1.முற்றம்
கோரப்பாய்கள் விரித்து
அம்மா அப்பா
அண்ணன் தம்பி
அக்கா தங்கையென்று
அனைவரும் நிலவை ரசித்து
கழிந்த முற்றம்
,
ஆடு மாடு
கோழியென்று
கட்டிப்போட்டும்
அடைத்தும்
வாழ்ந்த முற்றம்
,
தெருவிளக்கு வெளிச்சத்தில்
“ஒரு குடம் தண்ணியெடுத்து”
பாடல் பாடி
விளையாண்டு
களித்த முற்றம்
,
பெரிய வட்டமிட்டு
கோலிக்குண்டுகளை
வரிசைப்படுத்தி கட்டி
அடித்து விளையாடி
மகிழ்ந்த முற்றம்
,
அதிகாலையில்
சாணம் தெளித்து
நோய்த் தொற்றை
விரட்டிய முற்றம்
,
மார்கழித் தையில்
அக்கா தங்கையென்று
வரைந்த பல கோலங்களை
சுமந்த முற்றம்
,
இப்படிப் பலவற்றை
கண்ட முற்றம்
இப்போது கிராமங்களில்
அரிதாகிப்போனதென்
காரணமென்ன ?
***
2.கிராம மாற்றம்
கண்மாய் நீரில்
துள்ளிக் குதித்து
விளையாடிடும் மீன்கள்
,
நீர் மேற்பரப்பின் மீது
இரை தேடிடும்
நாரைகளின் சப்தங்கள்
,
கரைகளின் ஓரங்களில்
மண்ணைத் துளைத்துக்
கொண்டிருக்கும் நண்டுகள்
,
கரைகளைச் சுற்றிலும்
காவல்காரனாய் அமைந்திருக்கும்
பனை மரங்கள்
,
மடையின் மேலிருந்து
சுழன்று குதித்து
குளித்திடும் சிறுவன்
,
நடு மடையிலிருந்து
திறந்து விடப்படும் நீரில்
துணிகள் துவைத்திடும் மக்கள்
,
கால்வாயின் வழியே
பாய்ந்தோடும் நீரை
வாரியணைத்து நெற்பயிருக்கு
தண்ணீர் பாய்ச்சிடும் விவசாயி
,
அறுவடை செய்த
நெற்பயிரை அடித்து
நெல்மணிகள் எடுப்பதற்கு
அமைக்கப்பட்ட நெற்களம்
,
வண்டிமாடு கட்டி
மூட்டை மூட்டையாய்
ஏற்றிச் செல்லும்
நெல் மூட்டைகள்
,
இவையனைத்தும்
காலத்தின் மாற்றத்தால்
நலிந்து போனதா – இல்லை
கால நிலையின் மாற்றத்தால்
சரிந்து போனதா ?
,
என் கிராமத்தில்…!
000

தொலைந்து மீண்டவன் மற்றும் மௌனத்தின் உரிமைக்குரல் என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார்.

