ஒரு முகத்தின் இரண்டு கண்கள்

“கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே -இங்கு வேரில் பழுத்த பலா”1

என்ற சொற்கள் கவிஞர் பாரதிதாசனுடையவை.

கணவனை இழந்து மறுமணம் மறுக்கப்பட்டுத்  தனித்து வாழ்கின்ற இளம் கைம்பெண்களின் பெருந்துயரத்தை தன்னகத்தே கொண்டவை அவை.ஆனால், இப்போது அவற்றைக் கடந்தகாலத்தின் பிற்போக்குத்தனமான ஒரு  சமூக நிலையின் நினைவுச் சுட்டும் வரிகள் என உறுதியாகச் சொல்லிவிட முடியுமா?

இன்று காலம் மாறுவிட்டது ; உலகமும் மாறிவிட்டது ; அதனால், மனிதர்களும் மாறிவிட்டார்கள். இளமையில் கணவனை இழந்த பெண்கள் இன்று யாரும் தனிமைத் துயரில் உழல்வதில்லை. உடனே இன்னொரு திருமணம் செய்துவிடுகின்றனர். இன்றைய சமூகம் அவர்களுக்கு மறுமணம் என்கிற வழியை அடைக்கும் தடைக்கல்லாக இருப்பதில்லை.

இன்றைய இளம் கைம்பெண்களும் தமது மறுமணம் குறித்த முடிவுகளுக்கு இச்சமூகத்தைப் பொறுப்பாக்குவதில்லை. திருமணத்தகவல் நிலையங்களின் தகவல் பக்கங்களில் மறுமணம் வேண்டி விளம்பரம் செய்துள்ள வரன்களே அதற்குச் சாட்சியாகும்.

/ கை இல் ஊமன் கண்ணின்   காக்கும் வெண்ணெய் உணங்கல் போல / 2

இருந்த நிலை இன்று எவ்வளவோ மாறிவிட்டது.கணவனை இழந்த இளம் பெண்கள் தாமே முன்வந்து இன்னொரு திருமணம் செய்துகொள்வது இன்றைய சமூகத்தின் இயல்பான வழக்கமாகிவிட்டது என முழுவதுமாக ஒப்புக்கொண்டுவிட முடியுமா?

நடுத்தரவர்க்கம் என்கிற சமூக அங்கமே, சமூகத்திற்கெனக் குறிப்பிடப்படும் பண்புகளின் நிலைக்கலனாக இருக்கிறது. இந்த நடுத்தர ரெண்டும்கெட்டான் சமூகம், கால மாற்றத்தால் விரைவாக தம் வழக்கங்களை மாற்றிக்கொள்ளாது. என்றும் முற்றிலும் மாறாததும் கூட. மாற்றிக்கொள்ள வேண்டியவற்றைப் பெருமை, மரபு என்னும் பெயர்களில் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ளும் பண்பு கொண்டது. கொஞ்சமேனும் ஏற்பட்ட மாற்றத்திற்கும் கல்வியும் வேலைவாய்ப்புமே காரணங்களாக இருந்திருக்கின்றன. இதைத் தாண்டி தனிப்பட்ட குடும்ப நலன்,  மன உணர்வு எனும் தடைகள் இளம் கைம்பெண்களின் திருமணத்திற்கு இன்னும் தடையாகவே இருக்கின்றன.

அத்துடன் இளம் கைம்பெண்களின் வேலையும் வருமானமும் தரும் ஆசையால் குடும்ப உறுப்பினர்களே  மறுமணம் என்ற ஒன்றை வசதியாக மறந்து விடுகின்றனர். குடும்ப உறுப்பினர்களைக் கட்டாயப்படுத்த உறவுகள் முன்வராத சூழலில் அப்பெண்களின் திருமண வாழ்வுக்கு குடும்பமே முற்றுப்புள்ளி வைத்துவிடும் நிலையையும் இன்று காண முடிகிறது.

 இன்றும் கணவனை இழந்த இளம்பெண்கள் தம் பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், விருப்பமிருந்தும் ஏற்பட்டுச் செய்ய ஆளில்லாத குடும்ப சூழ்நிலையாலும் வாழ்நாள் முழுதும் தனிமையில் வாழும்நிலை நீடிக்கத்தான் செய்கிறது. இந்த நிலை மாறியிருந்தால் தொடர்ந்து இந்நிலை இலக்கியத்தின் பக்கங்களில் பதிவாக வாய்ப்பில்லை.

ஆறாத இத்துயரம் புனைவிலக்கியங்களின் பல பக்கங்களில் உறைந்து கிடப்பதை நாம் அறிவோம். தனிமையில் காலமெல்லாம் இந்நிலைக்குள் அகப்பட்டுக்கொண்ட பெண்களின் துயரைப் பேசும் இரு கவிதைகளையே இக்கட்டுரை பகிர்ந்து உரையாட விரும்புகிறது.

ஆற்றவியலாத பெருந்துயரத்தை வாய்விட்டு அரற்றி அழுது வெளிப்படுத்துவதே அடிப்படை மனித இயல்பாகும்.  ஆனால், எந்த நொடியும் கண்களில் நீர்முட்ட வாய்திறந்து வெடிக்க இருக்கும் நிலையை வரிகளுக்குள் வைத்துக் காட்டுவதே ஒரு நல்ல கவிதையின் இயல்பாகும்.அந்த இயல்பு கொண்ட கவிதைகளே இவை.

இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும், பெண்ணுக்கு மட்டுமே நேர்கின்ற இப்பெரும் துயரத்தின்  தீவிரத் தன்மையை வாசகருக்கு உணர்த்தும் தன்மை கொண்டவைஇக்கவிதைகள்.

கவிதை -1

——————

/ தனது கல்யாணக் கதைகள் சொல்லி அக்காவின் கையில் சுண்ணாம்புக் கோலமிட்டுப ‘’பகல் மருதாணி ‘ வைப்பாள் அத்தை.

தம்பியும் விரல் முழுக்கத் தானே

சூடிக்கொண்டு கொட்டுக்காரனாய்

நடிப்பான் ; மருதாணி உதிர்ப்பான் ;

சாணம் என்று சொல்லித் தங்கச்சியிடம்

‘சுண்டு’ வைப்பான்.

தங்கை அழுது கோபித்து

முகமெங்கும் மருதாணியாக்குவாள்.

அடிக்க முடியாத கையுடன்

அக்கா முந்தானை சரிய விரட்டுவாள்…

 …. அம்மா வரும் முன்

முந்தானை நேர்ப்படுத்தத் துடிப்பாள்

ஆனாலும், அம்மா வந்து தொலைப்பாள்.

அப்பா , அம்மாவை மட்டும் சூடாதேயென

ரகசியமாய்ச் சைகிப்பார்

அம்மா மழுப்பினபடி சூடிச் சிரிப்பாள்

அத்தனையும் பார்த்து

அரைத்ததால் சிவந்த கை பார்த்து

யாரும் பார்க்கும் முன்

கிணற்றடி சென்று அழுவாள் அத்தை.

வெள்ளைக்குள் விரைய வைத்த

விதி குலுங்க

விரைத்த முலை குலுங்க.

இது கவிஞர் கலாப்ரியாவின் சிறந்த கவிதைகளில் ஒன்றாகும். மிக இயல்பாக ஒரு வீட்டில் மருதாணி வைக்கும் ஒரு செயலை கவிதை விவரிக்கிறது. அப்படித்தான் நாம் நினைத்துப் படிக்கத் தொடங்குகிறோம். ஆனால், கவிதை வேறொன்றைச் சொல்ல மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறுகிறது. ஒரு வீட்டில் நடக்கும் காட்சிகளை ஒரு ஒளிப்பதிவாளனுக்கு உள்ள உணர்வு கொண்டு அது ஒவ்வொரு காட்சியாக நகர்த்திக் காண்பிக்கிறது. முதல் காட்சியில் கல்யாணக் கதைகள் சொல்லும் அத்தையைக் காட்டித் துவங்கும் காமிரா கோணம் இறுதியில் கிணற்றடியில் யாருக்கும் தெரியாமல் அழும் அதே அத்தையைக் காட்டி முடிகிறது.

மருதாணி வைப்பதும், கதைகள் சொல்வதும், விளையாடுவதுமான ஒரு வீட்டின் இயல்பான காட்சிகளைக் கடந்து வரும் கவிதை, கடைசி மூன்று வரிகளில் பொட்டில் அடித்தாற்போல துயரின் தீவிரத்தைக் காட்டி அதிர வைக்கிறது.

 கதையென முடிந்துபோன கல்யாண வாழ்வு, வெள்ளைக்குள் விரைய வைத்த விதி எனச் சில சொற்களில் அத்தையின் வாழ்வு குறித்த புரிதலைக் கவிதை தந்துவிடுகிறது.அம்மாவை மருதாணி வைக்க வேண்டாம் என அப்பா சைகிக்கும் போது , அத்தையின் இளமை மட்டும் வெள்ளைக்குள் விரைத்துப்போவது எவ்வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்புகிறது இக்கவிதை.

கவிதை – 2

——————–

அகலாது அணுகாது

———————————–

/ செவ்வாக்கியம் அத்தை

தல்லாகுளத்தில்

சின்ன வயதில்

தாலியறுத்தவர்களில்

முதன்முதலாய்

உள்பாடியணிந்தவள்.

பால் வாங்க

செருப்புப் போட்டுக் கொண்டுதான்

போவாள்

நாள் முழுக்கத் தெருவிற்கும்

வீட்டிற்கும் தண்ணீர்

பிடித்துக்கொண்டு அலைவாள்

“பிடிச்சுப்பிடிச்சு அவ வீட்டுக்

கிணத்துல கொண்டு போய் ஊத்துறா

பாடைல போறவ” என்பாள் பேச்சி

சின்னம்மா.

ஒரு சித்திரை மதியத்தில்

தீ வைத்துக் கொண்டாள் அத்தை.

கிணற்றுக்கான கதவை உடைக்க

முடியாமல் சாக்கடைத் தண்ணீரை

அள்ளி ஊற்றினார்கள்.

நாறியதால் ரொம்பநேரம்

பெரியாஸ்பத்திரியில்

போட்டு வைத்திருந்தார்கள்.

பொங்கல் வைத்த அடுப்பாய்க்

கிடந்தது உடம்பு.

கிணற்றை மூடிவிட்டார்கள்.

அக்கினி நட்சத்திர நாள்களில்

அம்மாச்சியின் ஒப்பாரியில்

மாத்திரம் வெறும் குடத்தோடு

வேறொரு தெருவில் நடக்கிறாள் அத்தை.

கவிஞர் சாம்ராஜ் எழுதிய கவிதை இது.இளம் கைம்பெண் வாழ்வு குறித்த துயரத்தை மிக உக்கிரமாகச் சொல்லும் சிறந்த கவிதை இது.

கவிதை ஆரம்பத்திலேயே நெருப்பைப் பற்ற வைத்துவிடுகிறது.  ‘சின்ன வயதில் தாலியறுத்தவர்களில் முதன்முதலாய் உள்பாடியணிந்தவள்’ என்ற வரிகள் மறுக்கப்பட்ட வாழ்வை ஏற்க மறுக்கும் இளம்பெண்ணின் வெளிப்பாடாகவே அமைகின்றன. இயல்பான வாழ்வுக்கு இங்கு வழி இல்லாதபோது அது தரும் மனச் சிதைவு கவிதையின் அடித்தடுத்த வரிகளில் காட்டப்படுகிறது.இளம் கைம்மைநிலை தரும் வெம்மையைக் கொதிக்கக் கொதிக்கக் காட்டி முடிக்கிறது கவிதை. நெருப்பில் வெந்து மடிகிறாள் செவ்வாக்கிய அத்தை.உண்மையில் செவ்வாக்கிய அத்தையின் வாழ்வை அழித்ததும் உயிரை அவித்ததும் கைம்மைநிலை என்னும் நெருப்புதானே? அணைக்கப்படாத இப்பெருநெருப்புக்குச் சாட்சியாகிறது இக்கவிதை.

கலாப்ரியா கவிதையில் வரும் பெயரற்ற அத்தை. கைம்மை வழக்கங்களுக்கு உடன்பட்டவளாக இருக்கிறாள் ; ஆனால், மனதுக்குள் அழுகிறாள் ; துயரத்துடன் சகித்துக் கொண்டு வாழ்வைக் கடத்துகிறாள்.

சாம்ராஜின் செவ்வாக்கிய அத்தை கைம்மை வழக்கங்களுக்கு உடன்பட மறுக்கிறாள் ; உடை அளவிலேயே தன் விருப்பத்தை அவளால் வெளியில் சுட்டிக்காட்ட முடிகிறது. தன்னைத்தானே அழித்துக் கொள்வதன் மூலமே இச்சமூகத்தோடு உடன்பட முடியாத நிலையை அவளால் காட்ட முடிந்திருக்கிறது.

இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது மதுரை பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு நினைவுக்கு வருகிறாள். அவள் கைம்மை நோன்பை மறுத்துத் தீப்பாய்ந்தபோது அவளுக்கு என்ன வயது இருந்திருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், ‘பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே’ 3 என அவள் கத்துவது மட்டும் காதில் ஒலித்தபடியே இருக்கிறது.

மணி மீனாட்சிசுந்தரம்.

உதவிய நூல்கள்:

1. எட்டயபுரம் – கவிஞர் கலாப்ரியா,

 காலச்சுவடு பதிப்பகம்,

 நாகர்கோவில் -629001

2. என்றுதானே சொன்னார்கள் – சாம்ராஜ், சந்தியா பதிப்பகம்,

சென்னை – 600083

குறிப்பு நூல்கள் :

1. பாரதிதாசன் கவிதை வரிகள்.

2. 27 ஆம் குறுந்தொகைப் பாடல்.

3.246 ஆம் புறநானூற்றுப் பாடல்.

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *