சோவியத் கதை
பி. ரயேவ்ஸ்கி
ஏற்கனவே ராணுவ மருத்துவ மனையில் இடம் போதவில்லை. அப்படி இருக்கும்போது காய மடைந்த மற்றொரு படைவீரன் அங்கு கொண்டு வரப்பட்டான். அவனை ஒரு ஸ்ட்ரெட்சரில் கொண்டுவந்து, முகப்பு மண்ட பத்தில் கிடத்தினார்கள்.
தோள்கள், கைகள், கழுத்து, தலை என்று அவன் உடல் முழுவதும் கட்டு போடப்பட்டிருந்தது. அவன் இளைஞனா, வயதானவனா, கறுப்புநிறமுடையவனா, சிவப்பு நிறமுடையவனா என்று கூறமுடியவில்லை. பல அடுக்குகள் கொ ண்ட அழுக்கடைந்த கட்டுகளில் ஓரிடத்தில் முக்கோண வடிவத்தில் வெட்டி விடப்பட்ட துவாரம் இருந்தது. அந்த முக்கோண வடிவ துவாரத்துக்குக் கீழே, அடியாழத்தில் வீங்கிக் களைத்துப் போன கண்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தன. அவனது கறுத்துப்போன உதடுகள் இலேசாக கரித்தன.
அவன் உணர்வு இழந்தவனாகக் காணப்பட்டான்.
‘ரொம்பவும் சிரமப்பட்டு விட் டான்போலிருக்கிறது. ஏதோ காரணத்தால் அவன் மனம் உடைந்துபோயிருக்கிறான்” என்று இடது புற படுக்கையிலிருந்த ஒரு நடுத்தர வயதுடைய, ‘சாப்பர்’ படைவீரன் கூறி பெருமூச்சு விட்டான்.
அச்சமயம் அங்கு டாக்டர் வந் தார். அவனுக்கு ஏற்பட்டுள்ள காய விவரங்களைப் படித்துப் பார்த்துவிட்டு முகத்தைச் சுளித் தார். ”இந்த ஆள் எப்படி இன் னும் உயிருடனிருக்கிறார்? அற்புதம்தான்!…’
ஏறக்குறைய ஒருமணிநேரம் கழிந்தது. காயமடைந்த போர் வீரன் அமைதி அடைந்தான். அவனது நெஞ்சிலிருந்து வெளிப்பட்ட கரகரப்பான, உள்ளடங்கிய முணுமுணுப்பு ஒலிதான் அவன் உயிரோடிருக்கிறான் என்பதைக் காட்டிற்று. சட்டென்று அவனுக்கு உணர்வு திரும்பியதுபோல் தோன்றிற்று. அவன் நிலைகொள்ளாது தவிக்கத் தொடங்கினான். கட்டுகள் போடப்பட்டு ஒரு கனத்த தடிபோல் இருந்த தனது. வலது கையைக் கட்டில் கால் பக்கம் நீட்டினான்.
“டாப்-டாப்- டாப்- : டாப்- டாப்… டாப்… டாப்- டாப் டாப்-டாப்.”
ஒரு தெளிவான ஆனால் அடங்கிய தட்டும் ஒலி மௌனத்தைக் கிழித்துக்கொண்டு கேட்டது. அவனுக்கு அருகில் படுத்திருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. குண்டு வீச்சால் அதிர்ச்சி ஏதே னும் அடைந்துவிட்டானா? பிறகு தான் அவன் தனது கையில் ஒரு பெரிய கருப்புப் பொத்தானைப் பிடித்துக்கொண்டு கட்டில்கா லில் தட்டுவதைப் பார்த்தனர். காயமடைந்தவர்கள் எரிச்சல் அடைந்தனர். “சாப்பர்” இரை ந்து நர்சை அழைத்தான். அவள் புதிய மனிதனிடம் வந்து கட்டில் காலில் இருந்த அவனது கையை எடுத்துப் படுக்கையில் வைத்தாள்.
சுமார் கால்மணி நேரம் சென் றது. மீண்டும் மௌனத்தைக் குலைத்துக் கொண்டு மரங்கொத்திப் பறவை கொத்துவது போ ன்ற ஒலி கேட்டது. ‘டாப்-டாப் டாப்.. டாப்’ பெருமூச்சுகளும், முனகல்களும், வேதனை ஒலிகளும் நிறைந்து முடி வற்றது போல் தோன்றிய அந்த ஆஸ்பத்திரி இரவில் நர்ஸ் அந்த வெறிகொண்ட கையை பன்முறைகட்டில்காலிலிருந்து எடுத்துப் படுக்கையில் வைத்தாள். ஆனால் அந்தக்கை விடாப்பிடியாக பிடி வாதமாக தொடர்ந்து தட்டிக் கொண்டிருந்தது.
“டாப்- டாப் – டாப்……டாப்- டாப்”
உருக்குலைந்து ஜீவனற்றுப்போன அந்த உடலில் இனியும் பலம் ஏதும் இருக்கும் என்று தோன்றவில்லை. அவன் இங்கு வந்தலிருந்து ஒரு கவளம் உணவு கூட சாப்பிடவில்லை. வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவன் கைமட்டும்தான் … அதற்குமட்டும் ஏதோ உயிர் இருப்பதுபோல் தென்பட்டது. மறுநாள் காலை ஒரு சார்ஜெண்ட் மருத்துவமனைக்கு வந்தார். ‘சாப்பரின்” கட்டிலுக்குப் பக்கத்தில் அமர்ந்தார்.
“டாப்-டாப்-டாப் டாப்டாப் டாப்”
இம்முறை தட்டும் ஒலி மிகவும் பலவீனமாக இருந்தது. முந்தின நாள் இரவு நர்ஸ் அவனிடமிருந்த பொத்தானை எடுத்துக்கொ ண்டுவிட்டாள். எனவே இப் பொழுது அவன் தனது கைமுட் டியால் தட்டிக்கொண்டிருந் தான். இப்படித்தான் திரும்பத்திரும்ப செய்கிறான். இரவிலும் கூட தட்டுவதை நிறுத்துவதில்லை என்று “சாப்பர்” சார்ஜெண்ட் பக்கம் திரும்பி எரிச்சலோடு கூறினான். சார்ஜெண்ட் கவனமாக உற்றுக்கேட்டார். ‘டாப்-டாப்-டாப்…டாப்’
சட்டென்று அவருக்கு எல்லாம் புரிந்துவிட்டது. ஆமாம் அப்படித்தான் இருக்கவேண்டும்…. ’ஒரு குறியீட்டுச் செய்தி’ அவர் மெல்ல முணுமுணுத்தார். பிறகு செய்தியை உரக்க ஒவ்வொரு சொல்லாய் தெளிவாக உச்சரித்தார்.
‘மூன்று! மூன்று. இது ஏழு . வெடிமருந்துகள் தீர்ந்து வருகின்றன. உடனே வெடி குண்டுகள் அனுப்புங்கள். உடனே வெடி குண்டுகள் அனுப்புங்கள். இது ஏழு, நான் சொல்வது தெரிகிறதா. நான் சொல்வது தெரிகிறதா?”
தாழ்வாரத்தில் அமைதி நிலவிற்று. ஆக, இதுதான் அவனது மனத்தை அலக்கழித்துக்கொண் டிருந்தது போலும்! வெடிகுண் டுகள்! அவனுடைய தோழர்களிடம் போதிய வெடிகுண்டுகள் இல்லை…
காயமடைந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “சாப்பர்” ஒரு நீண்ட துயரப் பெருமூச்சு விட்டு சுவர்ப் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண் டான்.
இச்சமயம் சார்ஜெண்ட் சட்டெ ன்று எழுந்து ஜன்னல் பக்கமாக விரைந்தார். அங்கிருந்த சிகரெட் பற்றவைக்கும் கருவியை எடுத்து மேஜைமீது தட்ட ஆரம் பித்தார்: “டாப்-டாப். டாப் டாப்..”
‘”ஏழு! ஏழு!” என்று அவர் மார்ஸ் குறியீட்டு முறையில் கூறினார். “செய்தி கிடைத்தது, வெடிகுண்டுகள் அனுப்பி வைக்கிறோம். உடனே வெடி குண்டுகள் அனுப்பி வைக்கிறோம்.” பிறகு சௌஜன்யமான முறையில் சொன்னார்: ‘எல்லாம் நல்லபடியாக இருக்கிறது, தம்பி…’ கட்டுகள் போடப்பட்டிருந்த புதிய மனிதனின் உடல் திடீரெ ன்று குலுங்கிற்று. நர்ஸ் ஓடிச் சென்று படுக்கையில் படுக்கவைத்தாள். படைவீரனின் கண்கள் இப்போது அமைதி அடைந்தன. அவனது உதடுகள் கரிக்கவில்லை. அவன் மனம் இப்போது பூரண நிம்மதி அடைந்தது.
அவ்வளவுதான்… ஆம், அவ்வளவுதான். அவன் தனது கடமையை நிறைவேற்றிவிட்டான். இறுதி மூச்சு உள்ளவரை நிறை வேற்றிவிட்டான். இரண்டுமணிநேரத்திற்குப்பிறகு அவன் இந்த உலகில் இல்லை.
000
இது 1912ல் நடைபெற்றது. (நன்றி! சோவியத் நாடு)