கடிகாரத்தில் சரியாக மணி ஒன்று அடிக்கிறது. சமையலறையின் ஜன்னலில் ஓர் காகம்

” கா..கா..கா..” என்று மென்மையாய் கத்திக் கொண்டு அங்கு வந்து அமர்கிறது.

        வெளியே விளையாடிகொண்டிருந்த,  ஆதிராவும் ஆதவும் வேகமாய் உள்ளே ஓடி வருகிறார்கள்.

” டேய் தம்பி இப்பப் பாரு.. அம்மா ஜன்னல் வழியா அந்த காக்காக்குச் சாப்பாடு வைப்பாங்க பாரேன்.”

என்று ஆதிரா  வேகமாய்ச்  சொல்கிறாள்.

 அவள் சொன்னது போலவே,  அவர்களின் அம்மா ஜன்னலின் வழியாகக் காகத்திற்கு உணவை  வைக்கிறார். மேலும் கைகளில் சிறிது இனிப்பை வைத்து ஜன்னல் அருகே கொண்டு செல்கிறார்.  உள்ளே தலையை நீட்டி அந்தக் காகம் இனிப்பை எடுக்கிறது.

      “அக்கா நீ சொன்னது சரிதான் கா. எப்படி அக்கா தினமும் அந்த காகம் சரியா ஒரு மணிக்கு வருது? “

   என்று ஆச்சரியத்தோடு தம்பி ஆதவ் கேட்கிறான்.

“அதுதான்டா எனக்கும் புரியல.” ஆதிரா சொல்கிறாள்.

“அக்கா ஒருவேளை இந்த காக்கா வாட்ச் கட்டி இருக்குமோ?”

  என்று அப்பாவித்தனமாய் ஆதவ் கேட்க ஆதிராவிற்கு சிரிப்பு வந்து விடுகிறது.

          ” தம்பி.. இந்த காக்காவுக்கு ஒரு பெயர் வைக்கலாமா? இது சரியா மதியம் ஒரு மணிக்கு வந்துருது. நேரத்தைச் சரியாக கடைபிடிக்குது.அதனால ஷார்ப் அப்படின்னு பேர் வைக்கலாமா? “

    ” சரியான பேர் அக்கா. அருமை அருமை” என்று கைதட்டிச் சிரிக்கிறான் .

        ஆதவ் , ஆதிரா இருவரும் தங்கள் பெற்றோருடன், சென்னையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்கள்.

         சமையலறையில் தினமும் நடக்கும் இந்தக் காட்சியை ஆதிராதான் முதலில் கவனித்தாள். அதை இப்போது தன் தம்பியிடம் சொன்னாள். பிறகு இன்று இருவரும் அந்த காகததின் வருகைக்குக் காத்திருந்தனர். ஆதிரா சொன்னது போலவே மிகச் சரியாகக் காகம் ஒரு மணிக்கு அங்கு வந்தது அவனுக்கு மிக ஆச்சரியம்.

       அடுத்த நாளும் அதே போலச் சரியாக ஒரு மணிக்குக் காகம் வந்து கரைந்தது.  அம்மா உணவை ஜன்னலின் வழியே வைக்கிறார்.  குழந்தைகள் இருவரும் அதைப் பார்த்தனர்.  வேகமாய் அவர்களும் சமையலறைக்குள்  ஓடி வந்தனர்.  அவர்கள் வருவதைக் காகம் பார்த்தது.  அம்மாவின் கையில் இருக்கும் உணவை எடுக்கத் தயங்கியது.

         அம்மா சிரித்துக்கொண்டே காகத்திடம் பேசுகிறார்.

” பயப்படாதே. அவங்க உன்னை ஒன்னும் செய்ய மாட்டாங்க. “

என்று அன்பாய் சொல்கிறார்.

       காகமும் புரிந்தது கொண்டு இவர்களைப் பார்த்துச் சிரித்தது போல இருந்தது.

        அதற்குப் பிறகு தினமும் இவர்களும் சரியாக ஒரு மணிக்கு சமையலறைக்குள்  ஓடி வருவார்கள்.  காகம் பதட்டமின்றி தன் உணவை எடுத்துச்  சாப்பிடும். சில நேரங்களில் இவர்களும் கையில் உணவை நீட்டுவார்கள்.  காகம் மகிழ்வோடு அதை எடுத்து உண்ணும்.  அவர்களுக்கும் காகத்திற்கும் இடையே சொல்ல முடியாத அன்பு வளர்ந்தது.

     அலுவலகம் முடிந்து அப்பா வீட்டுக்கு வருகிறார்.  அவரைக் கண்டதும்

” அப்பா.. வந்தாச்சு”  என்று மகிழ்வாய் அவரிடம் ஓடுகிறார்கள்.

       வழக்கமாக அவர்கள் வந்தவுடன், அவர்களை மடியில் அமர வைப்பார். அவர்கள் சொல்லும் கதைகளை கேட்டு விட்டு தான்,  குளிப்பதற்கு உள்ளே செல்வார்.

     ஆனால் அன்றோ,  அவரிடம் சிரிப்பில்லை.  குழந்தைகளின் பேச்சில் கவனமும் இல்லை.  அது தெரியாமல் குழந்தைகள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.  பெயருக்கு அவர் தலையாட்டுகிறார்.

        புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த அம்மா,  கணவர் வந்தது அறிந்ததும் வெளியே வருகிறார்.  அவரின் முகம் சோர்வுடன் இருப்பதைப் பார்க்கிறார்.

அருகில் சென்று அமர்ந்து,

“என்னங்க ஆச்சு? ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா? ” என்று பரிவோடு கேட்கிறார்.

“பச்.. ஒன்னும் இல்ல”

“அப்புறம் ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க? “

“எனக்கு பெங்களூருக்கு வேலை மாறுதல் வந்திருக்கு.  இன்னும் ஒரு வாரத்தில் கிளம்ப வேண்டும்”

” நமக்கு என்ன மாறுதல் புதுசா?  புது வீடு பார்க்க வேண்டும் என்ற கவலையாங்க?” என்று அம்மா கேட்க்கிறார்.

” கம்பெனில வீடு கொடுத்துடுவாங்க. வீடு பற்றிய கவலை இல்லை.  இதுவரை  பிள்ளைகள் பள்ளியைப் பற்றிய கவலை இல்லை.  பள்ளி செல்லும் வயது அவர்களுக்கு வந்து விட்டது.  ஒரு நல்ல பள்ளியைப் பார்க்க வேண்டும். இந்த வயதில் குழந்தைகள் அதிகம்  பள்ளிக்கு பயணிக்க கூடாது. அதனால் வீட்டுக்கு அருகில் பள்ளி இருக்குமாறு பார்க்க வேண்டும். அதெல்லாம் தான் ஒரே  யோசனையாக  இருக்கிறது” என்று அப்பா சொல்கிறார்.

” கவலப்படாதீங்க. என்னுடைய தோழி  அங்கிருக்கிறாள்.  அவளிடம் பள்ளிகள் பற்றிய தகவல்கள் கேட்டுக் கொள்ளலாம்”

என்று அம்மா ஆறுதல் சொல்கிறார்.

சிறிது அவர் முகம் தெளிவடைந்தது போல் இருக்கிறது.

     அதுவரை அமைதியாக அவர்கள் பேச்சைக் கேட்ட குழந்தைகள்,

” அம்மா நாம  பெங்களூர் போக போறோமா? “

” ஆமாடா கண்ணு”

” ஐ ஜாலி ஜாலி. அங்க சில்லுனு இருக்கும் தம்பி.  சென்னை போல இவ்வளவு வெயில் இருக்காது”

“அக்கா.. உனக்கு எப்படி தெரியும்? “

ஆதவ் கேட்கிறான்.

” நம்ம கூட அருண் என்கிற பையன் விளையாடுவான் இல்ல. அவங்க முதல்ல பெங்களூர்ல தான் இருந்தாங்களாம். அவன் தான் சொன்னான்” என்று ஆதிரா சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

திடீரென்று

” அம்மா.. அம்மா. நம்ம இந்த வீட்டை விட்டுப் போயிட்டா.. ஷார்புக்கு யார் சாப்பாடு கொடுப்பா? ” என்ற கேள்வியை கேட்கிறாள்.

” அட ஆமாம் அக்கா..யார் சாப்பாடு கொடுப்பாங்க ? “

     குழந்தைகள் இருவரும் அதை நினைத்துக கவலைப்படத் தொடங்கினர்.

   அன்றில் இருந்து அம்மாவும் , அப்பாவும் பொருட்களை எல்லாம் அட்டைப் பெட்டிகளில் கட்டத் தொடங்கினர்.

        ஆனால் குழந்தைகளுக்கு அவர்களுடைய கவலைதான் பெரிதாய்த்  தெரிந்தது..

     காகத்திற்கு  யார் சாப்பாடு இனி கொடுப்பார்கள்?  என்ற கவலை மாத்திரம் அவர்கள் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

     நண்பர்களிடம் சொல்லி  சாப்பாடு வைக்கச் சொல்லலாம்.  ஆனால் காகம் அவர்கள் வீட்டிற்கு செல்லாது.  என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

        மறுநாள் காலை,  கிளம்ப வேண்டும் என்று அப்பா  சொல்கிறார்.   குழந்தைகளுக்கு உறக்கமே வரவில்லை.  திடீரென்று ஒரு யோசனை ஆதிராவிற்கு வருகிறது. மெல்ல தன் தம்பியின் காதில் அதை சொல்கிறாள். அதைக் கேட்டதும் அவனுக்கும் ஒரே மகிழ்ச்சி.

        காலையில் விழுந்ததும் அந்த யோசனையைச்  செயல்படுத்த தொடங்கினர்.

         “கண்ணுகளா வாங்க இனி கிளம்பலாம்.  ட்ரெயினுக்கு நேரமாச்சு.”

என்று அம்மா குரல் கொடுக்கிறார்.

       இருவரும் அடித்து பிடித்து ஓடி வருகிறார்கள்.

” அட.. என்னது கை எல்லாம் பிசுபிசுன்னு இருக்கு. என்ன பண்ணீங்க ? போய் கைக கழுவிட்டு வாங்க”

      அம்மா செல்லமாய் அதட்டுகிறார்.

” இதோ வந்து விடுகிறோம் அம்மா.”

சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் ஓடுகிறார்கள். அங்கே இருக்கும் மேடையின் மேல் ஏறி, அங்கே வெளிப்புறச் சுவரில் ஒட்ட வைத்திருக்கும் காகிதத்தைத்  தம்பி பார்க்கிறான். அக்காவைப் பார்த்து மகிழ்வோடு சிரிக்கிறான்.

     வெளியே ஒட்டப்பட்டிருக்கும் அந்தக் காகிதத்தில், அவர்களின் பெங்களூர் வீட்டின் முகவரி எழுதப்பட்டிருந்தது..

அதற்கும் கீழே

” ஷார்ப் நாங்க வேற வீட்டுக்கு போறோம். அந்த வீட்டு அட்ரஸ் இந்த பேப்பர்ல இருக்கு.  நீ படிச்சு கண்டுபிடிச்சு அங்க பறந்து வந்துரு.சரியா?.  உன்னை எதிர்பார்த்துகிட்டு இருப்போம்”

என்று எழுதப்பட்டிருந்தது.

      இவர்கள் எதற்கு சமையலறைக்குள் மீண்டும் செல்கிறார்கள்? என்ற யோசனையுடன் அம்மா உள்ளே செல்கிறார். அங்கே முகவரியுடன் ஒட்டப்பட்டிருந்த காகிதத்தைப் பார்க்கிறார்.

‘ஓஹோ இதுக்குத்தான்.. நேற்று மாலையில் இருந்து இரவு தூங்கப் போகும் வரை  பெங்களூர்  வீட்டின் முகவரி வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு வாங்கினார்களா?’

        முகவரியை  பார்த்துவிட்டு  ஷார்ப்  பெங்களூர் வந்துவிடும் என்று இருவரும் நம்புவதை புரிந்து கொண்டார்.  நெகிழ்ந்த மனதுடன் அம்மா கீழே இறங்குகிறார்.

         என்ன குட்டீஸ்களா?  ஷார்ப் முகவரிய கண்டுபிடிச்சு  போயிடும் தானே?..

==

பூங்கொடி பாலமுருகன்

ஊர் மடத்துக்குளம். கதை சொல்லி, சிறார் எழுத்தாளர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *