உச்சியில் எந்தத் தெய்வமும் குடியிருக்கவியலாத அளவிற்கு கூர்நுனியைக் கொண்டிருந்தது அந்த மலை. காற்று எந்நேரமும் வேகமாய் வீசிக்கொண்டிருந்த உச்சியில் புற்களின் அடையாளம் சிறிது கூட இல்லை. இராட்சதப் பறவைகளின் எச்சம் போல ஆங்காங்கே சுண்ணாம்பு வெண்மையும், கரும்பச்சை, கறுப்பு நிறங்களைப் பூசி, வெயிலில் பளிச்சிட்டபடியே கிடந்த அந்த ஒற்றை மலையின் சரிவின் பாதியிலிருந்து பச்சை தொடங்கியிருந்தது. அங்கிருந்து கிளம்பி அடிவாரம் நோக்கியிறங்கி வளர்ந்திருந்தது அந்த வனம்.
எப்போதாவது கொட்டும் மழை, மலையிறங்கி ஓட தடமொன்று வனத்தின் ஊடாக செல்கிறது. செம்மண்ணும், அதில் தோய்ந்து செந்நிறம் கொண்ட உருண்டைக் கற்களும் வெயிலில் பொருக்கோடி காய்ந்து கிடந்தன. உசிலை, பால்பெருக்கி, தொரட்டி, ஒடுவன், பிள்ளைமருது, கருவேல மரங்களும், நொச்சி, காரைச் செடிப்புதர்களும், ஆவாரை, பாம்புக் கற்றாழை செடிகளுமாய் கிடந்த காட்டில், மரங்களோடு செடிகளைப் பின்னிப் பிணைத்து இணைத்திருந்தன கொடிகள். சில பகுதிகளில் இருளைத் தவிர வேறேதும் தெரியவில்லை. எந்நேரமும் பறவைகள், வண்டுகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டே இருந்தது. கோடை காலங்களில் உதிர்ந்த இலைகள், பல்வேறு வண்ணங்களைச் சூடியிருக்கும் தரையை உண்டாக்கும். பழுப்பு நிற முயல்கள் சிலவும், கீரிகள் குள்ளநரிகளும், உடும்பு, பாம்புகளும் அவ்வனத்தை தங்கள் விருப்பப்படி ஆட்சி செய்தன.
வனத்தில் அந்த நாவல் மரம் எப்படி வந்ததென்று அங்கே குடியிருக்கும் பறவைகளுக்கோ, காய்ந்த இலைகளின் மேல் ஊறிக் கொண்டிருக்கும் செவ்வெறும்புகளுக்கோ கூட தெரியாது. வனத்தினுள்ளும், வனத்தை சுற்றி தொலை தூரம் வரையுள்ள பகுதிகளிலும் எங்கேயும் நாவல் மரம் கிடையாது. தொலைதூரத்திலிருந்து கனியைக் கடத்தி வந்த பறவை ஒன்று பழத்தை உண்டபின், அலகிலிருந்து தவற விட்ட விதையாக இருக்கலாம். உலகின் விரிவைக் காண, எங்கோ ஒரு வனத்திலிருந்து கிளம்பி, சிறகை விரித்து பறந்து வந்த வித்தின் சிறகுகள், களைப்பில் இங்கே உதிர்ந்து நகர முடியாமல் முளைத்ததாய் இருக்கலாம். தான் எங்கிருந்து வந்தோம் என்று அந்த மரத்திற்கும் தெரியவில்லை. சுற்றுவட்டாரத்தில் எந்த உறவினரும் இல்லை என்று கவலையும் கொள்ளவில்லை. யாருக்கும் தெரியவில்லை. தெரியாவிட்டால் என்ன குறைந்து போனது? முளைத்த பின் வரலாறு எதற்கு? எந்தக் கவலையுமின்றி செழித்து வளர்ந்து பெரிய கிளைகள் இலைகளுமாக மின்னிக் கொண்டிருந்தது அந்த மரம். மனிதர்களின் வேர்வைத் துளிகள் சிந்தாத வனத்தின் அடர்த்தியான பகுதியில் அந்த மரம் நின்று கொண்டிருந்தது.
வானத்தைத் துளாவும் நூறு கைகளுடன் பெரிதாய் வளர்ந்து நின்ற மரம், வாசனை மிகுந்த இலைகளுடன் தினமும் மலையுச்சியை நோக்கிக் கனவு கண்டு கொண்டிருந்தது. அன்றொரு நாள் வெண்ணிறப் பறவை ஒன்று கிளையில் அமர்ந்து தன் சிறகுகளை கோதிக் கொண்டிருந்தபோது, சில மென்மையான இறகுகள் உதிர்ந்து காற்றில் தவழ்ந்து இறங்கி அடித்தண்டில் முத்தமிட்டபோது பருவமடைந்தது மரம். பசுமையும், வெண்ணிறமும் கலந்த சிறிய மலர்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்து சிரித்து அழகைப் பரப்பின. பச்சைக் காய்களில் இனிப்பும் துவர்ப்பும் முயங்கிக் கூடிச் சுவைமிக்க பழங்களாக மரம் முழுவதும் தொங்கிக் கொண்டிருந்தன. பருவமடைந்த பிறகு ஒவ்வொரு ஆடியிலும் அன்னைப் பசு கன்றுக்கு அமுதூட்டுவது போல கருநீல நிற பழங்களைக் கொட்டத் தொடங்கியது.
