அன்று ஞாயிற்றுக்கிழமை.

            எழில் அவன் தாத்தா வீட்டிற்கு வந்திருந்தான். வழக்கமாக வாரத்தின் இரு நாள்கள் சனி மற்றும் ஞாயிறு பள்ளிக்கு விடுமுறை நாள்கள். ஆகவே இந்நாள்களில் எழில் தாத்தா வீட்டிற்கு வந்துவிடுவான்.

            “எழில்.. என்னோடு வா.. நாம கடைத்தெரு வரைக்கும் போய்டடு வரலாம்..” என்று கூப்பிட்டார் தாத்தா.

            ”வர்றேன் தாத்தா..”

            “சரி.. சட்டைப் போட்டுக்கொண்டு வா!” என்றார் தாத்தா.

            “அம்மா.. எனக்கு ஒரு சட்டை எடுத்துக் கொடு” என்றான் எழில்.

            எழிலின் அம்மா ஒரு டீசர்ட் எடுத்து வந்தாள்.

            “அம்மா. இது வேண்டாம்.. எனக்குப் பட்டன் போடுற மாதிரி சட்டையை எடுத்துட்டு வா..”

            “வேண்டாம். இதையே போட்டுட்டுப் போ.. கடைத்தெரு தானே போறே..?”

            “இல்லம்மா.. எனக்கு சட்டைதான் வேணும்..

            “ஏம்மா அவன் கேக்கறப் போட்டுவிடேன்” என்றார் எழிலின் தாத்தா.

            “ஏம்பா.. இப்பவே அவன் விருப்பத்துக்கு செய்ய விடறீங்க.. இது சரியில்லப்பா.. ஏதாச்சும் ஒண்ணப் போட்டுட்டு போகலாம்ல..” என்றாள் எழிலின் அம்மா.

            “பிள்ளைகள் விரும்பறத செய்யும்மா.. போய் சட்டையை எடுத்துட்டு வா..” என்றார்.

            “உங்களாலதான் பிள்ளைங்க கெட்டுப்போறாங்க..” என்று கத்தினாள்.

            “நீயும் உன் அண்ணனும் கெட்டுப்போயிட்டிங்களா?” என்றார் தாத்தா.

     “ஏம்பா.. ரெண்டு பேரும் படுத்தறீங்க.. பெரிய தொல்லையா இருக்கு உங்க ரெண்டுபேரோடயும்..” என்று சத்தம் போட்டபடியே உள்ளே போய் சட்டையை எடுத்து வந்து அவனுக்குப் போட ஆரம்பிக்கும்போது எழில் சொன்னான்..

        “விடும்மா.. நீ போட்டுவிடாதே.. நானே போட்டுக்கறேன்..” என்று அவன் அம்மா கையிலிருந்து சட்டையைப் பிடுங்கினான்.

          “சனியனே.. படுத்தறே.. நான் போட்டுவிடறேன்..” என்று பிடிவாதம் பிடித்தாள்.

          “எதுக்கும்மா.. அவனைப் போய் சனியன்னு திட்டறே..?  இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி சண்டை போடறே.. அவன் சின்னபுள்ள… சரிக்கு சமமாப் போட்டிப்போடறே.. அவனா சட்டை போட்டுக்கட்டுமே.. நல்ல விஷயந்தானே” என்றார் எழிலின் தாத்தா.

         “அய்யோ அப்பா.. உங்களாலதான் அவன் உருப்படியில்லாமப் போகப்போறான்.. கெட்டுக் குட்டிச்சுவராவப் போறான். என்னமோ செய்யுங்க” என்று சட்டையைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாள்.

         எழில் சட்டையைப் போட ஆரம்பித்தான். பட்டன்களைப் போடும்போது ஏற்ற இறக்கமாய் போட்டிருந்தான்.

             “எழில்.. பட்டன்களைக் கழற்று.. சரியாப் போடலே பாரு..” என்றார்.

            “சொல்லுங்க தாத்தா.. நான் சரியாப் போட்டுக்கறேன்..” என்றான்.

       சொல்லி தந்தார். பட்டன்களைக் கழற்றிவிட்டு சரியாகப் போட்டுக்கொண்டான்.

          இருவரும் வீட்டைவிட்டுத் தெருவிறங்கி நடந்துபோய் கடைத்தெருவிற்குப் போகும் சாலையில் நடந்தார்கள்.

         எழில் கேட்டான்.. “தாத்தா.. சண்டைன்னா என்ன?”

         “சத்தம் போடறது சண்டை” என்றார் தாத்தா.

            “இல்ல அம்மாச்சி வேற சொன்னாங்களே?” என்றான்

         “என்ன சொன்னாங்க?”

         “நேத்து எதுத்த வீட்டிலே அந்த அங்கிளும் அண்ணனும் குச்சியால அடிச்சிக்கிட்டாங்க.. அது சண்டைன்னாங்க.. அப்புறம் தேவி பாப்பா வீட்டுலே வேற அவுங்க அப்பாவும், அம்மாவும் பேட் வேர்ட்ஸ் பேசிக்கிட்டாங்க தாத்தா.. அதுவும் சண்டைன்னாங்க.. பேட் வேர்ட்ஸ் பேசுனா சண்டையா தாத்தா?”

         “ஆமாம் அதுவும் சண்டைதான்” என்றார் தாத்தா.

           “ஏன் தாத்தா சண்டைப் போடறாங்க?” என்றான்.

          “நிறைய இருக்குப்பா சண்டை போடறதுக்கு.. காரணம்.. ஆனா அத்தனையும் பொருள் இல்லாதது.”

          “பொருள் இல்லாததுன்ன என்ன தாத்தா?”

          “யாருக்கும் அதனால நன்மை கிடையாதுன்னு சொல்றேன்.”

          “நன்மைன்னா என்ன தாத்தா?”

          “ஹேப்பிப்பா எழிலு..” என்றார் தாத்தா.

          “சண்டைன்னா ஹேப்பி இல்லையா?”

            “இல்லை. சண்டை ஒரு கண்ணுக்குத் தெரியாத பூதம்பா..” என்றார் தாத்தா.

              “பூதமா? கண்ணுக்குத் தெரியாதா?”

           “நீ பூதத்தப் பாத்திருக்கியா எழில்?”

           “இல்லை தாத்தா. பூதம்னா என்ன தாத்தா?”

           “கெட்டது. நல்லதே அதுக்குத் தெரியாது.”

            “இந்தப் பூதம் என்ன பண்ணும் தாத்தா?”

              “நம்பள எந்த வேலையும் செய்யவிடாமப் பண்ணிடும்.. எப்பவும் ஹேப்பியா இருக்க முடியாது.. எல்லாரையும் கெட்டவங்களா ஆக்கிடும்..”

              “அந்தப் பூதத்த விரட்டமுடியாதா தாத்தா? எங்கேர்ந்து வருது தாத்தா? ஏன் கண்ணுக்குத் தெரியாது அந்தப் பூதம்?” கேள்விகளாகக் கேட்டான் எழில்.

               இரண்டு வயதிலிருந்தே எழில் நிறைய கேள்விகள் கேட்கத் தொடங்கியிருந்தான்.  இப்போது வயது ஐந்து முடிந்துவிட்டது. எல்லா வற்றையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற துடிப்புடன் இருக்கிறான். அவன் தாத்தாதான் அவன் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறுவார். தாத்தாவை ரொம்ப எழிலுக்குப் பிடித்துப்போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

                  “விரட்டலாம்.. அத நாமதானே கூப்பிட்டோம். நாமளே அத விரட்டிடலாம்..”

                        “நாம கூப்பிட்டாதான் அந்தப் பூதம் வருமா தாத்தா?”

                   “ஆமாம். நாம ஹேப்பியா இல்லாம இருந்தா உடனே அந்தப் பூதம் வந்துடும்..”

                    “அது வந்தா ஹேப்பி இல்லன்னு சொன்னீங்க..”

                        “ஆமாம்… அது வந்ததும் இன்னும் சேட் ஆக்கிடும்.. ரொம்ப சேட் ஆக்கிடும் எழில்..”

                 “ஓ… ஏன் தாத்தா அது கண்ணுக்குத் தெரியாதுன்னு சொல்றீங்க..”

                “அது ஒரு வைல்ட் அனிமல்..மாதிரி.. நீ பார்த்திருக்கேல்ல.. நிறைய வைல்ட் அனிமல்ஸ் கண்ணுக்குத தெரியாம ஒளிஞ்சிருந்துதானே மானையும் மற்ற அனிமல்ஸ் எல்லாத்தையும் கொல்லுதில்ல.. அதுமாதிரிதான்..”

                   “இது ஒரு பூதமா நிறைய பூதமா தாத்தா?”

                  “இது மாதிரி கண்ணுக்குத் தெரியாம நிறைய பூதங்கள் இருக்கு.. நாம ஹேப்பியா இல்லாட்டா ஒரு பூதம் வரும்.. நாம அடுத்தவங்களோட பொருள எடுத்துக்கிட்டா பூதம் வரும்.. நம்மளோட பிரெண்ட்ஸ்க்கு ஏதாச்சும் கெடுதல் பண்ணா பூதம் வரும்.. பேட் டச் பண்ணா பூதம் வரும்.. பேட் வேர்ட்ஸ் பேசுனா பூதம் வரும் சண்டை போட்டா பூதம் வரும்.. அம்மா, அப்பா பேச்சைக் கேக்காம இருந்தா பூதம் வரும்.. ஒழுங்கா படிக்கலேன்னா பூதம் வரும்..”

                “இவ்வளவு பூதம் இருக்கா தாத்தா?பூதம் வராம இருக்க என்ன பண்ணணும் தாத்தா?”

                   “நாம எப்பவும் ஹேப்பியா இருக்கணும்.. யாருக்கும் தொல்லை கொடுக்கக்கூடாது.. அவங்க அவங்க வேலையை ஒழுங்கா செய்யணும்..”

               “இப்போ என் சட்டையை நான் போட்டுக்கிட்ட மாதிரியா தாத்தா?”

                   “ஆமாம்.. அது மாதிரிதான்.”

                        “அம்மா எனக்குச் சட்டைப் போடறது தப்பா தாத்தா?”

                   “தப்பு இல்ல. உனக்குத் தெரியாதத தெரிஞ்சுக்கறவரைக்கும் தப்பில்லே. தெரிஞ்சுக்கிட்டு செய்யாம இருந்தா தப்பு.. அதைச் சொல்லிக்கொடுத்தா தப்பு..”                  

                   “அப்போ பூதம் வந்துடுமா தாத்தா?”

                   “இல்லை. அதுக்காக சண்டை போட்டா பூதம் வந்துடும்..”

                        “தாத்தா நானே கக்கா, உச்சா எல்லாம் போயிடறேன்.. உடனே தண்ணி ஊத்திடறேன்..”

                   “வெரிகுட்.. இதெல்லாம் ஹேப்பிதான்.. பூதம் வராது.”

                        “பூதம் என்ன பண்ணும் தாத்தா?”

                   “நாம தொடர்ந்து ஹேப்பி இல்லாம கெடுதல் பண்ணா அது மாதிரி நம்மளயும் காணாம ஆக்கிடும்.. நாமளும் யார் கண்ணுக்குத் தெரியாம மறைஞ்சிடுவோம்..”

                        “அய்யோ.. வேண்டாம் தாத்தா.. பூதம் வேண்டாம். பூதம் வேண்டாம்” என்று கத்தினான்.

                “உங்கிட்ட எல்லாமே குட்டா இருக்கு. அதனால உங்கிட்ட எந்த பூதமும் வராது. ஹேப்பிதானே எழில்?”

                   “ஹேப்பி தாத்தா..”          


இயற்பெயர்  பேரா.முனைவர். க.அன்பழகன் (ஹரணி) (1961)

தமிழ்ப்பேராசிரியர் (பநி)

1979 முதல படைப்புலகில்.  1000க்கு மேற்பட்ட சிறுகதைகள்.. கொஞ்சம் கவிதைகள்.. குறுநாவல்கள், நாவல்கள், 100க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பெற்றவை. கொஞ்சம் பரிசுகள். விருதுகள். பத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. படைப்புகளில் எம்பில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் பார்வை நூலாக என் நல்கள் வைப்பட்டுள்ளன. இதுவரை 70 நூல்கள் ஆய்வியல், அகராதியியல், மொழிபெயர்ப்பியல், மொழியியல், இலக்கியம், பக்தி இலக்கியம், இலக்கணம், சிறார் இலக்கியம், கட்டுரைகள், நாடகங்கள், கதைப்பாடல்கள் என 45 ஆண்டுகாலம் படைப்புலகில். கற்றது கடுகளவு. இன்னும் கல்லாதது உலகளவு. நன்றி.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *