கறுப்புவண்ண மாயப்பெட்டி – அகராதி

பிறந்து இரண்டாவது வாரத்திலிருந்து அவள் சீமாட்டி. பிறந்த ரெண்டாவது வாரத்தில்தான் ‘சீமாட்டி’ என்று அவள் அப்பா பெயர் சூட்டினார்.

ஐந்து பிள்ளைகளில் மூன்றாவது. ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவள் சிறுமி. முழங்கால் உயரத்துக்கு அரைப் பாவாடையும் கையில்லாத மேல் சட்டையும் போட்டுக்கொண்டு கரகரவெனச் சுற்றுகையில் பாவாடை அப்படியே அந்தரத்தில் நிற்காதா என்று ஏங்கியச் சிறுமி. அப்பா வாங்கி வரும் வாரப்புத்தகத்தின் உள்பக்க அட்டையில் அப்படிப் பாவாடை குடையாக இருக்கும்படி ஒரு சிறுமி நின்றாள். பக்கத்துவீட்டு அக்காவிடம் கேட்டபோது அப்படிச் சுற்றவைத்து ஃபோட்டோ பிடிப்பார்கள் என்றாள்‌. சுற்றிக்கொண்டிருக்கும் போது நேராக நின்று முகத்தை ஃபோட்டோவுக்கு எப்படிக் காண்பிப்பது என்று நினைத்துக்கொண்டே அன்று இரவு தூங்கினாள். விடிந்ததும் தோன்றிய முதல் கேள்வி யார் நம்மை அப்படி ஃபோட்டோ பிடிப்பார்கள்..?

சாலையில் நடக்கும்போது விளையாடும்போது எங்கிருந்தோ கேமராவின் கண்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதான எண்ணமே சீமாட்டியிடம் மேலோங்கியிருந்தது. அம்மா அப்பாவுடன் சினிமா பார்க்கும்போது சீமாட்டிக்கு வரும் சந்தேகங்களை ஒரு லாரியில் ஏற்றலாம். ஆனால் வாய் திறந்து கேட்க மாட்டாள் முடியாது. பதில் அடியாகவோ திட்டாகவோ வரும் அரிதாகச் சிலநேரங்களில் குதர்க்க மறுமொழியும் வரும்.

“படிச்சு கிழிச்சிட்ட.. இப்ப இது ஒன்னுதான் தெரியணுமாக்கும்”. அவளாக யோசித்து அவளாகக் கேள்வி கேட்டு அவளாக ஒரு புதிய பானத்தைப் போன்று பதில்களைத் தயாரிததுக் கொண்டாள்.

சினிமாவில் அவள் வயதொத்த சிறுமிகள் உயரமான இடத்திலிருந்து மிதந்துவந்து இறகாகத் தரையில் இறங்கிப் பூவாகச் சிரித்தார்கள். கவுன் பறக்க அவர்கள் இறங்குகையில் அப்படியே அந்தரத்தில் நிறுத்தி ஃபோட்டோ பிடித்தார்கள் பெற்றோர்கள். இந்தக் காட்சி சீமாட்டியைத் துவம்சம் செய்தது. கனவுகளில் அவள் காற்றில் மிதந்துகொண்டிருந்தாள். கதாநாயகி ஒரு காலெடுத்து அடுத்தக் காலை எப்படி வைக்கிறாளென்றே தெரியவில்லை. பஞ்சு போல காற்றில் மேலெழும்பி இறங்கிய காட்சியை கதாநாயகன் ஃபோட்டோ எடுத்தப் பிறகு கடகடவென்று நடந்து வந்தாள். முதலில் இப்படி மேலெழும்பி இறங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பறம் யாரேனும் படம் பிடித்தால் அப்படி நின்றுகொள்ளலாம் என்று சீமாட்டி நினைத்தாள்.

ஒருநாள் அவளைத் திண்ணையில் அமர்த்திவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டாள் அம்மா. வீதியில் பக்கத்துவீட்டு அக்காவுடன் தெருப்பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். எதிர்வீட்டுப் பாட்டி “வாடி ராசாத்தி” என்று தூக்கினார். போகாமல் அடம் பிடித்தாள். எப்போதும் போய்விடுவாள். இப்போதோ அவளுக்கு வேறொரு முக்கியமான வேலை இருந்தது. அதனால் மறுத்து திண்ணையில் முன்பகுதியில் அமர்ந்து கொண்டாள். உயரமான திண்ணை கீழே குனிந்து பார்த்தாள். பசுஞ்சாணம் தெளித்து கூட்டப்பட்ட வாசல் தெரிந்தது. சட்டென்று திண்ணையிலிருந்து கீழே குதித்தாள். முட்டிப்பெயர்ந்து ரத்தம் கசிந்தது. நாம் ஏன் காற்றில் மிதந்து வந்து இறங்கவில்லை. அப்புறம் எப்படி ஃபோட்டோ எடுப்பார்கள் என்ற கேள்வி மனதைக் குடைந்தது.

“என்னடீ முழிச்சுக்கிட்டே கனவு காணுற.. தெரியாத்தனமா சீமாட்டினு பேர் வச்சிட்டோம். பாரு சீமாட்டியாட்டந்தான் திரியுது. பெரிய மகாராணி!”

பாராட்டு வார்த்தைகளில் வசவுகள் புதிததல்ல அவளுக்கு.. என்ன எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. சில சமயங்களில் கோபமாக எதையாவது சொல்லி மேலும் திட்டுகளைப் பெற்ற பிறகு தெரிந்தது. முதல் திட்டுக்கான பதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை. எதிர்வினையாற்றுகையில் திட்டுகள் செங்கல் செங்கலாக அடுக்கப்பட்டு முறைப்பாக கான்க்ரீட் பூசப்பட்டன. உடைத்து வெளியேறத் தெரியாத பத்து வயதில் மெளனித்து மெளனித்து முப்பதுக்கான சிந்தனையும் தனித்தழும் போக்கும் வந்துவிட்டது.

வீட்டில் மூத்த அக்காளுக்குத் திருமணம். மாப்பிள்ளைக்கு நண்பனாக வந்தவன் கறுப்புக் கலரில் கையில் எடுத்து வந்ததை கேமரா என்றார்கள். அவன் தேவதூதனானான். முதன்முதலாகப் பார்க்கிறாள். கண்களில் ஆசையும் மகிழ்ச்சியும் பொங்க அருகில் சென்று பார்க்கிறாள். அவனுக்குப் புரிந்து போனது. ஏவலாளாக வைத்துக் கொண்டான். ‘தண்ணி எடுத்து வா’, ‘இந்த பைய அங்க வையி’, ‘கடைக்குப் போய் பபிள்கம் வாங்கிட்டு வா’. ஒருமுறை தொட்டும் பார்த்தாள். மணநாளன்று நீளமான பெஞ்சின்மீது ஏறி நின்றபடி சமையல்காரர் கூப்பிட்டு ஆசையாகக் கொடுத்த அப்பளத்தை தின்று கொண்டிருந்தாள். கையில் கறுப்புவண்ண மாயப்பெட்டி வைத்திருந்த தேவதூதன், ‘’அப்படியே மேலேருந்து குதிக்கற மாதிரி எடுக்கறேன் குதி” என்றான். ஆகா! கனவு கண்ட காட்சியல்லவா.. அதுவும் நாம் சொல்லாமலேயே அறிந்திருக்கிறானே!! நம்மைப் பார்த்தவுடன் அப்படி எடுக்கத் தோன்றியிருக்கிறது!’ எல்லாமும் நினைத்து குதித்தாள். அவன் எடுப்பதுபோல பாவனை செய்தான். இதுபோல் பல போலி க்ளிக்குகள். திருமணம் முடிந்து கிளம்பும் தருவாயில் சீமாட்டியின் அப்பாவி முகத்திற்கு பரிசாக நிஜமாகவே அவளையும் அவள் உடன் பிறந்தாளையும் நிற்கவைத்து கடனே என்று ஒரு ஃபோட்டோ எடுத்துவிட்டுப் போனான்‌‌.

ஃபோட்டோ வரும்வரை கற்பனையில் அது எப்படியெல்லாம் இருக்குமென்று அடிக்கடி வண்ணத்தோகை விரித்துக்கொண்டாள். சினிமாவிலும் புத்தகங்களிலும் பார்த்திருந்தவை துணை புரிந்தன.. மூன்று மாதங்கள் கழித்து ஃபோட்டோக்கள் வந்தன. வண்ணத் தோகைகள் வெளிறி துவண்டு விழுந்தன. கிளம்பும் தருவாயில் எடுத்த ஃபோட்டோவில் மட்டுமே அவளுக்கான கேமரா பார்வை இருந்தது. அதிலும் வெளிச்சம், தெளிவு, ஒழுங்கு எதுவும் இல்லை. அவன் தேவதூதனும் இல்லை என்பது புரிந்தது.

எழுபதுகளில் வளர்ந்து விட்டிருந்த புத்தி, அலையலையாய் முடி பறக்க காற்றில் மிதந்தும் மேலிருந்து தரையில் லாவகமாய் பஞ்சாக இறங்கியும் வந்தததன் பெயர் ஸ்லோ மோஷன் என்று தெரிய வைத்தது. ‘கேமரா ட்ரிக்’ என்னும் வார்த்தை அறிமுகமானது. சுற்றியிருந்தவர்கள் அடிக்கடி அவ்வார்த்தையை உபயோகப்படுத்தினார்கள். எண்பதுகளில் சீமாட்டியின் வீட்டில் மற்றொரு திருமணம். வீடியோவிற்கும் புகைப்படத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். சீமாட்டிக்குப் பெருமையாய் இருந்தது. இம்முறை கேமராக்காரர்கள் உண்மையிலேயே அவளைப் படம் பிடிக்க ஆர்வம் கொண்டிருந்தார்கள். மரியாதையாய் அழைத்தார்கள் ‘நீங்க போய் நில்லுங்க’, அப்படியே திரும்பி நில்லுங்க’ ம்ஹூம் அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அதனை மறைத்து நிற்க அரும்பாடுபட்டாள். கேமராவில் மாட்டாமல் தப்பிக்க எண்ணுகையில் ஏன் இவர்கள் நமக்குத் தெரியாமல் நம்மை நம் அசைவுகளை அழகாகப் படம் எடுக்கக்கூடாது என்ற நினைப்பு வந்தது. அதை நாமே போய் எப்படிச் சொல்வது!

வீடியோ கேசட் வந்தபோது அவள் எங்கே என்று அவளே தேடினாள். கவனமில்லா கோணங்களில் இரண்டு இடங்களில் தெரிந்தாள். வீட்டில் எல்லோரும் பார்க்கும்வரை பொறுமையாக இருந்து ஃபோட்டோ ஆல்பம் கைவந்த பின் கண்களில் மேய்ந்தாள். நான்கைந்து இடங்களில் இருந்தாலும் எதிர்பார்த்தது போல் இல்லை. கைகளுக்குக் கிடைத்த புத்தகங்களிலெல்லாம் பெண்களின் வகைவகையான ஃபோட்டோக்களை பசிதீர கண்களில் நிரப்பிக்கொண்டாள். அந்தக் காட்சிகள் உயிரோட்டமாய் பதிந்து அவளுக்குள் உலவிக்கொண்டிருந்தன. இதற்கிடையில் திருமணம் முடித்த சகோதரிகள் இருவர் வீட்டிலும் கேமரா வாங்கிவிட்டார்கள். ஒரு சகோதரி ஊருக்கு வந்தப்போது எடுத்துக்காட்டினாள். தொட்டுப் பார்த்துவிட்டு ஃபோட்டோ எடுக்க முடியுமா என்றாள். “இங்கப் பார்த்து இத அமுத்தணும்” வாய்கொள்ளாதச் சிரிப்புடன் அழுத்தினாள். அப்படி இல்லை என்று வாங்கி அவள் அமுத்திக் காட்டினாள். பச்சக் என்று எதனோடோ எதுவோ பொருந்துவது போல க்ளிக் என்று ஒரு சத்தம் கவர்ச்சியாக ஆரம்பித்து முடிந்தது. சத்தத்தினைக் கேட்டு கிளர்ச்சி உச்சமாயிற்று. தாளாமல் சீமாட்டி ஓடிப்போய் பாத்ரூமிற்குள் நின்று கன்னத்தில் கை வைத்துக்கொண்டு சிரித்தாள். அந்தச் சிரிப்பின் திரட்சி இரண்டு நாட்களாக முகத்தைவிட்டு கீழே இறங்கவில்லை.

திரும்பவும் எப்பொழுது அதை வெளியே எடுப்பார்கள் என்றிருந்தது. நல்லவேளையாக அம்மாவே ஆரம்பித்து வைத்தாள். அக்கா பேசிக்கொண்டிருக்கும் போது எல்லோரையும் சேர்த்து ஒரு ஃபோட்டோ எடு என்றாள். அதற்கு சின்ன அக்கா அப்படியே எடுக்க முடியாது ஃபிலிம் ரோல் வாங்க வேண்டும், பேட்டரி போட வேண்டும் என்றாள். எல்லாம் சேர்த்து எவ்வளவு ஆகும் என்று செலவு கணக்கு பார்க்க ஆரம்பித்து விட்டாள் அம்மா. டூர் போகும்போது ரெடி செய்து எடுத்துச் செல்வோம் என்று பேசிக்கொண்டார்கள். மூத்த அக்கா வந்தாள். வந்தவுடன் கேமராவை கேனான் கேனான் என்று பேசினாள். அப்போதுதான் அது கேமராவின் கம்பெனி பெயர் என்று சீமாட்டி தெரிந்து கொண்டாள். இவர்கள் வைத்திருப்பதன் பெயர் கோடக் என்றாள். அதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆல்பமாக்கி எடுத்து வந்திருந்தார்கள் கேமராவை எடுத்து வரவில்லை. சீமாட்டிக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.

எண்பதுகளின் இறுதிப்பகுதியில் சீமாட்டிக்கு திருமணம் நடந்து ஒன்றரை வருடங்களாயிருந்தது. அவள் திருமணத்தில் ஃபோட்டோவும் வீடியோவும் அமர்க்களப்பட்டன. திருமணத்தில் போஸ் கொடுக்கத் தெரியாமல் வெறித்தப்படி விறைத்து நின்றிருந்தாள். ஆல்பத்தில் ஓரிரு ஃபோட்டோக்களில் நன்றாகவும் மற்றவற்றில் திருமணத்தினால் நெருங்கிய புதிய உறவுகளின் கொடூர பாவனைகளில் பயந்துபட்ட உள்ளத்தின் நீட்சியை வெளிப்படுத்துவளாகவும் இருந்தாள். ஆனாலும் அவளுள்ளே உலவிக்கொண்டிருந்த உற்சாகப் பெண்கள் இறக்கவில்லை. திருமணம் முடித்த சகோதரிகளைப் போன்று நாமும் கேமரா வாங்கி விடுவோமென்று நினைத்தாள். பொருளாதார நிலை, உறவுகளின் கடும்போக்கு கைகொடுக்கவில்லை. அதற்குள் அம்மா அது சிலவருடங்களில் பழுதாகி விடும் வாங்காதே என்றாள். சகோதரிகளில் ஒருவர் வீட்டுக்கேமரா குப்பைத்தொட்டிக்குப் போனது தெரிந்து அப்படிச் சொன்னாள். குப்பைத்தொட்டிக்கு அனுப்பிய கையோடு அவர்கள் புதிதாக ஒன்றை வாங்கி விட்டிருந்தார்கள். ஆனால் அம்மா இவளது வாங்கும் எண்ணத்தை மாற்ற முயற்சித்தாள். சீமாட்டிக்கு வாங்கும் சூழலும் வாய்க்கவில்லை.

குழந்தையைத் தூக்கிக்கொண்டு கணவருடன் மூத்த அக்காளின் வீட்டிற்குப் போகும் நிலை ஏற்பட்டது. திருமணம் ஆனதிலிருந்து போகவே இல்லை ஒரு முறை போய் வர வேண்டும் என்றார்கள். மூத்தவள் ஆந்திராவில் வசித்தாள். இன்னொரு சகோதரி பக்கத்து ஊரென்பதால் திருமணமான புதிலதிலேயே ஒரு பொழுது சென்று விட்டு வந்திருந்தாள். மூத்தவளின் ஊருக்குச் சென்று சேர்ந்தவுடன் ஒருநாள் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம் என்று சீமாட்டியின் கணவன் கூறினான். சுற்றிப் பார்க்கும் செலவு மொத்தமும் அவனுடையதென அவனுக்கும் அவளுக்கும் தெரியாமல் அவர்கள் திட்டமிட்டுக் கொண்டார்கள். இரண்டாவது நாளில் இரு குடும்பத்தினரும் சுற்றிப் பார்க்கத் தயாராகினர். சீமாட்டிக்கு பாப்பா பிறந்ததிலிருந்து ஃபோட்டோ எடுக்கவில்லையென்ற எண்ணம் இருந்தது. உயிர்ப்பான படங்கள் எடுத்துவிட வேண்டும் எனும் பெரிய லட்சியமிருந்தது. நாம்தான் பெரியவர்கள் போஸ் கொடுக்கத் தெரியவில்லை, நிற்கத் தெரியவில்லை, யதார்த்தமான அழகியலில் ஃபோட்டோவில் விழ மாட்டோம் என்கிறோம். குழந்தைக்கு இதுவெல்லாம் இல்லையே, நாமே அழகாக சில தருணங்களை இயற்கை அழகோடு சேர்த்துப் பிடித்து விடுவோம்‌. குழந்தை உண்டான போது பளிங்கு மாதிரி இளஞ்சிவப்பு வாயிலிருந்து வானத்து நீர் போன்ற தூய்மையுடன் எச்சில் ஒழுகும் குழந்தையின் படத்தை வாங்கிச் சுவரில் ஒட்டியிருந்தாள்.  அதே ஈரத்துடன் பாப்பாவை எடுத்துவிட வேண்டும் என்ற கனவுடன் அப்படியே நாமும் கொஞ்சம் போஸ்களை மாற்றி விறைப்பாக இல்லாமல் இலகுவாக நின்று எடுத்துக் கொள்ளலாம் என்று ஆசையுடன் நினைத்தாள். தயங்கித் தயங்கிச் சகோதரியிடம் கேமரா எடுத்துக்கொண்டு வருமாறு கேட்க வேண்டும். தயக்கத்தின் பிருமாண்டம் களைப்படையச் செய்தது. கேட்பதற்குள் உள்நாக்கு வறண்டு விட்டது. விளையாட்டாகப் பேசுவது போல் ஆரம்பித்து எப்படியோ ஒருவழியாகக் கேட்டு விட்டாள். அவள் அவளது கணவனிடம் பேசினாள். ஆலோசனை செய்து கொஞ்சம் கொணட்டல் அலட்டல்களுக்குப் பின் எடுத்துவர ஒப்புக்கொண்டார்கள். ஃபிலிம் ரோல் வாங்கவும் பேட்டரிகள் வாங்கவும் காசு கேட்டு வாங்கிக்கொண்டார்கள். சீமாட்டியின் கணவன் கூடுதலாகக் கொடுத்துவிட்டு விழித்தான். கேட்கவும் முடியாது. அவர்களாகத் தரவும் இல்லை. சரி கேமராவிற்கான வாடகையாக இருக்கட்டும் என்று சீமாட்டி விட்டுவிட்டாள்.

இவர்கள் வீட்டிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் சார்மினார் இருந்தது. இறங்கியவுடன் சாப்பாடு முடித்து நேராகச் சார்மினார் சென்றார்கள். இஸ்லாமியக் கட்டிடக்கலையின் சிறந்த வெளிப்பாடாகக் காட்சியளித்த கட்டிடத்தைக் காணக்காண அற்புதமாயிருந்தது. விழிகளுக்கு விருந்தானது. 1591-ல் கட்டப்பட்டது என்று படித்திருக்கிறாள். இதனை அப்படியே கண்களில் நிரப்பிக்கொள்ள முடியுமா? அதுதான் கேமரா இருக்கிறதே படம் எடுப்பார்கள் என்று அக்காளின் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கையில்தான் கேமரா இருந்தது. அவன் அதைப்பற்றிய உணர்வே இல்லாமல் உறவினர்களுக்கு செலவு செய்துவிடக் கூடாது என்று பர்ஸை பாதுகாப்பதிலேயே குறியாய் இருந்தான். நமக்கு என்ன அதைப் பற்றித் தெரியும். இந்த நேரத்தில் எடுத்தால் நன்றாக இருக்காதோ என்னமோ என்று முடிந்த மட்டும் சார்மினாரை கண்களில் விழுங்கிக்கொண்டு வெளியேறினாள் சீமாட்டி.

குழந்தை அவ்வப்போது அழுது சமாதானமானாள். இரண்டு மணிநேரம் சென்றவுடன் நாம் ஊரைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கின்றோம் என்று குழந்தைக்குப் புரிந்ததோ என்னவோ சீமாட்டிக்குப் போட்டியாக அதுவும் கண்கொட்டாமல் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தது. மந்த்ராலயம், லஷ்மி நரசிம்மன் கோவில், ஒரு தனியார் அமைப்பு நடத்திய கண்காட்சி என்று சுற்றினார்கள். அக்காளின் கணவன் ஒரு இடத்திலும் கேமராவை வெளியே எடுக்கவில்லை. சீமாட்டிக்குத் துயராயிருந்தது. குழந்தை ஒரு தூக்கம் தூங்கியே எழுந்து விட்டாள். செல்லும் இடங்களில் ஏதாவது விளையாட்டுப் பொருட்கள் வாங்கினால் அக்காளின் பிள்ளைகள் பிடுங்கிக் கொண்டார்கள். அவர்கள் இடங்களைச் சுற்றிப் பார்த்து அனுபவிப்பதைக் காட்டிலும் சீமாட்டிக் கணவனை ‘செலவு செய்ய வை” ‘சீமாட்டியை வேலை வாங்கு’ என்பதை மாற்றி மாற்றி கண்களிலும் கை சாடைகளிலும் பேசுவதில் கவனமாக இருந்தனர்.

இறுதியாக நீர் அணைக்கு அருகில் இருக்கும் பெரிய பூங்காவிற்கு வந்தனர். ரம்மியமாக இருந்தது. இருட்டத் துவங்கியது. புதுப்புது பூஞ்செடிகளும் பசும் புல்தரையும் இப்போதுதான் சீமாட்டி பார்க்கிறாள். அவள் ஊரில் கனகாம்பரம், சாமந்தி, ஊசிமல்லி தவிர பூச்செடியே இல்லை. குண்டு மல்லிகைப்பூ சரம் சரமாக வைத்திருப்பவர்களைக் கண்டால் ஆசையாக இருக்கும். பணக்காரர்கள்தான் இதுவெல்லாம் வைப்பார்கள் என்று நம்பியிருந்தாள். இங்கு இத்தனைப் பூஞ்செடிகளைக் கண்டதும் மனது குதூகலித்தது.

குழந்தையைப் பார்த்தாள். அதுவும் ஆ..ஊ என்று மகிழ்ந்தது. பார்க்காத இடங்கள் எத்தனையோ இருக்கிறது ‌ ஆனாலும் இனி இந்த இடம் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான். இன்னும் சற்று நேரத்தில் நன்றாக இருட்டி விடும். குழந்தையும் சிரித்துக்கொண்டிருக்கிறாள். இரண்டடி தள்ளி அக்காளின் கணவன் நிற்கிறான். நா எழவில்லை. இருந்தாலும் ஃபோட்டோ ஆசை சுடர்ந்தது. குழந்தையை இந்த இடத்தில் எடுப்பதென்பது இந்த நேரம், இந்தத் தருணம், இந்த வயது திரும்ப வருமா.. கேட்டு விடுவோமென்று காலையிலிருந்து மூன்று முறை முந்தைய இடங்களில் ஃபோட்டோ எடுக்குமாறு கேட்டுவிட்டாள். ஒன்றும் நடக்கவில்லை. கேட்கும்போது சகோதரியின் கணவன் அடித் தொண்டையில் கமறலாகச் சத்தமிட்டு ‘ம்ம்ம் ம்ம்ம்’ என்று பெரிதாக மேலும் கீழும் தலையை ஆட்டுவான். ஆனால் கேமராவை வெளியே எடுக்க மாட்டான். இரண்டு முறை சகோதரியிடம் கேட்டுப் பார்த்தாள். அவள் “ஏங்க ந்தா இவள‌ போட்டோ எடுக்கணுமாம்” என்று கத்தியதில் அவள் கணவனுக்குப் புரிந்து விட்டிருந்தது கேமராவில் கையை வைத்து விடாதே என்னும் மறைமுகக் கட்டளை. மதியத்தில் ஒரு இடத்தில் எந்தக் காட்சி பின்புலமும் இல்லாமல் மரத்தடியில் அவர்கள் குழந்தைகளோடு சீமாட்டியின் குழந்தையையும் சேர்த்து இரண்டு ஃபோட்டோ எடுத்திருந்தார்கள். அப்போதுகூட சீமாட்டி அவள் குழந்தையை மட்டும் ஒரு ஃபோட்டோ எடுத்து தருமாறு கேட்டிருந்தாள். அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. குரல், தேய்ந்து உருண்டு, காய்ந்த மர இலைகளின் அடியில் சென்று மறைந்து விட்டது.

சீமாட்டியின் நினைவு கேமராவில் இருந்தது. நன்றாக இருட்டுவதற்குமுன் இந்த வண்ணப்பூக்களின் கூட்டத்தில் நின்று படம் பிடித்தால் நன்றாயிருக்கும். கணவனிடம் இங்கே ஃபோட்டோ எடுக்கலாம் என்று அவர்களிடம் சொல்லக் கூறினாள். அவன் சங்கோஜத்துடன் மறுத்தான். முகத்தில் வலுக்கட்டாயமாகச் சிரிப்பை வரவழைத்து அக்காளின் கணவனிடம் பேசினாள். பூக்களின் சிறப்பை, அழகை, நீண்ட புல்வெளியின் காட்சியை கூறினாள்.  அவனுடைய சிரிப்பே வராத ஜோக்ஸுக்கு சிரித்தாள். அவளை முட்டாளாகப் பாவித்து பூங்காவைத் தானே உருவாக்கியது போல் அவன் நீட்டி முழக்கிப் பேசிக்கொண்டிருந்ததைப் பொறுமையாகக் கேட்டாள். உள்ளுக்குள் தோன்றும் தயக்கத்தை ஒழித்துக்கட்ட இயலாமல் தடுமாறிக் கொண்டிருந்தவள் எச்சில் விழுங்கியபடி அவன் வாய் மூடிய நேரம் பார்த்து, “மாமா இங்க ஃபோட்டோ எடுத்தா நல்லாருக்கும்ல” என்றாள். பொறாமையின் ஒட்டுமொத்த பூஷிதையான சகோதரி ஏதோ நினைவுடன் கடாட்சப் பார்வையில் சரியென்று சம்மதித்தாள். சீமாட்டிக்கு ஆனந்தம் பெருக்கெடுத்தது. போய் குழந்தையுடன் நின்றாள். அக்காவும் அவளது குழந்தைகளும் முட்டிமோதி வந்து நின்றனர். சீமாட்டியின் கணவன் ஒரு ஓரமாக நின்று கொண்டான். அதே ஃபார்மட்டில் இரண்டு ஃபோட்டோக்கள் எடுக்கப்பட்டன. தன் இடுப்பில் இருக்கும் குழந்தையை மட்டும் தனியாக எடுக்குமாறு சீமாட்டி ஆசையூறச் சொன்னாள். ம்ம் என்று கை நீட்டிப் பேசிக்கொண்டிருந்த அவளையும் எல்லோரையும் சேர்த்து எடுத்தான். பின்புலமாக அவர்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் செயற்கை நீரூற்று இல்லை. பூஞ்செடிகளும் இல்லை. எல்லைக்கோடாக நடப்பட்டிருந்த குரோட்டன்ஸ் செடிகள் அசமஞ்சமாய் நின்றிருந்தன.

வீட்டுக்குப் போகும்முன் இளைப்பாறலாக ஒரு அகண்ட வரவேற்புத் தூணின் கீழ் அமர்ந்தார்கள். அந்த இடத்தில் ஒரு ஃபோட்டோ அந்தத் தூணின் தோற்றமின்றி எடுக்கப்பட்டது. இருட்டி விட்டது‌. தூணைச் சேர்த்து எடுத்திருந்தாலும் இருளில் சரியாக விழுந்திருக்காது. சீமாட்டியின் கணவனை அழைத்து தான் உடன் நின்று மனைவியிடம் ஒரு ஃபோட்டோ எடுக்கச் சொன்னான் அக்காளின் கணவன். பின்புலம் முழுக்க இரவின் நிறம் அப்பியிருந்தது. ஒரு ரோலிற்கு எத்தனைப் படம் பிடிக்கலாம், எத்தனை எடுத்தார்கள் எதுவும் சீமாட்டிக்குத் தெரியவில்லை. வீடு வந்து உறங்கி எழுந்ததும் சீமாட்டியின் கணவன் ஊருக்குச் செல்ல பணம் இல்லை என்று குனிந்து முனகிக் கொண்டிருந்தான்.

அவளின் அக்கா ஒரு கருமை நிற சிறிய உருளை டப்பாவை அவள் கையில் கொடுத்துச் சொன்னாள் “இந்தா இத எடுத்துட்டுப் போய் ஊர்ல கழுவிக்க, பாதி ஃபோட்டோக்கு மேல எடுக்கல”

*

அகராதி

இயற்பெயர் கவிதா. தமிழ் இலக்கியம் படித்த இவரது ஊர் திருச்சிராப்பள்ளி. ’வெட்கச்சலனம்’ என்கிற கவிதை தொகுப்பு முன்பாக வெளியாகியுள்ளது. தொடர்ந்து சிறுகதைகளையும் எழுதிவருகிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *