இன்னமும் இருக்கிறார்கள்
கைகாட்டியவுடன் பேருந்தை நிறுத்தும்,
டயர் வெடித்து நிற்கும் வண்டியை
நிறுத்தி விசாரிக்கும் ஓட்டுனர்
இன்னமும் இருக்கிறார்கள்!
ஒரு ரூபாயையும் திருப்பிக் கொடுக்கும்,
இறங்குகையில் பாரத்தை இறக்கியுதவும் நடத்துநர்
இன்னமும் இருக்கிறார்கள்!
வயதான பாட்டிக்கு
எழுந்து இடம்கொடுக்கும் இளம்பெண்
நின்று கொண்டிருக்கும் நமது பையை
வாங்கி வைத்துக் கொள்ளும் மாணவன்
பயணச்சீட்டை முன்புறம் வாங்கிக்
கொடுக்கும் சக பயணிகள்
இப்பூமியும்
அனைத்து கோள்களும்
தினந்தோறும்
நில்லாது
சுற்றுகின்றன
இப்பேரன்பினால் தான்
+++
இறகுகளை
மூடியும் மறைத்தும்
போக்கு காட்டுகிறது
இவ்வண்ணத்துப்பூச்சி
உன்னைப் போலவே
இடதுகை வலதுகை
வலதுகை இடதுகை
தத்தித் தத்தி
இரண்டுமே கைவிட
முழுநிலவு முகம் மூடிக் கொள்ள
சத்தத்துடன் தரையில் விழுந்தது
கீறல் விழுந்தது
கைபேசி மட்டுமா?
+++
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.