அன்று ஞாயிற்றுக்கிழமை. இருப்பினும் வழக்கம் போல காலை ஆறரைக்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. எழுந்து பல் துலக்கி விட்டு காலைக் கடனை முடித்து விட்டு, போனின் வைஃபை இணைப்பை ஆன் செய்தேன்.
பாலு அண்ணாவின் புலனக் குழுவில் படத்துடன் கூடிய ஒரு செய்தி கவனத்தை ஈர்த்தது. அம்முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம்.
குமார் அண்ணனுக்கு போன் செய்தேன். ‘குமாரு, எழுந்தாச்சா? .
‘இன்னும் இல்ல, ஞாயத்துக்கிழம தானே. எப்பவும் கொஞ்சம் லேட்டா தான் எந்திரிக்கறது. என்ன விஷயம், இவ்வளவு காலையில போன் பண்ற?’ என்றார். ’இல்ல, பாலு அண்ணாவோட வாட்ஸ்அப் குரூப்புல ஒரு மெசேஜ் வந்திருக்குது போட்டோவோட. அவரைப் பார்த்தா நாம ரெண்டு வாரத்துக்கு முன்ன, சாமி வீடு பூஜைக்குப் போனப்பப் பாத்த மாதிரியே இருக்குது’ என்றேன். ‘இரு பாக்கிறேன்’ என்றவர், திரும்ப அழைத்தார். ‘ஆமாப்பா, இவரு நமக்கு பங்காளி மொற ஆவுது, பேரு முருகேசன். காட்டுல தாத்தா இருப்பாரில்ல, அவரோட மூணாவது பையன். நல்லாதானப் பேசிக்கிட்டு இருந்தாரு அன்னக்கி’ என்றார். ‘ஒரு வாட்டி எதுக்கும் பாலு அண்ணாகிட்டப் பேசிட்டுக் கூப்பிடுறேன்’ என்றவர், சற்று நேரத்தில் மீண்டும் அழைத்தார்.’விஷம் குடிச்சிட்டானாம். பாடி இன்னும் சேலம் ஜிஹெச்சிலதான் இருக்குதாம். நீயும் வந்தா, ஒரு வாட்டி போயிட்டு வந்திடலாம். நாமகிரிப்பேட்டைப் போறதுன்னா நம்மால முடியாது இன்னக்கி’ என்றார்.
“சரி குமாரு, நான் ஜிஹெச் வாசல்ல நிக்கிறன். எப்படியும் இன்னும் ஒன் அவர் ஆயிடும்” என்றதும், பரவாயில்லை என கைபேசியை துண்டித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன், பாலு அண்ணன் கைபேசியில் அழைத்து, சாமி வீடு இடித்துப் புதிதாய்க் கட்ட, பூமி பூஜை, பங்காளிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார். சுமோவிலேயே செல்வது என்று முடிவு செய்து, குமார் அண்ணனை ஊத்துமலை பைபாஸ் அருகே வரச்சொல்லியிருந்தோம். காலை பத்தரை மணிக்கெல்லாம் சீராப்பள்ளியில் இருந்தோம். உள்ளூரில் இருந்து பலரும் வந்திருந்தனர். கொண்டலாம்பட்டி, அத்தனூர், வெண்ணந்தூர், தாரமங்கலம் என அனைத்து பங்காளிகளும் வந்திருந்தனர். பெரிய சாமியானாப் போடப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் சேர்கள் வரிசையாக இருந்தன. பழைய சாமி வீடு இடிக்கப்பட்டு கல் வெட்டுடன் சுவர்கள் மட்டுமிருந்தன. வீடிருந்த காலி இடத்தில், செங்கல்கள் அடுக்கப்பட்டு பூஜை ஆரம்பித்தது. நடக்கும் போதே, மரம் ஒன்று நடப்பட்டு அனைவரும் தண்ணீர் ஊற்றினர். ஹோமம் மற்றும் பூஜை முடிந்தவுடன், பாலு அண்ணன் அனைவரையும் சாப்பிட அழைத்தார்.
அப்போது தான் முருகேசனைப் பார்த்தோம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை. நெற்றி நிறைய விபூதி. தலையும் மீசையும் பால் வெள்ளை. ஒல்லியான தேகம். தலை நரைத்திருந்தாலும், வயது குறைந்தே காணப்பட்டார். குமார் தான் சென்று பேசினார். ‘கண்ணா, இவருதான் முருகேசன். வெள்ளையந்தாத்தா இருக்காரில்ல, அவருடைய மூணாவது பையன். இவருக்கு மூத்தவங்கதான், போலீசும் மாட்டு டாக்டரும்’ என அறிமுகம் செய்தார். நானும் அண்ணா எனச்சொல்லி கைகூப்பி வணங்கினேன்.
“வணக்கம். எப்பயோ பாத்தது. அப்பப்ப வந்தாதானத் தெரியும். ஏதோ இந்த மாதிரி விசேஷத்துல தான் பாக்க முடியுது. நானெல்லாம் தலைக்குச் சாயம் பூசறதில்ல. வயசு தெரிஞ்சா என்னா?’ . நான் எப்பவும் நேர்மையாதான் இருப்பன். எதுக்கு வெளி வேஷம்?’ என்றார். எங்களுக்குச் சற்றே சங்கடமாக இருந்தது. இரண்டு பேருமே டை அடித்திருந்தோம். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, சாப்பிடக் கிளம்பினோம். சாமி வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டில், காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இட்லி, தோசை, மெதுவடை, சட்னி, சாம்பார் ஐந்து பாத்திரங்களில் இருந்தது. ஒருவர் பாக்குத் தட்டை அனைவருக்கும் கொடுத்தபடியிருந்தார்.
சுவையான காலை உணவு. முருகேசன் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். அவருக்கு கையைசைத்து விட்டு, பாலு அண்ணனிடம் சொல்லி விட்டுக் கிளம்பினோம். அண்ணனை அவர் வீட்டில் இறக்கி விட்டு வீடு வந்து சேர மாலை ஆகிவிட்டது.
பத்து மணிக்கெல்லாம் சேலம் ஜிஹெச் வாசலில் நின்றிருந்தேன். பத்து நிமிடத்தில் குமார் அண்ணன் வந்து சேர்ந்தார். ‘வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா?’ என்றார். ‘இல்ல ஒரு பத்து நிமிஷம் தான் ஆச்சு’ என்றேன். இருவரும் உள்ளே நடக்க ஆரம்பித்தோம். எத்தனையோ வருடங்களுக்கு பிறகு, அரசு மருத்துவமனையில் நுழைகிறேன்.
சென்ற முறை, அம்பிகா அத்தையின் கடைசி மகன் ஞானத்தின் மனைவியைப் பார்க்க வந்திருந்தோம். அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததிருந்தது. பிரசவக் கூடம் பார்க்கவேப் போர்க்களம் போலிருந்தது. ஞானத்தின் மனைவி தனது குழந்தையுடன் தரையில் படுத்திருந்தாள். அவளைப்போலப் பல பெண்கள் பெட் இல்லாமல் தரையில் படுத்திருந்தார்கள். லேசான நாற்றம் மூக்கைத் துளைத்தது. எப்போது வெளியே வருவோம் என்றிருந்தது.
மருத்துவமனை இப்போது சற்றே நவீனமாக இருந்தது. பல புதிய கட்டிடங்கள் தென்பட்டன. ஆங்காங்கே அம்புக்குறியுடன் பலகைகள் தமிழில் ஒவ்வொரு பிரிவின் பெயரைத் தாங்கி நின்றன. கொஞ்ச தூரம் நடந்ததும், எங்கள் தோட்டத்தில் வேலை செய்த ஆறுமுகத்தின் மனைவியைப் பார்த்தோம். ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்து விட்டு நடையைத் தொடர்ந்தோம்.
குமார் அண்ணன் பேசிக் கொண்டே வந்தார். ‘கொரோனா டைம்மில எங்க பார்த்தாலும் பாடிங்க. எங்க பார்த்தாலும் ஆம்புலன்ஸ் வண்டிங்க. இடம் இல்லாததால, தரையில கூட பாடிங்க இருந்திச்சு. சொந்தக்காரர் ஒருத்தர் கூட வந்திருந்தன். அவரோட உறவினர் ஒருத்தர் கொரோனா பாதிச்சி அட்மிட் ஆகியிருந்தார். முடியாம செத்துட்டார். அவர் பாடியக் கண்டு புடிக்க மணிக்கணக்காச்சு. வீட்டுக்கு எடுத்திட்டுப் போக வுடாம இங்கேயே எரிச்சிட்டாங்க’. எனது உடம்பு நடுங்கியது.
சற்று தூரத்தில் ஒரு பலகை ‘மார்ச்சுவரி’ என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. சற்று தூரம் நடந்ததும், கறுப்பு வண்ணமடித்த இரண்டு பெரிய இரும்புக் கதவுகளையும், இளநீல வண்ணத்தில் உடை அணிந்த ஒரு காவலரையும் பார்த்தோம். பார்க்குமிடங்களிலெல்லாம் கல்லூரி மாணவர்கள் கூடியிருந்தனர். காவலர் யாரையும் கதவுக்கு அருகில் அனுமதிக்காததால், சுவரின் மீது எம்பி எம்பி உள்ளே பார்க்க முயன்று கொண்டிருந்தனர். ஒரே சத்தமாக இருந்தது. கல்லூரி பேராசிரியர்கள் போன்ற பலர் அருகிலிருந்த மரத்தினடியில் நின்றிருந்தனர். விசாரித்ததில், கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் சாலை விபத்தில் இறந்து, அவரின் உடல் பிணவறையில் இருக்கிறது. அவருக்காகவே இவ்வளவு மாணவர் கூட்டம்.
முருகேசனுக்காக யார் வந்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. குமார் அண்ணன் பாலு அண்ணாவிடம் பேசி, முருகேசன் மகன் சரவணன் நம்பர் வாங்கி, சரவணனைத் தொடர்பு கொண்டு, அக்கூட்டத்தில் எப்படியோ கண்டு பிடித்து விட்டோம்.
சரவணன் தனது நண்பர்களுடன் வந்திருந்தான். எங்கள் இருவரையும் தவிர்த்து பங்காளிகள் எவரும் வரவில்லை. அவன் கண்கள் அழுது அழுது கோவைப் பழம் போல சிவந்திருந்தது. தூக்கமின்மை அவன் கண்களில் தெரிந்தது. திடீரென ஒரு குருவியின் தலையில் பெரும் பாரத்தை வைத்தது போல அவன் உணர்ந்திருக்கக் கூடும். எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்கிறேன் என்றான். தொடர்ந்து போனில் பேசிக் கொண்டே இருந்தான்.
கதவுகளுக்கு வெளியே நடுத்தர வயதுடைய ஒரு பெண்மணி தனியாக அழுது கொண்டே இருந்தார். அழகாக இருந்தார். வயது குறைந்து இளமையாகத் தெரிந்தார். சரவணனைப் பார்த்ததும், ‘நம்மல விட்டுட்டுப் போயிட்டாரே’ எனச் சொல்லி அவனைக் கட்டிப் பிடித்து அழுதார். சரவணன் எதுவும் பேசவில்லை. ஒரு மரம் போல நின்றிருந்தான். எங்களுக்கு ஆச்சரியம், இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று.
குமார் அண்ணன் தனியாக அங்கு வந்திருந்த சரவணனின் நண்பர்களிடம் விசாரிக்க, அப்பெண்மணி சரவணனின் அம்மா என்றும், முருகேசனை விட்டுப் பிரிந்து பல வருடங்கள் ஆனது என்றும், வேறு ஒருவருடன் வாழ்கிறார் எனவும் தெரிந்து கொண்டோம்.
திடீரென காவலர் சரவணனை அழைத்து, ‘முருகேசன் சொந்தக்காரர்கள் யாரு, உள்ள போயிப் பாடிய வாங்கிங்க’ என்றார்.
நாங்களும் சரவணனுடன் உள்ளே சென்றோம். காக்கி உடையணிந்த ஒருவர் ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அக்காட்சியை இன்று நினைத்தாலும் அடிவயிறு கலங்குகிறது. அந்த அறையில், தரையில் பல உடல்கள் கிடந்தன. நாங்கள் உடனிருக்க சரவணன், தனது தந்தையின் உடலைத் தேடினான். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, கண்டு பிடித்து விட்டான். என்னால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. வெளியே ஓடி வந்து விட்டேன். வாந்தி வரும் போல இருந்தது. வயிறு புரட்டி, குடல் வாய் வழியாக வந்து விடுமோ எனப் பயம் வந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுக்க முயற்சி செய்து தோற்றேன்.
குமார் அண்ணன், சரவணன் மற்றும் அவனின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து, முருகேசனின் உடலை வெளியே எடுத்து வந்து ஒரு ஸ்டெச்சரில் வைத்தனர். ஆம்புலன்ஸ் வண்டி ரிவர்ஸில் வந்து நின்றது. சீருடை அணிந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், எங்கள் பெயர்களை எல்லாம் விசாரித்தார். பிறகு சரவணனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சரவணனிடம், முருகேசனின் ஆதார் அட்டை காப்பி மற்றும் புகைப்படம் ஆகியவற்றைக் கேட்டு வாங்கிக் கொண்டார். ‘பெரிய தொல்ல சார், ஆதார் இல்லன்னா, சுடுகாட்டு உள்ளாறயே பாடிய உட மாட்டானுங்க’ என்று அலுத்துக் கொண்டார்.
ஆம்புலன்ஸில் சரவணனும் அவன் நண்பர்களும் ஏறிக்கொள்ள, வண்டி புறப்பட்டது. அவனது சில நண்பர்களும், அவனது முன்னாள் அம்மாவும், வண்டியின் பின்னால் சில நிமிடங்கள் ஓடினர்.
வண்டி வேகமெடுத்து மறைந்தது.
நாங்கள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
இரண்டு சக்கர வாகனத்தில் ஒருவர் ஹெல்மெட்டுடன் காத்திருக்க, முருகேசனின் முன்னாள் மனைவி, வண்டியின் பின்புறம் அமர்ந்து செல்ல, நாங்கள் பார்த்தபடியே மருத்துவமனையை விட்டு வெளியே வந்தோம்.
00
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.