அச்சு முறியும் அளவுக்கு

மேகங்களை அடுக்கிக் கொண்ட

வானம் தினறித் தினறி ஊர்ந்து

நகர்ந்தது

அப்பக்கம் பறந்த கொக்கு கூட்டம்

கொஞ்சம் தள்ளிப் பார்த்தது

தள்ள தள்ள நகர முடியாமல்  தடுமாறியது

பலவிதங்களிலும் முயற்சித்தும்

வானம் நகராமல் இருந்தது

கொஞ்சம் மேகங்களை இறக்கினால் நகரலாம் என்றது ஒரு கொக்கு

கருப்பு நிற மேகங்களை இறக்கியதும் வானம் பெருமூச்சு

விட்டது,

சற்றே நகர்ந்ததும் காற்றும் கொக்கு கூட்டமும் தள்ளிவிட்டதில்

வெண்மேகத்தோடு வானம் நகர்ந்தது

கருப்பு மேகம் தயங்கி தயங்கி

நகர இயலாமல் அழுதது.

 ===

நீண்ட பெரும் பரப்பு

கொண்ட ஏரி

நீல வானத்தை பிரதிபலித்தது

எங்கிருந்தோ நீர் கோழிகள்

பறந்து வந்தன

நீரின் மேல் பட்டும் படாமலும்

பறந்தன

சில நீரின் மேல் சற்று

தூரம் நடந்து

சட்டென்று நீரில் மூழ்கி

வேறெங்கோ எழுந்தன

மீண்டும் மீண்டும் முழ்கி

எழுந்தன தன் உணவோடு

நீண்ட  இவ்விளையாட்டு

முடிந்தது கரையேறின

ஆங்கில எழுத்து M போல

இறகு விரித்து வெய்யிலில்

காய்ந்தன

நான் வேடிக்கை மட்டும்

பார்த்தேன்.

===

தோப்பின் முடிவில் வாய்கால்

தெளிந்த நீரோடையாக சலசலத்தது

ஒளிர்ந்தது

பட்டாம்பூச்சியொன்று வாய்காலில்

மூழ்கி எழுந்தது நிறங்கள் சாயம் போனது , வாய்கால் வண்ணநிறமானது

என்னிடம் வந்து அழுதது

பொறு என்று குவளையில் வாய்க்கால் நீரை

மொண்டு குளிப்பாட்டினேன்

நிறங்கள் கிடைக்கவில்லை

மீண்டும் கூட்டுக்குள் போய் விடு

நிறம் கிடைக்கிறதா பார்ப்போம்

இன்றுடன் முடியப்போகிறது என்றது

வானவில்லை வரவழைத்து

அதில் மூழ்க வைத்தேன்

மீண்டது நிறம், உதிர்ந்தது

இறகுகள்

===

எனது பெயர் கலிய பெருமாள்.

புனைப்பெயர் கலித்தேவன்.

தஞ்சையில் வசிக்கிறேன். மோட்டார் ரீவைண்டிங் எலக்டிரிக்கல் வேலை பார்க்கிறேன். படிப்பதும்   எழுதுவதும் செய்துவருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *