இங்கே வரும்போதெல்லாம் நான் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் சரவணபவனில் மதிய சாப்பாடு சாப்பிடும் வழக்கத்தின் படி, இன்றும் அங்கே சென்றேன். கடையில் அதிசயமாக இன்று கூட்டம் சுமாராக இருந்தது. சாப்பாட்டுக்கான டோக்கன் வாங்கிக் கொண்டு, ஜன்னலோரமாக இருந்த எதிரெதிரே இருவர் மட்டுமே அமரக் கூடிய டேபிளில் உட்கார்ந்து, சர்வரிடம் டோக்கனைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன்.
கடையில் கூட்டம் குறைவாக இருந்தது உண்மைதான். ஒவ்வொரு டேபிளுக்குப் பின்னாலும் காத்துக் கொண்டிருப்பவர்கள் என யாரும் இல்லையே தவிர அனைத்து டேபிள்களும் நிறைந்திருந்தது. என் எதிரில் இருந்த ஒற்றை இருக்கை மட்டும் காலியாக இருந்தது.
எனக்கு உடனே அவர் நினைவு வந்தது. இன்றும் அவர் வருவாரா என்ற என் யோசனையும் அவர் வருகையும் மிகத் துல்லியமாக சரியாக இருந்ததால் என் மனதுக்குள் இருந்துதான் வெளியேறி அவர் வருகிறாரோ என ஒரு கணம் நான் குழம்பிவிட்டேன். எனக்கு எதிரில் இருந்த இருக்கையில் வந்து அவர் உட்கார்ந்துவிட்டார்.
ஒரு உண்மையான சீடன் தன்னுடைய ஜென் குருவைக் கண்டு கொண்டதைப் போல நான் அவரைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். நான் எப்படி அவரைக் கண்டுபிடித்தேன் எதை வைத்து யூகித்தேன் எதனால் அப்படி தீர்மானித்தேன் என என்னை நீங்கள் குடைந்து குடைந்து கேட்டால் எனக்கு எதுவும் சொல்லத் தெரியாது. ஆனால் அவர் யார் என்பது எனக்கு உறுதியாக தெரியும்.
சர்வர் இரண்டு தட்டுகளில் குழம்பு, பொறியல் வகைகளை எடுத்து வந்து, எங்கள் முன்னால் வைத்தார். நான் தட்டில் இருந்த சாம்பார் ரசம் கிண்ணங்களை எடுத்து டேபிளில் வைக்க ஆரம்பித்தேன். அவரும் அதையே செய்தார். சாப்பாடு பறிமாறுபவர் வந்து, இருவர் தட்டுகளிலும் சாப்பாடு வைத்தார். முன்பு வந்தவர் பருப்பு பொடி, நெய்யுடன் வந்து சாப்பாட்டில் போட்டுவிட்டுப் போனார்.
மனதுக்குள் எந்த ஒத்திகையும் பார்க்காமல், சிறு புன்னகையுடன், ரகசியமாக கூர்த்த பார்வையுடன், மிகுந்த நட்புறவான முறையில். “நீங்க ஏலியன் தானே?” என கிசுகிசுத்தேன்.
அந்தக் கேள்வி புரியாதவர் போல அல்லது கவனிக்காதவர் போல, பொடியில் சாதத்தை பிசைந்து கொண்டிருந்தார் அவர். “எனக்கு தெரியும்” நான் நிதானமாக சொன்னேன். அவர் சாப்பிட ஆரம்பித்தார். அதற்கு மேல் எப்படி சொல்வதென்று தெரியாமல், அவரையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
ஒரு நிமிடம் கழித்து அவர் என் கண்களைப் பார்த்து புன்னகைத்தார். “நீங்கள் மிகவும் உள்ளுணர்வானவர். இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்லக் கூடாது. மேலும் என்கிட்ட எந்த கேள்வியும் கேட்கக் கூடாது.” அவர் பேசுவதைப் போல ஒரு குரல் என் மனதுக்குள் ஒலித்தது. நான் திடுக்கிட்டேன் . அவர் என் மனதுக்குள் பேசுகிறாரா? ஆச்சரியமாய் இருந்தது. நான் கண்டுபிடித்தது உண்மைதான் என நிரூபனமாகிவிட்ட மகிழ்ச்சி மனதில் பொங்கியது.
அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. உலகில் முதன் முதலில் ஏலியனை சந்தித்தவன் என, வரலாற்றில் எனக்கு கிடைக்கப் போகும் இடத்தைப் பற்றி என்னுடைய கற்பனைகள் காட்டாற்று வெள்ளமாய் மனதை சூழ்ந்து கொண்டன. என்ன சாப்பிட்டேன் எப்போது முடித்தேன் எதுவுமே தெரியவில்லை. சர்வர் வந்து நின்று கொண்டு, “சார் இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைக்கவா” என, சற்று அழுத்தமாக கேட்கும் போதுதான் சுயநினைவுக்கு மீண்டேன். ஏற்கனவே மென்மையாக ஒன்றிரண்டு முறை கேட்டிருக்கக் கூடும் என்பதை நினைத்து அவரைப் பார்த்து சற்று அசட்டுத் தனமாக சிரித்துக் கொண்டு போதும் என்றேன் எதிர் இருக்கையில் அவர் இல்லை.
பதற்றமடைந்தேன். கொஞ்சம் கற்பனையை கட்டுப்படுத்திக் கொண்டு, அவரை கவனித்திருக்கலாம். பைக்கில் வந்தாரா, பஸ்சில் வந்தாரா எங்கிருந்து வந்தார் எதுவுமே தெரியாமல் அவரை நழுவ விட்டுவிட்டேன். இனி அவரை சந்திக்க முடியாது என்றே தோன்றியது. என் அதிர்ஷ்டம் எப்போதும் இப்படித்தான். பெரிய வாய்ப்புகளைக் கூட அனாயாசமாக தவறவிட்டுவிடுவேன்.
அன்றிரவு எனக்கு தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். என்னை அறியாமல் கண்ணயர்ந்த போது, அவர் கனவில் வந்து “ஏன் இவ்வளவு கவலைப் படறீங்க? நாளைக்கு நான் வர்றேன் மீட் பண்ணுவோம்” என்று தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்தார். உடனே நான் எழுந்துவிட்டேன். அது கனவு போல்தான் இருந்தது. ஆனால் அது கனவில்லை என்பது எனக்கு தெளிவாகவே தெரிந்தது. நான் அமைதியடைந்து தூங்க ஆரம்பித்தேன்.
மறுநாள் அதே நேரத்திற்கு ஓட்டலுக்குப் போனேன் அவர் தென்படவில்லை. மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, டோக்கன் வாங்கினேன். உள்ளே இன்று வழக்கம் போல கூட்டமாய் இருந்தது. டேபிளுக்கு டேபிள் சாப்பிடுபவர்களுக்குப் பின்னால் கையில் டோக்கனோடு காத்திருப்பவர்களைப் பார்க்க முடிந்தது. நான் சாப்பிடாமலேயே போய்விடலாமா என்று பார்த்தேன். ஏதோ ஒரு நம்பிக்கை என்னை தடுத்தது. பேசாமல் போய் ஒரு டேபிளுக்குப் பின்னால் காத்திருக்க ஆரம்பித்தேன். டேபிள் காலியாகி நான் உட்கார்ந்து சாப்பிட்டு முடிக்கும் வரை அவர் வரவில்லை. ஒருவேளை நான் கண்டது வெறும் கனவு தானோ? ஏமாற்றமும் வெறுமையும் மனதுக்குள் நிறைந்தது. கையைக் கழுவிக் கொண்டு வெளியே வந்தேன். வாசலருகே சாலையையொட்டி இருந்த சர்க்கரைப் பழ மரத்தடியில் அவர் நின்றிருந்தார். எனக்கு போன மூச்சு திரும்ப வந்தது போல இருந்தது.
அவர் அருகே போய் நின்றேன். புன்னகைத்தார். “நாம இனிமே இங்க சந்திக்க வேண்டாம். உங்க அட்ரஸ் குடுங்க வீட்டுக்கு வர்றேன். உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே” என்றார்.
“அய்யோ அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் நீங்க வாங்க. நான் இங்க பக்கத்தில ஒரு மேன்ஷன்ல ரூம் எடுத்து தங்கியிருக்கேன்”. என மேன்ஷன் முகவரியை அவரிடம் சொன்னேன்.
இப்படியாக ஒரு ஏலியனுக்கும் எனக்கும் தொடர்பு உண்டானது.
என் பெயர் சஞ்சய். எம்எஸ்சி பிசிக்ஸ் போன வருடம் முடித்தேன். அரசு வேலை, தனியார் வேலையில் எல்லாம் நம்பிக்கை இல்லை. பிஎஸ்சியே போதும் என்றிருந்தேன். அப்பாவின் தொந்தரவு தாங்க முடியாமல் தான் எம்எஸ்சி படித்தேன். பிராட்பர்ரியின் விஞ்ஞானக் கதைகள் எனக்குப் பிடிக்கும். அறிவியல் எனக்குப் பிடிக்கும். அதே அளவுக்கு ஆன்மீகமும் பிடிக்கும். அதற்கு காரணம் விபரம் அறியாத வயதிலிருந்தே புத்தர் மீதிருந்த ஈர்ப்பு. என்னோடு படித்தவர்கள் எல்லாம் கோவில், குளம் என்று சுற்றி தங்கள் ஆன்மீகத் தேடலை முடித்துக் கொள்ள, நான் ஜென், தந்த்ரா, தாவோவின் வழியாக என்னை தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஊரில் அப்பா ஒரு பேன்சி ஸ்டோர் வைத்திருக்கிறார். கொஞ்சம் வசதியான குடும்பம் தான். நான் வேலைக்கெல்லாம் போகிறவனல்ல என அப்பாவுக்குப் புரிந்துவிட்டதால், எனக்கு தனியாக தோல் பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றை வைத்துக் கொடுத்திருக்கிறார்.
கடை கொள்முதலுக்காக, நான் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சேலம் வருவேன். இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து, செவ்வாய்ப் பேட்டையில் இருக்கும் குஜராத்திகளின் மொத்த விற்பனைக் கடைகளில் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு போவேன்.
இரண்டு நாள் சந்திப்பிலேயே அவர் ஒரு ஏலியன் என்று உன்னால் எப்படி அறிந்து கொள்ள முடிந்தது என்றுதானே கேட்க வருகிறீர்கள். அதுதான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆச்சரியமாகத்தான் இருந்ததே தவிர சந்தேகம் உண்டாகவில்லை. அப்படி இருந்திருந்தால் நான் அவரிடம் அப்படி கேட்டிருக்கவே முடியாது. மேலும் அவர் ஒரு ஏலியன் என்பதை என்னைத் தவிர வேறு யாராலும் தெரிந்து கொண்டிருக்க முடியாது என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியும்.
அன்று மாலை நான் அவர் வருகைக்காக காத்திருந்தேன். இதுவரை வாங்கியிருந்த பர்ஸ்கள், பெல்ட்டுகள், பைகள் கட்டில் அருகே குவிந்திருந்தன.
சரியாக ஐந்துமணிக்கு கதவு தட்டப்பட்டது. அவர் வந்துவிட்டார்.
ஐம்பது வயதைக் கடந்த திடகாத்திரமான மனிதரைப் போல இருந்தார். முகவெட்டும், தலைமுடியும் அழகாக இருந்தன. நாங்கள் கை குழுக்கிக் கொண்டோம். பொதுவான விஷயங்களைப் பேச ஆரம்பித்தோம். அவருடைய நினைவுத் திறன் வியக்கும் வகையில் இருந்தது.
மெல்ல “உங்கள் கிரகத்தைப் பத்தி சொல்லுங்க” என்றேன்.
“எங்க கிரகம் பக்கம் தான். இங்கிருந்து ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில இருக்கு.”
“ஆனா பூமியில எப்படி உங்க கிரகத்தைப் பற்றின தகவல் தெரியாம போச்சி.”
“இப்போதைக்கு உங்களால எங்க கிரகத்தைக் கண்டுபிடிக்க முடியாது.”
“அது எப்படி சாத்தியம்.” குழப்பமாகக் கேட்டேன். “அந்த சயின்ஸ் விளக்கத்துக்குள்ள எல்லாம் போனா உங்களுக்கு போர் அடிக்க ஆரம்பிச்சிடும்.” என்று சிரித்தார்.
“உங்க கிரகத்தில உங்களுக்கு இந்த உருவம் இல்லதானே.”
“ஆமாம். எங்க உருவம் உங்களுக்கு அச்சமா இருக்கும்.”
மனதில், ஆங்கிலப் படங்களில் காட்டப்படும் ஏலியனின் பயங்கர உருவங்கள் மனதில் தோன்ற ஆரம்பித்தன. அதை கவனித்துக் கொண்டே, “உங்க கிரகத்தப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.” என்றேன்.
“எங்க கிரகம் இன்னும் கொஞ்சம் சூரியன் கிட்ட இருந்து தள்ளி இருக்கு. அதனால கோடைகாலம் இந்த அளவுக்கு கிடையாது. எங்க கடல்ல உப்பு இருக்காது. நாங்க தண்ணீரை சார்ந்து வாழறவங்க இல்ல. அதே போல நெருப்போட பயன்பாடும் ரொம்ப கம்மிதான். சமையல்ங்கறதெல்லாம் அங்க இல்ல. ஆனாலும் இயற்கைப் பொருட்களோட ஆயிரக் கணக்கான காம்பினேஷன்ல ஏராளமான டிஷ்களை உருவாக்குவோம். அது ஒரு பெரிய கலை.”
“அப்போ நான் வெஜ்?”
“உண்டு. பச்சையா சாப்பிடுவோம்.”
“நாங்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே அறிவு நிலையில முழுமை அடைஞ்சவங்க. அதனால எங்க இடப் பெயர்வு, பயணம் எல்லாம் ஸ்தூலமான முறையில இருக்காது.”
“புரியல.”
“எங்க வேண்ணாலும் எங்களால ஒரு நொடியில போயிட முடியும் பிரபஞ்சத்தோட கடைக்கோடிக்கும் கூட.”
“இது சாத்தியமே இல்லை. லைட் ஸ்பீட்ல போனாக் கூட…..”
“லைட் ஸ்பீட்ங்கறது ரொம்ப ஸ்லோ அந்த வேகத்தை மட்டும் கணக்கு போட்டுகிட்டிருந்தா நீங்க எந்த காலத்திலும் பூமியைவிட்டு தாண்டவே முடியாது. “
நான் வாயடைத்துப் போய்விட்டேன்.
“நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்களா?”
“ஆமாம்.”
“எங்களையெல்லாம் அழிச்சிட்டு நீங்க இந்த பூமிய எடுத்துக்கப் போறீங்களா?”
“நீங்க இவ்வளவு நாஸ்தி பண்ணி வச்சிருக்கற இந்த பூமியில நாங்க என்ன பண்றது. எங்களுக்கு இதைவிட நல்ல கிளைமேட்ல இன்னும் நல்ல புஷ்டியான கிரகங்கள் ஏராளம் இருக்கு” என்றார் அலட்சியமாக.
“அப்புறம் நீங்க எதுக்காக இங்க வந்திருக்கீங்க.”
“சும்மா ஒரு நட்புறவு பயணமாத்தான் வந்திருக்கேன். உங்க ஜனங்க ஏமாத்தாம, அரசியல் பண்ணாம எங்களை அனுகினா எங்களால எவ்வளவோ உதவிகள செய்ய முடியும்.”
“இவ்வளவு அட்வான்சா இருக்கற நீங்க, இந்த ஏமாற்று அரசியல் மாதிரியான அற்பமான விஷயங்களுக்கு ஏன் இப்படி பயப்படறீங்க அல்லது தயங்கறீங்க.”
“இந்த அரசியல், சுயநலம் எல்லாம் நான் பிரபஞ்சத்தில் எந்த கிரகத்திலும் காணாதது. அதனாலதான் இந்த கிரகம் இவ்வளவு சீக்கிரமா அழிஞ்சிகிட்டிருக்கு. அப்பவும் கூட அதப்பத்தி இங்க யாருக்காவது கவலை இருக்கா. இதப்பத்தி நீங்க ஒவ்வொருத்தரும் கவலைப்பட வேண்டிய நேரம் இது தெரியுமா?”
இரவு வெகுநேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம்.
மறுநாள் விடுபட்ட இன்னும் சில பர்ஸ் மற்றும் பெல்ட் வகைகளை வாங்கி வந்து, எல்லாவற்றையும் பேக் செய்ய ஆரம்பித்தேன்.
மாலையில் அறைக்கு வந்த அவரிடம், “உங்கள் பெயரை நீங்கள் சொல்லவே இல்லையே” என்றேன்.
“அந்த வழக்கம் எல்லாம் எங்களிடம் கிடையாது” என்றார்.
“ஒரு வசதிக்காக உங்களை ஜி ன்னு கூப்பிட்டுக்கிறேன்” என்றேன். புன்னகைத்தார். பேக் செய்ய உதவினார். “நான் ஊருக்குப் போகிறேன். நீங்களும் வாங்களேன்” என்றேன்.
ஊருக்கு போன பின்னும் எங்கள் சந்திப்பு தொடர்ந்தது.
அவர் இங்கே பூமியில், என்னதான் செய்து கொண்டிருக்கிறார் என எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி கேட்க நான் துணியவில்லை.
“எப்போ உங்க கிரகத்துக்கு போகப் போறீங்க” என்றேன்.
“சீக்கிரம்” என்றார்.
“என்னயும் அங்க கூட்டிகிட்டுப் போறீங்களா” என்றேன்.
“அது எப்படி முடியும்?” என்றார். திடீரென ஏதோ தீவிரமான யோசனையில் ஆழ்ந்தார்.
அதே யோசனையோடு, “வேணும்னா உங்களோட இன்னொரு பிரதியை அங்க உருவாக்க முடியும். அந்த பிரதியால அந்த கிரகத்தைப் பார்க்க முடியும். எங்களைப் போல அங்கிருந்து இங்க வர முடியும். இங்கிருந்து அங்கயும், எங்கயும் போக முடியும். ஆனா அது வேற யாரோ இல்ல நீங்கதான்” என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னோட பிரதின்னா என்ன? அது எப்படி நான் ஆக முடியும்? என்னோட குளோனிங்க சொல்றீங்களா? ஆனா அது எப்படி நானாகும். அது வேறதானே? என்னோட சிந்தனை அவங்கிட்ட இருக்காதே. அது வேற மாதிரியில்ல இருக்கும்.”
அவர் சிரித்தார். “உங்க கிட்ட இருக்கிற நினைவுகளை எல்லாம் எடுத்துட்டா நீங்க யார்? இந்த உடலா?” என்றார்.
நான் யோசனையில் ஆழ்ந்து, இல்ல என்று முணுமுணுத்தேன்.
“உங்க நினைவுகளோட தொகுப்புதான் நீங்க இல்லையா?”
நான் பதட்டமாக “ரொம்பவும் அப்படி சுருக்கிட முடியுமா?” என்றேன்.
“ஏன் முடியாது?” என்றார்.
“உங்க மூளையில இருந்து ஒரு நினைவு கூட இல்லாம நீக்கிடறோம்னு வச்சிக்கங்க. அப்ப உங்களோட நான்கிறது என்ன? அது எங்க இருக்கும்?”
“வெறும் நினைவுகள்தான் நானா? ஆத்மான்றது மனம் நினைவுகளைக் கடந்தது இல்லையா?”
“புத்தர் ஆன்மான்னு ஒன்னு இல்லைன்னு சொல்லி இருக்காரே அதை நீங்க நம்பலையா?”
“அப்போ அது உண்மைதானா?”
அவர் சிரித்துக் கொண்டே தோளைத் தட்டினார். “நீங்கன்ட்டு இல்ல. இங்க எல்லோரோட நிலையும் இப்படித்தான் இருக்கு. ஒரு பக்கம் புத்தரோட கருத்துகளையும் படிக்கறாங்க இன்னொரு பக்கம் ஆன்மாவையும் நம்பறாங்க” என்றார் பரிதாபமாக.
எனக்கு வெட்கமாக இருந்தது. ஆனால் நினைவுகளை அகற்றிவிட்டால் நான் என்பதே இல்லாமல் போய்விடும் என்ற சித்தாந்தத்தை இப்போதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது எப்படி சாத்தியம். அப்போ நான் என்ன ஆவேன்? என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன்.
“நீங்க அழிஞ்சிபோயிடுவீங்க. காலம் காலமா இதுதான் நடந்துகிட்டிருக்கு. ஆனா அதை உங்களால எப்பவுமே ஏத்துக்க முடியாது. சிந்திக்க முடியாது. நீங்க எல்லோருமே அவ்வளவு கோழைங்க.”
அவர் என்ன சொன்னாலும் என் மனம் ஒப்பவில்லை. ஆசை என்னைப் பின் தொடர்ந்தது. அதன் பின்னால் நீண்ட வாள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதைப் போல பயந்தாலும், நான் அதன் சமாதானத்தை கேட்கத் துவங்கினேன்.
என்னுடைய குளோனை உருவாக்கினால் உருவாக்கட்டுமே நான் ஒன்றும் செத்துப் போய்விடப் போவதில்லையே? எப்படியும் அவன் வேறு நான் வேறுதானே? அவன் என்னவோ செய்துவிட்டுப் போகிறான். நான் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்.
ஒரே உருவத்தில் இரண்டு பேர் இருந்தால் சிக்கல் இல்லாமலேயே வாழ்ந்துவிட முடியுமா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்றாலும் அதெல்லாம் வேண்டாம் என்றும் சொல்ல முடியவில்லை. சில நாட்கள் அவகாசம் வேண்டும் என்று ஜியிடம் கேட்டுக் கொண்டேன்.
வேண்டாம் என்றால், வேறொரு கிரகத்தைப் போய் பார்ப்பது எப்படி? என்ற கேள்வி என்னை துரத்திக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கப் போவது உன்னுடைய குளோன் தானே? நீ இல்லையே? என்றது மனம். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த விஷயங்கள் வெளிப்பட்டால், முதல் குளோனிங் மனிதன், அயல் கிரகத்தாருடன் முதலில் தொடர்பு கொண்டவன், அயல் கிரகத்திற்கு முதலில் சென்றவன் இந்தப் பெருமையெல்லாம் எனக்குத்தானே கிடைக்கும். மனம் இப்படியே மாறிக் கொண்டே இருந்தது.
இறுதியில், ஜியிடம் என் சம்மதத்தை சொன்னேன்.
அவர் “உன்னால் மறுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்” என்றார்.
ஊசிபோன்ற ஒரு பொருளால், என் ழுழங்கை அருகே, லேசாக சுரண்டி, அதன் முனையை குண்டுமணி அளவுள்ள கண்ணாடிப் பேழையால் மூடி எடுத்துக் கொண்டு, “மன ரீதியா, உடல் அளவில. உங்ககிட்ட என்னென்ன குறைபாடு இருக்குன்னு நினைக்கறீங்கன்னு சொல்லுங்க. குளோன்ல அதையெல்லாம் சரி பண்ணிடலாம்” என்றார்.
நான் நிதானமாக யோசிக்க ஆரம்பித்தேன். பெரிய மாற்றங்களை செய்துவிட்டால் தானே போய் சிக்கல் வலையில் விழுந்ததைப் போல ஆகிவிடும் என்பதால், “கன்னம் கொஞ்சம் டொக்காய் தெரிவதை சரிசெய்து, கொஞ்சம் புஷ்டியாய் இருந்தால் நன்றாய் இருக்கும். படித்துக் கொண்டிருக்கும்போதே தலைமுடி பரவலாகிவிட்டது. இன்னும் ஒன்றிரண்டு வருடத்தில் தலை சொட்டையாகப் போவது உறுதி என்பதால், தலையில் முடி இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக இருக்கட்டும். தோள். கொஞ்சம் குறுகலாக, பார்க்க ஒரு மாதிரி இருக்கிறது. தோள் இன்னும் கொஞ்சம் அகலமாக இருந்தால் எடுப்பாக இருக்கும்” நான் ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல அவர் புன்னகையுடன் கேட்டுக் கொண்டார்.
“உங்க மூளைத் திறன் எப்படி இருக்கனும்?”
அது ரொம்ப முக்கியம். டிகிரி வேண்டா வெறுப்பா படிச்சாலும் எனக்கு பிசிக்ஸ்னா ரொம்ப இன்ட்ரஸ்ட் அதனால பிஸிக்ஸ்ல ஆழமான அறிவு அதே போல கணிதம் அப்புறம் இசையில், ஆழமான அறிவு இதெல்லாத்தையும் விட நான் ஒரு முழுமையடைந்த ஞானியாய் இருக்கனும்” சொல்லிக் கொண்டே போனவன் திடுக்கிட்டுப் போய் அவரைப் பார்த்தேன்.
என் கண்களில் என்னை அறியாமல் மின்னும் பேராசையின் ஒளியை அவர் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது.
“அவ்வளவு தானா” என்றார்.
ஒருவாரம் போல திரும்ப அவரைக் காணவில்லை. அதற்குள் நான் என்னென்ன யோசித்துவிட்டேன். கற்பனை செய்துவிட்டேன். எல்லாம் புதிய புதிய கற்பனைகள் ஒன்றுவிடாமல் குறித்து வைத்திருந்தால் நூறு கதைகளை எழுத முடியும். நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. நானா இவ்வளவு கற்பனைகளை செய்தேன்.
ஒருவாரம் கடந்து வந்த வெள்ளிக் கிழமையில் அவர் மீண்டும் கடைக்கு வந்தார்.
“உன் குளோன் இன்னைக்கி சாயந்திரம் வந்திடுவான் வந்ததும் உன்னோட மூளையின் நினைவு அடுக்கை பிரதி எடுத்து அவனுக்கு பதிவேத்திட்டா வேலை முடிஞ்சது.” என்றார். ஏதோ தைக்க கொடுத்த துணி தயாராகிவிட்டது என்பதைப் போல அவர் சாதாரணமாக சொல்லிவிட்டார். இயல்பற்ற இந்த விஷயங்களையெல்லாம் எப்படி சகஜமாக எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்ற யோசனையோடு, “நினைவுகளை அவனுக்கு டிரான்ஸ்பர் பண்ணப் போறீங்களா?” என்றேன்.
“டிரான்ஸ்பர் இல்ல. காப்பி எடுத்து பதிவு பண்ணப் போறேன். நீ வழக்கம் போல இப்படித்தான் இருக்கப் போற.” என்றார்.
பிரதான சாலையை பார்த்தபடி இருக்கும் என் கடையின் உள்ளே எனக்கென்று தனி அறை இருந்தது. குளியல் அறையும் படுக்கையும் உள்ள அந்த அறையில் நான் தொடர்ந்து நாள் கணக்கில் தங்கிக் கொண்டாலும் வீட்டில் எதுவும் கேட்க மாட்டார்கள். அந்த அறைக்கு கடைக்குள் நுழைந்துதான் போக வேண்டும் என்பதில்லை. பின் பக்கமாக இன்னொரு வழி இருக்கிறது. கடையில் வேலை செய்ய பிளஸ் டூ படித்த பிரதாப் என்ற பையனை அமர்த்தியிருக்கிறேன்.
அன்று மாலை, கடையில் வாடிக்கையாளர் யாரும் இல்லாமல் அறையில் நான் ஓய்வாக இருந்த நேரத்தில் அவன் வந்து அறைக்குள் நுழைந்தான். பின்னாலேயே பிரகாசமான புன்னகையுடன் ஜி வந்தார். அவனைப் பார்த்து நான் பிரமித்துவிட்டேன். அவனோடு ஒப்பிடும்போது நான் மிக மிக சுமாராக இருந்தேன்.
ஜி உடனடியாக வேலையைத் தொடங்கினார். என் பின் தலைப் பகுதியில் நீடில் போல ஒன்றை செருக வந்தார். நான் பயந்தேன். அவர் ஒன்னுமில்லை பயப்படாதே என்றுவிட்டு அதை தலையில் செருகினார். ஆச்சரியம் வலியே இல்லை. பின் அதை எடுத்து அவன் தலையிலும் அதே போல் செருகி எடுத்தார்.
“ஒகே இப்ப நீங்க ரெண்டு பேரும் ஒன்னு.” என்று அவனைப் பார்த்தார். அவன் சிரிப்பும், தோளின் நிறமும் மிகவும் தனித்துவமுடன் இருந்தது. அவன் நான்தான் என்று என்னால் நம்ப முடியவில்லை. நான்தான் இங்கே இருக்கிறேனே.
“உன்னோட குளோன் நல்லா இருக்கானா?” என்றார். நான் புன்னகையோடு தலையாட்டினேன்.
“நாங்கள் இரண்டு பேரும் ஒரே சமயத்தில் கடைக்கும் வீட்டுக்கும் நடமாடிக் கொண்டிருக்க முடியாது இருவருக்குமான வித்தியாசம் சீக்கிரமே சிக்கலைக் கொண்டு வந்துவிடும் அவனை கொஞ்ச காலம் தலைமறைவாய் இருக்க வைத்துவிட்டு, பிறகு என்ன செய்வது என்று பார்க்கலாம்” என்றேன்.
“தள்ளிப் போட வேண்டாம். என்றைக்கிருந்தாலும் இந்த சிக்கலை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.” என்றார் ஜி.
இரவு ஜனநடமாட்டம் அடங்கிய பின், ஊருக்கு ஒதுக்குப் புறமாய், விற்பனைக்காக பூட்டி வைக்கப்பட்டிருந்த என் நண்பனின் வீட்டுக்கு அவனை அழைத்துச் சென்றேன். ஜியும் உடன் வந்தார்.
அங்கே, “எங்க கிரகம் எப்படி இருக்கும்னு கேட்ட இல்ல இப்ப நீயே அதைப் பார்த்துக்க” என்று எனக்கும் என்னுடைய குளோனுக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு இணைப்பை ஏற்படுத்தினார்.
என் மனதில் என்னை அறியாமல் வெகுகாலமாய் அடைந்து கிடந்த இனம்புரியாத ஏமாற்றம், அச்சம் எல்லாம் பொல பொல வென உதிர்ந்து, மனம் சட்டென லேசாகவும் உற்சாகமாகவும் ஆவதை என்னால் உணர முடிந்தது. என் மனக் கண்ணில் ஜியின் உயிர்கோளத்தின் காட்சிகள் விரிந்தன. அங்கிருந்தவர்களின் உருவங்கள் விநோதமாய் இருந்தன. ஆனால் ஜி முன்பொரு நாள் சொன்னதைப் போல, அவர்களைப் பார்த்து எனக்கு பயம் எதுவும் ஏற்படவில்லை. அதற்கு காரணமும் எனக்கு உடனே புரிந்தது. இப்போது என் மனம் என்பது என் குளோனின் மனமாகவே இருக்கிறது. அந்த மனத்திற்கு இதைப் பற்றிய அச்சம் எதுவும் இல்லாததால் எனக்கும் அச்சம் எதுவும் தோன்றவில்லை. அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, என் மனதின் அடியாழத்தில் இதுவரை கேட்டிராத இசைக் கோர்வைகள் இசைத்தன. காட்சிகளின் உள்ளே இயங்க வைக்கும் அறிவியல் உண்மைகள் தன்னால் விளங்கிக் கொண்டு வந்தன. எல்லாவற்றிற்கும் கீழே நான் இவற்றில் இருந்து விட்டு விடுதலையாகி எல்லையற்ற பூரணத்தின் வெளியில் ஒரு ஒளிப்புள்ளியாக இணைந்திருந்தேன். என் கண்கள் சரம் சரமாய் கண்ணீரைக் கொட்டின.
சட்டென தொடர்பு துண்டித்தது. நான் பிரபஞ்ச உயரத்தலிருந்து கீழே விழுந்துவிட்ட ஒரு அற்ப ஜீவியைப் போல என்னை உணர்ந்தேன். என்னுடைய பழைய இயல்பு நிலை இப்போது சகிக்க முடியாததாய் இருந்தது. “ஜி என்னை எப்பவும் குளோனோட இணைப்பிலேயே வச்சிருங்க” என்றேன்.
“இதுக்கு மேல இந்த நிலைய உன்னால தாங்க முடியாது” என்று புன்னகைத்தார். நான் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதேன். அவர் ஒரு தந்தையைப் போல என்னை அணைத்துக் கொண்டிருந்தார். பிறகு சகோதர வாஞ்சையோடு என் குளோனின் கன்னத்தில் முத்தமிட்டேன். அவன் புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டான்.
அந்த பூரண அறிவின் இணைப்பில் இப்போது நானே கொஞ்சம் ஒளியும் அமைதியும் கொண்டவனாய் மாறியிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஜி என்னுடைய குளோனின் சிறப்புகளை ஒவ்வொன்றாய் சொல்ல ஆரம்பித்தார். உடல் அளவிலயும் இவனை பல மடங்கு மேம்படுத்தி இருக்கிறோம். வைரஸ்களின் டிஎன்ஏக்கள் பில்லியன், டிரில்லியன் கணக்கில் மாறி மாறி அமைந்து புதிய புதிய வைரஸ்களாகி தாக்கினாலும் இவனை எதுவும் செய்ய முடியாது. உடல் பாகங்கள், நாளமில்லாச் சுரப்பிகள் எல்லாம் இன்னும் ஐநூறு ஆண்டுகள் ஆனாலும் இப்போது போலவே இயங்கிக் கொண்டிருக்கும். வியாதி என்று எதுவும் வராது. ரத்தக் குழாய்களில் நனோ கிராம் கூட கொழுப்பு படியாது. ஜி அவனைப் பற்றி முடிவில்லாமல் சொல்லிக் கொண்டே போனார்.
அப்போ இவனுக்கு மரணமே கிடையாதா?
ஆமாம்
எனக்கு சகலமும் ஸ்தம்பித்துவிட்டது. நான் இந்த உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்டதைப் போல உணர்ந்தேன்.
பகலில் நான் கடைக்கு வந்துவிடுவேன். அவன் அதே வீட்டில் இருப்பான். எங்களுக்கிடையே பத்து நிமிடங்களுக்கு மேல் இணைப்பை ஏற்படுத்த முடியாது. அதற்கான மூளைத்திறன் என்னிடம் இல்லை மீறி இணைப்பைத் தொடர்ந்தால் என் மூளையின் ரத்த நாளங்கள் வெடித்துச் சிதறிவிடும் என்றார் ஜி. அவன் எனக்கு விலை உயர்ந்த ஒரு போதைப் பொருள் போல இருந்தான். எப்போதும் அவன் இணைப்பிலேயே இருக்க வேண்டும் என்ற ஆசை வெறியாக மாறிவிடும் போல இருந்த்து.
ஒருவாரம் இப்படியே போனது. ஜி இப்போதெல்லாம் என்னைப் பார்க்க அதிகம் வருவதில்லை. எப்போதும் அவனுடனேயே பேசிக் கொண்டிருந்தார். இரவு நான் அவர்களைப் பார்க்கப் போகும்போது, அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எனக்குப் புரியாது. மிக மேலோட்டமாக என்னால் புரிந்து கொள்ள முடிந்ததெல்லாம் அவர்கள் இந்த பூமிக்கும் ஜியின் கிரகத்திற்கும் இடையே ஒரு சுமுகமான பிணைப்பை ஏற்படுத்துவது குறித்தே என்பதுதான்.
அவ்வளவு மூளைத் திறன் உள்ள அவனை இப்படி சிறைக் கைதியைப் போல ரகசியமாய் அடைத்து வைத்திருப்பதான குற்ற உணர்ச்சி என் மனதை அறுக்க ஆரம்பித்தது. ஒருநாள் நான் வீட்டில் இருந்து கொள்வதாகச் சொல்லி அவனை கடைக்கு அனுப்பினேன்.
என்னால் நம்பவே முடியவில்லை. அன்று அவன் என்னைவிட இரண்டு மடங்கு அதிக வியாபாரம் செய்திருந்தான். அதே கடை. அதே இடம். அதே ஜன நெரிசல். ஆனால், இவன் இருக்கும் போது மட்டும் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அடுத்த நாள் வாட்ஸ்அப்பில் அவன் பாடி பகிர்ந்திருந்த பாடல், ஒரே இரவில் உலகில் தமிழர்கள் இருக்கும் நாடுகளில் எல்லாம் பரவிவிட்டது. மறுநாளே சினிமா இசையமைப்பாளர்கள் இரண்டு பேர் அவன் திறமையை தங்களின் அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக ட்வீட் செய்திருந்தார்கள்.
அன்றிரவு நான் வீட்டுக்கு போனபோது, அம்மா “அதை நீயா பாடின” என்றார்.
நான் தயக்கத்தோடு, ’ஆமாம்’ என்றேன்.
அவர், ’இப்ப பாடு’ என்றார்.
“இப்ப தொண்டை சரியில்லம்மா” என்றுவிட்டு வேகமாக என் அறைக்குள் புகுந்து கொண்டேன்.
அடுத்த நாள் அவனை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு நான் கடைக்குப் போனேன்.
கொஞ்ச நேரத்தில் கடைப் பையன் கேட்டே விட்டான். “சார் நேத்து நீங்க இருந்ததுக்கும் இப்ப நீங்க இருக்கறதுக்கும் ரொம்ப வித்தியாசமா இருக்கு. இப்ப நீங்க பழைய மாதிரிதான் இருக்கீங்க. நேத்து ரொம்ப வித்தியாசமா இருந்தீங்க” என்றான்.
முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல், “என்ன வித்தியாசம் அப்படியேதான் இருக்கேன்” என்றேன்
அவன், “இல்ல இல்ல நீங்க வேற யாரோ மாதிரி இருந்தீங்க இப்ப உங்களுக்கு என்னாச்சி ஒடம்பு சரியில்லையா? நேத்து நாம ஷேர் பண்ணினமே அந்த பாட்டை இப்ப பாடுங்களேன். கேக்க ஆசையாய் இருக்கு” என்றான்.
பெரும்பாடுபட்டு என் திகைப்பை மறைத்துக் கொண்டேன். “போய் அந்த பெல்ட்டையெல்லாம் எடுத்து வை” என அவனை திசைதிருப்பினேன்.
அன்றிரவு ஜி மற்றும் என் குளோனுடன் இதுபற்றி பேசினேன் ரெண்டு பேரும் இருந்தால் சிக்கல்தான்” என்றார் ஜி.
திடீரென்று, “இவன உங்க கிரகத்துக்கே அனுப்பிடலாமா?” என்றேன். இந்த யோசனை எங்கிருந்து எனக்குள் வந்தது என்றே தெரியவில்லை. என்னையே நான் ஆச்சரியமாக, குழப்பமாக பார்த்துக் கொண்டேன்.
ஜி என்னை ஆழமாகப் பார்த்தபடி, அது முடியாது. அங்க இவனுக்கு இந்த உருவம்தான் இருக்கும். இந்த உருவத்தோட ஒரு ஏலியனா அவன் அங்க இருக்கிறது சிரமம்.” என்றார்.
“நீங்க எங்க உருவத்துக்கு மாறின மாதிரி, இவன உங்க உருவத்துக்கு மாத்த முடியாதா” என்றேன்
“முடியாது” என்றார்.
மறுநாள் கடையில் இன்னும் பலபேர் என்னிடம் அந்தப் பாடலைப் பாடச் சொல்லி கேட்டுவிட்டனர். நான் அதை சமாளிப்பதற்குள் திக்கு முக்காடிப் போய்விட்டேன். செல்போனில் என்னைப் படம் பிடித்தவர்கள், “போட்டோல நீங்க அவரப் போல இல்லையே? உங்க தம்பி யாரும் இருக்காங்களா?” எனக் கேட்டுவிட்டு, ’அப்படியெல்லாம் இல்லீங்க’ என நான் சொன்னபோது, விசித்திரமாகவும் சந்தேகமாகவும் பார்த்துச் சென்றனர்.
ஒருநாள் பிரச்னையே இந்த அளவுக்கு இருக்கிறதே இன்னும் இதை எப்படி தொடர்ந்து எதிர்கொள்ளப் போகிறேன் என யோசித்தபோது, என்னால் அது முடியும் என்று தோன்றவில்லை.
மாட்டிக் கொண்டால் அரசாங்கம் பாராட்டுமா? தண்டனை அளிக்குமா? இந்த ஏலியன் ஜி சாட்சி சொல்ல வருவாரா? கிளம்பிப் போய்விடுவாரா? அப்படி போய்விட்டால் என் கதி?
எங்கள் இருவருடைய கை ரேகையும் விழிக்கோளமும் கூட ஒன்றுதான் என்பதை கண்டுபிடிக்க அரசாங்கத்திற்கு அதிக நேரம் தேவைப்படாது. நாங்கள் வேறு வேறானவர்கள் இல்லை என்பதும் அவன் என்னுடைய குளோனிங் என்பதும் வெளிச்சமாகிவிடும்.
இவ்வளவு பெரிய வேலையை செய்த என்னை, அரசாங்கங்கள் உலக அளவிலான கிரிமினலாய் தான் நடத்துமே தவிர நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுமா? கற்பனைகளின் ஆழத்துக்குள் அதற்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. எதுவும் நான் நினைத்தது மாதிரி நடக்கப் போவதில்லையோ? வெறும் குற்றவாளியாக நான் சாகப் போகிறேனோ? தவிர்க்க முடியாத காரணம் என்று சொல்லி ஜி இதில் இருந்து விலகிவிட்டால் அதுதான் நடக்கும்.
இந்த விளையாட்டை இதற்கு மேலும் தொடர்வது அர்த்தமற்றது. அபாயகரமானது. ஏதோ ஓர் துர் காலம் என்னை சூழ்வதைப் போல இருந்தது. நான் முற்றிலும் பின்வாங்கிவிட முடிவு செய்தேன். ஜியிடம் என்னுடைய குளோனை அழித்துவிடலாமா? என்று கேட்டேன்.
அவனை அழிப்பதா? அவர் திகைத்துப் போய் என்னைப் பார்த்தார். “அப்படி செய்தால் உன்னுடைய சித்தாந்தப்படி அது கொலை அல்லவா?” என்றார்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஆமாம் அது கொலைதான். இந்த சிக்கலை கொலையில் கொண்டுபோய் முடிப்பதைத் தவிர வேறு வழியே இல்லையா?
என்னுடைய குளோன் “சார் நீங்க அவரை மேலும் மேலும் குழப்ப வேண்டாம். நீங்க என்னை அழிச்சிடுங்க அது ஒன்னும் கொலை ஆகாது” என்றான்.
“உன்னை அழிக்கிறதா? அப்புறம் நாம அடுத்து எடுக்கப் போற நடவடிக்கைகள் பற்றி போட்டிருக்கிற திட்டங்களை யார் நிறைவேத்துவா? அதற்கு உன்னைப் போல மூளைத் திறன் உள்ள ஒருத்தன்தான் தேவை. இதை அழிச்சிடலாம்” ஜி என்னைக் கை காட்டினார்.
இதுவா? என்னையா அவர் அப்படிச் சொன்னார். அந்த இது எனக்குள் ஒரு அணுகுண்டைப் போல வெடித்துச் சிதறியது.
நான் அப்படியே இடிந்து போய் தரையில் உட்கார்ந்து கதறி அழ ஆரம்பித்தேன்.
குளோன். “வேண்டாம் அவன் மரணத்தைக் கண்டு பயப்படறான்.” என்றான்.
ஜி என்னை விநோதமாக பார்த்துக் கொண்டு, “ஆனா மரணம்ங்கறது இங்க இல்லையே. நீ தானே அவன். நீ இருக்கத்தானே போற.” என்றார்.
“அது அவனுக்குப் புரியலையே. மரணம்ங்கறதை அவன் ரொம்ப காம்பிளிகேட் பண்ணி வச்சிருக்கான். இந்த நிலைமைல நாம அவன அழிக்கிறது சரியான விஷயம் இல்ல. எனக்கு இப்ப ஒரு யோசனை தோணுது.” என்று சொல்லி நிறுத்தினான். நாங்கள் இருவரும் என்ன என்பதைப் போல அவனைப் பார்த்தோம்.
“எங்களுக்கிடையேயான இணைப்பை ஏற்படுத்தி, அவனை தியானத்தின் ஆழ்ந்த நிலைக்கு கொண்டு போயிடுறேன். அப்ப அவனுக்கு மரணத்தைப் பற்றிய பயம் இருக்காது. நாம இப்போதைக்கு திட்டமிட்டிருக்கிற வேலையெல்லாம் முடிஞ்சதும் இவனை பழையபடி இயக்கத்துக்கு கொண்டு வந்துட்டு, என்னை அழிச்சிரலாம்.” என்றான்.
ஜி இந்த ஐடியா ஒகேவா என்பதுபோல என்னைப் பார்த்தார். அப்போதும் எனக்கு தயக்கமாகத்தான் இருந்தது என்றாலும் காலத்தைக் கடந்து மோனத் தவத்தில் மூழ்கி இருப்பது எப்பேர்ப்பட்ட வரம் அதை மறுக்க என்னால் முடியுமா? நான் சரி என்றேன்.
எனக்கும் என்னுடைய குளோனுக்கும் இணைப்பு உண்டானது. நான் ஒளிமிகுந்த மன உலகிற்குள் பிரவேசித்தேன்.
“கண்ணை மூடி, உன் அகத்தை கவனிச்சிகிட்டிரு” என்றான் என்னுடைய குளோன்.
நான் கண்களை மூடினேன்.
தியானம் என்றால் என்னவென்றே தெரியாத நான் தியானத்தின் ஒவ்வொரு படிகளாய் கடந்து கொண்டிருந்தேன். என் உடல் இயக்கங்கள் மன இயக்கங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் அசைவற்று அமைதியடைவதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னுடைய நான் மிக வேகமாய் சுருங்கிக் கொண்டே வந்தது. எனக்குப் பயம் உண்டாகவில்லை. மாறாக மேலும் மேலும் பரவசத்தில் திளைத்தேன்.
கடைசியில் நான் என்கிற ஒற்றை எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. என்னைச் சுற்றி வெறும் பாழ்வெளி. அதன் நடுவே படிகம் போன்ற என்னுடைய நான் என்ற ஒற்றை நினைவு அசையாத தீபச் சுடரைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.
நான் மெல்ல மெல்ல பாழில் கரைய ஆரம்பித்தது.
நான் ஜியைப் பார்த்து புன்னகைத்தேன். “சார் வேலை முடிஞ்சது. இந்த பாடிய டிஸ்போஸ் பண்ணிடுவோம்” என்றேன்.
“பாடியா? செத்துட்டானா, நீ இந்த உடம்புக்கு திரும்ப போயிடலாம்னு சொன்னியே?” என அவர் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்.
“அவன் இன்னும் சாகல. ஞான நிலையில ஒன்றி இருக்கான். ஆனா அந்த உடம்புக்குள்ள நான் எப்படி சார் இருக்க முடியும். அது ரொம்ப ரொம்ப ஓல்ட் வெர்ஷன். நான் அந்த பழைய மூளைய சமாதானப் படுத்தத்தான் அப்படி சொன்னேன். தவிர அந்த உடம்பும் அவ்வளவு தரமானது இல்ல. திரும்ப அதை இயக்கத்துக்கு கொண்டு வந்தா ஒரு முப்பது வருஷத்துக்கு மேல தாங்காது” என்றேன்.
ஜி தயக்கத்தோடு என்னைப் பார்த்து, “அதை அப்புறம் தேவைப்படும்போது செய்வோமே” என்றார் ஜி.
நான் அவரை அழுத்தம் திருத்தமாக மறுத்தேன். “இல்லை இதை உடனடியா அழிச்சிடறதுதான் நல்லது. ஆக்சிடெண்ட்டலா அந்த மூளை இயக்கத்துக்கு வந்திடுச்சின்னா எல்லாம் சிக்கலாயிடும். நம்ம உழைப்பு திட்டம் எல்லாம் வீணா போயிடும்” என்றேன்.
ஜி புன்னகைத்தார்.
கதிரியக்க கருவியின் மூலம் என்னுடைய பழைய உடலின் மண்டையை ஜி இரண்டாக பிளக்க ஆரம்பித்தார்.
நான் அமைதியாக நின்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
***

குமாரநந்தன்
இரண்டாயிரத்திற்குப் பிற்கு எழுத வந்த புதிய தலைமுறை சிறுகதையாளர்களில்
கவனிக்கப்பட, அதிகம் பேசப்பட வேண்டியவர்களில் எழுத்தாளர் குமாரநந்தனும் ஒருவர்.
இதுவரை பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா
மாயா ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் பகற்கனவுகளின் நடனம் என்னும் கவிதைத்
தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரின் கதைகள் ஆரவாரமற்றவை. ஆனால் ஆழம்
நிரம்பியவை.