தலைவிரி கோலமாய் எழுந்து அமர்ந்தாள் ஃபைஸா பேகம். கண்மையை இழுவிக் கொண்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரைத்தாரையாக பெருக்கெடுத்தோடியது.

பக்கத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கணவன் மதார் மொய்தீனை தட்டி எழுப்பினாள்.

“எந்திரிங்கஜி… எந்திரிங்கI”

நான்கைந்து தடவைகள் கூப்பிட்டும் எழாத கணவனை உலுப்பினாள். வலது கையில் கிள்ளினாள். கிள்ளுபட்ட இடத்தை தடவியபடி பதறி எழுந்தான் மதார். சுவர் கடிகாரத்தை பார்த்தான் மணி நள்ளிரவு இரண்டு.

“என்ன பைஸா… இந்த நேரத்ல எழுப்ற?”

“ நான் மோசம் போயிட்டேன்ஜிI”

“ என்ன மோசம் போய்ட்ட?”

“மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் அரங்கேறிருக்குI”

“என்ன நம்பிக்கைத் துரோகம்?”

“இது மாதிரி நடக்கும்னு நான் இதுவரை ஒரு துளி யோசிச்சதில்லைI”

“பீடிகை போடாதே..  விஷயத்தை போட்டுடை…”

“அந்த கர்மத்தை என் வாயால எப்படி சொல்வேன்?”

“வாயால சொல்ல முடியலேன்னா மூக்கால சொல்லுI” கிண்டலித்தான்.

கணவனை உக்கிரமாக முறைத்தாள்  ஃபைசல் பேகம். “நான் சீரியஸா பேசுறது உங்களுக்கு கிண்டலா  போச்சுதா?”

இருவருக்கும் நடுவில் படுத்திருத்த  நான்குவயது மகனை தட்டி கொடுத்தான் மதார் மொய்தீன். “விடிஞ்சவுடனே பேசிக்கலாமா?”

“நமக்கு கல்யாணமாகி எத்னி வருஷமாகுது?”

“அஞ்சு வருஷமாகுதுI”

“நம்ம கல்யாண தேதி சொல்லுங்க பார்ப்பம்.”

“14 02 2019….”

“கல்யாணத்தன்னைக்கி  நான் என்ன கலர் பட்டுப் புடவை கட்டியிருந்தேன்?”

“மயில் நீல நிறம்I”

“கல்யாணத் தன்னைக்கி  பாத்த மாதிரி இப்ப இருக்கேனா?”

“இல்ல…  கொஞ்சம் குண்டாயிருக்க…  கொஞ்சம் வாய் கூடியிருக்குI”

“நான் உங்களுக்கு சலிச்சு போய்ட்டேனா?”

“உடல் ரீதியான  காமம் குறைந்து மன ரீதியான காதல் கூடியிருக்குI”

“அப்படி இருக்ற  நீங்க இப்டி செய்யலாமா?”

“எப்படி?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  நான் ஒரு கனவு கண்டேன்….”

“சரிI”

“நம்ம வீட்டு வாசல்  முன்னாடி ஒரு கார் வந்து நிக்குது அதிலிருந்து நீங்க இறங்குறீங்க.  உங்களை  அடுத்து ஒரு 20 வயது பொண்ணு வந்து இறங்குது. பொண்ணு  பாக்க நடிகை ஜான்வி கபூர் மாதிரி கொப்பும் குலையுமா மப்பும் மந்தாரமா இருக்கு.  இரண்டு பேரும் ஜோடியா வீட்டுக்குள்ள வரீங்க.  நான் நம்ப மகனை இடுப்புல வச்சுக்கிட்டு நிக்றேன். ‘உங்க கூட வந்திருக்ற பொண்ணு யாருங்க’ன்னு  கேக்றேன் ‘இவளைத்தான் நான் ரெண்டாம்தாரமா கட்டிட்டு வந்திருக்கேன்’னு சொல்றீங்க. ‘ரெண்டு பேரும் வெளில போறீங்களா இல்ல  காலை உடைக்கட்டா’ன்னு கத்றேன். \நாங்க எதுக்குடி வெளில போகனும் நீயும் உன் மகனும் வெளில போய் தொலைங்க’ன்னு சொல்லி எங்க ரெண்டு பேரையும் நடுரோட்ல தள்ளி விடுறீங்க. நம்ம மகன் நடுரோட்டில் அமர்ந்து கதறியழுரான் கனவு முடியுதுI”

“ஒவ். கனவு கண்டுட்டுதான் இத்தனை ஆர்ப்பாட்டமா?”

“என் கனவு ஒரு அபாய முன்னறிவிப்புI”

“பைஸா ஒரு சாதாரண கனவை  பெருசு படுத்தாதே.  நான் உன் கணவன் மட்டுமல்ல நான் உனக்கு ஒரு ஊழியன் ஒரு தாசானுதாசன்.  உன்னை அணுஅணுவா ரசிக்கும் ரசிகன் உன்னை ஒரு புத்தகமாக பாவித்து வாசிக்கும் வாசகன்.  கனவு கண்டு விட்டு மனைவியை சந்தேகித்த ஆண்கள் உண்டு.  கனவுகள் கண்டுவிட்டு குழந்தைகளை நரபலி கொடுத்தவர்கள் உண்டு. கனவுக்கு ஒரு பைசா முக்கியத்துவம் கூட தராதே.  நீயும் தூங்கு நானும் தூங்குகிறேன்I”

“இந்த கனவை நான் லேசில் விடமாட்டேன்.  நீங்க செய்யப்போறதுதான்  கனவா வந்திருக்குI”

“நம்ம பிள்ள மேல சத்தியமா சொல்றேன் அப்படி  ஒரு எண்ணம் என்னிடம் அறவே இல்லை…”

“நான் நம்ப மாட்டேன்I”

“என் நிரபராதி தன்மையை ரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?”

“இரண்டு விஷயங்கள் பண்ண வேண்டும்I”

“சொல்I”

“ஒன்று- விடிந்தவுடன் ‘யாரையும் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்’ என குர்ஆனின் மீது சத்தியம் பண்ண வேண்டும் நீங்கள்.  இரண்டு- அனிச்சையாக  நீங்க எந்த பெண்ணின் அழகிலாவது மயங்கி ‘இவளை இரண்டாம் கல்யாணம் பண்ணினா  என்ன’ன்னு சலபப்பட்டிருக்க வாய்ப்பிருக்கு.  அதுவே என் கனவில் மூலம்.  ஆகவே நீங்கள் என்னை கனவில் காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேக்க வேண்டும்I”

“கனவுக்கு மன்னிப்பா?  இது டூ மச்I”

“மன்னிப்பு கேட்க முடியுமா முடியாதா?”

“காலைல  நம்ம பள்ளி இமாமை வரச் சொல்றேன்.  அவரிடம் நாம் இருவரும் முறையிடுவோம்.  அவர் சொல்லும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் சரியா?”

“சரிI”

“இப்பத் தூங்குவோம்I” தூங்கி போனான் மதார்.  தூங்கும் கணவனை கன்னத்தில் கை வைத்தவாறே விடிய விடிய பார்த்துக் கொண்டிருந்தாள் ஃபைஸா பேகம்.

வீட்டிற்குள் இமாம் பிரவேசித்தார். அழகிய முகமன்கள் பரிமாற்றம். கண்ட கனவை சொல்லி முடித்தாள்  ஃபைஸா பேகம்.

“உன் கணவர் குர்ஆனின் மீது சத்தியம் பண்ண வேண்டும் மன்னிப்பும் கேட்க வேண்டும் இல்லையா ஃபைஸா?”

“ஆமாம்I”

“மனிதர்கள்  காணும் கனவுகள் அனைத்தும் அர்த்தம் நிறைந்தவை. கனவுகள் மூன்று வகைப்படும்.  ஒன்று- அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தி.  இரண்டு- ஷைத்தானின் திருவிளையாடல். மூன்று- மனிதன் தன் ஆழ்மனதிலிருந்து காண்பது. ஃ பைஸா  நீ கண்ட கனவு இரண்டாவது வகை. ஷைத்தானின் திருவிளையாடல்I”

“வந்தவுடன் ஒரு பக்கம் சாயாதீர்கள் இமாம்I”

“நல்ல கனவுகள் என்பது இறைவனிடமிருந்து தூதர்களுக்கு கிடைக்கும் தூது செய்தியின் 46 பங்கில் ஒரு பங்கு என நபிகள் நாயகம் கூறுகிறார்கள்.  ஆனால் உன்னுடைய கனவு ஒரு துன்பியல் வகை…”

“மேல பேசுங்க  இமாம்I”

“கெட்ட கனவு கண்டவர் முதலில் கனவில் இருந்து  எழுந்ததும் ‘இறைவாI  இதன் கேடுகளிலிருந்தும் ஷைத்தானின் கேடுகளிருந்தும்  என்னை பாதுகாப்பாயாகI”  என பிரார்த்திக்க வேண்டும். கெட்டகனவு கண்டு எழுந்தவுடன்  இடது பக்கம் மூன்று முறை துப்ப வேண்டும். ஒளு செய்து விட்டு இயன்ற ரக்அத்துகள் தொழ வேண்டும். மிக முக்கியமாக கண்ட கெட்ட கனவை யாரிடமும் கூறக்கூடாது.  அர்த்தமற்ற கனவுகளும் கெட்ட கனவுகள் தான்I”

“தேவை நடுநிலை இமாம்I”

“இன்னொன்று சொல்வேன்.  நீ கோவிச்சுக்கக் கூடாது. ஃபைஸா  நீ எதுவும் கனவு காணாமல் உன் கணவரை ஆழம் பார்க்க கனவு கண்டதாக பொய் சொல்லி இருக்கலாம்  இல்லையா?  ஒருவர் கண்ட கனவுக்கு சாட்சியம் ஏது? அல்லாஹ்வுக்கும் கனவு கண்டவனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் கனவு.  சீறாபுராணம் எழுதிய உமறுப் புலவர் கனவில் நபிகள் நாயகம் வந்து உமருவின் படைப்பை அங்கீகரித்ததாக ஒரு நீண்ட கால பொய் உண்டு.  கனவில் காணாததை கண்டதாக கூறுபவர்களை இறைவன் மறுமை நாளில் இரு கோதுமைகளுக்கு இடையே முடிச்சு போடும் பணி கொடுப்பான்I”

ஃபைஸா பேகம் சீறினாள். “என்ன பேச்சு பேசுறீங்க இமாம்.  நான் கனவு கண்டது அக்மார்க் உண்மைI”

“ஃபைஸா  ஆயிரம் முஸ்லிம் ஆண்களை  எடுத்துக்க. அதில் இரண்டு பேர் கூட இரண்டாம் திருமணமோ இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவோ  முயன்றிருக்க மாட்டார்கள்.  ஒரு மனைவிக்கு திருப்தியாக தாம்பத்யம் தர முடியாத ஆண்கள் எதற்கு இரண்டு மூன்று நான்கு என முயற்சிக்கப் போகிறார்கள்.  பொருளாதார நிலை, ஆண் பெண் உறவு விழிப்புணர்ச்சி இரண்டாம் திருமணத்துக்கு எதிரான காரணிகள்I”

“நீங்கள் எது சொன்னாலும் சமாதானம் ஆக மாட்டேன்.  குர்ஆனின் மீது சத்தியம், மன்னிப்பு,  இரண்டையும்  என் கணவன் செய்யாவிட்டால் பிரச்சனையை பூதாகரமாக்குவேன்I”

இமாம் மதார் மொய்தீனிடம், “சத்தியம் பண்ணி மன்னிப்பும்  கேட்டிருI”

“இமாம்I”

“அட நானே…  தினம் பத்துதரம் என் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்டு தான் காலத்தை ஓட்டிட்டு  இருக்கேன்I”

“இரண்டாம் கல்யாணம் ஒரு நாளும் பண்ண மாட்டேன்.  கனவில் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உளமாற மன்னிப்பு கேட்கிறேன்I”  சத்தியம் பண்ணி மன்னிப்பும் கேட்டான் மதார் மொய்தீன்.

மதார் மொய்தீனின் திறன் பேசி ஒரு குறுஞ்செய்தியை கக்கியது. ‘ உன் மனைவி பிசாசை விரட்டிட்டு என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற?  ஐ எம் வெயிட்டிங்I’ 

ஆர்னிகா நாசர்

(13.11.1960) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாக இருந்து ஓய்வு. மனைவி வகிதா மகள் ஜாஸ்மின் மகன் நிலாமகன். 2000சிறுகதைகள் 250 நாவல்கள் 50 தொடர்கதைகள்120 தொகுப்புகள். பத்துக்கும் மேற்பட்ட பட்டங்கள். பாவனை விஞ்ஞானக் கதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *