சீக்கிரம் வந்தும் காரை ஒதுக்கி நிறுத்துவதற்குள் பாடாய்ப் போய்விட்டதே என நொந்துகொண்டாள். அலுவலக நண்பர்களிடமிருந்து நிறைய அழைப்புகளும் செய்திகளும் வந்திருந்தன. எல்லோரும் தனக்கு முன்பாகவே குறித்துச் சொன்னபடி மேடைக்கு அருகே விரைந்திருப்பார்கள் என நினைத்தாள். தானாகவே தன் நண்பர்களைக் கண்டுபிடித்துவிடலாம் என்று தோன்றிட யாருக்கும் திரும்பி அழைக்கவில்லை. இதைக் கையிலிருந்து உதறினால்தான் நிம்மதி என டேஷ் போர்டிற்குள் ஆலனின் விளையாட்டுப் பொம்மைகள் சிலவற்றையும், தனக்குப் பிடிக்காதெனத் தெரிந்திருந்தும் சுதன் ரகசியமாய்ப் பயன்படுத்தி வரும் ரோஜா அத்தரையும் ஒதுக்கிவிட்டு, டிஸ்யூ பேப்பர் கட்டின்மேல் தன் பேசியை வைத்து மூடினாள். அத்தரைக் கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில் பூசி முகர்ந்தாள். இன்று ஏனோ அது ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. சுதனை மனதாரச் சபித்தாள். பிறகு சபித்ததற்காக வருந்தினாள். அவனது முகமும் ஆலனது முகம் பின்னிச் சமைந்தாற்போல் தெரிந்தன. அண்டியே கொல்லும் அல்லது விலகியே அழிக்கும் இஷ்ட உருக்குள் எனத் தோன்றியது. காலையிலிருந்து ஒரு அழைப்பு, ஏன் ஒரு குறுஞ்செய்திகூட சுதன் அனுப்பியிருக்கவில்லை. பின்பு ஏன் அவனுக்குச் சொல்லிவிட்டோ, கூட்டிக்கொண்டோ இங்கு வந்திருக்க வேண்டும் என்று நினைத்தவாறே காரைப் பூட்டிவிட்டு நகர்ந்தாள். தனக்கு முன் வீடடைந்து ஆலனுடன் ஓடியாடும் கைலியணிந்த சுகனின் உருவம் மனதில் அசைவாடியது.

தன்னைக் கடந்து செல்லும் விடலைகளின் சட்டை வாசகங்கள் ஒவ்வொன்றும் கவனிக்கத் தூண்டின. ‘கோலம்பஸ் தீவு’ ‘என் சுவாசக் காற்றே’ ‘டேக் இட் ஈஸி பாலிஸி’ எனப் பலவிதமான பாடல் திறப்புச் சொற்களால் தீட்டப்பட்ட சட்டைகள். அவ்வாசகங்களுக்குப் பின்னே மங்கலான நிழல்போல் இசைக் கர்த்தாவின் பலரூப நிழற்தீட்டல்கள். இத்தனை ரசிக மனப்பான்மை உண்மையில் இசைவழிப் பிறந்ததா அல்லது நான்கு செல்ஃபிகள் எடுக்கப்போகும் சுவாரஸ்யத்தினால் ஆனதா என்று அலட்சியம் கொண்டபடி நகர்ந்தாள். மாலை நேரக் கடற்காற்று வெப்பத்தைக் குறைத்துக் காட்டியது. இன்னும் நேரம் கூடக்கூடக் குளுமைப் பெருகிவிடும் போலிருந்தது. தன் ஓவர் கோட்டைப் பிடித்துக்கொண்டு சாமர்த்தியசாலி என்று சொல்லிப் புன்னகைத்துக்கொண்டாள். கால்களைப் போர்த்தியிருந்த ஜீனும் இதமாகவே உணர வைத்தது. ஒருவேளை அழைத்திருந்தால் சுதன் வந்திருப்பானோ! அம்மாவிடம் ஆலனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சிறிதுநேரம் தனியாகச் செலவழித்திருக்கலாமோ! என்று இசைந்தும் பிறகு முரண்பட்டும் குழப்பத்தை முகத்தில் பூசிக்கொள்ளாத ஜாக்கிரதை உணர்வுடன் நடந்தாள்.

தலையில் போலி மயிர்க்கற்றையைப் பதித்து இந்திய கிரிக்கெட் அணியின் நீல வண்ணச் சட்டை அணிந்துசென்றவனைக் கண்டதும் அது மீண்டும் சுதனை ஞாபகப்படுத்துவதாய் இருந்தது. கல்லூரிக் காலத்தில் அவன் சிகை அதுபோல்தான் சுருள் சுருளாய் மடிந்து பின்னங்கழுத்தை மறைத்துக்கொண்டிருக்கும். ஆங்கிலத் துறை அமைந்திருந்த ஆள் யாருமற்ற மூன்றாம் மாடிப் படிக்கட்டில் அமர்ந்திருக்கையில் அவனது சிகையை விலக்கி வியர்வை நீங்காதிருக்கும் வெண் கழுத்தில் முத்தமிட்டுச் சுவைத்த தருணம் நினைவிலாடி ஒரு சிலிர்ப்பை உண்டாக்கிவிட்டிருந்தது அவளுக்கு. தடித்த கண்ணாடி பிரேம் வழி பேந்த விழித்தபடி தன்னை வளைத்து முன்னிழுத்து மடியில் அமர்த்தி, சுடும் மூச்சுதனை கன்னக்கதுப்பில் செலுத்தியவாறு மாரிரண்டையும் சுதன் கசக்கி விளையாடுவது நினைவில் உதித்துத் தொந்தரவுப்படுத்தியது. சில நிமிடங்களே போல் பல மணி நேரங்களை விழுங்கிய அணைப்பின் ஞாபகங்கள்,  தூரத்தே தெரிந்த விண்ணில், கீழே படர்ந்துள்ள அலைகள் அங்கலாய்ப்பதாய் மாயம் காட்டின. மேகங்கள் இல்லாதிருப்பதால் அப்படி நினைக்க வைக்கிறதோ எனச் சிந்தையை மாற்றி வீசியபடி நடக்கவாரம்பித்தாள். பள்ளி நாட்களின் இறுதி மணியோசைக்குப் பின்னான பொழுதெனக் கச்சேரி மைதானத்தை நோக்கிச் செல்லும் வழித்தடமெங்கும் அவசரகதியில் நடைபோடும் ரசிகர் படை. ஆங்காங்கே வெளிப்படும் சில கேலிச் சத்தங்களையும் வெடிச் சிரிப்பையும் தாண்டி, சன்னலோரப் பேருந்து இருக்கைகளில் அமர்ந்து இமைகொட்டாமல் வெறித்திருக்கும் சோக முகங்களே எங்கும் வியாபித்திருப்பதாகப் பட்டது அவளுக்கு.

‘இங்கே சிறுநீர் கழிக்காதீர்’ ‘இங்கே எச்சில் துப்பாதீர்’ எனச் சாலையின் இருபுறத்திலுமிருந்த கற்சுவர் வாசகங்கள் மஞ்சள் எழுத்தால் வரையப்பட்டிருந்தன. அவளுக்குக் கழிக்க வேண்டும் போலிருந்தது. இதே சாலையில் இரவு நேரமாகவும் யாருமற்றும் இருந்திருந்தால்; துணைக்குச் சுதனும் இருந்திருந்தால் நிச்சயம் தயங்கியிருக்க மாட்டோமோ என்றிருந்தது. வேர்களும் பூரான்களும் சர்ப்பங்களும் கீழே ஊர்ந்தபடி தனக்குள்ளே புகுந்துகொண்டால் என்னாவேன் என்று யோசித்து திகிலடித்துப் போனவளாய் விரைந்து நடக்க ஆரம்பித்தாள். மேடையில் வாத்தியக் கலைஞர்கள் தங்கள் கருவிகளைச் சுதிகூட்டி இயக்கிப் பார்க்கும் சத்தங்களிலும் ஓர் இசை உள்ளதென நினைத்தாள். இதுபோன்றெல்லாம் சுதன்தான் நினைப்பான்; பேசுவான் என்ற நினைப்பு அவளுள் ஓடியபடியே இருந்தது.

கையில் நுழைவுச் சீட்டுகளை வைத்துக்கொண்டு உணவு இடைவெளியின்போது யுகேஷ், ஸால்ஸா ஆடி விசிறிக்காட்டியது ஞாபகம் வந்தது. எல்லோரும் ‘சீனியர்… சீனியர்’ என்றுபேசி சம்மதிக்க வைத்துவிட்டார்களே என்று நினைத்தாள். உள்ளூர தன் உடலுடன் பரிச்சயமாகாத, தன் மனதிலும் இடம் வகிக்காத, எதையும் எதிர்காலத்துடன் அர்த்தப்படுத்திப் பார்க்கச் சொல்லாத, அபிப்ராயங்களுக்குக் காத்திருக்காத ஒரு குழுவுடன் எங்கேனும் சில மணி நேரங்களாவது அலைந்து திரிய வேண்டுமெனத் தனக்கும் தகிப்பாய்தானிருந்தது என்பதை ஒப்புக்கொள்ளும் சாயலுடன் மைதானத்தின் முனையை வந்தடைந்திருந்தாள்.

இருபுறமும் கட்டைக் கட்டி கையில் வைத்திருக்கும் நுழைவுச் சீட்டின் தரம் பொருத்து திசைகாட்டிக் கொண்டிருந்தனர் நிகழ்ச்சி ஆர்வலர்கள்.

‘நீங்க பிளேட்டினம் ஏரியா மேடம். முன்னாடி போகணும். இந்தப் பக்கமாப் போங்க’ என்று ஒருவன் மூங்கில் கட்டைகளால் பின்னப்பட்ட குறும்பாதையில் திருப்பிவிட்டான். பிளேட்டினம் என்ற சொல்லின் மேல் ஒரு கிழியல் போட்டுச் சீட்டைக் கையில் தந்திருந்ததைப் பார்த்துவிட்டு ஜோப்பில் திணித்துக்கொண்டாள். இனியும் இந்த மைதானம் நிறைய என்ன இருக்கிறது என்பதுபோல் பின்னே ஏறிட்டாள். கூட்டம் சாரைசாரையாய்ப் பெருகி முளைத்தவாறுதான் இருந்தது. இதற்கு மத்தியில் அலுவல் நேரம் முடிவதற்குள் வீடடைய வேண்டுமானால் நிகழ்ச்சியின் உச்சத் தருணங்களைத் தவிர்த்துவிட்டுப் புறப்பட்டால்தான் உண்டு என எண்ணிக்கொண்டால்தான். போகாதிருந்தால் யாரும் தேடப்போவதில்லை என்று சொல்லிக்கொண்டாள். ஆலன் வந்தபின் இதுபோன்ற எந்தக் கூட்டஸ்தலத்துக்கும் சுதன் அழைத்துச் செல்வதில்லை. ஈஸ்டர் தருணங்களில் இரவு நேர ஆலயப் பயணங்களையும்கூட நிறுத்திவிட்டான். மீண்டும் ஆலனை வயிற்றுக்குள்ளே வாங்கிக்கொள்ளலாம். நீரடைத்த தலையணைபோல் அருகேயே சுதன் கிடப்பான் என்று தோன்றியது. பாதை மேஸ் போல் நீண்டுகொண்டே செல்ல, மைதானத்தின் முக்கால்வாசி பகுதியைக் கடந்து மேடையில் நிற்பவர்கள் முகங்கள் தெளிவாய்த் தெரியும் என்ற தூரம்வரை வந்துவிட்டிருந்தாள். ஆனாலும் பாதை இன்னும் முன்னே அழைத்துச் செல்வதாக இருந்தது.

கைப்பிடியில்லாத சிவப்பு நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். அதன்மேல் ‘பி 85’ என்று அவளது டிக்கெட் எண் குறிக்கப்பட்டிருக்கிறதா என்று திரும்பத் திரும்பச் சரிபார்த்துக்கொண்டாள். அனு தனக்கு முன்னே பத்திருபது வரிசைகள் டைமண்ட் எனப் பெயரிடப்பட்டு, சினிமா பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கவென வேறு பிரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தாள். அப்பகுதியும் மெல்ல நிரம்பத் தொடங்கியிருந்தது. ஆனாலும் அறிந்த முகங்களாக எதுவும் கண்ணில் படவில்லை. எங்கே தன் சகாக்கள் எனத் தேடிச் சலித்தாள். வாத்தியத் திருத்தங்கள் நிறைவுறவே, வண்ண விளக்குகள் மினுக்கி மறைந்து கொண்டிருந்தன மேடையிலிருந்து. தனக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத யாரோ மேற்கத்திய இசைக்கலைஞன் பாடல்களையே நிகழ்ச்சி முழுமைக்கும் பாடி, இசை நாயகர் நிறைவு செய்துவிட்டால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்; அதுவொரு தேசிய செய்தியாக மாறி கலைஞனின் தேசபக்தி மீதே நம்பிக்கை குறை ஏற்பட்டுப்போகும் என்று நினைக்க வேடிக்கையாக இருந்தது. அல்லது மைக்கேல் ஜாக்சன் போல் தோன்றி எல்விஸ் பிரெஸ்லியின் ‘மை வே’ பாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்துச் சிரித்தாள்.

‘என்ன சீனியர் தனியாச் சிரிக்கிறீங்க’ என்று அனுவின் கண்ணைப் பொத்தி பின் நின்றாள் நித்யா.

‘ஏய் நித்யா எவ்வளவு நேரம் தனியா உக்காந்திருக்கது. முன்னாடியே வந்துருப்பீங்கன்னு நினச்சேன்’ என்று அவளது விரல்களை விலக்கினாள். ஒருவேளை வராமல் போயிருந்தாலும்கூட பாதகம் ஒன்றுமில்லை என்பதுபோல் வலுவிழுந்த சத்தத்துடன். நித்யாவில் ஸ்லீவ் மேக்ஸியில் எடுப்பாக இருந்தாள். திருத்தமாகக் கீழுதட்டில் மட்டும் கூடுதலாய்த் தெரியும்படி சிவப்பு உதட்டுச் சாயம் பூசியிருந்தாள். அழகாகவும் சாப்பிடத் தூண்டுவதுபோலவும் அவள் இருப்பதாகத் தோன்றியது அனுவுக்கு.

’செக்ஸியா வந்துருக்கடி நித்யா’ என்று அவள் காதைக் கடித்தாள்.

‘போங்க சீனியர். உங்களவிட அழகா!’ என்றவளாய் அருகே அமர்ந்துகொண்டாள். பெருமையும் பூரிப்பும் சில அடிதூரம் தன்னைச் சுற்றிப் பரந்துவிட்டதுபோலிருந்தது நித்யாவுக்கு. அவளைவிட அதிகமாக அனுவுக்கு.

யுகேஸும் பிரேமும் தங்கள் தலைகளை ஆட்டிக்கொண்டு கையசைத்தபடியும் உடலசைத்தவாறும் அனுவுக்கு ‘ஹாய்’ சொல்லிவிட்டு நித்யாவிற்கு அருகிலிருந்த இருக்கைகளில் அமர்ந்துகொண்டனர். பின்னணியில் ‘அதிரடிக்காரன்’ பாடல் உருமிக்கொண்டிருந்தது. ஒரு பாடல் தொடங்கும்போது தொற்றும் ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் அதன் நடுப்பகுதியை எட்டும்போது இருப்பதில்லை என்பதை அவதானித்தாள். முதலில் பரவும் அதே பரசவம் பாடல் முடிவில்தான் மீண்டும் மேலெழுகிறது என்பதைக் கவனித்தாள். உடனடியாகப் பற்றிக் கொள்ளும் சலிப்பின் மீதேறிக் கூத்திட வேண்டுமாய் இருந்தது அவளுக்கு. சமி யூசுஃபின் இசைத் தட்டை ஒலிக்கவிட்டதுபோல் ஈரானிய தந்தி நரம்புகளின் இழுவை, அவளுள் இதயத்துடிப்பாய் அடித்துக்கொண்டது.

நொதித்த தன் மனதுக்குக் கீழ்படிவதுபோல் இருள் நன்கு கவிந்திருந்தது. எதிர்பாராத கணம் வழக்கமாய் சூட் உடையில் வரும் இசை அமைப்பாளர், அன்று மேடையில் வேட்டிச் சட்டை அணிந்தவராய்த் தோன்றினார். அவருக்கு மரபார்ந்த முகத்தை வழங்கிய ‘ஆளப்போறான்’ பாடலை ஒலிக்கவிட்டனர். திரள் ஆர்ப்பரித்துக் குலுங்கியது. கூட்டத்துடன் கூட்டமாக எப்போது எழுந்தேன் என்பதே தெரியாமல் அசையத் தொடங்கினாள். காற்றெங்கும் மாயப்பொடி தூவப்பட்டதுபோல் தன்முனைப்புகள் ஒழிந்து சீரான இசைவு சூழ்ந்துகொண்டது. அதன் அச்சாணியைக் கையில் வைத்து ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த கலைஞர்களிடம் தனக்கும் அந்த வித்தையை அறிவிக்க வேண்டுமாய் கத்த வேண்டும் போலிருந்தது அனுவுக்கு.

மெல்ல தன் இருப்பிடம் பறிபோவதை எல்லோரும் பார்த்தபடியே அசையத் தொடங்கினர். மாற்றிய அடிகளை மீண்டும் நின்ற இடத்தில் வைக்கும்படி அசைய இடம் கிடைத்தால் போதுமென்றிருந்தது அனுவுக்கும் அவளது தோழர்களுக்கும். எவ்வளவு நேரம் அப்படி இருந்தது என்பதையே அனுவால் கணிக்க முடியவில்லை. யுகேஷின் இடக்கை விரல்கள் நித்யாவை இடையோடு அள்ளித் தாளம் போட்டுக்கொண்டிருந்தன. மெல்ல அவ்விரல் அவளது தனங்களைச் சீண்ட அலைவதையும் பார்த்தாள். நித்யா தன் பிரக்ஞையைக் காரணமாய்க் கழற்றி வைத்தவள்போல் இயைந்துகொண்டிருந்தாள். அனு சுற்றிலும் பார்த்தாள். எல்லா உடல்களும் தங்களை உதிர்த்துப் போடச் சமயம் பார்த்து நிற்பதுபோல் மயங்கி அசைந்தன. ஆங்காங்கிருந்து நெளியும் விரல்களும் காற்றில் களைந்தாடும் கூந்தலும் அசைவில் தெறித்துவிழும் வியர்வைத் துளிகளும் மனித இச்சையின் கூட்டு வாசனையும் அனுவைக் கிறக்கின. நித்யாவின் கைகளைத் தொட்டுவிட்டு நாற்காலியைத் தேடினாள். அவை கட்டைகளுக்குப் புறம்பே மேற்குப் பக்கமாய்த் தூக்கி வீசப்பட்டிருந்தன. கூட்டம் மேலும்மேலும் நெருக்கிக் கொண்டிருந்தது.

தனது முலைகளின் எடை சுமக்கமுடியாத துன்புறத்தலாகப் பட்டது. நிலம் நோக்கும் இரண்டையும் அதன் வீழ்ச்சியிலிருந்து உயர்த்தி தன் உள்ளங்கைகளால் உயர்த்திப் பிடித்தபடி பெருமூச்சுவிட்டாள். இந்த ஒரு பாரமில்லாக் கணம் போலவே எப்போதும் இருந்தால் சுகமாயிருக்கும் என்றுபட்டது. கைகளை விலக்கவே மீண்டும் கனம் தன் மேல்வயிற்றின் மேல் படிந்தது. உடையின் மேலாகவே நெகிழ்த்திவிட்டிருந்த பிரேஸியரின் ஹூக்கை இனி போடமுடியாது என்று வருந்திக்கொண்டவளாக வெளியேறமுடியுமா என்று பார்த்தாள். அருகே நின்றுகொண்டிருந்தவர்களைக் காணவில்லை. நித்யா என்று கத்தியபடி சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். தன் வாழ்நாளில் அன்றுபோல் குரலெழுப்பியது இல்லை என்று வியக்கும்படி கத்தியும் அதுதன் செவியைக் கூட எட்டவில்லை என்று நினைக்கும்போது அனுவுக்கு அச்சமுண்டாகியது.

இசைக்கோவைகள் விடாமல் ஒலித்தபடி இருக்க, மேடையிலிருந்து மினுங்கிய வெளிச்சம் ஓய்ந்திருந்தது. யாரும் நிற்பதுபோலவே படவில்லை. இசையின் கனீரொலியையும் மீறி கூடியிருந்தவர்களின் பதற்றமுற்ற அழுகூரலும் கத்தல்களும் கேட்பதுபோல் தோன்றியது. திரும்பிப் பார்க்கக்கூட இடம் தராத சதைத் திரட்சி நாலாப்புறத்திலிருந்து அவளைச் சூழ்ந்துகொண்டது. தன் இடையோடு நசுங்கியே கிடக்கும்படி நெருக்கப்பட்டிருந்த கரங்களை விலக்கி, வலிந்து முயன்று தன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் இல்லாத அலைபேசியைத் தேடினாள். அது கீழே விழுந்துவிட்டதா என்று தரையைப் பார்க்க முற்பட்டாள். முடியவில்லை. சதுப்புநில சகதிக் காடுகளைப் போல் மனிதக் கால்கள். எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை, யாரையும் நினைத்துக்கொள்ளவும் தோன்றவில்லை. தன் முடியை யாரோ இழுப்பதுபோலிருந்தது. வலி மரத்துப்போக வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் அப்படி நடக்கவில்லை. கைகள் ஒவ்வொன்றிலும் ஆளுயுரத்திற்குச் சுழலும் வாள்கள் இரண்டை ஏந்திக்கொண்டு கண் இமைப்பதற்குள் மேடைவரை போர் வீரன்போல் சுழற்றிச் செல்ல வேண்டும் என்று ஏங்கினாள். வெட்டிக்குவிக்கப்பட்ட சதைகளின் மேல் ஒரு நடனம் போதும் எனத் துடித்தன உதடுகள். கைகளை அசைக்க முடியவில்லை. மூச்சுத் திணறியது.  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் தென்னங்குலைகளைப் போல் தான் நகர்த்தப்படுவதாக உணர்ந்தாள். இங்கே தனியே ஓர் ஆள் இல்லை. ஒவ்வொருவரும் திரளுக்குள் அடங்கிவிட்ட திரள் என்பதாய்ச் சுழன்றனர்.

தான் வந்து நின்றிருந்த இடம் எங்கே என்று காணமுடியாத தொலைவே இழுத்துச் செல்லப்பட்டிருந்தாள். மேடை அவள் கண்பார்வைக்குச் சிக்காத தூரம் ஓடிச் சென்றுவிட்டிருந்தது. ஆலன் போலவே ஒரு சிறுவன் தன் கால்களை, கண்ணாடி அணிந்த தலைகொண்டவனின் தோளில் பதித்து அழுகை பூத்த முகத்துடன் நகர்வது தெரிந்தது. செவியில் விழுந்த குரல்கள் யாவுமே குழந்தைகளின் கீச்சுத்தன்மை நெருங்கிவிட்ட தன்மையுடன் ஒலிக்கவாரம்பித்தன. இதுவரை கடத்திவந்த இழுவிசையெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்வது போலவும் புத்தாற்றின் இழுப்பைப் போலவும் அனு முன்னும்பின்னுமாய் அலைந்தாள். ஒரு சுழல் தோன்றி சிறு கணத்தை விழுங்க வேண்டுமென்ற தவிப்புடன் ஒவ்வொருவரையும் சுழற்றிப் போட்டது. தன் இரு கைகளும் திசைக்கு ஒரு பக்கமாய் இழுபட்டுச் சுழன்றிட சுவஸ்திகா ஆசனம் போல் ஆகியிருந்தாள் அனு. மேடையிருந்த திசையிலிருந்து வெளிச்சம் மினுங்கத் தொடங்கி இசை புகைவடிவமாய் உருவமெடுக்கத் தொடங்கியது. ஒலி தன்னில் ஒரு ராட்சஸ லயம்கூடி வாய்விட்டுச் சிரிக்கவாரம்பித்தது.

000

ஜார்ஜ் ஜோசப் என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனச் செய்துவரும் இவரது இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். எமரால்ட் என்கிற சிறுகதைத் தொகுப்பும், பூனைகளில்லா உலகம் என்னும் ஜப்பானிய மொழிபெயர்ப்பு‌ நாவலும் சீர்மை வெளியீடாக வெளிவந்துள்ளன. இஸ்மாயில் என்கிற அமெரிக்க சூழலிய மொழிபெயர்ப்பு நாவலும் வெளிவர இருக்கிறது. மெய்யியல் துறையில் ஈடுபாடு கொண்டவர். கலீல் ஜிப்ரான், புதுமைப்பித்தன், அசோகமித்திரன், மா. அரங்கநாதன் போன்றோரை எழுத்துலக ஆதர்சங்களாகக் கருதுகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *