இந்த நூலுக்காக தக்கை விருது பெற இருக்கிறார் கவிஞர் அகச்சேரன்.

ஓவியர் மணிவண்ணனின் அழகான அட்டைப்படம். மிகச் சிறப்பான வடிவமைப்பு.

இத்தொகுப்பில், முந்தைய இரண்டு தொகுப்புகளும் (அன்பின் நடு நரம்பு, அந்த விளக்கின் ஒளி பரவாது), புதிதாக எழுதிய கவிதைகளும் அடங்கும்.

பல கவிதைகளை நண்பர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். தனிமை, நட்பு, அம்மா, காதல், குடும்ப பாரம், பேப்பர் போடும் பையன், கைவிடப் பட்ட முதிய பெண்மணி எனப் பலரும் பாடுபொருள்களாகியுள்ளனர்.

தனித்துவமான நடையும் வார்த்தைப் பிரயோகமும் மிகச் சிறப்பு.

தனிமை கவிதையில் கவிஞர் சொல்வது விளக்கு மட்டுமில்லை, தன்னையும் சேர்த்து தான். ஒளிக்கனி ஒரு அழகான சொல்லாடல்.சில வரிகள்:

‘எதிர்பார்ப்புகளின்றி

கவனித்தலின் ஏக்கங்களின்றி

நின்று கனிகிறது

அவ் ஒளிக்கனி’

மற்றும் ஒரு தனிமைக்கவிதையில், கவிஞரின் நிச்சலமான தனிமையான ஏரி, உங்களை இப்படி அழைக்கிறது, என்ன ஒரு மனம் வலிக்கும் உவமை:

‘இரும்புக் கிராதிக்கு வெளியே

பேசத் துடிக்கும்

பைத்தியத்தின் கை போல’.

பா.ராஜாவுக்கான நட்புக் கவிதையில் மற்றும் சில அழகான வரிகள்:

‘உன்னிடம் பேசவேவெனச் சொற்களை

சேமிக்கிறேன்

விளையாட்டுக்குச் சிறுமி பொறுக்கும்

சிப்பிகளென’

வே.பாபுவுக்கான கவிதையில்:

‘அறுந்து தொங்கியபடி மிகுந்தது

நடுநிசி ‘

எல்லாமே ஒரே பொழுதில் மாறக்கூடும் அல்லவா?

‘ஒரே புலர்வில் நேர்ந்து விடும்

கதி’

மற்றும் ஒரு கவிதையில், பிரிவைச் சொல்லும் போது, அவ்வளவும் இப்பிரிவுக்குத்தானா எனத் தோன்றுகிறது:

‘எவ்வளவு பிணைந்திருந்தோம்

இவ்வளவு பிரிந்திருக்கும்

நாம்’

அன்பின் நரம்பு அறுபடும்போதும் , சிலரால் இயல்பாக இருக்கவும் முடிகிறது:

‘அன்பின் நடுநரம்பை

நீ அறுக்கும்போது’

திரும்ப முடியாத காட்டின் ராஜா கவிதை, எனது விற்பனைப் பிரதிநிதி நாட்களை ஞாபகப் படுத்தியது. நானும் எனது காட்டிற்கு வார இறுதியில் சென்று வருகிறேன். ஆனால் திங்களன்று திரும்ப வருகையில் தாளாமல் அழுகிறேன்.

அக்காவின் பாசம் என்பது தம்பிக்கு அன்னையின் மடி போன்றது. கவிதையில் சில வரிகள்:

‘விடுவித்துக் கொள்ள வியலா இடத்தில் அவளும்

மீட்க முடியா தூரத்தில் நானும்’

தங்கைக்கான கவிதையில், நாம் வளராமலே இருந்திருக்கலாம் என்ற ஏக்கம் தொனிக்கிறது. வளர்ந்ததே சாபமாக ஆகிப்போனது:

‘பார்

நாம் தனித்தனியே அழுகிற அளவிற்கு

வளர்ந்து விட்டோம்’

முன்பு ஒரு சந்திப்பில், அது என்ன கற்கை என நண்பர் கேட்க, கல் போன்ற கை எனக் கவிஞர் பதிலளித்த ஞாபகம்.

அம்மா கீழே விழுந்தும் தூக்க முயலாத கைகள், கல்லால் ஆன கைகள் தானே.

வீட்டின் மரணம் கவிதையில், அரக்கு முத்திரை இட்டிருப்பதால், யாரும் நுழையவில்லை. ஒரு சருகு மட்டும் துக்கம் விசாரிக்கச் செல்கிறதாம். என்ன அழகான உவமை:

‘துக்கம் விசாரிக்க

ஒரு சருகு உள்ளே செல்கிறது

அரக்கு முத்திரையை

மதியாமல்’

சாகிப்கிரானுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கவிதையில், நினைவுகளை அழிக்க வேண்டாம் என்கிறார் கவிஞர்:

‘தயவுசெய்து

வரும் கோபத்தில் உங்கள் பழைய

குழுப் புகைப்படங்களை அழித்து விடாதீர்கள்

நினைவுகளைப் பற்றிப்பிடித்து வெளியேறிப் பழகுங்கள்’

மகளின் நினைவுகளுடன் தனிமையில் அமர்ந்திருக்கும் தாய், வீட்டினுள்ளே பாத்திர ஒலியில் மீண்டும் பார்க்கிறாள் மகளை:

‘உள்ளே

விழுந்த பாத்திரத்தின் ஒலியில்

தொங்கிய மகளைக் காண எழுகிறாள்

விரைந்து’

தொங்கிய மகள் என்ற இரண்டு வார்த்தைகள் நம்மில் ஒரு அதிர்ச்சியைக் கடத்துகின்றன.

எல்லோருமாய்ச் சேர்ந்து பொறுப்பெனும் நுகத்தடியில் பூட்டி விட்டபின் பார்த்தால், முன்னும் பின்னும் எவருமேயில்லை. நாம் அனைவரும் திருமணத்திற்குப் பின்னர் இப்படித்தான் உணர்ந்திருப்போம்:

‘பின்பக்கம் யாருமில்லை

இறக்க மாட்டாத சுமையே கனத்தது

முன்பக்கம் யாருமில்லை

அத்துவான வெளி வரை’

சாந்தி சமகால அரசியலை விமர்சனம் செய்கிறது:

‘ஆகவே இரண்டு ரூபாயாக வைத்து

விடுங்கள்

என் நெற்றியில்’

கூண்டில் அடைபட்ட பறவையாக, சுதந்திரம் இல்லாத வீட்டில், வெளியே சென்று வருவதே பெரிய விஷயம்:

‘கூரையின் ஓட்டுச்சந்து வழி

எப்போதாவது வெளியில் சென்று

வருவது

உண்டு என்

நான்’

சந்த நயத்துடன் ஒரு கவிதை:

‘செத்தவன் பிழைத்தானெனில்

திரண்டவர் சென்ற தன்பின்

ஏங்குமொரு வெட்டுகுழி’

விற்பனைப் பிரதிநிதிகளின் அன்றாட வாழ்வின் நிதர்சனம், ஒரு வெற்றியாளனின் கதை கவிதை:

‘ தோல்வியின் முக்கண் கறையை

அந்தியில் ஒற்றி விட்டு

இரவை அணைத்தபடி இல்லம் சேர்கிறான்

—–

அவனுடைய பிய்ந்த கூரையின் கீழ்

அவனுக்கென்று உண்டு

ஒரு ஓட்டை நாற்காலி’

உறவு கவிதை, நமது உறவுகளை தோலுரித்துக் காட்டுகிறது. ஆம், பாலம் தான் பற்றிக்கொண்டு இருக்கவேண்டும். கரைகளுக்கு அவசியமில்லை.

கோடிக்கண்ணாடிச் சிறுசிறகுகள் கவிதையின் முடிவில் நமக்கு அதிர்ச்சி:

‘கூட்டித் தள்ளும்

உடல்களில்

எது என்னுடையது’

மலைத் தொடர் கவிதையில் தன்னுடைய இருப்பைச் சொல்கிறார் கவிஞர்:

‘அழைத்துக்

கொண்டேயிருக்கிறது

அங்கே

தான் இருக்கிறது

எனது வால் ‘

நமக்கும் அப்படித்தானே, எங்கோ இருக்கிறது நமது வால்கள்.

சிறப்பான வாசிப்பு அனுபவம்.

ஆசிரியர்: அகச்சேரன்

பதிப்பகம்: சால்ட் பதிப்பகம்

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *