வேதநாயகி என்கிற வேதா அன்றைக்குத் தலைக்குக் குளித்திருந்தாள்.
இடுப்புவரை தொங்கும் தலைமுடியை தோள் வழியாக முன் பக்கம் தொங்க விட்டுக் கொண்டு தலை துவட்டின ஈரத் துண்டை வைத்து டப் டப் என ஓசை வருகிற மாதிரி அடித்து அடித்து உதறிக் கொண்டிருந்தாள். தரையெங்கும் நீர் துளிகள் சிதறிக் கிடக்க தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த பேன் காற்றில் தலை முடி மெதுவாக உலரத் தொடங்கியிருந்தது.
கை பேசியில் யாரோ அழைப்பதற்கு அடையாளமாக அதுபாட்டுக்கு ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை வேதா யாரையும் அழைக்க மாட்டாள், ஆனால் அவளுக்கு எப்பவாது இப்படி விடுமுறை தினங்களில் போன் வரத்தான் செய்யும், தலைமுடிப் பிரச்சனை கைவசம் இருப்பதால் “அம்மா அந்தப் போனைத்தான் எடுத்துப் பாரேன்” என கொஞ்சம் சத்தமாக அடுக்களையிலிருக்கும் அம்மாவைப் பார்த்துக் கத்தினாள்.
”நான் இங்க கை வேலையா இருக்கேன், எவளா இருக்கப் போறா, எல்லாம் உன் சிநேகிதிகளில் பொழுது போகாத எவளாவது ஒருத்தியாத்தான் இருப்பா, வெட்டி அரட்டை அடிக்க ஒன்னைய விட்டா அவள்களுக்கு யார் இருக்கா, இதுக்கு நான் என் கை வேலையை விட்டுட்டு வரணுமாக்கும், வந்து எடுத்துப் பாரு இல்லேண்ணா அதுவே நின்னுரும்” பதிலுக்கு அடுக்களையிலிருந்து வந்த குரலை சற்றும் எதிர்பாராத வேதா, போனை நோக்கி நகர அது அமைதியானது.
அம்மாவுக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியாது, ஏன், அதிகமாகக் கூட பேசத் தெரியாது, ஆனால் இப்படி திடீரென்று நீட்டி முழக்கிப் பேசி வெறுப்பேத்தி விடுவாள். வேதா அம்மாவின் வார்த்தைகளுக்கு எப்பவும் பதில் சொல்வதில்லை அல்லது வாய் பேச முடியாதாவர்களைப் போல ஒரு மெளனியாக இருக்கப் பழகிக் கொண்டாள்.
அம்மாவிற்கு எதிர் வார்த்தைகளின் மேல் நம்பிக்கையில்லை, அதுவும் வேதா எது சொன்னாலும் அதில் ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டி வேதாவை கோபத்துக்கு ஆளாக்கி விடுவாள். பலமுறை இப்படி ஆனதிலிருந்து வேதா தன்னால் முடிந்த அளவு ஊமை வேசம் போடத் தொடங்கிவிட்டாள், அதுவுல் சில நேரங்களில் தப்பாக முடிந்துவிடும், “இருக்கிறது இரண்டு பேரு, அதிலேயும் பேச்சு வார்த்தையில்லேன்னா விளங்கிரூம்”ன்னு ஆரம்பித்தால் அமைதியாக இருக்கும் வேதாவை தூண்டிவிட்டு சண்டைக்கு வரவழைத்துவிட்டு கொஞ்ச நேரத்தில் கோவிலுக்குப் போறேன், மார்க்கெட்டுக்குப் போறேன்னு அம்மா அவள் பாட்டுக்குக் கிளம்பிவிடுவாள், வேதா அடிபட்ட ஒரு மிருகத்தைப் போல வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருவாள். பல சமயங்களில் ஒரு சூனியத்தைப் பார்பது போல தன் பார்வையை அம்மா மேலிருந்து எடுக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்து விட்டு எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் போய் கதைவைச் சாத்திக் கொள்வாள்.
இன்றைக்கு, “அம்மா அந்த போனை எடுத்து யார்ன்னு பாத்தா என்ன கொறஞ்சா போயிருவே” ன்னு அதிகப் படியாகக் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் அம்மா அடுப்பிலிருந்த உணவு பதார்த்தத்தை கரண்டியில் எடுத்து இடது உள்ளங்கையில் இட்டு நாக்கால் நக்கி ருசி பார்க்கத் தொடங்கினாள். வேதா பதிலேதும் பேசாமல் தலை முடியை வேகமாக அடித்து அடித்து தன் கோபத்தைத் தணித்துக் கொண்டாள்.
வேதாவுக்கு இப்ப உடனடியாக பாலா என எல்லோராலும் அழைக்கப்படுகிற பாலசுப்பிரமணியைப் பார்க்கணும் போலத் தோன்றியது. ஆனால் அதற்கும் அம்மாவிடமிருந்துதான் அவளுக்கு செய்தி தெரிந்தாக வேண்டியிருந்தது, “பாலா இந்த வாரம் வந்தானா” என்றாள், இதைக் கேக்கும்பொழுது வேதா அடுப்படி வாசலில் நின்று கொண்டிருந்தாள், தலைமுடி பின்னால் இடுப்புக்கும் கீழே தொங்கிக் கொண்டிருந்தது, இரண்டு கைகளையும் அடுப்படி நிலையில் ஊன்றி இருக்க அவள் ஒரு காவல் தெய்வத்தைப் போல கொஞ்சம் உக்கிரமாக நின்று கொண்டிருந்தாள். பாலா வந்தானா என அவள் கேட்டதை அம்மா காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
பாலாவும், தேவநாதனும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறார்கள். அது ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தது. வாரம் பூராவும் வேலை இருக்கும். சில சமயம் ஞாயிற்றுக் கிழமை கூட வேலை வந்துவிடும். அதிலும் இவர்கள் இருவரையும் அந்தக் கிளையின் மேலாளர் மிகவும் நம்புவதால், முக்கியமான வேலைகளை இவர்களை நம்பித்தான் ஒப்படைப்பார்.
பாலாவை, வேதாவின் அம்மாவின் தூரத்து சொந்தக்காரனான தேவநாதன்தான் வேதாவுக்கும் அவள் அக்கா செல்வராணிக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான். செல்வராணிக்கு அப்பொழுதான் திருமணமாகி ஆறு மாதம் ஆகி இருந்தது, ஒரு வாரம் இருந்து விட்டுப் போகலாமென வெளியூரிலிருந்து வந்திருந்தாள். திருமணத்துக்கு வரமுடியவில்லை என்பதால் செல்வராணி ஊருக்கு வந்த சமயமாகப் பார்த்து பார்த்து விட்டுப் போகலாம் என வந்திருந்தான். வரும் பொழுது தன் கூடவே அழைத்து வந்தவன்தான் பாலா. அவன் சிரிப்பும், கலகல பேச்சும் எல்லோருக்கும் பிடித்துப் போக தேவநாதனை விட கொஞ்சம் அதிகமாக அந்தக் குடும்பத்துடன் ஒட்டிக் கொண்டான்.
தேவநாதன், பாலா இருவருமே பஜாஜ் பைக் வைத்திருக்கிறார்கள். வேதா பொதுவாக கடைகளுக்குச் சென்று எதுவும் வாங்குவது கிடையாது, அதையெல்லாம் அவள் அம்மா பார்த்துக் கொள்வாள். எப்பவாவது தனக்கு வேண்டிய உள்ளாடைகள், சாந்துப் பொட்டு, வளையல், செருப்பு என வாங்கத் தான் கடை வீதிக்கு வருவாள். அப்படி ஒரு சமயம் வந்த பொழுது பாலாவைப் பார்த்தாள். அவனுடன் பேச வேண்டுமென மனம் ஆசைப்பட அவன் அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியே வரட்டுமென நின்று கொண்டிருந்தாள் வெளியே வந்த பாலா எதிரே நிற்கிற வேதாவைக் கண்டுகொள்ளாமல் தலையில் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டு விரைய, கொஞ்சம் ஏமாற்றமடைந்த வேதா வீட்டில் போய் முதலில் செய்தது, மர பீரோவோடு பொருத்தப்பட்டிருந்த ஆளுயுரக் கண்ணாடியில் தன்னை முன்னையும் பின்னையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டதுதான். காதோரத் தலைமுடியை ஒதுக்கிவிட்டுப் பார்க்கும் பொழுது அவளுக்கு அவள் அழகாக இருப்பதாகத்தான் தோன்றியது.
அன்று நல்ல வெள்ளியென்று எல்லோருக்கும் விடுமுறை. வேதாவும் அலுவலக விடுப்பில் வீட்டில் இருக்க வேண்டியிருந்ததால், லீவுதானே என காலை எட்டு மணியாகியும் உறங்கிக் கொண்டிருந்தாள். திரும்பிப் படுக்கும் பொழுது, வீட்டில் மட்டன் சமைக்கிற வாசம் வர இனி தூங்கமுடியாது என எழுந்தாள். அவள் தன்னை தயார் படுத்திக் கொண்டு வரவும் முன் ஹாலில் அவள் எப்பவும் உட்காரும் நாற்காலியில் அம்மா கொண்டு வந்து காபியை வைக்கவும் சரியாக இருந்தது.
இப்படி எப்பவாதுதானே எல்லாமே சரியாக நடக்கிறது, எல்லாமே சரியாக நடக்கும் பொழுது எல்லாமே சரியாகத்தானே இருக்கும், இருக்க வேண்டும்.
“அம்மா இன்னைக்கு என்ன இப்படி காலையிலேயே மட்டன் வாசம் வருது”
“எல்லாம் உனக்காகத்தான், வாரம் பூரா ஓடியாடி வேலை செஞ்சிட்டு வர, ஒரு நாளைக்குத்தானே உனக்கு ரெஸ்ட் நல்லா வாய்க்கு ருசியா சாப்பிடு, உடம்பு தேறணும் அப்பத்தான் உன்னைய கட்டிக்கப் போறவன், சந்தோஷப் படுவான், உன் உடம்புல கிள்ளறதுக்குக் கூட சதை இல்லை அப்படி எலும்பும் தோலுமா இருக்க”
“அம்மா……”
“சரி சரி உண்மையத்தானே சொல்றேன், நீ இன்னும் கொஞ்சம் சதை போடணும்”
“அம்மா வேற ஏதாவது பேசேன்”
“சரி, இன்னைக்கு தேவா வந்தாலும் வருவான்னு நினைக்கிறேன்”
அம்மா, எப்பவும் தேவநாதனை தேவா என்றுதான் அழைப்பாள். அம்மா அந்தப் பெயரைச் சொன்னவுடன் தனக்குள் ஒரு சிறிய மாற்றமும், அவள் அறியும் வண்ணம் உடலில் ஒரு வெப்பமும் பரவுவதை உணர்ந்தாள். தேவநாதன் வந்தால் பாலாவும் கூடத்தானே வருவான். இதுவரை இருவரும் சேர்ந்துதானே வந்திருக்கிறார்கள். வேதாவுக்கு கடை வீதியில் பாலாவைப் பார்த்ததை அவனிடம் சொல்ல வேண்டும், கூடவே அன்று அவன் அணிந்திருந்த வெள்ளையில் கட்டம் போட்ட சட்டையும் புளு கலர் பேண்டும் அருமையாக இருந்தது என்றும் அது அவனுக்கு கச்சிதமாக பொருந்தியிருந்ததாகவும் சொல்ல வேண்டும் என மனதளவில் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.
அப்படியே போய் அடுப்படியில் அம்மா பக்கத்தில் நின்று கொண்டு “நான் வேணா ஏதாவது உதவி செய்யட்டுமா” என கேட்க, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பைக் கிண்டியபடியே, “என்ன, இன்னைக்கு என்ன வந்து ஆடுது, அடுப்படி பக்கமே வரமாட்ட”ன்னு அம்மா கேட்டதும் தனது கோபத்தை, வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் தனது அறைக்குள் நுழைந்து, குளித்தபின் அன்று அணிய வேண்டிய உடைகளை தேர்ந்தெடுக்கத் தொடங்கினாள். மனம் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தது, தனது ஆடைகளை தேர்ந்தெடுக்க பீரோவைத் திறந்ததும். ஆடைகள், புது ஆடைகளின் மணமும் பாச்சா உருண்டை மணமும் சேர்ந்து தந்த அந்த மணம் அவள் சந்தோஷத்தை மேலும் அதிகரித்தது. கொஞ்ச நேரம் அப்படியே நின்று கொண்டு கண்மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
வாசலில் காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டதும், வேகமாக எழுந்து கதவைத் திறக்கலாம்ன்னு தன் அறையிலிருந்து எழுந்தவள் “இன்னைக்கு என்ன வந்து ஆடுது, ஒரு நாளும் இல்லாத திருநாளா நீ கதவைத் திறக்க ஓடி வரேன்னு” அம்மா ஏதாவது சொல்வாள் எனத் தோன்ற அப்படியே தனது நாற்காலியில் தன்னைப் புதைத்துக் கொண்டாள்.
அம்மா சொன்னது போல, தேவநாதன் வந்தான் ஆனால் வேதா எதிர்பார்த்துக் காத்திருந்தது போல பாலாவுடன் வராமல் தனியாக வந்தான். ஏமாற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவனோடு உக்காந்து அம்மா பறிமாறிய உணவை ருசியே தெரியாமல் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தாள். தேவநாதன் சென்றவுடன், சாப்பிட உக்காந்த அம்மாவுக்கு பறிமாறனும் போல இருந்தாலும், தனது படுக்கையில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டிருந்தாள். மூடிய கண்களுக்குள் பாலா அன்று கடைவீதியில் பார்த்த ஆடைகளுடன் உலாவிக் கொண்டிருந்தான்.
செல்வராணி அக்கா வந்திருந்தாள். இந்த முறை அவள் வரும் பொழுது அவள் விசேஷ அழகுடன் இருப்பதாக வேதாவுக்குத் தோன்ற என்ன எனக் கேட்டாள். செல்வராணி விளக்கியதும் அவளைக் கட்டிப் பிடித்து, முத்தமிட்டுவிட்டு அவள் வயிற்றை மெதுவாகத் தடவிக் கொடுத்தாள். செல்வராணி வேதாவின் கையைப் பிடித்து தன் வயிற்றில் கொஞ்ச நேரம் வைத்திருந்து விட்டு விடுவித்தாள்.
இந்தமுறை பதினைந்து நாட்கள் இருக்கப் போவதாகவும், அம்மா கையால் வகை வகையாக சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொண்டு போகப் போவதாகவும் செல்வராணி சொன்னதும், வேதா, அக்காவுக்கு என்ன என்ன பிடிக்குமென தன் மனதுக்குள்ளேயே ஒரு பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
அன்று அலுவலகத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பி, செல்வராணிக்கென கொஞ்சம் மல்லிகைப் பூவும், லாலா கடையில் கொஞ்சம் இனிப்புகளும், அந்த ஊரின் பிரபலமான மட்டன் ஓட்டலில் செல்வராணிக்குப் பிடிக்குமென சிக்கன் சிக்ஸ்டிபையும் வாங்கிக் கொண்டு வந்தாள். குளித்து முழுகி தன்னைத் திருத்திக் கொண்டு ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த செல்வராணியிடம் தான் வாங்கிய அத்தனையும் கொடுத்து விட்டு, இரு குளிச்சிட்டு வர்றேன்னு உள்ளே போனாள். திரும்பி வந்து பார்க்கும் பொழுது செல்வராணி ஒரு தட்டில் இரண்டு மூன்று கொழுக்கட்டையும், கொஞ்சம் சுண்டலும் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
என்னக்கா நான் வாங்கிட்டு வந்தது எதுவும் பிடிக்கலையான்னு” கேட்க, அவள் அமைதியாக அடுப்படியை நோக்கிக் கை காட்டினாள். வேதாவுக்கு எல்லாம் புரிந்தது அம்மா ஏதாவது சொல்லியிருப்பாள், என்ன சொல்லியிருப்பா, ”கடையில வாங்கினதை சாப்பிடாத, குழந்தைக்கு ஆகாது, அவன் என்ன எண்ணையில செஞ்சானோ, எப்படி செஞ்சானோ, எத்தனை நாளைக்கு முன்னால செஞ்சானோ, சூடு பண்ணிக் கூடக் கொடுத்திருப்பான், இவ என்னத்தைக் கண்டா காசைக் கொட்டி வாங்கிட்டு வந்திருப்பா, பெரிய மனுசின்னு நினைப்பு, வாங்கப் போறவ ஒரு போனைப் போட்டு கேட்டிருக்கலாமில்ல, ஒண்ணுக்கு இரண்டு போன் இருக்கு இப்ப”
மனசுக்குள்ள ஓடின காட்சி வேதாவுக்கு ஒரு கோபத்தையும், வெறுப்பையும் உண்டாக்க, அதை காட்டிக் கொள்ளாமல் மல்லிகைப் பூவை மட்டும் பிரித்து அக்காவுக்கும் தனக்குமாக வைத்துக் கொண்டு செல்வராணி பக்கத்தில உட்கார்ந்தாள்.
“சரி எனக்கு வேணாம் நீ சாப்பிடு” என செல்வராணி சொல்ல வேதா சிரித்துக் கொண்டே தொலைகாட்சியைப் பார்க்கத் தொடங்கினாள்.
அன்று ஞாயிற்றுக் கிழமை, முகூர்த்த நாள் வேற, வேதா தனது அலுவலகத் தோழியின் உறவினர் திருமணத்துக்கு கிளம்பலாமென கிளம்பிக் கொண்டிருந்தாள். அவ்வளவு அவசியமான திருமணம் இல்லையென்றாலும் ஒரு அரை நாள் பொழுது போகுமே எனக் கிளம்பிக் கொண்டிருந்தாள். தனது அலங்காரம் முடிந்து புடவையைக் கையில் எடுக்கும் பொழுது அம்மாவின் கை பேசி, ஒலிக்கத் தொடங்கியது. அம்மா எடுத்து அப்படியா, அப்படியான்னு சொல்லிக் கொண்டே அதுக்கென்ன வாங்க, நாங்க எங்க போகப் போறோம் வாங்கன்னு சொல்லி போனை வைத்துவிட்டு நேராக வேதாவின் அறைக்கு வந்தாள்.
“எங்கடி கிளம்பீட்ட”
“ஓரு கல்யாணத்துக்கு”
“முக்கியமான கல்யாணமா?
“இல்ல என் கூட வேலை பாக்கிறாள்ள ராகினி, அவளுக்கு சொந்தக்காரங்க, ஆபீசில எல்லோரும் வர்றாங்க, அதான் நானும் போயிட்டு வர்லாம்ன்னு கிளம்பிகிட்டு இருக்கேன்”
“முக்கியமான கல்யாணம் இல்லைன்னா போக வேணாம்”
“ஏம்மா”
“உன்னைப் பொண்ணு பாக்க பண்ணண்டு மணிக்க வர்றாங்க, நான் இது தெரியாம வாங்கன்னு சொல்லிட்டேன்”
“என்னம்மா”
“சரி சொல்லிட்டேன், வீட்டில இரு, டயத்துக்கு ரெடியாயிரு”
“யாரும்மா, எங்கயிருந்து”
“எல்லாம் உனக்குத் தெரிஞ்சவங்கதான், பாலா அவங்க மாமாவோட வர்றானாம்”
பாலா என்ற பெயர் கேட்டதும் அவளுக்குள் ஒரு உற்சாகம் பிறந்தது, அறையெங்கும் சினிமாவில் காட்டுவது போல பூக்கள் சொறியத் தொடங்கியது போல இருந்தது. தனக்குள் ஒரு சின்ன மாற்றம், அடி வயிற்றில் ஒரு உப்பல் என அவள் விரும்புகிற மாதிரி எல்லாம் நடந்தது.
“சரிம்மா, உனக்காக இருக்கேன்”
“இன்னைக்கு மழைதாண்டி வரப்போகுது, நான் போய் கொஞ்சம் பூவும் இனிப்புகளும் வாங்கிட்டு வர்றேன், நீ ஒரு மணி நேரம் ஒரு குட்டித் தூக்கம் போடு, தூங்கி எந்திருச்சா முகம் பொலிவா இருக்கும், சரி கதவைச் சாத்திக்க” அம்மா கிளம்பினாள்.
தூக்கமாம் தூக்கம், தூங்கமலேயே நான் நல்லாத்தானே இருக்கேன், பாலா என்ன என்னைப் புதுசாவா பாக்கப் போறான், ஏற்கனவே பாத்த முகம்தானே, தூங்காமலேயே என்னால் கனவு காண முடியும்ன்னு அம்மாவுக்குத் தெரியுமா, இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே, தனக்குப் பிடித்த சினிமாப் பாடலை உரக்கப் பாடிக் கொண்டே தன்னைத்தானே ஒரு சுற்று சுற்றி தனது கட்டிலில் விழுந்து கண்களை மூடிக் கொண்டு படுத்துக் கிடந்தாள்.
அம்மா கடை வீதியிலிருந்து வந்ததும் ரொம்ப சிநேகிதமாக அவளுடன் உரையாடிக் கொண்டிருந்தாள், சரி கிளம்பு அவங்க வர்ற நேரமாச்சு, பூ எல்லாத்தையும் வச்சுக்கோ, மிச்சம் வைக்காத, அந்த வைலட் கலர் புடவை உனக்கு அழகா இருக்கும் அதைக் கட்டிக்கோ, பட்டெல்லாம் வேண்டாம், அவங்க முன்னால கொஞ்சம் வெட்கப்படு……..” அம்மா சொல்லிக் கொண்டே போக வேதாவுக்கு உண்மையிலேயே வெட்கம் வர அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.
பணிரெண்டு பதினைந்துக்கு காலிங் பெல் அடிக்க வேதாவுக்கு கொஞ்சம் வேர்க்கத் தொடங்கியது, அன்றைய கடை வீதி உடைகளைப் பற்றிப் பேசலாமா என மனதுக்குள் நினைத்துக் கொண்டு வேண்டாம் அவன் மாமா ஏதாவது தப்பாக புரிந்து கொள்ளக் கூடாது என நினைத்துக் கொண்டு, நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
அம்மா அவர்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு, வேதாவை அழைக்க அவள் வந்து வணக்கம் வைத்துவிட்டு, ஒரு ஓரமாக நின்று கொண்டு பாலாவை ஓரக் கண்ணால் அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தாள், அவனும் அவளை பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
“வேதா, போயி எல்லோருக்கும் டீ போட்டுக் கொண்டா செல்லம் என்றாள், எனக்கு வேண்டாம் இந்த நேரத்தில டீ குடிச்சா எனக்கு ஒத்துக்காது” என அம்மா கூற வேதா அடுப்படிக்குள் நுழைந்தாள்.
அம்மா அவளை ரொம்பப் பிடிக்கும் பொழுதெல்லாம் இப்படி செல்லம் என்பாள், அவள் அப்படி அழைப்பது வேதாவுக்கு ரொம்பப் பிடிக்கும், அம்மாவைக் கொஞ்ச நேரம் கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டுமெனத் தோன்றும்.
சரியாக தேயிலை கொதிக்கிற வாசத்தை வேதா அனுபவித்துக் கொண்டிருக்கையில், அம்மா வந்து அவள் தோளைத் தொட்டாள், “செல்லம் அந்த பீங்கான் கப்பில டீயை ஊத்தி அந்த பிளேட்டுல வச்சு எடுத்துட்டு வா” “அவங்களுக்குக் கொடுக்கும் பொழுது கொஞ்சம் குனிஞ்சு கொடு, சரியான சூட்டில கொடு”
அவர்களுக்கு டீ கொடுத்த பிறகு தானும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி சுவரை ஒட்டி இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேதா டீ குடித்துக் கொண்டே பாலாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் டீயை ரசித்துக் குடித்துக் கொண்டிருக்க வேதாவும் டீயைக் குடித்துவிட்டு, தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள், போகும் பொழுது பாலாவைப் பார்க்கத் தவறவில்லை.
அவர்கள் இருவரும் போன பிறகு, அம்மா அறைக்குள் வந்ததும், “செல்லம் டீ நல்லா இருந்ததுன்னு சொன்னாங்கடி” என்றாள். அம்மா அப்படி சொன்னது அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அடுத்து அம்மா சொல்லப் போகிற வார்த்தைகளுக்காக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
”பாலாவின் அண்ணன் ஒருத்தன் சென்னையில் தனியார் கம்பெனியில் மாசம் ஐம்பதாயிரம் சம்பளத்தில வேலைக்கு இருக்கானாம், அவனுக்குத்தான் உன்னை பொண்ணு பாக்க பாலா அவங்க மாமாவோட வந்திருக்கான், பொண்ணு ரொம்பப் பிடிச்சிருக்காம், மாமா சொல்லச் சொன்னதா தனியா வந்து சொல்லிட்டுப் போறான், உன்னைய பிடிக்கலன்னு யார் சொல்ல முடியும், செல்லம் இன்னைக்கு நீ எவ்வளவு அழகா இருந்தேன்னு எனக்குத்தானே தெரியும், சாயங்காலம் சுத்திப் போடணும் ஞாபகப்படுத்து இப்ப டிரஸ்ஸை மாத்திட்டு சாப்பிட வா” அம்மா சொல்லிவிட்டு அறை நீங்க வேதா தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை வெளிப் படுத்திக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அம்மாவை அப்படிப் பார்த்துக் கொண்டிருந்த வேதாவுக்கு உரக்க அழ வேண்டும் போல் இருந்தது. எதற்கு அழ வேண்டும் என்றும் தெரியவில்லை. செல்வராணி அக்கா சொல்லியிருக்கிறாள், நாமெல்லாம் பொண்ணுங்கதான் ஆனால் எதுக்கெடுத்தாலும் அழக்கூடாது என்று. செல்வராணிக்கு திருமணம் பேசி முடித்த பிறகு ஒரு நாள் வந்த அம்மாவின் தம்பி செல்வராணிக்குத் தெரியாது என நினைத்துக் கொண்டு அம்மாவிடம் எதையோ சொல்லி அழுது கொண்டிருந்தானாம், இப்ப நினைச்சாக் கூட எனக்கு சிரிப்புத்தான் வருது என செல்வராணி அக்கா அடிக்கடி சொல்வாள். பின்னால் சில சமயம் கிறுக்குப் பயலா இருப்பான் போல என கூட சேர்த்துச் சொல்வாள்.
வேதா, நானும் அந்தக் கிறுக்கு பயதானோ என நினைத்ததும் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். தன்னை மறந்து ஆடை மாற்றத் தொடங்கினாள். இன்று மாலை செல்வராணி அக்காவுடன் போனில் பேச வேண்டுமென மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.
தொலை பேசியில் செல்வராணி அக்காவிடம் பேசும் பொழுது எல்லாவற்றையும், தான் பாலாவை விரும்புவதையும் அவனைப் பார்த்தால் தன் உடம்புக்குள் ஏற்படுகிற சின்னச் சின்ன மாற்றங்களையும் ஒன்று விடாமல் சொல்லி விடலாமா என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தாள். விடை தெரியாத எத்தனையோ கேள்விகளைப் போல தான் எழுதிய கேள்விக்கு தனக்கே விடை தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தாள்.
செல்வராணி அக்காவிடம் பேசும் பொழுது அம்மா மூலம் அவள் பெண் பார்த்துவிட்டுப் போன அனைத்தும் அறிந்து வைத்திருப்பது தெரிந்தது. ”ஒருவேளை உனக்கு சென்னை ஊர்தான்னு ஆகிப் போச்சுண்ணா, அந்த ஊரை உனக்குத் தெரியணும், அந்த ஊருக்கு உன்னைத் தெரியணும். ஆள் பழக்கம் மாதிரிதான் ஊர்ப் பழக்கமும். எல்லாம் நாம நம்மளைப் பொருத்ததுதான்” என்றாள். பேசிக்கொண்டு இருக்கும் போதே சட்டென்று செல்வராணி அக்கா புத்தி சொல்கிறது போலப் பேச ஆரம்பித்தது வேதாவுக்கு என்னவோ போல இருந்தது. போனில் அவளுடன் பேச ஆரம்பத்தில் உண்டான சந்தோஷம் இப்போது சுத்தமாக இல்லை. ஆனால் செல்வராணி அக்கா உற்சாகமாக அந்தப் பக்கம் பேசிக் கொண்டிருந்தாள். அவளது கணவர் போன வாரம் அழைத்துக் கொண்டு போன ஆங்கிலப் படம் பற்றிக் கூட சொன்னாள், அதில் வருகிற சில காட்சிகளை கொஞ்சம் விரிவாகக் கூட சொன்னாள், வேதாவுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், அந்த வார்த்தைகள் தனக்கு இப்ப தேவையானதாக உணர உம் உம் எனக் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவைப் பற்றி செல்வராணி அக்கா கேட்டதும், அம்மா இந்த நாள் முழுவதும் தன்னை சீராட்டியதை சொல்ல வேண்டும் போல் இருந்தது, ஆனாலும் வேதா அது பற்றி பேசாமல் மெளனம் காத்து, செல்வராணி அக்காவையே பேச அனுமதித்துக் கொண்டிருந்தாள். நடுவில் பாலாதான் இந்த ஏற்பாடெல்லாம் எனச் சொல்ல ”யாரு நம்ம பாலாவா” என செல்வராணி அக்கா கேட்டது வேதாவுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பேசி முடித்ததும் செல்வராணி அக்கா தன்னை விட அழகா அவளை விட தான் அழகா என கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் முகம் இருக்கிற அழகுக்கு உடல் இல்லை என்றும், அக்காவுக்கு உடலில் இருக்கிற அழகு முகத்தில் இல்லை எனவும் நினைத்துக் கொண்டாள். பாலாவின் அண்ணன் தன்னை பெண் பார்க்க இன்னொரு நாள் வருவான் என அவர்கள் மாமா சொன்னதாக அம்மா சொன்னாள், அன்றைக்கு தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள் போகுது, இதுக்கு இப்ப என்ன வருத்தம் என நினைத்துக் கொண்டு உறங்கப் போனாள்.
வேதா, காலை அலுவலகத்துக்குப் போவதற்காக அறையிலிருந்து வெளியே அறைக் கதவை சாத்தினாள். அவளது வேலைகளில் ஒரு ஒழுங்கு இருக்கும், சாப்பிட்ட தட்டை நன்றாக அலசி மேடையில் சாய்த்து வைத்து தண்ணீர் வடிந்து சின்க்குள் போகிற மாதிரி வைத்துவிட்டுப் போவாள். எவ்வளவு அவசரமாக இருந்தாலும் உணவுகள் இருக்கிற பாத்திரங்களிலிருந்து கரண்டிகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு எல்லா உணவுகளையும் மூடி வைப்பாள். எல்லாம் அவள் அம்மாவிடம் கற்றுக் கொண்டது. இந்த ஒழுங்கு அலுவலகத்திலும் தொடருவதால் அவளை அலுவலகைத்தில் எல்லோருக்கும் பிடிக்கும்.
அலுவலகத்தில் மும்முரமாக தலை குனிந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, முன்னால் நிழலாட தலை நிமிர்ந்தாள், எதிரே பாலா நின்று கொண்டிருந்தான். தன்னை மறந்து வேதா எழுந்து நிற்க, எதுக்கு இந்த மரியாதையெல்லாம் உட்காருங்கன்னு சொல்லிக் கொண்டே பாலாவும் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். வேதா என்ன என்பது போல அவனைப் பார்க்க, அவன் எந்த விதமான சங்கடமுமில்லாமல், உங்ககிட்ட சொல்லிட்டுப் போகலாமின்னு வந்தேன், வீட்டுக்குப் போனேன் அம்மா இல்ல வீடு பூட்டியிருக்கு, அதான் இங்க வந்தேன் என்றான்.
“அம்மா எங்காவது கடைக்குப் போயிருப்பாள், சரி சொல்லுங்க” என்றாள்.
“இல்லை உங்ககிட்ட சொல்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு, இருந்தாலும் உங்களுக்கும் தெரியணுமில்ல அதான்”
“சும்மா சொல்லுங்க”
”இல்ல எங்க அண்ணன், கல்யாணத்தை தள்ளி வைக்கணுமின்னு ஆசை படுறான் அதான்”
“எங்களுக்கு அவசரமின்னு யாரும் சொல்லலியே”
“இல்ல அவன் வேற ஒரு பொண்ணை………..”
“அப்படியா, மனசுக்கு பிடிச்ச பொண்ணை ஆம்பிளைகளும், மனசுக்குப் பிடிச்ச ஆம்பிளையை பெண்களும் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கிறது நல்லதுதானே”
“ரொம்ப நன்றிங்க, நீங்க கோபப் படுவீங்களோன்னு பயந்துகிட்டே வந்தேன்”
“இதுல கோபப்பட என்ன இருக்கு, ஒவ்வொருத்தருக்கும் சொந்த விருப்பு வெறுப்புன்னு ஒண்ணு இருக்கில்லையா”
“உங்களுக்கு” கேட்டுவிட்டு வேதாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான் பாலா.
“எனக்கும்தான், ஏன் உங்களுக்கு இல்லையா”
“இன்னோரு நாள் சொல்றேன்” சொல்லிக் கொண்டே எழுந்த பாலா, சரி நான் கிளம்புறேன்னு அவள் பதிலை எதிர்பாராமல் நாற்காலியிருந்து எழுந்து விருட்டென்று கிளம்பி அலுவலக வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
செல்வி, செல்வராணி அக்காவை அம்மா இப்படித்தான் அழைப்பாள், ஆனால் வேதாவுக்கு முழுப் பெயரான செல்வராணி என்றும் அக்கா சேர்த்து செல்வராணி அக்கா என்றால்தான் பிடிக்கும். பிரசவத்துக்கு வந்திருந்த செல்வராணி அக்கா, வேதாவுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது. அம்மாவும் வேதாவிடம் முகம் கொடுத்துப் பேசவும் செல்வராணி அக்காவும் எப்பொழுதும் தன் புகுந்த வீட்டுக் கதைகளை கூறுவதும் என வேதாவுக்கு இப்பொழுது அலுவலகத்துக்கு ஏண்டா போகிறோம் வீட்டிலேயே இருக்கலாமே எனத் தோன்றியது, அக்காவுக்காக அம்மா செய்கிற சமையலும் பதார்த்தங்களும் மேலும் வேதாவை தனது வீட்டையே காதலிக்க வைத்தது. அலுவலகத்திலிருந்து வரும் பொழுதே இன்றைக்கு என்ன சமையலாக இருக்கும், என்ன பலகாரம் இருக்கும் என்கிற நினைப்பும், கனவுகளும் அவளுக்குப் பிடித்தவையாக இருக்க, தினமும் அலுவலகத்திலிருந்து விரைந்து வரத் தொடங்கியிருந்தாள்.
கொஞ்ச நாள் பாலாவைப் பற்றிய நினைப்பும் கனவுகளும் இல்லாமல், அம்மா செல்வராணி அக்காவுக்கு செய்யும் சமையலையும் பலகாரங்களையும் சாப்பிட்டு சாப்பிட்டு கொஞ்சம் அம்மா சொன்ன மாதிரி சதை பிடிப்பாக இருந்தாள். அலுவலகத்தில் எல்லோரும் என்ன வேதா மேடம் அக்காவுக்கு குழந்தை பிறக்கிறதுக்குள்ள நீங்க இரண்டு மடங்கு குண்டாகிடுவீங்க போலேயே என கிண்டல் பண்ண அங்கே சிரிப்பும் கும்மாளமாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. வேதாவை பேச விடாமல் தினமும் இது நடந்து கொண்டிருந்தது, வேதாவும் வாய் மூடி எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.
அன்று ஷவரில் குளிக்கும் பொழுது, தன் உடம்பே தனக்கு புதிதாக இருப்பதாக உணர கொஞ்சம் வெட்கம் வந்து அப்படியே முகத்தைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டாள். மீண்டும் பார்த்த பொழுது, அம்மா சொன்ன மாதிரி அங்கங்கே கிள்ற அளவுக்கு சதை போட்டிருப்பது தெரிந்தது. தன் உடம்பை தானே ரசித்துக் கொண்டிருக்கும் பொழுது பாலாவின் நினைவு வர, வெட்கத்தால் முகம் சிவந்து, ஷவரின் அடியில் நின்று கண்களை முடிக் கொண்டாள்.
அன்றைக்கு வேதா கண்ட கனவு விநோதமாக இருந்தது, ஒரு அருவியில் குளித்துவிட்டு அவள் மட்டும் தனியாக ஒரு மரத்தடியில் அமர்ந்து தனது அடர்ந்த கூந்தலை விரித்து காயவைத்துக் கொண்டிருக்க, மரத்தின் பக்க வாட்டில் தாழ்ந்து கிடந்த கிளையில் அமர்ந்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறிய குரங்கு இவளைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது. வேதாவின் கவனமெல்லாம் அந்தக் குரங்கின் கையில் என்ன இருக்கிறது என்கிற எண்ணமாகவே இருந்தது. குரங்கு இவளைப் பார்க்க, வேதா குரங்கைப் பார்க்க சற்றும் எதிர் பாராமல் மற்றொரு சிறிய குரங்கு வந்து இந்தக் குரங்கின் கைகளில் இருந்த திண்பண்டத்தை பிடுங்கி உண்ண ஆரம்பிக்க வேதா முதலில் பார்த்த குரங்கு அப்படியே உட்கார்ந்திருந்தது.
இந்தக் கனவு வேதாவுக்கு இரண்டாவது முறையாக வந்தது. அவளுக்கு இதை அப்படியே செல்வராணி அக்காவிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. அவள் பங்குக்கு எதையாவது சொல்வாள் அல்லது தனக்கு தோணுகிற மாதிரி எதையாவது சேர்த்துக் கூட சொல்வாள். சில சமயம் அது வேதாவுக்கு பிடிக்கிற மாதிரி இருக்கும், சில சமயம் ஏண்டா சொன்னோம் என்றாகி விடும். சொல்லவேண்டாம் என நினைத்து மனதில் மூலையில் போட்டுப் போட்டு வைத்து அதுவும் குப்பை கிடங்காகி விடுகிறது. இப்படி யோசனை ஒரு பக்கத்தில் போகும் போதே மனம் இன்னொரு பக்கத்தில் அது அடுத்துச் செய்ய வேண்டிய காரியத்தைத் தீர்மானித்துவிடும் இல்லையா.
அப்படித்தான் இது இதோடு போகட்டும் என்று தன்னைத் தானே சமாதானம் பண்ணிக் கொண்டு தனது அன்றாட வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். கொஞ்ச நாளாகவே பாலாவும், தேவநாதனும் கண்ணில் படவேயில்லை.
அன்றைக்கு அம்மாவுடன் கடைகளுக்குப் போய், செல்வராணி அக்கா பிரசவத்துக்கு, அதற்கு பின் பிரசவம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் வேண்டிய பலவற்றை வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட கண்கள் தெருவிலும் பல கடைகளிலும் பாலா நிற்கிறானா என தேடிக் கொண்டுதான் இருந்தன. வெள்ளைச் சட்டையும் புளு பேண்டும் யாராவது போட்டுக் கொண்டு போனால் அது பாலாவா இருக்குமோ என்கிற நினைப்பை அவளால் தடுக்க முடியவில்லை.
கடை வீதியில் வாங்க வேண்டியவைகளை வாங்கி விட்டு வீடு திரும்பும் பொழுது, செல்வராணி அக்கா தூக்கத்திலிருந்து எழுந்து வந்து கதைவைத் திறந்தாள். அம்மாவும் வேதாவும் உள் நுழையும் பொழுதே நாற்காலிகளுக்கு முன் இருந்த டீ பாயில் ஒரு கவரும், கவரிலிருந்து வெளியே எடுத்து பார்த்துவிட்டு வைத்த மஞ்சளும் இளஞ்சிவப்பும் கலந்த திருமணப் பத்திரிக்கையும், பேன் காற்றில் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது.
வேதா வேகமாக அதை எடுக்கப் போகும் பொழுது செல்வராணி அக்கா, ”நம்ம பாலா வந்திருந்தாண்டி, அவனுக்குக் வர்ற மாதம் பதினைந்தாம் தேதி கல்யாணமாம், பத்திரிக்கைக் கொடுத்துட்டு போனான்” என்றாள்.
வேதா அந்தப் பத்திரிக்கையை கையில் எடுக்காமலேயே, ”ஆமாம் அவன் நம்ம பாலாதான், என் பாலா இல்லை” என மனதில் சொல்லிக் கொண்டே, விரைந்து தனது அறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டாள்.
—
ஆ.ஆனந்தன்
மதுரைக்காரரான இவர் தற்சமயம் வசிப்பது, இலஞ்சி, தென்காசி மாவட்டம். பாரத ஸ்டேட் பாங்கில் முதன்மை மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். வேளாண்மை இளநிலை பட்டதாரியான இவர் 2000ல் முதல் கதை கணையாழியில் வெளிவந்ததைத் தொடர்ந்து சிறுகதைகளும் ஓரிரு கவிதைகளும் எழுதி வருகிறார். தற்சமயம் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் குறுநாவல்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ’வேறு ஒரு வெயில்’ ’ஒலியற்ற மொழி’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ’ஒரு கொலையும்’ ’கோழைகள்’ ஆகிய குறுநாவல் தொகுதிகள் வெளிவந்துள்ளன. விருதுகள் பல பெற்ற படைப்பாளி.