வேலு இராஜகோபால்

உடம்பு இப்படிப் படுத்தும் என்று அவன் நினைத்ததில்லை. கழுத்தில் இருபது வருடங்களாக அணிந்து கொண்டிருந்த, உடலோடு உடலாகிவிட்ட, பன்னிரண்டு பவுன் சங்கிலி கூட உறுத்திக் கொண்டிருந்தது. கட்டிலை விட்டு எழ முடியாமல் கிடந்தான். ஆறடி இரண்டங்குலம் இருந்த அவனுடைய கால்கள் கட்டிலுக்குச் சற்று வெளியே துருத்திக் கொண்டிருந்தன. வலது கால் அதன் போக்கில் கிடந்தது. இடது கையால்தான் வலது காலைத் தொடவும் உணரவும் முடியும். இப்படிப் படுத்திருக்கும் நிலையில் அதுவும் முடியாது. அந்தக் காலில் எந்த உணர்வும் கிடையாது. ஏதோ பிளாஸ்டிக்கை அவன் உடம்பில் ஒட்டிக் கொண்டுவிட்டது.

சித்தப்பாவின் மகள் மல்லிகா சிறு குழந்தையைப் போல் அவனுக்குப் பக்குவம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு அறுபத்தி இரண்டு வயதாகிறதென்றால், அவளுக்கு ஐம்பத்தி ஐந்தாகிறது. அவளும் பாவம் எத்தனை பேரைத்தான் கவனிப்பாள்? அவளுக்கு வாயாற நன்றி சொல்லக் கூட முடியாத நிலையில் இருந்தான். நாக்கு குழறுகிறது. ஒரு வார்த்தையைச் சொன்னால் வேறு எதுவாகவோ ஒலிக்கிறது..  அவளுடைய புருஷன் நல்ல மனுஷன். இல்லையென்றால், அனாதையாக, பார்க்க ஆளில்லாமல் சாக வேண்டியதுதான். ‘செத்தாலும் பரவாயில்லை. இப்படிக் கிடப்பதுதான் பெருந்துயரமாக இருந்தது. சாவதற்குக் கூட யாராவது துணை வேண்டும். செத்துவிடலாம் என்று தோன்றுகிறதே தவிர அதற்கு மனமில்லை, தைரியமில்லை. மல்லிகா ஒரு நாள் கவனிக்காமல் விட்டுவிட்டால் போதும்…கதை முடிந்துவிடக் கூடும். அவளுக்கு அது பொறுக்காது’. அவனால் அவளிடம் சொல்லச் சக்தியில்லை, முடியவுமில்லை.

     எப்படி இருந்தவன்..! இரண்டு மூன்று வருடங்களாகக் கிடக்கிறான்.  மூணு ஏக்கர் இருபத்தேழு சென்ட் நிலம் மட்டும் கிடக்கிறது. அதில் மல்லிகா ஏதோ பாடுபார்த்துக் கொண்டிருந்தாள். அவன் லட்சம் லட்சமாய்ச் சம்பாதித்தது பெரும்பாலும் கரைந்து விட்டது. கடன்காரர்கள் திருப்பிக் கொடுக்காத மூன்று லட்ச ரூபாய் இருக்கிறது. பெரும்பாலும் பூவியாபாரிகள், மிளகாய் விவசாயிகள்.  நம்பிக்கையானவர்கள்.  ஆனால் யார் போய்க் கேட்பது? அவர்களுக்கும் அல்லாட்டம். மார்க்டெட் இருப்பது சங்கரன்கோலிவில்.  அவன் கிடப்பது மாயன்குளம். தார் ரோடே இந்த வருஷம் தான் போட்டார்கள்.  வீடு தேடி வந்து கொடுக்க முடியாது. பூ வியாபாரம் பாதிக்கும் என்று சாக்குச் சொல்லலாம். அவனுடைய அந்தக் காலத்து அடாவடிகள் அவர்களுக்கு ஞாபகம் இருக்கும். அரைகுறை நினைவுடன் இருக்கிற அவனிடம் திரும்பக் கொடுத்தும் கொடுக்கவில்லை என்றும் ஆகிவிடக் கூடாது.

     ‘அண்ணே அண்ணே’ என்று மல்லிகா அழைத்ததும் கண்களைத் திறந்தான். கையில் ஒரு கிண்ணத்தோடு நின்று கொண்டிருந்தாள். எழுந்து உட்கார எத்தனித்தான். அவனால் முடியவில்லை. இவனுடைய முதுகைப் பிடித்துத் தூக்கி உட்கார வைத்தாள். அதற்கே கஷ்டப்பட்டாள். இருவருக்கும் மூச்சிரைத்தது. அவனுக்கு ஒவ்வொரு முறையும் ஞாபகம் வரும்.  சின்ன வயதில் உடற்பயிற்சி செய்து கட்டுக்குட்டாக இருந்த உடல். அது இப்படியாகிவிடும் என்று நினைத்தது கிடையாது. உடலே பாரமாகிவிட்டது.  மல்லிகா, ஸ்பூனில் அரிசிக் கஞ்சியை எடுத்து ஊட்டி விட்டாள். அவன் மீது கருணையும் பாசமும் கொண்ட ஜீவன் அவள் ஒருத்திதான்.  இரண்டு இரண்டரை லட்ச ரூபாய் இதுவரை அவளுக்குக் கொடுத்திருக்கிறான். அதுதான் முதலில் ஞாபகம் வருகிறது.  ‘வட்டிக்காரப் பய புத்தி’ என்று தன்னையே வைது கொண்டான். ‘யாரைப் பற்றி என்ன யோசிப்பது?’  பழகிப் போன மனது. அப்படித்தான் நினைக்கும்.  முப்பது வருடங்களாக இருபத்தி நாலு மணி நேரமும் வட்டிக் கணக்குப் போட்ட மனது.

     அந்தக் காலங்களில் ‘நிறையப் பணம் வைத்திருக்கிறான்’ என்பதற்காகத்தான் அவனுக்கு ஊரில் மரியாதை.  ‘மல்லிகா, ஊட்டியது போதும் என்று இடது கையைக் லேசாக அசைத்துக் காட்டி, ஏதோ முனகினான். அவள் நிறுத்திவிட்டு, அவனைப் பார்த்தாள்.  அவனால் உண்ண முடியவில்லை.  எடை மிகவும் குறைந்து எலும்பும் தோலுமாக இருந்தான். ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடுண்ணே’ என்றாள்.  அவனுக்குக் கண்ணீர் வந்தது. ‘எதற்காக மல்லிகா இதையெல்லாம் செய்கிறாள்?’ அவன் தன்னிடம் மிக மதிப்புள்ளதாக நினைக்கும் ‘பணத்தைப்’ பற்றி அவள் ஒரு நாள் கூடக் கேட்டதில்லை. அவன் மனைவி கூட அப்படி இருந்ததில்லை. காரியத்தில் கண்ணாயிருப்பாள். நல்ல வேளை அந்தப் ‘புண்ணியவதி’ அவனுக்கு முன்னால் போய்ச் சேர்ந்துவிட்டாள்.  அவனைப் பார்த்தாலே அவளுக்குக் கடுப்பு ஏறிவிடும்.  அவனுக்கு மட்டுமென்ன? எரிந்து விழுவான்.  ‘அவனைப் போன்ற அழகான பையனுக்கு, அவளைப் போன்ற ஒருத்தியை யார் திருமணம் செய்து வைத்தது?’ உள்ளுக்குள் எரிச்சல் அதிகமானாலும், எதையும் அவனால் பேச முடியாது.  ஊமைக் காயம். 

     பதினொரு வயதில் அம்மா இறந்த போது அனாதையாகிவிட்டான்.   நேரடிச் சொந்தமாக அவனுடைய தாத்தா மட்டும் இருந்தார். அவர் உயிரோடு இருக்கும் வரை பார்த்துக் கொண்டார். அவனுக்கு இருபத்தி மூன்று வயதாகும் போது, கிரேஸியின் அண்ணன் அவனைக் கூப்பிட்டு அன்பாகப் பேசினார்.  அந்தக் காலத்தில் அவள் யாரோ வேறு ஜாதிக்காரனைக் காதலித்துக் கொண்டிருந்தாள் என்பது திருமணம் முடிந்து இரண்டரை வருடங்கள் கழித்து அவனுக்குத் தெரியவந்தது. ‘பத்தாங் கிளாஸ் பாசானவனுக்கு, டிகிரி படித்த அவளை ஏன் கொடுக்கத் தயாராக இருந்தார்’ என்று அவன் யோசிக்கவில்லை. பெரிய பணக்கார வீட்டுப் பெண் கிடைத்தது யோகம் என்றே நினைத்திருந்தான். ‘பணம்’. அது அவனிடம் பேசியது. அவனுக்கும் அது விருப்பமாக இருந்தது. 

     ‘கிரேஸியோ அவளுடைய அண்ணனோ அவனை ஒரு ‘நாயாகக்’ கூட மதிக்கவில்லை’ என்பதை அடிக்கடி தனக்குள் ஞாபகப்படுத்திக் கொள்வான். கிரேஸியும் அவனும் எதற்காகத் திருமணம் முடித்தனர் என்று இருவருக்கும் புரியவில்லை. இயந்திர மனிதர்கள் போல நடந்தது தாம்பத்தியம். பூ வியாபாரத்தில் நன்றாகச் சம்பாதித்துவந்தான்.  இருவருக்கும் அது போதும். ஆனால் கிரேஸியின் டாக்டர் அண்ணன், தனது பணக்காரத் திமிரைக் காட்டியிருக்காவிட்டால் அவனுக்கும் பணம் சேர்க்கும் வெறிபிடித்திருக்காது. அவ்வப்போது வட்டிக்குப் பணம் கொடுத்தவன், அதில் மிகத் தீவிரமாக இறங்கினான். ‘எத்தனை பேரைப் படாதபாடு படுத்தினேன்?’   

     ஐந்து வருடங்கள் முன்பு அவன் மிகத் தெம்பாக இருந்த போது, அதிகமாகக் குடிக்கத் தொடங்கினான். இருபது இருபத்தி ஐந்து லட்ச ரூபாயை வட்டிக்கு விட்டிருந்தான். மாதாமாதாம் வரும் வட்டிப் பணத்தை என்ன செய்வதென்று புரியவில்லை. கிரேஸி ஏற்கனவே பணக்காரி. அவளுக்கு தோட்டம் தொறவுகளிலிருந்து நல்ல வருமானம் கிடைத்தது. குழந்தைகளை நல்ல பள்ளிக் கூடத்தில் ஹாஸ்டலில் படிக்க வைத்தார்கள். பெற்றோர்களிடம் மட்டும், குறிப்பாக அப்பாவிடம் மட்டும் குழந்தைகள் தமிழில் பேசினார்கள். அதற்கும் கூட கூச்சப்பட்டார்கள்.  ஆங்கிலம் தெரியாமல் போனது அவனுக்கு வெட்கமாக இருந்தது.

       கிரேஸிக்கும் அவனுக்கும் அடிக்கடி சண்டை வந்தபோதெல்லாம், அவளை அடித்து விடுவான். பல முறை அவள் அண்ணன் வீட்டுக்குப் போய்விடுவாள். பிறகு அவன் போய்க் கூப்பிட்டு வருவான்.  வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையும் மினுமினுங்க அவன் தெருவில் நடந்து போனாலே ஆண்களும் பெண்களும் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். உயரமான கனத்த ஆள், பணம் புழங்கும் ஆள், கழுத்தில் பல தங்கச் சங்கிலிகள்.  அடிதடிக்குத் தயங்காதவன். அவர்கள் தன்னை எதற்குப் பார்க்கிறார்கள் என்று அவனுக்கும் தெரியும்.

     கிரேஸி இறந்து போய் நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டன.  முதலில் ஹோட்டலில் சாப்பிட்டுப் பார்த்தான். பிறகு, கேரியரில் வரவழைத்துச் சாப்பிட்டான். ஆனால் ஒன்றும் வீட்டில் சாப்பிட்ட மாதிரி இல்லை. மனைவியைத் திட்டித் திட்டிக் குறை சொன்ன நாள்கள் நினைவுக்கு வந்தன.  பெண் இல்லாத வீடு இருண்டு கிடந்தது.  மனைவி இருக்கும் போதே பெண்ணைப் பெங்களூரில் திருமணம் செய்து கொடுத்துவிட்டான். ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறாள். மாப்பிள்ளை வீடும் ‘அல்லேலூயா’ கூட்டம்தான்.  அவனுக்கென்னவோ கடவுள் மீது பக்தி இல்லை. ஆனால் திருநீறு மட்டும் ஒரு கீற்றாகப் பூசிக் கொள்வான்.  சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் மனைவி மக்களுடன் பிரார்த்தனைக் கூட்டங்களுக்குப் போகும் போது ஒருவித சங்கோஜத்துடன் போவான்.   அம்மாவை அவன் அடிப்பதை ஒரு நாள் பார்த்த மகள், அம்மா இறந்த பிறகு அவனைப் பார்க்க வருவதே இல்லை.  இந்தக் காலத்துப் பெண்.  ‘யார் செய்யாததை நான் மட்டும் செய்து இவ்வளவு கெட்டவனாகிவிட்டேன்?’ அவனுக்கு வியப்பாக இருந்தது.

     பையன் ஆல்பர்ட் ஆஸ்திரேலியாவிலிருந்து மாதாமாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அந்தப் பணத்தில் அவனுக்கு மருத்துவமும், வீட்டுச் செலவும் நடந்து கொண்டிருந்தன. இப்போது வேட்டியைக் கூட மல்லிகாதான் கட்டி விடுகிறாள். கட்டிலிலேயே எல்லாம் நடக்கிறது. அவனைத் துடைத்தெடுப்பது அவள்தான்.  பாவம் அவளாலும் முடியவில்லை. ‘வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிற அவனுக்கு’ விடுதலை இல்லை. 

     அப்படி ஒரு நாளில் விஷ்வாஸ் வந்தான். தூரத்து உறவு.  அவனுக்கு இந்த ஊர். அடுத்த தெருவில் வீடு. ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் டாக்டராக இருந்தான்.  ‘அடுத்த மாதம் வந்து உங்களை என் செலவில, மதுரைக்குக் கூட்டிட்டுப் போறேன்.  அங்க கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல, உங்களை அட்மிட் பண்ணி விட்டுர்றேன். எனக்குத் தெரிஞ்ச டாக்டர்கள் அங்க நிறையப் பேர் இருக்காங்க. நல்லாக் கவனிச்சுக்குவாங்க’. அவனால் பதில் சொல்ல முடியவில்லை.  இடது கையை ஆட்டி ஏதோ பேச முயன்று ‘ஆ..ஆ’ என்றான். ‘நீங்க ஒண்ணும் பேச வேண்டாம். அமைதியா இருங்க எல்லாம் என் பொறுப்பு’ என்று சொல்லிவிட்டான். அவனுக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. ‘இன்னும் கொஞ்ச நாள்கள். அதுவரை பார்ப்பதற்கென்ன?’ என்று விஷ்வாஸ் நினைக்கிறானோ? ‘இன்னும் கொஞ்ச நாள்களில் நானும் இறந்துவிடுவேனா?’

     அவன் மனைவி கிரேஸி இருந்திருந்தால் கூட மல்லிகாவைப் போல, விஷ்வாஸ் போலப் பரிவுடன் பேசியிருக்க மாட்டாள்.  எரிச்சலடைந்து சலித்துப் போய் வேறெங்காவது போயிருக்கக் கூடும். அவளை அந்தப் பாடு படுத்தியிருக்கிறான். அவன் செய்த பாவத்துக்குப் பலனாகத்தான் அவள் முன்னாலேயே போய்விட்டாள். 

     ‘மகளுக்கு இத்தனை நாள் வளர்த்த அப்பாவைப் பிடிக்கவில்லை.  ‘நானென்ன உத்தமன் என்றா சொல்கிறேன்.  எல்லாத் தவறுகளும் செய்த சாதாரண மனிதன்.  என்ன? எல்லா உறவுகளையும் வட்டிக் கணக்கைப் போல யோசித்துவிட்டேன். கழுத்தில் துண்டைப் போட்டு, கடன் வாங்கியவர்களிடம் வசூல் பண்ணியிருக்கிறேன். எல்லோரும் அதைத்தான் செய்தார்கள். ஆனால் எனக்கு மட்டும் தண்டனை கிடைத்துவிட்டது’.

     அவனுக்கு இருமல் வந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது.  மூச்சுத் திணறியது.  இடது கையால் நெஞ்சைத் தடவிக் கொண்டான். கொஞ்சம் குறைவது போலிருந்தது. கண்களை மூடிக் கொண்டான்.  விஷ்வாஸ் வரும் நாளை எண்ணிக் காத்திருந்தான். வியாதி குணமாகவில்லை என்றாலும், தெரிந்த இடத்தில் தங்கியிருந்து சிகிச்சை பார்ப்பது நல்லது. வேறு யாருக்கும் தொந்தரவாக இருக்க வேண்டியதில்லை. அவன் காத்திருந்தான். விஷ்வாஸின் கருணையின் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தது.  மீதி நாள்களை அதைவைத்துக் கழிக்க வேண்டும். கண்களை மூடிக் கொண்டு மதுரைக்குக் காரில் போகும் நாளைக் கற்பனை செய்து கொண்டிருந்தான். அதற்கு முன் மல்லிகாவிற்கு இருபது சென்ட் நிலத்தை எழுதிக் கொடுத்துவிட வேண்டும். முதல் முறையாக யாருக்காவது எதையாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றியதே அவனுக்கு விசித்திரமாக இருந்தது. வாழ்க்கை அவனை எங்கேயெல்லாம் கொண்டு செல்கிறது! புதிய கணக்குகளைச் சொல்லித் தருகிறது’

     கிரேஸி இறந்துபோய் இருபது நாள்களுக்குப் பிறகு, மகள் அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் பஸ்ஸேறிவிட்டாள். ஆல்பர்ட் மட்டும் மாலை வரை இருந்தான். இரவில் மதுரையில் ஃபிளைட் பிடிக்கக் கிளம்பிய போது கடைசியில் ‘டாடா’ காட்டியது இன்னும் மனதில் இருந்தது. அங்கே ஏதோ படித்துக் கொண்டிருந்தான். அதற்கப்புறம் இன்னும் அவனைப் பார்க்க வரவில்லை. அதை நினைத்ததும் அழுகை வந்தது. எதிலும் ஒட்டாமல்  என்ன வாழ்க்கை இது? கிரேஸியுடன் இன்னும் நன்றாக வாழ்ந்திருக்கலாமோ? அவளும் இவனுடன் நன்றாகப் பழகி இருக்கலாமோ? உடலையும் பணத்தையும் தவிர ஏதோ ஒன்றை அவன் தவற விட்டுவிட்டான். கண்ணீர் வழிந்ததை மல்லிகா பார்க்கவில்லை.

வாசலில் டீசல் கார் எஞ்சின் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கொஞ்சநாள் டாக்ஸி ஓட்டியதில் அதன் ஒலி தெரியும். விஷ்வாஸ் வந்துவிட்டான். அவன் காரின் ஓசை. அவனிடம் இரக்கமும் கருணையும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். இப்போதைக்கு அது போதும்.

                                        ******

வேலு இராஜகோபால். 

‘சிறுவயதிலிருந்து வாசிக்கிற பழக்கம் உண்டு. வரலாற்றாசிரியர் ராமசந்திர குகா எழுதிய  Savaging the. Civilized’ என்ற ஆங்கில நூலை ‘வெரியர் எல்வினும் அவரது பழங்குடிளும்’ என்று தமிழில் நான் மொழிபெயர்த்து, அந்நூலை காலச்சுவடு பதிப்பகம் 2015இல் வெளியிட்டுள்ளது.

எதிர்பாராத விபத்தாக என்னை உறுத்துகிற விஷயங்களைப்  பற்றிக்

கதை எழுதத் தொடங்கினேன். இதுவரை, நவீன விருட்சம், விருட்சம், அமுதசுரபி, அம்ருதா, கல்கி ஆன்லைன், மயிர், நடுகல்,(- இதுவரை ஐந்து கதைகள்-) சிறுகதைகள்.காம்  போன்ற அச்சு, இணைய இதழ்களில் எனது 35  கதைகள், 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியாகியிருக்கின்றன.’ 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *