது. இருவருக்கும் சரிபாதி இடைவெளியில் அந்த ஜாமென்றிப் பெட்டி கிடந்தது. அதன் அருகில் நான் நின்றுகொண்டிருந்தேன். நரேன் அதனை உற்றுப்பார்ப்பதை மணிகண்டன் சுதாரித்துக்கொண்டான். வேகமாக நாலெட்டுவைத்து வந்த நரேன் குனிந்து ஜாமென்றிப் பெட்டியிலிருந்த காம்பஸை எடுக்க முயற்சித்த வேளையில், எனது காலால் ஜாமென்றிப் பெட்டியை உதைத்துத் தள்ளிவிட்டேன். அது சர்ரென்று சறுக்கிக்கொண்டு மணிகண்டனின் காலடியில் சென்று நின்றது. வெடுக்கென்று காம்பஸை கையிலெடுத்த மணிகண்டன் கண்களை இமைப்பதற்குள் நரேனைத் தாக்க அருகில் வந்துவிட்டான். அடுத்தவினாடி, வகுப்பறையிலிருந்த நண்பர்கள் நாலைந்துபேர் மணிகண்டனைத் தடுத்து நிறுத்திவிட்டனர். இதனையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வகுப்புத்தோழிகள் அனைவரும் கத்தத் தொடங்கிவிட்டனர். பக்கத்து வகுப்பறையிலிருந்த மாணவ மாணவிகள் அனைவரும் எங்கள் வகுப்பறைக்குள் வந்துவிட்டனர்.
அந்தநேரத்தில் கதிர்வேல் சார் வந்துவிட்டார். ‘என்னடா இங்க சத்தம், ஏய் நீங்க ஏண்டா இங்க வந்திருக்கீங்க, போங்க… போங்க.., உங்க கிளாஸ்க்கு போங்க எல்லாரும்’ என்றார்.
நடந்த முழுவிவரத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்ட கதிர்வேல் சார். ‘சரி நாளைக்கு மூணுபேரும் வரும்போது அப்பா அம்மாவோட வரீங்க, வந்து HM Sir கிட்ட TC வாங்கிட்டுப் போயிருங்க. எவ்ளோ தைரியம்டா உங்களுக்கு.’ என்றார். எதுவுமே பேசாமல் பயத்தில் திருத்திருவென்று விழித்துக்கொண்டு நின்றிருந்தோம்.
‘ஏன்டா உனக்கென்ன மனசுல ரௌடினு நெனப்பா, ஆளும் அவனையும் பாரு. எருமை… எருமை…’ என்று சொல்லிக்கொண்டே மணிகண்டன் காதைத்திருகி குனியவைத்து முதுகில் பட்… பட்டென்று அடிபோட்டார். மணிகண்டன் மிதிபட்ட பாம்பைப்போல முதுகை வளைத்து நெளித்து தன் புறங்கையால் தேய்த்துக்கொண்டு நின்றான்.
அடுத்து எனக்கு ‘உனக்கெல்லாம் என்னடா, ஒழுங்கா இருக்க முடியாதா? என்ன கேடு வந்துச்சு உனக்கு, இரப்பர்… இரப்பர் திருடச் சொல்லுதா’ திட்டிக்கொண்டே பெரம்பை எடுத்து முட்டிக்குக் கீழே கால்காலாக வெளுத்தார்.
‘சார் நான் திருடலீங்க சார். சத்தியமா நான் திருடலீங்க சார். ஐயோ… ஐயோ’வென்று கதறியபடி மணிகண்டனுக்குப் பின்னால் ஓடிநின்றேன். ‘ஏன்டா திருடினதும் இல்லாம பொய் வேற பேசறியா’ உதட்டைக் கடித்துக்கொண்டு பெரம்பால் மீண்டும் அடித்தார்.
அப்போது மணிகண்டன் ‘சார் நான்தான் இரப்பரத் திருடி அவன் பைக்குள்ள போட்டனுங்க’ என்று தேம்பிக்கொண்டே மணிகண்டன் சொன்னான்.
தலைமுடியைப் பிடித்து இழுத்து கரகரவென்று சுற்றி பின்புறத் தொடைக்கு மேலும் கீழுமாக சட்டுச் சட்டென தொடர்ந்து இரண்டுமூன்று நிமிடம் நிற்காமல் அடி விழுந்தது மணிகண்டனுக்கு. அப்போது மணிகண்டன் துளியும் அழவே இல்லை. வலியைத் தாங்கியபடி வலிக்காததுபோல ஒரே கிடையில் நின்றுகொண்டான்.
அடுத்து ‘உனக்கென்ன இரப்பர் காணாம போன அடிப்பையோ, அவ்ளோ பெரிய ஆளா நீ! நீட்டு… நீட்டு… கைய நீட்டு’ இரண்டு கைகளிலும் சத்… சத்…தென்று இரண்டிரண்டு அடிகள் விழுந்தன நரேனுக்கு. கையை வாயில் ஊதி ஊதி ஆ… ஆ… என்று சிவந்த கைகளை பட்டக்சில் தேய்த்துக்கொண்டு நின்றான். அப்போது வகுப்பிலிருந்த அனைவரும் நரேனின் அந்தச் செய்கையைப் பார்த்து கலகலவென்று சிரித்தனர். ‘எருமைங்களா படிக்கிறது ஒன்னுமில்லைனாலும் சிரிப்பு வேற வந்துருது. பாக்குறேன் இனிவர பரீட்சைல என்ன எழுதிக்கிழிச்சு வாங்குறீங்க’னு என்றவுடன் ஒரு குண்டூசிவிழும் சத்தம்கூட வகுப்பறையில் அப்போதில்லை.
அடுத்தநாள் வெள்ளிக்கிழமை காலை 8.30மணி. தலைமையாசிரியர் அறைமுன்பு வெளியில் போடப்பட்டிருந்த இருக்கையில் நரேனின் அப்பா அமர்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் மணிகண்டனின் அப்பா இடுப்பில் துண்டைக் கட்டியவாறு கையைக்கட்டி நின்றுகொண்டிருந்தார்.
அப்பாவும் நானும் அருகில் சென்றவுடன், நரேனின் அப்பா ‘வா ராசா… உக்காரு.’என்றார். ’உக்காந்தாப் போகுதுங்க’ என்று சொல்லிவிட்டு தலையில் கட்டியிருந்த உருமாலைத் துண்டிலிருந்த பீடி தீப்பெட்டியை எடுத்து சட்டைப்பையில் போட்டுவிட்டு உருமாலையைக் கழற்றி இருக்கையிலிருந்த தூசியைத் தட்டிவிட்டு, ஒரு உதறு உதறிவிட்டு தோளில் போட்டுகொண்டு அப்பா அமர்ந்தார்.
“பசங்க அடிதடி போட்டுட்டானுங்கனு வரச்சொல்லி இருந்தாங்க. அதான் வந்திருக்கேன். உம்பையந்தான் இரப்பர் திருடிட்டானு நம்ம தம்பி அடிச்சு போட்டானாமா. பையன் ஏன் இப்டி பண்றான். ஒழுங்கா நாலு ஈடுபோட்டு வளக்க மாட்டியா?’’ என்றார் நரேனின் அப்பா.
‘எங்கீங்க கவுண்டரே கேக்றானுங்க. முந்தா நேத்துதானுங் ரூல் பெனசலு இல்லீனு கேட்டதுக்கு நம்ம முதலியார் கடைல வாங்கித் தந்தேன். பள்ளிக்கோடம் வந்திட்டு ஊடு வந்தவன் வேறொரு பெனசல்ல எழுதிட்டு இருந்தானுங்க. ஏதுடா இதுன்னு கேட்டதுக்கு பிரண்டுகிட்ட பெனசலுக்கு பெனசல் மாத்திக்கிட்டோம் ப்பா… னு சொன்னானுங்.’ அப்பா பேசிக்கொண்டிருக்கும்போது தலைமையாசிரியர் நீளமான பெரிய பெரம்புடன் அறையிலிருந்து வெளியே வந்தார்.
அப்பாவும், நரேனுடைய அப்பாவும் தலைமையாசிரியரைப் பார்த்தவுடன் இருக்கையிலிருந்து எழுந்து ‘வணக்கங் சார்’ இருகரம் கூப்பித் தெரிவித்தனர். ‘இருக்கட்டுங். உள்ள வாங்க பேசலாம்’ பெரம்பைத் தடவிக்கொண்டே உள்ளே சென்றார். மறுபடியும் அடிவிழுமோ என்று பயத்தின் பீதியில் அப்பாவோடு உள்ளே சென்றேன். அப்போது நரேனும், மணிகண்டனும் என் பின்னாலேயே வந்து நின்றுகொண்டார்கள்.
இருக்கையில் அமர்ந்த தலைமையாசிரியர் ‘உக்காருங்… உக்காருங்…’ என்று இரண்டுமுறை சொன்னவுடன் அப்பாவும் நரேனுடைய அப்பாவும் அமர்ந்தனர். அப்போது காலியாக இருந்த இன்னொரு இருக்கையில் ‘வாங்க உக்காருங்க’ என்று கூசான் அவர்களைப் பார்த்துச் சொல்லிவிட்டு, மேசைமீதிருந்த செய்தித்தாளை ஓரமாக நகர்த்தினார் தலைமையாசிரியர். செய்தித்தாளில் ஒருமூலையில் ‘ஊர் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற பெண்மணி – அடித்துக் கொலை’ ஒவ்வொரு எழுத்தாக முனகியபடி எழுத்துக்கூட்டிப் படித்துக்கொண்டிருக்க, ‘இல்லீங்க பரவாயில்லீங் சாமி. நான் நிக்கறனுங். அதாங் செரி’ என்று பணிவான குரலில் கூசான் சொன்னார்.
‘பசங்க அடிதடி போட்டுக்குறது சகஜந்தாங்க. ஆனா காம்பஸ எடுத்து குத்திக்கிற அளவுக்கு சண்டப்போட்டதால தாங்க உங்கள வரச்சொன்ன. நேத்து கதிர்வேல் சார் மூணு பேரையும் கூட்டிட்டு வந்து விவரத்தச் சொன்னப்பவே, இவனுங்கள மெரட்டிக் கேட்கையில மணிகண்டனும் இரப்பரத் திருடலனு நெகிழஞ் சொன்னானுங்க. அப்படினா யாருடா திருடனதுனு கேட்டதுக்கு நெகிழனும் எடுக்கலங்கறான், மணிகண்டனும் அப்போதைக்கு அப்டி பொய் சொன்னங்கறான். யார்கிட்டையோ இந்த இரப்பருக்கு பதிலா அவனோட இரப்பரக் கொடுத்துட்டு வாங்கி இருக்கான் நெகிழன். அது யாருன்னு கேட்டா சொல்ல மாட்டிங்குறானுங்க ரெண்டு பேரும். மொத்தத்தில அடிதடி போட்டுட்டானுங்க, இதெல்லாம் ஒன்னுஞ் செரி இல்லீங்க. வாரத்துல இப்டி மூணு நாலு பேர் அடிச்சிக்கிறானுங்க. அதான் கதிர்வேல் அடிச்சிருக்காரு. இவனுங்களுக்கு இதே தொழுவாடாப் போச்சுங்’ கோபம் மெல்ல மெல்ல மேலேறப் பேசிக்கொண்டிருந்தபோது,
அதனை அடக்கும் விதமாக இடைமறித்து ‘இங்க பாருங்க சார் எம்பையன் தேடும்போது நெகிழம் பைக்குள்ள இரப்பர் இருந்திருக்கு அதான் அடிச்சிருக்கானுங்க சார். திருடித் தந்தது இந்தா நிக்கறாம் பாருங்க இவந்தான். அவனே தான்தான் திருடன்னு உண்மையச் சொல்லி இருக்கான். அதக் கேக்குறத விட்டுட்டு என்னென்னமோ பேசிட்டு இருக்கீங்க’ என்று வெடவெடவெனப் பேசினார்.
‘ஏங்க இவ்ளோ நேரம் தெளிவாத்தாங்க சொன்னேன். அது இல்லீங்க உண்மை’ தலைமையாசிரியர் பேசத்தொடங்குகையிலேயே ‘ஏங்கடா தோட்டங் காட்டுல வேலையும் குடுத்து, சம்பளத்தோட வவுத்துக்கு கொஞ்சநஞ்சம் போட்டு ஆதரவாப் பாத்துக்கிட்டா கடைசில எங்களையே ஏறியும் மிதிப்பீங்களோ! இதுக்குத்தான்டா அன்னைக்கே படிச்சுப் படிச்சு சொன்னேன் கண்ணாயாகிட்ட இந்த வலுவுப் பசங்க படிக்கிற பக்கத்துல எல்லா பையனப் படிக்கச் சேத்த வேண்டாமுன்னு’ பேசிக்கிட்டே கூசான் அவர்களை முறைத்துவிட்டு ‘ஏய் ராசா உம்பட பையன் இந்த விசியத்துல இருக்குறதால சும்மா இருக்கேன். இல்லாட்டி நடக்குறதே வேற’ மீசையைத் தடவியவாறு அப்பாவைப் பார்த்துச் சொன்னார்.
‘கவுண்டரே இப்ப என்னங்கறீங்க, அதுக்காக பசங்கள வெட்டிப் போடலாமா, ஏதோ சின்னப் பசங்க அடிச்சுக்கிட்டாங்க கொஞ்சம் புத்திமதி சொல்லி திருத்திப் போடலாமுங், அதுக்கு இப்டிங்களா பேசுறது, சும்மா எவனும் வாங்கித் திங்கலயே வெயில் மழைன்னு பாடுபட்ட காசுலதான் ஒழச்சு திங்குறாங்க’ அப்பா சொல்ல ‘தே… ராசா உனக்குப் புரில, இல்ல பொதுவாப் பேசறங்கற பேர்ல வாய விடுறியா? நா இப்பவும் உன்னச் சொல்லல, யாரச்சொல்றேன்னு உனக்கே தெரியும், பள்ளிக்கோடமாப் போச்சு, இல்லனா பேசறவிதமே வேறமாதிரி இருக்கும்டா ராசா, எல்லாரும் ஒன்னா ஆகிற முடியாதுடா, உனக்குத் தெரியாதது இல்ல’ என்றார் நரேனின் அப்பா.
‘புரியுதுங் கவுண்டரே… என்ன பண்றதுங் உங்க வசதிக்கு பெரிய பெரிய ஸ்கூலுல படிக்க வெப்பீங்க, என்னால முடியாதுங்க. பையன் பண்ணுனது தப்புதானுங், வேணும்னா நாலு போடு போட்டுக்குங்க’ என்றார் அப்பா.
‘அட ராசா அவனும் என் புள்ளமாதிரிதான்.. அவன நீ சொல்லித்தான் அடிக்கணும்னு இல்ல. விடு விடு பாத்துக்கலாம்’ என்றவுடன்
நிலைமையைப் புரிந்துகொண்ட தலைமையாசிரியர் ‘ஹெலோ இங்க சத்தம் போடாதீங்க, தேவை இல்லாதத பேசிக்கிட்டு இருக்க வேண்டாங்க ஐயா. கொஞ்சம் அமைதியா இருங்க’ அதற்குள் கூசான் மணிகண்டனை செவுள் மீது ஐந்தாறு அறைவிட்டார். மணிகண்டன் அப்பா… அப்பா… என்று கதறி அழுதான். தலைமையாசிரியர் எதுவும் பேசாமல் மேசையிலிருந்த பிரம்பை உருட்டியபடி நின்றுகொண்டிருந்தார்.
பிரச்சினை முடிந்தது. தலைமையாசிரிடம் வணக்கம் சொல்லிவிட்டு அப்பாவும், நரேனின் அப்பாவும் பேசிக்கொண்டே புறப்பட்டுச் சென்றார்கள். தலைமையாசிரியர் எங்களை வகுப்பறைக்குப் போகச்சொன்னார்.
மூவரும் வெளியில் வந்தோம். முதலில் செருப்பை அணிந்த நரேன் வகுப்பறைக்கு நடந்துசெல்லத் தொடங்கினான். நான் செருப்பை அணிந்து கொண்டிருந்தேன். அப்போது என்மீது சற்று கோபமாக இருந்தான் மணிகண்டன். அறையிலிருந்து வெளியேவந்த கூசான் மணிகண்டனை ‘சாமி இந்து ரா..!’ என்று அழைத்து கன்னத்தில் முத்தமிட்டு இடுப்பில் கட்டியிருந்த தன் அழுக்குத் துண்டை அவிழ்த்து மணிகண்டனின் முகத்தைத் துடைத்துவிட்டார்.
பிறகு, இருவரும் வகுப்பறைக்குச் செல்லும்போது புங்க மரத்தை அடைந்தவுடன், கீழே கிடந்த மலராத ஒரு புங்கம் பூ மொக்கை எடுத்த மணிகண்டன், ‘Thanks டா நெகிழா’ என்றான். நானும் சிரித்துக்கொண்டே அதனை வாங்கி எனது ட்ரவுசர் பையில் போட்டுக்கொண்டேன்.
அன்றைக்கு மதிய இடைவேளையில் நானும் மணிகண்டனும், பிரபாகரனும், ரவியும் இன்னும் சில நண்பர்களும் வேப்ப மரத்தடியில் மதிய உணவு உண்பதற்காக வட்டமாக அமர்ந்திருந்தோம். அப்போது எங்களுக்கருகில் வந்தமர்ந்தனர் எங்கள் வகுப்பைச் சேர்ந்த இன்னும்சில நண்பர்கள். அதில் நரேனும் ஒருவன்.
அப்போது நரேன் என்னை ‘நெகிழா இந்தாடா காய்’ சிறிதளவை மூடியில் போட்டு நீட்டினான். அதனை வாங்கிக்கொண்டு எங்கள் வட்டத்தில் அமர்ந்திருந்த அனைவருக்கும் பகிர்ந்தேன். பதிலுக்கு நாங்கள் பகிர்ந்து வைத்திருந்த உணவை நரேனுக்கு நீட்டியபோது ‘இல்லடா நெகிழா இதுக்கு மேல என்னால சாப்டமுடியாது, வவுரு நம்பீருச்சு’ என்றான். ‘ம்ம்ம் செரிடா’ என்று நாங்களே அதனை சாப்பிட ஆரம்பித்தோம்
‘இந்த வாரம் நரேனோட காட்டுக்குத்தான்டா அப்பா ஆளுங்கள வேலைக்குக் கூட்டிட்டு போயிருக்காரு. நாளைக்கு லீவுல நானும் மணிகண்டனும் அங்கதான் வெளையாடிட்டு இருப்போம்’ என்று எஸ் அப்போது நான் நண்பர்களிடத்தில் தெரிவித்தபோது சோகமாக என்னையே பார்த்தவாறு சாப்பிட்டுவிட்டு எழுந்தான் மணிகண்டன். பிறகு, அனைவரும் சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் சென்றோம்.
அடுத்தநாள் பள்ளி விடுமுறை. சனிக்கிழமை.
குனிந்தவாறு நிற்காமல் ஒரேசீராக உழவுசெய்யப்பட்ட மண்ணை வெட்டி வேலையாட்களோடு அப்பா பார் பிடிக்கும்போது நான் தோட்டத்தின் கீழபுறமிருந்த மகிழ மரத்தடியில் அமர்ந்தபடி மண்ணைச் சீவிச் சீவிப் பாய்கிற மண்வெட்டியின் வேகத்தையே இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்பாவின் மண்வெட்டி வேகத்தைவிடவும் கூசான் மண்வெட்டி சீறிப்பாயும். சலார்…சலாரென்று. அது மண்ணைச் சீவுகிற வேகத்திலேயே மண்வெட்டியில் மண்நின்று பிறகு பாத்தி பிடிக்கிற பாருக்குச் செல்வது தெரியாது. அவ்வளவு வேகமாகச் சென்றுவிழும். மண்ணை வெட்டி எடுக்கிறபோது மண்புழுக்களும் மண்ணாங்கட்டிகளோடு வந்துவிழும். அது நெண்டிக்கொண்டு உடலை மண்ணிற்குள் இழுத்துக்கொள்வதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும். சிலநேரங்களில் மண்வெட்டிக்கு தங்கள் உடலை காவு கொடுத்துவிடும். அப்போது பீறிட்டு எழுகிற அவற்றின் இரத்தத்தைப் பார்க்கும்போது எனக்கு பற்கள் கூசும். ஒருமாதிரியாக இருக்கும். வலியுடன் மீண்டும் மண்ணிற்குள் துண்டான பாதி உடலை உள்ளிழுத்துக்கொள்ளும்.
வேலையாட்கள் மண்ணைவெட்டி வரப்புக்கட்டிக்கொண்டிருக்க அவர்களுக்குப் பின்னால் கொக்குகளும், காக்கைகளும் வந்தமர்ந்து மெதுவாக மண்புழுக்களையும், பிற புழுக்களையும் கொத்தித் தின்றுகொண்டிருக்கும்.
பதினோருமணி வெயில் மெதுமெதுவாக உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தது. வடபுறம் தாரச்சாலையிலிருந்து திரும்புகிற வண்டித்தடத்தில் நுழைந்தபின் மஞ்சள்காடு. அதன் வரப்பங்காலில் கூசானுக்கு மணிகண்டன் ஒரு தூக்குச்சட்டியில் புளுதண்ணி கொண்டுவருகையில்,
தண்ணீர் பம்புசெட்டிற்கு அருகில் கவுன்சி ஆயா ‘ ஓய்…. ராசு வாங்க டீ குடிக்கலா… டேய்… அடேய் கூசா… ஓய்… ஓய் ராமா… அட இத்தன சத்தம்போடறேன் இவனுங்க ஒருத்தனுக்குக்கூட காது கேட்கலையே… காதுகீது பீஸ் போயிருச்சா… அடே படையப்பா உனகாச்சுங் காது கேட்குதா’ என்று சத்தம் போட்டுவிட்டு நெற்றியில் வழிந்த வியர்வையை முந்தானிச் சீலையெடுத்து துடைத்துக்கொண்டார்.
மறுகணமே, ‘தேனுங்காயோவ் இதா வாரமுங்கோ..வ்…’ ஒலியடங்கி நிற்குமுன்னரே ‘ம்ம்ம் ராசு கண்ணாயா அவிங்க டீ கொண்டாந்துட்டாங்க, வாங்க… வாங்க ஆறிப்போயிரும், சீக்கிரம் போலாமுங்’ என கூசான் அப்பாவை அழைத்தபிறகு, அனைவரும் மண்வெட்டியை நிழலில் வைக்கச்சென்றார்கள்.
நானும் மணிகண்டனும் அவர்களனைவரும் வருவதற்கு முன்னதாகவே, பம்புசெட் இருக்குமிடத்திற்கு ஒரே ஓட்டமாக நீர்பாயும் வாய்க்கால் வழியாக ஓடிச்சென்றுவிட்டோம்.
அப்போது மண்வெட்டியை நிழலில் வைத்துவிட்டு அப்பாவும் கூசானும் பிற வேலையாட்களும் தூரத்தில் நடந்துவந்துகொண்டிருந்தார்கள்.
மணிகண்டன் பக்கத்திலிருந்த வாழைமரத்தின் காய்ந்த இலையின் நாரைப் பிய்த்து இழுத்துக்கொண்டிருந்தான். நான் சட்டையில் உடைந்துபோன பொத்தானுக்குப் பதிலாக பின்னூசி குத்திக்கொண்டிருந்தேன். அப்போது தலைமுடியைச் சரிசெய்தபடி மணிகண்டனைப் பார்த்த கவுன்சியாயா ‘டேய் பாடா தேன்டா பொச்சுங் கையுங்காலும் கம்முன்னு இருக்கமாட்டிங்குதா! அதயேன்டா நோண்டிட்டிருக்க, வர வர உங்களுக்கெல்லாம் கொஞ்சம் எடங்கொடுத்தா கை நீளுதோ… நறுக்கிப்போடுவேன் பாத்துக்க’ முகம் சிடுசிடுக்கச் சொன்னார்.
‘ஏங் கண்ணு நெகிழா, இவங்கூட சேந்துட்டு நம்ம பைய நரேன அடிச்சியாக்கும்’ என்று கொஞ்சம் கோபத்தை அடக்கியவாறு கேட்டார். ‘இல்லீங்க கண்ணாயா அது வந்துங், நானெல்லா அடிக்கலீங்க’ என்று மிச்சத்தைச் சொல்லும்முன்பே, ‘தெரியுந் தெரியுங் கண்ணு, இவனோடயெல்லாம் சவகாசம் எதுக்கு, நரேனுக்கு புதுசா கவுண்டரு சைக்கிள் வாங்கிட்டு வந்துருக்காரு, பொழுதோட ஊட்டுக்குப் போயி குளிச்சுப்போட்டு வா கண்ணு, நரேனோட வெளையாடுவையாமா’ என்றார்.
‘சரிங்க கண்ணாயா’ என்றேன்.
அப்போது கையைப் பிசைந்தவாறு நின்றுகொண்டிருந்த மணிகண்டன் கூசான் அருகில் வந்ததும் கூசானிடம் ஓடிநின்றுகொண்டான்.
செய்தித்தாளில் சிறுசரடிட்டுச் சுற்றிக்கட்டியிருந்த முறுக்குப் பொட்டலத்தை என்னிடம் நீட்டி ‘இந்தா கண்ணு ஆளுக்கு ரெண்டு முறுக்கெடுத்துக் குடு’ என்றார். பெற்றுக்கொண்ட நான் அனைவருக்கும் இரண்டு முறுக்குகள் தந்தபின் அந்தக் காகிதத்தோடு நான்கு முறுக்குகளை சுருட்டிக்கொண்டு வரப்புமேட்டில் வந்தமர்ந்தேன். மூன்று சில்வர் டம்ளர்களில் டீயை ஊத்தியபிறகு ‘இந்தா ராசு டீ எடுத்துக்க.. அப்டியே அலுங்காப்புல உம்பையனுக்கும் எடுத்து குடு. சிந்தீரக்கீது போகுது’ என்று சொல்லிவிட்டு பின்னால்திரும்பி ‘அடக் கூசா அங்கென்னடா பன்றீங்க எல்லாரு. சீக்கிரமா வாங்கடா டீ ஆறிப்போவு. அப்றோ… சாமி டீ சூடு இல்லீங்னு என்னையச் சொல்லப்புடாது பாத்துக்க ஆம்மா’.
பம்புசெட் திண்டுக்கடியில் வைத்திருந்த அவர்களது கண்ணாடி டம்ளர்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொருவராக வந்தனர். படையப்பனுக்கு டம்ளர் இல்லை. ஒவ்வொருத்தருக்கும் கண்ணாடி டம்ளரில் முட்டாதபடி டீச்சட்டியை மேலே தூக்கியபடி ஊத்தியபிறகு, ‘அடே உன்ற டம்ளர் எங்கடா படையப்பா?’ கேட்டபடி டீச்சட்டியை கீழே வைத்தார்.
‘சாமி டம்ளர் நாலுதான் இருந்துச்சுங். கூசான் குடிக்குட்டுங்! அப்புறம் கழுவிட்டு அதுல நாங்குடிச்சுக்கறேனுங்’ தலையைச் சொறிந்தபடி சொன்னார். உடனே, மணிகண்டன் ‘பெரியப்பா நா அப்புறம் குடிச்சுக்குறேன் இந்தாங்க இத நீங்க குடிங்க’ தனது டம்ளரை படையப்பனிடம் நீட்டினான். ‘ரே நுவ்வு தாஃகற மீ அஜ்ஜி கிளாஸ்த்து நீனு சீஸ்கோத்தாஃனே’ என்று மறுதலித்தார்.
‘அட தென்னாரோ… கூசான் குடிக்கவரைக்கும் பாத்திட்டிருக்கட்டும் அந்தாலகீது தேங்காத்தொட்டி கெடந்தா எடுத்துட்டு வா, அதுமில்லீன்னா இந்த வாழமரத்தெலையக்கீது கிழிச்சுட்டு வா, ஊத்திட்டுப் போறேன். மாடுகண்ணெல்லாம் பள்ளத்தோரத்துல மேஞ்சிட்டிருக்கு, நாம்மேர அண்ணாங்காலுதான் போட்டுவிட்டிருக்கேன். அந்தச் செவலக்கண்ணு வேற நிக்காது. மேலேறி பக்கத்து கரும்புக்காட்டுக்குப் போயிருச்சுன்னா அப்புறம் அந்த வவுத்துக்கவுண்டரு வேற சத்தம் போடுவாரு’ சொல்லி முடிப்பதற்குள் படையப்பன் ஒரு தேங்காய்த்தொட்டியை தேடியெடுத்து கிச்சுல செருகியிருந்த துண்டினால் உள்கிடையிலிருந்த மண், லேசான பூச்சிக்கூட்டைத் துடைத்துவிட்டு ‘ஊத்துங் சாமி’ என்றார்.
கவுன்சி ஆயா படையப்பனுக்கு டீ ஊத்திக்கொண்டிருந்தார். டீ சூடாக இருந்ததால் நானும் மணிகண்டனும் டம்ளரை கீழே வைத்திருந்தோம்.
முறுக்குக் காகிதத்தைப் பிரித்துவிட்டு மணிகண்டனை அழைத்தேன். பக்கத்தில் வந்தமர்ந்துகொண்டான். என்னுடைய முறுக்கை நானெடுத்துக் கொண்டபிறகு மணிகண்டனும் அவனுக்கான முறுக்கை எடுத்த கணமே, ‘டேய் கூசா என்னடா பையனுக்கு ஒன்னுஞ் சொல்லித் தரலையா நேர்நெதானந் தெரியாம இருக்கானே… தே ராசு நீதாஞ் சொல்லக்கூடாதா உம்பையனுக்கு இப்டி ஒன்னாக்கோரவெச்சு முறுக்குத் திங்கறானே! ம்ம்ம் இருக்கட்டும் நாளைமேலைக்கு உன்ற ஊட்டுக்காரி இந்தால வருவாள்ல… வரட்டும்… அவகிட்ட பேசிக்கிறேன்.’ என்று கடுகடுக்கப்பேசியவாறு அப்பா கழுவிக்கொடுத்த டம்ளரை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.
‘ஏல்ரா.. இல்ல சேஸ்தாவு பள்ளிகோடானுகோட ஒட்டுக குஞ்ச கூடாந்த்த நீனு படிசு படிசு சொப்புத்தேகாது… சூஸ்திவா, கொங்குத்ராலு ஆடிகிடு போத்து’ எனக் கோபத்தில் மணிகண்டன் கையிலிருந்த முறுக்கைத் தட்டிவிட்டார் கூசான்.
எல்லோரும் ஒரு நிமிடம் மணிகண்டன் அழுவதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் கூசானையே பார்த்துக்கொண்டிருந்தேன். கூசான் கண்கள் மெல்லச் சிவந்துவிட்டன.
‘ஏந்தம்பி உனக்கெப்டி இருக்குது மனசுல. அவனெதுக்கு கூப்டு உக்காரவெச்ச. அவ முறுக்க அவனுக்கே எடுத்துக் குடுத்திருக்க வேண்டிதான, அவந்தொட்ட முறுக்கவேற தின்னுட்டிருக்கையா’ன்னு கையிலிருந்த முறுக்கைப் பிடுங்கி எறிந்தார் அப்பா. அடுத்த நொடியே அனைவரும் அங்கிருந்து வேலை செய்யக்கிளம்பி விட்டனர். அப்பாவும் தலையில் உருமாலையைக் கட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே சென்றார்.
மணிகண்டன் தேம்பித் தேம்பி சற்று மெதுவாக கண்ணீர்வர அழுதுகொண்டிருந்தான். நான் டீ டம்ளரை எடுத்துக்கொண்டு ஓரமாகச்சென்று நின்று குடிக்க ஆரம்பித்தேன். டீ சூடு குறைந்திருந்தது. எங்கள் இருவருக்குமிடையில் மௌனம் ஸ்தம்பித்துக்கொண்டது. மணிகண்டனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று எனக்கு அப்போது எதுவும் தெரியவில்லை.
பிறகு, பம்புசெட்டின் திண்டுமேல் உட்கார்ந்து ஆறிப்போன டீயை குடித்துமுடித்தபிறகு டம்ளரை திண்டின்மேல் வைத்தேன்.
மணிகண்டன் டம்ளரையே பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவன் பார்ப்பதையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பா பிடுங்கி எறிந்தததில் கீழே உடைந்து சிதறிக்கிடந்த முறுக்கை எடுத்துக்கொண்டுவந்து எனக்குக் கொடுத்தான். நான் அதை வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். சில நொடிகள் கைகள் நீட்டியவன் துண்டு முறுக்கை திண்டின்மேல் வைத்துவிட்டுச் சென்றான்.
அவன் குடிக்காமல் வைத்திருந்த கண்ணாடி டம்ளரை திண்டிலிருந்து இறங்கிச்சென்று கையிலெடுத்தேன். டீ முழுச்சூடும் தணிந்து ஆறிப்போயிருந்தது. வாயில்வைத்து மடக்கென்று ஒரு முடக்குக் குடித்துவிட்டு கீழே வைத்தேன்.
அப்போது, டீ டம்ளருக்குள் சில விநாடிகளுக்குள் விழுந்து மூழ்கிக்கிடந்த ஒரு சிறு கட்டெறும்பு மேலேறத் துடிதுடித்து டம்ளரில் ஒரு ஓரத்தில் நீந்திக்கொண்டு வட்டமடித்தபடியிருந்தது. தொண்டையில் மெதுமெதுவாக இறங்கிக் கொண்டிருந்த ஆறிப்போன டீ குடலையடைந்தவுடன் தககதகவென்று கொதித்தது.
அப்போது நான் சுற்றும்முற்றும் ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு ஆட்காட்டி விரலால் அந்தச் சிறு கட்டெறும்பை மேலெடுத்துவிட்டேன். அது தன் இமைச்சூட்டுக் கரங்களால் முகம்நீவித் துடைத்துக்கொண்டு மிக மெதுவாக ஊர்ந்துசெல்லத் தொடங்கியது.
திருமூ
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த திருமூர்த்தி முதுகலை ஆங்கில இலக்கியம் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கிறார். கல்லூரிக்காலங்களிலிருந்தே கவிதை எழுதும் இவர் 2016ல் ‘நீரில் எழுதிய கவிதை’ எனும் கவிதை தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். 2017ல் தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறையின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றிருக்கிறார். இது இவருடைய முதல் சிறுகதை.