அன்றைக்கு கூலிக்காரன் பொழுதில்லாமல், பணக்காரன் பொழுதாக இருந்தது. சரியாக 8:00 மணிக்கெல்லாம், கதிரவன் கடும் கோபமுகத்தை காட்டிக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் தப்பிக்க முயன்றவர்களின் முதுகில் கை வைத்து பார்த்தால் தெரியும் அவனின் ஆக்ரோசம்.

இருளின் வண்ணம், ஈர்க்குச்சியின் சரீரம் கொண்ட அவன்;அன்றைக்கு அந்த சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தான். நண்பனின் திருமண விழாவை முடித்துவிட்டு. அங்கிருந்து விராட்டியூர் வருவதற்கு;போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் நடந்தே இரண்டு பரலாங்கு வந்து விட்டான்.

கதிரவனின் கடும் கோபமுகம் ஒட்டுமொத்தமாக அவன் சரீரம் முழுதும் பரவிக் கிடந்தன. வெள்ளை நிறமேல் சட்டையும் கருநீல கால் சட்டையும் அவன் உப்பு நீரால் ஊறி போயின. அவ்வப்போது கால் சட்டை பையில் கையை விட்டு, கை குட்டையை எடுத்து முகமும் பிடரியையும் துடைத்துக் கொண்டிருந்தான். இன்னும் இரண்டு பரலாங்கு நடந்தால் விராட்டியூர் வந்துவிடும்.

அவனை கடந்து செல்ல முற்படும் வாகனங்களை நிறுத்தி உதவி கேட்க  நினைத்தாலும், ஏதோ அவன் மனம் தடுத்தன. புங்கை புளியமரம் ஆங்காங்கே இருந்தாலும்; ஒரு சில இடங்களில் மட்டுமே இளைப்பாறினான். கையில் கட்டி இருந்த கடிகாரத்தின் முட்களை பார்த்தான். சின்ன முள் ஒன்பதுக்கு மேலாகவும் பெரிய முள் மூன்றுக்கு அருகிலும் இருந்தன. நொடி முள் வழக்கம் போல நிற்காமல் சுழன்று கொண்டிருந்தன. அந்த கைக்கடிகாரம் தங்க நிறம் பூசிய (டைட்டான் வாட்ச்) கடிகாரம்.

அந்த சாலையில் இருந்து தற்போது பிரதான சாலையை தொட்டுவிட்டான். அந்தப் பிரதான சாலையில் இருந்து அரை பரலாங்கு நடந்தால் போதும் விராட்டியூர் வந்துவிடும். சாலையின் ஓரத்தில் இருபுறமும் குடிசை வீடுகளும் ஓட்டு வீடுகளும் இருந்தன. எல்லா வீட்டின் முற்றத்தில் வேப்பமரம் முருங்கை மரம் மற்றும் சிறு சிறு பூச்செடிகளும் இருந்தன.

மஞ்சள் நிற சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த வீட்டின் வாசலில், அந்த வீட்டம்மாள் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். ஏறக்குறைய 80 வயதை தொட்டிருக்கும். படர்ந்த முகமும் மாநிறம்கொண்ட சரீரமும், சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்து நின்று. அவனை கை சைகை காட்டி கூப்பிட்டாள். அவள் கூப்பிடும் தோரணையை கண்டு, உள்ளிருந்து ஒரு பெண் வாசல் படியில் வந்து நின்று கொண்டாள்.

அவள் அந்த வீட்டம்மாளை போல குட்டையானவள் இல்லை. நன்கு வளர்ச்சி உடையவளாக இருந்தாள். அவள் கட்டியிருந்த சீலை; சிகப்பும் அல்லாமல் மஞ்சளும் இல்லாமல் பச்சையும் இல்லாமல் வேம்பு கொழுந்து நிறம் போல இருந்தது. முகசாயல் மட்டும் அப்படியே அந்த வீட்டம்மாளை உரித்து வைத்திருந்தது.

அவளும் அவனை கையசைத்துக் கூப்பிடுவதை அவன் உணர்ந்தான். எங்கேயும் பார்த்திருப்பேனோ அல்லது தெரிந்தவர்களோ என்று எண்ணிக்கொண்டான், அந்த பிரதான சாலையை கடந்து சென்றான். அந்த வீட்டில் மூன்றாவது நபராக பைரவர் இருந்தார். அவனை பார்த்தும் குறைக்க ஆரம்பித்தது. வெறுமனே கல் எடுப்பது போல குனிந்து துரத்தி விடுகிறாள் வீட்டம்மாள்.

நன்கு ஞாபகப்படுத்தி பார்த்ததில் அவர்களை இதற்கு முன்னால் எங்கேயும் பார்த்ததில்லை என்பதை அவன் உறுதி செய்து கொண்டான்.

“சொல்லுங்கம்மா எதுக்கு கூப்பிட்டிங்க”

வீட்டம்மாள் அவனிடம் பணம் எவ்வளவு இருக்கு? என்று விசாரித்தாள். விராட்டியூரில் இருந்து மணப்பாறைக்கு செல்லும் பயணச் செலவு தவிர. அவனிடம் வேறு எந்த பணமும் இல்லை. “ஏன் கேக்குறீங்க” என்று கேட்டான்.

“அமுதா; வேஸ்ட் கிராக்கி”

“அனுப்பி விடுங்க போகட்டும்” உள்ளே இருந்து அமுதாவின் குரல் ஒலித்தது. சாம்பல் நிற பூனை ஒன்று வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தது. அது அனேகமாக அமுதா துரத்திவிட்ட பூனை தான்.

அவர்கள் எதற்காக கூப்பிட்டார்கள் என்பதை அவனால் இப்போது யூகித்துக் கொள்ள முடிந்தது. அந்த இடத்தை விட்டு நகர மனம் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தும் இரண்டு மூன்று அடி எடுத்து வைத்தான். மீண்டும் அவனை அந்த வீட்டம்மாள் கூப்பிட்டாள்.

“இது ஒரிஜினல் கோல்ட் வாட்ச்யா?” வீட்டம்மாள் கேட்டாள்.

“ஆமாம்! ஆமாம்!!” என்று தலை அசைத்தான்.

அந்த சாம்பல் நிற பூனை சீமை கருவேலை முள்ளு மரத்திற்கு அடியில் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தது. அது ஏதோ ஒன்றை வாயால் கவ்வியும் மீண்டும் கீழே போட்டுக் கொண்டும் இருந்தது. பலமான காற்று வீசியது, அந்த மரத்தின் அசைவில் சரசரவென சத்தம் கேட்டு, வாயில் கவ்வியபடி பூனை வீட்டு வாசல் அருகில் வந்து, வாயில் இருந்ததை போட்ட போது தான் அவனுக்கு தெரிந்தது அது ஆணுறை.

கடிகாரத்தை கழட்டித் தரச் சொல்லி கட்டளையிட்டாள் வீட்டம்மாள். அவன், ஏன்? எதற்கு?என்று எந்த கேள்வியும் கேட்காமல் கழட்டி கொடுத்தான்.

உள்ளே சென்று அமுதாவிடம் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே திரும்பி வந்தாள். வந்தவள் வெளியே வராமல் வீட்டிற்குள் போடப்பட்டிருந்த கயிற்றுக்கட்டில் அமர்ந்து கொண்டாள். உள்ளே அழைப்பதற்கு முன்பாக அவன் செருப்பை வாசற்படிக்கட்டில் ஒரு ஓரமாக கழட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.

தென்ன ஓலையில் வேயப்பட்டிருந்த வீட்டிற்குள் நுழைந்ததும் புங்கையும் புளிய மரமும் பயணத்தில் தராத குளுமையை அந்த வீட்டிற்குள் உணர்ந்தான். கட்டிலில் அமர்ந்திருந்த வீட்டம்மாளின் எதிரில் ஒரு சிறிய அறை இருந்தது. அதற்குள் இருந்து தான் அமுதா கைபேசியில் யாரிடமோ உரையாடிக் கொண்டிருந்தாள்.

சரீரம் குளிர்ச்சி அடைந்தாலும் வேர்வை துளிகள் பெருக்கெடுத்து அவன் உடல் முழுதும் ஓடின. வீட்டம்மாள் மின்விசிறியைபோடச் சொன்னதும் உள்ளிருந்து வெளிவந்த அமுதா, அவனை கடந்து ஸ்விட்சைப் போட்டாள்.

காற்றாடி மெல்ல சுழல ஆரம்பித்தது. அவனைக் கடந்தாள். அவள் வாசம் நாசியில் நுழைந்து அவன் கண்களை மேல் நோக்கச் செய்தன… வீட்டம்மாள் கடிகாரத்தை முன்னும் பின்னுமாக புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். “நல்ல விலைபோகும்” என்று அவன் மன உதட்டில் பேசிக் கொண்டான்.

“சரி சரி போ” வீட்டம்மாளின் உச்சரிப்பில் போதிய நிம்மதி இல்லை என்பதை உணர்ந்துக்  கொண்டான்.

தாழிடப்படாத அந்த அறையினுள் அமுதா அவனுக்கானவாளாய் மாறி இருந்தாள். விருட்டேன உள்ளே நுழைந்தவன் கட்டிலில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டு அமுதாவின் சரீரத்தை கண்களால் மேய விட்டான். பதட்டமும் பரபரப்பும் நிதானம் கேள்விக்குறியானது.

-எந்த ஊர் தம்பி? மணப்பாறைக்கா? என்ன வேலை பண்ற?

-எலக்ட்ரீசியன் வேலை பார்க்கிறேன்

-இங்க யார பார்க்க வந்த?

-நண்பன் கல்யாணத்துக்கு வந்தேன்.

-பேரு?

-மணிகண்டன்

நிதானம் என்றால் என்ன என்பதை அவன் உணர்வதற்காகவே  உரையாடினாள். சுவர் கடிகாரத்தின் நொடி முள் சத்தம் அந்த அறை முழுதும் பகிரங்கமாக ஒழித்துக் கொண்டிருந்தது. மதில் மீது அமர்ந்திருந்த அந்த சாம்பல் நிற பூனை, இவர்களைப் பார்த்து விட்டு விட்டத்தை நோட்டமிட்டது.

அந்த ஜீவன்கள் புடை சூழ்ந்து சாளரத்தின் துளை வழியே வான் சென்றது.

மயிர்கற்றை அள்ளி கொண்டை போட்டுக் கொண்டாள். இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் அருகில் இருந்த கண்ணாடியை எடுத்து முகம் பார்த்துக் கொண்டாள். கதவின் தாழ் நீக்கினாள்.

மணிகண்டன், அறை விட்டு வெளியே வரும் போது கட்டிலில் வீட்டம்மாள் இல்லை. வாசலுக்கு சென்று செருப்பை மாட்டிக் கொண்டிருந்தான். வீட்டின் பின் பகுதியிலிருந்து. ஒரு ஆணின் இருமல் சத்தம் கேட்டது.  மூத்திரப்பையை காலி செய்து விட்டு, வீட்டின் பின் பகுதியை நோக்கி சென்றாள் வீட்டம்மாள்.

+++

இயற்பெயர் குமரேசன் சொந்த ஊர் மணப்பாறை தொழில் ரீதியாக (சம்சா)அய்யலூர் வளவிசெட்டிப்பட்டியில் வசித்து வருகிறேன். ஒரு மார்க்சியவாதியாக தன்னை இணைத்துக் கொண்டேன் .கடந்த ஆறு ஆண்டுகளாக இலக்கியத்தில் பயணிக்கிறேன்.ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிஞராக மணவை கார்னிகன் என்று அடையாளமானேன்.சில சிறு பத்திரிகைகளில் புதுக்கவிதைகளும் தன்முனை கவிதைகளும்இடம் பிடித்திருக்கின்றன.தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தேடல் களம் இணைந்து நடத்திய கவிதைகளில் கலைச்சொற்கள் என்னும் போட்டியில் கலந்து கொண்டு சான்றிதமும் பரிசும் பெற்றேன்.இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு தொடர்ந்து கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறேன்.இன்னும் எந்த தொகுப்பும் வெளி வராத நிலையில் நான்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *