ஆட்டோ நின்றவுடன் மங்கை ஞாபகமாக பக்கத்தில் சுருட்டி வைத்திருந்த குடையை எடுத்துக் கொண்டு இறங்கினாள். ஆட்டோக்காரரிடம் ஏதோ சொல்ல, அவர் “அம்மா எங்கயோ துஷ்டி வீட்டுக்குப் போகணும்ன்னு சொன்னீங்க, இங்கன ஒண்ணும் காணலியே” என்றார். மங்கை சிரித்துக் கொண்டே ”கொஞ்சம் தூரம் நடக்கணும், அங்க போய் ஆட்டோவில இறங்க வேணாம்ன்னு பாத்தேன், நீங்க கிளம்புங்க, நான் போன் பண்ணும்போது, இதே இடத்துக்கு வந்திருங்க” என்றாள், “சரிம்மா” ஆட்டோ ஒரு வட்டமடித்து வந்த வழியே போகத் தொடங்கியது.
மங்கை, குடையை விரித்துப் பிடித்தவள் என்ன நினைத்தாளோ மீண்டும் மடக்கி, இறுகச் சுற்றி தன் இடது கைகளுக்குள் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் நடந்து இடது பக்கம் திரும்பவும், சாமியானா, வீட்டிற்கு வெளியில் கிடக்கும் நாற்காலிகள் என துஷ்டி வீடு தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இருந்தது.
மங்கை, தன் நடையை கொஞ்சம் தளர்த்தி வேகத்தைக் குறைத்துக் கொண்டு, இடது கையை புடவை தலைப்புக்குள் செலுத்தி, முந்தானையை தோள் வழியே கழுத்தைச் சுற்றி போட்டுக்கொண்டு, கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக நடந்து கொண்டே, சாமியானவுக்கு கீழே, பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து இருக்கிறவர்களை பார்த்துக் கொண்டாள். அந்த வாசப்படியை ஒட்டி உட்கார்ந்து இருக்கிறவன் பிச்சுமணிதான்னு தெரிந்து கொண்டு நடக்கத் தொடங்கினாள். இவள் பார்க்கும் அதே நேரம் பிச்சுமணியும் மங்கையை பார்த்ததுமில்லாமல் “இவளுக்கு யார் தகவல் சொன்னது, இங்க நோக்கி வந்துக்கிட்டு இருக்காளே”ன்னு நினைத்து வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து கொண்டான்.
மங்கை துஷ்டி வீட்டை நெருங்கும்பொழுது, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த ரெங்கையா சார் தற்செயலாக இவளைப் பார்த்துவிட, பேப்பரை பக்கத்து நாற்காலியில் வீசிவிட்டு, வேகமாக வந்து, “மங்கை” என்றார், மங்கை நின்றவுடன், “இங்க வா”ன்னு கூட்டிப்போய் கொஞ்சம் தள்ளியிருந்த பூவரச மர நிழலுக்கு கிட்டத் தட்ட தள்ளிக் கொண்டு போவது போல கூட்டிப் போய், “நீ எங்க இங்க வந்த” என்றார். மங்கை தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள். “கேக்கிறேன்ல, சொல்லு இங்க உனக்கு என்ன வேலை”. மங்கை, ரெங்கையா சார் கண்களை நன்றாகப் பார்த்துக் கொண்டே “ஏன் நான் வரக்கூடாதா” என்றாள். ரெங்கையா சார், என்ன பேசுவது எனத் தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
கேள்விகளும் பதில்களும் சில நேரங்களில் சரியாக அமைந்து விடுவதில்லைதான், அதற்காக கேட்காமல் இருக்க முடியாதல்லவா.
அடுத்த என்ன கேட்கன்னு ரெங்கையா சார் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, மங்கை நகரத் தொடங்கினாள், ரெங்கையா சார், ”மங்கை கொஞ்சம் இரு என் பக்கத்தில உட்காரு, அப்புறமா உள்ளே போகலாம்” என்றார். இப்படி சொன்னது மங்கைக்கு பிடித்தது போல நேராகப் போய் ரெங்கையா சார் உட்கார்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தன் குடையை பக்கத்து நாற்காலியில் வைத்தாள், நாற்காலி குழைவுகளில் அது ஒரு சிறு ஓசையுடன் ஆடி ஆடி நிலை கொண்டது.
குடை ஆடுவதும், நிற்பதும் ஏன் எனக் காரணம் கேட்க முடியுமா, தெரியாதா, அப்படித்தான் நான் ஏன் வந்தேன் என்பதற்கு என்ன காரணம் எனத் தெரியாதா, எதுக்கு இந்த ரெங்கையா சார் அந்தக் கேள்வியைக் கேட்டார், மங்கை தனக்குதானே, நினைத்துக் கொண்டு தலை குனிந்து அமர்ந்து கொண்டாள்.
“அத்தான், நீங்க உங்க ஸ்கூலுக்கு வாத்யார் வேலைக்குப் போறத விட இப்படி காடு மலைன்னு சுத்திக்கிட்டு வந்து என்ன என்னமோ எழுதுறீங்களே, யார் படிக்கா”
“மாப்ளே, இங்க இருக்க இருபது பிள்ளைகளுக்கு நான் ராத்திரியெல்லாம் படிப்பு சொல்லித் தர்றேன். அதான் பகல்ல இப்படி சுத்திக்கிட்டு திரியிறேன்”
“யாருக்கும் தெரிஞ்சா, என்னா ஆகும், யோசிங்க”
“போடா இந்தக் காட்டுக்குள்ள யார் வந்து பாக்கப் போறா”
சுப்பையா சாரின் மச்சினன், பிச்சுமணி இப்படிக் கேட்டது, அவனுக்காக இல்லை அவன் அக்காவுக்குதான்னு தெரியும், இருந்தாலும் சுப்பையா சார் காடு மலையெல்லாம் அலைவதும் வாரத்துக்கு ஓரிரு நாள் வீட்டுக்குப் போவதும் வழக்கமாகிவிட்டது. அதைவிட இங்கேயிருந்து மாறுதல் கிடைக்க இன்னும் நாள் இருக்குன்னும் அவருக்கும் தெரியும்.
ரெங்கையா சார், மங்கை அதோட இப்ப ஐஸ் பெட்டிக்குள்ள படுத்துக் கிடக்கிற சுப்பையா சார் எல்லாம் ஆடலூருக்கு பக்கத்தில இருக்கிற சின்ன கிராமத்தில வாத்தியார்களா இருந்த காலம். ஊர்ல இருக்கிற பிள்ளைகளையெல்லாம் பள்ளிக்கூடத்தில சேர்க்க மூவரும் அரும்பாடு பட்டாலும் இருபது பிள்ளைகளுக்கு மேல் சேர்க்க முடியவில்லை. ஆதலால் மூவரில் ஒருவர் முறை வைத்து மாதத்துக்கு ஒரு வாரம் என அனுமதிக்கப்படாத லீவு எடுத்துக் கொண்டு அவரவர் ஊர்களுக்குச் சென்று வருவார்கள். ரெங்கையா சாரோ, மங்கையோ வகுப்பில் இருக்கும் பொழுது சுப்பையா காபித் தோட்டங்களில் போய் பறவைகள், சிறிய மிருகங்கள், சில அரிய மரங்களை, இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பது, பார்த்தவைகளை தனது சிறிய வீட்டுக்கு வந்தவுடன் ஒரு டிராயிங் நோட்டில் வரைந்து வைப்பது என ரசனையுடன் இருந்து வந்தார்.
சுப்பையா சாரும், ரெங்கையா சாரும் ஒரு வீட்டு மாடியில் குடியிருக்கும் பொழுதுதான் மங்கை புது உத்யோக உத்தரவுடன் அங்கு வந்து சேர்ந்தாள். அவள் வரும் பொழுது கீழே இருக்கிற ஒரு போர்ஷனே போதுமென்று அங்கேயே தங்கிவிட்டாள்.
இப்படி அமைகிறதெல்லாம் யார் சொல்லியும் நடக்கிறது இல்லை, அது அதுவாக அமைவதுதானே, சில நேரம் அதுவே எல்லோருக்கும் வசதியாக ஆகிவிடுவது போலத்தான், மூவருக்கும் அமைந்துவிட்டது.
மங்கை காலையில் சீக்கிரம் எழுந்து விடுகிற பழக்கத்தில் எழுந்து வாசலுக்கு வந்தவள், வீட்டு முன்னால் அழகிய கோலம் போடப்பட்டிருப்பதைப் பார்த்ததும், சந்தோஷப்பட்டாலும், அந்த அழகிய கோலத்தை யார் போட்டார்கள் என்கிற கேள்வியுடன் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பத் தயாரானாள். அந்த மலைப் பிரதேசத்தில், வெயில் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாது, சில நாட்கள் ஏழு மணிக்கும் சில நாட்கள் எட்டு மணிக்கும் என விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும். சில நாட்கள் வெயிலே வராது. வெயில் அது பாட்டுக்கு வந்தாலும் வரவிட்டாலும், வாசல் கோலம் தவறாமல் போடப்பட்டிருக்கும்.
ஒரு நாள் இதற்காகவே காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளிரையும் பொருட்படுத்தாமல் ஜன்னல் வழியாகப் பார்க்கும் பொழுது சுப்பையா சார் கோலம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. ஒரு நிமிடம் ஆச்சர்யப்பட்டாலும். அவர் கை நேர்த்தி கண்டு மங்கைக்கு பொறாமையாகூட இருந்தது. இன்று பள்ளிக்கூடத்தில், அவரிடம் சொல்லி இனி இந்த கோலம் போடுகிற வேலையை தான் பார்த்துக் கொள்வதாக சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
சில சமயம் எல்லாம் நாம் நினைக்கிறபடி அல்லது எழுதி வைத்தபடிதானே நடக்கிறது. மங்கை சொன்னவுடன் சுப்பையா சார், ”தங்கமாப் போச்சு, பொம்பளைக போடுற மாதிரி கோலம் அமையுமா, நீயே, போடும்மா, நானும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிவேன்னு” சொன்னவுடன், ரெங்கையா சார், இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டார்.
அதே தெருதான், அதே வீடுதான், ஆனால் மங்கையின் கோலங்கள் அவைகளுக்கு ஒரு புதிய தோற்றத்தை தந்தது போல, பல பேர் நின்று கோலத்தைப் பார்த்துவிட்டு சென்றார்கள். சுப்பையா சார் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் மங்கையின் கை வண்ணத்தைப் பாராட்டாமல் இருந்ததில்லை.
மங்கைக்கு அன்றைக்கு உற்சாகமே இல்லை, பள்ளிகூத்துக்குப் போக வேண்டுமே என இருந்தது. வெளியில் நல்ல வெயில் அடித்தாலும் வீட்டுக்குள்ளே இருட்டிக் கிடந்தது. மனசு போல சில நேரம் சூழ்நிலையும் அமைந்துவிடுவது இயற்கைதானே. நினைவுகள் தன்னை வதைப்பதை, அவள் அறிந்தாலும் அதற்கு ஒரு வடிகால் வேண்டும்தானே.
ரெங்கையா சார் அவர் முறைக்கு ஊருக்குப் போயிருந்தார், வர பத்து நாட்கள் ஆகும். சுப்பையா சாரும், மங்கையும்தான். மங்கை இந்நேரம் கிளம்பியிருக்க வேண்டும், கதவு திறக்கப்படாதது கண்டு சுப்பையா சார் மேலிருந்து வந்து கதவைத் தட்ட மங்கை மனசும் உடலும் கனக்க வந்து கதவைத் திறந்தாள். மங்கையின் நிலைமை ஓரளவு புரிய, டீச்சர் என்ன ஆச்சு, உடம்பு சரியில்லையா எனக் கேட்டுக் கொண்டே தன்னிச்சையாக மங்கையின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார்.
“உடம்பு காந்தல் இல்லையே, என்ன ஆச்சு டீச்சர்”
”அதெல்லாம் இல்லை சார், கொஞ்சம் சரியில்லை”
“சரியில்லேண்ணா, என்னன்னு தெரிங்சுக்கலாமா”
“இன்னைக்கு என்னால வரமுடியாது, சமாளிச்சுங்க சார்”
“அதெல்லாம் பிரச்சினையில்லை, சாப்பாடு………….”
“பக்கத்து வீட்டு அம்மாகிட்ட கேட்ருக்கேன், கொடுத்து விடுவாங்க”
“சரி. இருங்க, நான் மதியம் சீக்கிரம் வந்துருவேன்’
மீண்டும் கதவைச் சாத்தி இருட்டுக்குள் தஞ்சம் அடைந்த மங்கைக்கு, பல ஞாபங்கள் வந்து அவளை இம்சித்துக் கொண்டிருந்தன. போன வருடம் இதே நாள், இதே கிழமை என்பதெல்லாம் இல்லாவிட்டாலும், அவளுக்கு பழைய நினைவுகள் வந்து அவளை இம்சித்துக் கொண்டிருந்தன.
“ஏங்க இன்னைக்கு என்னால முடியலீங்க, வெளிய சாப்பிட்டுக்கங்களேன்’
“என்ன புதுசா, என்னைய மாதிரி நீ என்ன வேலைக்கா போற, செஞ்சு கொடுத்துட்டு, படுத்துக்க வேண்டியதுதானே’
“முடியாதுங்க”
“என்னடி வாய் நீளுது, முடியலேன்னு சொன்ன, இப்ப முடியாதுங்கிற, துளுத்துப் போச்சா”
“புரிஞ்சுக்கங்க”
“புரியறதுக்கு என்னடி இருக்கு, எனக்கு வெளிய சாப்பிடுறது புடிக்காதுன்னு தெரிஞ்சும், வெளிய சாப்பிடச் சொல்றியே, கொழுப்புத்தானே”
மங்கை இதுக்கு மேல் பேசி பிரயோஜனம் இல்லேன்னு அடுப்படிக்குள் நுழைந்தாள். ஆனால், அடுப்பைப் பத்த வைக்கும் முன்பாகவே, உடம்பைச் சுற்றி முறுக்கி, தலைத் திருகி எடுக்கிறாப் போல ஒரு வலி ஏற்படும் அப்புறம், தலை சுற்றி கீழே விழ, எல்லாம் நடிப்பு, “இந்தக் கழுதையை சரியா கவனிச்சாத்தான், எல்லாம் சரிபட்டு வரும் வந்து வச்சுக்கிறேன்” கத்திக் கொண்டே வெளியே போக, மங்கை மயங்கியே கிடந்தாள்.
இது என்ன விதமான நோக்காடு என்று தெரியவில்லை, அவன் உதவி இல்லாமல் பக்கத்து வீட்டு அம்மாவைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு டாக்டரைப் பார்த்து விட்டு வந்தாலும், மாதத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒருமுறைன்னு இப்படி வருவதும், தலை சுற்றிக் கீழே விழுவதும் அல்லது தன்னைக் கிடத்திக் கொள்வதுமாகத்தான் மங்கை வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் தெரிந்திருந்தாலும் அவனுக்கு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத கல்மனதாக இருந்தான், அவன் நெருங்கும் பொழுது காரியம் ஆகவில்லையென்றால், கோபத்தில் ஒரு மிருகத்தைப் போல நடந்து கொள்வான். பொறுத்துப் பார்த்த மங்கை ஒருநாள் வீட்டை விட்டு தனியாகப் போய் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்து கொண்டு, தனித்து வாழத் தொடங்கினாள். தங்களுக்கு விவாகரத்து ஆகும் வரை அவன் மங்கையை தேடவேயில்லை, மங்கைக்கும் உடல் உபாதைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின.
கொஞ்ச நாள் மங்கைக்கு இது போதும் என்று தோன்ற, நிம்மதியாக இருந்தாள். இருந்தாலும் அப்பப்ப வந்து போகும் நினைவுகள் அவளை அவஸ்தைப் படுத்திக் கொண்டிருந்தன. தான் அப்ளைப் பண்ணி இந்த மலங்காட்டுக்கு ஆர்டர் வந்ததும், அப்பாடா, தூரப் போனால், நிம்மதியாக இருக்கும்ன்னுதான், வந்தாள். ஆனால் இங்கு வந்தும், துயரம் பின் தொடரும்ன்னு அவள் எதிர் பார்க்கவில்லை.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சுப்பையா சார், “இதுக்கு நான் என்ன சொல்றதுண்ணு தெரியல” பேசாமப் படுங்க, நான் சாயுங்காலம் டீயும், ராத்திரிக்கு கஞ்சியும் வச்சுத் தர்றேன், நாளைக்கு எல்லாம் சரியாப் போயிரும் என்றார்.
ராத்திரி கஞ்சி வச்சு எடுத்து வந்த சுப்பையா சார், “ராத்திரி தனியா இருந்துக்கீவீங்கள்ள, இல்ல நான் வந்து துணைக்குப் படுத்துக்கட்டுமா, இல்லை நீங்க மாடிக்கு வந்து படுத்துக்கிறீங்களா” என்றார். மங்கை அவரைப் பாத்து சிரித்துக் கொண்டே, “தேங்க்ஸ், சுப்பையா சார்” என்றாள். அந்த நிமிஷம் அவள் அப்படி சுப்பையா சார்ன்னு பேர் சொல்லிக் கூப்பிட்டது, மிகவும் பிடித்திருந்தது.
ரெங்கையா சார் வர இன்னும் இரண்டு நாள் இருந்தது. ரெங்கையா சார் வந்தால், மங்கை ஊருக்குப் போய் வரவேண்டும், அவள் நான் போகலை, நீங்க வேணா போய்க்கங்கன்னு சுப்பையா சாரிடம் சொல்ல சுப்பையா யோசிக்கிறேன்னு சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அன்று சுப்பையா சார் மாடியிலிருந்து இறங்கி வரும் பொழுது, வாசலில் கோலத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே, திறந்திருந்த மங்கையின் வீட்டுக்குள் நுழைய, மங்கை அப்பொழுதான் குளித்து முழுகி, மயில் கழுத்துக் கலரில் ஒரு புடவையைக் கட்டிக் கொண்டு புறவாசலிருந்து வந்து கொண்டிருந்தாள்.
“என்ன டீச்சர், நல்லா ஆயிட்டீங்களா”
“பாத்தாத் தெரியலயா”
“ஏன் தெரியல, இந்தப் புடவை, மயில் கழுத்துக் கலர்தானே’
“ஆமாம் சரியா சொல்லீட்டீங்களே”
“கலரைவிட, இந்தப் புடவை உங்களுக்கு அழகா இருக்கு”
பதிலேதும் சொல்லாமல், சிரித்துக் கொண்டே மங்கை தலை குனிந்து கொண்டாள். சுப்பையா சார், தலை முதல் கால் வரை மங்கையை ஒரு தீர்க்கமாகப் பார்த்தார். புது நிறம் தான். ஆனால் வளர்த்தியும் சதையும் உருவிவிட்டது போல் இருக்குன்னு மனசு கணக்குப் போட்டுக் கொண்டது. முகத்தில், தலையிருந்து ஒன்றை முடி தொங்கி காதோரம், கொம்பைச் சுற்றிப் படரத் துடிக்கும் ஒரு அவரைக் கொடி போல அலைந்து கொண்டிருந்தது. தலை நிமிராத மங்கை சுப்பையா சார் பார்க்கட்டும் என்று அனுமதிப்பது போல தலை நிமிராமலேயே நின்று கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து மங்கை மாடியேறி சுப்பையா சாரின் ஓவியங்களைப் பார்க்கப் போகும் பொழுது தயாராக வைத்திருந்த ஒரு கலர் பேப்பர் சுற்றிய பரிசுப் பொருளைக் கொடுத்தார். மங்கை கொஞ்சம் தயங்கினாலும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள். பிரிச்சுதான் பாருங்களேன்னு சுப்பையா சார் சொன்னதும். அதற்குள் இருந்த ஒரு போட்டோவைப் பார்த்து மங்கை கண்களை அகல விரித்து, “சார் எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு சார்” “அந்த வாசகங்கள் எனக்குக் கொஞ்சம் நெருக்கமாக இருக்கு சார்ன்னு” சொல்லி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
அந்த வாசகங்கள் அவளை இரவு முழுவதும் தூங்கவிடாமல் இம்சித்துக் கொண்டிருந்தது.
ரெங்கையா சார் வந்ததும், முறைப்படி போக வேண்டிய மங்கை போகாததும், சுப்பையா சாரும் போகவில்லை என முடிவெடுத்ததும், எதேச்சையாக நடந்ததாகத்தான் ரெங்கையா சார் எடுத்துக் கொண்டார். ஒரு நாள் சுப்பையா சார், மலைப்பாதைகளில் நடந்து ரொம்ப நாளாச்சு இன்னைக்குப் போகலாம்ன்னு இருக்கேன்னு சொன்னதும், மங்கை நானும் வரட்டுமான்னு கேட்டவுடன், சுப்பையா சார் வாங்க எனக்கும் துணைக்கு ஆச்சுன்னு சொல்ல, ரெங்கையா சார் கொஞ்ச நேரம் உறைந்து போய் நின்றுவிட்டு, சரி கிளம்புங்க இன்னைக்கு நான் ஸ்கூலப் பாத்துக்கிறேன்னு சொல்ல இருவரும் கிளம்பினார்கள்.
மங்கை கையில் ஒரு சிறிய கேமராவுடன் வந்து கொண்டிருந்தது சுப்பையாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“உங்களுக்கு போட்டோ எடுப்பதில் ஆர்வமா”
“கல்லூரியில் படிக்கும் பொழுது அதெல்லாம் இருந்தது, இந்த மாதிரி மலைப் பிரேதசத்துக்கு போறோமேன்னு, தூக்கிப் போட்டேன், அது இன்னைக்கு உபயோகப்படுது’
“சரி நல்ல போட்டோவையும் எடுங்க, எனக்கும் காட்டுங்க”
“நீங்க உங்க ஓவியங்கள எனக்குக் காட்டவேயில்லையே’
“காட்டிட்டாப் போச்சு”
“அப்புறம் என்ன நான் காட்டமாட்டேனே”
இருவரும் சிரித்துக் கொண்டார்கள்
ஒரு சரிவில் இறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, மங்கை அதைப் பார்த்தாள் ஒரு காபி செடியின் அசைந்து கொண்டிருக்கும் இலையின் நுனியில் உட்கார்ந்திருந்தது, செடியின் அசைவுகளுக்கு ஈடு கொடுத்துக் கொண்டு ஒரு ஊஞ்சல் போல் ஆடிக் கொண்டிருந்தது. எடையே இல்லாத அந்த வண்டை படம் பிடிக்கணும்ன்னு தோணியிருக்க வேண்டும், தன் கேமராவை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே, சுப்பையா, இதை ”லேடி பேர்ட் பீட்டில்” என்று சொல்வார்கள், இது கொஞ்சம் பெரிசா இருக்கு, என்றார். மங்கை படம் எடுத்ததும், தன் டிஜிட்டல் கேமராவைத் திருப்பி சுப்பையாவுக்கு படத்தைக் காண்பித்தாள், ”நேர்ல பாக்கிறதைவிட, இந்த போட்டோல அது அழகா இருக்கு” என்றார். மங்கை சுப்பையா சாரை அடிப்பது போல ஜாடைக் காட்டிவிட்டு சிரித்துக் கொண்டாள்.
ரெங்கையா சார் பாவம், தனியா இருப்பார் என்றாள் மங்கை. இருக்கட்டும் இப்பத்தான ஊருக்குப் போயிட்டு வந்திருக்காரு, அமைதியா இருப்பார்ன்னு சுப்பையா சொல்ல, மங்கை தலையைக் குனிந்து கொண்டு, கல்யாண முருங்கை மூட்டில் உட்கார்ந்திருந்த மங்கை, கையில் கிடைத்த குச்சியை வைத்து மண் தரையில் கிறுக்கிக் கொண்டிருந்தாள். மழை பெய்து ஈரமாய் இருந்த மண்ணில் இருந்து எழுந்த மண் வாசனை இருவருக்கும் பிடித்திருந்தது.
இலேசாகத் தூறத் தொடங்கியதும், வெள்ளை வெளேர்ன்னு பூத்திருந்த காபிப் பூக்களில் இருந்து காபி மணம் வர, மங்கை மூச்சை நன்றாக உறிஞ்சி, அந்த வாசனையை மனதுக்குள் கொண்டு போனாள். அடுத்த மாதமெல்லாம் மழை பெய்யவில்லையென்றாலும் காபி தோட்டம் முழுவதும் இந்த வாசம் இருக்கும் என்று சுப்பையா சொன்னார். என்ன அருமையான சூழ்நிலை எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு சார், என்றாள். அதுவும் நீங்க கூட இருக்கிறது இன்னும் அருமையா இருக்கு! என்றாள். மரத்தடியில் ஒதுங்கி இருந்த இருவரும் மழைத் தூறல் நின்றதும் நடக்கத் தொடங்கினார்கள், சில இடங்களில் மங்கை சரிவில் ஏற சிரமப்படும் பொழுது சுப்பையா கை கொடுத்து உதவாமல் முடியவில்லை.
அன்றைக்கு சாயுங்காலம், ரெங்கையா சார் ஸ்கூலை மூடிவிட்டு வீட்டுக்கு வந்து மாடியேறப் போகும் பொழுது, மங்கை வீட்டில் பேச்சுச் சத்தம் கேட்கக் கொஞ்சம் நின்று கேட்டார். சுப்பையா சிரிப்பதும், பதிலுக்கு மங்கை சிரிப்பதும் கேட்டது. வெளியே மழை வலுத்துப் பெய்யத் தொடங்கியது, மாடிப்படி ஏறும் பொழுதே நனைந்து விடுவோம் என்று தெரிந்தும் மங்கை வீட்டில் நுழையாமல் ஒரு தூக்கமுடியாத கனத்தைத் தூக்கிக்கொண்டு ஏறுவது போல, ஏறிக் கொண்டிருந்தார்.
“சுப்பையா சாருக்கு என்ன ஆச்சு”
“ஏதோ, மாசிவ் ஹார்ட் அட்டாக்குன்னு, அவர் மச்சினன், பிச்சுமணிதான் சொன்னான்” அவன் உன்னைய பாத்தானா”
“பாத்தான்னுதான் நினைக்கிறேன்”
“அதான் நான் சொன்னேன், இங்க எதுக்கு வந்த, மலையில நீ பட்ட கஷ்டமெல்லாம் பத்தாதா”
“அதையெல்லாம் நான் மறந்துட்டேன்”
“நீ மறந்திருக்கலாம். பிச்சுமணியும் அவன் அக்காவும் மறந்திருக்கணுமில்ல”
“மனசு கேக்கல சார்”
“அசிங்கப் படாமப் போய்ச்சேரு, நான் சொல்றத இப்பவாது கேளு’
“இல்ல சார் சுப்பையா முகத்தைப் பாக்காம போக மாட்டேன்”
ரெங்கையா சார் பதில் பேசாமல் உட்கார்ந்து கொண்டார்.
“சார் வர்றீங்களா, உள்ள போயிட்டு வந்துருவோம்”
“சரி என்ன செய்ய, நானும் உங்களுக்கு துணை போயிருக்கேன்”.
ஐஸ் பெட்டிக்குள் இருந்த சுப்பையா சார் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மங்கை, பொங்கி வரும் அழுகையை கையிலிருந்த கைக்குட்டையை வைத்து வாயைப் பொத்திக் கொண்டு அடக்கிக் கொண்டாள். அதுவரை ஓலமிட்டு அழுது கொண்டிருந்த உறவினர்கள் எல்லாம் அழுகையை நிறுத்திவிட்டு, மங்கையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியே வந்த மங்கை பிச்சுமணியைத் தேடினாள், அவன் நாற்காலியில் அமர்ந்து கொண்டே மங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தான், அவன் கண்களில் ஒரு கண்ணீரும் ஒரு இரக்கமும் இருப்பதை மங்கையால் உணர முடிந்தது.
++
ஆ. ஆனந்தன்
வயது 74.
மதுரைக்காரர். தற்சமயம் வசிப்பது, இலஞ்சி, தென்காசி மாவட்டம்.
பாரத ஸ்டேட் பாங்கில் முதன்மை மேலாளராக இருந்து ஓய்வு.
வேளாண்மை இளநிலை பட்டதாரி.
2000ல் முதல் கதை கணையாழியில் வெளிவந்ததைத் தொடர்ந்து சிறுகதைகளும் ஓரிரு கவிதைகளும் எழுதி வருகிறார். தற்சமயம் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் குறுநாவல்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இதுவரை வெளிவந்த படைப்புகள்
வேறு ஒரு வெயில் சிறுகதைத் தொகுப்பு – சந்தியா பதிப்பகம்,
ஒலியற்ற மொழி சிறுகதைத் தொகுப்பு – சந்தியா பதிப்பகம்,
ஒரு கொலையும் குறுநாவல் – குவிகம் பதிப்பகம், சென்னை.
கோழைகள் குறுநாவல் – குவிகம் பதிப்பகம், சென்னை.
மிக இயல்பான நடையில் சுவாரசியமான சிறுகதை. என்னைக் கவர்ந்தது.