‘இந்தக் கலர் பிடிக்குமா?’
‘இந்தக் கலர்ல ஒண்ணு போதுமா?’
தொடர்வண்டியில்
கை நீட்டிய குழந்தையிடம்
காற்றை விற்கும்
கண் தெரியா வியாபாரி
00

‘கதவச் சாத்துங்க,
வெஷக் காத்து’ என்றார்
ஏரியில் குடிபுகுந்தவன்
மழையைத் திட்டுகிறான்
சுனாமி வந்ததும் கடலை
சபித்தவன்
பாலைவனத்தில் பனிப்பொழிவு கலிகாலம் என்கிறான்
வழித்தடத்தில் தார்ச்சாலை
போட்டவன் நடுரோட்டில்
யானையென்கிறான்
ஒருவருக்கு ஒரு காரென்றானபின்
சலித்துக் கொள்கிறான்
கொளுத்தும் வெயிலென
சாயக்கழிவை கலந்து விட்டு
தண்ணியைப் பழிக்கிறான்
பழிபோட்டே பழகிவிட்டது
இந்த பாழாய்ப்போன
மனுஷ நாக்கு.
00

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

