(அயர்லாந்து நாட்டுப்புறக் கதை)
அயர்லாந்து நாட்டுப்புறக் கலாச்சாரத்தில் ‘ஷானஹேய்’ (Seanchaí) எனப்படும் கதை சொல்லிகளுக்குத் தனி மரியாதை உண்டு. அது மட்டுமன்றி, மக்கள் எல்லோருமே கதை சொல்லத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
அங்கு ஒரு வீட்டிற்கு விருந்தினராகச் சென்றால், அவர்கள் உணவும் இடமும் கொடுத்து உபசரித்ததற்குப் பிரதிபலனாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இந்தத் பின்னணியில் உருவானதுதான், ‘கதையே இல்லாத மனிதன்’ என்றகதை.
அயர்லாந்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ‘பிரையன்’ என்றொரு மனிதன் இருந்தான். அவன் நல்லவன், உழைப்பாளி; ஆனால், அவனிடம் ஒரு குறை இருந்தது. அவனுக்குக் கதை சொல்லத் தெரியாது என்பதுதான் அது. காரணம், அவனுக்குக் கற்பனைத் திறனோ, சுவாரஸ்யமான வாழ்வியல் அனுபவங்களோ கிடையாது.
அவனிடம் யாராவது ஒரு கதை சொல்லச் சொன்னால், “என்னிடம் சொல்ல ஒரு கதையும் இல்லை; நான் ஒரு விந்தையும் பார்த்ததும் இல்லை!” என்றுதான் எப்போதும் சொல்வான்.
ஒரு நாள் மாலை, பனிக் குளிரில் நடுங்கியபடியே பிரையன் ஒரு முதியவரின் வீட்டிற்குச் சென்றான். துருவப் பனிப் பிரதேசமன அயர்லாந்து வழக்கப்படி, அந்த முதியவர் அவனுக்குச் சூடான உணவும், குளிர்காய நெருப்பு மூட்டமும் கொடுத்தார்.
உண்டு முடித்த பின், அந்த முதியவர் தன் புகையிலையைத் தட்டிவிட்டு, “சரி பிரையன்,… இந்தக் குளிர் இரவுக்கு இதமாக ஒரு கதை சொல்லேன்” என்றார்.
பிரையன் எப்போதும் போல, “ஐயா,… எனக்குக் கதை சொல்லத் தெரியாது. என் வாழ்வில் விசித்திரம் ஏதும் நடந்ததில்லை” என்றான்.
முதியவர் அவனை விசித்திரமான பார்வை பார்த்துவிட்டு, “சரி, அப்படியானால் பக்கத்துக் காட்டில் இருக்கும் பசுவிடம் கொஞ்சம் பால் கறந்து வருகிறாயா? இரவு உணவுக்குத் தேவைப்படுகிறது” என்று ஒரு வாளியைக் கொடுத்து அனுப்பினார்.
பிரையன் காட்டிற்குள் சென்றான். அங்கே முதியவர் குறிப்பிட்டது போல பசு எதுவும் காணப்படவில்லை. காட்டுக்குள் வெவ்வேறு திக்கிலும் அலைந்து திரிந்து தேடினான். பசு தட்டுப்படவே இல்லை.
அந்தி சாய்ந்து இருளும் கவிந்தது.
முதியவரின் வீட்டுக்குத் திரும்பலாம் என, இருளுக்குள் இருக்கும் மெல்லிய வெளிச்சத்தில் நடந்தான். ஆனால், அவனுக்கு இப்போது தான் இருப்பது எங்கே என்றும், முதியவரின் வீட்டுக்கு எந்தத் திக்கில், எந்த வழியில் செல்ல வேண்டும் என்றும் தெரியவில்லை. பசுவைத் தேடி அலைந்ததில் வழி தவறிவிட்டான்.
குத்து மதிப்பாக ஒரு திக்கில் நடந்தான்.
இருட்டில் ஒரு பாழடைந்த வீடு தெரிந்தது. அங்கே யாரேனும் இருப்பார்கள், அவர்களிடம் வழி கேட்டுக்கொள்ளலாம் எனச் சென்றான்.
வீட்டை நெருங்க நெருங்கவே உள்ளிருந்து சில அழுகுரல்கள் கேட்டன. குழந்தைகளுடையதல்ல; பெரியவர்களின் அழுகுரல்கள்.
என்னவோ ஏதோ என்ற தயக்கத்தோடே உள்ளே சென்றான்.
அங்கே வயோதிகர்கள் மூன்று பேர், ஒரு பிணத்தைச் சுற்றி அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
அவர்கள் பிரையனைப் பார்த்ததும், “வா,… எங்களுக்கு ஒரு உதவி செய்” என்றனர்.
வயோதிகர்களாயிற்றே,… அதுவும் பிணத்தைச் சுற்றி அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார்களே என்று பரிதாபப்பட்டு உதவச் சென்றான்.
பட்டையான கசாப்புக் கத்தியைக் கொடுத்து, “இந்தப் பிணத்தின் தோலை உரி” என்றனர்.
அவன் அதைக் கேட்டு அரண்டுவிட்டான்.
“என்னது…? மனிதத் தோலை உரிப்பதா…?!” என்றான் அதிர்ச்சியுடன்.
“ஆமாம்!”
“அடக் கிழட்டுக் கம்மனாட்டிகளா…! நீங்கள் மனிதர்கள்தானா…?”
“அதைப் பற்றி உனக்கு என்ன? சொன்னதைச் செய்!”
“நீங்கள் சொன்னதைச் செய்வதற்கு நான் உங்கள் வேலைக்காரன் அல்ல. மனிதர்களின் தோலை உரிப்பது பற்றி நான் இதுவரை கேள்விப்பட்டதுகூட இல்லை!” என்றபடி கோபத்தோடு கசாப்புக் கத்தியைக் கீழே எறிந்தான்.
அவர்கள் மூவரும் எழுந்து அவனைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்.
“நீ இந்தப் பிணத்தின் தோலை உரிக்காவிட்டால், நாங்கள் உன்னை உயிரோடு தலைகீழாகத் தொங்கவிட்டு, உன் தோலை உரித்துவிடுவோம்” என மிரட்டினர்.
அந்தக் கிழவர்களின் ஒடுக்கு விழுந்த முகங்களில், குழிகளுக்குள் தவறி விழுந்தது போலக் கிடக்கும் கண்கள், இருளுக்குள் மிருகக் கண்கள் போல ஜொலித்தன. அவர்கள் மனிதர்கள் அல்ல, பேய்கள் என்பதை அவன் உணர்ந்துகொண்டான். உச்சி முதல் உள்ளங்கால் வரை உதறலெடுத்தது.
நடுங்கியபடியே கத்தியை மீண்டும் எடுத்துக்கொண்டு, பிணத்தின் காலருகே அமர்ந்தான். நடுங்கும் இடது கையால் அதன் ஒரு பாதத்தைத் தொட்டான்.
அந்தப் பிணம் சட்டென எழுந்து அமர்ந்தது. அவன் அலறியபடி பின்னால் சரிந்து, சுதாரித்துக்கொண்டான்.
பிணம் கண் திறக்காமலேயே, “நண்பா,… என் தோலை உரிக்க வந்திருக்கிறாயே…! இது உனக்கே நியாயமா?” என்று கேட்டது.
அவன், “இல்லை,… இவர்கள்தான் என்னை வற்புறுத்தினார்கள்” என்றான்.
“எவர்கள்?”
அவன் அவர்களைக் காண்பிப்பதற்காகத் திரும்பிப் பார்த்தான்.
அங்கே யாரும், எதுவும் இல்லை.
மீண்டும் கத்தியைக் கீழே போட்டுவிட்டு எழுந்தான்.
“நான் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும். என்னால் நடக்க முடியாது. என்னை உன் முதுகில் தூக்கிக்கொண்டு நட!” என்றது பிணம்.
அவன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடலாமா என யோசித்தான்.
“உன்னால் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. உன்னை வழி தவறச் செய்து இங்கே வர வைத்ததே நான்தான்! என்னை விட்டு எங்கே ஓடினாலும், மீண்டும் நீ இங்குதான் வந்தாக வேண்டும்.”
அவனுக்கு மீண்டும் உதறலெடுத்தது.
வேறு வழியின்றி அந்தப் பிணத்தைத் தன் முதுகில் உப்புமூட்டையாகச் சுமந்துகொண்டு காட்டில் நடந்தான்.
நடக்க நடக்க, அந்தக் காடு இடுகாடாக மாறியது. அங்கே கிடந்த மனித எலும்புக்கூடுகள் எழுந்து நின்று அவனுக்கு வழி காட்டின. அவை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என்று அவனை அலைக்கழித்தன.
முதுகில் பிணம், பிண கனம் கனத்தது. அதன் பிண நாற்றம் குடலைப் புரட்டவும் செய்தது. அவன் தளர்ந்து தடுமாறினான்.
பிணத்தைக் கீழே போட்டு, சற்று இளைப்பாறலாம் என்றால், அவன் கைகளை விட்டாலும், பிணம் அவனது கழுத்தைச் சுற்றிப் பிடித்திருக்கும் இறுக்கமான பிடியை விடவில்லை.
இரவு முழுவதும் அந்தப் பிணத்துடன் போராடினான்.
விடிவதற்குச் சற்று முன்பாகத்தான் அந்தப் பிணம், “இங்கே ஒரு குழி தோண்டி என்னைப் புதைத்துவிடு” என்றது.
அவன் அதைக் கீழே இறக்கிவிட்டு, தன் கைகளாலேயே மண்ணைத் தோண்டி, அந்த விசித்திரமான பிணத்தைப் புதைத்தான்.
புதைத்து முடித்த கணமே, ஒரு மின்னல் வெட்டியது.
மறு கணம் பிரையன் அந்த முதியவரின் வீட்டு வாசலில், கையில் காலி வாளியுடன் நின்றுகொண்டிருந்தான்.
வெண்பனிப் பஞ்சுகள் மெதுசலனத்தில் வீழ்ந்துகொண்டிருந்தன.
அவன் வீட்டுக்குள் சென்றான்.
கணப்பருகே அமர்ந்து குளிர் காய்ந்தபடியே புகைத்துக்கொண்டிருந்த முதியவர், “ஏன் இவ்வளவு தாமதம்? ஏன் காலி வாளியோடு திரும்பியிருக்கிறாய்?” எனக் கேட்டார்.
பிரையன் அவர் அருகே சென்று, நெருப்பில் கை, கால்களைக் காட்டிச் சூடுபடுத்திக்கொண்டே, இரவு முழுதும் நடந்த சம்பவங்களைக் கோர்வையாகவும் சுவாரஸ்யமாகவும் விவரித்தான்.
அவன் பேசப் பேச, அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு கதையும் தெரியாது என்று சொன்னவன், இப்போது ஒரு அசாதாரணமான பேய்க் கதையைத் திகில் உணர்ச்சியோடு சொல்லிக்கொண்டிருந்தான்.
முதியவர் சொன்னார்: “மகனே,… அயர்லாந்து மண்ணில் கதை தெரியாத மனிதனுக்கு இடமில்லை. உன்னிடம் கதை இல்லை என்பதால், இந்தக் காடும் இந்த இரவும் உனக்கு ஒரு கதையைக் கொடுத்திருக்கின்றன. இனி நீ எங்கு சென்றாலும், ‘என்னிடம் கதையில்லை’ என்று சொல்ல மாட்டாய்!”
*******

ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

