1.நித்திரையற்று
சல சலவென்ற சத்தத்துடன்
வீட்டினருகே பாய்ந்தோடும்
சிற்றோடை நீர்
,
எழுப்பிய சத்தங்களை நிறுத்தி
பின் மீண்டும் தொடரும்
விட்டில் பூச்சிகள்
,
மழைக் காலங்களில்
கலவிக்கு அழைத்திடும்
தவளையின் சத்தங்கள்
,
எதையோ பார்த்து விட்டு
பின்னோக்கி வந்து
குரைத்திடும் நாய்கள்
,
தூரத்தில் கேட்கும்
சிறு குழந்தையின் அழுகுரலாய்
குரலெழுப்பிடும் பூனை
,
எங்கோ ஓர் மரத்தில்
இரவெல்லாம் விழித்திருந்து
அலறும் ஆந்தை
,
இவையனைத்தும்
காதில் வாங்கி
முகப்பையே
பார்த்துக் கொண்டு
நித்திரை கிட்டாமல் தவிக்கிறது
ஓர் ஆன்மா…
***
2.ஞாபகம்
அப்போதெல்லாம்
விடுமுறை நாட்களில்
பாட்டியை பார்ப்பதற்கு
ஊருக்குச் செல்வதுண்டு
,
விடுமுறை முடிந்து
வீட்டிற்கு
திரும்பும் வேளையில்
பேருந்து நிலையம் வரை
வருவாள்
அன்பின் நிமித்தமாக
,
அவளின் சுருக்கு பை
பெரும் வரம்
வாங்கியிருக்கும்
எப்பொழுதும்
அவள் இடுப்பிலேயே
தொங்குவதற்கு
,
அதில் வெற்றிலை பாக்கும்
சுண்ணாம்பு டப்பாவின் வாசமும்
வாசனைத் திரவியங்களின்
வாசனையே மிஞ்சி விடும்
,
அப்பையில்
சில்லறைகளுக்கும்
பணத்துக்கும் சேர்த்து
ஒரு இடமும் இருக்கும்
,
அதிலிருந்து
ஒரு ஐம்பது ரூபாய்
நோட்டை எடுத்து
செலவுக்கு வைத்துக் கொள்
என்றுரைப்பாள்
,
வெற்றிலை பாக்கு
வாசத்தோடு
பாட்டியின் வாசமும்
அந்நோட்டில்
கமகமக்கும்
,
இப்போதெல்லாம்
ஊருக்குச் சென்று
திரும்புகிறேன்
,
என் சட்டைப் பை முழுவதும்
பாட்டியின் ஞாபகம் மட்டுமே
நிரம்பி வழிகிறது…
***
3.பாலைவனமாக
தரைப்பாலம் கூட இல்லை
தண்ணீர் வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடியது
,
இக்கரையிலிருந்து
அக்கரைக்குச் செல்வதே
பெரும்பாடாய் இருந்தது
,
வெள்ளம் அதிகமாக வந்தால்
பல மைல்கள் சுற்றி தான்
செல்ல வேண்டும்
இல்லையேல்
அன்று அப்பயணம்
அதோடு நின்று விடும்
இப்போது மேம்பாலம்
வந்து விட்டது
தண்ணீர் வெள்ளம் தான்
வரவேயில்லை
,
சுட்டெரிக்கும் வெயிலோ
அணைக்கட்டு கற்களின்
உட்புறம் வரை
ஊடுருவிச் செல்கிறது
,
போகும் பொழுதும்
வரும் பொழுதும்
ஒரு வழிப்போக்கனாக
அச்சூட்டை உணர்கிறது
என் தேகம்
,
இன்று
இக்கரையிலிருந்து
அக்கரைக்கு
சுலபமாக
கடந்து செல்கிறேன்
,
ஒரு பாலைவனத்தை கடந்தாற்போல்…
***
4.வருத்தம்
இருசக்கர வாகனப் பயணம்
கொஞ்சம் வேகம் தான்
சற்று குறுக்கே வந்து
விழுந்தது
ஒரு குயில்
அது பறத்தலை
கொஞ்சம் கொஞ்சமாக
கற்றுக் கொண்டிருக்கலாம்
,
அதன் கால்களில்
அடி பட்டுருக்க கூடும்
சற்று தவழ்ந்தே
சாலையோரமாக வளர்ந்திருக்கும்
செடி கொடிகளுக்குள்
நகர்ந்து சென்றது
,
அவ்விருப்பிடத்தை விட்டு
வேறெங்கும் அதனால்
செல்ல இயலவில்லை
,
வாகனத்தை திருப்பி
அதைக் கையிலெடுத்து
அதனின் கால்கள்
உடல்களென வருடினேன்
,
எங்கிருந்தோ பறந்து வந்த
ஒரு காக்கை
அதன் குரலில் கரைந்தது
,
காக்கைக் கூட்டங்கள்
அவ்விடத்தில் வட்டமடித்து
என்னை முழுவதுமாக
சூழ்ந்து கொண்டன
ஒருவேளை அதனின் கூட்டில்
அக்குயில் வளர்ந்திருக்கலாம்.
பறத்தலை கற்றுக் கொள்ள
சாலையோரமும் வந்திருக்கலாம்
,
நீவி விட்ட கால்களோடு
அதை அவ்விடத்திலே விட்டு
நகர்ந்து விட்டேன்
,
கொஞ்ச நேரம்
ஏன் கொஞ்ச நாட்கள்
கூட ஆகலாம்
,
அப்போது
அக்குயிலின் கால்கள்
சரியாகி இருக்கலாம்
பறத்தலையும் கற்றிருக்கலாம்
இரண்டு நாட்கள் கழித்து
அவ்வழியிலே
மீண்டுமொரு பயணம்
,
சாலையோரமாக
ஒரு குயிலின் சத்தம்
என் செவிமடுத்தது
அது அக்குயிலாக
இருந்திருந்தால்
என் வருத்தம் நீங்கும்.
00

கண்ணன்.க,
விருதுநகர் மாவட்டம்.
“தொலைந்து மீண்டவன்” மற்றும் “மௌனத்தின் உரிமைக்குரல்” என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார்.

