ஒரு தோற்றுப்போன விற்பனைப் பிரதிநிதியின் குறிப்புகள்

சந்துரு அன்று காலையில் எட்டு மணிக்கே பீல்டிலிருந்தான். அவனுடைய அணித் தலைவர் அவனுக்கு சேலம் குகைப் பகுதியை ஒதுக்கியிருந்தார். எல்லா வீட்டுக் கதவையும் தட்டி விட முடியாது. ஓரளவுக்கு வசதியாக தென்படும் வீடுகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி ஒரு வீட்டைத் தேர்வு செய்து, நான்கு படிகள் ஏறி, கதவு ஓரமிருந்த காலிங் பெல்லை அழுத்தினான்.

திறந்த மார்புடனும், கலைந்த லுங்கியுடனும், முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் நின்றிருந்தான். இன்னும் தூக்கத்திலிருந்து வெளி வரவில்லை. கலவியிலிருந்து பாதியில் வந்தவனைப் போல், எரிச்சலான முகத்துடன் இருந்தான்.

‘சார், பாடி மசாஜர் சார். உடம்புல எந்த வலி இருந்தாலும் நிவாரணம் கிடைக்கும். விலை அறுநூறு ரூபாய் தான். இன்றைக்கு நீங்கள் தான் முதல் சேல்’ என்றேன்.

‘இல்ல, வேணாம். காலைலங்காட்டியும் வந்து கழுத்தறுக்கிறானுங்க’ என்றபடியே கதவைப் பகீரென்று சத்தத்துடன் சாத்தினான்.

இதை எதிர்பார்க்காத சந்துரு, அதிர்ந்து போனவனாய் சில நொடிகள் சிலையாக வாசலிலேயே நின்றிருந்தான்.

பிறகு தலையைக் குலுக்கியபடி, அடுத்து எந்த வீட்டிற்கும் செல்லாமல், சூட்கேஸை இறுகப் பிடித்தபடி, நடக்க ஆரம்பித்தான். சந்திலிருந்து மெயின் ரோட்டிற்கு ஐந்து நிமிட நடையில் வந்து சேர்ந்தவன், முக்கிலிருந்த டீக்கடையில், டீ வாங்கியபடி, ஒரு நாற்காலியில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான்.

சந்துரு பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தவன் தான். கவுன்சிலிங்கில் சேலத்திலேயே இருந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து, வீட்டிலிருந்து பஸ் மாற்றி தினம் வந்து படித்தான். கவனச் சிதறலால், கடைசி ஆண்டில் பல அரியர் பேப்பர்கள். எப்படியோ அடித்து பிடித்து பெரும்பாலும் பாஸ் செய்து விட்டாலும், ஏப்ரலில் ஐந்து பேப்பர்களில் பெயில். வீட்டிலிருந்தே கவனமாகப் படித்து, நல்ல மதிப்பெண்களுடன் நவம்பரில் டிகிரி முடித்தவனுக்கு சும்மா வீட்டிலிருக்கப் பிடிக்கவில்லை. நண்பன் ஒருவன் பரிந்துரையில் பாடி மசாஜர் விற்கும் ஒரு டீலரிடம் விற்பனைப் பிரதிநிதியாகச் சேர்ந்து விட்டான்.ஏனோ சந்துருவுக்கு, விற்பனைப் பிரதிநிதிகளைப் பார்த்தாலே பிடித்திருந்தது. அழகான பேண்ட், சர்ட், பெல்ட்,டை, பளபளக்கும் ஷுவால் கவர்ந்திழுக்கப் பட்டிருந்தான்.

மாதம் எழுநூற்று அம்பது ரூபாய் அடிப்படைச் சம்பளம். விற்பனைக்குத் தக்கவாறு கமிஷன்.

மூன்று மாதங்கள் தாக்குப்பிடித்த அவனால், இரண்டு பீஸ்களுக்கு மேல் விற்க முடியவில்லை.

அன்றைய சம்பவம் அவன் மனதை மிகவும் பாதித்திருந்தது. அங்கிருந்து வெளியேறி, நேராக தனது கல்லூரி நண்பனிடம் சேர்ந்தான்.

நண்பனின் அண்ணன் ஷேர் மார்க்கெட் கம்பெனி நடத்தி வந்தார். நண்பன் கல்லூரி முடித்தவுடன், அண்ணன் கம்பெனியில் சேர்ந்து, பிடெல் போன் விற்பனை உரிமை பெற்றிருந்தான். இப்போது சந்துருவுக்கு, போன் விற்பனை செய்யும் வேலை. அடிப்படைச் சம்பளமே இரண்டாயிரம். லேண்ட் லைன் வகையில் பட்டன் ஃபோன்கள். நேவி புளூ கலரில் பார்க்க நன்றாகவே இருக்கும்.

முதல் மாதம் என்பதால் எதுவும் விற்காமலேயே சம்பளம் வந்து விட்டது. பாடி மசாஜர் விற்பனை செய்த இடங்களில் எல்லாம் அலைந்தான். ஆனாலும் ஒரு போன் கூட விற்க முடியவில்லை. நல்ல வேளை வீட்டில், வேலை பற்றியோ சம்பளம் பற்றியோ, அம்மாவோ அப்பாவோ அதிகம் கேட்கவில்லை.

இரண்டாவது மாதத்திலிருந்து டிரில் ஆரம்பித்தது. நண்பனின் அண்ணன் தினமும் சந்துரு சந்தித்த அனைவரது முகவரி மற்றும் போன் நம்பர் விவரங்கள் கேட்க ஆரம்பித்தார்.

பீல்டுக்குச் சென்று விட்டு, ஒரு நாள் மதியம் அலுவலகம் வந்தான். நண்பன் விற்பனை குறித்துச் சற்று காட்டமாகவே விசாரித்தான். ‘பாரி, இன்னும் மதிய உணவே சாப்பிடவில்லை’ என்றான். ‘இதையெல்லாம் ஒரு காரணம் என்று சொல்லக்கூடாது சந்துரு. அண்ணா உன் மேல ரொம்பக் கோவமா இருக்காரு. உள்ள போயி பேசிட்டு வந்துடு’ என்றான்.

கண்ணாடிக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். பாரியின் அண்ணனுக்கு இளவயதிலேயே சொட்டை விழுந்திருந்தது. அதனாலேயே அவர் பார்ப்பதற்கு சற்று வயது கூடுதலாகத் தெரிவார். சரியான முசுடு. யாருடனும் சரியாக பேசமாட்டார். பாரியிடமும் பேசுவாரா என்ற சந்தேகம் சந்துருவுக்கு எப்போதும் உண்டு.

லேப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தவர் அவன் நிற்பதையே கவனிக்கவில்லை. சற்று நேரம் கழித்து, தொண்டையை கனைத்தான் சந்துரு. அப்போது தான், தலைதூக்கி அவனைப் பார்த்தவரின் முகம் கடுகடுப்பாயிருந்தது.’பாரி சொல்லி தான் சேர்த்தோம். சேர்ந்து ரெண்டு மாசமாச்சி, ஒரு சேலும் இல்ல. தெண்டமா சம்பளம் குடுக்க முடியாது. நாளையிலிருந்து நீங்க வேலைக்கு வரவேண்டாம்’ என்றார். ‘சார், என்னால முடிஞ்சது முயற்சி பண்றேன் சார். இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்க’ என்றான்.

‘இல்லீங்க, நீங்க போகலாம்’ என்றார். ‘தேங்ஸ் சார்’  என்று சொல்லியபடியே வெளியே வந்தான்.

பாரிக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால் தெரிந்தபடி காட்டிக் கொள்ளாமல்,’என்னடா சொன்னாரு?’ என்றான். ‘நாளையிலிருந்து வர வேணாம்னு சொல்லிட்டாரு’ என்றான். ‘சாரிடா, என்னால எதுவும் செய்ய முடியாது’ என்றான். ‘இல்லடா, பரவாயில்ல. ரொம்ப தேங்க்ஸ்டா’ என்று சொல்லியபடியே அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். முதல் முறையாக, ஒரு வேலையிலிருந்து வெளியேற்றப் படுவது ஒரு வித்தியாசமான, துன்பமான அனுபவமாக இருந்தது.

இடையில் ஒரு மாதம் வேலைக்குச் செல்லும் மனநிலையில் அவன் இல்லை. வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தான்‌. அம்மா தான் சொன்னார்: ‘என்னடா ஆச்சு?, இப்டியே இருந்தா ஒன்னும் செய்ய முடியாது. அடுத்து ஆகவேண்டிய வேலயப் பாரு’ .

பேப்பரில் தேடியும், சென்னையிலிருக்கும் கல்லூரி நண்பர்கள் வழியாகவும் வேலை தேட ஆரம்பித்தான். இப்போது விற்பனை வேலையை, தன்னால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையைக் கொடுத்தது.

மேலும் ஒரு மாதம் கழித்து, சென்னையில் ஒரு பன்னாட்டுக் கம்பெனியில் காப்பி பிரிண்டர் விற்கும் விற்பனைப் பிரதிநிதியாக வேலையில் சேர்ந்தான். அடிப்படைச் சம்பளம் ஐயாயிரம் ரூபாய். ஆனால் பிஎஃப் பிடித்தமிருந்தது. விற்பனைக்குத் தக்கவாறு கமிஷன் இருந்தது.

கோடம்பாக்கத்தில் கல்லூரி நண்பனின் அறையில் தங்கியபடி, பேருந்தில் நுங்கம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தான்.

பன்னாட்டுக் கம்பெனியானதால், விற்பனை குறித்த பல பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சைக்கோ சைபர்னெட்டிக்ஸ் புத்தகத்திலிருந்து விரிவான பயிற்சிகள் இருந்தன. விலைதான் ஒரு பெரிய மனத்தடையாக இருந்தது. குறைந்தது மூன்று லட்சத்தில் ஆரம்பித்து எட்டு லட்சம் வரையிலான விலை கொண்ட இயந்திரங்கள். இயந்திரங்களை இயக்குவது குறித்தும், செயல்முறை விளக்கம் குறித்தும், சிறுசிறு கோளாறுகளைச் சரி செய்வது குறித்தும் முதல் மாதம் ஓடியது.

அங்கு வேலை செய்தவர்கள் பெரும்பாலும் சென்னையைச் சேர்ந்தவர்கள். சுகுமார் என்பவன் மட்டுமே வெளியூர். மதுரைக்கு அருகில் மேலூர் அவன் சொந்த ஊர். திரைப்பட இயக்குநர் சேரன் அவனுக்கு நண்பர். சேரனைப் பற்றிப் பேசாமல் அவனால் இருக்க முடியாது.

சந்துருவின் அணித்தலைவர் கண்ணன். கண்ணன் ஒரு ஜாலியான ஆள். எந்தவொரு டென்ஷனும் அவனைப் பாதிக்காது. அங்கு இருந்தவர்களிடம் பேசியதில், அவன் ஒரு முன்னாள் நடனக் கலைஞன் என்றும், திரைப்படத்திற்கு முயற்சி செய்தான் என்றும், தந்தை இறந்ததால் அவன் இந்த வேலைக்கு வந்துவிட்டான் என்றும் தெரியவந்தது.

இவனுக்கு நேர்மாறாக சுகுமாரின் அணித்தலைவர் வேலு. எப்போதும் டென்ஷனாகவே சுற்றிக் கொண்டிருந்த வேலு, பிராஞ்ச் மேனேஜருடன் மிகவும் நெருக்கமானவன்.

இவனையும் சுகுமாரையும் தவிர்த்து அனைவரிடமும் இரண்டு சக்கர வாகனங்கள் இருந்தன. காலையில் அனைவரும் அலுவலகம் வந்தவுடன், அன்றைய தினத்தில் சந்திக்க வேண்டிய வாடிக்கையாளர்கள் குறித்து ஒரு சிறிய சந்திப்பு. எல்லோரும் முதலில் செல்வது அருகிலுள்ள மவுண்ட் ரோடு டிரைவ்இன் ரெஸ்டாரன்ட்டுக்குத் தான். அறையில் காலையுணவு முடித்திருந்தாலும், இட்லி, வடை,காபி ஆர்டர் செய்து மெதுவாக சாப்பிட்டு விட்டு, அரட்டை அடித்து விட்டுப் பின்னர் பதினோரு மணிக்கு பீல்டுக்குக் கிளம்பியது சந்துருவுக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. பிறகு பழக்கமான ஒன்றானது. அங்கு தான், நடிகர் எஸ்விசேகர், நடிகர் நாசர் ஆகிய பலரையும் பார்த்தான். பழங்காலப் பாடகர் சிரீனிவாஸ் தினமும் வருவார். அவருக்கான இருக்கையில் அமர்ந்திருப்பார். யாரிடமும் பேசாததும் கையெழுத்து வாங்காததும், இப்போது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

முதல் மூன்று மாதங்களில் பெரும்பாலும் சென்னையைப் பேருந்திலேயேச் சுற்றி வந்தான். சில சமயங்களில் மணலி, போரூர், எண்ணூர் ஆகிய இடங்களுக்கும் பேருந்திலேயேச் செல்வான்.

பதினோரு மணி என்பதால் பேருந்துகளில் சற்று கூட்டம் குறைவாகவே இருக்கும். ஆனாலும் கையில் சூட்கேஸுடனும், காலில் ஷுவுடனும், கழுத்தில் டையுடனும், சென்னை வெய்யிலில் அலைவது மிகச் சிரமமான காரியமாக அமைந்தது.

முதல் மூன்று மாதங்களில் ஒரு சேல்ஸ் கூட இல்லை. நல்ல வேளையாக சம்பளப் பிடித்தம் ஏதுமில்லை.

இடையில் சில காமெடிகளும் நடந்தன. அருகிலுள்ள அரசாங்க அலுவலகத்தில், செயலருடன் அவனுக்கு சந்திப்பு கிடைத்தது. அறையில் அவருக்கு முன் அமர்ந்ததும், அவனுடைய பெட்டி மக்கர் செய்ய ஆரம்பித்தது. அவனுடைய நெற்றியில் வியர்வை பெருக ஆரம்பித்தது. செயலர் கிண்டலாக,’என்ன சார், பெட்டி தெறக்கலயா?’ என்றார். சிறிது நேரப் போராட்டத்துக்குப் பின்னர், பெட்டி திறந்ததும் சந்துருவுக்கு மூச்சு வந்தது.

மற்றொரு முறை, ஒரு பிரபலமான ஏவியேஷன் சொல்லித்தரும் கல்லூரி முதல்வருடனான சந்திப்பு. அவரது செயலர் ஏதோ ஒரு காகிதத்தைக் கொடுத்தார். வழக்கமாக கேட்கும் பழக்கத்தில்,’எத்தனை காப்பி?’ என்றான். முதல்வருக்கு சற்றே கோபம் வர ஆரம்பித்தது. காப்பி எடுக்க ஆரம்பித்ததும், பத்தாவது காப்பியில், பேப்பர் மெஷின் உருளையின் சுற்றிக் கொண்டது. அந்த பேப்பரை எடுத்து விட்டு, மீண்டும் எடுக்க ஆரம்பித்தான். மீண்டும் பேப்பர் ஜாம். கல்லூரி முதல்வர் டெமோவைக் கேன்சல் செய்து விட்டு, உள்ளே சென்று விட்டார். சந்துரு முதல்வரின் செயலரிடம் அடுத்த சந்திப்பிற்காகக் கெஞ்ச ஆரம்பித்தான். கடைசி வரை, அவனால் செயல் விளக்க சந்திப்பு வாங்க இயலவில்லை.

பிறகு, கண்ணன் தனது வாகனத்தில் சந்துருவையும் அமர வைத்துச் சுற்ற ஆரம்பித்தான். இவன் சொன்ன விற்பனை லீட்களையும் இரண்டு பேரும் சேர்ந்து தொடர ஆரம்பித்தார்கள்.

தினமும் மதிய உணவுக்கு கண்ணன், சந்துருவையும், மயிலாப்பூரிலிருந்த அவனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தான். கண்ணனுக்கு அப்பா இல்லை. சந்துருவை கண்ணனின் அம்மா மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டார். சந்துருவின் முன்னாலேயே, கண்ணன் தனது அம்மாவிடம்,’கிராமத்துப் பையன்மா. ஏழக் குடும்பம்’ எனச் சொல்லியிருந்தது இன்னும் அவனது அம்மாவிடம் பச்சாதாபத்தை அதிகரிக்கச் செய்தது.

சந்துருவின் தொடர் முயற்சிகள் இன்னமும் அவனுக்கு கைகொடுக்கவில்லை. ஆறு மாதங்கள் ஆகியும் அவனது கணக்கில் ஒரு விற்பனையும் இல்லை.

மாதாந்திரக் கூட்டங்களில் பிராஞ்ச் மேனேஜரிடமிருந்து மிகுந்த அழுத்தம் வர ஆரம்பித்தது. இன்னும் இரண்டு மாதங்களில், குறைந்தது மூன்று யூனிட்டுகள் விற்பதற்கான சாத்தியமிருப்பதாகச் சொன்னான்.

பட்ட காலிலிலேயே படும் என்பது போல, அக்கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் லண்டனிலிருந்து வர இருப்பதாகத் தகவல் வந்தது.

எல்லோரும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தனர். அன்றைய காலையை சந்துருவால் இந்த வாழ்க்கையில் மறக்கமுடியாது. அன்று யாரும் பீல்டிற்குச் செல்லவில்லை. அவர்கள் கூடும் அறையில் அனைவருமிருந்தனர். பிற மாவட்டங்களிலிருந்தும் அணித்தலைவர்கள் வந்திருந்தனர். ஒவ்வொருவராக பிராஞ்ச் மேனேஜர் அறைக்குள் அழைக்கப் பட்டனர்.

சந்துரு மிகவும் பதட்டமாக உணர்ந்தான். அவன் முறை வந்தது. மேனேஜரின் உதவியாளர் லட்சுமி, ‘சந்துரு வாங்க’ என அழைத்தாள்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவனுக்கு, மேனேஜருடன், கம்பெனியின் வெள்ளைக்கார எம்டியும் அமர்ந்திருந்ததால், உடம்பு நடுங்கியது. ஏசியை மீறி, வியர்வை மழையில் நனைந்து கொண்டிருந்தான். எம்டி, பால் வெள்ளைக் கலரில், நல்ல உயரம். மீசையில்லாமல் மொழு மொழு என்றிருந்த முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமின்றி, இறுக்கமாக இருந்தது. சந்துருவுக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது.

மேனேஜர் விளக்கினார்: ‘சந்துரு, சார் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்க வேண்டும்’ என தூய ஆங்கிலத்தில் சொன்னார். சந்துரு எதுவும் பேசவில்லை.

எம்டி லண்டன் உச்சரிப்பில் ஆரம்பித்தார்: ‘கடைசி ஆறு மாதங்களில் எவ்வளவு யூனிட்கள் விற்றாய்’?

சந்துருவுக்குப் பயத்தில் பேச்சு வரவில்லை.

அடுத்ததாக கேட்டார்: ‘ஏன் உன்னால் விற்க முடியவில்லை என்று நினைக்கிறாய்?’

இதற்கும் சந்துரு பதிலளிக்காததால், எம்டி கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ஏனெனில் அவர்கள் கலாச்சாரப்படிப் பதில் சொல்லவில்லையெனில், கேள்வி கேட்பவரை அவமதிப்பு செய்வதாக அர்த்தம்.

அடுத்த வந்ததுதான், மிகப்பெரிய இடி:’கட்டபொம்மனைப் போல் ஒரு நிமிடம் வாய் விட்டு சிரித்துக் காட்டு’.

சந்துருவுக்கு இப்போது பயத்தில் அவசரமாக பாத்ரூம் செல்ல வேண்டும் போலிருந்தது. நாக்கு ஒட்டிக் கொண்டது. பேச்சு வரவில்லை, வெறும் சத்தம் தான் வந்தது. மேனேஜர் சந்துருவின் பக்கத்தில் வந்து, ‘சிரி, வாய்விட்டு சிரி, சிரிச்சிரு’ என்றார் தமிழில்.

சந்துரு மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியே விட்டான். மெதுவாக புன்னகை செய்தான். மேனேஜர் ‘இன்னும் சத்தமாக, இன்னும் வாய்விட்டு’ என்றார். சற்றே சத்தமாகச் சிரித்தான்.

இப்போது எம்டி சொன்னார்: ‘இன்னும் சத்தமாக’ என்றார் ஆங்கிலத்தில்.

சந்துரு தனது முகத்தில் யாரோ காறி உமிழ்ந்தது போல் உணர்ந்தான். மூச்சை மீண்டும் உள்ளிழுத்து வெளியே விட்டான். சந்துரு வாய் விட்டு சிரித்தான். கம்பீரமாக சிரித்தான். தொடர்ந்து சிரித்தான்.

எம்டி ஆங்கிலத்தில்,’போதும், நீ போகலாம்’ என்றார். வழிந்த கண்ணீரை நன்றாக கைக்குட்டையால் துடைத்து விட்டு, மௌனமாக வெளியே வந்தான்.

கண்ணன், ‘என்னடா சொன்னாரு?’ என்றான். ‘ஒன்னுமில்ல, இன்னும் விற்பனையை உயர்த்த வேண்டுமென்றார்’ என்று சொன்னான்.

அன்றிரவே சந்துரு, இது அவனது வேலையில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான். இப்படி ஒரு அவமானத்தை அவன் அனுபவித்ததில்லை. அது அவன் மனதை கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றது.

விற்பனை தவிர, வேறு வேலை தேட ஆரம்பித்தான். அவன் இங்கு வேலை செய்யும் போதே, இரவில் கணினித் துறையில், ஆரக்கிள் என்னும் மென்பொருளை, படிக்க ஆரம்பித்திருந்தான்.

அடுத்த ஒரு மாதத்தில் இரண்டு சேல்ஸ்களை முடித்திருந்தான், ஒரு கவர்மென்ட் ஆர்டர் மற்றும் ராமகிருஷ்ண மிஷனில் ஒன்று. செக்கை வாங்கும் போது, மிஷனின் தலைமை சாதுவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். அவனாலேயே நம்ப இயலவில்லை.

காஞ்சிபுரம் எஸ்எஸ்ஐ இன்ஸ்டியூட்டில் ஆரக்கிள் சொல்லித் தரும் வேலை கிடைத்ததும், கொரியரில் ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்தான்.

இந்த காப்பி பிரிண்டர் விற்பனையே சந்துருவின் கடைசி விற்பனைப் பிரதிநிதி வேலை.

++

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *