வாஸ்தோ
தரை ஓடு பதிக்கப்பட்ட மொட்டைமாடியின் தரையில் புகைத்து முடித்திருந்த வில்ஸை கீழே போட்டு காலால் நசுக்கி, நெஞ்சில் எஞ்சியிருந்த புகையையும் ஊதிவிட்டு என்னுடைய அறைக்குள் நான் நுழைந்த பொழுது, ‘லீன்’ பால் தன்னுடைய மூக்குக்கண்ணாடியை ஒரு சிறு துணியால் துடைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். என் காலடி சத்தம் கேட்டு அவனும் தன் தலை நிமிர்த்தி என்னைப் பார்த்தான். அப்படி அவன் தன் தலை நிமிர்த்தி என்னைப் பார்க்கையிலும் கூட அவனது தலை மட்டுமே நிமிர்ந்ததேயன்றி அவனுடைய கைகள் அதனுடைய வேலையைத் தொடர்ந்தபடிக்கே தான் இருந்தன. அவன் முன்னே சற்று முன் நான் எழுத ஆரம்பித்திருந்த கதையின் கையெழுத்துப் பிரதி நேர்த்தியான முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் அவனிடம் எதுவுமே பேசாமல் என்னுடைய சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்துக் கொண்டேன்.
மூக்குக் கண்ணாடியைத் துடைத்து முடித்தவன், அதைக் கண்ணில் மாட்டிக் கொள்ளும் முன்பு, கண்களுக்கு நேராகச் சற்று தள்ளி வைத்து கண்ணாடியில் ஏதேனும் அழுக்கு ஒட்டியிருக்கிறதா என சோதிப்பதைப் போலப் பார்த்துக் கொண்டான். கண்ணாடியின் சுத்தத்தில் திருப்தி வராதவனைப் போன்று மறுபடியும் ஒருமுறை தன் கையிலிருந்த துணியைக் கொண்டு துடைத்துவிட்டு, மீண்டும் ஒருமுறை கண்களுக்கு முன்னால் நீட்டி அதன் சுத்தத்தை சரிபார்த்துத் திருப்தியடைந்தவனாக, அந்தக் கண்ணாடியை கண்களில் மாட்டிக் கொண்டான். அதன்பின் தன் கையிலிருந்த துண்டுத் துணியை நேர்த்தியாக மடித்து அவனது மூக்குக் கண்ணாடிக்கான பேழையில் வைத்து மூடியவன், என்னுடைய கையெழுத்துப் பிரதியை கையில் எடுத்துக் கொண்டு அவனுடைய நாற்காலியில் சற்று சாய்ந்து அமர்ந்தான்.
‘லீன்’ பால் எப்பொழுதுமே எனக்கு ஆச்சரியமளிப்பவன். அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு செய்நேர்த்தியை வைத்திருப்பான். செயல் என்று இல்லை அவனுடைய சிந்தனைகளிலுமே ஒரு நேர்த்தியான நேரடியான தன்மை இருக்கும். நான் அவனுடைய முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். ஆனால் அவனோ அவன் கையிலிருந்த என்னுடையக் கையெழுத்துப் பிரதியிலிருந்து கண்களை அங்குமிங்கும் நகர்த்தாமல் உட்கார்ந்திருந்தான். படித்து முடித்துவிட்டதன் அடையாளமாய், முதல் பக்கத்தை எடுத்து மேஜையின் மீது வைத்துவிட்டு, இரண்டாவது பக்கத்தை வாசிக்கத் துவங்கிய இரண்டாவது நொடியில் அவனுடைய கண்கள் சற்று அகலமாக விரிந்தது. அவனது கூரான மூக்கின் சரிவில் சற்று கீழிறங்கியிருந்த தன்னுடைய மூக்குக் கண்ணாடியை இடதுகையின் நடுவிரலால் தள்ளி கண்ணோடு நெருக்கமாக்கிக் கொண்டான். இரண்டாவது பக்கத்தில் நான் எழுதிய ஏதோவொரு வரி அவனை ஈர்த்திருக்கிறது என்பதாக நினைத்துக் கொண்டேன். அவன் முகத்திலிருந்த தீவிரம் சற்றுக் குறைந்து இயல்பானது. மீண்டும் அடுத்திருந்த இரண்டு பக்கங்களை முழுவதுமாகப் படித்துவிட்டு, கடைசி பக்கத்தின் பின்புறம் திருப்பிப் பார்த்தான். பின் ஏற்கனவே படித்து முடித்திருந்த பக்கங்களின் மறுபுறத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு என்னை நிமிர்ந்துப் பார்த்தான். ‘என்ன தேடுகிறாய்’ என்பது தொனிக்கும் விதமாக புருவம் உயர்த்தி அவனை ஏறிட்டுப் பார்த்தேன்.
“மீதமிருக்கும் கதைகளை எங்கே என தேடுகிறேன்” என்றான்.
“இதுவரை தான் எழுதியிருக்கிறேன்”
“மேற்கொண்டு ஏன் எழுதவில்லை”
“எழுத தோன்றவில்லை”
“ஏன்”
“ஏன் எழுதவேண்டுமென்றுத் தோன்றிவிட்டது”
“அது தான் ஏன் என்றுக் கேட்கிறேன்”
“வாசகன் இல்லாமல் வாசகங்கள் மட்டும் தனித்துலாவுவதால் யாருக்கு என்ன பிரயோஜனம் என்றுத் தோன்றிவிட்டது”
லீன் பால் எதுவுமே பதில் பேசாமல், வீட்டின் வெளியே பார்த்தான் – அவன் பார்வைப் பார்த்த வெளியை நானும் பார்த்தேன் – கறுப்பும் வெள்ளையுமாய் ஒரு நாய் தண்ணீர் போத்தலோடு விளையாடிக் கொண்டிருந்தது. அவன் அந்த நாயைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் – நான் அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். என்னை ஏன் பார்க்கிறாய் அந்த நாயைப் பார் என்றான். மீண்டும் அந்த நாயைப் பார்த்தேன் – அது அந்தத் தண்ணீர் போத்தலைத் தன் முன்னங்கால்களால் அழுத்திப் பிடித்துக் கொள்வதும், வாயால் அந்தப் போத்தலைக் கடிப்பதுமாக இருந்தது – ஒவ்வொரு முறை அந்தப் போத்தலை அது காலால் அழுத்துகையிலும், வாயால் கடிக்கையிலும் போத்தல் நசுங்கி சத்தம் எழுப்பியபடிக்கு இருந்தது. போத்தல் நசுங்கி சத்தம் எழ எழ – அது இன்னும் உத்வேகத்தோடு அதைத் தன் வாயால் கடித்து – தலை உதறி – போத்தல் தூரமாய் போய் விழ – மீண்டும் ஓடிச்சென்று அந்தப் போத்தலைக் கடித்து – தலை உதறி – காலால் மிதித்து – போத்தலின் சப்தம் அதிகமாக – அதன் வேகமும் அதிகமாக – போத்தல் நசுங்கி அதன் சப்தம் குறைய – அதன் வேகமும் குறைய – மீண்டும் அது அந்தப் போத்தலை வாயால் கவ்வி – அவ்விடத்திலேயே அமர்ந்து – முன்னங்கால்களால் அதைப் பற்றி – பற்களால் கடித்து – என்ன செய்கிறதெனக் கேட்டான் லீன் பால். தண்ணீர் போத்தலோடு விளையாடுகிறது என்றேன். எதுவுமே பேசாமல் – அவனது பற்கள் கூட வெளித்தெரியாமல் – இடதுபுற வாய் சற்று மேலேற புன்னகைத்தான் – ஏன் என்பதாய் அவனைப் பார்த்தேன் – தொண்டையைச் செறுமிக் கொண்டான் – தன்னுடைய ஸ்லிங்க் பேகிலிருந்து அவனது பைப் மற்றும் அதற்கான புகையிலையை எடுத்து மேஜையின் மேல் வைத்தான் – வழக்கத்திற்கு மாறாக அவனுடைய புகையிலை ப்ராண்ட் மாறியிருந்ததைப் பார்த்தேன் – என்னப் பார்க்கிறாய் எனக் கேட்பதைப் போல அவனது தலையை கீழிருந்து மேலாக ஒருமுறை உயர்த்தினான் – ‘இண்டிப்பெண்டன்ஸ்’ எங்கே எனக் கேட்டேன் – ‘மிட்நைட் ரைட்’ தான் கிடைத்தது என்றான். மிட்நைட் ரைட் – இண்டிப்பெண்டன்ஸ் பெயர் பொருத்தம் அருமை என்றேன். மீண்டும் கோணல் உதட்டுப் புன்னகை அவனிடமிருந்து என்னைப் பார்க்காமலேயே. அவன் துவங்கிய வேலையை முடிக்கும் வரையிலும் அவனது கவனம் வேறெங்கும் செல்லாது என்பதால், நான் பொறுமையோடு அவனைப் பார்க்க ஆரம்பித்தேன்.
அவன் ஆட்காட்டி மற்றும் பெருவிரலால் புகையிலையை எடுத்தான். அதைப் பைப்பினுள் வைத்து, ஆட்காட்டி விரலால் மெலிதான அழுத்தம் கொடுத்தான். அதன்பின் மீண்டும் அதே இருவிரல்களால் புகையிலையை எடுத்து அதன் மேல் வைத்து, ஆட்காட்டி விரலின் நுனியால் சற்று அழுத்தம் கொடுத்தான். அதன்பின் மீண்டும் இரு விரல்களால் புகையிலையை எடுத்து, மீண்டும் அந்த பைப்பில் வைத்து பெருவிரலால் அழுத்தினான். அதன்பின் மீண்டும் சிறிதளவு புகையிலையை எடுத்து பைப்பில் நிரம்பியிருந்த புகையிலைத் துகளின் மேல் வைத்து சிறு அழுத்தம் கொடுத்து நிரப்பினான். கத்தரிக்கப்படாத மீசைத் தாடி மயிரைப் போல பைப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் புகையிலைகள் குத்திட்டு நின்றன. பைப்பை வாயில் வைத்து தீக்குச்சி ஒன்றை உரசி, புகையிலையின் மேல் காண்பித்தான். குத்திட்டு நின்ற புகையிலைகள் ஒவ்வொன்றும் – அதன் மேல் சில மில்லிமீட்டர் உயரத்திலிருந்த நெருப்பால் கவரப்பட்டு – கறுத்து – சிறுத்து – புகைய ஆரம்பித்து – சிவப்புக் கனலாகி – தான் பற்றிய நெருப்பைத் தன்னைத் தாங்கி நிற்கும் – தான் காலூன்றி – வேரூன்றி நிற்கும் புகையிலை நிலத்திற்குக் கடத்தின. லீன் பாலின் வாயிலிருந்து புகை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற ஆரம்பித்தது. அவன் விரல்களால் பற்றியிருந்த தீக்குச்சியும் தன்னுடைய இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்க, அதை ஊதி அணைத்து என் மேஜையிலிருந்த சாம்பல் கிண்ணத்தினுள் போட்டான். வாயிலிருந்த பைப்பை எடுக்காமல் ஒருமுறை புகையை இழுத்து வெளியிட்டான். அறையெங்கும் மெல்லியதாக ஏலக்காயின் மணம் கமழ ஆரம்பித்தது.
“ஸோ அந்த டாக் வாட்டர் பாட்டிலோடு விளையாடுது அப்படிதானே” பேச்சை அவன் ஆரம்பித்தான். அவன் குரலிலிருந்த அழுத்தம் என்னைச் சற்றுத் திக்குமுக்காட வைத்தது. அதனால் தனிந்தக் குரலில், “அப்படித்தான் தோணுது” என்றேன். பதிலெதுவும் பேசாமல் ஒருமுறை பைப்பை வாயில் வைத்து புகையை இழுத்து ஊதினான். “அது அந்த பாட்டில்ல இருக்கிற தண்ணியைக் குடிக்கப் போராடுது” என்றான். மீண்டும் அந்த நாயைப் பார்த்தேன். சற்றுமுன் அது கடித்து விளையாடியதால் தன்னுருவை மொத்தமாக இழந்து கசங்கிப் போயிருந்த அந்த பிளாஸ்டிக் போத்தல் ஒருபக்கம் கிடக்க, அந்த நாயோ அந்தப் போத்தலைப் பார்த்தபடிக்கு தரையோடு தலைவைத்துப் படுத்திருந்தது.
“ஒருவேளை நீ சொல்வதைப் போல அது அந்தப் போத்தலோடு விளையாடக் கூட செய்திருக்கலாம். ஆனால் அது உனக்காகவும் எனக்காகவுமா அந்தப் போத்தலோடு உறவாடுகிறது” லீன் பாலிடமிருந்து நிதானமாக வார்த்தைகள் வெளிவந்தது. இல்லையென்பதாய் தலையாட்டினேன். “உனக்கும் எனக்குமான அறிமுகம் எப்படி நிகழ்ந்தது என்பது உனக்கு நினைவிருக்கிறதா..?” எனக் கேட்டான். ஆமாம் என்று அவனிடம் சொல்லும்பொழுதே என்னுடைய நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது.
அந்நியன் படம் வெளிவந்த நேரம். ஊருக்குள் ஒவ்வொருவரும் ‘சியான்’ விக்ரமைப் போல தலைமுடியை வளர்க்க ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் நானோ அதற்கும் முன்னமே போனி டெயில் போட்டுக் கொள்ளும் ஆசையில் மயிரை வளர்க்க ஆரம்பித்திருந்தேன். அந்நியன் திரைப்படம் வெளிவரும் வரையிலும், நான் தலைமுடி வளர்ப்பதை பலவாறாகத் தூற்றிக் கொண்டிருந்தக் கூட்டம் அந்தப் படம் வெளியானதும், “என்ன அந்நியன் ஹேர்ஸ்டைலா” என்றுக் கேட்க ஆரம்பித்திருந்தது. எனக்கே எனக்காக நான் வளர்க்கும் முடிக்கு இன்னொருவனின் சாயல் பூசப்படுகிறது என்றதும் தோள் வரையிலும் வளர்த்திருந்த முடியை ‘ஸ்பைக்’ ஸ்டைலுக்கு மாற்றிவிட்டு, அலுவலகத்தினுள் நுழைந்த அன்றைய தினம் தான் பாலை முதன்முதலாகச் சந்தித்தேன். நான் ஸ்பைக்கோடு அமர்ந்திருக்க அவனோ ‘மோஹெக்’கோடு வந்திருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அறிமுகம் இல்லையென்றாலும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். அன்றைய ஒற்றை நொடி சந்திப்பிலேயே ஏனோ அவனது முகம் என்னுடைய மனத்தினுள் வெகுவாகப் பதிந்து விட்டிருந்தது. அடுத்து சில மாதங்கள் அவனை நானும், என்னை அவனும் சந்தித்துக் கொள்வதற்கான சூழல் அமையவில்லை. அதே நேரம் ஊருக்குள் அந்நியனின் மோகமும் குறைந்திருக்க, நான் மீண்டும் தலைமுடியை வளர்க்க ஆரம்பித்திருந்தேன். ஸ்பைக் வைத்துக் கொள்வதற்கு முன்பு நான் வளர்த்திருந்த வரையிலும் என் தலைமுடி வளர்ந்திருக்கவில்லை என்றாலும் கூட ஓரளவிற்கு முன்பக்க முடி மேலுதட்டைத் தொடும் வரையிலும், பின்பக்க முடி கழுத்தை மறைக்கும் அளவிற்கு வளர்ந்திருந்தது. இப்பொழுது மீண்டும் பால் என் அலுவலகம் வந்தான். அவனும் தலையில் மயிரை வளர்த்திருந்தான். என்னைவிடவும் சற்று கூடுதலாக. இம்முறை அவன் செவ்வகவடிவ ஃப்ரேம்லெஸ் கண் கண்ணாடி அணிந்திருந்தான். அவனுடைய முகத்திற்கு அது பாந்தமாய் பொருந்தியிருந்ததை ஒரு கோணத்தில் பார்க்கையில் அந்நியன் திரைப்படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடலின் இரண்டாவது சரணத்தில் மலேசியாவின் ‘பெட்ரொனஸ்’ டவரின் உள்ளே சியான் விக்ரம் வெள்ளை நிற உடையில் கண் கண்ணாடியோடு வரும் தோற்றத்தை அவனுக்கு அளித்திருந்தது. மீண்டும் அவனிடமிருந்து ஒரு சிநேகப் புன்னகை, பதிலுக்கு என்னிடமிருந்தும் அவனுக்கு ஒரு சிநேகப்புன்னகை. ஆனால் இருவரும் ஒரு வார்த்தைக் கூடப் பேசிக் கொள்ளவில்லை. நாட்கள் மீண்டும் நகர்கிறது. எனக்குத் தலைமுடி கொட்டத் துவங்கியது. தலைமுடி உதிர்வைத் தடுக்க வேண்டி பழைய கால முறையான நீளமாக முடி வளர்ப்பதை நிறுத்திவிட்டு, குட்டையாக வெட்டிக் கொண்டேன். முடி உதிர்வு என்பதையும் தாண்டி நான் முடியை வெட்டிக் கொண்டதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அந்தக் காரணத்திற்கு ஒரு பெயரும் இருந்தது. அது சத்யா. நான் என் தலைமுடியை நீளமாக வளர்த்திருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வதை விடவும், இந்தச் சமூகத்துக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளுக்கும் பிடிக்கவில்லை என்று சொல்வது சரியாக இருக்கும். தலைமுடியை நீளமாக வளர்ப்பது ரௌடியாகிவிடுவதற்கான அங்கீகாரமென யார் சொல்லிச் சென்றது – யார் எழுதிச் சென்றது என்றுத் தெரியவில்லை – நீளமான தலைமயிரைக் கொண்டவன் – சந்தேகத்திற்குரியவனாகவேப் பார்க்கப் படுகிறான். என் தலையிலிருந்த மயிருக்காகவே நான் பலமுறை போலீசாரின் சந்தேகப் பார்வைக்கு உள்ளாகியிருக்கிறேன். ஒருவேளை நம்முடைய தமிழ் சினிமாவின் அடையாளப்படுத்துதலாகக் கூட இருந்திருக்கலாம். முன்னொரு காலத்தில், கழுத்தில் கைக்குட்டையைச் சுற்றிக் கட்டியிருப்பவன் – கன்னத்தில் மருவோடு முறுக்கு மீசை வைத்திருப்பவன் – முறுக்கு மீசை வைத்து கோடு போட்ட டீ-ஷர்ட்டை அணிந்திருப்பவன் – தலையில் கொசகொசவென சுருட்டை முடியோடு இருப்பவன் – கைக்குட்டையை மணிக்கட்டில் சுற்றிக் கட்டியிருப்பவன் என்பது ஜெப்படி திருடன் – ரௌடி – பிள்ளைப்பிடிப்பவன் – கண்ணை நோண்டுபவன் – கைக்கால்களை உடைத்து முடமாக்குபவன் – கொள்ளைக்காரன் என சித்தரிப்பதற்கான ஒரு குறியீடாக வைத்திருந்தார்கள். அதற்கு அடுத்தப்படியாக இப்பொழுது – இப்பொழுது என்றால் ஒன்றிரண்டு தசாப்த்தங்களுக்கு முன்பு நீண்ட தலைமுடி வைத்திருப்பவர்கள் கொலை- கொள்ளை – ஆள்கடத்தல் – மனித உறுப்புகளைத் திருடுதல் என்று கொடுஞ்செயல் புரியும் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டார்கள். 2002ம் ஆண்டு என்று நினைக்கிறென், ஜீவன் என்கிற ஒரு நடிகன் மிக நீண்ட தலைமுடியோடு ‘யூனிவர்சிட்டி’ என்கிற படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருந்தான். அந்தப் படம் பெரிதாக வியாபாரமாகவில்லை. ஆனால் அதற்கு அடுத்த படமான ‘காக்க காக்க’ படத்தில் அதே நீண்ட தலைமுடியோடு மிகக் கொடூரமான வில்லனாக வந்தான். படமும் சூப்பர் டூப்பர் ஹிட். அவன் ஏற்று நடித்த ‘பாண்டியா’ என்கிற கதாபாத்திரமும் சூப்பர் டூப்பர் ஹிட். தலைமுடி வளர்த்திருந்தால் தொடர்ச்சியாக வில்லன் பாத்திரங்களே கிடைக்கும் என்று சொல்லி தலைமுடியைக் கத்தரித்துவிட்டான். அவனது நீண்ட தலைமுடியோடு அவனைக் கொடூர வில்லனாக ஏற்றுக்கொண்ட ரசிக மனமானது, கத்தரித்த தலைமுடியோடு நாயகனாக அவன் வலம் வந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அவன் மீண்டும் தன் தலைமுடியை வளர்த்து கொஞ்சம் எதிர்மறைக் கலந்த நாயக பாவமேற்ற ‘நான் அவனில்லை’ படத்தை ரசிக மனம் ஏற்றுக் கொண்டது. இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் யோசித்துப் பார்க்கிறேன். அந்நியன் படத்தில் வரும் நாயகனுக்கும் நீண்ட தலைமயிர் தான் கொடுக்கப்பட்டிருந்தது. அம்பி – ரெமோ – அந்நியன் என்கிற மூன்றுப் பாத்திரத்தை அந்த நாயகன் ஏற்று நடித்திருந்தாலும் கூட, தலைமயிரை விரித்துப் போட்டுக் கொண்டு, கும்பிபாகம், அந்தகூபம், கிருமிபோஜனம் என்று விதவிதமாகவும் கொடூரமாகவும் கொலைச் செய்யும் பாத்திரமான அந்நியன் பாத்திரமே அந்தப் படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டது. தலைமயிர் வளர்த்திருப்பவன் தறுதலையாகவும் குற்றச்செயல் புரிபவனாகவும் இருக்கவேண்டும் என்பது இந்தச் சமூகத்தில் எழுதப்படாத விதியாகிவிட்டது. என்ன செய்வது ஒரு சாமானியனின் மனமானது சித்தரிக்கப்பட்ட சினிமா காட்சிகளில் ஒட்டிக் கொள்ள முடிந்ததைப் போல எதார்த்தத்தில் ஒட்டிக்கொள்ள முடிவதில்லை. முடி உதிர்தல் என்கிற காரணத்திற்காக நான் என் தலைமுடியை வெட்டிக் கொண்டாலும், அதன் உபகாரணமாக சத்யாவின் ஆசையும் அவளது தேவையும் ஒட்டிக் கொண்டது. அவளைப் பொறுத்தவரையிலும் எவர் சொல்லியும் கேட்காத நான் – அவளுக்காக முடியிழக்கத் துணிந்துவிட்டேன் என்பதில் சந்தோஷம் கொண்டது. அதே நேரம் பால் என்ன காரணத்திற்காக அவனது தலைமயிரை வெட்டிக் கொண்டானெனத் தெரியவில்லை. அவனை மூன்றாவது முறை நான் சந்திக்கையில், எங்கள் இருவரின் தலையிலும் மயிர் குறைவாக இருந்தது. இம்முறை அவன் என்னைப் பார்த்து கண்கள் அகலப் புன்னகைத்துக் கொண்டான். நானும் அதே ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியோடும் புன்னகைத்துக் கொண்டேன். ஆனபோதும் இருவரும் ஒரு வார்த்தைக் கூடப் பேசிக் கொள்ளவில்லை. அவன் எந்த வேலைக்காக என் அலுவலகத்திற்கு வந்தானோ அந்த வேலையைப் பார்த்துவிட்டு வெளியேறினான். நான் என்னுடைய வேலையைத் தொடர ஆரம்பித்தேன். பிரிதொரு நாளில் என் அலுவலகத்தின் அருகிலிருந்த உணவகம் ஒன்றிற்கு நான் மதிய உணவு உண்ணச் செல்கையில் எனக்கும் முன்னமே அவன் அங்கு வந்து உண்ணத் துவங்கியிருந்ததைப் பார்த்தேன். நானும் அவனும் ஒரு சேர பார்த்தோம். இருவருக்கும் இடையில் வார்த்தைகளால் அறிமுகம் நிகழ்ந்ததில்லை என்றாலும், அவன் எவ்வித பாசாங்குமின்றி நான் அமர்ந்துக் கொள்ள அவன் எதிரிலிருந்த இருக்கையை எனக்குக் கைக்காட்டினான். போலவே நானும் எவ்வித பாசாங்குமின்றி அவனுக்கு எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டேன். என் பெயர் பால் என்றுச் சொல்லிவிட்டு, பற்கள் வெளித்தெரியாமல் புன்னகைத்தபடியே, வெறும் பால் அல்ல லீன் பால் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். நானும் அதே உதடுபிரியா புன்னகையோடு லீன் பால் என்று ஒருமுறைச் சொல்லிக் கொண்டேன். என் புன்னகையைப் பார்த்து என்ன என்றுக் கேட்டான். எனக்கு சார்த்தரின் பெயர் நினைவுக்கு வந்தது என்றேன். இம்முறை அவன் பற்கள் தெரிய சிரித்தான். பின் அவனே, “அவர் பெயர் லீன் பால் சார்த்தர் இல்லை ழீன் பால் சார்த்தர்” என்றுச் சொல்லி என்னைத் திருத்திவிட்டு, நான் “ழீன் பால் இல்லை லீன் பால்” என்றான். சரி என்றேன். மீண்டும் அவனே, லீன் என்பது என்னுடைய பெயர் இல்லை என்றான். மீண்டும் குழப்பத்தோடு அவனைப் பார்த்தேன். அது என்னுடையப் பட்டப்பெயர் என்றான். பின் அவனே லீன் என்கிற ஆங்கில வார்த்தையின் தமிழ் அர்த்தம் என்னவெனக் கேட்டான். ஒல்லி – மெலிந்த என்றேன். என் தேகத்தை வைத்து எனக்கு மற்றவர்கள் வைத்தப் பெயர் தான் லீன் என்றான். ஓ என்று சொல்லிக் கொள்வதைத் தவிர்த்து எனக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. இருவரும் அமைதியாக இருவாய் சாப்பிட்டுக் கொண்டோம். என் தேகத்தை வைத்து என்னை முடக்க நினைத்தார்கள் இடியட்ஸ் என்றவன், அந்தப் பட்டத்தையே நான் எனக்கான படியாக மாற்றிக் கொண்டேன் என்று அவன் சொன்னபோது அவனது முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டதை என்னால் பார்க்கமுடிந்தது. ஒருவகையில் நானும் அப்படியானவன் தான். உடல் ரீதியாக எத்தனையோ விதமான கேலி பேச்சுக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறேன் என்று அவனிடம் சொல்ல நினைத்தேன். ஆனால் அவனோ என் மனதைப் படித்தவன் போல, நீயும் ஒருவகையில என்னை மாதிரியே ரொம்ப பாதிக்கப்பட்டிருப்ப போல தெரியுதே என்று என்னிடம் ஒருமையில் பேசியது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. இருவருமே இப்பொழுது நட்போடு சிரித்துக் கொண்டோம். உண்டு முடித்துவிட்டு ரெஸ்ட்டாரண்ட்டிலிருந்து வெளியே வருகையில், அவன் என்னிடம், “டு யூ ஃபாக்” என்று வில்ஸ் பாக்கெட்டை நீட்டினான். அவன் நீட்டிய வில்ஸ் பாக்கெட்டைப் பார்க்காமல் இயல்பாக, அஃப் கோர்ஸ் என்றவன், அவன் கையில் வில்ஸ் பாக்கெட் இருப்பதைப் பார்த்ததும், “யூ ட்டூ” என்று ஆச்சரியமாகக் கேட்டேன். ஆனால் அவனோ வெகு இயல்பாக, “ஐ திங்க் வீ ஆர் ஆன் சேம் போட்” என்றுச் சிரித்துக் கொண்டான்.
“என்ன பலமான யோசனை” என்ற லீன் பாலின் கரகரப்பான குரலால் என் நினைவுகள் கலைத்தது. “ஒன்னுமில்லை. நம்முடைய நட்பைப் பற்றிய சிந்தனை” என்று பொதுவான பதிலைக் கூறினேன். அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் சோர்வாகச் சாய்ந்துக் கொண்டான்.
“உன்னோட சத்யா வீட்டுக்கு நீயும் நானும் போனதைப் பத்தியா யோசிச்சிட்டு இருந்த” என்றுக் கேட்ட அவனது குரலில் சற்றுமுன்னிருந்த கரகரப்பு தொலைந்து மென்மைக் கூடியிருந்தது. அவனுக்கு பதிலாக நானும் எதுவும் பேசாமல், மேஜையின் டிராயரைத் திறந்து, வில்ஸ் ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் இடையில் கனத்த மௌனமொன்று ஆலங்கட்டியாய் ஆக்கிரமித்தது. எங்கள் இருவரின் வாயிலிருந்தும் வெளியேறிய புகையால் காலமானது ஆலங்கட்டியிலிருந்து கரைந்தோடும் நீராய் ஒழுகியோடி ஆலங்கட்டியின் கனத்தைக் குறைத்தது.
“அன்று நிகழ்ந்தது ஒரே ஒரு விஷயம் தான். ஆனால் அதை அவரவர்க்குத் தகுந்தாற் போல அவரவர்கள் மாற்றிக் கொண்டது தான் மனித எதார்த்தம்” கனம் குறைந்திருந்த ஆலங்கட்டியைத் தன் நாவால் லீன் பால் தகர்த்தெறிந்தான்.
“உண்மை தான். உன்னை நான் அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றது, நீ வாழ்வதற்கும் நீ புழங்குவதற்கும் ஏற்ற வீடாக அது இருக்குமா என்று காண்பிக்க”
“உங்கள் இருவருக்குமிடையிலான உறவைப் பற்றியும் உங்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்திவைப்பதைப் பற்றிப் பேசவும் நீ என்னை அழைத்து வந்திருப்பதாக அவள் நினைத்துக் கொண்டாள்”
“விற்பனைக்கு என்று வைத்திருக்கும் அவள் வீட்டை உனக்குக் காண்பிக்கும் காரணத்தை வைத்து அவளைப் பார்க்கலாமென்று நான் நினைத்திருந்தேன்”
“தங்களை மிரட்டுவதற்காக என்னை அழைத்து வந்திருப்பதாக அவளைப் பெற்றவர்கள் நினைத்துக் கொண்டார்கள்”
“அவள் பெயருக்கு கலங்கம் விளைவிக்கவும், என் பெயருக்கு இன்னும் கூடுதலாய் கலங்கத்தைச் சேர்க்கவும் எங்களைச் சுற்றியிருந்த பலருக்கும் அது தோதாக அமைந்துவிட்டது”
நான் விரக்தியாய் புன்னகைத்துக் கொண்டேன். ‘லீன்’ பால் எவ்வித உணர்வுகளுமின்றிப் புன்னகைத்துக் கொண்டான்.
“எனக்கு கலிங்கத்துப்பரணியின் பாட்டொன்று நினைவுக்கு வருகிறது” என்றான்.
“பேய்ப் புறப்பாடா” என்றுக் கேட்டேன்
கண்கள் மூடி பைப்பை ஒருமுறை இழுத்துக் கொண்டவன், தணிந்தக் குரலில்,
விலக்குக விலக்குக விளைத்தன வெனக்களி விளைத்தன விளைத்தன விலா
முதல் வரியை அவன் சொல்ல துவங்க,
அலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன வயர்த்தன பசித்த பசியே
என்று நான் சொல்லி முடித்தேன்.
அவன் சத்தமாகச் சிரித்துக் கொண்டான். நானும் அவன் சிரிப்போடு இணைத்துக் கொண்டேன். அந்தச் சிரிப்பினூடே, “ஜீ.என் சொன்ன மாதிரி மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பய தான் இல்லியா” என்றுக் கேட்டான்.
“எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக் கால்கள். மனித மனத்துக்கு எத்தனை சிந்தனைகளோ அத்தனைக் கால்கள்” என்று அவன் அழைத்து வந்த ஜீ.என்னுக்குப் போட்டியாக நான் நகுலனை அழைத்து வந்தேன்.
“ஆயிரம் கால்கள் இருந்தாலும் அட்டைகள் அட்டைகள் தான் பூரான்கள் பூரான்கள் தான். அதைப் போலத் தான் இந்த மனிதனின் சிந்தனைகளும். அவனுடைய சல்லித்தனத்தை நியாயப்படுத்த அவன் எத்தனைச் சிந்தனைகளையும் அதாவது எத்தனைக் கால்களையும் தன்னுடம்போடு மாட்டிக் கொள்வான்” சொன்னவன் மீண்டும் அமைதியாக அவனுடைய நாற்காலியில் சாய்ந்தமர்ந்துக் கொண்டு, பைப் புகையை நிதானமாக ஊதினான். என் கையிலிருந்த வில்ஸில் கோர்த்திருந்தச் சாம்பல் துகள்களை, சாம்பல் கிண்ணத்தில் தட்டிக் கொண்டேன்.
“சில நாட்கள் முன்பாக என்னுடைய டேனுக்கு மிகவும் உடம்பு முடியாமல் போய்விட்டது என்பது உனக்குத் தெரியும் தானே” எனக் கேட்டான்.
“உயிர் பிழைப்பதற்கு பாதிக்குப் பாதி வாய்ப்பு கூட இல்லையென்பதாக அப்பொழுது நீ சொன்னதாகக் கூட ஒரு ஞாபகம்”
ம்ம்ம் என்று முனகிக் கொண்டவன், “அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கே எனக்கும் முன்னமே சிலர் அவர்களுடைய பப்பிக்களோடு வந்திருந்தார்கள். யூ நோ சம்திங், இந்த பப்பிங்க விஷயத்தில் ஒவ்வொரு பப்பியும் ஒவ்வொரு ரகமாக இருக்கக்கூடும், ஆனால் மருத்துவமனை என்று வந்துவிட்டால் அனைத்துப் பப்பிக்களும் ஒரே ரகமாக மாறிவிடுகின்ற ஆச்சரியங்கள் நிகழும். யெஸ். எத்தனைக் கோபக்காரப் பப்பியாக இருந்தாலும், அவைகளின் வீரமெல்லாம் மருத்துவமனையின் வாசல் வரை மட்டும் தான் நீடிக்கும். வாசல் கடந்து உள்ளே வந்துவிட்டால், அவைகளின் கோரைப்பல் வீரத்தையெல்லாம் வாலுக்கு அனுப்பி, அந்த வாலைத் தன் பின்னங்கால்களுக்கு இடையில் சுருட்டி வைத்துக் கொண்டு தன் எஜமானனின் கால்களுக்கு நடுவிலோ அல்லது பின்னோ மறைந்து நின்றுக் கொள்ளும். இந்த விதிக்கு என்னுடைய டேனும் விதிவிலக்கில்லை. ஆனால் அன்று என்னுடைய டேன் அப்படியில்லை. நானும் அந்த மருத்துவமனையிலிருந்த மேல் நர்ஸ் முருகனும் சேர்ந்து – அதைத் தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைக்குமளவிற்கு – எழுந்து நிற்கக் கூடத் தெம்பின்றி – அதன் உடல் துவண்டுப் போய்விட்டிருந்தது. அதன் கண்கள் இரண்டும் மேல் சொருகிப் போயிருந்ததைப் பார்க்கையில், இதன் ஆயுள் இன்னும் சில நாட்களோ அல்லது சில மணித்துளிகளோ என்பதைப் போலவே இருந்தது. நான் திரும்பி முருகனைப் பார்த்தேன். அவன் உடனடியாக தெர்மாமீட்டரை எடுத்து வந்து, அதன் குதத்தில் வைத்துப் பார்த்தான். “104 டிகிரி காய்ச்சல் காயுது” என்று புன்னகை மாறாத முகத்தோடு சொன்னாலும், அவன் குரல் அவஸ்த்தையாய் அவனிடமிருந்து வெளிவந்தது. வாய் பேச முடிந்த – தனக்கு என்ன தேவை – என்ன செய்கிறது என்றுச் சொல்லமுடிந்த நம் உடல் 103 டிகிரி விடாய் கொண்டாலே உளர ஆரம்பித்துவிடுவோம் எனும்போது நாமறிந்த மொழியில் தன் தேவைகளைச் சொல்ல அறியாத அந்தப் பாவப்பட்ட ஜீவன் 104 டிகிரி வெம்மையில் எப்படி தகித்திருக்கும்..! டேனைத் தடவிக் கொடுத்தபடிக்கே முருகனிடம் என்ன பண்ணலாம் எனக் கேட்டேன். பப்பிக்கு வயதென்ன என்றுக் கேட்டான். பத்தரை ஒருவேளை பதினொன்றாகக் கூட இருக்கலாம் என்றேன். இருங்க டாக்டரிடம் என்னப் பண்ணலாம் என்று கேட்டுவிட்டு வருகிறேன் என்று போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். நகரக் கூட முடியாமல் படுத்துக் கிடக்கும் என்னுடையே டேனைப் பார்க்க சங்கடமாக இருந்ததால் அந்த ஐசியு அறையிலிருந்து வெளியே வந்தேன். உடலை அசைக்க முடியவில்லையென்றாலும் கூட அது தன்னுடைய வாலை ஒருமுறை ஆட்டமுயன்றதில், அதன் வால் படுக்கையில் டொப்பென்று விழும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அது என்னையே பார்த்தபடி படுத்திருந்தது. அதன் கண்களில் ஒரு மென்சோகம் இருப்பதாய் தெரிந்தது. ஒருவேளை அதன் உடல் அயற்சியை வெளிப்படுத்தும் பார்வையாகக் கூட அது இருந்திருக்கலாம். ஆனால் நமக்குத் தான் நகுலன் சொல்வதைப் போன்று, ஆயிரம் கால்களாயிற்றே..! அருகில் சென்று அதன் தலையை வருடி, “நான் எங்கேயும் போகல. டாக்டரை பார்த்துட்டு வந்துடுறேன்” என்றுச் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். நான் அந்த ஐசியுவிலிருந்து வெளியே வந்த அந்த நேரத்தில் பனங்காயைப் போல வீங்கிப் போயிருந்த முகத்தோடு இரண்டு ராட்வீலர்களை ஒருவர் – உண்மையில் இருவர் – ஆனால் அதில் ஒருவர் தான் அந்த ராட்வீலர்களின் எஜமானன் – அதனால் தான் ஒருவர். அழைத்து வந்திருந்தார். அவைகளின் முகங்களைப் பார்க்கவே பாவமாகவும் பயங்கரமாகவும் இருந்தது. ராட்வைலரின் கண்களுக்கு மேலே இருக்கும் இரண்டு மஞ்சள் நிறப் புள்ளிகள் அவற்றிற்கு நான்கு கண்கள் இருப்பதைப் போன்றதொரு தோற்ற மாயை கொடுத்து அதன் முகத்தை இன்னும் வசீகரமாக்கும். ஆனால் இவைகளுக்கோ அந்த இருப்புள்ளிகளும் பயங்கரத்தைக் கொடுத்தது. அந்தப் பயங்கரத்தைக் காணச் சகிக்காமல் மீண்டும் என் டேனை நான் படுக்க வைத்திருந்த ஐசியுவினுள்ளே வந்துவிட்டேன். சற்று நேரத்தில் முருகன் வந்தான் அவனோடு ட்யூட்டி டாக்டரான ரேஷ்மாவும் வந்தாள். ரேஷ்மா மிகவும் குட்டியாக இருப்பாள். அவள் குட்டியாக இருப்பதாலேயே சுட்டிகையாகவும் தெரிவாள். அதுவும் போக அவள் மலையாள தேசத்து பெண் வேறு. மலையாளம் கலந்த தமிழ் மொழியில் அவள் பேசுவது கொஞ்சுவதைப் போலவே இருக்கும். ரேஷ்மா உள்ளே வந்ததுமே, டேனின் இரண்டுக் கண்களின் கருவிழியையும் விரலால் தூக்கிப் பார்த்தாள். டேனின் கண்களில் ஒரு வெறுமைப் படர்ந்திருந்ததை என்னால் உணரமுடிந்தது. உடனடியாக ரேஷ்மாவின் முகத்தைப் பார்த்தேன். அவளது சுட்டிகையான முகமானது ஒரு நொடி வாடி, பின் சட்டென இயல்புக்கு வந்ததையும் பார்த்தேன். மனிதனுக்கு ஆயிரம் கால்கள். அத்தனைக் கால்களையும் நொடியில் வெட்டியெறிந்துவிட்டு, ஒரு புழுவாய் நெளிந்தேன். என் உயரத்திற்கு அவள் என்னை அன்னாந்துப் பார்க்க வேண்டியிருந்தது. “கிட்னியில க்ரியாட்டின் செக் செய்யனும்” என்று மலையாளம் கலந்த தமிழில் கிள்ளை மொழி பேசினாள். என் சம்மதத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. முருகன் ஒருபுறம் ஐவி கொடுப்பதற்கான வேலையில் இறங்க, ரேஷ்மா ஊசி எடுத்துவந்து, சோதனைமாதிரிக்கு ரத்தம் எடுத்துக் கொண்டாள். நான்கு கால்களில் நின்றால் என் இடுப்பளவு இருக்கும் ஒரு உருவம் – இரண்டுக் கால்களில் நின்றால் என் உயரத்திற்கு நிற்கும் உருவம் – என் கண்முன்னே உருக்குலைந்து – நிற்கக்கூடத் திராணியற்று படுத்துக் கிடக்கிறது. ஐவியில் ஆண்டிபயாட்டிக் மருந்தை முருகன் கலந்தான். “ஒந்நுல்ல எல்லாம் சரியாகும்” என்று விலா எலும்புகள் தெரிய –நான் இன்னும் மரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக, மூச்சுக்காற்று மெலிதாக வெளியேறுவதை உணர்த்துவதைப் போல மேலும் கீழுமாக மென்மையாகச் சலித்துக் கொண்டிருந்த டேனின் விலாப்பகுதியைத் தடவிக் கொடுத்துச் சொன்னாள். குட்டியாக இருக்கும் பெண்கள் என்ன செய்தாலும் – அது உளமாறச் செய்யும் போது அதில் ஒரு வசீகரம் வந்துச் சேர்ந்துக் கொள்கிறது. அது ஒரு குழந்தையின் வசீகரம். ரேஷ்மா மழலைப் பேசி டேனைத் தடவிக் கொடுத்த அந்த நொடி எனக்கு அவள் தலையைத் தொட்டு வருடிவிட வேண்டும் போலிருந்தது. ரேஷ்மா வெளியேற, நான் டேனின் தலையை தடவிக் கொடுத்தேன். முதல் ஐவி முடிந்தது. முருகனை அழைத்தேன். வேகமாக ஐசியு உள்ளே வந்தான் – நிதானமாக ஐவியை மாட்டினான் – வேகமாக வெளியேறினான். அவனது அந்தப் பரப்பரப்பான நடவடிக்கையானது, எனக்கு ஏதோவொரு அசௌகரியத்தைக் கொடுத்தது. டேனின் முகத்தைப் பார்த்தேன். அது இன்னமும் சோர்வாகவே படுத்திருந்தது. சற்று நேரத்தில் டாக்டர் வந்தார். அவரது முகத்தில் ஆத்திரம் – இயலாமை – கோபம் என்று ஏதோவொரு சிதறடிக்கும் எதிர்மறை உணர்வு. என்னைப் பார்த்ததும் சிநேகமாய் புன்னகைத்தார். அதில் வழக்கமான சிநேக உணர்வு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இயந்திரகதியாய் ஐவியின் அளவைப் பார்த்தார், டேனின் உடலை ஒரு முறைத் தடவி விட்டுக் கொண்டார், ரேஷ்மா பார்த்ததைப் போல இமை உயர்த்தி விழிப்படலத்தைப் பார்த்துக் கொண்டார். என்னாச்சு டாக்டர் டல்லா இருக்கிறீங்க என்றுக் கேட்டேன். எனக்கு மட்டுமே கேட்கும் விதத்தில் மெல்லிய குரலில், “ரெண்டு ராட்வைலர்ல ஒண்ணு இறந்திடிச்சு” என்றார். சட்டென அப்பொழுது தான் சற்றுமுன் நான் பார்த்த அந்த ரெண்டு ராட்வைலர்களின் நினைப்பு என்னுள் வந்தது. தயக்கத்தோடு, கொஞ்சம் முன்ன முகம் வீங்கி என்று இழுத்தேன். ஆமாம் என்றார் எவ்வித சுரத்துமில்லாமல். அவரது மனதிலிருப்பதை எவரிடமாவது கொட்டிவிட வேண்டும் என்கிற தேவையோடு அவர் இருப்பதை அவரது கண்கள் எனக்குக் காட்டிக் கொடுத்ததால், மெதுவாக என்னாச்சு டாக்டர் என்றுக் கேட்டேன். டேனின் முகத்திற்கு அருகிலிருந்து விலகி அதன் வால் பக்கம் வந்தார். பின் டேனின் முகத்தை எச்சரிக்கையோடு பார்த்தபடி, அதாவது குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகள் அறியக்கூடாத விஷயத்தைப் பேசும்பொழுது என்னமாதிரியான எச்சரிக்கை உணர்வு முகத்தில் வருமோ அப்படியான முகத்தோடு ஸ்நேக் பைட்ங்க என்றார். பின் அவரே, “கட்டுவிரியன்” என்றும் சொன்னார். “விரியனா..!” என்று அதிர்ச்சியோடு கேட்டுவிட்டு, “விரியன் சரியான சைக்கோவாச்சே டாக்டர்” என்றேன். அவர் என்னைக் கேள்விக்குறியோடு பார்க்க, “நல்லப்பாம்பு, கருநாகம் மாதிரியான விஷப்பாம்புங்களை நாம தொந்திரவு பண்ணினாலும், பெரும்பாலும் அதுங்க ட்ரைபைட் தான் பண்ணும். ஆளைக் கொல்லனும்னு எல்லாம் அதுங்க விஷத்தை வீணடிக்கிறதில்ல. ஆனா இந்த விரியனுங்க மட்டும், நீங்க தொந்திரவு பண்ண வேண்டாம். அது பக்கத்தோட போனாலே நம்ம காலை கடிச்சு விஷத்தை இறக்கிடும். அதனால தான் அதை சைக்கோன்னு சொன்னேன்” என்றேன். “வாட்டெவர் இட்டிஸ், வீட்டுக்குள்ள சாரி காம்பவுண்டுக்குள்ள பாம்பு வந்துட்டுன்னா, வளர்க்கிற நாயை அதுகூட சண்டைப் போடவிட்டா வேடிக்கைப் பார்ப்பாங்க” அவர் முகத்திலிருந்த ஆத்திரத்தின் காரணம் அப்பொழுது தான் எனக்குப் புரிபட ஆரம்பித்தது. அதனால் அவரை மேலும் பேசவைக்கும் பொருட்டு, “என்ன சொல்றீங்க டாக்டர்” எனக் கேட்டேன். “ஆமாங்க. பாம்பு ஆபத்தானது தான். அதுங்க கிட்டயிருந்து நாம விலகி இருக்கிறது தான் நமக்கும் பாதுகாப்பானது. இல்லைன்னு சொல்லல. அதுக்காக டாக்ஸை அதுங்க கிட்ட சண்டைப் போட விட்டுட்டு, இவங்க வீட்டுக்குள்ள போய் உட்கார்ந்துட்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறாங்க. பாம்புங்க சுதந்திரமா வாழ்ந்துட்டு இருந்த இடத்துல இருந்து அதுங்களை விரட்டிவிட்டுட்டு, அதுங்க வாழ்ந்துட்டு இருந்த அந்த இடத்துல தான் நாம இப்ப வாழ்ந்துட்டு இருக்கிறோம். நாம எதுவுமே பண்ணாம விட்டாலே அதுங்க அதுங்களோட வழியைப் பார்த்துட்டு போயிடும். ரெண்டு ராட்வைலர்ல ஒண்ணு தான் ரொம்ப ஃபெரோஷியஸ். அது தான் அதிகமா கடி வாங்கியிருக்கு. அது தான் இறந்தும் போயிடிச்சு. இன்னொன்னுக்கு கிட்னி கிரியாட்டின் ரொம்ப ஹை லெவல்ல தான் இருக்கு. பிழைக்கிறதுக்குக் கஷ்டம் தான் இருந்தும் முயற்சி பண்ணிட்டு இருக்கிறோம்.” என்றவர், “நேத்து ராத்திரி ஆண்டி-வெனாமஸ் இஞ்செக்ஷன் போட்டுவிட்டாச்சு. காலையில கொஞ்சம் சீக்கிரமா வரச்சொன்னா குளிச்சி மொழுகி நல்லா நீட்டா ட்ரெஸ் பண்ணி பெர்ஃப்யூம் எல்லாம் அடிச்சிட்டு ஏதோ ஷாப்பிங் போகிற மாதிரி வந்திருக்கிறார். சரி நமக்கெதுக்குங்க அந்தப் பஞ்சாயத்து எல்லாம்” என்று சொல்லிவிட்டு, மேஜையில் படுத்திருந்த டேனின் மேல் கைவைத்தபடி, “இவனை நாளைக்கும் ஒருதரம் கூட்டிட்டு வரவேண்டியிருக்கும்” என்றார். அடுத்த நாளும் என்னுடைய டேனை அழைத்துச் சென்ற பொழுது, ஒரு ஆர்வத்தில் முருகனிடம் முந்தைய நாள் உயிர்பிழைத்திருந்த அந்த ஒற்றை ராட்வைலர் பற்றிக் கேட்டேன். அவன் புன்னகைத்தபடியே, கடைவாய் பற்களால் நாக்கின் நுனியைக் கடித்துக் காண்பித்து – தலையை ஒருபுறமாய் சரித்துக் காண்பித்தான். அதாவது ‘தேயார் நோ மோர்’.
அறைக்குள் இப்பொழுது ஏலக்காய் மணத்தினை உண்டுச் செரித்த சுருட்டின் காரநெடியால் நிரம்பியது. லீன் பாலின் முகம் சற்று இருண்டு, பின் தெளிவாகியது. நான் என் இடப்பக்கம் திரும்பிப் பார்த்தேன். கணேஷ் ‘குவேரா’ அமர்ந்திருந்தான். பற்களால் ‘டூமினியன்’ சுருட்டைக் கவ்வியபடி ஏளனமான புன்னகையோடு. அந்த ஏளனப் புன்னகை தான் லீன் பாலின் முகத்தை இறுக்கமடைய வைத்திருக்கும் என்பது புரிந்தது. அவன் இப்படியானவன் தான் என்பதை லீன் பாலும் அறிந்திருப்பதால் அவன் மீண்டும் தன்னுடைய இயல்பு நிலைக்கு வந்திருப்பான் என்பதும் புரிந்துப் போனது. நான் அவனைப் பார்த்து வழக்கமான சிநேகப் புன்னகையை வீசினேன். அவனும் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். நடுவிரல் கிடைமட்டில் நேராக நிற்க, அதன் மேல் ஆட்காட்டி விரலை வில்லாய் வளைத்து, அவன் வாயிலிருந்தச் சுருட்டை அவ்விரு விரல்களால் பற்றி, இரண்டு முறை சுருட்டை வாயிலிருந்து எடுக்காமலேயே இழுத்து, உள்ளிழுத்தப் புகையின் ஒரு பாகத்தை கடைவாய் வழியாக வெளியேற்றிவிட்டு அந்தச் சுருட்டை வாயிலிருந்து அகற்றி சாம்பல் கிண்ணத்தின் மீது வைத்தான். அவன் புகையை உள்ளிழுத்தப் பொழுது நன்கு கனன்று செந்நிற ஒளியை பிரகாசமாய் காண்பித்த சுருட்டானது, சாம்பல் கிண்ணத்தின் மீது ஓய்வுக் கொண்டதும் சாம்பல் துகள்களால் தன் பிரகாசத்தை மறைத்துக் கொண்டது.
“என்ன ரொம்ப சீரியஸான டிஸ்கஷன் போலத் தெரியுது” என்று அவனே பேச்சை ஆரம்பித்தான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா ஒரு கேஷுவல் ‘ட்டாக்’ தான். நீ எப்ப வந்த” என்றுக் கேட்டேன்.
நான் ‘ட்டாக்’ என்று உச்சரித்ததை ‘டாக்’ என்று தனக்குள்ளே ஒருமுறை உச்சரித்துக் கொண்டவன், “ஆமா டாக் பத்தி தான் ட்டாக் பண்ணிட்டு இருக்கிறீங்க” என்று அவனுடைய அழகான மேல்வரிசைப் பற்கள் தெரிய சிரித்தான்.
அவன் சிரிப்போடு நானும், ‘லீன்’ பாலும் புன்னகையால் இணைந்துக் கொண்டோம்.
“நான், பால் சாரி ‘லீன்ன்ன்’ பால் அவனுடையப் பைப்பை ரெடி பண்ணும் போதே வந்துவிட்டேன்” என்றவன், அவன் முன்னிருந்த என் கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு, “நீ ஏன் எழுதனும் யாருக்காக எழுதனும்னு கேட்டுட்டு இருந்த, சரி உங்க பேச்சு சுவாரஸ்யமா போகப் போகுதுன்னு அமைதியா உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தேன். ஆனா ஒருத்தர் மாத்தி ஒருத்தர் நாய் கதையை பேசிட்டு இருக்கவும் தான், கதையோட போக்கு திசை மாறுதுன்னு நான் உள்ளே வந்தேன்” என்றான்.
“கதை சரியான பாதையில தானே போயிட்டு இருக்கு” என்று லீன் பால் என்னைப் பார்த்தான்.
வலப்புற வாயை ஒருக்கழித்து பற்களின் இடைவெளி வழியே காற்றை உள்ளிழுப்பதன் வாயிலாக ‘க்க்ச்ச்” என்று இருமுறை சப்தமெழுப்பி, தலையை இரண்டுமுறை இடவலமாக அசைத்த கணேஷ் ‘குவேரா’, “நான் உள்ளே வர்றதுக்கு முன்ன வரைக்கும் நீ எழுதியிருக்கிறதை நீயே படிச்சுப் பாரு” என்று ஒரு பேப்பர் கத்தையை என் முன்னே தூக்கிப் போட்டான். நான் அந்தப் பேப்பர் கட்டைக் கையில் எடுக்கவும், அந்தக் கட்டின் மேல் தன் கையை வைத்து மீண்டும் மேஜை மேலேயே வைக்கும் படி செய்த ‘லீன்’ பால், “இதைப் படிச்சு தெரிஞ்சுக்க எதுவுமில்லை. குவேரா சொல்றது நிஜம் தான்” என்றான்.
சாம்பல் கிண்ணத்திலிருந்து சுருட்டை எடுத்த குவேரா, அதை முன்பு செய்ததைப் போலவே வாயிலிருந்து அகற்றாமல் இரண்டு முறை இழுத்து, பாதிப் புகையை வெளியேற்றிவிட்டு, இம்முறை சுருட்டை சாம்பல் கிண்ணத்தில் வைக்காமல் கையிலேயே வைத்துக் கொண்டு, என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.
நான் வெளியே பார்த்தேன். சற்றுமுன் அங்கிருந்த நாய் அங்கில்லை. ஆனால் அது விளையாடிய தண்ணீர் போத்தல் மட்டும் கசங்கிப் போய், அது சற்றுமுன் கிடத்த இடத்திலிருந்தும் சற்றுத் தள்ளி கிடந்தது. அதன் பற்கள் பதிந்ததில் தண்ணீர் போத்தலில் பொத்தல் விழுந்து சிறிதளவு தண்ணீர் தரையில் கொட்டியிருப்பதன் ஆதாரமாய், அந்தப் போத்தலைச் சுற்றியிருந்த மண் ஈரமாக இருப்பதும் தெரிந்தது.
“நீ சொன்ன மாதிரி அது அந்தப் போத்தல்ல இருந்த தண்ணீரைக் குடிக்கத் தான் முயற்சி பண்ணியிருக்குது” என்றேன் லீன் பாலிடம்.
“இருக்கலாம்” என்கிற ஒற்றை வார்த்தையே அவனிடமிருந்து எனக்குப் பதிலாகக் கிடைத்தது. ஆனால் எனக்கோ அவனுடைய அந்த ஒற்றை வார்த்தைப் பதில் சற்று ஏமாற்றத்தைக் கொடுத்தது.
“அது நீ சொன்ன மாதிரி விளையாடக் கூடச் செய்திருக்கலாம்” என்றான். அவனது முன்னுக்குப்பின் முரணான பேச்சு என்னை அயற்சிக் கொள்ள வைக்க, என்னுடைய சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டேன்.
“இப்ப ஏன் நீ இவ்வளவு அசூயையாகுற” என்றுக் கேட்ட லீன் பால், “உனக்கு அந்த நாய் போத்தலோட விளையாடியதா அல்லது அந்தப் போத்தலிலிருந்த தண்ணீரைக் குடிக்கப் போராடியதா என்பதைத் தெரிந்துக் கொள்ள விருப்பமா அல்லது உன் எழுத்தைப் படிக்க வாசிக்க யாருமே இல்லையே அப்புறமாகவும் ஏன் எழுதவேண்டும் என்கிற கேள்விக்கான விடையா” எனக்கு வலப்புறம் அமர்ந்திருந்த லீன் பால் தான் கேட்டான்.
நான் என்னுடைய கண்களைத் திறந்து அவனைப் பார்க்காமலேயே, “இரண்டும் தான்” என்றேன்.
“உன்னோட எழுத்துக்கு ஒரு வாசகர் வட்டம் உருவாகி உன்னை ஆஹா ஓஹோன்னு கொண்டாடனும்னு உனக்கு விருப்பம் இருக்கா. அப்படி இருந்ததுன்னா சொல்லு, என்கிட்ட ஒரு அருமையான யோசனை இருக்கு சொல்லித்தரேன்” குரல் என் இடப்புறமிருந்து ஒலித்தது.
நான் பதிலெதுவும் சொல்லாமல், கண்கள் மூடியே அமர்ந்திருந்தேன். சில நொடிகள் மௌனமாய் கடந்தது. இம்முறை அந்த மௌனத்திரையைக் கிழித்தது என் இடப்புற குரல், “என்ன சொல்லு. அந்த ஐடியாவை நான் சொல்லித்தரவா வேணாமா”. கணேஷ் குவேராவின் குரலில் ஒரு எள்ளல் இருந்ததை என்னால் அவன் முகம் பார்க்காமலேயே உணரமுடிந்தது. அதனால், “சொல்லு” என்றேன்.
“ஓரு பழைய எழுத்தாளன் கோணங்கியா நாஞ்சில் நாடனான்னு தெரியல. ஒருவேளை அவனுங்க ரெண்டு பேரும் இல்லாம ஜெமோ சாரு எஸ்ரா நகுலன் இப்படி யாரா வேணும்னாலும் இருக்கலாம். அவன் பேரு எனக்கு சரியா நினைவுல இல்லை. குறிப்பைச் சொல்றப்ப குறிப்பா இவன் தான் சொன்னான்னு சொல்லவேண்டிய அவசியமில்லைன்னு நினைக்கிறேன்” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்த லீன் பால், “சொல்ல வந்ததை சொல்லாம ஏன் இப்ப சரக்கு ரயிலோட பெட்டிங்க மாதிரி வார்த்தைகளை நீட்டிகிட்டே போகிற” என்றுக் கேட்டான்.
“ஓக்கே ஓக்கே. விஷயத்துக்கு வரேன். அந்த எழுத்தாளன் என்ன சொன்னான்னா, ஓரு கோணிப்பை நிறைய தகவல்களை நிரப்பி எடுத்துட்டு வந்து, அந்தத் தகவல்களுக்கு நடுவுல கொஞ்சம் மானே தேனே பொன்மானே போட்டு நிரப்பினா போதும் அது நாவலாகிடிதுன்னு” என்றுச் சொல்லி நிறுத்தியவனை கண்கள் திறந்துப் பார்த்தேன். அவன் முகத்தில் வழக்கமான எள்ளல் புன்னகையே நிறைந்திருந்தது.
“அந்தாளு சொன்னது அந்தக் காலத்து எழுத்தாளனுங்களோட எழுத்தைப் பத்தி. இப்ப நான் உனக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க, நீட்ஷே, ஃப்ராய்ட், ஹைடெய்க்கர், ப்ளாட்டோ, அரிஸ்ட்டாட்டில், ஜராதுஷ்ட்ரா மாதிரியான வெளிநாட்டு எழுத்தாளனுங்க சொல்லி வச்சிருக்கிற லிஸ்ட்ல இருந்து நாலோ அஞ்சோ தத்துவத்தை எடுத்துக்கோ, அப்புறமா நம்மூர்ல இருந்த ஓஷோ ஜேகே மாதிரியான வாழ்க்கைத் தத்துவம் பேசினவனுங்களோட தத்துவத்தைக் கொஞ்சம் எடுத்துக்க, இந்தத் தத்துவம் எல்லாத்தையும் ஒண்ணா கலந்துக் கட்டி உன் பாணியில ஒரு தத்துவத்தை உருவாக்கு, அப்படி உருவாக்க கஷ்டமா இருக்கா, அதே தத்துவத்தை அப்படியே எடுத்துக்கோ. யாருக்குத் தெரிய போகுது. அப்புறமா அந்தத் தத்துவங்களுக்கு நடுவுல இந்த மானே தேனே பொன்மானே போதும்.” சொல்லி முடித்துவிட்டு அவன் சத்தமாகச் சிரிக்க, நான் அவனை முறைத்தேன்.
“என்னை முறைச்சுப் பார்க்கிறதால எந்தப் பயனும் இல்லை தெரிஞ்சுக்கோ. இன்றைய வாசகனுக்கு, இன்னாருடைய கதையில் இந்த மாதிரியான ஒரு வாக்கியம் வருதுன்னு அவன் மேற்கோள் காட்ட ஒரு தத்துவம் வேணும். அந்தத் தத்துவத்தை நீ வாரி வழங்கினா போதும். உன்னோட கதை எல்லோருக்கும் போய் சேர்ந்திடும்” என்று சொல்லி முடித்த கணேஷின் முகம் இறுக்கமடைந்திருந்தது.
“ஒவ்வொரு எழுத்தாளனும் அவனுடைய வாசகனை எந்தளவுக்கு முட்டாளா வைத்திருக்க முடியுமோ அந்தளவுக்கு முட்டாளாக வைத்திருக்கவே பார்க்கிறான்” என்றுச் சொல்லிவிட்டு ஒரு நொடி நிறுத்தியவன், விரல்களால் பற்றியிருந்த சுருட்டை வாயில் வைத்து, மறுமுனை செங்கனலாகும் வரையில் ஆழமாய் இழுத்தான். “பப்ளிக் ஃபோரம்ல சமகால எழுத்தாளன் ஒருத்தன் சொல்றான், என்னை வாசிக்கிறப்ப உங்க மூளையைக் கழற்றி ஃபிரிட்ஜ் உள்ள வச்சிட்டு வந்திடுங்கன்னு. அப்படி அவன் என்ன தான் எழுதியிருக்கிறான்னு வாசிச்சுப் பார்த்தேன். உன் நண்பர் சாரு அடிக்கடி, ‘மலக்குழி’ அப்படீன்னு ஒரு வார்த்தைச் சொல்வார்ல, அப்படி தான் இருந்தது. ஆனா அதை தான் இங்க கொண்டாடி தீர்த்தானுங்க.” சொல்லி முடித்தவன் அவன் கையிலிருந்த சுருட்டை வாயில் வைத்து மீண்டுமொருமுறை ஆழமாக உள்ளிழுத்தான். அவன் அப்படி உள்ளிழுக்கையில் சுருட்டின் முகப்பிலிருந்த நெருப்புக் கங்கானது, செந்நிற விளக்காய் ஒளிர்ந்ததில் அவனுடைய முகமானது, மேடை நாடகப் பாணியில் கோபம் கொண்டவனின் முகத்திற்கு செந்நிற விளக்கை ஒளிர விடும் பாவனையை ஒத்திருந்தது.
“மொழி தெரியாத தேசத்துல திறந்தவெளி சிறையில சிக்கிக்கிட்ட ஒருத்தன், அந்தச் சிறையில இருந்து தப்பிக்க எடுத்துக்கிற முயற்சியில ஒரு இடத்துல சிக்கிக்கிறான். பயத்துல அவனுக்குப் பேதியாகிடுது. அது அந்த எழுத்தாளனுக்கு நகைச்சுவையா தெரியுது. புல்ஷிட். என்னன்னு கேட்டா இது தான் அவல நகைச்சுவைன்னு சொல்றான். ஒரு கீழ்மட்ட தொழிலாளியோட அவதி அவல நகைச்சுவையாம். கேட்கவே தமாசாயில்ல.” கண்கள் அகல அவன் என்னைப் பார்த்துக் கேட்க, “தோ பார் கணேஷ், உன் பெயருக்குப் பின்னால குவேராங்கிற பேரைச் சேர்த்து நீ வச்சுக்கிட்டதால நீயும் எர்னஸ்டோ குவேராவும் ஒண்ணாகிடமுடியாது. என்ன தான் நீ தொண்டைத் தண்ணீர் வற்ற, தொண்டைக் கிழிய கத்தினாலும், வர்க்கப் போராட்டம் ஒருநாளும் முடிவுக்கு வராது. ஜார்ஜ் ஆர்வெல் எழுதின 1984 நாவலை நீயும் வாசிச்சிருப்பன்னு நினைக்கிறேன். ஒடுக்குமுறைக்கு எதிரா கிளர்த்தெழுற ஒவ்வொரு போராளியும் மேலேறி வந்துட்டா அவனும் தனக்கு கீழே இருக்கிற ஒவ்வொருவனையும் ஒடுக்குமுறைக்குத் தான் உள்ளாக்குவான். சரியா.” என்றுச் சொல்லிவிட்டு ஒரு நொடி நிதானித்தவன், “நீ சொல்ற அந்தக் கதையை நானும் வாசிச்சிருக்கேன். அந்த எழுத்தாளனுக்கு என்ன தெரியுமோ அதை எழுதியிருக்கிறான். இன்ஃபாக்ட் அதை மட்டும் தான் அவனால எழுதவும் முடியும். அதுக்கு ஏன் நீ நரம்பு புடைக்க கத்திட்டு இருக்கிற…? இது பொது மேடை இல்லை” என்று லீன் பால் அவனுக்கு நிதானமாகப் பதிலளித்தான்.
யெஸ் என்று தனக்குள்ளேயே முனகிக் கொண்ட கணேஷ் ‘குவேரா’, “ஐயாம் சாரி. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்” என்றான் நிதானமாக. பின் அவனே, “இப்ப அந்தக் கதையைப் பத்தி பேசுறப்ப என்னோட சின்ன வயசுல நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருது. சொல்லவா” என்றுக் கேட்டான். சரி என்பதாய் ஒருசேர நானும் லீன் பாலும் தலையசைக்க, “எனக்கு அப்ப பதின்மூன்று பதினாலு வயசு இருக்கலாம். ஒரு வீட்டோட மாடியில நாங்க வாடகைக்கு இருந்தோம். கீழ்வீட்டுல அந்த வீட்டோட ஓனர் குடும்பம். மாடியில எங்க குடும்பம். அந்த வீட்டு ஓனர், அவர் வீட்டுக்கு முன்ன இருந்த காலி மனையில ஒரு வொர்க்ஷாப் வச்சிருந்தார். டூவீலர் ஃபோர் வீலர் இரண்டுமே இருந்த வொர்க்ஷாப் அது. அங்க இருந்த டூவீலர் வொர்க்ஷாப்ல இருந்த மெக்கானிக் பெயர் மணி. பெரும்பாலான நேரம் ஃபுல் போதையில தான் இருப்பான். அவன் போதையில இருக்கிறப்ப நான் அவன்கூட போய் வொர்க்ஷாப்ல நின்னுப்பேன். அது ஏன் போதையில நிற்கிற நேரம் மட்டும்னா, அந்த நேரத்துல தான் பைக்கோட மெக்கானிசம் எல்லாம் எனக்குக் கத்துத் தருவான். ஒருதரம் அவன்கிட்ட வேலைக்கு வந்த யமஹா பைக்கை, டிஸ்மாண்ட்டில் பண்றதுல இருந்து அசெம்பிள் பண்றது வரைக்கும் எப்படின்னு எல்லாம் எனக்குக் கத்துக் கொடுத்தான். ஆனா அவன் தெளிவா இருக்கிற நேரத்துல, அவன் பக்கம் போனேன்னா அவனுக்குச் சொந்தமான ஸ்பானர், ஸ்க்ரூ ட்ரைவரை கூட என்னைத் தொடவிட மாட்டான். அவன் தெளிவா இருக்கிற நேரம், நான் அந்த வீட்டுல குடியிருக்கிற பையன். போதையில இருக்கிறப்ப நான் அவனோட எடுபிடி பையன். சுருக்கமா சொல்லனும்னா சம்பளம் வாங்காத – கொடுக்கத் தேவையில்லாத ஒரு அப்ரண்டிஸ் பையன்” அவன் சொல்லி நிறுத்தவும் நான் லீன் பாலைப் பார்த்தேன். அவன் தன்னுடைய இருகையையும் கோர்த்து, ஆட்காட்டி விரல்களை மட்டும் நீட்டி அதை தன் கூரான நாசியின் நுனியிலிருந்து நெற்றிப் பொட்டிற்கும் நெற்றிப் பொட்டிலிருந்து நாசியின் நுனிக்குமாக தேய்த்துக் கொண்டிருந்தான். வெளியிலிருந்துப் பார்ப்பவர்க்கு அவன் உன்னிப்பாய் சுவாரஸ்யமாய் கதைக்கேட்பதைப் போன்றிருக்கும். ஆனால் அது அவனது அசுவாரஸ்யத்தின் குறியீடு என்பது எனக்கு மட்டுமே தெரியும். அதனால் கணேஷிடம் “இந்தக் கதையை ஏற்கனவே எங்ககிட்ட சொல்லியிருக்க” என்றுச் சொல்லி நிறுத்தினேன்.
அதை ஆமோதிப்பதைப் போல தலையை ஆட்டிக் கொண்டவன், சாம்பல் கிண்ணத்தின் மேலிருந்த சுருட்டை எடுத்து வாயில் வைத்து ஒரு முறை இழுத்துக் கொண்டான். “என்னால லீன் மாதிரியோ இல்லை உன்னை மாதிரியோ முதல் வரியிலேயே கதைக்குள் போய்விட முடியாது. கதைக்குள் போகும் முன்பாக அந்தச் சூழலை சொல்லிச் சென்றால் மட்டுமே என்னால் கதைக்குள் செல்லமுடியும். அது உங்களுக்கும் தெரியும்” என்றான். அதற்கு நானும் லீனும் ஆமோதிப்பதாய் தலையசைத்துக் கொண்டோம்.
“எனக்கு பைக் மேல அதீத காதல் உருவான முதல் புள்ளியும் அது தான். விதவிதமான பைக்கள் வேலைக்கு வரும். ஒவ்வொரு பைக்கையும் தொட்டுப் பார்த்து, தடவிப் பார்த்து, சீட்ல ஏறி உட்கார்ந்து, ஸ்டார்ட் பண்ணிப் பார்த்து அது ஒருவகையான போதை. அதனால தான் இப்பவும் என்னுடைய பைக்கை எங்கேயாச்சும் நிறுத்தியிருக்கிறப்ப, யாராச்சும் வந்து என்னோட பைக்கை ஆசையோட தொட்டுப் பார்க்கிறப்போ எனக்கு என்னோட அந்த அப்ரெண்டிஸ் காலம் தான் என் நினைவுக்கு வரும்” என்றுச் சொல்லி நிறுத்தியவனின் முகத்தைப் பார்த்தேன். அவன் ஏதோவொரு கனவுலக சஞ்சாரத்திற்குள் போய்விட்டதைப் போன்றிருந்தது.
“முன்னயெல்லாம் வீட்ல படிக்காம இருக்கிற பசங்களைப் பார்த்து நீ ஆடு மேய்க்க தான் போவ, ஹோட்டல்ல டேபிள் துடைக்கிற சர்வரா தான் போவன்னு சொல்லி திட்டுவாங்க. அதுல கொஞ்சம் விஷயம் தெரிஞ்ச பெத்தவங்க மெக்கானிக்கா தான் போக வேண்டி வரும்ன்னு சொல்லி திட்டுவாங்க. இப்ப என் விஷயத்துல பார்த்தா நான் பெரும்பாலான நேரம் அந்த மெக்கானிக் ஷெட்லயே தான் உட்கார்ந்திருக்கேன். படிப்புன்னு பார்த்தாலும் சராசரிக்கும் கிழ. என்கிட்ட சொல்லி என்னைத் தடுக்கப் பார்த்தாங்க. பட்” பேசுவதை நிறுத்திவிட்டு எங்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டான். “அடுத்தக் கட்டமா வீட்டு ஓனர்கிட்ட போய், இங்க பாருங்க கிஷோர் உங்க பைக் ஷெட் மெக்கானிக் எங்க பையனை படிப்புல கான்சன்ட்ரேட் பண்ண விடாம அவனோட ஷெட்ல கூட்டிட்டுப் போய் சம்பளம் இல்லாத வேலைக்காரனா வச்சு வேலை வாங்குறான்” இயல்பாய் பேசிக் கொண்டிருந்தவனின் குரல் சட்டென கார்ட்டூன் உடல்மொழியோடு கார்ட்டூன் குரலாக மாறியது எனக்கும் லீனுக்கும் சிரிப்பை வரவழைத்தது. அவனும் எங்கள் சிரிப்போடு இணைந்துக் கொண்டான். “அப்புறமா என்னாச்சு” என்று லீன் கேட்கவும், “கிஷோர் நேரா மணிகிட்ட வந்து, உனக்கு கை உதவிக்கு ஆள் வேணும்னா சம்பளத்துக்கு ஒரு பையனை வேலைக்கு வச்சுக்கோ சம்பளம் கொடுக்க முடியலியா..! அப்ப நீயே தனியே உக்காந்து உன் வேலையைப் பார்த்துக்கோ. ஆனா இனி அந்தப் பையனை நீ இங்க கூப்பிட்டு உட்கார வைக்கக்கூடாது. அப்படி ஒருவேளை நான் அந்தப் பையனை இந்த ஷெட் பக்கம் பார்த்தேன்னா, நீ இந்த ஷெட்டைக் காலி பண்ணிட்டு வேற ஷெட்டைப் பார்த்துட்டு போயிட வேண்டியது தான்னு சொல்லி மிரட்டிட்டான். இதை மணியும் அப்படியே என்கிட்ட சொல்லி இனி இந்த ஷெட் பக்கம் வராதேன்னு சொல்லிட்டான். எனக்குத் தெரியும். அவன் போதையில இருக்கிறப்ப அவனால கண்டிப்பா வேலையை ஒழுங்கா பார்க்க முடியாது. எப்படியும் என்னைக் கூப்பிடுவான்னு நம்பிட்டு இருந்தேன். அப்ப தான் மணியைத் தேடி ஒரு அம்மா அவங்க பையனோட அங்க வந்தாங்க, அந்தப் பையனுக்கு அதிகபட்சம் போன எட்டுப் பத்து வயசிருக்கலாம். யூ நோ சம்திங் மணி ஒரு சரியான ஸ்திரிலோலன். வுமனைசர். லீகலாவே அவனுக்கு அப்ப மூணு பொண்டாட்டிங்க இருந்தாங்க. லீகலான்னு நான் சொல்றது எல்லோருக்கும் தெரிஞ்சு. ‘இபிகோ’ படியான லீகல் அர்த்தத்துல இல்லை. அந்த மூணு லீகல் போக இல்லீகலா எனக்குத் தெரிஞ்சு ஒண்ணோ ரெண்டோ இருந்தது. ஒருவேளை அதுக்கு மேலயும் கூட இருந்திருக்கலாம். எத்தனைன்னு எனக்குத் தெரியாது. ஆனா நிறைய கனெக்ஷன் உண்டு அது மட்டும் எனக்கு நல்லாவே தெரியும். வாரத்துக்கு ரெண்டு நாள் கை மணிக்கட்டுல மல்லிகைச் சரத்தை சுத்திட்டு ஷெட்டுக்கு வந்திடுவான். அப்படி அவன் மல்லிகைச் சரத்தைக் கைல சுத்திட்டு வர்றப்ப அவன் முகத்தைப் பார்க்கனுமே. புதுசா ஒரு பைக் வாங்கி அதுல உட்காரப் போகிறப்ப ஒரு பரவசம் நம்ம முகத்துல வருமே அந்த மாதிரியான பரவசம் கூடவே கொஞ்சம் வெட்கமும் அவன் முகத்துல இருக்கும். பெண் சுகம் ஒரு தீராத சுகம்”
“உனக்கு பைக் ஓட்டுற சுகம் மாதிரி” நான் இடைமறித்தேன்.
“ஆமா” என்றுப் புன்னகைத்துக் கொண்டவன். “அன்னைக்கு அங்க வந்த பெண்ணை, அவனோட படுத்து எழுந்த ஏதோவொரு பெண் தான் தன் பிள்ளையோட வந்திருக்குன்னு நினைச்சேன். ஆனா அந்த லேடி வந்தது, அவ பையனை மணிகிட்ட அப்ரெண்டிஸா சேர்க்கிறதுக்குன்னு தெரியவந்தப்ப – என் இடத்தைப் பறிக்க இன்னொருத்தன் வந்துட்டான்கிற நினைப்பால ஒரு நொடி எனக்கு ஆத்திரம் அழுகை கோபம்னு என்னவெல்லாமோ கலந்துக் கட்டின ஃபீல் வந்திடிச்சு” சொல்லி நிறுத்திவிட்டு, அவன் கையில் புகைந்துக் கொண்டிருந்த சுருட்டின் நெருப்பு முனையைப் பார்த்துக் கொண்டான். சாம்பல் பூத்திருந்த கனலிலிருந்து புகை நூலைப் போல சில மில்லிமீட்டர் உயரம் வரை நேராகச் சென்று பின் அகலமடைந்து காற்றோடு தன்னைப் பிணைத்துக் கொண்டது.
“கிஷோர் ஒரு ஜெர்மென் ஷெப்பர்ட் வளர்த்துட்டு இருந்தான். ட்ரிப்பிள் கோட் ஜெர்மன் ஷெப்பர்ட். அதுக்கு ஜிம்மின்னு பேர் கூட வச்சிருந்தான். காதலிக்க நேரமில்லை படத்துல குட்டி பத்மினி நாகேஷ்கிட்ட அவ அப்பா ஆசையா வளர்த்த நாய் செத்துப் போயிட்ட கதையைப் பத்தி பேசுறப்ப, நாகேஷ் ஒரு கேள்வி கேட்பான். நாய்க்கு பேர் வச்சீங்களே சோறு வச்சீங்களான்னு. அந்தக் கேள்வி யாருக்குப் பொருந்துதோ இல்லியோ கிஷோருக்கு நல்லா பொருந்திப் போகும். தினமும் அஞ்சு ரூபாய்க்க்கோ பத்து ரூபாய்க்கோ பீஃப் வேஸ்ட் வாங்கி, மதியம் ஒருவேளை தான் அதுக்கு சோறு வைப்பான். தினமும் ஒருவேளை சாப்பாடு கொடுத்தா தான் நாய்ங்க ஆக்டிவா இருக்குமாம். எவன் அவனுக்கு இந்த மாதிரி சொல்லிக் கொடுத்தான்னு தெரியல. ஒருவேளை சோறு வைக்க சோம்பற்பட்டு இவனே அப்படியொன்னை சொல்லிக்கிட்டானான்னும் தெரியல. ஆனாலும் அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இருக்கே, அதுக்கு வயிறு நிறைய சாப்பாடு கிடைக்குதோ இல்லியோ, அது உடம்புல வளர்ந்திருக்கிற மயிரால அது ரொம்ப புஷ்டியானதா தெரியும். தினமும் ராத்திரி நான் அதுக்கு கொஞ்சம் சாப்பாடு வைப்பேன். கிஷோருக்குத் தெரியாம. ஏன்னா அதான் ஏற்கனவே சொன்னேனே. நாய்களுக்கு ஒருவேளை தான் சாப்பாடு வைக்கனும். அப்ப தான் அது தூங்காம எச்சரிக்கையா இருந்து வீட்டைப் பாதுகாக்கும்னு. தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதி சொன்னான் இல்லியா. ஆனா அது தப்பு. தனியொரு உயிருக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு அவன் சொல்லியிருக்கனும். ஜெமோ சொல்ற மாதிரி யானைகள் வாழும் காட்டில் எறும்புக்கும் இடமிருக்கு இல்லியா.” அவன் குரல் சற்று தழுதழுத்ததைப் போன்றிருக்க, அவன் முகத்தைப் பார்த்தேன். அவனது கண்கள் அவனுடைய விரல்கள் பற்றியிருந்த சுருட்டின் நெருப்பின் மேல் பதிந்திருந்தாலும் அவனுடையச் சிந்தை வேறெங்கோ ஒட்டிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.
“அந்தம்மா அவங்கப் பையனோட அங்க வந்த நேரத்துல ஜிம்மி அதோட கட்டை அவிழ்த்துட்டு அங்க வந்திடிச்சு. நான் தான் அதை அவிழ்த்துவிட்டேன்னு நினைச்சிடாதீங்க. நோ ஐயாம் நாட். ஐயாம் நாட்” கலங்கியிருந்தக் கண்களோடு தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டான்.
“யூ நோ சம்திங். ‘பயத்துல பேதி போயிட்டான்’. அப்படீங்கற வாக்கியத்தை நாம படிச்சிருப்போம். ஆனா அன்னிக்கு என் கண் முன்னே நான் பார்த்தேன். ஜிம்மி அந்தப் பையனைப் பார்த்து ஓடி வரவும் – அந்தப் பையனுக்கு என்னப் பண்ணன்னு தெரியாம – பயந்துப் போய் – அவங்கம்மா கையைப் பிடிச்சிட்டு – அந்தம்மாக்கும் என்னப் பண்ணன்னு தெரியாம – ஜிம்மி அவன் மேல பாயாம நான் பிடிச்சிகிட்டேன். தினமும் சாப்பாடு வைக்கிறேனே. அதோட குணநலன் எப்படின்னும் எனக்குத் தெரியுமே. அது பயமுறுத்த மட்டும் தான் செய்யுமே தவிர கடிக்கிற அளவுக்கு வீரமானது கிடையாது. ஆனா அது அந்தப் பையனுக்கோ அவனோட அம்மாவுக்கோ தெரியாதே. நான் ஜிம்மியோட கழுத்துப் பட்டையைப் பிடிச்சிட்டு, இது ஒண்ணும் பண்ணாதுன்னு சொல்றேன். அவங்க அவங்களோட பீதியில இருந்து வெளியே வரல. அப்ப தான் அந்தப் பையனைக் கவனிச்சேன். அந்தப் பையன் தொடை தெரியுற அளவுக்கான ட்ரவுசர் தான் போட்டிருந்தான். அந்த ட்ரௌசர் ஈரமாகி, தொடை வழியா மஞ்சளா அவனோட மலம் வழிஞ்சிட்டு இருந்தது. பயத்துல பேதியானது கூடத் தெரியாத அளவுக்கு அவனோட முகம் பீதியடைஞ்சிருந்ததைப் பார்க்கிறப்ப எனக்குச் சிரிப்பு வந்திடிச்சு. ஆனா வெளிப்படையா சிரிக்க முடியாது. அதனால திமிறிட்டு இருந்த ஜிம்மியை அடக்குற மாதிரி குனிஞ்சு எனக்குள்ளேயே சிரிச்சிகிட்டேன். அந்தம்மாவும் அந்தப் பையனும் அவங்க முகத்துல இருந்த பயம் மாறாம அங்கேருந்து கிளம்பிப் போனப்ப எனக்கொரு ஆசுவாசம் கூட வந்தது. அவங்க இரண்டு பேருக்கும் எதுவும் ஆகலங்கிற ஆசுவாசம் இல்லை அது. எனக்கான இடத்தை இந்தப் பையன் பறிச்சிட மாட்டான்கிற ஆசுவாசம்.” என்றுச் சொல்லி நிறுத்தியவன் இம்முறை வெகு நிதானமாகச் சுருட்டை வாயில் வைத்து இழுத்து நிதானமாகப் புகையை வெளியேற்றினான். பின் அதே நிதானத்தோடு, “நீ ஒரு எழுத்தாளன் தானே. இப்ப நான் உன்கிட்ட சொன்ன என்னோட அனுபவத்தை உன்கிட்ட எழுத சொல்லிக் கேட்டேன்னா நீ இதுல யாரோட பார்வையில இருந்து எழுதுவ..? அதாவது நீ எழுதப்போவது தன் எல்லைக்குள் நுழைந்த அந்நியனைப் பார்த்து எச்சரித்த ஜெர்மன் ஷெப்பர்டைப் பற்றியா அல்லது வேலைக் கேட்டு தயக்கத்தோடு உன் வீட்டிற்கு வந்த அந்தச் சிறுவனைப் பற்றியா அல்லது ஜெர்மன் ஷெப்பர்டைப் பார்த்து பயந்து தன் நிஜாரிலேயே மலம் கழித்துவிட்ட அச்சிறுவனின் நிலையைக் குறித்து புன்னகைத்த என்னைப் பற்றியா அல்லது இம்மூவரையும் வெளியிலிருந்து பார்க்கும் உன்னுடைய பார்வையையா அல்லது” என்று என்னை நோக்கி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த கணேஷ் குவேராவின் பேச்சைத் தடைச் செய்வதைப் போன்று சத்தமாகச் சிரித்தான் லீன் பால். நானும் கணேஷும் லீனைத் திரும்பிப் பார்த்தோம். தன் பற்களால் கடித்து வைத்திருந்த பைப்பை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, அதன் அடர்த்தியான புகையை வாய் வழியே கசிய விட்டவன், “ஜெர்மன் ஷெப்பர்ட் – வேலைத் தேடிவந்த ஒரு சிறுவன் – வேலையில்லை என்றுச் சொல்லும் எண்ணத்தோடு அங்கே நின்றிருக்கும் ஒரு சிறுவன் என அந்தக் கதையில் மூன்று பேர் இருக்கிறார்கள். இங்கே நிஜத்திலும் நாம் மூன்று பேர் இருக்கிறோம். இதில் யார் யார், யார் யாரென நமக்குள் தீர்மானித்துக் கொள்வதற்கு முன்பாக இம்மூன்றையும் வெளியிலிருந்து பார்க்கும் அந்த நாலாவது மனிதன் யாரென நான் தெரிந்துக் கொள்ளப் பிரியப்படுகிறேன்” என்றான் அவனது புன்னகை மாறா முகத்தோடு.
அவன் அவ்வாறு கேட்டு முடித்தது தான் தாமதம். இந்த நாற்காலியில் நான் அமரலாமா எனக் கேட்டபடியே நரைக் கூடியிருந்தத் தன் தாடியை கையால் நீவியபடியே குளிருக்கு அணியும் குல்லாவை அணிந்த ரஜினி அங்கே கிடந்த காலி நாற்காலியில் வந்தமர்ந்தான். நாங்கள் மூவரும் ஒருசேர அவனைத் திரும்பிப் பார்த்தோம். “கொஞ்சம் லேட்டாகிடிச்சு. ஆனாலும் ரொம்ப லேட்டாகலன்னு நினைக்கிறேன். உங்களோட உரையாடல்ல நானும் கலந்துக்கலாமா” எனக் குறும்புத் தொனிக்கும் கண்களோடும் ஊடுறுவும் பார்வையோடும் கேட்டான்.
“வித் பிளஷர்” என்றேன் நான்.
“கலந்துக்கக்கூடாதுன்னு சொன்னா உடனே எழுந்து போயிடுவியா” என்றான் கணேஷ்
“இன்னும் உன்னைக் காணலியேன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்” என்றான் லீன் பால்.
ரஜினி அவனுடைய புன்சிரிப்பு மாறாமல், “என்ன வழக்கமான அரட்டையா இல்லாம நாலாவது ஆளைத் தேடுற அளவுக்கு ரொம்ப சீரியஸான டிஸ்கஷன் போயிட்டு இருக்கு போல” என்றுக் கேட்ட கேள்விக்கு, “அதெல்லாம் ஒண்ணுமில்லை. வழக்கம் போல நம்ம கணேஷ் குவேரா உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டு இருந்தான்” என்று அவனுக்கு லீன் பால் எள்ளலாகப் பதிலளிக்கவும், “என் உள்ளத்தை அழுத்திட்டு இருக்கிற ஒரு விஷயத்தைப் பத்தி பேசினா உணர்ச்சிவசப்படுறேனா” கணேஷ் குவேராவிடமிருந்து வார்த்தைகள் சற்றுக் கடுப்போடு வெளிவந்தது.
“நடந்து முடிந்துப் போன விஷயங்களைப் பற்றி உணர்ச்சிப் பொங்க பேசி எதுவும் ஆகப்போறதில்லை கணேசா” அவனுக்குத் தன்னுடைய நிதானமான குரலில் பதிலளித்தான் ரஜினி.
“முன்னெப்போதோ நடந்த விஷயங்களோட பாதிப்பு தான் பின்னெப்போதும் அதே மாதிரியான விஷயங்களை நடக்கவிடாம நடத்தவிடாம நம்மை வழிநடத்துது. அதனால எப்பவோ நடந்த விஷயம். அதைப் பத்தி இப்ப பேசி என்னவாகப் போகுதுன்னு நீ கேட்கிறதுல எனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை ரஜினி” என்றான் கணேஷ்.
“உஃப்ப்” என்று வாயால் சப்தம் எழுப்பியபடி லீன் பால் அவனுடைய நாற்காலியில் சாய்ந்தமர்ந்துக் கொள்ள, ரஜினி மட்டும் புன்னகை மாறா முகத்தினோடு கணேஷைப் பார்த்தபடிக்கு அமர்ந்திருந்தான்.
“மன்னிக்கவும் தோழர்களே. அந்த எழுத்தாளனோட எழுத்து என்னைக் கோபமூட்டிடிச்சு. அதனால கொஞ்சம் ஹார்ஷா பிகேவ் பண்ணிட்டேன். சாரி சாரி” என்று சொல்லிவிட்டு சாம்பல் கிண்ணத்தின் மேலிருந்த சுருட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டான்.
“எழுத்துத் துறையில இருக்கிற இவனை வச்சிட்டே இவனை சாட்சியா வச்சிட்டே” என்று சொல்லி ஒரு நொடி நிறுத்திவிட்டு, என்னைப் பார்த்தான் ரஜினி, நான் மேலே சொல்லு என்பதாய் தலையசைத்து அவனுக்கு அனுமதிக் கொடுக்கவும், “எழுத்தாளன்னு தன்னைக் காட்டிக்கிற அத்தனைப் பேருமே ஏதோவொரு வகையில மற்ற எல்லோரையும் தனக்குக் கீழானவனா தான் பார்க்கிறான்” மீண்டும் என்னைத் திரும்பிப் பார்த்தான் ரஜினி. நான் எதுவுமே சொல்லாமல் அமர்ந்திருக்க, “விதிவிலக்குகள் இருக்கிறாங்க. ஆனா அது ரொம்பவே சொற்பம். இல்லியா லின் பால்” என்று லீன் பாலைத் திரும்பிப் பார்த்து அவன் கேட்க, லீன் பால், “சொல்றதை எல்லாம் சொல்லிட்டு, விதிவிலக்கு, பெரும்பாலான வார்த்தைகளை மட்டும் சேர்த்துட்டா போதும். உள்ளுக்குள்ள இருக்கிற வன்மத்தைக் கொட்டினா மாதிரியும் ஆகிடும். எனக்குள்ள வன்மம் இல்லைன்னு நிரூபிச்ச மாதிரியும் ஆகிடும்ல” என்று சொலிவிட்டு அவன் சிரித்தான்.
கணேஷ் சத்தமாக சிரிக்க, நான் ரஜினியின் முகத்தைப் பார்த்தேன். அவனுடைய முகத்தில் வழக்கமான புன்சிரிப்பே வீற்றிருந்தது. அந்தப் புன்சிரிப்பின் பின்னே பல அர்த்தங்களை அவன் பொதிந்து வைத்திருப்பதையும் போலிருந்தது.
“நூறு சதவிகிதம் உண்மை தான் லீன் பால். அதனால நான் விதிவிலக்குன்னு சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன். தங்களை அறிவுத்துறைன்னு வரிஞ்சுக் கட்டிக்கிற ஒவ்வொரு எழுத்தாளனும், தங்களைச் சுற்றி இருக்கிற ஒவ்வொருத்தனையும் அடிமுட்டாளா தான் பார்க்கிறான்.” என்னைத் திரும்பிப் பார்த்த ரஜினி, “நீயும் அதில் விதிவிலக்கில்லை” என்று முடித்தான்.
என்னுடைய கண்ணும் அவனுடைய கண்ணும் ஒருசேர சந்தித்தன. அவனுடையக் கூற்றை ஆமோதிப்பதாய் நான் அவனைப் பார்த்து புன்னகைக்கவும், அவனுடைய முகத்தில் ஒரு சிறு புன்னகை விரிந்தது.
“கணேசா நீ பேசிட்டு இருந்த மலப்பிரச்சனைக்கு நானும் வர்றேன். உணவின் மகத்துவத்தைப் பத்தி பேசின உஸ்தாத் ஹோட்டல் படத்தை நீங்க பார்த்திருக்கிறீங்க தானே” எங்கள் மூவரையும் அவன் தனித்தனியாகப் பார்த்தான். பின் அவனே, “ஒரு எழுத்தாளன் அவனோட ப்ளாக்ல அந்தப் படத்தைப் பத்தி பேசுறப்ப, சாரி எழுதுறப்ப, “அந்தப் படத்தில் வரும் ஜெயப்பிரகாஷ் கதாப்பாத்திரம், மனப்பிறழ்வு அடைந்த ஒருவன் தன்னுடைய மலத்தைத் தானே தின்றதைப் பார்த்ததைப் பற்றி பேசும், அந்த நிகழ்வே உணவு என்பது அனைவருக்குமானது என்கிற எண்ணத்தை அவனுக்குள்ளே தோற்றுவித்ததாகச் சொல்லும். மனப்பிறழ்வுக் கொண்டவனாக இருந்தாலும் அவன் மலத்தை அவனே எப்படி திண்பான் அல்லது திண்பதற்கு முயற்சிப்பான்” அப்படீன்னு கேட்டு எழுதியிருந்தான். அறிவுச் சமூகம் எல்லா விஷயத்தையும் அவங்க அறிவுக் கண்ணைக் கொண்டே பார்க்கும். அவங்களோட பார்வை ஏதோ பிரபஞ்சம் அளவுக்கு நீளுறதா யோசித்தும் கொள்ளும். ஆனால் அறிவு அறிந்தவரையில் – அனுபவம் எந்தளவுக்குக் கிடைத்திருக்கிறதோ – அந்தளவிற்குத் தான் அவர்களுடைய பார்வையின் தூரமும் இருக்கும். இதுவரையில் எந்த எழுத்தாளனாவது மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றி பேசியிருக்கிறானா..? கிடையாது. மரணத்திற்குப் பின்னான அவனுடைய உலகம் என்பது ஏற்கனவே அவன் எங்கோ படித்த அறிவை வைத்து கட்டும் ஒரு புனைவு உலகமாகத் தான் இருக்கும். இல்லியா” என்று என்னைப் பார்த்துக் கேட்டான்.
“நீ சொல்றது கொஞ்சம் குழப்பமா இருக்கு” என்றேன்.
தன் வலக்கை பெருவிரலால் நாடியை அழுத்திக் கொண்டு, ஆட்காட்டி மற்றும் நடுவிரல்களால் நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டே என்னைப் பார்த்தவன், “நீ உன்னோட சின்ன வயசுல, கண்ணாடி தொட்டியில கலர் கலரா மீன் வளர்த்ததா சொல்லியிருக்கிறேல” என்றுக் கேட்டான். நான் ஆமாமென்றேன். “தொட்டியில கிடந்த மீன்களுக்கு முதல்முறைய மண்புழுவை உணவா போட்டப்ப, அந்தத் தொட்டிக்குள்ள வளர்ந்து வந்த மீன்கள் கூட்டம் ஒண்ணுக்கொண்ணு சண்டைப் போட்டு அந்த மண்புழுக்களைச் சாப்பிட்டதைப் பத்தி சொன்னப்ப, அந்தக் கூட்டத்துல இருந்த டைகரோ கௌராவோ ஏதோவொரு ரௌடி மீன் மட்டும் நீ போட்ட புழுக்கள்ல ஒரு புழுவைக் கூட வேறெந்த மீனுக்கும் கொடுக்காம, அதுங்களைச் சாப்பிட விடாம சாப்பிட்டதுன்னு சொல்லியிருக்கிற ஞாபகம் இருக்கா”
“டைகர்ன்னு தான் நினைக்கிறேன்” என்றேன்.
“வாட்ஸோ எவர். அதோட முடிவு எப்படி அமைஞ்சதுன்னு நீயே சொல்றியா இல்லை நீ சொன்னதை வச்சு நான் சொல்லவா..?”
“அது அளவுக்கு அதிகமா சாப்பிட்டதால, அதோட வயிறு கிழிஞ்சு அது சாப்பிட்ட புழுக்கள் எல்லாம் வயித்துல இருந்து வெளியே வந்து, ஒருவேளை அந்த மீனோட குடலா கூட அது இருக்கலாம்னு கூட அந்த நேரத்துல யோசிச்சிருக்கேன். ஆனா இப்ப யோசிக்கிறப்ப அதோட வயித்துல இருந்து வெளியே வந்தது குடலா இருக்க வாய்ப்பில்லைன்னு நல்லா தெரியுது. ஏன்னா அதோட உடம்பை விடவும் நீளமா – மண்புழுவோட கனத்துல தான் அதோட வயித்துல இருந்து வெளியே வந்து நெளிஞ்சுட்டு இருந்தது.”
“அதோட மரணம்..”
“நாலோ அஞ்சோ நாள்களுக்கு அப்புறமா தான் நிகழ்ந்தது”
“அதுவரையிலும்”
“மீன் தொட்டியில இங்குமங்குமா நீந்திட்டே தான் இருந்தது”
ரஜினி லீனையும் கணேஷையும் பார்க்குமாறு கண்ணசைத்தான்.
கணேஷ் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியோடு அமர்ந்திருக்க, லீன் பாலோ அவநம்பிக்கைத் தொனிக்கும் பார்வையோடு அமர்ந்திருந்தான்.
“இதைப் பத்தி உன்னோட அபிப்பிராயம் என்ன லீன்” என்றுக் கேட்டான் ரஜினி
“ஐ டோண்ட் பிலீவ் திஸ்” என்று அவனிடமிருந்து பதில் வந்தது.
“உன்னோட அபிப்பிராயம்” என்று ரஜினி கணேஷிடம் கேட்க, “இந்தக் கதையை நீ சொல்லியிருந்தா நானும் லீனை மாதிரி அவநம்பிக்கையா தான் இருந்திருப்பேன். ஆனா வளர்த்தவனே சொல்றப்ப நம்பாம இருக்கவும் முடியல அதே நேரம் நம்பவும் முடியல” என்றான். பின் அவனே, “ஒரு மனுஷனுக்கு மண் – பெண் – பொன் இந்த மூணு விஷயத்துலயும் எப்பவுமே ஒரு போதாமை இருக்கும். இந்த மூனையும் தாண்டி யோசிச்சாலும் அவனுக்கு இல்லை இது போதாது, இது போதாதுன்னு ஒரு நிறைவற்ற தன்மை இருந்துட்டே தான் இருக்கும். அப்படி அவனுக்கு நிறைவுத் தன்மை வந்துடிச்சுன்னா – அதோட அவனது வளர்ச்சி நின்னு போயிடும். ஆனா உணவு விஷயத்துல மட்டும் – அவன் வயிறு நிறைஞ்ச அப்புறமா ஒரு கவளம் இல்லை ஒரு பருக்கை சோறு கூட அவனால சாப்பிட முடியாது. உணவு விஷய்த்துல மனுஷன்னு இல்லை ஒவ்வொரு உயிருக்குமே இது தான் நிலைமை. இது தானே இயற்கையோட விதி” என்று முடித்தான்.
“வயிறு வெடிக்க அது சாப்பிட்டதைக் கூட என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா அதுக்கு அப்புறமாவும் அதாவது வயிறு வெடிச்சதுக்கு அப்புறமாவும் அது நாலு நாள் வாழ்ந்ததுன்னு சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது” என்றான் லீன் பால்.
“மீன்களுக்கு நரம்பு மண்டலம் கிடையாது” என்று வழக்கமான புன்னகைத் ததும்பும் முகத்தோடு ரஜினி சொல்ல, “ஸோ” என்று லீன் பால் கேட்டான்.
“அவைகளுக்கு வலியை உணர்ந்துக் கொள்ளும் ஆற்றல் கிடையாது. இன்ஃபாக்ட் அந்த மீனுக்கு அதோட வயிறு கிழிஞ்சுப் போயிருக்குங்கிறதை அது உணர்ந்திருக்கவே செய்யாது. அப்புறமாவும் அது நாலு நாள்ல எப்படி இறந்திருக்கும்னா, அது சாப்பிட்ட உணவு எதுவுமே அது வயித்துல தங்கியிருக்காம வெளியேறி பசியால தான் இறந்திருக்கும்” என்று முடித்த ரஜினி என்னைப் பார்த்து, “உன்னோட நேரடி அனுபவத்தை நீ பகிர்ந்துகிட்ட, ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் அது புது அனுபவம். அவங்களால அதை நம்ப முடியல – அவங்களால அதை ஏத்துக்கவும் முடியல. தர்க்கரீதியா உன்னால அதை மறுபடியும் ஒருமுறை நீரூபிக்கவும் முடியாது. இந்த மீன் விஷயத்துல உன் பார்வையின் தூரம் அதிகம். நாளையே வேறொருத்தன் வந்து உன்கிட்ட நான் வளர்த்த மீன் வயிறு வெடிச்ச அப்புறமாவும் நாலு நாள் உயிர் வாழ்ந்ததுன்னு சொன்னா உன்னால ஏத்துக்க முடியும். ஆனா இவங்களால முடியாது.” சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தவன், “ஏப்ரல் 20, 1945 அன்னிக்கு லாய்ட் ஓல்சன்னு ஒருத்தனுக்கு சிக்கன் சாப்பிட ஆசை வந்திடிச்சு. அவன் வளர்த்த கோழி ஒண்ணை பிடிச்சு தலையை வெட்டிட்டான். இதுவரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா அவனால தலை வெட்டப்பட்ட அந்தக் கோழி மார்ச் 17, 1947 வரைக்கும் உயிர் வாழ்ந்திருக்கு. ஏறக்குறைய ரெண்டு வருஷம் தலையே இல்லாம ஒரு கோழி உயிர் வாழ்ந்திருக்கு” என்று அவன் சொல்லி முடிக்கவும், நாங்கள் மூவரும் அவனை அதிர்ச்சியோடு பார்த்தோம்.
“அனுபவம் – அறிவு – பார்வையின் தூரம் என்னன்னு புரியுதா” என்று ரஜினி என்னைப் பார்த்துக் கேட்கவும், நானும் ஆமாமென்பதாய் தலையாட்டினேன்.
“நிஜத்தில் ஒரு உயிர் அதோட மலத்தையே திண்ணும் தன்மைக் கொண்டதா” என்று அவன் கேள்வி எழுப்பவும், எனக்குள் ஒரு நொடி என் வீட்டின் முன்னே குடியிருக்கும் அந்தக் கறுப்பு வெள்ளை நாயின் நினைப்பு வந்துப் போனது.
“தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஓரு மாடு, தெருவில் ஈரம் காயாமல் கிடந்த சாணியைத் தின்றதை நான் பார்த்திருக்கிறேன். அந்தச் சாணி அதோடதா இல்லை வேற எதோடதான்னு எனக்குத் தெரியாது. ஆனால் அது அதைத் தின்றது. மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு தானே. என்னவொன்று சிந்திக்கத் தெரிந்த விலங்கு.” ஒரு நொடி நிறுத்திவிட்டு, “அப்படீன்னு பெருமையா பேசிக்கத் தெரிந்த விலங்கு. ஆனால் இயல்பில் எது தனக்கு உகந்தது எது தனக்கு ஒவ்வாதது எனபதைப் பற்றிய எந்தச் சுயசிந்தனையுமற்ற ஒரு விலங்கு. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் இவனுக்கும் முன்னே யாரேனும் ஒருவர் சொல்லிச் சென்றிருக்க வேண்டும். அதை அப்படியே இவனும் பின் தொடர்ந்துச் சென்று, தன்னை மகோன்னதமானவனாகக் காட்டிக் கொள்ளவேண்டும். அவ்வளவு தான். ஒரு நாய்க்கு பாம்பெது புழுவெது பூரானெது தேள் எது என்று நாமா கற்றுக் கொடுக்கிறோம். புழுவையும் பூரானையும் பார்த்து எச்சரிக்கையடையாத நாயானது பாம்பையும் தேளையும் பார்த்ததுமே எச்சரிக்கையடைவது எப்படி..? தெருவில் சுற்றும் பசுமாட்டுக்கு என்ன பசியாயிருந்தாலும் ஏன் அரளிவிதையைத் திண்பதில்லை..? அந்த ஐந்தறிவு ஜீவன்களின் சுய அறிவோடு ஒப்பிட்டால், ஆறறிவு ஜீவிகளுக்கு சுய அறிவு என்பதே கிடையாது. அதிலும் அந்த ஆறறிவு ஜீவிகளிடமிருந்து தங்களை மேம்பட்டவர்களாகக் காட்டிக் கொள்ளும் அறிவுஜீவிகளுக்கு முன்னேறுகள் போட்டுக் கொடுத்த வழிகள் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். அதை வைத்துக் கொண்டு எது சரி எது தவறு என்றுச் சொல்லிச் சென்று இறுதியில் இது தான் சரி இது தவறு என்றுச் சொல்லுமளவிற்கு வந்து சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களைத் தொடர்ந்துச் செல்லும் ஆறறிவுக் கூட்டமும், அவரே சொல்லிவிட்டார் என்கிற தெளிவோடு ஐந்தறிவு ஜீவனான ஆட்டுமந்தை அதிலும் குறிப்பாகச் செம்மறியாட்டு மந்தைக் கூட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்று கணேஷின் குரலிலிருந்த ஆதங்கம் கோபத்தோடு ரஜினி பேசினாலும் லீன் பாலிடமிருந்த நிதானமான சொல்லாடலோடு பேசி நிறுத்தியவனை உன்னிப்பாய் கவனித்தேன். அவனது கருவிழிகள் இரண்டும் அங்குமிங்கும் அலைபாயாமல், அசையாமல் ஒரே புள்ளியில் நின்றிருக்க, அவனது மேலிமைகளை அவன் அறுத்து எறிந்துவிட்டானோ என்றுக் கூட எனக்கு ஒரு கணம் தோன்றி மறைந்ததை என்னால் தவிர்க்கமுடியவில்லை. ஒரு மனிதனால் இத்தனை நேரம் இமைக்காமல் இருக்கமுடியுமா என்கிற கேள்வியும் கூட என்னுள் எழுந்தது. “வாசக மனம் என்பது அப்படி தான்” என்றுத் தணிந்தக் குரலில் சொல்லிவன் அவன் சட்டைப் பையிலிருந்து பீடி ஒன்றை வெளியே எடுத்து வாயில் வைத்து பற்களால் கடித்துக் கொண்டான். பீடியின் முனை வீங்கிப் போயிருந்ததை நான் பார்த்ததைப் போலவே லீன் பாலும் கவனித்திருப்பான் போலும், “என்ன போஸானா” என்றுக் கேட்டுவிட்டு, “இந்த வெளியில் பேசுவதற்கு நமக்கு அனைத்து விதமான சுதந்திரமும் இருக்கிறது. ஆனால் அதற்கொரு எல்லை இருக்கிறது” என்றான். பீடியைப் பற்ற வைக்க தீக்குச்சியை உரசியவன், பீடியைப் பற்ற வைக்காமல் குச்சியின் முனையில் எரிந்துக் கொண்டிருந்த நெருப்பை வாயால் ஊதி அணைத்தான். “சுதந்திரத்திற்கு எல்லையா…!” என்றுக் கேட்டுவிட்டு, பற்களால் பற்றியிருந்த பீடியை எடுக்காமலேயே பற்கள் தெரிய புன்னகைத்துக் கொண்டவன், மற்றொரு குச்சியை உரசி பீடியைப் பற்றவைத்துக் கொண்டான். அவன் பற்ற வைத்த அந்த நொடியில் கஞ்சாவின் நெடி அறையில் பரவியது. ஆட்காட்டி மற்றும் பெருவிரலின் நுனியால் வாயிலிருந்த பீடியைப் பற்றி – கண்களை மூடி அதன் புகையை உள்ளிழுத்துக் கொண்டவன், மூடியிருந்த கண்களைத் திறக்காமலேயே பீடியை வாயிலிருந்து எடுத்தான். அவன் நாசியிலிருந்தோ அல்லது வாயிலிருந்தோ துளி புகைக் கூட வெளியேறாமலிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்படியே அதே நிலையில் ஒருசில நொடிகள் கண்கள் மூடி லயித்திருந்தவன், நிதானமாகக் கண்களைத் திறந்து அவன் எதிரே அமர்ந்திருந்த எங்கள் மூவரையும் வேறு யாரையோ பார்ப்பதைப் போல பார்த்தான். “என் சுதந்திரத்துக்கான எல்லையை யார் வகுத்தது லீன் பால்” என்றுக் கேட்டவனின் குரல் அவனுடைய குரலாக இல்லாமலிருந்தது. ‘இதோ இவன் தான்’ என்பதைப் போல லீன் பால் என்னை நோக்கித் திரும்பினான். “நீயா” என்றுக் கேட்டுவிட்டு, விரல்களால் பற்றியிருந்த பீடியை வாயில் வைத்து ஒரு முறை இழுத்துக் கொண்டான். இம்முறையும் அவன் பற்றியிருந்த பீடியிலிருந்தோ அவன் வாயிலிருந்தோ புகை வெளியேறாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. “எங்கள் இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சத்யா தடுமாறி நின்ற பொழுது, அது முழுக்க முழுக்க உன் விருப்பம் சார்ந்தது. அது உனக்கான உரிமை, அது உன் சுதந்திரம் என்றுச் சொன்ன இவனா என் சுதந்திரத்துக்கு எல்லை வகுத்திருக்கிறான் என்று சொல்கிறாய் பால்” என்று அழுத்தமாய் கேட்டவனை லீன் பால் அசூயையாய் பார்த்தான். “அவளுக்கு அந்தச் சுதந்திரத்தை இவன் கொடுத்ததால இவன் எவ்வளவு வேதனையை அனுபவிச்சான்னு” லீன் பால் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே இடைமறித்த ரஜினி, “சுதந்திரம் என்பது இங்கே யாருக்கும் எவராலயும் கொடுக்க முடியாது லீன். அது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. ஆனால் அந்தச் சுதந்திர செயல்பாட்டால் விளையும் எந்தவொரு வினைக்கும் அவன் பொறுப்பேத்துக்கனும். பின்விளைவுகள் மோசமானதும் இன்னொருத்தர் தலை மேல் அதை ஏற்றி வைத்துவிட்டால், நீ உன்னை சுதந்திரமானவன்னு சொல்லிக்க முடியாது. நீ ஒருவகையில் அடிமை வாழ்க்கை வாழ ஆரம்பிச்சிட்டேன்னு நீ ஒத்துக்கனும். ஒத்துக்கிட்டு தான் ஆகணும்” சொல்லிவிட்டு அணைத்துப் போயிருந்த பீடியை மீண்டுமொரு முறைப் பற்றவைத்துக் கொண்டவன், “என் பீடியிலிருந்து வரும் புகையை நான் என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா..? காற்று எங்கெங்கே அதை அலைகழிக்குதோ அங்கெல்லாம் அது போகத் தான் செய்யும். அப்ப யாராச்சும் இங்கே வந்து பீடி பிடிச்சது யாருன்னு கேட்கிறப்ப, நான் தான்னு ஒத்துக்கிற தைரியம் எனக்கு இருக்கனும். அப்படி இல்லையா நான் பீடி பிடிக்கவே தகுதியில்லாதவன்” என்றுச் சொல்லிமுடித்தவன், கையிலிருந்த பீடியை சாம்பல் கிண்ணத்தில் தேய்த்து அணைத்துவிட்டு, “ஸாரி டாப்பிக் மாறி வேற எங்கேயோ போயிடிச்சு. ஆமா நாம என்ன பேசிட்டு இருந்தோம்” எனக் கேட்கவும், கணேஷ், “என்னவோ பேசிட்டு இருந்தோம். நீ வந்து மொத்தத்தையும் குழப்பி விட்டுட்ட” என்றுச் சொல்லி சிரித்தவன், “ஒரு விஷயம் கேட்கனும், கேட்கட்டுமா” என்றுக் கேட்டான். என்ன என்பதைப் போல ரஜினி அவனைப் பார்க்க, “அதெப்படி துளி புகைக் கூட வெளியே வராதமாதிரி உன்னால புகைக்க முடியுது”. அவன் அப்படி கேட்டுமுடிக்கவும், அர்த்தம் தொனிக்கும் பார்வையோடு என்னைப் பார்த்த ரஜினி, “என்ன சொல்லவா” என்றுக் கேட்டான். மூக்கின் நுனியிலிருந்த விரலை அகற்றி, ‘சொல்லிக் கொள்’ என்பதாய் சைகை செய்தேன். “ஜெயில்ல கத்துக்கிட்டேன்” என்றான். அதிர்ச்சியோடு கண்கள் விரிய என்னையும் ரஜினியையும் ஒருமுறைத் திரும்பிப் பார்த்தவன், “என்னது ஜெயிலா” எனக் கேட்டான். “ஆமாம்” என்ற ரஜினி, “அந்தப் பொண்ணு பேரென்ன உமாவா ரமாவா” என்று என்னைப் பார்த்துக் கேட்டான். “உமா” என்றேன். “அவ கன்னத்துல ஒரு அடி கொடுத்தேன். தாடை திரும்பிடிச்சு” சொல்லி நிறுத்தியவன், தனித்தடிப் போன்றிருந்த விரல்களை விரித்து தனது உள்ளங்கையைப் பார்த்தான். “இவன் கை மாதிரி பேனா பிடிக்கிற கை இல்லையே என் கை. எட்டாம் கிளாஸ்ல இருந்தே ஸ்பானர் பிடிச்ச கையாச்சே. அடிச்ச அடியில தாடை திரும்பாம இருந்தா தான் ஆச்சரியப்படணும்”
“பொம்பள புள்ளைய அடிக்கிற அளவுக்கு அவ என்ன பண்ணினா”
“என்னய ஒண்ணும் பண்ணல, இதோ இருக்கிறானே இவனைத் தான் நடுரோட்டுல நிற்க வச்சு அவமானப்படுத்தினா”
கணேஷ் திரும்பி என்னைப் பார்க்க, நான் ஆமாமென்பதாய் தலையாட்டினேன்.
“அவ சத்யாவோட ஃப்ரெண்ட். இவனை அசிங்கப்படுத்தினா – இவன் ரியாக்ட் பண்ணுவான் – ஈவ் டீசிங் கேஸ்ல உள்ள தள்ளிடலாம்னு எதிர்பார்த்தா. ஆனா நம்மாளு தான் மரமாச்சே” சொல்லிச் சிரித்தவன் அடுத்த நொடியே தீவிரமான முகபாவத்திற்குச் சென்றான். “ஒருநாள் தனியா மாட்டினா, ஒரு அறை விட்டேன். அடுத்ததா அவளே போய் போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்து கஷ்டப்பட வேண்டாமேன்னு சொல்லி நானே போய் சரண்டர் ஆயிட்டேன். பதினஞ்சு நாள் ரிமாண்ட்ல வச்சாங்க. அப்ப தான் கதையில ஒரு டிவிஸ்ட். அந்தப் பொண்ணு வந்து என்னை யாருன்னே அவளுக்குத் தெரியாதுன்னு சொன்னதோட இல்லாம, பஸ்ல இருந்து இறங்குறப்ப கால் தடுக்கி கீழ விழுந்து தாடையில அடி பட்டுடிச்சுன்னு ஒரு புது சோழியை உருட்டி விட்டுட்டுப் போயிட்டா. இல்லியாடா” என்றுக் கேட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டவன், “அந்தப் பதினஞ்சு நாள் உள்ள இருந்தப்ப, படிச்சது தான் இது. புகையே வெளியே வராம புகைப்பது எப்படீங்கிற பாடம்”. ஒருசில நொடிகள் எங்களுக்குள் அமைதியாகக் கடந்தது. பின் ரஜினியே தொடர்ந்தான், “உள்ள இருக்கிற வார்டனுங்களுக்கும் தெரியும். எவனெவன் கைல என்னென்ன இருக்குதுன்னு. அவனுங்களுக்கு அது தெரியும்ங்கிறது கைதியா இருக்கிற எங்களுக்கும் தெரியும். ஆனா அதைக் கையும் களவுமா மாட்டிக்கிற அளவுக்கு காட்டிக்ககூடாதுங்கிறது தான் அங்க எங்களுக்குள்ள இருக்கிற எழுதப்படாத விதி. விதிமீறல்கள்ல இருக்கிற சுவாரஸ்யம் விதிப்படி நடக்கிறதுல கிடைக்கிறதேயில்லை. ஆனா விதியை மீறனும்னா விதி என்னன்னு தெரியனும். விதியே தெரியாமல் விதிமீறுறதுங்கிறது குழந்தைத்தனமானது. இல்லியா” கேட்டபடியே லீனைப் பார்த்தான். லீன் தன்னுடைய கண்களை மூடியபடி, அவனுடைய ஆட்காட்டி விரலகளால் மூக்கின் நுனியிலிருந்து நெற்றிப்பொட்டு வரையிலும் முன்பின் கோடுகள் வரைய ஆரம்பித்திருந்ததைப் பார்த்ததும், “என்ன லீன் பலத்த ஆலோசனையா” எனக் கேட்டான். “நோ… நோநோநோ” என்றவன் என்னைப் பார்த்து, “ஒரு காஃபி குடிச்சா நல்லாயிருக்கும் போல தோணுது” என்றான். எனக்குமே அப்படி தோன்றியிருந்ததால், கணேஷைப் பார்த்து, “உனக்கு” என்றுக் கேட்டேன். சரியென்றான். அடுத்ததாக ரஜினியைப் பார்த்தேன். அவன் சரி என்பதற்கு அடையாளமாய் தோளை மட்டும் உலுக்கிக் காட்டினான். நான் என் நாற்காலியிலிருந்து எழுந்து, அவர்கள் மூவரையும் குறிப்பிட்டுப் பார்க்காமல் பொதுவாக, “நீங்க மூணு பேரும் பேசிட்டு இருங்க நான் போய் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்றுக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
கெட்டிலில் நீரை ஊற்றி ஸ்விட்ச்சை ஆன் செய்தேன். கெட்டிலிலிருந்த நீர் சூடாக ஆரம்பித்தது. காஃபி மக்கில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுவிட்டு, ‘ஃபோல்ஜரை’ கையில் எடுத்தேன். ரஜினியின் சொல்லாடலினால் உண்டாகியிருந்த கசப்பைத் தீர்க்க ஃபோல்ஜர் சரியான தேர்வென்றுத் தோன்றாததால், அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு நெஸ்கஃபே டீகேஃபை எடுத்து ஒன்றரை ஸ்பூன் கலந்தேன். கெட்டிலில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்திருந்தது. கொதித்துக் கொண்டிருந்த நீரிலிருந்து முப்பது மில்லி நீரை எடுத்து கோப்பையில் ஊற்றினேன். நெஸ்கஃபே நீரோடு ஒன்றாய் கலக்க, கசப்பேறிய காஃபியின் நெடி எழ ஆரம்பித்தது. அந்தச் சுடுநீரில் சீனியும் கரைய வேண்டி காஃபி மக்கை ஒரு முறை சுழற்றினேன். இப்பொழுது காஃபியின் நெடி அதிகமாகவும் கசப்பின் நெடி குறைவாகவும் இருப்பதை நாசி எனக்கு உணர்த்தியது. மீண்டுமொரு முறை கோப்பையை சுழற்றினேன். காஃபியின் மணமும் கசப்பின் நெடியும் சரிநிகராய் இருப்பதாய் நாசி உணர்ந்தது. நூறு டிகிரி செல்ஷியஸைத் தொட்டிருந்த நீரை காஃபி மக்கில் ஊற்றினேன். காஃபியின் மணத்தில் அடைத்திருந்த காதுகள் திறந்துக் கொள்ள, தூரத்தில் அவர்கள் மூவரும் பேசிக் கொள்வது காதில் விழ ஆரம்பித்தது. யார் யாரோடு பேசிக் கொண்டார்களென்றுத் தெரியவில்லை என்றாலும், யாரோ ஒருவர் யாரோ ஒருவரிடம் பேசிக் கொள்வது கேட்டது.
நேற்று துரைசாமியைச் சந்தித்தேன்
டி கே
ஆமாம் டி கே
என்ன சொன்னான்
உன்னோடு பொழுதைக் கழித்து வெகு மாதங்களாகிவிட்டது என்றான்
நீ என்ன சொன்னாய்
போகலாம் என்றேன்
எங்கே சென்றீர்கள்
பாருக்கு அழைத்துச் சென்றான்
என்ன சொன்னான்
எதுவும் சொல்லவில்லை. சிப்பந்தியை அழைத்தான்
அழைத்து
ஒரு குவாட்டர் பகார்டி லெமன் எடுத்து வரச் சொன்னான்
சரி
கூடவே எனக்கு செவனப்பும் அவனுக்கு தண்ணீர் பாட்டிலொன்றும் எடுத்து வரச் சொன்னான்
எலுமிச்சை
அதை எட்டுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துவரச் சொன்னான்
பின்னர்
சிப்பந்தி அவன் கேட்டவை அனைத்தையும் எடுத்து வந்தான்
பின்
அவனது கோப்பையை அங்கிருந்த நீரைக் கொண்டு கழுவிக் கொண்டான்
பின்
அந்தக் கோப்பையை ஒருமுறை மூக்கினருகில் கொண்டு சென்று பழைய நாற்றம் எதுவும் இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டான்
பின்
பகார்டி லெமனை முப்பது மில்லியை அந்தக் கோப்பையில் ஊற்றிக் கொண்டான்
பின்
செவனப்பை அறுபது மில்லி ஊற்றிக் கொண்டான்
பின்
கோப்பையின் விளிம்பு வரையிலும் தண்ணீரைச் சேர்த்துக் கொண்டான்
பின்
எலுமிச்சையின் ஒரு துண்டைக் கோப்பையில் போட்டுக் கொண்டான்
பின்
எழுமிச்சை அந்த நீரில் மூழ்கிப் போவதைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்
பின்
சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்
பின்
கோப்பையிலிருந்த திரவத்தை மடமடவென குடித்தான்
பின்
கோப்பையில் மீண்டும் முப்பது மில்லி பகார்டி லெமனை ஊற்றிக் கொண்டான்
பின்
செவனப் அறுபது மில்லியை ஊற்றினான்
பின்
எலுமிச்சையிலிருந்து குமிழ்கள் மேலெழும்பி வருவதைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்
பின்
கோப்பையின் விளிம்பு வரையில் நீரைச் சேர்த்துக் கொண்டான்
பின்
சிகரெட்டை ஆழமாக இழுத்துக் கொண்டான்
பின்
கோப்பையிலிருந்த கலவையை மடமடவெனக் குடித்தான்
பின்
புகையை ஊதினான்
பின்
சுசீலா என்னோடு இல்லை என்றான்
தெரியுமென்றேன்
என் பிள்ளையையும் அவளோடு எடுத்துச் சென்றுவிட்டாள் தெரியுமா என்றான்
ஆமாமென்றேன்
நாற்காலியில் சாய்ந்தமர்ந்துக் கொண்டான்
பின்
சிகரெட்டைத் தொடர்ச்சியாக இரண்டு மூன்று இழுப்பு இழுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கினான்
பின்
மீண்டுமொரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான்
பின்
பாட்டிலில் மீதமிருந்த முப்பது மில்லி பகார்டியையும் அப்படியே குடித்தான்
பின்
தொண்டையைச் செறுமிக் கொண்டப்பிறகு பேசுவதற்கு ஆயத்தமானான்
பின்
கேட்பதற்குத் தயக்கமாக இருந்தாலும், என்ன எதுவுமே பேசாமல் இருக்கிறாய் என்றுக் கேட்டேன்
சாப்பிடும் போதும் குடிக்கும் போதும் எதுவுமே பேசக் கூடாது எனும் மனநிலை இன்னும் எனக்கு மாறவில்லை என்றான்
பின்
வயிற்றை எக்கி நெஞ்சை நிமிர்த்தி தொண்டைக்குழிக்குள்ளேயே ஒரு ஏப்பத்தை விட்டுக் கொண்டான்
எல்லாம் அறிந்திருந்தும் என்னை ஏன் விட்டுச்சென்றாய் என்றுக் கேட்டான்
நான் பதிலெதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன்
அவன் என்னை ஊடுறுவிப் பார்த்தான்.
நான் சுசீலா அல்ல என்றேன்
நீ சுசீலாவாக முடியாது என்றான்
ஆமாம் சுசீலாவாலும் நானாக முடியாது என்றேன்
தலையைக் கவிழ்த்துக் கொண்டு இல்லை என்பதைப் போல தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டு, “உண்மை தான்” என்று உதடுகளுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
“ஆனால் நீ நானாகவும் நான் நீயாகவும் மாறமுடியும்” என்றவன். கண்களில் வெறுமை நிறைந்து வழிய, “என்னை ஏன் தனியாக விட்டுச் சென்றாய்” எனக் கேட்டான்.
அவன் அப்படிக் கேட்கையில் இயேசு கிருஸ்துவை சிலுவையில் அறையப் போகையில், “ஆண்டவரே என்னை ஏன் கைவிட்டுவிட்டீர்” என்றுக் கேட்பதைப் போன்று இருந்தது. அன்று இயேசுவுக்கும் அந்த ஆண்டவர் பதில் சொல்லவில்லை. இன்று இவனுக்கும் நான் பதிலெதுவும் சொல்லவில்லை. உண்மையில் அனைத்தையும் இழந்துவிட்டு தனிமரமாய் நிற்கும் இவனிடம் என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
அதனால்
எங்கள் முன்னிருந்த சிகரெட் பெட்டியிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து நானும் பற்றவைத்துக் கொண்டேன்.
பின்
உனக்கு நேரமாகிடிச்சா என்றுக் கேட்டான்.
ரியா காத்திருப்பாள் என்றேன்.
எனக்காகக் காத்திருக்க என் வீட்டில் எனக்கென யாருமே இல்லையென்றவன், கடைச் சிப்பந்தியை அழைத்து இன்னுமொரு குவாட்டரை எடுத்துவரச் சொன்னான்.
பின்
ரியாவைப் பார்க்கவேண்டுமென்றான். நான் என்னுடைய மொபைலை எடுத்தேன். அதற்கும் முன்னமே அவனுடைய மொபைலை என் முன் தள்ளி அதன் ஹோம்ஸ்க்ரீனைக் காட்டினான். கடைவாயில் இரண்டு அங்குலத்திற்கு நாக்குத் தொங்க விட்டிருந்த ஜெர்மன் ஷெப்பர்டின் புகைப்படம் அதிலிருந்தது. அதிர்ச்சியோடு, உனக்கு மஞ்சள் நிறப் பூனைகளின் மீது தானே பிரியம் அதிகமெனக் கேட்டேன். பூனைகள் நமக்கானவை இல்லை நண்பா. அவை நம்மை அண்டி வாழ்பவைகள் அல்ல. என்ன பசியிருந்தாலும் நம் வரவுக்காகக் காத்திருக்கும் உன் ரியாவைப் போலோ அல்லது என் சுசீலாவைப் போலோ காத்திருப்பவைகள் அல்ல. பசியென வந்து விட்டால் உணவு தான் அவைகளுக்கு முக்கியமே தவிர்த்து நீயோ நானோ அல்ல. நாய்களைப் போல பூனைகள் ஒருநாளும் உன்னைக் கொண்டாடாது. உன் காலைச் சுற்றி வரும் – அவைகளின் தேவைக்காக. ஒன்று கவனித்திருக்கிறாயா தோழா, நாயின் வாலைப் போல அவைகள் தங்களுடைய வாலைக் குழைத்து நிற்பதில்லை. உன் காலைச் சுற்றி வந்தாலும் அவைகளின் வால் வானம் நோக்கி நெடிந்துயர்ந்த பனைமரம் போலவே நிமிர்ந்து நிற்கும். அவைகளின் வாலை வைத்து அவைகளின் மனநிலையை நம்மால் கணிக்கவே முடியாது. ஆனால் நாயின் வால் என்பது ஒரு குறியீடு. அது நேராக மேல் நோக்கி நின்றால் – தன்னெதிரில் நிற்பவரை எச்சரிக்கிறது. அதே வால் வளைந்துப் போய் தன் இரு பின்னங்கால்களுக்கு நடுவிலிருந்தால் – அது பயந்துப் போயிருக்கிறது. இடமும் வலமுமாக வேகமாக ஆட்டினால் – தான் எதிர்பார்த்திருந்த ஒன்று வந்துவிட்டது. பூமிக்கு இணைக்கோடாய் நின்றால் – எதிரிமேல் பாயத் தயாராகிவிட்டது. இப்படி அதன் வாலின் ஒவ்வொரு அசைவுமே ஒரு குறியீட்டை உணர்த்தும். வாழ்க்கையின் பெரும்பகுதியைப் பூனைகளோடு கழித்துவிட்டேன். நாய்களின் அருமைத் தெரியாமலேயென்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, பார் சிப்பந்தி குவாட்டர் பகார்டியை எடுத்துவந்து டேபிளின் மீது வைத்துவிட்டு சென்றான்.
பின்
பேசுவதை நிறுத்திவிட்டு, பகார்டியைப் பார்க்க ஆரம்பித்தான்.
மீண்டும் குடிக்க ஆரம்பித்துவிட்டானா..?
நான் காஃபிக் கோப்பையோடு அங்கே சென்றபொழுது, அவர்கள் மூவரும் என் வருகைக்காகக் காத்திருப்பதைப் போல அமைதியாகவே அமர்ந்திருந்தார்கள். எனில் இத்தனை நேரமும் என் காதுகளில் விழுந்தக் குரல் யாருடையது…? என்கிற கேள்வியை ஓரமாய் வைத்துவிட்டு கோப்பையிலிருந்தக் காஃபியை ஒரு மிடர் குடித்தேன். “வாசக மனம் என்பது அப்படித்தான்” காஃபியின் மணத்தையும் தாண்டி அதிலிருந்தக் கசப்பு தொண்டையில் இறங்கியது. கண்களை மூடிக் கொண்டு என்னுடைய சுழல் நாற்காலியில் சாய்ந்தமர்ந்தேன்.
என் இடப்புறமிருந்து தொண்டையைச் செறுமிக் கொள்ளும் சப்தமும் அதைத் தொடர்ந்து, “நாலு மாசம் முன்ன ஒரு ஊருக்குப் போயிருந்தேன். எந்த ஊர் என்பது இங்கே முக்கியமே கிடையாது. ஏன்னா எல்லா ஊர்லயும் மனிதர்கள் தான் வாழ்கிறார்கள். சிந்தனை அளவில் ஊருக்கு ஊர் கொஞ்சம் கூடுதல் கூறைவு இருக்கலாமே தவிர்த்து எல்லா ஊர்லயும் ஒரே மாதிரியான மனிதர்கள் தான். தனியா நிற்கிறப்ப நல்லவனா இருப்பான். கூட்டம் சேர்ந்துட்டாங்கன்னா அங்கே கூட்டு மனப்பான்மை வந்திடுது. கூட்டுமனப்பான்மை வந்ததும் அவங்க செய்றது மட்டுமே சரின்னு நினைக்க ஆரம்பிச்சிடுறாங்க. சாலை அனைவருக்குமானது கிடையாது. சாலை – வாகனத்திற்கானது. நடைபாதை – பாதசாரிகளுக்கானது. இல்லையா. நடைபாதையில் வாகனம் போகக்கூடாது. சாலையில பாதசாரிகள் நடக்கக் கூடாது. இது அடிப்படையான ஒரு விஷயம். பாதசாரிகள் சாலையைக் கடக்க மட்டுமே அனுமதி உண்டு. அதுவும் அவர்கள் கடந்துப் போறதுக்காகவே ஒரு இடம் இருக்கு. தனியா போகிறப்ப இந்த விதிகளை சரியா மதிக்கிற மனிதன், கூட்டம் சேர்ந்துட்டா போதும். அப்படியே தலைகீழா மாறிடுறான். நான் அந்த ஊருக்குப் போயிருந்த நேரம், திருவிழா காலம். கூட்டம் கூட்டமா ஜனங்க போய்கிட்டே இருக்கிறாங்க. பெரும்பாலான தெருவும் சாலையும் அவங்களுக்காக ஒதுக்கிட்டாங்க. தலையைச் சுத்தி மூக்கைத் தொடுற மாதிரி நான் போக வேண்டிய இடத்துக்கு சுத்திகிட்டே இருக்கிறேன். ஒரு நாலுமுக்கு ஜங்க்ஷனில் சிக்னலுக்காக நான் காத்திருக்கிறேன். எனக்கு வலதுபக்கம் திரும்பனும். ஆனா இந்தத் திருவிழா கூட்டத்துக்காக அந்த ரோட் ப்ளாக் பண்ணி வச்சிருக்கிறாங்க. இடதுபக்க சாலையில இருந்தும் வலதுபக்க சாலையில இருந்தும் ஜனங்கள் இங்குமங்குமா நடந்துட்டே இருக்கிறாங்க. எனக்கு சிக்னல் விழுந்துடிச்சு, ஆனா என் வண்டியை நான் நகர்த்த முடியல. ஏன்னா ரெட் சிக்னல் விழுந்ததைக் கூடப் பார்க்காமலே கூட்டம் ரோடை கிராஸ் பண்ணிட்டே இருக்கிறாங்க. ஹாரன் அடிச்சு ஒதுங்க சொன்னா, திரும்பிப் பார்த்து முறைக்கிறானுங்க. அதோட அர்த்தம் நீ காருக்குள்ள ஏசி போட்டுட்டு தான உக்காந்திருக்கிற. நாங்க வேகாத வெயில்ல நடந்து போயிட்டு இருக்கிறோம். நீ கொஞ்சம் பொறுத்து போனா தான் என்னன்னு கேட்கிற மாதிரி இருந்துச்சு. அந்தக் கூட்டம் கொஞ்சம் குறைஞ்சதும் வண்டியை நகர்த்தினா, சிக்னல் சிவப்பாகிடிச்சு. மறுபடியும் இந்தக் கூட்டம் இந்தப் பக்கத்துல இருந்து அந்தப் பக்கத்துக்கும், அந்தப் பக்கத்துல இருந்து இந்தப் பக்கத்துக்குமா கடக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த மாதிரியான முட்டாள் ஜனங்களை மனசுல வச்சுட்டு தான் வண்டியை ஓட்டிட்டு இருக்க வேண்டியதா இருக்கு. இவனுங்க எல்லாம் படிச்சவனுங்க தானான்னே எனக்கு அந்த நேரத்துல ஒரு சந்தேகமே வந்திடிச்சு” அந்தக் குரல் பேசி முடிக்கவும், எனது வலதுபுறமிருந்து, “படிச்சிருந்தா மட்டும்” என்று எகத்தாளமாக பதில் வந்தது. நான் கண்களைத் திறக்காமல் அப்படியே சாய்ந்தமர்ந்திருந்தேன். “ஓரு பெண்கள் கல்லூரி வாசலில் நண்பன் ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருந்தேன். நான் நின்ற இடத்தில் நிறைய வேன்கள் நின்றிருந்தன. அந்த வேன்கள் அத்தனையும் இந்தக் கல்லூரி மாணவிகளை அவரவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான வேன்கள். சரியா. கல்லூரி முடிந்தது தான் தாமதம், நல்ல இறுக்கமா கட்டி வச்சிருக்கிற எலுமிச்சை மூடை கிழிஞ்சுப் போனா, எலுமிச்சைங்க எல்லாம் எப்படி சிதறி ஓடுமோ அப்படி ஓடி வர்றாளுங்க. ரோட்ல போயிட்டு இருந்த அத்தனை வண்டிகளும் டயர் தேய பிரேக் பிடிச்சு நிப்பாட்டிட்டானுங்க. இவளுங்க எதுக்கு இப்படி முண்டியடிச்சுட்டு ஓடி வர்றாளுங்கன்னு பார்த்தா, நிற்கிற வேன்ல சீட் பிடிச்சு உட்கார. இதுல நீ படிச்சவங்க எல்லாம் ரூல்ஸை ஃபாலோ பண்ணிடுவாங்க அப்படீங்கிற மாதிரி பேசிட்டு இருக்கிற” என்றுச் சொல்லி நிறுத்தினான். “படிப்பு என்பது பெயருக்குப் பின்னால் டிகிரியாகப் போட்டுக்கொள்ள உதவும், படித்தப் புத்தகங்கள் அலமாரியில அடுக்கி வைத்து பெருமைப் பேச உதவும். மற்றபடிக்கு…” சொல்லி நிறுத்திய லீன் பால் தன் இரண்டுக் கைகளையும் விரித்து தோளைக் குறுக்கி வேறெந்த பயனும் இல்லை என்பதாய் காட்டியிருப்பான் என்பது என் கண்கள் மூடியிருந்தாலும் என்னால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது. இப்பொழுது எனக்கு நேர் முன்னே தன் விரல் நுனியை ஓடவிடும் ரிதம் கேட்டது. “ஒருவர் நிறைய படித்தால் படிப்பாளி ஆகலாம். ஆனால் வாசிக்கத் தெரிந்தால் மட்டுமே வாசகனாக முடியும்” அழுத்தம் திருத்தமாய் என் எதிர் நாற்காலியிலிருந்து குரல் வந்தது. சில நொடிகள் மௌனமாய் கடந்தது. “எல்லாம் நம்ம கல்விமுறையால வந்தது.” மீண்டும் மேஜையில் விரல் நுனி ஓடும் ரிதம் கேட்டது. “கல்வித்துறையும் சரி நம்முடைய பேராசிரியர்களும் சரி மாணவர்கள் வாசகர்கள் மத்தியில் படித்தலுக்கும் வாசித்தலுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பாடப்புத்தகத்தைப் படித்தால் போதுமானது. அந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை உள்வாங்கிக் கொண்டால் போதுமானது. அந்தத் தகவல்கள் சரியானது தானா என்று தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அப்படி தெரிந்துக் கொள்வதால் எழும் கேள்விகளுக்கான விடையைத் தேட இங்கே எந்தவொரு மாணவனுக்கும் கால அவகாசம் கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும் அவனது கேள்விக்கு பதிலளிக்க எந்தவொரு பேராசிரியனும் தயாராக இல்லை. மதிப்பெண்களுக்கான தேர்வே அவன் என்ன தேர்ந்தெடுக்க வேண்டுமென்கிற வெளியை அவனுக்கு வழங்குகிறது. அவன் தன்னுடைய சிந்தனைக்களத்தை வலுவாக்க இறங்கினால், இந்தச் சமூகத்தில் அவனுக்கான மதிப்பு என்னவெனத் தீர்மானிக்கும் மதிப்பெண் பட்டியலில் அவன் பெயர் விட்டுப் போய்விடும். மதிப்பெண்களுக்காகவே படித்து முடித்து தங்களைக் கட்டமைத்துக் கொண்டவர்களிடம் எம்மாதிரியான வாசிப்பை எதிர்பார்க்க முடியும்.? அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வார்த்தைகள் மட்டுமாகத் தானே இருக்கும்..! இந்நிலையில் உன் மூளைக்கு வேலைக் கொடுக்கிறேன். என் எழுத்தை வாசிக்க உன் நேரத்தைக் கொடு என்றால் அவர்கள் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வேலையைப் பார்க்க செல்வார்களா அல்லது நான் என் மூளைக்கு வேலைக் கொடுக்கும் எழுத்தை வாசித்து என் சிந்தனையை மேம்படுத்தப் போகிறேனென்று உட்கார்ந்து வாசிக்கப் போகிறார்களா..? அவர்கள் மூளைக்கு வேலையென்றால் சூடூக்கோவோ அல்லது வேறு ஏதேனுமொரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களே.” கண்களைத் திறந்து ரஜினியைப் பார்த்தேன். அவன் குறும்பு விழிகளால் என்னைப் பார்த்து புன்னகைத்தபடிக்கு அமர்ந்திருந்தான். “முடிவா என்ன சொல்ல வர்ற” என்றுக் கேட்டேன். “படித்தலுக்கும் வாசித்தலுக்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் அறிந்த ஒருத்தன் இருப்பான் அவனைத் தேடு என்கிறேன்” என்றான். வலப்புறம் திரும்பி லீனைப் பார்த்தேன். காஃபி மக்கை மேல்பக்கமாய் பற்றி அவனது முழு கவனத்தையும் கோப்பையினுள் இருக்கும் காஃபியைக் குடிப்பதில் செலுத்தியிருக்க, கணேஷ் குவேராவோ கோப்பையைப் பக்கவாட்டில் பிடித்து கண்களால் என்னை அளந்துக் கொண்டிருந்தான். ரஜினியைப் பார்த்தேன். காஃபி கோப்பையைப் பற்றியிருந்த கை கீழ்பக்கமாக இருக்க, அவன் கண்கள் மட்டும் என்னை ஊடுறுவியபடிக்கு இருந்தது. காஃபிக் கோப்பையை மொட்டை மாடியின் கைப்பிடி சுவற்றின் மேல் வைத்தேன். சற்றுமுன் தண்ணீர் போத்தலோடு சண்டைப் போட்டுக் கொண்டிருந்த அந்தக் கறுப்பு வெள்ளை நாய், நான் அதற்கு வைத்திருந்த உலர் உணவைத் தின்றுக் கொண்டிருந்தது. ஒருவாரம் முன்பாக அதன் மலத்தையே அது உண்ண வேண்டிய நிலையில் – கண்கள் சுருங்க – மேலுதடும் கீழுதடும் பிரிந்து ஒதுங்கிக் கொள்ள – பற்களைத் தாண்டி நாக்கு வெளியே வர தயங்கி நிற்க – தன் ஈர நாசியால் மேற்பக்கம் உலர்ந்திருந்த அதன் மலத்தை நுகர்ந்து – இரண்டங்குலம் பின் வாங்கி – மீண்டும் நெருங்கி – கிட்டித்தப் பற்களால் அந்த மலத்தைத் தீண்டி – மீண்டும் பின்வாங்கி – மறுபடியும் முன் நகர்ந்து – பற்களால் தீண்டி – முகம் உதறி – வலுக்கட்டாயமாக நாக்கை நுனி நீட்டி – தொட நெருங்கி – பின்வாங்கி – நாக்கை உள்ளிழுத்து – வாய் திறந்து – பற்களால் அந்த மலத்தின் நுனியைக் கடித்து – தலை உதறி – பசி வரப் பத்தும் பறந்துப் போகும். நானளித்த இந்த உலர் உணவை உண்பதில் அதற்கு எவ்வித சங்கடமும் இல்லை – இந்த உணவால் அதன் வயிறு நிறையுமா – தெரியாது – ஆனால் கண்டிப்பாக அது மீண்டும் அதன் மலத்தைத் தின்னும் அவல நிலைக்குச் செல்லாது. “நீ தினமும் உணவளிக்க வேண்டியா அது உன் கண் முன்னே அதன் மலத்தை உண்ணச் சென்றது” என்று லீன் பாலின் குரல் என் காதுகளில் ஒலித்தது. இல்லையென்பதாய் தலையாட்டினேன்.
பீடி சிகரெட் குடி என்பதெல்லாம் தவறான – மோசமான பழக்கம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் எனக்குக் கிடையாது. ஆனால் இதைவிடவும் மிகவும் மோசமான பழக்கம் ஒன்றிருக்கிறது. அது – தனக்கு மேலான அதிகாரியிடம் அல்லது தனக்கு மேலான தகுதியுடைவர் என்று நினைக்கும் ஒருவரிடம் நற்பெயர் பெரும் பொருட்டு தன்னை வருத்திக் கொள்வதோடல்லாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் கால்களை இழுத்துவிட்டு அவர்கள் தோள் மீதேறி, தன் சுயலாபத்திற்காக, தன் சுய முன்னேற்றத்திற்காக அவர்களுக்கான வாய்ப்பைத் தட்டிப்பறித்து – எட்டிப்பிடித்து – மேலேறிச் செல்லும் பழக்கம்.
குடிப்பழக்கத்தையும் புகைப்பழக்கத்தையும் தவறென சொல்லும் இந்தச் சமூகம், இந்தப் பழக்கத்தை மட்டும் ஏதும் சொல்லாது. தேவைப்பட்டால் “அவனைப் பார்த்தியா” என்று அவர்களை உதாரணப்புருஷர்களாக உருவகப்படுத்தி அம்மாதிரியான நினைப்போ அல்லது செயல்படும் எண்ணம் இல்லாதவர்களுக்கும் கூட அந்தப் பழக்கத்தை ஊட்டிவிட முயலும்.
இந்தச் சமூகம் என்னையும் என்னுடைய இளம்வயதில் துரத்தியது. முடிந்தவரையிலும் அவர்களுடைய பார்வைக்குப் படாதபடிக்குத் தப்பித்து ஓடினேன். ஒருகட்டத்தில் ஓட உடம்பில் தெம்பற்று எதிர்த்து நின்றேன். இவன் இவ்வளவு தான் என்பதைப் போன்று சமூகம் என்னை ஒதுக்கிவிட்டு வேறொருவனைத் துரத்த ஆரம்பித்தது. இதோ இப்பொழுது மீண்டும் துரத்த ஆரம்பித்திருக்கிறது. “உனக்கப்புறமா எழுத வந்தவன்…” என்கிற ரீதியில். மிகவும் ஆயாசமாக அயர்ச்சியாக இருக்கிறது என்று சொல்வதை விடவும், இப்படி எழுதுவதற்கே எனக்கு ஆபாசமாக இருக்கிறது.
எனக்கு எழுத வருவதால் எழுதுகிறேன். அதற்கு அர்த்தம் நான் எழுத்தாளன் என்று அறியப்படுவதற்காகவோ அல்லது எழுத்தை வைத்து பணம் சம்பாதிக்கவோ அல்ல. தோன்றும் போது எழுதுவேன். தோன்றவில்லை என்றால் எழுதுவதில்லை. ஒரு இரவு முழுக்க விழித்திருந்து எழுதிய காலமும் உண்டு. தொடர்ச்சியாக நாலைந்து மாதங்கள் ஒரு அட்சரம் கூட எழுதாமல் இருந்த காலங்களும் உண்டு. இவ்வளவு தான் நான். நான் யாருக்கு உண்மையாக இருக்கிறேனோ இல்லையோ எனக்கு நான் உண்மையாக இருக்கிறேன். அதன் அர்த்தம் என் படைப்புகளுக்கு நான் உண்மையானவாக இருக்கிறேன். அதனால் அது வெற்றியடைந்தாலும், எவர் பார்வைக்கும் வராமல் போனாலும் அதைக் குறித்து எந்தவொரு மனக்கிலேசமும் எனக்குக் கிடையாது. சுந்தர ராமசாமி சொல்வது போல ஒரு மனிதனின் முக்கியமான பிரச்சனையே சக மனிதனிடமிருந்து எப்படி தப்புவது என்பது தான்.
எட்டுக்கால் பூச்சிக்கு எட்டே எட்டுக் கால்கள் தாம். ஆனால் மனித மனதிற்குள் எத்தனைச் சிந்தனைகள் ஓடுகிறதோ அத்தனைக் கால்கள் என்கிற நகுலனின் வரிகள் நினைவுக்கு வந்தது. வீட்டிற்குள் படுத்திருக்கும் க்ரேட் டேனைப் பார்த்தேன். வயதின் முதிர்ச்சியால் – எழுந்து நிற்கவோ – உண்ணவோ கூட உடலில் தெம்பின்றி சுருண்டுப் படுத்திருப்பது தெரிந்தது. அதன் உடல் விட்டு உயிர் பிரியும் முன்னே நான் எழுத ஆரம்பித்த கதையை எழுதி முடித்து அதற்கு சமர்ப்பிக்க வேண்டுமென்கிற முடிவோடு, விரலிடுக்கில் பற்றியிருந்த சிகரெட்டை தரை ஓடு பதிக்கப்பட்ட மொட்டைமாடியின் தரையில் போட்டு காலால் நசுக்கி விட்டு என்னுடைய அறைக்குள் நுழைந்தேன். சற்று முன் நான் எழுத ஆரம்பித்திருந்த கையெழுத்துப் பிரதி மேஜையின் மேல் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. என்னுடைய மூக்குக் கண்ணாடியை எடுத்து கண்களில் மாட்டிக் கொண்டு, நான் சற்று முன் எழுதியதை மீண்டுமொரு முறை வாசிக்க ஆரம்பித்தேன்.
ஓவியம் போன்ற எழுத்துக்களால் வரையப்பட்ட கோட்டோவியம்
இங்கு உயிர் வாழும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மிகப்பெரிய ஆசை இருக்கிறது. அந்த மிகப்பெரிய ஆசை என்பது ஒருவகையில் அவர்களுடைய பேராசையாகவும் இருக்கிறது. அதை அவர்களால் வெளியே சொல்ல முடிவதில்லை, காரணம் அந்த ஆசையானது அதைக் கேட்கும் ஏனையோருக்கு மிகவும் எளிமையானதாகத் தெரிந்துவிடுமோ என்கிற தயக்கம். மண் பெண் பொன் என்கிற மூன்றையும் தாண்டிய ஆசையது. இது மூன்றும் கிடைத்தாலும் நிறைவேறாத ஆசையது. சொந்த மண்ணில் பொன்னாலான கட்டிலில் மனதிற்குப் பிடித்த பெண்ணோடு கூடிக் குலாவி களித்தப் பின்னரும் தூக்கம் வராது விழித்திருக்கும் பொழுதினில் மனதில் தோன்றும் ஏக்கமான ‘கனவுகளற்ற உறக்கம்’ என்கிற ஆசை தான் அது.
கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக் காலமே
பட்டு மெத்தையில் சுத்தப் பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலமே
ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் சூப்பர் ஹிட்டான பாடலில் வரும் வரிகள் இது. ஏதோ பணக்காரர்கள் மட்டும் தூக்கமற்று இருப்பவர்களைப் போலவும், ஏழைகள் நிம்மதியாகத் தூங்கிக் களிப்பதைப் போலவும் சித்தரிக்கப்பட்ட வரிகள். மரணமும் தூக்கமும் மனிதர்களில் ஏழைப் பணக்காரன் என்கிற வர்க்க பேதமோ அல்லது ஆண் பெண் என்கிற பால் பேதமோ பார்ப்பது கிடையாது. எனக்காகக் காத்திருக்கிறாயா என ஏளனமாகக் கேட்கும், ஆம் என்றால் சரி நான் வரும் வரையில் காத்திரு என்று அதே ஏளனத்தோடு பதிலளித்துவிட்டு, காத்திருப்பவரை அப்படியே காத்திருக்க வைத்து வேடிக்கைப் பார்க்கும். இல்லையில்லை நான் விரும்பும் நேரத்தில் நீ வந்தேயாக வேண்டுமென மனிதர்களுக்கே உரிய தன்முனைப்போடு அதன் கையைப் பிடித்து இழுத்தால், அதற்கான பின்விளைவுகளை அவர்கள் எதிர்கொண்டேயாக வேண்டும். அந்தப் பின்விளைவுகளை எதிர்கொள்ளுமளவிற்கு என் உடலிலும் மனதிலும் சக்தியில்லை அதுவும் போக எந்தவொரு விஷயத்தையும் வலிந்து திணிக்கப்படுவதிலும், வம்படியாய் இழுத்து அணைத்துக் கொள்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த முட்டாள்தனமானக் காரணமாகவே கடந்த ஏழு நாட்களாக நான் உறக்கமின்றி அமர்ந்திருக்கிறேன்.
இந்த நிமிடம் கடவுள் என் முன்னே வந்து உன் பிரச்சனையை எல்லாம் தீர்ந்துப் போகுமளவிற்கு பணம் வேண்டுமா அல்லது உன் கவலைகள் எல்லாம் நீர்த்துப் போகுமளவிற்கான தூக்கம் வேண்டுமா எனக் கேட்டால், நான் சற்றும் தயங்காமல் தூக்கத்தைத் தான் கேட்பேன். ஒருவேளை அதே கடவுள் என்னிடம் தூக்கமா மரணமா என்று இருவிரலை நீட்டுவாரெனில், நிரந்தரத் தூக்கம் போதுமென அவரின் விரல் பற்றிக் கொள்வேன். என்ன இத்தனை நாளும் கடவுள் இல்லையென்றுச் சொல்லி நாத்திகம் பேசியவன், கடவுளின் கரம் பற்றிக் கொள்வதைப் பற்றிப் பேசுகிறானே என்று ஆச்சரியமாக இருக்கிறதா…? உண்மை தான். குற்றவுணர்வும் அதனால் உண்டான மன உளைச்சலும் உருவாகும் வேளையில் கடவுளின் நினைப்பு வராமல் இருந்தால் மட்டுமே நீங்கள் ஆச்சரியம் கொள்ள வேண்டும்.
அது எப்படி ஒரு மனிதன் ஏழு நாட்கள் உறங்காது விழித்திருக்க முடியுமென நீங்கள் சந்தேகிப்பது தெரிகிறது. உங்களது சந்தேகம் சரியானது தான். எனக்கு ஒருசில நாட்கள் தூக்கம் வந்திருக்கிறது. நான் ஆழ்ந்து தூங்கும் முன்னமே என் காதருகினில் யாரோ ஒருவர் வந்து “ஓவ்வ்வ்வ்” எனக் கத்தி எழுப்பி விடுவார்கள். இதை வாசிக்கும் நீங்கள் நாள் முழுக்க தூங்கவேண்டிய தூக்கத்தை பத்து நிமிடத்தில் தூங்கித் தீர்த்திடும் பயிற்சியான “டைனமிக் தூக்கம்” என்பதை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த டைனமிக் தூக்கத்திற்காகவது ஸ்ட்ராங்கான காஃபி தேவைப்படும். ஆனால் எனக்கு அது கூட தேவையானதாக இல்லை. கண் நிறைய தூக்கம் வந்து அசந்துப் போய் கண்ணயறும் நேரம் இந்தக் குரல் என்னை எழுப்பி விட்டுவிடுகிறது, திடுக்கிட்டு கண் விழிக்கும் அடுந்த நொடியில் கண் நிறைந்திருந்த தூக்கம் காணாமல் போய்விடுகிறது. மீண்டும் நித்திராதேவி என்னைத் தழுவ நான் காத்திருக்க வேண்டியதாகிவிடுகிறது.
000
வாஸ்தோ
அஞ்சலையும் நானும் கவிதை தொகுப்பு சொந்தக்காரர். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். நடுகல் பதிப்பகம் வாயிலாக மூன்று நாவல்கள் வெளிவந்துள்ளது. சர்ரியலிசமும் சாம்பார் ரசமும், 100 % கோபத்தை கண்களில் காட்டிய பெண், ஊசிப்புட்டான், போஹோ, சக்ர.