(ஆஃப்ரிக்க நாட்டுப்புறக் கதை)
ஓணானும் நாயும் நண்பர்களாக இருந்தன. அந்த நாய், சில சமயம் ஒரு மனிதனோடு நடந்து செல்வதை ஓணான் பார்த்தது. அது அந்த நாயிடம், “நீ அந்த மனிதனுடன் எங்கே சென்று வருகிறாய்?” எனக் கேட்டது.
“அவன் எனது நண்பன். நாங்கள் இருவரும் வேட்டைக்குச் செல்கிறோம். காட்டுக்குள் வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்ததும், இறைச்சியை மனிதன் சமைப்பான். அதில் உள்ள சதையை அவன் சாப்பிட்டுவிட்டு, எலும்புகளை எல்லாம் எனக்குப் போட்டுவிடுவான். நல்ல மனிதன்!” என்றது நாய்.
அதைக் கேட்டு ஓணான், “யாங்கு, யாங்கு, யாங்கு!” என்று தலையை மேலும் கீழும் ஆட்டியது. யாங்கு என்றால் மிக மோசம் என்று அர்த்தம்.
“மனிதன், உனது முன்னாள் நண்பனான குள்ளநரியை விடவும், மகா தந்திரசாலி; சுயநலக்காரன். அவன் உனது நண்பன் அல்ல; எஜமானன். அவன் உன்னை அடிமையாக வைத்திருக்கிறான்; இழிவாக நடத்துகிறான். இது கூட உனக்குப் புரியவில்லையே! அவன் உன்னை நண்பனாகக் கருதினால் உன்னையும் உடன் இருத்தி, தான் உண்ணும் மாமிசத்தையே உனக்கும் கொடுப்பானே! ஆனால் அவனோ, இறைச்சியில் உள்ள சதையைத் தின்றுவிட்டு, எச்சில் எலும்புத் துண்டுகளை உனக்குப் போடுகிறான். நீயும் அதை குஷியோடு தின்றுவிட்டு, அவனை நண்பன் என்கிறாயே! ‘வேட்டையில் எனக்கும் பங்கு உண்டு; எனவே சதையையும் எனக்குக் கொடு!’ என்று உரிமையோடு மனிதனிடம் கேள்!” என தூண்டிவிட்டது ஓணான்.
மறுமுறை வேட்டை இறைச்சியை சமைத்து மனிதன் சப்புக் கொட்டியபடி சுவைத்துக் கொண்டிருந்தான். நாய் அவன் அருகே சென்று, ஆசையோடு அவனது வாயைப் பார்த்தபடி, நாக்கைத் தொங்கப்போட்டு சலைவாய் ஒழுக்கியது.
அதைக் கண்ட மனிதன் எரிச்சலடைந்து, “சாப்பிடும்போது வந்து, வாயைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாயா? மற்றவர்களின் வாயைப் பார்க்க வைத்துவிட்டு சாப்பிட்டால் வயிற்று வலி வரும் என்று, தென்னாஃப்ரிக்காவில் உள்ள தமிழர்கள் சொல்வார்கள். வெளியே போ! நான் சாப்பிட்டு முடித்த பிறகு, உனக்கு எலும்புகளைப் போடுகிறேன்” என்றான்.
“வேட்டையில் எனக்கும் சரி பங்கு உண்டு. அதுவும், இன்றைக்கு அந்த முயலை நான்தான் துரத்திப் பிடித்தேன். அதனால் முயல் கறியில் உன்னை விட எனக்குத்தான் உரிமை அதிகம். எனவே, நீ சமைத்திருக்கும் இறைச்சியில் எனக்கு சதையும் வேண்டும். வெறும் எலும்புகள் மட்டும் போதாது” என்றது நாய்.
அதைக் கேட்ட மனிதன் ஆத்திரமடைந்து “எச்சக்கலை நாயே! என்னிடம் உரிமையா கேட்கிறாய்? இதோ தருகிறேன், வாங்கிக்கொள்” என்று குச்சியால் அதன் மண்டையில் படீர் படீரென அடித்தான்.
“எனக்கு ஒன்றும் தெரியாது! ஓணான்தான் உரிமையாக சதையையும் கேள் என்று தூண்டிவிட்டது” என்று அலறிய நாய், வலி தாங்காமல் ‘க்கை – க்கை’ என்று கத்தியபடியே வீட்டை விட்டு வெளியில் ஓடியது.
என்ன நடக்கிறது என்று வேலியிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஓணானும் குடுகுடுவென ஓடிச் சென்று, உயர்ந்த பனை மரத்தில் ஏறி மறைந்துகொண்டது.
தான் நாயைத் தூண்டிவிட்ட விஷயம் மனிதனுக்குத் தெரிந்துவிட்டதால், தன்னையும் குச்சியால் அடிப்பான் என்று ஓணானுக்கு பயம். அதனால் அது எப்போது மனிதனைப் பார்த்தாலும், வேலியிலும் மரங்களிலும் ஓடியோ, மறைந்தோ ஒளிந்துகொள்ளும்.
நாய் பிறகு மனிதனிடம் பழையபடியே வாழ்ந்துகொண்டிருந்தது. ஆனால், அவனிடம் தனக்கு அடி வாங்கிக் கொடுத்த ஓணானின் நட்பைத் துண்டித்துக்கொண்டது.
மனிதனை அண்டி, அவனுக்கு அடிமையாக வாழும் நாயை ஓணானும் விரும்பவில்லை. மனிதன் நாயை அடித்த காட்சி நினைவுக்கு வரும்போதெல்லாம் அது யாங்கு, யாங்கு, யாங்கு (மிக மோசம், மிக மோசம், மிக மோசம்) என்று தனது தலையை ஆட்டிக்கொண்டிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.
ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். இந்த ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.