‘த்தா, ஆபீசாடா இது, த்தூ‘, கேட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஸ்டான்ட்  போட்ட விஜய்  உள்ளே நுரைத்த கசப்பு எச்சிலாக வாயினுள் சுரந்ததை ஓரமாகக் காறித்  துப்பினான். அந்தப் பிரம்மாண்ட  அலுவலகக் கட்டிடத்தின் இரண்டு நுழைவாயில்களிலும் உள்ளே நுழையும் வழி மட்டும் விட்டுவைத்து மீதி இடமெல்லாம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ‘வாகனங்களை வெளியே நிறுத்தவும்’ எனும் அறிவிப்பு  கேட்டில் மாட்டப்பட்டிருந்தது. பிரதான சாலையிலிருந்து ஒரு குறுகலான தெரு கிளைபிரியும் சந்திப்பில் இருந்தது அந்த அலுவலகம். பிரதான சாலையில் வாகனங்களை நிறுத்தத்  தடை இருந்ததால் அந்தச்  சந்தின் முனையிலிருந்தே இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நெருக்கியடித்து நிறுத்தப்பட்டிருந்தன. பக்கத்தில் இருந்த ஒரு ‘மெஸ்’ஸிற்கு சாப்பிட வருபவர்களின் வாகனங்கள்தான்  பெரும்பாலானவை.

‘அப்படி வக்கனையா தின்னு இந்த ஒடம்ப வளக்காட்டி என்ன, த்தூ’, தலைக்கவசத்தைக் கழற்றி ஹாண்டில் பாரில் மாட்டுவதற்குள் மீண்டும் கசப்பு நுரைத்தது. அவசரமாகத்  துப்பினான்.

வாயிலில் நின்ற காவலாளி மிடுக்காகத்  தெரிந்தான். மத்திய வயதில்  சலவை மடிப்புக் கலையாத கச்சிதமான சீருடையில்  சுத்தமாக மழிக்கப்பட்ட தாடையும் திருத்தமான மீசையும் விபூதியும் குங்குமமும் துலங்கிய நெற்றியுமாக ‘அவதார’மாக  இருந்தான். 

‘மிலிட்டரியில ஓசியில குடிச்சிட்டு, சொகுசாத் தின்னுட்டு, திரும்பி வந்து, பென்ஷனையும் வாங்கீட்டு, வேலையும் பாத்து  சொகமா திரியாறுனக. த்தா, இங்கே இருக்கறவன்  நாயா பாடுபட்டும் கொஞ்சம் கூட மரியாதை இல்லை, த்தூ.” மீண்டும் கசப்பு அனிச்சையாக துப்பலாக தெறித்தது.                                         

காவல் அறையின் வெளியே போடப்பட்டிருந்த மேஜையின் முன் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து பக்கத்தில் நின்றிருந்த சிலருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான் செக்யூரிட்டி. மேஜையின் மீது சில பதிவேடுகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டு பக்கத்தில்  ஒரு ஸ்கேலும் பேனாவும் வைக்கப்பட்டிருந்தது. அலுவலக வளாகத்தினுள்ளே பல கார்கள் நின்றிருந்தன. சுற்றி இருந்தவர்கள் அந்தக் கார்களின் ஓட்டுநர்கள் போலத் தெரிந்தனர். காலையில் அலுவலர்களை வீட்டிலிருந்து அழைத்து வந்து அலுவலகத்தில் விட்டு விட்டதால் இன்னும் சிறிது நேரத்திற்கு வேலை எதுவும் இருக்காது.

‘நம்ம அப்பனும் டூட்டிக்கு வந்திருந்தா இந்நேரம் இதேபோல நிண்ணு கதை பேசிகிட்டு இருந்திருப்பானா! த்தா, இப்ப ஆஸ்பத்திரியில படுத்துட்டு உயிர வாங்கறான். இதுல பெரிய ஒழுக்கப்  புண்டை வேற. ஆஸ்பத்திரியில அட்மிட்டாகி இருந்தாலும் இருபத்து நாலு மணிநேரத்தில லீவு லெட்டர் கொடுக்கணுமாம். கொடலு வீங்கற வரைக்கும்  குடிக்கும்போது இந்த வெவர மயிரு எங்கே போச்சாமா? த்தூ’, அவசரமாக துப்பிவிட்டு ‘செக்குருட்டி’யைப் பார்த்து நடந்தான்.

“வாங்க சார், யாரைப் பாக்கணும்?”, அனைவரது கண்ணும் அவனை எடைபோடுவது தெரிந்தது. கசங்கியிருந்தாலும் அவனது காக்கிக்  கால்சட்டையும் தலைமயிர் கட்டிங்கும் ஷூவும் அவனை யார் என்று அடையாளம் காட்டியிருக்க வேண்டும்.

‘சாதாரண ஆளாயிருந்தா  இவனெல்லாம் என்னா எகிறு எகிறு எகிறியிருப்பான்’, வாயில் கசப்பு பொங்கும் முன் பேசத் தொடங்கினான்.

“பியூன் சுந்தரத்தோட ‘சன்’ணுங்க. லீவு லெட்டர் கொடுத்து விட்டிருக்காரு.”

“அப்பா எப்படி இருக்காருங்க, பாவம், கீழே விழுந்ததுட்டாராமே, சுகர் லோ ஆயிடுச்சா?”

“இப்ப பரவாயில்லே. சுகர் அதிகமாத்தான் இருக்கு. தடுக்கி விழுந்துட்டாரு.”

“நல்லாப்  பாத்துக்குங்க அப்பாவை, இன்னும் ரெண்டு வருஷந்தான் இருக்கு ரிடயர் ஆக. பாவம், சுறுசுறுப்பான மனுஷன். ”

“மேலே ரெண்டாவது மாடி, வலது பக்கம் நாலாவது ரூம்பு. கேசவன் சார்னு கேளுங்க.” ஒரு டிரைவர் சொன்னார்.

த்தா, தண்ணியப் போட்டுட்டு  விழுந்துட்டான்யா அந்த ஆளு. வாய்க்குள் சுரந்த கசப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். வேலை கிடைத்ததைக் காரணமாகக் கொண்டு, வேலை கிடைத்த அன்றிலிருந்து வீட்டை விட்டு வெளியேறியிருந்தான். அப்பனும் தொல்லை ஒழிந்தது என விட்டுவிட்டான். அம்மாதான் ஆரம்பத்தில் ‘நச்சி’க்கொண்டே இருந்தாள். பிறகு அவளும் அவனில்லாத வாழ்க்கைக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டாள்.                                 

“இதுல ஒரு என்ட்ரி போட்டுட்டு போங்க சார். போகும்போது அவுட் போட்டுடுங்க”, என ஒரு பதிவேட்டை விரித்தான் செக்யூரிட்டி. அவன் கிறுக்கலாக நிரப்பினான்.      

“சார், டாய்லெட் எங்க இருக்கு?”

“உள்ளே போனதும் ரைட்லே கடைசியிலே.”

‘மொதல்லே, போய்  துப்பி, வாயை கொப்புளிக்கணும்.’ விஜய் வேகமாக நகர்ந்தான்.

மூடிய அறைக்கதவை மெதுவாகத் தள்ளி எட்டிப் பார்த்தான். கேசவன் சார் எனச் சொன்னபோது அப்பனைப் போலவே ‘கெள்டு’ ஒருத்தனை எதிர்பார்த்தவனுக்கு முப்பது வயது நிரம்பாத அதிகாரியைப்  பார்க்க எரிச்சலாக இருந்தது. ஏ சி அறையின் நறுமணத்தில் கச்சிதமாக இருந்தது அறை. வெள்ளை டர்க்கி டவல் போர்த்திய இருக்கையில் கண்ணாடி பதித்திருந்த மேஜையின்முன் சுவற்றில் மாட்டியிருந்த  வெள்ளை போர்டில் முக்கிய வேலைகள் குறிக்கப்பட்டிருந்தன. வருநர் அமர இரண்டு இருக்கைகள் இருந்தன. விஜய் வணக்கம் வைத்த பிறகுதான் அப்படிச் செய்திருக்க வேண்டியதில்லை என நினைத்தான். பழக்க தோஷம். அப்பனின் அடிமை ரத்தம். ஒரு தலையசைப்பில் வணக்கத்தை ஏற்றுக் கொண்டு அவர் பார்வையாலேயே என்னவெனக் கேட்டார்.

“பியூன் சுந்தரத்தோட ‘சன்’ணுங்க. லீவு லெட்டர் கொடுத்து விட்டிருக்காரு.”

“சுந்தரம் எப்படி இருக்காரு. நேத்து சாயந்திரம் கூப்பிட்டேன், ஸ்விட்ச்ட் ஆஃப் ஆ இருந்துது. இப்பத்  தேவலையா?”

‘வேலைக்கும் போறான், நாய் வளத்து விக்கவும் செய்யறான். நல்ல காசு’ என சுந்தரம் சொன்னது நினைவில் வந்தது. அப்படியெல்லாம் பணம் இருப்பதன் அடையாளம் எதுவும் தெரியவில்லை. மிதமான உயரம் எனினும் போலீசின் எடுப்பு இல்லை.கொஞ்சம் பூஞ்சையான உடம்பு போலத் தெரிந்தது. கண்களில் மறைத்து வைத்திருந்த  மருட்சியும் கலக்கமும் வியக்கச் செய்தது.             

“ரெண்டு நாள்லே டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு டாக்டர் சொல்லியிருக்காரு. சுகர் அதிகமா இருக்கு. கொஞ்சம் கம்மியாகணுமாம் . பத்து நாள் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கார்.”

“பரவாயில்ல. கொஞ்சம் கண்ட்ரோலா இருக்கச் சொல்லுங்க. அந்தப் பக்கம் வந்தா வந்து பாக்கறேன்.”

‘த்தா, படிப்பும் சகவாசமும்  நல்லா இருந்திருந்தா நாமளும் இப்படி இருந்திருப்போம்’ விஜய் அவசரமாக கீழே வந்து டாய்லெட்ட்டிற்குச்  சென்று  காறித்  துப்பினான். அங்கே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த ஒருவன்  அவனை விரோதமாக பார்த்தான்.

‘மயிரிலே போடுவாங்க அவுட்.’ விஜய் இன்னொரு வாயில் வழியாக வெளியேறினான். அவனது பைக்கை  நகர்த்த முடியாதபடி நெருக்கமாக வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. சிரமப்பட்டு வண்டியை வெளியே எடுத்தான்.

“த்தா, கொஞ்சமாச்சும் அடுத்தவனப் பத்திக் கவலப்படுறானுகளா” சத்தமாகவே சொன்னான். ஹெல்மெட் போடும் முன் ஒருமுறை  துப்பினான்.

வழியில் வாகனச் சோதனை நடந்துக் கொண்டிருந்தது. இன்னமும் மீசைமுளைக்காத பையன் கையைக் காட்டி நிறுத்தினான். கருகருவென நல்ல வாட்டசாட்டமாக தெரிந்தான். பயிற்சியில்தான் இருப்பான்.

“பி சி டிரைவர் பா, டாக் ஸ்குவாட்.”

“போங்க, போங்க“,என்றான் பையன்.

‘த்தா, இந்த மாதிரி ஒரு டூட்டிக்கு கூட போயிருக்கலாம்’,  வண்டியை ஒட்டிக்கொண்டே நடு ரோட்டில் துப்பினான். அரசாங்க வேலையில் சேரும் முன், அப்பன் லாரி ஒட்டும் பெருமையில் சிறு வயதிலேயே டிரைவர் வேலை மீது ஆசை வந்தது. அதனால் படிப்பில் கவனம் செல்லவில்லை. காலையில் நேரத்திலேயே லாரிக்கு போனால் இரவு மிகவும் தமாதமாகத் தான் வீட்டிற்கு வருவான் அப்பன். தினசரி ட்ரிப் என்பதால் அநேகமாக எல்லா நாட்களிலும் வேலை இருக்கும். என்றாவது ஒரு நாள் வீட்டில் இருந்தால் அன்று ‘பெசலா’க கோழிக்கறியோ ஆட்டுக்கறியோ குழம்பும் வருவலும் இருக்கும். அவனுக்கும் ஏதாவது ‘திங்க’ வாங்கித் தருவார். அன்று இரவு படுக்கும் பொழுது  அவனைத்  தன் போர்வைக்குள் கிடத்தி அணைத்துக் கொள்வார். அவரிடமிருந்து பழ வாசனையும் வெற்றிலை போட்ட மணமும் கலந்து வரும். அவரது அணைப்பு குளிருக்கு ‘சொகமாக’ இருக்கும். குளிர் இல்லையென்றாலும்கூட போர்வை போர்த்தித்தான் இருக்கும். ‘உப்புசமாக’ இருந்தாலும் அவன் மறுக்க மாட்டான்.

விஜய் ஐந்தாம் வகுப்பு படிக்கையில்தான் அப்பனுக்கு அரசாங்க வேலை கிடைத்தது. எப்பொழுதோ எட்டாவது பாஸ் செய்ததை  எம்ப்ளாய்மென்டில் பதிந்தது மறந்து போயிருந்தது. ஒதுக்கீட்டிற்கான காலியிடங்கள் நிரப்பப் படாததால் கூப்பிட்டு வேலை கொடுத்ததாக அப்பன் சொல்லிச்  சொல்லி மாய்ந்து போவான். உடல் உழைப்பைக் கோராதவேலை அப்பனுக்கு மெருகேற்றியது.  வருமானமும் ஓய்வு நேரமும் அதிகமானதும் குடிப்பதும் தின்பதும் அதிகமாகி  விட்டது. ஆரம்பத்தில் தலைமை அலுவலரின் எடுபிடியாக  இருந்ததால் தனி அந்தஸ்தும் இருந்தது போல. அதற்கான சில நன்மைகளும் இருந்திருக்கும்.  வேலை ஆறு மணிக்கு முடிந்தாலும் எட்டு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வருவான் அப்பன். வரும்போது வெற்றிலை போட்டு சிவந்த வாயில் பழ வாசனையும் வழக்கமாகி விட்டது. அவனது சிணுங்கலையும் மீறி அப்பொழுதும் சில நாட்களில் அவனை போர்வைக்குள் இழுத்துக் கொள்வார். 

வீட்டில் பணப்புழக்கம் அதிகமானதும் அவன் கையிலும் காசு கிடைத்தது. அப்பன் தாராளமாகவே காசு கொடுத்தான். பழவாசனையில் போர்வைக்குள் கிடந்த நாட்களில் காலையில் காசு கேட்டால் தட்டாமல் கிடைக்கும் என்பதை அவன் கண்டுகொண்டான். வகுப்பு சிறையாக தெரிந்தது. காலையில் ‘ஒண்ணுக்கு’ விடும் பொழுது  ‘கட் அடித்து’ பள்ளியை விட்டு வெளியேறிப் போகும் பெரிய வகுப்புப் பையன்களுடன் அவனும் போனான்.  எவ்வளவு நேரம்தான் வெய்யிலில் அலைய முடியும். பதினோரு மணிக் காட்சிகளுக்கு சில அண்ணாக்கள் செல்வது தெரிந்து  அவர்களுடன் அவனும் சேர்ந்துக் கொண்டான். ஒருநாள் ரயில் நிலையத்திற்கு பக்கத்தில் இருந்த ரீகல்  தியேட்டரில் நன்றாகச் சென்றுக் கொண்டிருந்த படத்தில் திடீரெனக்  கதைக்குச்  சம்பந்தமே இல்லாத  சில காட்சிகள் தோன்றின. சில நிமிடங்களில் மீண்டும் சரியான கதைக்கு திரும்பி வந்தது படம். கொஞ்சம் நேரத்தில் இடைவேளை வந்தது. டாய்லெட்டில் ‘ஒண்ணுக்கு’ போகும்போது ராஜாண்ணா தடுப்பைத் தாண்டி எட்டிப் பார்த்தார்.

“படம் எப்படி” என்று கேட்ட அவர் முகத்தைப் தலையைத் தூக்கிப் பார்க்கையில் அவரது கண்கள் பார்த்துக் கொண்டிருந்த இடம் வெட்கப்பட வைத்தது.

                ரீகல் தியேட்டரில் பதினோரு மணிக்காட்சிக்கு வாரத்திற்கு இரண்டு படம் என மாற்றிக்கொண்டு இருந்தார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஒரு படம். செவ்வாயிலிருந்து வியாழன் வரை மற்றொரு படம். எல்லாப் படங்களிலும் இடைவேளைக்கு முன்னும் பின்னும் என இரண்டு பிட் படங்களாவது இருப்பது வழக்கமாயிற்று. சில படங்களில் மூன்றும் நான்கும் கூட இருக்கும். ஏறக்குறைய  அனைத்து படங்களுக்கும் ராஜாண்ணாவும் அவனும் போனார்கள், சில நாட்களில் வேறு யாராவது உடன் வருவார்கள். அவனுக்கு காசு கிடைக்காத போது ராஜாண்ணா அவனுக்கும் சேர்த்து காசு போட்டார். தொடர்ந்து போனதில் சில முகங்கள் தெரிந்தவையாகியிருந்தன. கூலி வேலைக்குச் செல்பவர்கள் போல் தெரிந்த சிலர், ஆபீசுக்கு போவது போன்ற சிலர், வயதான பெருசுகள், வேலையில்லாத சின்ன வயசுக்காரர்கள் என எல்லா வயதினரும் எல்லாத்  தரப்பினரும் படத்திற்கு வந்தனர். அவனைப் போன்ற சிறுவர்கள் யாரும்  இல்லை.

                ரீகல் தியேட்டரில் படம் விட்டதும் அவர்கள் நேராக ரயில் நிலையம் சென்று அதன் முன் போடப்பட்டிருக்கும் மரத்தடி பெஞ்சில் அமர்ந்து டிஃபன் பாக்ஸில் கொண்டு வந்ததை சாப்பிடுவார்கள். பிறகு மத்தியான வகுப்பில் போய்ச் சேர்ந்துக் கொள்வார்கள். ஒருநாள் படத்தில் ஆறேழு பிட்டுகள்  இருந்தன. படம் முடிந்து வெளியே வந்ததும்   

“படம் சூப்பர் இல்லே. ஸ்கூலுக்கு போறத நெனச்சாத்தான் ரொம்ப போர் அடிக்குது. மத்தியானமும் மட்டம் போட்டுருவமா?” என்றார் ராஜாண்ணா.

“மறுபடியும் படமா?”

“இல்லே, வா, ஒரு எடம் காட்டறேன்.”

வழக்கமான இடத்தில் சாப்பிட்டு முடித்ததும் ராஜாண்ணா தோளில் கைபோட்டு இறுக்கி அணைத்து அழைத்துச் சென்றார்.  ரயில் நிலைய பிளாட்பாரச்  சந்தடிகளிலிருந்து விலகி இருந்தது கூட்ஸ் பிளாட்பாரம். சில பெண்கள் கீழே சிந்திய கோதுமையினை கூட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். காலியாக இருந்த பெட்டிகள் தொலைவில் தனியாக இருந்தன. ஓரமாக நிழலில் கிடந்த ஒரு பெட்டியைப் பார்த்து ஏறினார் ராஜாண்ணா. புத்தகப் பைக்குள் இருந்து ஒரு நியூஸ் பேப்பரை எடுத்து ஒவ்வொரு தாளாகப் பிரித்து  விரித்தார்.

“வா, படுத்துக்கலாம்”, என்றார். அவன் ஒரு ஓரமாக படுத்தான்.

“சட்டையில மண்ணாயிடும்”, என இடுப்பில் கை போட்டு இழுத்து நெருக்கினார். அப்பாவைப் போல இறுக்கமாக அணைத்தார்.

“படம் சூப்பரா இருந்திச்சு இல்லே”, என்றார் மீண்டும். அவனுக்கு பேச நா எழவில்லை. வெறுமனே தலை அசைத்தான். அவர் மீண்டும் இறுக்கி நெருங்கிப் படுத்தார்.

“மெட்ராஸ் லே எல்லாம் வீடியோத்  ‘தேட்டர்’ இருக்காமா. முழுப்படமும் இப்படியே இருக்குமாம்.” ராஜாண்ணாவின் உதடுகள் அவனது காது மடல்களில் உரசின. சூடான மூச்சுக் காற்று கன்னத்தில் பட்டது. அவரது கை அவனது உடல் முழுவதும் வருடத் தொடங்கியது.

இரவு படுத்த அவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அன்று நடந்ததெல்லாம் அவனுக்கு பிடிக்கவில்லை எனச் சொல்லமுடியாதது பெரிய கவலையையும் வெட்கத்தையும் ஏற்படுத்தியது. செய்ததையெல்லாம் நினைத்தால் அருவருப்பாக இருப்பது போல் இருந்தாலும் அதை இன்றோடு நிறுத்திவிட முடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. பள்ளிக்குச் சென்று மீண்டும் ராஜாண்ணாவைப் பார்க்க வெட்கமாகவும் பயமாகவும் இருந்தது. இரண்டு நாட்கள் வயிற்றுவலி என லீவு போட்டான். முதல் நாள் மாலையிலேயே ராஜாண்ணா அவன் வீட்டுப் பக்கமாக வந்து நோட்டம் விடுவதை அவன் மறைந்திருந்து பார்த்தான். அவர் யாரையும் ஒன்றும் விசாரிக்காமல் போய்விட்டார்.

மீண்டும் பள்ளிக்குச் சென்ற அன்று காலை இடைவேளையின் போது ராஜாண்ணா அவனைத் தேடிப் பிடித்தார்.

“ஏண்டா லீவு? வலிக்குதா?”, அவனுக்கு வெட்கம் தாங்கவில்லை. இல்லையென தலையாட்டினான்.

“அப்புறம்? பிடிக்கலியா?”

“பயமா இருக்கு.”

“ஒண்ணும் ஆகாது…  நாளைக்கு படம் மாத்துவாங்க.”

“போலாம்.” இருவரும் எதிரெதிர் திசையில் நடந்தனர்.                         

கூட்ஸ் வண்டி அதிக நாட்கள் கை கொடுக்கவில்லை. இவர்கள் நடந்து சென்றுக் கொண்டிருப்பதைக் கண்ட ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் என்ன, ஏது என விசாரிக்க, சும்மா வேடிக்கை பார்க்க வந்ததாகச் சொன்னார்கள்.

“இனி இந்தப் பக்கம் ஏதாவது பாத்தேன் திருடினீங்கனு  புடிச்சு உள்ள போட்டுருவேன், ஜாக்கிரதை” என மிரட்டி அனுப்பினார்.                

             ருசி கண்ட பூனைகளாக ஏங்கித் திரிந்தார்கள் ராஜாண்ணாவும் அவனும். ஒரேயொரு நாள் ராஜாண்ணா வீட்டில் யாரும் இல்லையென நேராக அங்கே போய் பள்ளி முடியும் நேரம் வரை டி வி போட்டு படுத்திருந்தனர். அது ஏக்கத்தைப் பெருக்கியதே தவிர குறைக்கவில்லை.

                ஒரு நாள் பிட்டு ஓடி முடிந்ததும் ராஜாண்ணா, வா வெளியே போலாமென அழைத்தார். நிறையப் பேர் வெளியேறி டீ சாப்பிடுவதும் புகைபிடிப்பதும் டாய்லெட் பக்கம் போவதும் வருவதுமாக இருந்தனர். ராஜாண்ணா டீ வாங்கித் தந்தது குடித்து முடித்ததும் வா, டாய்லெட் போவோம் என்றார். டாய்லெட்டில் இரண்டு மூன்று பேர் காத்துக் கொண்டிருந்தனர். கக்கூஸ் எல்லாம் மூடியிருந்தது. ராஜாண்ணா கடைசி கக்கூஸ் கதவுப் பக்கம் போய் நின்றார். அவனையும் பக்கத்தில் நிற்கச் சொன்னார். கதவு திறந்ததும் உள்ளே போய் அவனையும்  பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டார்.

                வெளியே வந்ததும் நின்றிருந்த சில பேர் அவனை வெறித்துப் பார்த்தனர். அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. பிறகு இது வாடிக்கையாகி விட்டது. படம் தொடங்கும் முன் நேரத்திலேயே வந்துவிடுவது தோதானதாகத் தெரிந்தது. அப்பொழுதும் பலர்  டாய்லெட்டில் காத்திருப்பது தெரிந்தது. பிறகொருநாள் இடைவேளையின் பொழுது 

“அந்தண்ணா பாரு உன்னையே பக்கறாரு,  வேணுன்னா என்னாண்ணு கேளு” , என்றார். அவர் ஆபீஸ் செல்பவர் போல பேண்ட்- ஷர்ட், பெல்ட், நல்ல செருப்பு எல்லாம் போட்டு இன் பண்ணியிருந்தார். அவன் தயங்கி நிற்க ராஜாண்ணா அவரைப்பார்த்து சிரித்தபடி அவனை அவர் பக்கம் தள்ளினார். அவர் அவனைப் பார்த்து தலை அசைத்து வேகமாக டாய்லெட் பக்கம் போனார். அவன் தயங்கியபடி பின் தொடர்ந்தான். மீண்டும் தியேட்டருள் வரும்போது படம் தொடங்கியிருந்தது.

“பிடிச்சுதா”, என்றார் ராஜாண்ணா. அவன் தலை கவிழ்ந்தான். இனி அப்படி வேறு யாரிடமும்  போகக் கூடாது, ‘சீக்கு’  வந்துரும் என்றார் ராஜாண்ணா. 

புது ‘சீயோ’ திடீரென ஸ்கூலைப் பார்க்க வந்தார். நிறைய சத்தம் போட்டார். உடனடியாக பெற்றோர் ஆசிரியர் மீட்டிங் போடச் சொல்லி  அவரும் வந்துக் கலந்துக் கொண்டார். பெற்றோர் சங்கத் தலைவர் சரவணனின் அப்பாதான் ஓவராப் பேசினாராம். வாட்ச்மேன் இல்லை, கேட் சாத்துவதில்லை, டாய்லெட் சரியில்லாததால் மாணவர்கள் வெளியே செல்பவர்கள்  திரும்ப வருவதில்லை, ஹெச் எம் எதையும் கவனிப்பதில்லை. தற்காலிகமாக வாட்ச்மேன் போட்டு, உடனடியாக டாய்லெட் சரி செய்து, சிறிய  வகுப்புகளுக்கும் பெரிய வகுப்புகளுக்கும் தனித்தனி இண்டர்வெல் விட்டு, கேட் சாத்தி வைத்து பல கட்டுப்பாடுகள் ஏற்படுத்தினார்கள். பள்ளியில் ராஜாண்ணாவைப் பார்க்கவே முடியாமல் போய்விட்டது. விடுமுறைகளில் ஓரிரு முறை அவன் ராஜாண்ணா வீட்டுப் பக்கம் போய்ப் பார்த்தான். அவர் கண்ணில் படவேயில்லை. வகுப்பிலிருக்கும் ஒரு பெண்ணுடன் சுற்றுவதாக அவரது நண்பர்கள் கிண்டல் செய்வது தெரிந்தது.

விடுமுறை நாட்களில் அவன் தனியாக படம் பார்க்கச் சென்றான். கூட்டம் அதிகமாக இருந்தது. சிறிது நேரம் டாய்லெட் பக்கம் காத்திருந்து பார்த்தான். யாரும் கண்டுக் கொள்ளவில்லை. வெறுத்துப் போய் ரயில்நிலையம் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தான். இலவச டாய்லெட்டின் உள்ளே போனபோது காலியாக இருப்பது போல் இருந்தது. ஒண்ணுக்கடிக்கும் கடைசி தடுப்பில் ஒரு ஆள் ஒன்றுக்கடிப்பது போல  நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனும் ஒண்ணுக்கடித்து முடித்தும் சும்மா நின்றுக் கொண்டிருந்தான். அவர் ஜிப் மேலேற்றியபடி நடந்து வந்தார். அவனின் பக்கத்து தடுப்பில் வந்து நின்று மீண்டும் ஜிப்பை இறக்கினார். அவன் கவனிக்காதது போல நின்றுக் கொண்டிருந்தான். அவர் தடுப்பைத் தாண்டி எட்டிப் பார்த்தார். உதடுகளை நாக்கால் நீவினார். அவனைப் பார்த்து சிரித்தார். அவன் சிரித்ததும் வா எனச் சொல்லி கக்கூஸ் பக்கம் போனார். அவனுக்காகக்  கதவை திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருந்தார்.

இது மிகவும் வசதியானதாக அவனுக்குத் தெரிந்தது. காசும் நேரமும் ‘வேஸ்டாவது’ இல்லை. அங்கு வரும்  பெரும்பாலானவர்கள் இப்படியானவர்கள் எனக் கண்டுகொண்டான். தொலைவிலிருந்து பார்த்து பிடித்தமானவர்  உள்ளே போனதும் அவரைப் பின்தொடர்வதை வழக்கமாக்கியிருந்தான்.

ஒருநாள் வீட்டுக்கு வந்த அப்பன் வழக்கத்திற்கு அதிகமாக குடித்திருந்தான். வண்டியை நிறுத்தி உள்ளே வந்ததும் டி வி பார்த்துக் கொண்டிருந்த அவன் முதுகில் பலமாக  அடித்தான். அய்யோ அம்மாவென துள்ளி எழுந்தவனின் கன்னத்தில் அறைந்தான். பட்டக்ஸில் ஓங்கி மிதித்தான். சரிந்து விழுந்தவனின் நெஞ்சில் கால வைத்து அழுத்தி, “கேடுகெட்ட நாயே, மானம் மருகாதையா இருக்கறதா இருந்தா,  இந்த வீட்டில இரு,  இல்லேன்னா  எந்தக் கக்கூஸிலேயாவது போய் கெட” எனக் கத்தினான். அம்மா என்ன விவரம் எனக்கேட்டு பதறினார்.

“அந்த மானக்கேட்டை என் வாயால சொல்ல மாட்டேன். இந்த நாய் இனி தேவையில்லாம வீட்டை விட்டுப் போனான், உன்னையும் சேத்துத் தொரத்தீருவேன் பாத்துக்க” என அலறிவிட்டு கட்டிலில் போய் விழுந்தான்.

அப்பன் அவனை அடித்த ஞாபகமே மறந்து விட்டிருந்தது. இப்போது இப்படி ஆகிப் போனது அவனை நடுங்கச் செய்தது. மறு நாள் காலை பள்ளிக்கூடம் செல்லத்தயாரானவனிடம் “இனி உன்னை ரயில்வே டேஷன் பக்கமோ வேற எங்காவதோ வேண்டாத இடத்தில  பாத்ததா யாராவது சொன்னா, உன்னை வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்” என அப்பன் உறுமவும் அந்தச் சகாப்தம் அத்தோடு முடிந்தது. வகுப்பில் சில பையன்களிடம் சில முயற்சிகள் செய்துப் பார்த்தாலும் யாருக்கும் ‘வெவரம்’ போதாது என்பது தெரிந்து அடக்கிக் கொண்டான். இருந்தாலும் வெளியே நடமாடும்போது அலையும் அவன் பார்வை அதே போன்று அலையும் சிலவற்றை அடையாளம் கண்டு மீண்டுக் கொண்டிருந்தது.

பள்ளி இறுதி வகுப்பு ஆரம்பமான சமயம் அப்பன் ஒரு பழைய கார் வாங்கினான். ஞாயிற்றுக் கிழமைகளில் அவனை அழைத்துக் கொண்டு மைதானத்திற்கு சென்று கார் ஓட்டப் பழக்கினான். மற்ற பையன்கள் சைக்கிள் ஓட்டுவதை பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும்போது அவன் கார் ஓட்டுவது பெருமையாக இருந்தது. கல்லூரியில் சரித்திரப் படிப்பு தான் கிடைத்தது. அது படித்தால் போதும் என்றான் அப்பன். பதினெட்டு வயதை எட்டியதும் டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக் கொடுத்தான்.   தன் மீது ஒரு பார்வை இருந்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது அவனுக்கு அவ்வப்போது விடுக்கப்பட்ட தாக்கீதுகளில் தெரிந்தது. கல்லூரியில் பெண்கள் பின்னால் அலைவதைத்தான் பெருமையாக நினைத்தனர். அவனுக்கு அது எந்தக் கிளுகிளுப்பையும் ஏற்படுத்தவில்லை.   

டிகிரி படிப்பு முடிந்ததும் ஒரு போலீஸ் அதிகாரியின்  வீட்டில் டிரைவராக சேர்த்து விட்டான் அப்பன். அவருக்கு  சென்னைக்கு மாற்றல் ஆகியிருந்தது. மனைவி அவர்களது அப்பா-அம்மாவுடன் பையன்களைப் பார்த்துக் கொண்டு இங்கேயே இருந்தார். டிரைவர் என்று பெயர்தானேத் தவிர வீட்டின் வெளிவேலைகள் அனைத்தையும்  செய்யவேண்டியிருந்தது. அவனுக்குத் தெரியாத வேலைகள் செய்ய அப்பன் உதவினான். பையன்களைப் பார்க்கும் பொழுது   அவனுக்கு ராஜண்ணாவுடன் பழக்கம் ஏற்பட்ட நாட்கள் நினைவிற்கு வரும். அவர்களும் பந்தா ஏதும் இல்லாமல் நன்றாகத்தான் பழகிக் கொண்டிருந்தனர். முயற்சி செய்யலாம்தான். ஆனால் அவனுக்கு வாங்கித் தான் பழக்கம். கொடுத்து பழக்கமில்லை, அது அவனுக்கு பிடித்தமானதாகவும் இல்லை.                                                                                                                                                                       

     முழுப் பரீட்சை லீவில் அனைவரும் கிராமத்திற்கு திருவிழாவிற்கு சென்றிருந்தபொழுது அதிகாரி  வீட்டிற்கு வந்திருந்தார். அவரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்துவர அப்பனும் உடன் வந்தான். அதிகாரி காரில் பின் இருக்கையில் தான் ஆமர்வார். ஜீப் என்றால்தான்  முன் இருக்கையில். அப்பன்தான் டிரைவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தான். எப்படியாவது மகனை போலீஸ் டிரைவராக சேர்த்து விட வேண்டும் என அப்பன் வேண்டிக்கொண்டிருந்தான். அடுத்த ஆட்சேர்ப்பு நடக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என நம்பிக்கையூட்டினார் அதிகாரி. மதுக்கடையை நெருங்கியதும் வண்டியை கொஞ்சம் தள்ளி ஓரமாக நிறுத்தச் சொல்லி

“நல்லதா ஒரு ஃபுல் வாங்குய்யா சுந்தரம் “, என  தன் பாக்கெட்டில் கை விட்டார்.

“இருக்கட்டுங்க சார், நான் வாங்கீட்டு வரேங்க” என அப்பன் ஏதோ வேலை கிடைத்துவிட்ட மாதிரி குதித்தோடினான்.

அப்பன் திரும்பி வந்ததும் “சாப்பிட ஏதாவது வாங்கலாமா?” என்றார்.

“வீட்டுப் பக்கத்து ஓட்டல்லே போய் வாங்கீட்டு வந்துடறேன் சார். நம்ம வீட்டுக்குன்னா பெசலா செஞ்சு தருவான். தம்பீக அங்க தான் வாங்கீட்டு வரச் சொல்லுவாங்க”, என்றான் அவன்.

“சரி,போ.”

“பையன், காலேஜ் பையன் மாதிரித்தான் இன்னமும் இருக்கான். வேலையில அனுசரிச்சு நடந்துக்குவானா சுந்தரம் ?” என்றார் திடீரென. அவன் கண்ணாடி வழியாக அவரைப் பார்க்க அவர் இவனைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தார். அவனுக்கு பழக்கமான பார்வையாக அது இருந்தது.                        

வீட்டை அடைந்ததும், “எப்படி வந்தே சுந்தரம், பைக் தானே ?”, என்றார் அப்பனிடம். “நீ வேணாப்  போய்க்க சுந்தரம். பையன் டிஃபன் வாங்கீட்டு வந்துட்டு இங்கேயே படுத்துக்கட்டும். காலேல நேரத்திலயே கெளம்பணும்.”

“ உனக்கும் வேணும்கறத வாங்கிக்க . இங்கே வந்து சாப்பிடலாம்”, என ஆயிரம் ரூபாய் எடுத்துத்  தந்தார் அவனிடம். அப்பன் எவ்வளவோ மறுத்தும் அவர் நிர்பந்தமாக பணத்தைத் திணித்தார். “ட்ரிங்க்ஸ் வாங்கிகிட்டதே நீ அன்பா தந்ததாலதான் சுந்தரம். ஸைட் டிஷ் பாத்து வாங்கிக் குடு.”

             அவன் ஓட்டலிலிருந்து வரும்போதே அவர் ஹாலில் உட்கார்ந்து குடிக்கத் தொடங்கியிருந்தார். டீ  வி குறைந்த ஒலியில் பாடிக்கொண்டிருந்தது. குளித்து முடித்து டி ஷர்ட், கைலிக்கு மாறியிருந்தார். வயது குறைந்தது போலத் தெரிந்தது. அவன் உள்ளே போய் ஆட்டுக்கறி வறுவலும் குடல் கறியும்  தட்டில் வைத்துக் கொண்டுவந்து  டீப்பாயின் மீது வைத்தான்.

“போயி பசங்க ரூமிலே குளிச்சிட்டு வந்துடு. லுங்கியும் தூண்டும் பெட் மேல  போட்டிருக்கேன்.”

அவன் அவர் முகத்தைப் ஏறிட்ட பொழுது   அவர் அவன் கண்களை தீர்மானமாக எதிர்கொண்டார்.

முதல் முறையாக அந்த பாத்ரூமில் புகுந்த அவனுக்கு சங்கோஜமாக இருந்தது. மனதில் ஒரு ஆவல் இருந்தாலும் கலக்கமும் இருந்தது. நன்றாகக் குளித்து லுங்கி கட்டிக்கொண்டு வந்தான்.       

“தண்ணி போட்டிருக்கியா  முன்னாடி?” 

“பழக்கமில்லீங்க” என்ற போது குரல் தொண்டையில் சிக்கிக் கொண்டது.

“நல்ல சரக்குதான். ஒண்ணும் பண்ணாது, ஒரு கிளாஸ் குடி”

அவன்  டீ குடிக்கும் டம்ப்ளரை எடுத்து வந்து தரையில் ஓரமாக அமர்ந்தான். அவர் சொன்னபடிக்  கலந்து ஒரே மூச்சில் உறிஞ்சிக் குடித்தான். கொஞ்சம்  வறுவல் துண்டுக்களை அவன் பக்கம் நீட்டினார் அவர். காலியான டம்ளரை கீழே வைத்தபொழுது  மீண்டும் ஊற்றிக் கொள்ளும்படி சைகை செய்தார்.  

சாப்பிட்டு முடிந்ததும் “போய் விரிப்பை நல்லா ஓதறி விரி. வர்றேன்”, என்றார். 

அவனுக்கு தலை கிர் என்றுதான் இருந்தது. படுக்கையை விரித்து ஃபேனை ஓட விட்டான். அடுத்து என்ன செய்வது எனத் தயங்கிக் கொண்டிருந்த நேரம் அவர் வந்து கட்டிலில் விழுந்தார்.

“வா, லைட் ஆஃப் பண்ணணும்” என்றார்.

அந்த வெறுப்பும் வன்முறையும் ஆதிக்கமும் அவனுக்கு புதிதாக இருந்தாலும் வெகு நாட்களாக ஏக்கத்தில்  அலைபாயந்துக் கொண்டிருந்த மனதைத்  தணிப்பதாக இருந்தது. மறுநாள் காலை அவர் கிராமத்திற்குச்  செல்லவில்லை. இரண்டு நாட்கள்  கழித்துதான் போனார். அவரை வழியனுப்பிவிட்டு  வீட்டிற்கு வந்தபோது அப்பன் காத்திருந்தான்.

“அவரு மறுநாளே போகணும்னு தானே சொன்னாரு”, என்றான் வீட்டினுள் நுழைந்ததும். அவன் அப்பனை ஏறிட்டுப் பார்த்தான். அப்பனின் பார்வையில் தெரிந்த புரிதல் அருவருப்பாக இருந்தது.  அப்பன் பார்வையை விலக்கிக் கொண்டான். அவன் பாத்ரூமினுள் சென்றுக் காறித் துப்பினான்.      

ஆனால், சொன்னபடி அவனை டிரைவராக சேர்த்து விட்டார் அதிகாரி. அப்பொழுது அவர் டாக் ஸ்குவாடிற்கு பொறுப்பாக அதே ஊருக்கு திரும்பி வந்திருந்ததால் அவனை அங்கேயே கூப்பிட்டுக் கொண்டார். அவனுக்கு நாய்களையும் நாய்களுக்கு அவனையும்  மிகவும் பிடித்திருந்தது.   வீட்டில் ஆள் இல்லையென்றால் அவனுக்கு படுக்கை அவர் வீட்டில்தான். அவர் மாற்றலாகிப் போய்  ஐந்தாவதாக வந்தவர் இப்போதிருப்பவர். அவர் போன பிறகும் கூட  யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் அவனை அடையாளம்  கண்டுகொள்கிறார்கள்.

அலுவலக வாயிலில்  நுழைந்ததும் “அப்பாடா,  விஜி வந்துட்டுதப்பா. நாய்க உன்னைக் காணோம்னு காலையிலிருந்தே ஒரே ‘ராவ்டி’. ஒரெட்டு போய் பாத்துடு. அம்மா ஊருக்கு போயிட்டாங்களாம், ஐயா உன்னை வரச்சொன்னார்.” என்றார் ஏட்டையா.  

“சரிங்கையா.”

நாய்களின் கூண்டுப் பக்கம் நடந்த அவன் ஏட்டையாவின்   கண்பார்வையைத்  தாண்டியதும்  ஒரு முறைக் காறித் துப்பினான். 

அரவிந்த் வடசேரி

1964 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் வாழ்ந்து வருகிறார். நெடுங்கால வாசகர் எனினும் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகத் தான் எழுதுகிறார். சொந்தமாக சிறுகதைகள் எழுதுவதோடு மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளையும் மொழிமாற்றம் செய்துள்ளார். இவரது படைப்புகள் ஆவநாழி, இருவாட்சி, தாய்வீடு மற்றும் கலகம் இதழ்களில் வெளியாகியுள்ளது. ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பு 2023 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. ஆவநாழி மென்னிதழின் துணை ஆசிரியராகவும் செயல்படுகிறார்.             

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *