‘கண்ணாடிச் சுவர்கள்’ -பார்வை

உதயசங்கரின் ‘கண்ணாடிச் சுவர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு உள்ளடக்கம், வடிவம் என இரண்டிலுமே புதியதொரு அனுபவத்தை தந்தது. இத்தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளில் பெரும்பாலும் கற்பனைமிகுந்த முறையில் குட்டி குட்டியான கதைகள் .

பெரும்பாலும் யதார்த்த கதைகளையே படித்து பழக்கமான எனக்கு, இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் ஆச்சரியத்தையே அளித்தன.

தொகுப்பில் உள்ள “பெருமாள்சாமியின் பேருந்து பயணம்”எனும் கதை மிகுந்த நகைச்சுவையான கதை .இந்தக் கதை என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. எப்போது ஒரு கதை உன் வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறதோ, அப்போதே அது சிறந்த இலக்கியமாகிறது.

அலுவலகத்திற்கு பேருந்தில் பயணிப்பவன் தோளில், பக்கத்தில் இருப்பவர்கள் தூங்கி விழுவதுதான் கதை. இந்த நிகழ்வை வைத்து கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் உதயங்கர். இந்தக் கதையில் கடைசியாக கதையின் நாயகன், பேருந்து நடத்துனரின் சீட்டில் அவருக்கு அருகே உட்கார்ந்து கொள்கிறான். இனிமே எந்தத் தொல்லையும் இல்லை. பஸ்ஸில் யார் தூங்கினாலும், பேருந்து நடத்துனர் தூங்கமாட்டார் என நினைக்கிறான். ஆனால் அவன் நினைத்ததிற்கு எதிர்மாறாக கதை நகைச்சுவையாக முடிகிறது. கதையின் முடிவு பட்டுக்கோட்டையாரின் பாடல் வரியை ஞாபகப்படுத்துகிறது. “பொறுப்புள்ள மனிதரின் துக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம தூங்குதப்பா.. “

“கண்ணாடிச் சுவர்கள்” என்ற சிறுகதையில் கண்ணின்  குறைபாடுக்காக  கண்ணாடி போடும் பழக்கம் வருகிறது ஒருவனுக்கு. ஆரம்பத்தில் அது  பழக்கம். பிறகு அதுவே அவனுக்கு எல்லாத்தையும் விட முக்கியமாகிறது. கண்ணாடி அவனுக்கு உடலில் உறுப்பாகி போகிறது. அது அவனை அடிமைப்படுத்துகிறது. இப்போது உள்ள மனிதர்களை செல்போன் அடிமைப்படுத்தி வைத்துள்ளது மாதிரி. மனிதனுக்குள் எந்த ஒரு பழக்கமும் அகதியாகத்தான் முதலில் வரும். கொஞ்சநாளில் அதுவே மனிதனை ஆளும் அரசனாக மாறிவிடும். அதைத்தான் இந்தக்கதை சொல்கிறது.

“புதிரின் விடை தெரியலாம் அல்லது தெரியாமலுமிருக்கலாம்” என்ற கதையில் உண்மை தன்னைப்போன்ற நகல்களை பார்த்து தன்னையே அழித்துக்கொள்வதுதான் கதை. இங்கு உண்மையைவிட உண்மையைப்போன்ற நகல்கள் இயல்பாகவே வளர்ச்சி பெறும்போது உண்மை நசுங்கிவிடுகிறது. எடுத்துக்காட்டு நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி வந்தவுடன் தன்னையை அழிப்பதுபோல..

“காத்திருப்பு”என்ற சிறுகதை முழுவதும் காத்திருப்பவனின் மனவேதனையை சொல்கிறது. அவன் தன்னைப்போன்று காத்திருப்பவன் ஒருவனை பார்த்தவுடன் ஆறுதல் கொள்கிறான். இந்த உலகத்தில் இன்பத்தைவிட, துன்பத்திற்குதான் பெருந்துணை தேவைப்படுகிறது. அப்படி பெருந்துணை கிடைக்கும் பட்சத்தில் வாழ்க்கையாகிறது மறுமலர்ச்சியாய்.

“நிலவில் குளித்தவன் “என்ற சிறுகதை திருடனைப் பற்றியக் கதை. இருட்டிலே திருடனப்போனவன் ஒருநாள் வறுமை சூழ்நிலையால் பௌர்ணமியில் திருடப்போகிறான். அப்போது அந்த நிலவின் ஒளியின் அழகில் மயங்கிப்போகிறான். திருட எளிமையான வாய்ப்பு கிடைத்தும் திருடாமல் போகிறான். கதையின் கடைசியில் அந்த திருடன் நம் இதயத்தை திருடுகிறான்.

“ஒரு பிரிவின் பயணம்” தாத்தா, பேரனுக்குமிடையே உள்ள அன்பை, பாசத்தை மிக ஆழமாக பேசுகிறது. வயதானதால் தனக்கு திடீரென்று ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தினால் தன் பேரனை ,தெரிந்த உறவுக்காரரிடம் கொண்டு சேர்ப்பதற்கு போகிறார் தாத்தா. அப்போது அவருக்குள் ஓடும் நிம்மதியற்ற மனவோட்டம்தான் கதை. நிம்மதியற்ற மன ஓட்டம் என்பது விருப்பமில்லை என்பதின் அறிகுறிதானே..!

“கேட்காத அசரீரி”என்ற கதை காந்தியின் கதை. காந்தி சுடப்பட்டு கீழே விழுந்ததும், தன்னைச் சுட்டவனின் கண்ணைப் பார்க்கிறார். அந்தக் கண் அவரை பயமுறுத்துகிறது. இதுவரை எத்தனையோ கண்களை பார்த்து பழகியவருக்கு, அந்தக் கண் ஒருவித பயத்தை ஏற்ப்படுத்துகிறது. தன் இறப்பை பற்றி கவலைப்படாமல்,அந்த கண்ணின் வன்மத்தைப் பார்த்து பயப்படுகிறார்.. அடுத்து நாடு என்ன ஆகுமோ என்ற பயம் அவருக்குள் ஏற்ப்படுகிறது.

காந்தி பார்த்து பயந்த கண்கள் நம்நாட்டில் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. அந்த மாதிரி கண்களுக்கு நாம்தான இமைகளாக இருக்கிறோம்.

“ஒருவீடு, ஒரு கனவு, ஒரு மனிதன்’ என்ற கதையில் ஒரு மனிதன் வீடு கட்ட ஆசைப்படுகிறான். அவன் ஆசைப்பட்டாலும் அவன் இஷ்டத்துக்கு கட்டமுடியாதபடி சமூகம் பல வரைமுறைகளை ஏற்ப்படுத்தி வைத்துள்ளது. அவன் சுதந்திரமாக வீடுகட்டினானா… இல்லை சமூக வரைமுறைக்கு பயந்து வீடுகட்டினானா… என்பதுதான் கதை. இங்கு வீடு என்பது.. வீடு என்பதை மட்டும் குறிப்பதல்ல..

இந்தக் கதையின் முடிவு

“காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி” என்ற கண்ணதாசன் பாட்டு ஞாபகம் வருகிறது.

“ஐஸ்ட் மிஸ்டு” என்ற கதை ஷூக்களும் பெரும் புரட்சி ஆயுதம்தான்  என்று அரசியல் பேசுகிறது. காலில் இருக்கும்வரைதான் ஷூக்கள், அது கைக்கு வந்துவிட்டால் அணுகுண்டைவிட  பெரும் ஆயுதம். எல்லா ஷூக்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் ஷூக்கள் வரலாறில் நிற்கிறது. அந்த மாதிரி ஷூக்கள் பற்றி புரட்சிக்கதை.

“18.08.1947/ திங்கள்கிழமை -ஒரு இந்தியக்குறிப்பு” என்ற கதை இந்தியா -பாகிஸ்தான் பிரிவின்போது ஏற்ப்பட்ட கலவரத்தினால் தன் சொந்த இடத்தைவிட்டு வந்த மாண்டோக் சிங் பற்றிய கதை.

சிங் வருடம்வருடம் அந்த தேதியின்போது விரதம் இருக்கிறார். அந்த விரதம் ஒருவித குற்ற உணர்வினால் வந்ததென்றும் சொல்லலாம்.

கலவரத்தின்போது பாதசாரியாக குடும்பத்துடன் சிங் நடந்துவரும் வழியில் ஒரு இறந்த தாயின் மேல் ஒரு சிறுகுழந்தை அழுகிறது. அதைப்பார்த்துக்கொண்டே கடந்து வருகிறார்.

எத்தனையோ வருடங்கள் கழித்துவிட்டாலும்-இந்த குறிப்பிட்ட தேதியன்று அந்த குழந்தையின் சத்தம் கேட்கிறது இவரது காதுக்குள். அந்த குழந்தை என்னவாயிருக்கும். ஒருவேளை நாம் காப்பற்றியிருக்கலாமோ என்ற குற்ற உணர்ச்சி சிங்கின் உள்ளே வருகிறது அந்த தேதியன்று. அதனால் தவிப்பில் விரதம் இருக்கிறார்.

மனிதனாவதற்கு ஞானம் வரவேண்டியதில்லை. குற்ற உணர்ச்சி வந்துட்டாலே போதும். சிங் மனிதன்தான்.

“கிமெரிக்கா” என்ற கதை ஒரு பொம்மைக்கும், ஒரு சிறுவனுக்கும் உள்ள பிணைப்பை பற்றியக் கதை. இந்தக் கதையை அவரவர் சூழ்நிலை கற்பனைக்கேற்ப பொருத்திக் கொள்ளலாம். பொம்மையோடு விளையாண்டா படிப்பு கெட்டுப் போயிரும், பிறகு எப்படி நல்லாப் படிச்சு அமெரிக்கா போகமுடியும் என்று சிறுவனின் தாய் புலம்புகிறாள். இதையெல்லாம் காதில் வாங்காமல் அந்த சிறுவனும், பொம்மையும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

கடைசியாக அந்த பொம்மை நாய் நாய் வள் வள்ளென்று குரைக்கிறது

எதிர்கால வாழ்க்கைக்கு, நிகழ்காலத்தை அடமானம் வைக்கும் இந்த சமூகத்தைப் பார்த்து.

“பிறழ்ச்சி” என்ற சிறுகதை சினிமா மோகத்தால் சமூகத்தில் உள்ள பீ நாற்றத்தை மறந்து திரியும் மக்களை ஏளனம் செய்கிறது. இங்கு பீ நாற்றம் என்பது சாதி, ஊழல், என எதையும் குறிக்கும். இந்த நாற்றத்தை வைத்து அரசியல் செய்வது அரசியல்வாதி, சாமியார்கள், வெளிநாட்டவர்கள் என எல்லாமே. இந்த நாற்ற நோய் எதிர்காலம் குழந்தைகளை பாதிக்கவில்லை என கதை முடிகிறது.

ஆம் ..! குழந்தைகள் இயற்கை கொடைகள் அல்லவா… அவர்களை எப்படி பாதிக்கும் இந்த நாற்ற நோய். அவர்களாவது இனி வளர்ந்து நாட்டை காக்கட்டும்.

நூல் : கண்ணாடிச் சுவர்கள்

ஆசிரியர் : உதயசங்கர்

பதிப்பகம் : வம்சி

விலை : 70

க. செல்லப்பாண்டி

செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *