01.
௦
கடவுள் தலையை அசைத்தார். சவுக்குகளை கைகளில் வைத்திருந்த பதின்மரும் சுழன்று சுழன்று மண்ணாங்கட்டியைத் தாக்கினர். அய்யோ அம்மா என்று அலறியவன் ஒருகட்டத்தில் அமைதியானதுடன் தன் கைகள் மூலம் தற்காத்துக்கொள்வதையும் நிறுத்திக்கொண்டான். சிறிது நேரத்தின் பின் உடற்சதைகள் கிழிந்து உதிரம் சொட்டச்சொட்ட மண்ணாங்கட்டியை தூக்கி நிறுத்தினர் இருவர். மிகுந்த அலட்சியத்துடன் அவனருகில் வந்து காறி உழந்தார் கடவுள். மண்ணின் வாயில் உதிரமும் கோழையும் வடிய கடவுளைப்பார்த்து லேசாக சிரித்தான். அவ்வளவுதான். கடவுளுக்கு பொறுக்கவில்லை. உடல் தடதடத்தது. கைகால்கள் வெட்டி இழுத்துக்கொள்ள புகைந்துகொண்டிருந்த சுருட்டுடன் நெஞ்சும் குஞ்சும் வெடிக்க தரையில் விழுந்து செத்துப்போயிருந்தார் கடவுள்.
0
02.
௦
ஒய்யாரமாக வந்த கடவுளார் சட்டையின் மேற்பட்டனில் மூன்றினை கழட்டிவிட்டு மஞ்சத்தில் சாய்ந்தார். தம் அதிகாரக் கண்ணால் மண்ணாங்கட்டியைப் பார்க்க, பணிந்தவன் முதலில் அவரின் சிகையை கத்தரியால் சரி செய்தான். சேடியர் வெட்டப்பட்ட மயிர்களை உடனுக்குடன் சுத்தம் செய்தனர்.
௦
தொடர்ந்த நாட்களில் சிகையுடன் தாடியையும் மீசையையும் கத்தரிக்கச் சொன்னார். செய்தான்.
௦
பிறகான நாட்களில் சிகை தாடி மீசையுடன் தம்மிரு கைகளையும் உயர்த்தி அக்குளைக் காட்டினார். அழுக்குடன் மயிர்ச்சேர்ந்து நாறிக்கிடந்ததை சற்று ஒவ்வாமையுடன் சுத்தம் செய்தான்.
௦
அதன் பின்னரான ஒரு நாளில் சிகை தாடி மீசை அக்குளுடன் கோவணத்தையும் அவிழ்த்தார். சேடிகள் தலை குனிந்துக்கொண்டனர். சப்தமின்றி தம் பற்களை கடித்துக்கொண்ட மண்ணாங்கட்டி சற்றேக் குனிந்து கத்தரித்தான். மன்னனின் அலறல் அரண்மனையை உலுக்கியது. அன்றைய தினம் சேடிப் பெண்டிர் சுத்தம் செய்தது மயிர்களை மட்டுமல்ல.
௦
பிறகான நாட்களில் கடவுளாரின் அந்தப்புரத்தில் மண்ணாங்கட்டிக்கு மவுசு கூடிப்போனதாக எல்லோரும் பேசிக்கொண்டனர்.
0
03.
௦
கடவுள் தம் ஆசனத்தில் அமர்ந்தார். இயந்திரம் குளுமையை அவர்மீது போர்த்தியது. வழவழப்பான தம் வெண்ணிற ஆடையின் கைப் பகுதியை மடித்துவிட்டபடி மண்ணாங்கட்டியை ஏறிட்டார். அவனும் அவரைப்போன்றே ஓர் வெண்ணிற ஆடையை அணிந்திருந்தான். அருகே அழைத்தவர் நலம் விசாரித்தவாறு ‘சட்டை அருமையா இருக்கே ப்பா’ என்றார். நன்றிங்க கடவுளாரே என்றவன் பிறகான நாட்களில் கடவுளாரின் முன்னிலையில் வெண்ணுடை தரிப்பதை நிறுத்திக் கொண்டான்.
0
04.
௦
முதல் முறை கடவுளைக் கடந்தபோது வணக்கம் என்றான் மண்ணாங்கட்டி. அவர் கண்டுகொள்ளவில்லை. இரண்டாம் முறை கடந்தபோதும் வணக்கம் சொன்னான். தான் அலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பதைப்போல் காட்டிக்கொண்டார்.
௦
இப்போதெல்லாம் கடவுளைக் கடக்கும்போது லேசாக புன்னகைத்தவாறு சற்றே ஒதுங்கிக் கடந்துவிடுகிறான். பாவம் கடவுள்தான் தவித்துப்போகிறார்.
0

05.
௦
நுனி பெருத்து பொன்வேலைப்பாடமைந்த செங்கோலுடன் மஞ்சத்தில் அமர்ந்திருந்த கடவுளார் ‘உவ்வே’ என்றவாறு வாந்தியெடுக்க அருகிருந்த மண்ணாங்கட்டி ஓடிச்சென்று உள்ளங்கையில் ஏந்திக்கொண்டான். இருந்தும் ஒரு சொட்டு அவனது கையிலிருந்து கசிந்து மஞ்சத்தில் சிந்தியது. ‘ஒருவேலை மயிர்க்கும் லாயக் இல்லை’ என்ற கடவுளார் காறி அவன்மீது உமிழ்ந்து மஞ்சம் நீங்கி நடந்தார். அவர் மறந்து விட்டுச்சென்ற செங்கோலின் அடியை தம் உடலை அசைக்காமல் கால் பெருவிரலால் தட்டிவிட்டான் மண்ணாங்கட்டி. சரிந்த கோலின் நுனி கடவுளாரின் காலை இடற குப்புற விழுந்து தம் மூக்கை உடைத்துக்கொண்டார். உதிரம் தரைவிரிப்பில் சொட்டுச் சொட்டாகச் சிதற வைத்தியரை கூவிக்கூவி அழைத்தபடி ஓடிக்கொண்டிருந்தான் மண்ணாங்கட்டி.
0
06.
௦
தன்னை மாபெரும் சமத்துவன் எனக் காட்டிக்கொள்ள விழைந்த கடவுள் நற்காலை கடும்பகல் அந்தியென பகற்பொழுது முழுக்கவும் மண்ணாங்கட்டியின் தோளில் கைப்போட்டபடி ஊரை வலம் வருகிறார். ஊரும் பார்த்து வியக்கிறது.
௦
இரவு வருகிறது. கடவுள் மாளிகையில் அறுசுவை உண்டு மதுவோடும் மாதுவோடும் மயங்கிக் கிடக்கிறார்.
௦
முன்னிரவில் இல்லம் வரும் மண்ணாங்கட்டி துண்டுடன் ஆற்றிற்குச் சென்று இருமுறை சோப்புபோட்டு நன்றாக முழுகிக் குளிக்கிறான். பிறகு உண்டு நன்றாக உறங்குகிறான்.
0
07.
௦
அரங்கம் நிறைந்திருந்தது. தன் குரலைச் சரிசெய்த கடவுளார் ‘நாமெல்லாம் தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் சமத்துவ வாழ்வை மேலும் மேம்படுத்த அனைவரும் தங்கள் ஆதரவினை எப்போதும் தரவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கர்ஜித்தார். அருகில் நின்றிருந்த மண்ணாங்கட்டி ‘சமத்துவ வாழ்வா’ அப்படி ஒன்று உள்ளதா? எனக் கூட்டத்திலிருந்து உரக்க கத்திவிட்டான். கடவுளாரின் மூக்கின் நுனியும் காதின் நுனியும் சிவந்திட அத்துடன் விடைபெற்று நகர்ந்துவிட்டார். அரங்கம் குறுஞ்சிரிப்பில் நிறைந்திருந்தது.
௦
மறுநாள் வாழ்வதெற்கென ஏதோவொன்றைப் பற்றிக்கொண்டு ஊசலாடும் மனமென அறையின் மத்தியிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்யப்பட்ட மண்ணாங்கட்டியின் உடல் தொங்கிக்கொண்டிருந்தது.
0
08.
௦
வைகறை வேளையில் இருவரும் கக்காப் போவதற்கென சென்றனர். ஆத்தங்கரைக்குச் சென்றதும் ஆளுக்கொரு பக்கம் பிரிந்தனர்.
௦
வழக்கத்தைவிட கூடுதலான நேரம் ஆனதால் குழம்பிப்போன மண்ணாங்கட்டி கைபேசியில் அழைத்தும் பயனின்றிப் போக கடவுளாரே கடவுளாரே என விளித்தவாறு அவர் சென்ற திசையில் நடந்தான்.
௦
மலத்தின் மீது குப்புறக் கிடந்தக் கடவுளின் தலையில் கோடாரி இறங்கி இருந்தது.
௦
கைப்பேசியைக் கையில் வைத்திருந்த மண்ணாங்கட்டி தான் இப்போது உதவிக்கு அழைக்க வேண்டிய எண் நூறா அல்லது நூற்றி எட்டா எனக் குழம்பிப்போயிருந்தான்.
0
09.
௦
இருவரும் விளையாடிய மொத்த சதுரங்கப் போட்டிகளில் கட்டியார் கடவுளைவிட அதிக வெற்றிகளைப் பெற்றிருந்தார்.
௦
இப்போதுதான் இப்படிச் சொதப்புகிறேன். சிறுவயதில் என் நகர்த்தல்கள் மிகத் துல்லியமாக இருக்கும் என்ற கடவுளார் தம் நகத்தைக் கடித்துத் துப்பிக்கொண்டார்.
௦
கடவுளைவிட பதினேழு வயது மூத்தவரான மண்ணாங்கட்டி ‘அப்போ கூட நான் நல்லா விளையாடுறேன்னு’ சொல்ல முடியாத கடவுளின்
மேதமையை எண்ணி தமக்குள் நகைத்துக்கொண்டார்.
0

10.
௦
தூங்கு மூஞ்சி மரத்தின் அடியில் இரு சக்கர வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்த சொல்லிய கடவுளார், ‘கடவுள் வந்திருப்பதாக அவனிடம் சொல்லி ஐந்து கரும்புச் சாறு பார்சல் வாங்கி வா’ என்றார். சற்றுத் தயங்கியவாறு மண்ணாங்கட்டி கடவுளரைப் பார்க்க ‘அவரேச் சென்று தான் யாரென அறிமுகம் செய்து தம் பராக்கிரமங்களைச் சொல்லி ஓசியில் வாங்கி வந்தார்’.
௦
இப்போதெல்லாம் மண்ணாங்கட்டி கடவுளுடன் வெளியே செல்வதை நிறுத்திக்கொண்டான்.
0
11
௦
கடவுளின் மாளிகை.
–
வைர வைடூரிய மாணிக்க மரகதங்கள்
இறைந்து கிடக்கும் கூடம்.
அனுபவிக்க எல்லாம் உண்டு.
௦
மாலை நடையின்போது இடர் என்றால் என்னவென்றே அறியாத கடவுளார் ‘இந்த வாழ்க்கை மிகவும் சலிப்பாக உள்ளதுதானே’ என்கிறார்.
௦
கோடானகோடி ஆண்டுகளின் பின்னர் முதல்முறையாக கடவுளின் நாவு உண்மையைப் பேசுவதுக் கண்டு அதிர்ந்த கட்டியாரின் சிரம் மீது வேப்பம் பூக்கள் உதிர்கின்றன.
0
12.
௦
கடவுளார் பூனைகள் வளர்க்கிறார். அவைகளுக்குத் திமிங்கில இறைச்சியையும் ஒட்டகப் பாலையும் உணவென இட்டார். வளர்கின்றன.
௦
கட்டியார் பூனைகள் வளர்க்கிறார். அவை எல்லா மீன்களையும் தின்பதோடு எல்லா வகையான பாலையும் அருந்துகின்றன. வளர்கின்றன.
0
13.
௦
கடவுள் தன் வண்டியின் குண்டியில் ‘கடவுள்’ என்று சிவப்பு வண்ணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார்.
௦
நல்லவேளை வண்டியோட குண்டியில மட்டும் ஒட்டியிருக்காரு என்ற எண்ணத்துடன் நடந்துகொண்டிருந்தான் மண்ணாங்கட்டி.
0
14.
௦
கடவுளார் அலுவல் நிமித்தம் மண்ணாங்கட்டியின் ஊருக்கு வந்தார். தன் அதிகார பலத்தை எல்லாம் காட்டாமல் மறுநாள் தேவைக்கென ஜட்டியுடன் பிரஷ் சோப் டவல் எனச் சிலவற்றைத் தமக்கும் இணையாருக்கும் வாங்கி வரச் சொன்னதோடு அவர் தங்கியிருக்கும் அறையில் சென்று கொடுத்து வரச் சொன்னார்.
௦
பிஞ்சு என்றால் பழமாக இருக்கும் மண்ணாங்கட்டி வாங்கி சென்ற ஜட்டியை அவரின் இணையாருக்கு அணிவித்துவிட்டு அலுவலுக்குத் திரும்பினார்.
0
15.
௦
கைக்குலுக்கி மார்புடன் அணைக்கும் உடல்மொழியுடன் வந்தபோது மிகுந்த மரியாதையுடன் மண்ணாங்கட்டியைப் பார்த்துக் கைக்கூப்பினார் கடவுள். புல்லரித்துப் போனது கட்டிக்கு.
௦
இந்த நாயி கெட்டக்கேடுக்கு அவனுக்குக் கைக்குடுக்கணுமாம் கை என்று உள்ளே சினந்தவாறு பார்வைக்குச் சிரித்துக் கொண்டிருந்தார் கடவுளார்.
0

16.
௦
கடவுளார் தம் இரதத்தைத் தயார் செய்யச் சொன்னார். நூற்று இருபத்து மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட இரதம். ஒவ்வொன்றும் தனித்த குணச்சிறப்பைக் கொண்டவை. நேரடியாக அரேபியாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டவை.
௦
மண்ணாங்கட்டி அடுத்த அறுபது நிமிடங்களில் தயார் செய்திருந்தான்.
௦
இளவெயில் செம்மண் சாலையை முகர்ந்தபடி நகர்ந்து கொண்டிருந்தது.
௦
இன்றைய தினம் மலையை ஒட்டிய சரிவைத் தேர்ந்தெடுத்த கடவுளார் இரதத்தை நிறுத்தச் சொல்லி இறங்கினார். பன்னீர் நிரப்பப்பட்ட தங்கச் சொம்புடன் செடியோரம் மறைந்தார்.
௦
கழிந்தார்.
௦
பிறகு இரதமேறி புரவியின் மயிர்கள் கலைந்தாட அரண்மனை அடைந்தார்.
0
17
௦
கடவுளாரின் வருகையை முன்னிட்டு குளிர்மை அரங்கம் நிறைந்திருந்தது.
௦
நுழைந்தார்.
௦
கடவுளார் தன் உடல்மீது பூசியிருந்த வாசனை திரவத்தின் வீச்சம் குமட்டலை ஏற்படுத்தியது. எல்லோரும் அவரது வீரதீர பராக்கிரம அழகு பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நழுவியிருந்த மண்ணாங்கட்டி அரங்கிற்கு வெளியே நின்று நன்றாக மூச்சினை இழுத்துயிழுத்து விட்டுக்கொண்டான்.
0
18
௦
மண்ணாங்கட்டி வெள்ளை வேட்டி கருப்புச் சட்டை உடுத்தியிருந்தான்.
௦
ஏறிட்டுப் பார்த்த கடவுளார் என்னய்யா விசேசம்? என்றார். அதெல்லாம் ஒன்னுமில்லை சும்மாதான்! என்றான் மண்ணாங்கட்டி.
௦
மறுநாள்.
௦
இந்த ஆண்டு முதல் குத்தகைப் பணம் இரட்டிப்பு ஆக்கப்பட்டதாய் மண்ணாங்கட்டிக்கு தகவல் வந்தது.
0
19
௦
வேறு வழியே இல்லை. மூன்று மாதங்களுக்கு முன்னர் தர இயலாது என்றார் கடவுளார்.
௦
நம் நகை. அதை நாமே வட்டியும் கொடுத்து மிகக் குறைந்த தொகைக்கு வங்கியில் அடகாய் வைக்கிறோம். மீள கேட்டால் மூன்று மாதம் என்கின்றனர்.
௦
அப்படியானால் மூன்று மாத வட்டியை எடுத்துக்கொண்டு தாரும் என்றான் மண்ணாங்கட்டி. பாவம் ‘சட்டென தன்மானம் சீண்டப்பட்ட கடவுளார் கொள்கை கோட்பாடுகளை முன்வைத்துவிட்டு நாங்கள் கந்துவட்டிக்காரர்கள் இல்லை’ என்றார்.
௦
பிறகு
எல்லாம் இனிதே முடிந்தது.
0
20
௦
வேகமாய் வந்த குரங்கு கடவுளாரின் கையிலிருந்த வாட்டர் பாட்டிலைப் பிடுங்கிச் சென்றது. கடுங்கோபத்துடன் கடவுளார் கல்லால் எறிந்தார்.
௦
பிச்சைக்காரனான மண்ணாங்கட்டிக்கு இச்செய்கை எரிச்சலைத் தந்தது.
௦
தனது குவளையுள் சில்லறைபோட வந்தபோது பாத்திரத்தை எடுத்து ஒரம்வைத்துவிட்டு திரும்பிக்கொண்டான்.
0

21
௦
கடவுளார் தம் காதலுக்காக மண்ணாங்கட்டியிடம் கவிதை ஒன்றை எழுதித்தர கேட்டார்.
௦
நிறைவேற்றினான்.
௦
காதல் திருமணத்தில் முடிந்தது.
௦
கடவுளார் இப்போதெல்லாம் கவிதைகளைப் பற்றி மண்ணாங்கட்டியிடம் பேசுவதில்லை.
0
22
௦
கடவுளார் விமானத்தில் பறக்க ஆயத்தமானார். ஆகையால் பிரபஞ்சமே விழாக்கோலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
௦
விமான நிலையத்தின் நுழைவாயிலில் உள்ளே நுழைய முயன்றபோது கடவுளாரின் தலைக்கு நேர்மேலே புறாக்கள் பறந்துக்கொண்டிருந்தன.
0
23
௦
மரண வாக்குமூலத்தில் ‘தனது சாவிற்கு காரணம் கடவுள்’ எனத் தெளிவாகச் சொல்லியிருந்தான் மண்ணாங்கட்டி.
௦
‘நீதியின் பொருட்டு கடவுள் கடவுல் ஆக்கப்பட்டுத் தேடப்பட்டுக் கொண்டிருந்தார்’.
0
24
௦
ஏலக்காய் தேநீர் அருந்தலாமா என்றபோது சர்க்கரையின்றி பால் போதும் என்றார் கடவுளார். உடனே கெக்கபிக்கே கெக்கபிக்கே என சிரித்துவைத்தான் மண்ணாங்கட்டி.
௦
வயதிற்கு வராத உயிரிபோல் தம்மைக் காட்டிக்கொண்ட கடவுளார் துளி பாலும் சிந்தாமல் அருந்தி முடித்தார்.
0
25
௦
கடவுளுக்கு நாக்கு நமநமத்தது. மண்ணாங்கட்டியிடம் பகிர்ந்தார். இருவரும் மலையேறி் பன்றியை வேட்டையாடினர்.
௦
நெருப்பில் பொசுக்கி கூறிட்டுப் பிரித்தபடி தனித்தனியே பிரிந்தபோது மிக கவனமாக வெதரில் ஆளுக்கொன்று வருமாறு பார்த்துக்கொண்டனர்.
0
26
௦
கடவுள் பிரபஞ்ச அழகியைச்/அழகனைச் சந்தித்தார். தன் விருப்பத்தைப் பதிவு செய்தார்.
௦
செவிசாய்க்கப்பட்டது.
௦
வெளியேறினார்.
௦
கூலி சரியாக உள்ளதா எனச் சரிபார்த்துக் கொண்டான் மண்ணாங்கட்டி.
0

27
௦
என்னை சாபமிடும் வரம் உனக்கு அருளப்பட்டது என்றார் கடவுள்.
௦
சாபமிட்டான் மண்ணாங்கட்டி.
௦
மண்ணாய்ப் போயிருந்தார் கடவுள்.
0
28
௦
கடவுள் சங்க இலக்கியம் முழுமையும் வாசித்ததாகச் சொன்னார். ஆச்சர்யத்துடன் அப்படியா என்ற மண்ணாங்கட்டி சில ஐயங்களுக்கு தீர்வைக் கேட்டான்.
௦
ஒவ்வொரு ஐயத்தையும் மிகத் தெளிவாக விளக்கினார் கடவுளார்.
௦
மண்ணாங்கட்டியின் குறட்டையொலி அந்த அறையில் புழங்கிக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிகளுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
0
29
௦
வானத்தையும் பூமியையும் சகலத்தையும் படைத்த உத்தமர் மண்ணாங்கட்டியையும் படைத்தார்.
௦
சுற்றம் பார்த்து தெளிந்த மண்ணாங்கட்டி சிலையின் தொப்புளை நக்கத் துவங்கினான்.
0
30
௦
மழை வலுத்தது. மின்னலைப் பற்றிக்கொண்டு கடவுளார் ஊஞ்சல் ஆடினார்.
௦
மழை வலுத்தது. மின்னலால் கொல்லப்பட்டு உயிர்ப் பிரிந்துக் கிடந்தான் மண்ணாங்கட்டி.
0
31
௦
கடவுளாருக்கு எதைப் பார்த்தாலும் அல்லது எவரைப் பார்த்தாலும் எரிச்சலாக இருந்தது.
தன் விரலைச் சொடுக்கினார். பணிந்து நின்றவர்களிடம் கண்களில் படுபவர்களையெல்லாம் கொல்லுங்கள் என ஆணையிட்டார்.
௦
நிறைவேற்றப்பட்டது.
௦
மண்ணாங்கட்டியின் தாடி மயிரைப் பிடித்து விளையாடுவதற்காகக் காத்திருந்த குழந்தை உறங்கிப்போயிருந்ததது.
0

சுஜித் லெனின்
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்ரும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதி வருகிறார். 2023 ஜனவரியில் ’பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்’ என்கிற சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு வாயிலாக வெளிவந்துள்ளது.