நியூயார்க்கில் ஒரு பட்டாம்பூச்சி.
(சினான் அண்டூன்)
எங்கள் பாக்தாத் தோட்டத்தில்
நான் அதை அடிக்கடி துரத்தும்போது
விலகிப் பறந்தபடியே இருக்கும்.
இன்றோ,
மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு,
மற்றொரு கண்டத்தில்,
அது தானேவந்து
என் தோள்மீது அமர்ந்தது.
கடலின் எண்ணங்களைப்போலொரு
நீலம்
அல்லது
இறந்துகொண்டிருக்கும் தேவதையொன்றின் கண்ணீர்த் துளி.
அதன் இறகுகள்
வானிலிருந்து விழும்
இரண்டு இலைகள்.
ஆனால்
இப்போது ஏன்?
நான்
பட்டாம்பூச்சிகளுக்குப் பின்னால்
இப்போதெல்லாம் ஓடுவதில்லை என்று,
முறிந்த கிளையைப்போல
அவற்றை அமைதியாகப் பார்த்தபடி
வாழ்கிறேன் என்று,
அதற்குத் தெரியுமா?
****
சினான் ஆண்டூன்:
கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத்தன்மைகொண்ட
ஈராக்கைச் சேர்ந்த சினான் ஆண்டூன் நியூ யார்க் பல்கலைக்கழகத்தின் ‘கலாட்டின் ஸ்கூல் ஆஃப் இண்டிவிஜூவலைஸ்ட் சொசைட்டி’யில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
000
பொறுத்துக்கொள்
(ஹிபா அபு நடா)
ஐயோ!
நாங்கள் எத்தகையதொரு தனிமையில் இருக்கிறோம்!
மற்றெல்லோரும் தத்தமது போர்களில் வெற்றி சூடியிருக்க
நீங்களோ எந்த மாற்றங்களுமின்றி
தரிசாய்க் கிடக்கிறீர்கள்.
தனிமையில் இருப்பவர்களிடம்
எந்தக் கவிதையும் சென்றடையாது,
எதை இழந்தோம்,
எவை களவாடப்பட்டன,
சுஃபி ஞானியே இவை
உமக்குத் தெரியாதா?
ஐயோ
நாங்கள் எத்தகையவொரு தனிமையில் இருக்கிறோம்!
இது அறியாமையின் இன்னொரு யுகம்.
போர்மூலம் எங்களைப் பிரித்து
இறுதி ஊர்வலத்தில்
எங்களுடன் ஒன்றாக அணிவகுத்து நடப்பவர்கள்
சபிக்கப்பட்டவர்கள்.
ஐயோ
நாங்கள் எத்தகையவொரு தனிமையில் இருக்கிறோம்!
இந்த பூமி ஒரு திறந்தவெளிச் சந்தை,
உங்களுடைய மாண்புறு நாடுகள்
ஏலம் விடப்பட்டுவிட்டன,
கைவிட்டுப்போயின!
ஐயோ!
நாங்கள் எத்தகையவொரு தனிமையில் இருக்கிறோம்!
இது அவமானத்தின் காலம்,
யாரும் எங்களின்பக்கம் நிற்கத் தயாரில்லை.
எப்போதுமே.
ஐயோ!
நாங்கள் எத்தகையவொரு தனிமையில் இருக்கிறோம்!
பழைய கவிதைகளை
புதிய கவிதைகளை
இந்தக் கண்ணீரை
அனைத்தையும் துடைத்தெறியுங்கள்.
ஓ பாலஸ்தீனமே!
நீ பொறுத்துக்கொள்!
000
ஹிபா கமல் அபு நடா:
(24.6.1991 – 20.10.2023)
பாலஸ்தீனியக் கவிஞரும் நாவலாசிரியரும், ஊட்டச்சத்து நிபுணருமான ஹிபா கமல் அபு நடாவின் நாவல் ‘ஆக்சிஜன் இஸ் நாட் ஃபார் தி டெட்’ , 2017 ஆம் ஆண்டு சார்ஜா படைப்பிலக்கிய விருது வகைமையில் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
2023 இல் இஸ்ரேலிய நடந்த வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் இருந்த தன்னுடைய வீட்டில் கொல்லப்பட்டார்.
கயல் எஸ்
வேலூர், முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் கயல், வணிகவியல், இதழியல், வணிக மேலாண்மையியல் ஆகிய மூன்று துறைகளில் முதுகலைப் படிப்பும், வணிகவியலில் எம்.ஃபில் பட்டமும், வணிகவியல், வணிக மேலாண்மையியல் ஆகிய இரண்டு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தொழிலாளர் சட்டங்கள் குறித்த பட்டயப் படிப்பும், தகவல் தொழில் நுட்பத்தில் பட்டயப் படிப்பும் பயின்றுள்ளார்.
கல்லூஞ்சல் (2015) மழைக் குருவி (2016) ஆரண்யம் (2018) ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019) உயிரளபெடை (2020) ஆகிய ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.
‘பழைய கடவுளரும் புதிய துர்தேவதைகளும்: சமகாலத் திபெத்தியச் சிறுகதைகள்’, ‘கனவு இல்லம்: அமெரிக்கச் சிறுகதைகள்’ ஆகிய இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுப்புகள் 2022 ஆம் வருடம் வெளிவந்துள்ளன. போரொழிந்த வாழ்வு எனும் மொழிபெயர்ப்பு நாவல் இந்த வருடம் வெளிவந்துள்ளது.