தரை முழுவதும் கனிகள் உடைந்துச் சிதறி, இலைகளில் தெறித்து குருதி போலக் காய்ந்து கிடந்தது. அந்நாட்களில் அணில்கள், சாம்பல் குருவிகள், மைனாக்கள் சத்தம் மரத்தினருகில் கேட்டுக் கொண்டேயிருந்தது. அந்தி சாய்ந்தபின் இரவாடி உயிரினங்கள் சருகுகளில் உணவைத் தேடின.
எல்லாமும் இயல்பாய் போனால் எதுவும் இங்கே இருக்குமா என்ன? ஒழுங்கின்மையெல்லாம் ஒன்று கூடி கலங்கி, சிக்கலாகி, நெளிந்து, வழிந்து நேராகி மீண்டும் ஒழுங்கற்ற தன்மையை அடைவதே இயற்கையின் இயல்பாக இருக்கின்றது. பெருநகரம் நோக்கிச் செல்லும் அதிவேக சாலை ஒன்று வனத்துக்குள் புகுந்து நாவல் மரத்தின் நிழலைத் தொட முயற்சித்து, முடியாமல் விலகிச் சென்றது. நாவல் மரத்திற்கு எதிரே சாலைக்கு நெருங்கிய பகுதிகளில் ஒன்றிரண்டு வீடுகள் வரத் தொடங்கின. வீடுகளிலிருந்து எறியப்பட்ட குப்பைகள் நிறைந்த நெகிழிப் பைகள் நாவல் மரத்தினை மலையை நோக்கி நகர்த்த முயற்சி செய்தன. இலைகளில் புழுதி வழிந்தது. சிறகுகள் இருந்திருந்தால் பறந்து சென்றிருக்கலாமென எண்ணியது. மரத்திற்கு கனிகள் கொட்டுவதற்கு இடமில்லாமல் போனது. பறவைகள், பூச்சிகள் எங்கோ தொலைந்து சென்றன. அவைகளின் ஓசையிழந்த வனத்தின் அமைதி மரத்தைப் பயமுறுத்தியது. பேரிரைச்சல் பெருகி வழிந்தது.
அச்சத்தில் ஒடுங்கிய மரத்தின் அத்தனை கிளைகளும் தம் கண்களை மூடிக்கொள்ள உச்சிக் கிளையில் மட்டும் சில மொட்டுகள் அரும்பின. புழுதி படலத்தின் உள்ளிருந்து பிளந்து கொண்டு மலர்ந்தன பூக்கள். அடர்த்தியான இலைகளின் மடியில் அந்த மலர்கள் வண்டுகளுக்காக, இதழ்களை விரித்துக் காத்திருந்தன. அத்தனைப் பெரிய மரத்தில், உயரத்தில் அம்மலர்களின் இருப்பை வண்டுகள் அறிய இயலவில்லை. காற்றில் மலர்கள் நடனம் புரிய, சிதறும் மஞ்சள் மணிகளாய் மகரந்தத் துகள்கள் தெறித்து, சூல் முடியை இறுகத் தழுவிக் கொண்டன. சூல் கொண்டது உயிர். இதழ்கள் உதிர்ந்து உலகை நோக்கி தலை நீட்டின நான்கு பசும் பிஞ்சுகள். பெருத்துக் கனியும் வரை பொறுக்கவியலாத, பசி கொண்ட காற்று மூன்றைத் தின்றுச் செரித்தது. ஒற்றைப் பிஞ்சு அனாதையாய் போனது. காற்றை, ஒளியைத் தின்று பெரிதாகத் தொடங்கி, இரவுகளில் வெளியின் இருளை ஒவ்வொரு நாளும் தன்மேல் அள்ளிப் பூசிக் கொண்டது. என்றோ, எங்கிருந்தோ கிளம்பித் தொலைவிலிருந்து பறந்து வரும் அந்த ஒற்றைப் பறவைக்காகக் காத்திருக்கத் தொடங்கியது.
இன்னும் கொஞ்ச காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
ஜெய்சங்கர்
சொந்த ஊர் திருச்சி. பயணங்கள் செய்வதிலும், இலக்கியங்கள் வாசிப்பிலும் அதிக ஆர்வம். முதல் சிறுகதை மயானக் கொள்ளை நடுகல் அச்சிதழில் வெளியானது. இணைய இதழ்களில் பயணக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.