1.நீரின்றி அமையாது…
சிற்றோடைகளும் ஆறுகளும்
பெரு வெள்ளமென
பெருக்கெடுத்தோடிய காலமவை – அவை
இப்போது காணாமல் போயின
,
கண்மாய் நீரில்
விளைச்சல் பார்த்த
விளைநிலங்கள் யாவும்
தண்ணீரற்று
வேலி முட்களாய் படர்ந்து
வேரூன்றி வளர்ந்து நிற்கிறது
,
திறக்கப்படாத மதகுகளும்
நீர் பாய்ந்த கால்வாய்களும்
இப்போது வழி மறந்து போயின
,
கரிசல் நிலம் யாவும்
விவசாயி பாத வெடிப்பை போல்
வெடித்து சிதறிக் கிடக்கின்றன
,
தூரத்தில் தெரியும்
கதிரவனின் அனல் காற்றும்
கானல் நீராய்
மறைந்து போகிறது
,
காணாமற் போன
மிச்சமீத கிணற்றிலிருக்கும் நீரே
அவ்வப்போது தெருக்களுக்கு
குடிநீராகவும்
பிற தேவைகளுக்காகவும் பாய்கிறது
,
மூன்று பக்கங்களிலும்
நீர் சூழ்ந்திருக்கிறது
ஆனால் நீர்நிலைகளில்
தண்ணீரில்லை
000
நெடுஞ்சாலைகள் அமைத்தல்
முன்னேற்றமெனில்
மரங்களேன் நிலத்தில்
சரிந்து விழுகிறது
,
இயற்கையின் சீற்றத்தால்
எழுந்து வரும்
கடலலையின் கோவம்
மழைத்துளிகளாகவேனும்
இங்கு கொஞ்சம் சிதறட்டும்
,
பாறையிலும் நீர் சுரக்கும் தான்
இங்கும் சுரக்கிறது – அது
உழைக்கும் எளிய மக்களின்
வியர்வைத் துளிகளாகவே…
,
மனிதன் கருவிலும்
கல்லறை அடையும் முன்பும்
நீரைச் சார்ந்து தானிருக்கிறான்
ஆம் !
நீரின்றி அமையாது உலகு…
***
2.சுயமிழந்து…
ஒதுக்கப்பட்ட பழைய
தண்ணீர்த் தொட்டியில்
நீரைக் கண்டதும்
தாக வேட்கையில்
கீழிறங்கும் காக்கை
,
ஓரிரு நாட்கள் கழித்து
தூக்கி ஊற்றப்படும்
பழைய சோற்றின்
வாசம் பிடித்து
ஓடி வரும் தெருநாய்
,
வதங்கும் கருவாட்டின்
வாசம் பிடித்து
வாலை சுருட்டிக் கொண்டு
அம்மாவின் காலடியில்
வலம் வரும் பூனை
வாடிய வெண்டைக்காயை
வீட்டுக்கூரை மீது
உலர வைத்து
பழைய சோற்றுக்கு தொட்டுக்க
வைத்துக் கொள்ளும் பாட்டி
,
சோற்றுப்பருக்கை பிசைந்து
பூச்சாண்டி சாப்பிட்டு விடுவானென
பயமுறுத்தி
தன் குழந்தைக்கு
ஊட்டிவிடும் அன்னை
,
என்ன நடந்தாலும்
ஏதும் நடக்காதது போல்
அலைபேசியில்
புதிதாய் பேசுவது போன்று
பேசும் காதலர்கள்
,
தாரை தப்பட்டைகளின்
சப்தங்களை
மிஞ்சி விடும் அளவிற்கு
போடப்படும் பக்கத்து வீட்டு
சண்டைகள்
,
இவையனைத்தையும்
செவிமடுத்து
சுயமிழந்து
படுக்கையில் இருக்கிறார் தாத்தா…
***
3.பசுமையற்று…
ஐப்பசி மாத
அறுவடைக்கு காத்திருக்கும்
நெல்மணிகள்
,
பள்ளிக்கு சிற்றுண்டி
உணவாக எடுத்துச் செல்லும்
தட்டாம்பயறு
,
பள்ளி முடிந்து
வரும் வேளையில்
பறித்துண்ணும் பாசிப்பயறு
,
கிளைகளில் மாங்கனிகளாக
தாங்கி விளைந்திருக்கும்
சோளக் கதிர்கள்
,
பகலவனைக் கண்டதும்
கண்விழித்து பார்த்திடும்
சூரியகாந்தி பூக்கள்
செடி கொடிகளாக
தரையில் புதைந்திருக்கும்
கடலைச் செடிகள்
,
கிணற்றில் குளித்து முடித்ததும்
பசியாற்றிட காத்திருக்கும்
மாங்காய் மரங்கள்
,
வெயிலின் தாகம் தணித்திட
ஒய்யாரமாய் வளர்ந்திருக்கும்
தென்னை மரங்கள்
,
பொற்குவியலாய்
குவிந்து கிடக்கும்
கொய்யாக் கனிகள்
,
இவையனைத்தும் விளைந்த
எனது கிராமம் – இன்று
முட்புதர்களால் சூழ்ந்து
தரிசு நிலங்களாய் காணக் கிடக்கிறது…
***

“தொலைந்து மீண்டவன்” மற்றும் “மௌனத்தின் உரிமைக்குரல்” என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார்.

