கலை – இலக்கியத்தின் கடைசி பெஞ்ச் மாணவன் நான்!-ஷாராஜ் நேர்காணல்

  • மிக இளம் வயதிலேயே நவீன இலக்கிய நுகர்வுக்குள் வந்துவிட்டவர் நீங்கள். இலேசான வாசிப்புப் பழக்கமுள்ள வாசகர்களுக்கான நாளிதழ்களின் இலவச இணைப்புகளிலும் கதைகளைத் தொடர்ந்து எழுதியிருக்கிறீர்கள். இந்த இரு வேறு எல்லைகளிலும் எப்படிப் பயணிக்கிறீர்கள்?

மற்ற நாளிதழ் இணைப்பு இதழ்கள் எதிலும் எழுதியதில்லை. தினமலர் நாளிதழின் இணைப்பு இதழான வாரமலரில் மட்டுமே, 2009 முதல் 2013 வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். இது, தினமலர் ஆசிரியர் ரமேஷ் அவர்கள், என்னிடம் தொடர்ந்து வாரமலரில் கதை எழுதும்படி கேட்டு வாங்கிப் பிரசுரித்ததாகும்.  

மிக இளம் வயதிலேயே இலக்கியத்துக்கும், பின்பு நவீன இலக்கியத்துக்கும் வந்துவிட்டாலும், எழுத்துக்கு வந்ததிலிருந்து இன்று வரை இலக்கியம், ஜனரஞ்சகம், நடுமை ஆகிய மூன்று வகை இதழ்களிலும் எழுதிவருகிறேன். இலக்கியமும், ஜனரஞ்சகமும் இரு துருவங்கள்தான். முற்றிலும் ஜனரஞ்சகமான பொழுதுபோக்குக் கதைகளை மட்டுமே எழுதக் கூடியவர்கள், சீரிய இலக்கியத் தரமான கதைகளை எழுத இயலாது. ஆனால், இலக்கியவாதிகள் விரும்பினால் ஜனரஞ்சகக் கதைகள், பொழுதுபோக்குக் கதைகள், நீதிபோதனைக் கதைகள் ஆகியவற்றை தாராளமாக எழுத இயலும். காரணம், இலக்கியவாதிகளுக்கு அந்தத் தரப்பு வாசிப்பும் குறைந்த அளவிலாவது இருக்கும் – முக்கியமாக, அவர்களின் வாசிப்புத் துவக்க காலங்களிலேனும் – என்பதுதான். ஆனால் ஜனரஞ்சகவாதிகள் இலக்கியத்தை வாசிப்பதும் இல்லை; அதில் அக்கறையோடு செயல்பட விரும்பவும் மாட்டார்கள்; அவர்களுக்குத் தேடலும் இராது; இக் காரணங்களால் அவர்களால் ஆழமாகச் செல்லவோ, இலக்கிய தரிசனங்களை அடையவோ இயலாது.

நான் துவக்கம் முதலே இவ்விரு தரப்புகளிலும் எழுதி வந்ததால் எனக்கு இந்த இரு துருவங்களிலும் செயல்படுவது இயல்பானதாகவே இருந்தது. எங்கே எது தேவையோ, அங்கே அதைச் செய்ய வேண்டும். அவ்வளவுதான்! ஆனால், ஜனரஞ்சக இதழ்களில் எழுதுவதற்காக நம் தரத்தையோ, எழுத்து முறையையோ விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது தொடர்பாக வாரமலரில் நிகழ்ந்த எனது அனுபவத்தையே சொல்கிறேன்.

வாரமலருக்காக கதைகள் கேட்கப்பட்டாலும், அவ்விதழிலோ, அது போன்ற பிற இதழ்களிலோ மற்றவர்கள் எழுதுகிற மசாலாத் தரத்தில், வெறும் பொழுதுபோக்குக் கதைகளாக என் கதைகள் இருக்கக் கூடாது; அந்த வாசகர்களுக்கும் புரிகிற, பிடிக்கிற வகையில், மித இலக்கியத் தரத்தோடு இருக்க வேண்டும் என்றும், இன்னும் பல வரையறைகளை வைத்துக்கொண்டும்தான் கதைகளை எழுதினேன். அவை வட்டார மொழிக் கதை என்னும் அடைமொழியோடு வாரமலரில் அடுத்தடுத்து வெளியாகி, கவனம் பெற்றன. முக்கியமாக எனது நையாண்டிக் கதைகளை ஆசிரியர், ஆசிரியர் குழுவினர், வாசகர்கள், சக இலக்கியப் படைப்பாளிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கொண்டாடினர். வட்டார மொழி ரசிகர்களான வாரமலர் வாசகர்கள், அந்த மொழியழகுக்காகவே இரண்டு முறை வாசித்ததாகக் கடிதங்களில் குறிப்பிட்டிருந்தனர். எனது நையாண்டிக் கதைகளைக் கொண்டாடிய ஆசிரியர், அதன் பொருட்டு என் கதைகளுக்கு ஐநூறு ரூபாய் சன்மானம் கூடுதலாக அளித்துவந்தார்.

நான் எப்போதும் எதிலும் பக்க வரையறைகள் வைத்துக்கொள்ளாமல் எழுதக் கூடியவன். அதனால் வாரமலருக்கு அனுப்பியதிலும் நீண்ட சிறுகதைகள் இருந்தன. வாரமலர் வரலாற்றில் அதுவரை இல்லாதபடி அந்தக் கதைகள் இரு வார, மூன்று வாரக் கதைகளாக வெளியாயின. சன்மானமும் இரண்டு – மூன்று கதைகளுக்கு உண்டானது தரப்பட்டது.

நவீன தமிழ் இலக்கியவாதிகள் மற்றும் பெண்ணியக் கவிஞிகள் சிலரைப் பாத்திரங்களாகக் கொண்ட, மூன்று வார நையாண்டிக் கதையான, பல்லேலக்காபாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது என்னும் கதை, வாரமலர் வட்டத்தில் மட்டுமன்றி இலக்கிய வட்டத்திலும் ஓரளவு கவனம் பெற்ற ஒன்று. ‘வாரமலரில் இப்படிப்பட்ட கதையா!’, ‘வாரமலர் வரலாற்றிலேயே இப்படிப்பட்ட கதை வெளியானதில்லை’ என்று அவ்விதழின் வாசகர் கடிதங்களில் எழுதப்பட்டிருந்தன. அதற்குப் பின் இன்று வரையிலும் என் கதைகள் போன்ற இலக்கியத் தரமானதும், காத்திரமானதுமான கதைகள் வாரமலரில் வந்ததில்லை. நாம் நமது படைப்பில், நோக்கங்களில், செயலில் உறுதியாக இருந்தால், எந்த இடத்திலும், அதற்கு உட்பட்ட வகையில் சிறந்தவற்றைச் செய்ய இயலும் என்பதற்கு இவை எடுத்துக்காட்டுகள்.

ஜனரஞ்சகம், இலக்கியம் ஆகிய இரு துருவங்களிலும் எழுதுவதற்கான படைப்புகள் என்னிடம் உள்ளன; அவற்றை எழுத நான் தயாராக உள்ளேன். பணம் இன்னொரு முக்கிய விஷயம். அரிதான ஒன்றோ இரண்டோ இலக்கிய இதழ்களில் மட்டுமே குறைவான சன்மானம் கிடைக்கிறது. மற்ற இலக்கிய இதழ்களில் சன்மானம் கிடையாது; அவற்றால் சன்மானம் தரவும் இயலாது. ஜனரஞ்சக இதழ்களில் சன்மானம் கிடைக்கும். பிழைப்புக்கு வேறு வேலையோ, தொழிலோ இல்லாத எனக்கு, எனது எழுத்தின் மூலமாக எங்காவது பணம் கிடைத்தாக வேண்டிய தேவை உள்ளது. அதற்காகவும்தான் ஜனரஞ்சக இதழ்களில் எழுதுகிறேன். சிறுகதை, நாவல் போட்டிகளில் கலந்துகொள்வது கூட பணத் தேவைக்காகத்தான்.

மற்றபடி, எனக்குத் திருப்தி தரக்கூடிய எழுத்துகள் என்றால் – ஜனரஞ்சக இதழோ, இலக்கிய இதழோ – இலக்கியத் தரத்தோடு உள்ள எனது கதைகள் மட்டுமே.

  • நீங்கள் வியந்து பார்க்கும் எழுத்தாளுமை யார்? 

ஒருவர் அல்ல. பலர் உள்ளனர். 

உலக இலக்கியத்தில் தல்ஸ்தோய், தாஸ்தாயெவ்ஸ்கி, யுவான் ருல்ஃபோ, ஹாருகி முரகாமி, பௌலோ கொய்லோ. இந்திய இலக்கியத்தில் சதத் ஹஸன் மாண்ட்டோ. மலையாள இலக்கியத்தில் வைக்கம் முகம்மது பஷீர், எம்.ட்டி.வாசுதேவன் நாயர், ஓ.வி.விஜயன். தமிழ் இலக்கியத்தில் பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன்.

  • உங்கள் எழுத்திற்கு ஆதர்ஷம் என்று யாரைச் சொல்வீர்கள்?

புதுமைப்பித்தன், பாரதி.

இதுவரை வெளிவந்திருக்கும் உங்கள் நூல்கள் பற்றிக் கூறுங்களேன்!.

அச்சில் வெளியான நூல்கள்:  

நாவல்கள்:

பெருந்தொற்று (2021)

வானவில் நிலையம் (2022)

வள்ளிநாயகம் காம்பௌண்ட் ((2022)

நீர்க்கொல்லி (2023)

சிறுகதைத் தொகுப்புகள்:

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு (2004)   

வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது (2016)

காலனியின் நான்காவது வீதி (2021)

வெயில் மெல்லத் தாழும் (2021)

பக்கத்து வீடு ஒளியாண்டுகளுக்கு அப்பால் (2022)

கவிதைத் தொகுப்பு:

கௌதம புத்தன் கசாப்புக் கடை (2017)

மொழிபெயர்ப்பு:

அக்னி மற்றும் பிற கதைகள் – மலையாளப் பெண்ணிய எழுத்தாளர் ஸிதாரா.எஸ் அவர்களின் ‘அக்னியும் கதகளும்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பு (2006)

இணையத்தில் வெளியான நூல்கள்:

வானவில் நிலையம் – நாவல் (2021) – பிஞ்ச் செயலி.

கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், உலக சிறுவர் கதைகள், ஆன்மிகக் கதைகள், சமூக ஊடகப் பதிவுத் தொகுப்புகள் என பல மின்னூல்கள் அமேஸான் கிண்டிலில் வெளியிடப்பட்டுள்ளன.

  • நீங்கள், மார்க்சிய அறிஞர் கோவை ஞானியோடு பழகியவர். உங்களுக்கு மார்க்சியம் கற்றுத் தர அவர் விரும்பியிருந்தும், ஒரு குறிப்பிட்ட காரணத்தால் அதைச் செய்யவில்லை என நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் மார்க்சியத்திலிருந்து விலகியிருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

மார்க்சியம் என்றால் என்ன என்பதே எனக்குத் தெரியாது. பிறகல்லவா நான் அதிலிருந்து விலகியிருக்கிறேனா, இல்லையா என்பது பற்றி சொல்ல முடியும்?

கோவை ஞானியோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது, அவரது நிகழ் இதழில் கதை, கவிதை, நூல் விமர்சனம் ஆகியவற்றை எழுதியது, அவரது களம் கூட்டங்களில் பங்கேற்றது யாவும் இலக்கிய அடிப்படையில்தான்.

தற்போது கேரளக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ள நண்பர் ந.மனோகரனும் நானும், தொண்ணூறுகளில் அவ்வப்போது ஞானியை சந்திப்போம். அவர் தனித்து அவரைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு சமயத்தில் ஞானி அவரிடம், “உங்களுக்கும் ஷாராஜுக்கும் மார்க்சியம் கற்றுக் கொடுக்கலாம் என விரும்பியிருந்தேன். ஆனால், நீங்கள் இருவரும் தான்தோன்றிகளாக இருக்கிறீர்களே…!” என்று சொல்லிச் சிரித்துவிட்டு, “தான்தோன்றி என்று தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. தானாகத் தோன்றியவர்கள், சுயம்பு என்ற அர்த்தத்தில்தான் சொல்கிறேன்” என்றாராம். மனோகரன் இதை என்னிடம் தெரிவித்தபோது, “அவர் தாந்தோணிகள் என்ற சாதாரண அர்த்தத்திலேயே அதைச் சொன்னாலும் என்னைப் பொறுத்தவரை அது தவறில்லை. சித்தம் போக்கு, சிவன் போக்கு என உள்ள எனக்கு அந்த அர்த்தம்தான் மிகப் பொருத்தம்” என்றேன்.

  • கேரள எல்லையில் நீண்ட காலம் வசித்தவர் என்ற முறையில் கேரள இலக்கியச் சூழலும் தமிழ் இலக்கியச் சூழலும் பற்றிக் கூறுங்களேன்.

கொங்கு மண்டலமாக உள்ள எல்லைப்புறக் கேரளத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தவன் நான். கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறேன். பிறப்பால் மலையாளியும் கூட.  ஆயினும், எனக்கு மலையாளம் சரிவரப் பேசக் கூட தெரியாது. எழுதுவதற்கு சுத்தமாகவே தெரியாது. நீண்ட காலத்துக்குப் பிறகே மலையாளம் வாசிக்கக் கற்றுக்கொண்டு, ஒரு நூலை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கவும் செய்தேன். எனது நாட்டம், தேவை, இயக்கம் யாவும் தமிழ் இலக்கியம் சார்ந்தே இருந்தன. அதனால் மலையாள இலக்கியத்தின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்று சொல்வதே சரியாக இருக்கும். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான நூல்கள், உதிரிப் படைப்புகள் மட்டுமே மலையாளத்தில் நேரடியாக வாசித்திருப்பேன். மற்றபடி மலையாள இலக்கியம் என வாசித்தது தமிழ் மொழிபெயர்ப்புகள் மூலம்தான்.

மலையாளத்தில் மட்டுமல்ல; தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம் யாவற்றிலும் எனக்கு வாசிப்பு மிக மிகக் குறைவு. இலக்கியச் சூழலில் எனது பழக்கமும், புழக்கமும் அப்படியே. அதனால் நீங்கள் கேட்ட இரு மொழி அல்லது இரு மாநில இலக்கியச் சூழல்கள், அவற்றுக்கு இடையிலான ஒப்பீடு ஆகியவை பற்றி என்னால் எதுவும் சொல்ல இயலாது.

ஆனால், தமிழ் இலக்கியச் சூழலில் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வருபவன் என்ற முறையில், அதன் நிலவரங்கள் ஓரளவு தெரியும். அவை நம் இலக்கிய உலகினர் அனைவரும் அறியக் கூடியவையே.

மலையாளத்தைப் பொறுத்தவரை, கடந்த இரு பத்தாண்டுகளில், இலக்கியத்தைக் காட்டிலும் என்னைக் கவர்ந்தவை நடுமைத் திரைப்படங்கள்தான். உலக சினிமா என பொதுவாக சொல்லப்படுகிற, சர்வதேச கலைப் படங்களையும், நடுமைப் படங்களையும் ரசிக்கக் கூடிய தமிழக ரசிகர்கள் மத்தியிலும் சமகால மலையாள நடுமைப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திய அளவிலும் அவை கூடுதல் கவனம் பெறுகின்றன. முந்தைய காலகட்டத்தில் கலைப் படங்களுக்கும், எதார்த்தத்துக்கும் இந்திய அளவில் முக்கிய இடம் பெற்றிருந்த கேரளத் திரைப்படங்கள், சமகாலத்தில் அடுத்த கட்டப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன. பிரியாணி, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். தமிழிலும் வெகு சிறப்பான நடுமைத் திரைப்படங்கள் பல வந்துள்ளன, இப்போதும் வந்துகொண்டிருக்கின்றன என்றாலும், மேற்கூறிய மலையாளப் படங்கள் போன்ற படங்கள் தமிழில் இன்னும் சாத்தியமாகவில்லை. பிரியாணி படத்தை தமிழில் வெளியிட இயலாது என்பது மட்டுமல்ல; நினைத்துக் கூட பார்க்க இயலாது.

ஜல்லிக்கட்டு, சுருளி ஆகியவற்றின் இயக்குனரான லிஜோ ஜோஸ் பெலிசேரி, ஆமென், ஈ.மா.யௌ., அங்கமாலி டைரிஸ் உள்ளிட்ட மற்ற சில சிறந்த படங்களையும் இயக்கியவர். கடந்த இருபது ஆண்டுகளில் என்னைக் கவர்ந்த ஃபேவரிட் இயக்குநர் அவர்தான்.

  • திரைப்படம் என்றதும் ஞாபகம் வருகிறது. உங்களின் கதைகளில் நிலக்காட்சிகளும் சித்தரிப்புகளும் திரைப்படம் பார்ப்பது போல் இருக்கும். அது எப்படி? உங்களுக்குத் திரைக்கதை எழுதும் எண்ணம் உண்டா?

எனது கதைகளில் சித்தரிப்பு, படம் பார்ப்பது போல் இருப்பதாக துவக்க காலத்திலிருந்தே பலரும் சொல்லியிருக்கின்றனர். அப்போது நான் இதைத் திட்டமிட்டு செய்யவில்லை. ஓவியன் என்பதால் காட்சிகளைச் சித்தரிக்கும்போது இயல்பாகவே கட்புல அழகியலோடு சித்தரிப்பேன். கதையைச் சிந்திக்கும்போது இடம், காலம், சூழல், பொழுது, கதாபாத்திரங்கள் பற்றிய விவரணைகள் உட்பட காட்சிகள் ஒவ்வொன்றும் எனக்குள்ளே காணொளியில் பார்ப்பது போலத்தான் கற்பனையில் ஓடியிருக்கும். அதை அப்படியே எழுத்தில் கொண்டுவர முயற்சிப்பேன்.

எங்கள் ஊர் நிலக்காட்சிகள், இடங்கள், மனிதர்கள், பொருட்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கும்போது, அவை நிஜத்தின் பிரதிபலிப்புகளாகவும், நீண்ட காலம் பார்த்துப் பழக்கப்பட்டதாகவும் இருப்பதால் சித்தரிப்புகள் துல்லியமாகவும், நுட்பமாகவும் அமைகின்றன.

மற்றபடி, எனக்கு திரைப்படங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு. கதாசிரியராக ஆன துவக்க காலத்தில் திரைப்பட இயக்குநராக ஆக வேண்டும் என்ற திட்டமும் கொண்டிருந்தேன். உதவி இயக்குநர்கள் படும் பாட்டை அறிந்த பின், வேண்டாம் என விட்டுவிட்டேன். வறுமையும், பசி பட்டினியும் எனக்கு சிரமமல்ல. நான் வறுமையின் தத்துப்பிள்ளை. ஆனால், உதவி இயக்குநர்கள் பட நேர்கிற அவமானங்கள் என்னால் பொறுக்க இயலாதது. எனது குணாதிசியத்துக்கு அது ஒத்துவராது என்று விட்டுவிட்டேன்.

ஆனால், சர்வதேச சீரிய திரைப்படங்களுக்கு நான் எப்போதும் ரசிகன். வாய்க்கும்போதெல்லாம் அத்தகைய படங்களைப் பார்ப்பேன். நல்ல வணிகத் திரைப்படங்களையும் பார்ப்பதுண்டு. திரைக்கதையில் எனக்கு மிகுந்த ஈடுபாடு. அது தொடர்பான விஷயங்கள் கொஞ்சம் தெரியும். தொடர்ந்து சிறந்த திரைக்கதைகள் கொண்ட படங்களைப் பார்க்கவும், திரைக்கதை விற்பன்னர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும் செய்துகொண்டிருக்கிறேன். திரைக் கதை எழுத இயலும் என்றாலும், இதுவரை அதற்காக முயற்சித்ததில்லை. ஆனால், திரைக்கதை நுட்பங்கள் பலவற்றை எனது சிறுகதைகளிலும் நாவல்களிலும் தொடர்ந்து பயன்படுத்திவருகிறேன்.

தமிழ் திரைக்கதை வட்டங்களில் ஒன் லைன் என்பது மிகப் பிரபலம். ஆங்கிலத்தில் அதை Logline என்பார்கள். திரைப்படத்தின் கதையை ஒரே வாக்கியத்தில் சொல்வதுதான் அது. நாவல் கலையில் இது Premise என்று சொல்லப்படும்.

நான் சாதாரண சிறுகதைகளுக்கு ஒன் லைன் அல்லது Logline யோசிப்பதில்லை. அது தேவையும் இல்லை. ஆனால், சிறுகதைப் போட்டிகளுக்கு லாக் லைன் தீர்மானித்துக்கொண்டுதான் முழுக் கதையை உருவாக்குவேன். காரணம், இப்படிச் செய்யும்போது கதை வலுவானதா இல்லையா என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். வெற்றி பெறும் வாய்ப்புள்ள கதைக் கருவை அமைப்பதற்கு எளிதாகவும் இருக்கும்.

எனது நாவல்கள் அனைத்துக்கும் இப்படி ஒன் லைன் அல்லது ப்ரிமைஸ் எழுதிக்கொண்டுதான் நாவல் கதைகளை உருவாக்கினேன். 

  • திரைப்படங்களுக்கு கதை விவாதம் செய்வது போல நீங்கள் உங்களின் நாவல்களுக்கு கதை விவாதம் செய்வதும் உண்டு அல்லவா! இது பற்றி நாவல் முன்னுரைகள், உங்களின் கட்டுரைகள், முகநூல் பதிவுகள் ஆகியவற்றிலும் எழுதிவருகிறீர்கள். நாவல்களுக்கு கதை விவாதம் தேவையா?

பொதுவாக பெரும்பாலான நாவலாசிரியர்களும் இப்படி கதை விவாதத்தில் ஈடுபடுவதில்லை. பலருக்கும் அது அவசியமில்லை. ஆனால், ஓரிரு சிறந்த தமிழ் இலக்கிய நாவலாசிரியர்களும், தேவைப்பட்டால் தங்கள் நண்பர்கள் அல்லது தாம் மதிக்கும் இலக்கியவாதிகளிடம் தாம் எழுதிய நாவல் பிரதிகளைக் கொடுத்து கருத்து, ஆலோசனை கேட்டது உண்டு. எழுதுவதற்கு முன்பு கதை விவாதம் செய்வது, எழுதிய பிரதியைக் கொடுத்து கருத்து, ஆலோசனை கேட்பது ஆகிய இரண்டு முறைகளுமே நாவலைச் செம்மைப்படுத்தக் கூடியவை.

சிறுகதை, குறுநாவல் ஆகியவற்றுக்கு நான் கதை விவாதம் செய்வதில்லை; எழுதிய பிரதியைக் கொடுத்து கருத்து கேட்பதும் இல்லை. அந்தக் கதை வடிவங்களில் நீண்ட கால அனுபவம் உள்ளதால் அதற்கு அவசியமும் ஏற்படுவதில்லை. மேலும், பக்க அளவில் அவை சிறியவை என்பதால் அவற்றின் நிறை – குறைகள், பலம் – பலவீனங்கள், பிசகுகள் – தவறுகள் முதலானவை எனக்கே தெரிந்துவிடும். இரண்டோ மூன்றோ ட்ராஃப்ட்டுகள் எழுதினாலும் அதிக உழைப்போ, காலமோ விரயமாகாது.

ஆனால், நாவல் அதிக பக்கங்கள் பிடிக்கக்கூடியது, கதையில் பின்னல்கள், அடுக்குகள், சிக்கல்கள் ஆகியவையும் கூடுதலாக இருக்கும். அதனால் அவற்றில் ஏற்படக்கூடிய குறைகள், பலவீனங்கள், பிசகுகள் – தவறுகள் ஆகியவை படைப்பாளியின் கண்களுக்குப் படாமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகம். எனவே, நூற்றுக் கணக்கான பக்கங்கள் எழுதி வீணாக நேரலாம். இதைத் தவிர்க்கவே நாவல்களுக்கு கதை விவாதத்தை அவசியம் மேற்கொள்கிறேன். தேர்ந்த வாசகர் / கதை கேட்பவர், விமர்சகர் ஆகியோரின் பார்வையில் குறைகள், பலவீனங்கள், தவறுகள் ஆகியவை எளிதாகத் தென்பட்டுவிடும். அவை பற்றி வாத – விவாதங்களில் ஈடுபடவும், மாற்றுக் கருத்துகளைச் சொல்லவும் வாய்ப்பு உண்டாகும். அதன் மூலம் கதையைச் செம்மைப்படுத்திக்கொள்ளலாம்.

நாவலை எழுதி முடித்த பிறகு வாசிக்கக் கொடுத்து திருத்தம், செம்மைப்படுத்தல் செய்வதை விட, எழுதும் முன்பு கதை விவாதத்தில் ஈடுபடுவதன் மூலம் முன்னதாகவே கதையின் குறைகள், பலவீனங்கள் ஆகியவற்றை நீக்கி.  வலுவாக்கிக்கொள்ள முடிகிறது.

  • எழுத்து அமைப்பின் திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு பெற்ற நீர்க்கொல்லி நாவலையும் இப்படித்தான் எழுதினீர்களா?

ஆம்! அதையும் ப்ரிமைஸ், சினாப்சிஸ் எழுதி, கதை விவாதம் செய்த பிறகே எழுதினேன். அது மட்டுமல்ல. அந்த நாவல் எழுத்தாக்கத்திலும் திரைக் கதை உத்தியை – நாவல் கட்டமைப்பு கெடாத வகையில் – பயன்படுத்தியிருக்கிறேன். நேரடியான திரைக்கதை வடிவில் இருக்காது. ஆனால், உங்களைப் போன்ற நுட்பமான வாசகர்களுக்கு நாவலை வாசிக்கும்போது திரைக்கதை சாயலும், சிற்சில இடங்களிலாவது திரைப்படம் பார்க்கிற உணர்வும் வரும்.

  • நீர்க்கொல்லி நாவல் – பரிசளிப்பு மற்றும் வெளியீட்டு விழாவில் பவா செல்லத்துரை பேசிய பேச்சுகள் பலத்த சலசலப்பையும், எதிர்வினைகளையும் உண்டாக்கியிருந்தனவே! சமீப காலமாக எந்த இலக்கிய விழாவிலும் இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டதில்லை. அவர் அப்படி என்ன பேசினார்? சலசலப்புக்கான காரணம் என்ன? ஏற்புரையில் நீங்கள் ஏன் அவருக்கு பதில் அளிக்கவில்லை?

கோலாகலமாகவும், சிறப்பாகவும் நடைபெற்ற அந்த விழாவில் பவா செல்லத்துரையின் பேச்சு, அனைவருக்கும் கனத்த அதிருப்தியை உண்டாக்கும்படியாக அமைந்திருந்தது. அந்த வெளியீட்டு விழாவில், பரிசுக்குரிய நாவல் பற்றிப் பேசுவது என்பதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பு. அதன் தேவைகளுக்கு மாறாகவும், வரையறைகளை மீறியும் அவர் பேசினார். நாவல் குறித்தும், அதற்குப் பரிசளிக்கப்பட்டது குறித்தும் அவர் பேசிய பேச்சுகள் பல விதங்களிலும் தவறான கண்ணோட்டத்தில் இருந்தன. இது தவிர, வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் தொடர்பாக, பவா செல்லத்துரை சொன்ன கூற்றும் தவறானது என்று தெரிய வருகிறது. வைரமுத்து அவர்கள் தனது சிறப்புரையில் இவற்றை விளக்கி, பவாவுக்கு எதிர்வினையாற்றியிருந்தார். இவை யாவுமே அவரின் கவனக் குறைவு, மேம்போக்கு, பொறுப்பின்மை ஆகியவற்றைக் காட்டுகின்றன என்பது வெளிப்படை. அதற்கும் அப்பால் அவருக்கு உள்நோக்கங்களோ, காழ்ப்போ இருக்கக்கூடும் என்பதற்கும் இடம் இருக்கிறது. 

பவா செல்லத்துரை, நீர்க்கொல்லி நாவல் பற்றிக் கூறிய முக்கிய கருத்துகளின் சாராம்சங்கள் இவை.

1. இந்த நாவலில் தரவுகள் நிறைய உள்ளன. இவற்றை பி.ஹெச்.டி. ஆய்வு மாணவர்கள் கூட செய்துவிட முடியும். அந்தத் தரவுகள் கதைத்தன்மையாக / படைப்பாக ஆகவில்லை.

2. இந்த நாவலின் பல பகுதிகளை நான் மிகுந்த சிரமப்பட்டுத்தான் வாசித்தேன்.

3.  இந்த நாவலை தமிழின் சிறந்த நாவல் என்று சொல்ல இயலாது.

4. இந்த நாவலுக்குப் பரிசு கொடுக்கப்பட்டதன் மூலம் இது மற்ற இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டு செல்லும். அங்கே இதை வாசிப்பவர்கள், தமிழில் சிறந்த நாவல் என்பது இந்த அளவுக்குத்தான் இருக்கிறது என்று தவறாகக் கருத வாய்ப்புள்ளது.

இந்தக் கருத்துகள் அனைத்துக்கும் நான் ஏற்புரையில் பதில் சொல்லியிருக்கலாம். ஆனால், அது தேவையற்றது என்று தவிர்த்துவிட்டேன். அதற்கு இரு முக்கிய காரணங்கள். 1. வெளியீட்டு விழா என்பதன் தேவைக்கும், எல்லைக்கும் மாறாக அவர்தான் நடந்துகொள்கிறார் என்றால், அதற்கு பதில் சொல்கிறேன் என்று நானும் பேசி, சர்ச்சையைக் கிளப்ப வேண்டாமே என்பது. 2. அவர் குறையாகச் சொன்ன நாவலின் அம்சங்கள் குறையானவை அல்ல என்றோ, அந்த நாவலில் வடிவத்தைக் காட்டிலும் உள்ளடக்கமே முக்கியம், அதற்காகவே பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றோ நடுவர்கள் மற்றும் எழுத்து அறக்கட்டளையின் அறங்காவலர்கள் யாரேனும் சொன்னால் நன்றாயிருக்கும். நானே அதைச் சொன்னால், என் படைப்புக்கு நானே உயர் மதிப்பெண் இடுவதாக ஆகிவிடும் அல்லவா!

ஆனால், நான் மட்டுமல்ல; அங்கிருந்த யாருமே எதிர்பாராத அளவுக்கு வைரமுத்து அவர்கள், அறங்காவலர்களில் ஒருவர் என்ற முறையிலும், அந்த நாவலை முழுதாக வாசித்தவர் என்ற முறையிலும், பவாவுக்கு தக்க பதில்களை, விரிவானதும் ஆழமானதுமான முறையில் சொல்லிவிட்டார்.

பவா செல்லத்துரையின் கூற்றில் இரண்டாவது மற்றும் மூன்றாவது புள்ளிகளாக நான் சுட்டியுள்ளவற்றுக்கு அவர் அளித்த பதிலின் சாராம்சம் பின்வருமாறு:

இந்த நீர்க்கொல்லியை வாசிக்கிறபோது, ‘நான் கஷ்டப்பட்டுக் கடந்துபோனேன்’ என்று சொன்னீர்கள்.

ஏனென்றால், இவர்களெல்லாம் நீண்ட வாசகர்கள். ஆழ்ந்த வாசகர்கள். தமிழின் உரைநடையை, நேற்றிலிருந்து – நாளை வருவது வரை வாசித்தவர்கள். அதனால் இந்த நாவல் அவர்களின் உயரத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எழுத்து அறக்கட்டளையின் மீது யாரும் குறை சொல்லிவிட முடியாது. எங்களுக்கு வந்த நாவல்களில் சிறந்த நாவல் என்றுதான் அறிவித்திருக்கிறோம்.

அதனால் செல்லத்துரை, நீங்கள் என்னைக் கடந்துபோகும்போது கேட்டேன்: “நீங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டீர்களா?”.

“இல்லை” என்றார்.

அதுதான்! அதுதான்!!

உங்களைப் போன்றவர்கள் கலந்துகொண்டிருந்தால், அல்லது எழுதுங்கள் என்று நீங்கள் எழுத்து வட்டாரத்துக்கு தகவல் அனுப்பியிருந்தால், ஒரு சின்ன சமிக்ஞை கொடுத்திருந்தால், அத்தனை பேரும் எழுதியிருப்பார்கள். இதனினும் சிறந்த நாவலுக்குப் பரிசு கிட்டியிருக்கலாம். ஆகவே பவா,… அடுத்த முறை எழுத்து அறக்கட்டளையினுடைய போட்டி அறிவிக்கப்படுகிறபோது, தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கெல்லாம் ஒரு தொலைபேசி அடியுங்கள். இரண்டு லட்ச ரூபாய், உங்கள் நல்ல நாவலுக்குப் பரிசு. ஜாதியில்லை; மதம் இல்லை; ஆண் – பெண் என்ற பால் வேறுபாடு இல்லை; எதுவும் இல்லை. எழுத்து, எழுத்தாக இருந்தால் சிதம்பரம் கௌரவிப்பார். 

இந்த நாவலுக்கு (பரிசு) கொடுக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். காரணம், உள்ளடக்கம்!

வடிவம் ரெண்டாம் பட்சம். மொழி ரெண்டாம் பட்சம். கவிதை பூசிய உரை நடை ரெண்டாம் பட்சம். எது முதல் பட்சம் என்றால்,… ஒரு அழகான உள்ளடக்கம்!

சீமைக் கருவேல மரம்தான், வேலிகாத்தான் செடி என்று சொல்லக்கூடிய செடிதான், இந்த சீமைக் கருவேலங் காடுகள்தான், தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்க்கொல்லி என்பதைக் கண்டறிந்து அவர் (ஷாராஜ்) சொல்லியிருக்கிறார்.

     இதைக் கூறிய வைரமுத்து, நாவலின் மையக் கதையை சுருக்கமாகக் கூறியதோடு, அதன் உச்சம் என்ன, அதன் சிறப்புகள் என்ன என்பதையும் விளக்கினார்.

     அதைக் கேட்ட பார்வையாளர்களுக்கு, பவா செல்லத்துரையின் பேச்சு எப்படிப்பட்டது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருக்கும்.

விழாவில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்ட, சென்னையில் வசிப்பவர்களும், திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும், எனது சக எழுத்தாள நண்பர்களுமான சரசுராம், பொன் சுதா, காந்தி ஆகியோர் பவா செல்லத்துரையின் இந்தப் பேச்சு பற்றி, விழா முடிந்ததிலிருந்து வெகு நேரம் வரை அதிருப்தியும், எதிர்ப்பும் கொண்ட மன நிலையில் என்னிடம் பேசிக்கொண்டிருந்தனர். பவா செல்லத்துரை, விமர்சனக் கூட்டத்திலோ, திறனாய்வுக் கூட்டத்திலோ அப்படிப் பேசியிருந்தால் சரி; வெளியியீட்டு விழாவில் அப்படிப் பேசுவது முறையல்ல என்பதே என் நண்பர்களின் கருத்து. நானும் அதை ஆமோதிக்கிறேன். யாருடைய நூலாயினும், பேசுகிறவர் யாராயினும், அதுதானே முறை!

இது ஒருபுறம் இருக்க, விழா முடிந்த பின், என்னோடு ஒளிப்படம் எடுத்துக்கொள்ள விரும்பிய நண்பர்கள் மற்றும் வாசக – வாசகிகளுடன் நின்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டும், நூலை வாங்கி வந்து கையெழுத்து கேட்டவர்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக்கொண்டும், அரங்கத்துக்கு முன்பாக நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டும் இருந்தேன். அப்போது அங்கே தன் சகாக்களுடன் இருந்த பவா செல்லத்துரை என்னிடம் வந்து, நீர்க்கொல்லி நாவல் பற்றி தான் பேசிய பேச்சுகளால் நான் சங்கடப்பட்டிருக்கக் கூடும் என்று கருதியவர் போலவும், என்னை சமாதானப்படுத்த முற்படுவது போலவும் பேச்சுக் கொடுத்தார்.

நான், “நீங்கள் பேசிய மற்ற விஷயங்கள் பற்றி எனக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இரண்டு புள்ளிகளுக்கு பதில் சொல்ல விரும்புகிறேன்” என்றுவிட்டு அவற்றைச் சொன்னேன்.

1.    நீர்க்கொல்லி நாவல், டாக்கு ஃபிக்சன் எனப்படும் ஆவணப் புனைவு வகை நாவல். ஆகவே அது கதைத்தன்மை குறைவாகவும், ஆவணத்தன்மையோடும் அமைந்திருக்கிறது. எனது பெருந்தொற்று நாவலும், சில சிறுகதைகளும் இதே வகையில் அமைந்தவைதான்.

2.    மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும்போது, அங்கெல்லாம் இந்த நாவலை வைத்து தமிழ் நாவலின் தரம் இவ்வளவுதான் என்று எண்ணிவிடக் கூடிய வாய்ப்பு உள்ளது என்பது சாஹித்ய அகாடமி விருதுக்குத்தான் பொருந்தும். அவர்கள் அவ்வாறு மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பார்கள். ஆனால், திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கிய விருது பெறும் நாவல்களை அப்படி மற்ற மொழிகளில் பெயர்த்து வெளியிடுவது இல்லை. அப்படி இருக்கும்போது அதை இந்த நாவலுக்கு சொல்வது பொருத்தமற்றது.

இதைச் சொன்னதும் பவா செல்லத்துரை, “அது உங்களுக்காக சொல்லப்பட்டதல்ல” என்றார்.

அப்படி என்றால், அது யாருக்காக சொல்லப்பட்டது? யாருக்காக சொல்லப்பட்டதோ, எதற்காக சொல்லப்பட்டதோ, அதைச் சொல்ல வேண்டியதுதானே! எதை, எங்கே, எப்படி சொல்ல வேண்டுமோ, அதை அங்கே, அப்படி சொல்வதுதானே முறை! எதையெதையோ நீர்க்கொல்லி நாவல் விழாவில், அதுவும் வெளியீட்டு விழாவில் ஏன் சொல்ல வேண்டும்?

‘எங்கயோ போற மாரியாத்தா – எம் மேல வந்து ஏறாத்தா’ என்கிற கொங்குப் பழமொழிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.

பவா செல்லத்துரையின் பேச்சில் எனக்கு கிஞ்சித்தும் பாதிப்பு இல்லை. அவரது புரிதலில் தவறுகள் உள்ளன என்பதை சுட்டிக் காட்ட மட்டுமே விரும்பினேன். மேடையில், ஏற்புரையின்போதே அதைச் செய்திருக்கலாம். ஆனால், அது வேண்டாம் என்று விட்டுவிட்டேன். விழா முடிந்த பின்நும் நானாகப் போய் அவரிடம் விளக்கம் தெரிவிக்கவில்லை. அவராக வந்து, தனது பேச்சை நியாயப்படுத்த முற்பட்டபோது, அவரது தவறுகளை சுட்டிக்ம் காட்டினேன்; அவ்வளவுதான்.

மறு நாள் சரசுராம் தனது முகநூல் பக்கத்தில் பவாவின் அடாத செய்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதனால் நண்பர்கள் வட்டத்தில் என்னிடம் என்ன, ஏது என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். எனவே, நானும் இது குறித்த விபரங்களை முகநூலில் பதிவிட வேண்டியதாகிவிட்டது. அதற்கு வந்த பின்னூட்டங்களில் பலரும் தெரிவித்த கருத்துகளும், நேர்ப் பேச்சில் சிலர் கூறிய தகவல்களும், பவா செல்லத்துரை பற்றிய பற்பல விஷயங்களை அம்பலப்படுத்தின.

பவா எங்கே இலக்கிய விழாக்களுக்கு சென்றாலும் ஏதாவது ஒரு அசம்பாவிதத்தை செவ்வனே நிகழ்த்துவார் என்பது தெரிகிறது. அவரது கதை சொல்லல்களில் தவறுகள், கதையையே மாற்றிவிடுவது ஆகிய குறைகள் இருப்பதாகக் கேள்வி. நீர்க்கொல்லி விழா பேச்சின்போது அவர் சொன்ன, தெரிசை சிவாவின் சடலச்சாந்தி என்ற சிறுகதையில், கதையின் அடிப்படைக்கு விரோதமான முறையில் இறுதிப் பகுதியின் முக்கிய சம்பவத்தை மாற்றிவிட்டதாக என்னுடன் இருந்த நண்பர் காந்தி கூறி, அது என்ன என்பதையும் தெரிவித்தார். நான் ஊருக்குத் திரும்பிய பின் பொன் சுதா மூலம் அந்தக் கதையை அவரிடமிருந்து பெற்று வாசித்தும் பார்த்தேன். பவா, கதையின் இறுதிப் பகுதியில் செய்த மாற்றம், தெரிசை சிவா அக் கதையில் வெளிப்படுத்திய மானுடத்துக்கு விரோதமாக இருப்பது உறுதியானது. ராயப்பனிடம் வெளிப்படும் மானுடத்தை ஆழ்ந்து கவனிக்காமல், அல்லது மறந்துவிட்டு, ஜமீன்தாரின் ஜாதிவெறியை மட்டுமே கவனித்து, அழுத்தம் கொடுத்ததால் வந்த விளைவு இது. மேம்போக்காகவும், அரைகுறையாகவும் வாசித்துவிட்டு கருத்து சொன்னாலும், கதை சொன்னாலும் இப்படித்தான் இருக்கும்.

கள்ளிக்காட்டு இதிகாசத்தின் மொழி நடை பற்றி வைரமுத்து சொன்னதாக பவா செல்லத்துரை அன்று சொன்னதும் தவறு என்று வைரமுத்து தன் சிறப்புரையிலேயே மறுத்து, விளக்கமும் அளித்திருந்தார்.

     எனது நாவலை பவா பாதி கூட வாசித்திருக்கவில்லை, புரட்டிப் பார்த்துவிட்டு பேசியிருக்கிறார் என்பது நன்கு தெரிகிறது. நாவலின் கதை என்ன, நீர்க்கொல்லி என்று எதைச் சொல்கிறேன் என்பதே அவருக்குத் தெரிந்திராது என்றும் படுகிறது. வைரமுத்து சொன்னதாக அவர் சொன்னதிலும் பிசகு. தெரிசை சிவாவின் கதையைச் சொன்னதிலும் மாபெரும் தவறு. இவை யாவற்றையும் பார்க்கையில் அவர் எதையுமே அரைகுறையாகவும், மேம்போக்காகவும் வாசித்துவிட்டும், கேட்டுவிட்டும் தடாலடியாக, தப்பும் தவறுமான அபிப்ராயங்களை உதிர்ப்பார் என்பது தெரிகிறது.

எனது நாவலை நுனிப்புல் மேய்ந்துவிட்டு பவா உதிர்த்த அபிப்ராயங்களை கருத்துகள் என்று சொல்ல இயலாது. எனவே, நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. நீர்க்கொல்லி நாவலில் உள்ளது வெறும் தரவுகள் மட்டும்தானா; போதிய அளவு கதை இருக்கிறதா – இல்லையா; மையக் கதையும் கிளைக் கதைகளும் உண்டா – இல்லையா; கதையில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகள் உண்டா – இல்லையா; இந்த நாவலை குறியீட்டு வகையாகவும் வாசிக்க இயலுமா; இயலுமெனில் அதன் குறியீடு எதைச் சுட்டுகிறது என்பதெல்லாம் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்குத் தெரிந்துவிடும்.

  • அன்றைய தினம் வைரமுத்து ஆற்றிய சிறப்புரை பற்றி உங்கள் கருத்து என்ன?

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க வைரமுத்துவின் காந்தப் பேச்சு, வழக்கம் போல அரங்கைக் கட்டிப்போட்டுவிட்டது. அதில் கிட்டத்தட்ட பாதிப் பகுதி, பவா செல்லத்துரையின் பேச்சுக்கு பதில் கொடுப்பு என்கிற வகையிலேயே அமைந்துவிட்டது தவிர்க்க இயலாதது. ஆயினும், அவர் பவாவின் மேலோட்டமான பார்வை கொண்ட அபிப்ராய உதிர்ப்புகளுக்கு அளித்த பதில்கள் ஆழமானவை. அதற்கு அப்பால் அவர் பேசியவற்றில் தேர்ந்த இலக்கிய ரசனை, கிராமத்து வாழ்வியலில் தோய்ந்த அனுபவம், கிராமத்து மண்ணோடும், பாமர மக்களோடும், நாட்டுப்புற மக்களின் கவித்துவமான பேச்சு வழக்கு மொழியோடும் அவருக்கு உள்ள பிணைப்பு முதலான பற்பல அம்சங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

எனது நாவல் பற்றி அவர் கூறியவற்றில், இறுதிப் பகுதி பற்றிய இலக்கிய மதிப்பீடு மிக முக்கியமானது. ‘கொடுமுடியின் மரணத்தோடு கூட நாவலை முடித்திருக்கலாம். அப்படி முடிப்பது மரபுதான்; அந்தத் தியாகமே நாவலுக்குப் போதுமானதும் கூட’ என்றவர், உலக தியாகப் பெருந்தகைகள் சிலரின் பெயர்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, ‘ஆனால், நாவலை கொடுமுடியின் மரணத்தோடு முடிக்காமல் தொடர்ந்தது பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்.

“கொடுமுடி சொல்றான் – அழிப்பது மட்டுமே வாழ்க்கையல்ல; நிர்ணயிப்பது வாழ்க்கை!’ன்னு. அப்போ, சீமைக் கருவேலம் இருந்த குழியில என்ன பண்றது? பனை விதையை நடு!” என்றுவிட்டு, திரும்பி, மேடையில் இருந்த என்னைப் பார்த்து, “அதுதான் தம்பி இந்த நாவலுக்கு, எனக்குத் தெரிஞ்சு, உச்சம்!” என்றார். நான் கைகூப்பி வணங்கி அதை ஏற்றுக்கொண்ட அதே சமயத்தில் அரங்கமும் கைதட்டியது.

ஆம், அதுதான் அந்த நாவலின் உயிர்! நாவல் சொல்லும் இறுதிச் செய்தியும், அதுதான். தமிழகத்தின் நீராதாரக் காப்புக்கு வேண்டியதும் அதுதான்.

பவா செல்லத்துரைக்கு, நீர்க்கொல்லி நாவலின் உயிர் தெரியவில்லை; உருவம் மட்டுமே தெரிகிறது; அதில் உள்ள உருவக் குறைகள்தான் அவருக்கு அதி முக்கியமாகப் படுகின்றன. ஆனால் மண்ணில் முளைத்த கலைஞர்களான வைரமுத்துவுக்கும், எனக்கும், அந்தப் போட்டியில் நடுவர்களாக இருந்தவர்களுக்கும், எங்களைப் போன்றவர்களுக்கும் உருவமோ, அதன் குறைகளோ முக்கியமாகப் படாது. உயிர்தான், உள்ளடக்கம்தான் முக்கியமாகப் படும்.

     அதைவிட என்னை வியக்க வைத்த ஒரு நிகழ்வு இது. வைரமுத்துவின் சிறப்புரையில், கொளுத்தும் வேனல் காலங்களில், சுடு மண்ணில் செருப்பற்று நடக்கும் கிராம மக்களின், வறுமைத் துயரத்தை சொல்லிக்கொண்டிருந்தார். ‘சூடு பொறாமல், ஒரு இடத்தில் நின்று, முதலில் இடது பாதத்தை எடுத்து வலது பாதத்தின் மீது சற்று நேரம் வைத்துக்கொள்வார்கள்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, அவரது இடது பாதம் செருப்பைக் கழற்றிவிட்டு, வலது பாதத்தின் மீது வைக்கப்பட்டது. ‘சற்று நேரம் அந்த ஒரு பாதம் சூடாறிய பின். அதைக் கீழே வைத்துவிட்டு, வலது பாதத்தை அதன் மீது வைத்துக்கொள்வார்கள்’ என்று சொல்லும்போது, அவரது இடது பாதம் கீழிறங்கி, செருப்புக்குள் நுழைந்தது. பிறகு வலது பாதம் செருப்பைக் கழற்றிவிட்டு, இடது பாதத்தின் மீது வைக்கப்பட்டது.

     மேடையில் இருந்த மற்றவர்களில் யாரேனும் இதை கவனித்தார்களா என்று தெரியவில்லை. சற்று அருகில் இருந்த நான் கவனித்தேன். அவரது ஒட்டுமொத்த பேச்சைவிட, இந்த செயலில் அசந்துவிட்டேன். நிச்சயமாக இது மற்றவர்கள் பார்ப்பதற்காக செய்யப்பட்டதல்ல. அரங்கில் இருப்பவர்களுக்கு அது தெரிய வாய்ப்பும் இல்லை. அவரை அறியாமல் அனிச்சையாக நிகழ்ந்த செயல் அது. என்னடா இது, இந்த மனுசன் இப்படி ஒன்றிப்போகிறாரே என வியந்தவன், ஊருக்குத் திரும்பும்போது, எனக்குத் துணையாக வந்திருந்த, அக்கா மகன் முத்துக்குமாரிடம் பேச்சினிடையே அதைச் சொன்னேன்.

     “நானும் அதை கவனிச்சேன் மாமா. உங்ககிட்ட சொல்லணும்னு நெனைச்சுட்டிருந்தேன். நீங்களும் அதை கவனிச்சீங்களா?” என்றான்.

     அரங்கில் இரண்டாவது வரிசையில் இருந்த அவன், அலைபேசியில் வைரமுத்து பேச்சை காணொளிப் பதிவு செய்தபடியே இதையும் கவனித்திருந்தானாம்.

     வைரமுத்துவின் உரையின் இறுதிப் பகுதியில், விமர்சனங்கள் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், இதோடு திருப்தியடைய வேண்டாம் என்றும் எனக்கு சொல்லிவிட்டு, “நான் ஏன் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன் தெரியுமா? எனக்குப் போதும்னு ஏன் தோணலைன்னு தெரியுமா?” என்றுவிட்டு என்னை நோக்கினார். அவரே சொல்லக் கூடிய பதில் என்னவாக இருக்கும் என ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தேன். வற்றாத படைப்பூக்கம், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமை போன்றவற்றைத்தான் சொல்வார் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால், “எனக்குப் பிடித்த படைப்பை இன்னும் நான் எழுதவில்லை என்பதனால்தான்!” என்றார். அவரிடம் இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போது எழுந்த கைதட்டல்களில் முதல் கைதட்டல் என்னுடையதுதான்!  

“என்றாவது ஒரு நாள் எழுதுவேன். அது எதுவென்று தெரியாது. அதனால் எழுதிக்கொண்டே இருக்கிறேன்” என அவர் சொன்னது, என்றும் மாணவனாகவும், எங்கிருந்தும், எவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவனுமான எனக்கு மிகப் பிடித்திருந்தது.

  • உங்கள் எழுத்து வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்கள், பரிசுகள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்களேன்!  கவின் ஷாராஜ் பற்றியும் சொல்லுங்கள்.

மறக்க முடியாத அனுபவங்களை சொல்லப் புகுந்தால் 50 – 60 பக்கங்களாவது ஆகிவிடும். ஆகவே, மறக்க முடியாத பரிசுகள், விருதுகளைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

அவை பணத்தினாலோ, சான்றிதழ்களாலோ, பதக்கம், கேடயம், கோப்பை போன்றவற்றாலோ ஆனவை அல்ல. பேரனுபவப் பரிசுகள். அவற்றையே நான் பெற்ற உண்மையான பரிசுகள் என்பேன்.

2009-ல், கந்தர்வன் நினைவுப் பரிசுப் போட்டியில், திரிபு என்ற எனது சிறுகதை பரிசு பெற்றபோது, த.மு.எ.க.ச. பரிசளிப்பு விழாவில் ச.தமிழ்ச்செல்வன் அக் கதை பற்றி விவரித்துப் பேசினார். கூட்டத்தில் இருந்த ஒரு குடிகார முதியவர் அக் கதையைக் கேட்டு நெகிழ்ந்து, தள்ளாட்டத்தோடே எழுந்து நின்று, தன் கைகளை உயர்த்தி அங்கிருந்தே என்னை ஆசீர்வதித்தார். மேடையில் அமர்ந்திருந்த நான் எழுந்து நின்று அவரை வணங்கி, தலை தாழ்த்தி, அந்த வாழ்த்தை ஏற்றுக்கொண்டேன். அது அந்தக் கதைக்காக எனக்குக் கிடைத்த, விலைமதிப்பற்ற பரிசு.

2010 வாக்கில், வாரமலர் இதழில் எனது கதைகள் தொடர்ந்து வெளியாகி, இதழாசிரியர், ஆசிரியர் குழுவினர், வாசகர்கள், சக படைப்பாளிகள் ஆகிய பல தரப்பிலும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருந்தது. வாரமலர் ஆசிரியர் திரு.ரமேஷ், என் கதைகளைக் கொண்டாடுவதோடு, தனது நண்பர்களிடமும் சொல்லி அவற்றை வாசிக்க வைப்பார். அவர் என்னோடு தொலைபேசியில் பேசும்போது, அவர்களையும் என்னுடன் பேசச் செய்வார். அதில் வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் என்னிடம், “என் மனைவி உங்க கதைகளுக்கு அடிமை!” என்றார். அவரது அந்த வாசகங்கள், என் கதையெழுத்துக்குக் கிடைத்த மற்றும் ஒரு பெரும் பரிசு.

     எனது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானபோது அதை வாசித்துவிட்டு, சக சிறுகதையாளரும் நண்பருமான பலராம் செந்தில்நாதன் எனக்குச் செய்த மரியாதை, கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாதது. அந்த உயரிய மரியாதை, எழுத்தின் மூலம் எனக்குக் கிடைத்த பரிசுகளிலேயே பெரும் பரிசு. 

நீர்க்கொல்லி நாவல் பரிசளிப்பு விழாவுக்குச் சென்று வீடு திரும்பியதும் சற்று நேரத்தில் தெரிய வந்த தகவல், இவை யாவற்றைக் காட்டிலும் எதிர்பாராத ஒன்றாக, மாபெரும் பரிசாக இருந்தது. முகநூலில் சமீபமாக நட்புக் கோரிக்கை விடுத்திருந்த விஜயராஜ் அருணாச்சலத்தின் பதிவில்தான் அந்த செய்தி அறியக் கிடைத்தது. அவர் எனக்கு அறிமுகமற்றவர். நீர்க்கொல்லி நாவலுக்கு நான் பரிசு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்திருந்த அவர், ‘ஷாராஜை நானறிவேன். அவருக்கு என்னைத் தெரியாது. ஆனாலும் என் மானசீக நண்பர்’ என எழுதியிருந்தார். அதுவே எனக்கு நம்பவியலாத ஆச்சரியம்.

அதை அடுத்து இருந்த வரிகளை ஆவலோடு வாசித்தேன். 

’98-ல் புதிய பார்வையில் அவர் எழுதிய பூக்கள் பூக்கும் ஓசைகள் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிலிர்த்துப் போய் லயித்துக் கிடந்த எனக்கு 98 ஜூன் மாதத்தில் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நான் ஒரு பெயரிட்டேன். அது – கவின் ஷாராஜ்.’

பார்ப்பதும், வாசிப்பதும் நிஜமா, கனவா என்றே நம்ப இயலாத அளவுக்கு அந்தத் தகவல் இன்பப் பேரதிர்ச்சியாக இருந்தது.

எழுத்தாளனான எனக்கு இதைவிடப் பெரிய விருது கிடைக்குமா? யாரும் கொடுக்கத்தான் முடியுமா?

உடனடியாக முகநூலில் அவரைத் தொடர்பு கொண்டேன். ஓரிரு மணி நேரங்களுக்குப் பின் அலைபேசியில் உரையாடினோம். பரஸ்பர அறிமுகமாகி, குடும்ப விவரங்கள் பரிமாறிக்கொண்டோம். கவின் ஷாராஜின் ஒளிப்படத்தை அனுப்புமாறு விஜயராஜிடம் கேட்டு, பார்த்து மகிழ்ந்தேன்.

பிரபல எழுத்தாளர்கள், எழுத்து மேதைகள் ஆகியோரின் பெயரையோ, அவர்களின் படைப்புகளில் இடம்பெறும் பிரபல கதாபாத்திரங்களின் பெயரையோ தம் மக்களுக்கு சூட்டுவது நடைமுறையில் உள்ள ஒன்றுதான். என் பெயரை, அதுவும் ஒரு கதையை வாசித்து, அது பிடித்ததாலேயே சூட்டியிருக்கிறீர்களே என்று கேட்டேன். அந்த ஒரு கதையே அவ்வளவு திருப்தியளித்தது, பிடித்திருந்தது என்றார்.

பூக்கள் பூக்கும் ஓசைகள் என்ற அச் சிறுகதை, வாசகர்கள், சக படைப்பாளர்கள், இலக்கிய நண்பர்கள் பலருக்கும் பிடித்த எனது கதைகளில் ஒன்று. இக் கதை, அப்போது ஜோதி விநாயகம் நினைவுப் பரிசின் மாதாந்திரப் பரிசு பெற்றது என்பதும் குறிப்பிடத் தக்கது. வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு என்னும் எனது முதல் சிறுகதைத் தொகுப்பிலும். பெருமாள் முருகன் தொகுத்த கொங்குச் சிறுகதைகள் தொகுப்பிலும் இக் கதை இடம்பெற்றுள்ளது.

விஜயராஜின் மானசீக நட்பும், ஒரு சிறுகதைக்கு அவர் கொடுத்த விருதும் ஈடு இணையற்றது. அவற்றின் மூலம், நான் ஏதோ வாழ்நாள் சாதனை செய்துவிட்டது போல மனதில் ஒரு பரவசம்.

இது குறித்து, ‘என் எழுத்துக்கு மீண்டும் ஒரு மாபெரும் பரிசு’ என்ற தலைப்பில் முகநூலில் பதிவு வெளியிட்டிருந்தேன். அதை வாசித்த சக படைப்பாளிகள், நண்பர்கள் பலரும் நான் அடைந்த உணர்வையே அடைந்திருப்பது அவர்கள் இட்ட கருத்துகளில் தெரியவந்தது. ‘இதைவிட வேறென்ன வேண்டும்’, ‘கெளரவமும் ஆத்மார்த்தமுமான இவ்வரிய விருது வேறெந்த எழுத்தாளருக்கும் கிடைத்திராதது தோழர். வாசித்து முடிந்ததும் நெஞ்சடைத்து சிறிது நேரம் திகைத்தேவிட்டிருந்தேன்’, ‘வாழ்நாளில் எந்தவொரு எழுத்து ஜாம்பவானுக்கும் கிடைத்திராத பெரும் மகிமை’, ‘இதுதான் உண்மையான பரிசும் விருதும்’, ‘யாருக்கும் வாய்த்திடாத பெரும் பரிசு’ என்றெல்லாம் அவர்கள் சொல்லியிருந்தனர்.

  • கேரள எல்லைப்புறக் கதைகள் இதுவரை இலக்கியத்தில் பதிவானதில்லை. நீங்கள் உங்கள் வட்டாரத்தை மையமாகக் கொண்டு எழுதிய கதைகளில்தான் அவை முதல் முறையாகப் பதிவாகியுள்ளன. வேலந்தாவளம் உங்களை வரவேற்கி|றது தொகுப்பில் இடம்பெற்றுள்ள அக் கதைகளில் உங்களின் வட்டாரத்தன்மை அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. ஏன் தொடர்ந்து அவ்வூர்க் கதைகளை நீங்கள் எழுதுவதிவில்லை? அந்த ஊரைவிட்டுப் புலம்பெயர்ந்துவிட்டதைக் காரணமாகச் சொல்வது தட்டையான பதில் என்பதே எனது கருத்து. 

மற்ற தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள கேரள வட்டாரங்களின் கதைகள் எழுதப்பட்டுள்ளனவா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கோவைக்கும் பாலக்காட்டுக்கும் இடையிலான எங்கள் வட்டாரத்தை கதைகளில் முதல் முறையாகப் பதிவு செய்தது நான்தான். எனக்கு முன்பு அந்த வட்டாரத்தில் யாரும் கதாசிரியராக இல்லை என்பதால் எனக்கு இந்த வாய்ப்பு அமைந்தது.

ஆயினும் துவக்கத்தில் – எனது முதல் சிறுகதைத் தொகுப்பு வருகிற வரை கூட – நான் வட்டாரத்தன்மை பற்றிய கவனம் கொண்டிருக்கவில்லை. பிற்பாடு வாரமலரில் தொடர்ந்து கதைகள் எழுத வாய்ப்பு கிடைத்தபோதுதான் எங்கள் வட்டாரத்துக்கே உரிய தனித்தன்மைகளை என் கதைகளில் பதிவு செய்ய வேண்டும் என்ற உணர்வு உண்டாயிற்று. அது என் கதைகளுக்கு தனித்துவ அடையாளமாக இருக்கும் என்பதோடு, இந்த வட்டாரத்தை எழுத்தில் பதிவு செய்கிற முதல் படைப்பாளி நானாக இருக்க வேண்டும் என விரும்பியதும் ஒரு காரணம். எனவே, மலையாளம் கலந்த கொங்குத் தமிழ், எங்கள் வட்டாரத்துக்கே உரிய வாழ்வியல், தமிழ் – மலையாள கலாச்சார இணைவுகள், கள்ளுக் கடைகள், எங்கள் ஊர்களின் தனிச்சிறப்பான குணச்சித்திரங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் ஆகியவற்றை ஒவ்வொரு கதைகளிலும் பதிவு செய்தேன். புதுமையான அனுபவம் என்பதால் வாசகர் தரப்பில் அதற்கு நல்ல வரவேற்பு.

ஆறு ஆண்டுகளுக்கு முன் நான் எங்கள் ஊரிலிருந்து புலம்பெயர்ந்து பொள்ளாச்சிக்கு வர வேண்டியதாகிவிட்டது. அதிலிருந்து அங்கே நடக்கும் அன்றாட வாழ்க்கை பற்றிய விபரங்கள் எதுவும் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. அங்கே நிகழக்கூடிய முக்கிய சம்பவங்களும் தெரிய வருவதில்லை. அதனால்தான் எங்கள் ஊரில் நிகழும்படியான கதைகளை எழுத இயலாமல் போகிறது. அங்கே நிகழ்வதாக முழுக்க கற்பனையாக எழுதினால் சரியாக வராது. முந்தைய காலங்களில் நிகழ்ந்த கதைகளை வேண்டுமானால் எழுதலாம். இப்போதைக்கு அதைவிட முக்கியமாக நான் செய்ய வேண்டி இருப்பது, தமிழகத்தில் நடக்கும்படியான கதைகளையும், நாவல்களையும் எழுதுவதுதான். ஆகவே, அதில்தான் கவனம் செலுத்துகிறேன்.

  • ‘சாவதானாலும் சிலுவை வேண்டும்’ – என்ற உங்களின் கவிதை வரி பற்றி…

ஒரு வகையில், இதைக் கேட்டுக் கேட்டு ரொம்ப போரடித்துவிட்டது. இன்னொரு வகையில் வியப்பாகவும் இருக்கிறது.

அந்த இரண்டு வரிக் கவிதை பற்றி, அது பிரசுரமாவதற்கு முன்பே சிலாகித்துப் பாராட்டிய முதல் நபர் நீங்கள். அது 1993 – 95 வாக்கில் நிகழ்ந்தது என ஞாபகம். அதற்குப் பின் நீங்கள் இந்தக் கால் நூறாண்டு காலத்தில் சுமார் ஐம்பது தடவையாவது என்னிடம் அந்த வரிகளைப் பற்றி பாராட்டியிருப்பீர்கள். மற்ற சக இலக்கிய நண்பர்கள் சிலரும், இலக்கியம் சாராத ஓரிரு நண்பர்களும் கூட அந்தக் கவிதையை நினைவுகூர்ந்து சிலாகிப்பது இன்னமும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சாதாரணங்களில் ப்ரியமில்லை எனக்கு

சாவதானாலும் சிலுவை கேட்பேன்

இதுதான் அந்த இரு வரிக் கவிதை. இடது கையில் எழுதியது என்பார்களே,… அப்படி போகிறபோக்கில் எழுதியது அது.

எனது கவிதைகளில் அதிக பாராட்டு பெற்ற ஒரே கவிதை இதுதான். எனது சிறுகதைகள் பேசப்பட்ட அளவுக்கு மற்ற கவிதைகள் பேசப்படவில்லை. ஆனால், ஜீன்ஸ் ஆண்டாள், பட்டாம்பூச்சிகளைக் கொல்லும் கலை, நான் ஏன் எதிர் கவிஞனானேன் ஆகிய எதிர் கவிதைகளும், கவித்துவமும் ஆழமும் கூடிய எனது குறுங்காவியங்களும் குறிப்பிடத்தக்க அளவு கவனம் பெற்றன. எனினும், அவற்றையெல்லாம்விட இந்த இரு வரிக் கவிதைதான் கால் நூற்றாண்டு கடந்தும் உங்களைப் போன்ற சக படைப்பாளிகள் சிலரால் நினைவுகூர்ந்து பேசப்படுகிறது.

அதற்கான காரணம் என்ன என சிந்திக்கையில் தெரிய வருவது இதுதான். கவித்துவம், இலக்கிய நயம், கலை மேன்மை ஆகியவை எல்லாம் இரண்டாம் பட்சம். உள்ளடக்கம்தான் முதன்மையானது, முக்கியமானது. குறிப்பாக, ‘வாழ்வோ, சாவோ – எதுவாயினும் மகத்தானதாக இருக்க வேண்டும். அதைவிட, என் வாழ்வும் சாவும் ஒட்டுமொத்த மானுட குலத்துக்கான தியாகமாக இருக்க வேண்டும்’ என்பதைச் சொல்கிற கருத்து வெளிப்பாடுகளால்தான் அக் கவிதை பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது எனக் கருதுகிறேன்.

எனது கவிதைத் தொகுப்பில், பிரகடனம் என்ற தலைப்பைக் கொடுத்து இக் கவிதையையே முதல் கவிதையாக வைத்தேன். புதிதாக இக் கவிதையை வாசிக்க நேர்ந்த சக படைப்பாளிகள், வாசகர்கள் சிலரும் அதை வியந்து பாராட்டினர்.

  • தமிழ்ச் சூழலில் எரோடிக் லிட்ரேச்சர் என்பது இன்றும் கூட சவால் நிறைந்ததுதான். கொங்கு இலக்கியவாதிகளில் சு.வேணுகோபாலும் வா.மு.கோமுவும் இதில் நுட்பமாக இயங்கும் எழுத்தாளுமைகள். உங்களுடைய கவிதைகளில் இக் கூறை அடையாளப்படுத்த இயலுமா?

எரோடிக் லிட்ரேச்சர் என்பது வேறு; போர்ன்னோ லிட்ரேச்சர் என்பது வேறு அல்லவா! இதில் எரோடிக் லிட்ரேச்சர் கூறுகளை எனது ஓரிரு கவிதைகளிலும், குறுங்காவியங்களிலும் பயன்படுத்தியிருக்கிறேன். பாலியல், மரணம், உன்மத்தம், உக்கிரம், அற்புதம், மாந்தரீக எதார்த்தம் போன்ற சில அம்சங்கள் எனது குறுங்காவியங்களின் கவித்துவ மூலகங்களாக இருக்கும். பாலியலின் சதவீதம் குறைவுதான். அது எனது பல மூலகங்களில் ஒன்று மட்டுமே. எனவே, எரோடிக் லிட்ரேச்சர் என்னும் வகைமைக்குள் எனது அந்தக் கவிதைகளை வகைப்படுத்த இயலாது. அப்படி யாரும் சொல்வதும் இல்லை. ஆனால், நீங்கள் சொல்கிறபடி, ஆங்காங்கே அவற்றை அடையாளப்படுத்த இயலும்.

  • இந்தக் காலத்தில் காவியங்களுக்கு இடமிருக்கிறதா? உங்களின் குறுங்காவியங்களை முன்வைத்து இதைக் கேட்கிறேன். இவை சார்ந்த உங்களின் பதில்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

காவியங்களுக்கு இந்தக் காலத்தில் மட்டுமல்ல; வருங்காலத்திலும் கூட இடம் இருக்கிறது. ஆனால், அதன் வடிவமும், உள்ளடக்கமும் காலத்துக்கு ஏற்ப மாறும். அனைத்து கலை இலக்கியங்களிலும் இப்படித்தான் யாவும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டும், முன்னேறிக்கொண்டும் இருக்கின்றன; இருக்கும்.

முற்காலத்தில் கவிதை செய்யுள் வடிவில் இருந்தது. பின்னர் அது உரை நடை வடிவத்துக்கு வந்துவிட்டது அல்லவா! இந்த மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தில் இதைப் புதுக் கவிதை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போதும் மேடைப் பேச்சாளர்கள் பலரும் அரை நூற்றாண்டுக்கு முந்தைய அதே பேரில்தான் அதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இலக்கிய உலகில் அந்தப் பேர் எப்போதோ வழக்கொழிந்துவிட்டது. இப்போது கவிதை என்றாலே உரை நடை வடிவிலானதுதான். அது தட்டையான உரை நடை வடிவமாக இருந்தாலும் சரி; கவித்துமான சொற்கள், இசைத்தன்மை அல்லது ஓசை நயம் கொண்ட கட்டமைப்பு ஆகியவை கொண்ட வடிவமாக இருந்தாலும் சரி. உள்ளடக்கம், சொல்லல் முறை, வடிவமைப்பு ஆகியவற்றால் அது கவிதையாக ஆகிவிடுகிறது அல்லவா!

காவியம் என்பதும் அப்படித்தான். முந்தைய கால காவியம் என்பது என்ன? பெருங்கதைகளை செய்யுளில் எழுதுவதுதானே! காலப் போக்கில் செய்யுள் மரபு வழக்கொழிந்து கதைகளை உரை நடையில் எழுதும் வழக்கம் வந்தபின், காவியத்தின் இடத்தை நாவல் பிடித்துக்கொண்டது. காவியத்தில் இருந்தது போலவே நாவலில் பெருங்கதை இருக்கிறது; ஆனால், காவியச் செய்யுளில் இருந்த கவிதை, நாவலில் இல்லாமல் போய்விட்டது.

எனினும், உலக இலக்கியவாதிகளும், நவீன இலக்கியவாதிகளுமான மேதைகள் பலரும் தங்களின் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் ஆகியவற்றைக் காவியத்தன்மையாக மாற்றியிருக்கின்றனர். தல்ஸ்தோய், தாஸ்தாயெவ்ஸ்கி, மாப்பஸான், மார்க்வெஸ், யுவான் ருல்ஃபோ, இடாலோ கால்வினோ போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம். இந்திய இலக்கியத்திலும் யு.ஆர்.அனந்தமூர்த்தி, எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.வி.விஜயன், மனோஜ் தாஸ், ஜெயமோகன் போன்ற மேதைகளின் படைப்புகளில் காவியத்தன்மையைக் காணலாம். கதைத் தன்மை, சித்தரிப்பு, இலக்கிய நயம், கவித்துவ நடை ஆகியவற்றால் இவர்கள் நமக்கு உரை நடையிலான புனைகதை இலக்கியத்திலும் பண்டைக் காலக் காவிய உணர்வை, அல்லது அதையொத்த உணர்வை அளிக்கின்றனர். செவ்வியல் என்ற தரத்தைப் பெறக்கூடிய முன்னோடி மற்றும் சமகாலப் புனைகதை இலக்கியங்கள் யாவற்றிலும் இத்தகைய காவியத்தன்மை கூடவோ குறையவோ இருக்கும். அவ்வளவு ஏன், சிறந்த திரைப்படங்கள் பலவற்றை திரைக் காவியங்கள் என்று சொல்வதில்லையா?

கவிதையிலும் இப்படியான காவியத்தன்மையைக் கைக்கொள்ளும் வடிவமே குறுங்காவியம். எனக்கு கவிதை வாசிப்பில் அவ்வளவு அனுபவம் இல்லை என்பதால் அதிக உதாரணங்கள் காட்ட இயலாது. பாரதியின் வசன கவிதைதான் நான் குறுங்காவியம் எழுத முக்கிய தூண்டுதல். அடுத்தது, டி.எஸ்.எலியட்டின் நீள் கவிதையான பாழ் நிலம். குறுங்காவியம் என்ற வகைமைப் பெயர் எனக்குக் கிடைத்தது, நகுலன், கலாப்ரியா ஆகியோர் எழுதிய ஓரிரு குறுங்காவியங்களிலிருந்துதான்.

பொதுவாக நான் சிறுகதை, கட்டுரை, முகநூல் பதிவு எதுவாயினும் பக்க வரையறையின்றி நீளமாக எழுதுவது வழக்கம். கவிதைகளிலும் இப்படி சில அனுபவங்களை விரிவாக எழுத வேண்டியிருந்தது. ஆகவேதான் குறுங்காவிய வடிவத்தைக் கடைபிடித்தேன். அதில் கதை எதுவும் இராது. ஆனால், ஒரு வித கதைத் தன்மை இருக்கும். பக்கக் கணக்கில் ஒரே விஷயத்தை, ஒரே தொனியில், ஒரே கண்ணோட்டத்தில் சொன்னால் வாசிக்க சலிப்பாகிவிடும் என்பதால் ஐந்தோ, ஏழோ பாகங்களாகப் பிரித்துக்கொண்டு, வெவ்வேறு தொனி, உள்ளடக்கம், கண்ணோட்டம், சொல்லல் முறை ஆகியவற்றுடன் அக் குறுங்காவியங்களைக் கட்டமைப்பேன். சில சமயம் இந்த பாகங்களுக்கு தனித் தனியே துணைத் தலைப்புகளும் சூட்டப்பெறும். அப்படியுள்ளவற்றைத் தனித் தனிக் கவிதைகளாகவும் வாசிக்க இயலும். வரிசைப்படி சேர்த்து வாசிக்கையில் குறுங்காவியமாக ஆகிவிடும்.

சாதாரணமாக நான் எழுதுகிற கவிதை, எதிர் கவிதை ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு, எனது குறுங்காவியங்கள் மேலானதும் ஆழமானதும் தீவிரத்தன்மை மிக்கதுமான கவித்துவ வாசிப்பு அனுபவத்தைத் தர வேண்டும், வாசகர்களில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம். ஆகவே அதற்கேற்ப அவற்றின் உள்ளடக்கங்கள், சொற் பிரயோகங்கள், கவிதை அலகுகள், இலக்கிய நயங்கள், வெளிப்பாட்டு முறைகள், உத்திகள் ஆகிய ஒவ்வொன்றிலும் மிகுந்த கவனம் செலுத்தி, கூடுதல் அவகாசம் எடுத்துக்கொண்டு எழுதினேன். அந்தக் குறுங்காவியங்கள் பலவும் இறக்கை இதழில் வெளியானவை. அந்த இதழ் வட்டத்தில் அவை குறிப்பிடத்தக்க கவனம் பெற்றன.

அப்போது எனது நெருங்கிய நட்பில் இருந்தவரும், எனக்குப் பிடித்தமான கவிஞர்களில் ஒருவருமான, பொள்ளாச்சியைச் சேர்ந்த ஸ்நேகிதன், “உங்களது குறுங்காவியங்களில், வாசகரைப் படிப்படியாக தீவிரத்தன்மையை நோக்கி செலுத்தி, இறுதியில் உச்சகட்டத்தை அடைந்து உறையச் செய்கிற தன்மை இருக்கிறது” என்று குறிப்பிட்டார். எனது நோக்கமும், முயற்சியும் அதுதான். அவர் அதைத் துல்லியமாக சொல்லிவிட்டார்.

தஞ்சைக் கவிஞரும் நண்பருமான நட்சத்திரன், எனது குறுங்காவியங்களைப் பாராட்டிவிட்டு, “அவற்றை வாசிக்கையில் நான் இனிமேல் கவிதையே எழுதக்கூடாது என்று தோன்றுகிறது” என்றார்.

என்னைப் பொறுத்தவரை, அதுவரை எழுதப்பட்ட எனது படைப்புகளில், படைப்புத்தன்மையில் நான் உச்சம் தொட்டது எனது குறுங்காவியங்களில்தான். அதனால்தான் பிற்பாடு நான் ஒவியத் துறைக்கு வந்தபோது, “கவிஞன் ஷாராஜை ஜெயிக்கிற மாதிரியான ஓவியங்களை வரைய வேண்டும்” என்று நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது நான் தாந்த்ரீகத்துக்கு வந்திருக்கவில்லை. நவீன தாந்த்ரீக ஓவியனாக ஆகி, கடும் உழைப்பில், அதி தீவிரமான தேடலும் ஆய்வும் மேற்கொண்டு, அதன் அடிப்படையில் ஓவியங்களை வரைய வரைய, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஓவியன் ஷாராஜுக்கு முன்னால் கவிஞன் ஷாராஜ் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டான்.

  •  நீண்ட காலமாக சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் ஆகியவற்றை எழுதிவந்தாலும் சமீப காலமாகத்தான் நாவல் எழுதத் துவங்கினீர்கள். அடுத்தடுத்து சில நாவல்களை எழுதிவிட்டீர்கள். அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நான் நாவல் எழுத்துக்கு வரக் காரணம், ஜே.மஞ்சுளாதேவியாகிய நீங்களும், நண்பர் சரசுராமும்தான்.  இதை நான் எனது நாவல் முன்னுரைகளிலும், முகநூல் பதிவுகளிலும் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறேன்.

ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் இப்படி தூண்டுதலாக யாராவது இருப்பது இயல்புதான். இளம் வயதில் எனக்கு இலக்கியத்தையும், இலக்கியத்துக்கு என்னையும் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர் சரசுராம். அப்போதிருந்து எனக்கு ஊக்கமளித்து வரும் சீனியர் நீங்கள். அது ஆச்சரியமல்ல. ஆனால், இலக்கியத்தை நம்பி வாழ்வை வீணாக்கிய வெறுப்பில், எழுத்தைத் துறந்து, ‘இலக்கியவாதி ஷாராஜ் இறந்துவிட்டான்’ என இலக்கிய நண்பர்களிடம் அறிவித்துவிட்டு, முழுமூச்சாக ஓவியப் பணியில் இறங்கியிருந்தபோது, நாவல் எழுத வலியுறுத்தியவர்கள் நீங்கள் இருவரும்தான். நான் அதை வம்படியாக எதிர்த்து கடுமையாக வாதிட்டபோதும், அதற்காக துளி கூட சங்கடப்படாமல், என் எழுத்துத் திறத்தை மதித்து, ஒரே ஒரு நாவலாவது எழுதுங்கள் என விடாது வற்புறுத்தினீர்கள் என்பதுதான் என்னால் இன்னமும் நம்ப இயலாததாக இருக்கிறது.

நீங்கள் இருவரும் காரணமாகவே எனது முதல் நாவலை எழுதினேன். அதனாலேயே உங்கள் இருவருக்கும் அந்த நாவலைச் சமர்ப்பித்தேன்.

இதுவரை ஆறு நாவல்களை எழுதிப் பூர்த்தியாக்கிவிட்டேன். நான்கு நாவல்கள் அச்சாகிவிட்டன. ஒரு நாவல், போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னொரு நாவல், போட்டிக்குத் தயாராக உள்ளது.

இந்த ஆறு நாவல்களில், வானவில் நிலையம் தவிர மற்ற ஐந்தும் போட்டிக்காக எழுதப்பட்டவைதான். இவற்றுக்கு இடையே ஒரு நாவலை பத்தாயிரம் சொற்கள் வரை எழுதி, திருப்தியில்லாமல் அழித்துவிட்டேன். மற்ற இரு நாவல்கள் பாதி அளவான நிலையில், அதிருப்தியால் தடைபட்டு நிற்கின்றன. அதில் ஒன்றின் கதையை சமீபத்தில் செப்பனிட்டு மேம்படுத்திவிட்டேன். அதை அடுத்த வருடத் துவக்கத்தில் எழுதி, நாவல் போட்டிக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கிறேன்.

மிக மிக மெதுவாக எழுதக்கூடியவன் நான். ஒரு சிறுகதை எழுதவே ஒரு வாரம், பத்து நாள் ஆகும். ஆனால், 2020 முதல் 2023 வரை சுமார் மூன்றரை ஆண்டுகளில் ஆறு நாவல்களை எழுதிவிட்டது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது. அழிக்கப்பட்ட ஒரு நாவலும், தடைப்பட்டு நின்ற இரு நாவலும் பூர்த்தியாகியிருப்பின் மொத்தம் ஒன்பது நாவல்களை எழுதியதாக ஆகியிருக்கும்.

இவை ஒருபுறம் இருக்க, எனது முந்தைய காலகட்டத்துக் கவிதைகளிலோ, சிறுகதைகளிலோ இல்லாத வகையிலான, ஆழமானதும், தீவிரமானதுமான விஷயங்கள் சிலவற்றை நாவல்களில் கையாண்டிருக்கிறேன். இனி எழுத உள்ள நாவல்களும் அவ்வாறே இருக்கும். இதில் பலதும் மற்ற நாவலாசிரியர்கள் யாரும் சொல்லாதது, சொல்லத் துணியாதது என்பது அந்த நாவல்களை வாசித்தவர்களுக்கே தெரியும். ஆன்மிகம், மெய்ஞானம், மதங்கள் தொடர்பான சில பல விஷயங்கள், மற்ற நாவலாசிரியர்களுக்கும், சிந்தனாவாதிகளுக்கும் தெரியாததாகவும் இருக்கும். அவை தாந்த்ரீகம் தொடர்பான எனது தேடல்களில் கிடைக்கப் பெற்றவை. இவற்றில் சிலவற்றை தாந்த்ரீகம் தொடர்பான எனது ஆய்வுக் கட்டுரைகளில் வெளிப்படுத்தி இருப்பேன். சிலவற்றை சுகன் இதழில் ஐந்து பாகங்களாக வெளியான, தாந்த்ரீகம்: மறைக்கப்பட்ட பேருண்மைகள் என்ற நேர்காணலில் சுட்டிக் காட்டியிருப்பேன். பெருந்தொற்று உள்ளிட்ட எனது சில நாவல்களில் இந்த வெளிப்படுத்தல்கள் கூடுதலாக இடம்பெறும்.

  • பெருந்தொற்றுக் காலத்தில் உலகமே ஸ்தம்பித்தபோதும் எழுத்தாளர்கள் மட்டும் இரு கைகளாலும் எழுதிக்கொண்டிருந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது மிக இயல்பானது. புறம் – அகம் ஆகிய இரு விதங்களிலும் இதற்கான காரண – காரியங்கள் உள்ளன.

முதலில் புறம் பற்றிப் பார்ப்போம். பெருந்தொற்றுக் காலத்தில் உலகமே ஸ்தம்பித்தது என்பதில் அதிகபட்சம், வீட்டுக்கு வெளியே சென்று வேலை, தொழில், மற்ற வாழ்வியல் காரியங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியது தடைபட்டதும், வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பதும்தான். எழுத்தாளர்கள் எழுதுவது அப்படி வெளியே சென்று செய்யக் கூடிய செயல் அல்லவே! அது வீட்டுக்குள் இருந்து செய்வதுதானே! ஆகவே, வீட்டில் முடங்கியிருக்கும் காலத்தை எழுதப் பயன்படுத்திக்கொண்டார்கள். அது நீண்ட காலமாக இருந்ததால் நிறைய எழுத முடிந்தது. அது உங்களுக்கு இரு கைகளாலும் எழுதியது போலத் தோன்றுகிறது. ஆனால், எட்டு மணி நேரம் வேலை அல்லது பத்து – பனிரெண்டு மணி நேரம் தொழில் என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால், எழுத்தாளர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுதியது மிகக் குறைவாகவே இருக்கும்.

எழுத நேரமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்து எழுதியிருப்பார்கள்.

அடுத்து, அக ரீதியான காரண, காரியங்கள். இன்றைய காலத்தில் உலகெங்கும் வாழும் மக்கள் யாரும் கொரோனா பெருந்தொற்று நிகழ்த்திய பாதிப்பு அளவுக்கு உலக அளவிலான வேறெந்த பாதிப்பையும் சந்தித்ததில்லை. இயற்கைச் சீற்றம், விபத்துகள், போர்ச் சூழல், இன – மத – ஜாதிக் கலவரங்கள், தீவிரவாத – பயங்கரவாதத் தாக்குதல்கள், சிறு தொற்றுகள், சார்ஸ் போன்ற மற்ற பெருந்தொற்றுகள் ஆகிய எதிலும் இந்த அளவுக்கு மாபெரும் பலிகள் ஏற்பட்டதில்லை. உலகம் முழுக்க ஒட்டுமொத்தமாக இப்படி ஸ்தம்பித்ததும் இல்லை. மரண பயம், நோய்மை, ஏழைகளுக்கும் அபலைகளுக்கும் உணவுக்கு வழியின்றி திண்டாட்டம், மருத்துவ வசதி கிடைக்காத நிலை, தொற்று தொடர்பான சமூக – அரசியல் – ஆட்சி நிலவரங்கள் என நெருக்கடி மிக்க சூழல். சமூகத்தில் கொரோனா தொடர்பாக மனிதமற்ற கொடுமைகள், கொடூரங்கள், அவலங்கள் கணக்கின்றி அரங்கேறின. தனிமனித வாழ்வில், குடும்பங்களில் பெருந்தொற்று நிகழ்த்திய பாதிப்புகள் சொல்லித் தீராது.

இவ்வளவையும் மீறி, தமது உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களுக்கு பல வித சேவைகளும் செய்ய, தன்னார்வலர்கள் திரண்டு வந்தனர். தெரு நாய்களுக்கும், மலைப் பகுதிகளில் குரங்குகளுக்கும் கூட உணவளித்துக் காத்தனர். மனிதம் என்ற மானுடப் பேருணர்வு, வானளாவ விஸ்வரூபம் எடுத்ததை உலகம் – “பார்க்க” அல்ல; “தரிசிக்க” முடிந்தது.

இப்படியான சூழலில், எழுத்தாளர்கள் இரு கைகளாலும் எழுதவில்லை; அவர்களின் இரு கைகளும் அவர்கள் அறியாமல் தன்னிச்சையாகவே இயங்கி எழுதின என்று சொல்வதே பொருத்தமானது.

எனது முதல் நாவல் தலைப்பே பெருந்தொற்று என்பதுதான். இது பெருந்தொற்று காலத்தில், பெருந்தொற்று நிகழ்த்திய முதல் கட்ட பாதிப்புகளை மையப்படுத்தியது. இதற்குப் பிறகு எழுதப்பட்ட எனது மற்ற இரு நாவல்களான மாதீஸ்வரி, வள்ளிநாயகம் காம்பௌண்ட் ஆகிய நாவல்களில் பெருந்தொற்றின் அடுத்த கட்ட பாதிப்புகள் இடம்பெற்றுள்ளன. மூன்று நாவல்களில் அதை எழுதுமளவு அது அவ்வளவு வலுவான தாக்கத்தை எனக்கே ஏற்படுத்திவிட்டது. சக படைப்பாளிகளுக்கும் அப்படித்தானே இருந்திருக்கும்! கொரோனாவை மையப்படுத்தி பெட்டி பெட்டியாக சிறுகதைகள் எழுதப்பட்டன. கவிதைகள் மூட்டை மூட்டையாகக் குவிந்தன. இதை மையப்படுத்தி சிறுகதைப் போட்டியும் நடத்தப்பட்டது. நீங்களும் நூற்றுக் கணக்கான கொரோனாக் கவிதைகள் எழுதியிருப்பீர்கள் அல்லவா! இதை ஒட்டிய, ‘இனி ஒருபோதும் கடவுளுடன் பேசமாட்டோம்’ என்கிற உங்களின் கவிதைத் தொகுப்புத் தலைப்பு, என்னைக் கவர்ந்த ஒன்று.

உலகிற்குப் பெரும் கேடு விளைவித்த கொரோனா, இந்த வகையில் மனிதத்துக்கும், இலக்கியத்துக்கும் நன்மை செய்திருக்கிறது என்று சொல்லலாம். 

  • சினாப்சிஸ் எழுதிக்கொண்டு கதை எழுதுவதாக சொன்னீர்கள். அப்படியானால் அந்த முறையை அனைவருக்கும் சொல்வீர்களா?

கேள்வியில் திருத்தம் தேவைப்படுகிறது. கதைகளுக்கு அல்ல; நாவல்களுக்கு மட்டுமே சினாப்சிஸ் எனப்படும் கதைச் சுருக்கத்தை முதலில் எழுதுகிறேன். சிறுகதைகளுக்கோ, குறுநாவல்களுக்கோ எனக்கு அது தேவைப்படுவதில்லை. நாவல்கள் அளவில் பெரியவை என்பதால், முன்னதாக கதைச் சுருக்கத்தை எழுதி, அதிலேயே தேவையான செம்மைப்படுத்தல்களை செய்துவிட்டு, பிறகு படிப்படியான முறையில் நாவலை முழுமையாக எழுதுவேன். இது பற்றி சக எழுத்தாள நண்பர்கள் சிலரிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். முகநூலிலும் எழுதியிருக்கிறேன். ஆனால், யாருக்காவது இது பயன்பட்டதா, பயன்படுத்திப் பார்த்தார்களா என்பது தெரியவில்லை.

எழுத்தாளர்களில், குறிப்பாக நாவலாசிரியர்களில், பேன்ட்ஸர்கள் – ப்ளாட்டர்கள் என இரு ரகத்தினர் உள்ளனர். தமிழில் எனக்கு முன் யாரும் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. எப்படியாயினும், எனக்கு இந்த விஷயங்கள் ஆங்கில வாசிப்பில்தான் தெரிய வந்தன. அது குறித்தும் சக எழுத்தாள நண்பர்கள் சிலரிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். முகநூலிலும் எழுதியிருக்கிறேன். நீர்க்கொல்லி நாவலின் முன்னுரைத் தலைப்பே, ஆசீர்வதிக்கப்பட்ட பேன்ட்ஸர்களும், சபிக்கப்பட்ட ப்ளாட்டர்களும் என்பதுதான். அதில் இந்த விஷயம் குறித்து விரிவாக அறிந்துகொள்ளலாம்.

பேன்ட்ஸர்கள் ரகத்தினர் முன் தயாரிப்புகள், திட்டமிடல்கள் எதுவும் தேவையில்லாமல், அல்லது மனதுக்குள்ளாக சிந்தித்து வைத்துக்கொள்கிற மிகக் குறைந்த குறிப்புகள் மட்டுமே வைத்துக்கொண்டு, தன்னிச்சையாகவும் அதி விரைவாகவும், திருத்தங்கள், செம்மைப்படுத்தங்கள் செய்யாமலும், தங்கு தடையின்றி எழுதக் கூடியவர்கள். இத்தகைய ரகத்தினர்களுக்கு கதைச் சுருக்கம் தேவையில்லை. ப்ளாட்டர்கள் இதற்கு நேர் மாறானவர்கள். ஒவ்வொரு வாக்கியத்தையும், ஒவ்வொரு வரிகளையும், ஒவ்வொரு சொற்களையும் யோசித்து, சிந்தித்து, அடித்தல் திருத்தல்கள், மாற்றங்கள் ஆகியவற்றோடு பல முறை, பல விதங்களில் மாற்றி மாற்றி, பல ட்ராஃப்ட்டுகள் எழுதக் கூடியவர்கள். திருப்தியில்லாவிடில் அனைத்தையும் அழித்துவிடவோ, பாதியில் கைவிடவோ செய்வார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நாவல் எழுத்தில் ஏழெட்டு வகையான முன் தயாரிப்புகளும், முறையான படிநிலையும் தேவைப்படும். அதில் ஒன்றுதான் கதைச் சுருக்கம். நான் ப்ளாட்டர் ரகத்தினன் என்பதால் இந்த முறையைக் கையாள்கிறேன். ப்ளாட்டர்களுக்கு இத்தகைய முறையே உகந்தது. பேன்ட்ஸர்களுக்கு இது தேவையில்லை என்பது மட்டுமல்ல; அவர்களால் இந்த முறையில் எழுதவும் இயலாது.

  • கவிதையோடு ஒப்பிடுகையில் நாவல் பயில்வானாக இருக்கிறது. நாவல் என்ற இலக்கிய வகைமைக்குக் கிடைக்கிற வரவேற்பு மற்ற வகைமைகளுக்கு கிடைப்பதில்லை என்பதால் நாவலுக்கு வந்தீர்களா?

இல்லை. நாவல் வடிவத்தில் மட்டுமே சொல்ல இயலும் என்கிற வகையிலான பெரும் கதைகளும், ஆழமும் தீவிரமும் மிக்க பலதரப்பட்ட விஷயங்களும் என்னிடம் உள்ளன. அவற்றை சிறுகதையிலோ, கவிதையிலோ, ஓவியத்திலோ வெளிப்படுத்த இயலாது. எனவேதான் அவற்றை நாவல்களாக எழுதுகிறேன்.

கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகளை விட நாவல்களுக்கு வரவேற்பு இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அது பிரபல எழுத்தாளர்களுக்கே பொருந்தும். அல்லது, பிரபலமற்ற எழுத்தாளரோ புதிய எழுத்தாளரோ எனில் அந்த நாவல் பிரபலமானால்தான் வரவேற்பும், விற்பனையும் வாய்க்கும். நான் பிரபலமற்ற எழுத்தாளன். எனவே, எனது நாவல்களுக்கு இதுவரை வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. இன்றைய நிலவரப்படி குறைந்தபட்ச பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டு, அதில் கணிசமான விற்பனை மட்டுமே அடைந்துள்ளன.

விற்கிற சரக்கை எழுதுகிற ரகம் அல்ல நான். வாசகர்களை மகிழ்விப்பதற்காகவோ, கிளர்ச்சியடைய வைப்பதற்காகவோ ஒருபோதும் எழுதவும் மாட்டேன். சமூகத்திற்குப் பயன்படும் விஷயங்கள், சமூகத்திற்குத் தெரிவித்தாக வேண்டிய உண்மைகள், மனிதர்களையும் வாழ்வையும் பற்றிய எனது அவதானிப்புகள், எனது லட்சியவாதங்கள், நான் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட மக்களின் பல வித வாழ்வியல் ஆகியவற்றைத்தான் நாவல்களாக எழுதுகிறேன்.

  • நவீன இலக்கியத்தில் உங்கள் பங்களிப்பு என்று எஞ்சி நிற்பது எதுவாக இருக்க முடியும்?

‘எஞ்சி நிற்பது’ என்று நீங்கள் கேட்பதிலேயே, ‘சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாதது, சமகாலத்திலேயே தாக்குப் பிடிக்காதது, வரும் காலத்தில் அடித்துச் செல்லப்படக் கூடியது, காலாவதியாகிவிடுவது ஆகியவை நீங்கலாக’ எனும் பொருள் தொக்கி நிற்கிறது அல்லவா!

நீங்கள் அந்த அர்த்தத்தில் கேட்டிருந்தாலும் சரி; வேறு எவ்வாறாகக் கேட்டிருந்தாலும் சரி. என் பதில் இதுதான்:

நான் ஒரு சாதாரண எழுத்தாளன், சுமாரான இலக்கியவாதி. எனக்கு சுமாராக எழுதத் தெரிகிறது, எழுதுகிறேன், அவை பிரசுரம் காண்கின்றன; அவ்வளவுதான்! மற்றபடி, ப்ரபல வகையில் நான் நட்சத்திர எழுத்தாளனும் அல்ல; தகுதி வகையில் சிறந்த படைப்பாளியும் அல்ல. நிச்சயமாக, தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறக் கூடியவன் அல்லவே அல்ல. அந்தத் தகுதி இதுவரை என் எழுத்துகளுக்கு இல்லை என்பதையும் அறிவேன்.

நான் சுமாரான படைப்பாளி; ஆனால், கறாரான விமர்சகன். மற்றவர்களுக்கு மட்டுமல்ல; எனக்கு நானே அப்படித்தான். அதனால் என் எழுத்துகளையும் விலகி நின்று விமர்சனபூர்வமாகவே பார்ப்பேன்; மதிப்பிடுவேன். ‘இதுவரை எத்தனை கதைகள் எழுதியிருப்பீர்கள்?’ என்று கேட்டால்,’குப்பைக் கதைகள் உட்பட சுமார் நூறு கதைகள்’ என்று சொல்கிற வழக்கம், நேர்மை, துணிச்சல் – 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனக்கு இருக்கிறது. என் எழுத்துகளை அப்படி விமர்சிக்கக் கூடிய நேர்மை இருப்பதாலேயே மற்றவர்களின் படைப்புகளை தயவு தாட்சண்மின்றியும், நண்பர்கள் என்று சலுகையோ, சார்போ காட்டாமலும் விமர்சிக்கிற துணிச்சலும் ஏற்படுகிறது. இதனால் நெருங்கிய நண்பர்கள் சிலரின் மனஸ்தாபங்களுக்குக் கூட ஆளாகியிருக்கிறேன். அது பற்றி இப்போதும் எனக்குக் கவலையில்லை.

நவீன இலக்கியவாதி என்று பொதுவாக ஒரு அடையாளத்துக்காக சொல்லிக்கொள்கிறோமே தவிர, நவீன இலக்கியத்துக்கு எனது பங்களிப்பு என்று சொல்லிக்கொள்வதற்குத் தகுதியாக எந்த ஒரு படைப்பையும் செய்துவிட்டதாக நான் எண்ணவில்லை. இலக்கியத்துக்கு என்று சொல்வதானால் கூட, அதிலும் அப்படியொன்றும் ஆகச் சிறந்த படைப்புகள் எதையும் எழுதவில்லை. நான் அடிக்கடி சொல்கிறபடி, கலை – இலக்கியத்தின் கடைசி பெஞ்ச் மாணவன் நான். என் வாழ்நாள் முழுதும் அப்படித்தான் இருப்பேன்.

என் படைப்புகளில் “கலை – இலக்கியத்துக்கு எனது பங்களிப்பு” என்று இறுமாப்பாக சொல்லிக்கொள்ளும் தகுதியோ, மமதையோ எனக்கு இல்லை. படைப்பாளியாக இருப்பதால் நான் படைக்கிறேன்; அவ்வளவுதான். எஞ்சி நிற்பது பற்றிய எண்ணமே எனக்கு இல்லை. அது தேவையும் இல்லை. வலுவுள்ளது ஜெயிக்கும். காலம் கடந்து நிற்கக் கூடிய படைப்புகள் எதுவோ, அவை நிற்கட்டும். அது என்னுடையதாக இருந்தால் என்ன, வேறு யாருடையதாக இருந்தால் என்ன!

  • கடைசி பெஞ்சேதான் வேண்டுமா?

அதுதான் இரு வகையிலும் எனக்குப் பொருத்தமானது.

முதலாவதாக, கலை – இலக்கியத் தகுதியை எடுத்துக்கொள்வோம். அதில் நான் என்றும் மாணவன்தான். என்றென்றும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். ‘மேதைகள் எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பார்கள்’ என கலை உலகில் சொல்வார்கள். அதற்கான உதாரணங்களும் நிறைய உள்ளன. மேதைகளுக்கே அப்படி எனும்போது, கலை – இலக்கியத்தின் அரிச்சுவடி மட்டுமே அறிந்த மாணவனான நான் எம் மாத்திரம்?

தூரிகையை எடுக்கும்போது எனக்கு, ‘இது பிக்காஸோவின் தூரிகை, வான்கோவின் தூரிகை, மத்தீஸின் தூரிகை, காண்டின்ஸ்கியின் தூரிகை’ என்ற எண்ணமும், மதிப்பும், மரியாதையும் உண்டாகிறது. எழுத்தைக் கையாள்கையில், ‘இது தல்ஸ்தோயின் ஊடகம், தாஸ்தயேவ்ஸ்கியின் ஊடகம், யுவான் ருல்ஃபோவின், மார்க்வெஸின், முரகாமியின், மாண்ட்டோவின் ஊடகம்’ என்ற எண்ணமும், மதிப்பும், மரியாதையும் உண்டாகிறது. இவர்கள் முதல் பெஞ்ச்சிலும் இரண்டாவது பெஞ்சிலுமாக அமர்ந்துள்ளனர். எஃப்.என்.சௌஸா, எஸ்.ஹெச்.ரஸா, ஜி.ஆர்.சந்தோஷ் உட்பட நான் மதிக்கும் முன்னோடி இந்திய நவீன ஓவிய மேதைகளும், முன்னோடி இந்திய – தமிழக இலக்கிய மேதைகளும் மூன்றாவது, நான்காவது பெஞ்சுகளில் அமர்ந்திருக்கின்றனர். அதையடுத்து மேலும் ஓரிரு பெஞ்சுகள் உள்ளன. மேதைகள் என்று சொல்ல முடியாத, ஆனால் சிறந்த, மூத்த, மதிப்புக்குரிய படைப்பாளிகள் அதில் அமர்ந்துள்ளனர். நான் கடைசி பெஞ்சில் அல்லாமல் வேறு எங்கே அமர முடியும்? அங்கேயாவது இடம் கிடைத்தாலே பெரிய காரியம்.

அடுத்தது, எனது சித்தன் போக்கு – சிவன் போக்கு, தான்தோன்றித்தனம் ஆகியவற்றுக்கு கடைசி பெஞ்ச்தான் சரியானது.

  • ஓவியர் ஷாராஜைப் பற்றி எழுத்தாளர் ஷாராஜ் உயர்வாகத்தான் மதிப்பார் என்று தெரியும். எழுத்தாளர் ஷாராஜ் பற்றி ஓவியர் ஷாராஜ் என்ன நினைக்கிறார்?

“எழுத்தாளன் ஷாராஜ் ஏழு ஜென்மம் எடுத்தாலும் ஓவியன் ஷாராஜை நெருங்கக் கூட முடியாது” என்று, நீங்கள் உள்ளிட்ட இலக்கிய நண்பர்களிடம் நான் சொல்வது வழக்கம்.  இது என் படைப்புகளையும் விலகி நின்று பார்த்து விமர்சிக்கக் கூடிய எனது கறாரான அணுகுமுறையிலிருந்து வரக் கூடிய மதிப்பீடு. அதைச் சொல்வது எழுத்தாளன் ஷாராஜ்தான்; ஓவியன் ஷாராஜ் அல்ல.

ஆன்மிகம், மெய்ஞானம், நுண்கலை ஓவியம், இலக்கியம் ஆகிய நான்கு துறைகளிலும் தக்க அறிதலும், அனுபவமும் கொண்டவர்கள் எனது முதன்மை ஓவியங்களையும், இதுவரையிலான எனது இலக்கியப் படைப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்வது சரி என்பது புரியும். இத் துறைகளில் குறைந்தபட்ச அறிதலாவது உள்ளவர்கள் https://shahrajpaintings.blogspot.com/ என்னும் எனது வலைத்தளத்தில் உள்ள எனது முதன்மை ஓவியங்களைப் பார்வையிடவும், சுகன் இதழில் வெளியான நேர்காணல், தாந்த்ரீகம் தொடர்பான எனது ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை வாசிக்கவும் செய்தால் ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும்.

ஓவியன் ஷாராஜ், எழுத்தாளன் ஷாராஜ் – இருவருமே படைப்புத் தரத்தில் தமக்குக் கீழே இருக்கக்கூடியவர்களைப் பார்த்து, உங்களை விட நான் மெச்சம் / உயர்ந்தவன் என்று சொல்வதோ, எண்ணுவதோ கிடையாது. அப்படிச் செய்தால் யாரும் வளரவோ, மேம்படவோ வாய்ப்பில்லை. வீணான, நார்சிஸம் எனப்படுகிற சுயமோகம், நான் பெரிய படைப்பாளி என்ற அகந்தை ஆகியவற்றுக்கு மட்டுமே அது வழி வகுக்கும். நம்மைக் காட்டிலும் உயர்ந்த படைப்பாளுமைகளை, மேதைகளைப் பார்த்து மகிழவும், அவர்களை மதிக்கவும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் செய்தால் மட்டுமே நாம் மேம்பட முடியும்; மேன்மையான படைப்புகளைப் படைக்க இயலும்.

ஓவியன் ஷாராஜ் பிக்காஸோ, மத்தீஸ், எஃப்.என்.சௌஸா, காகெய்ன், ஃப்ரைடா காலோ உட்பட, முன்னோடி ஓவிய மேதைகளையும் சமகால ஓவிய மேதைகளையும் பார்த்து, வியந்துகொண்டும், அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டும் இருப்பவன். அவனுக்கு உலக, இந்திய இலக்கிய மேதைகள் சிலரைத் தெரியும். அவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்வான். ஆனால், தமிழில் நட்சத்திர இலக்கியவாதிகள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் உட்பட முன்னணி இலக்கியவாதிகள் அனேகரைத் தெரியாது. அவனுக்கு அது அவசியமும் இல்லை. அவர்களிடமிருந்து அவன் கற்றுக்கொள்ள ஏதும் இல்லை என்பதே காரணம். ஷாராஜ் என்ற எழுத்தாளன் இந்த உலகில், அதுவும் இந்தியாவில்தான், அதுவும் தமிழ் இலக்கியத்தில்தான் இருக்கிறான் என்பதே ஓவியன் ஷாராஜுக்குத் தெரியாது.

  • சிற்றிதழ் காலத்திலிருந்து இணைய இதழ் காலம் வரை எழுதி வருகிறீர்கள். அச்சுப் புத்தகங்கள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன என்ற அச்சம் உங்களுக்கு உண்டா?

சிற்றிதழ் – பேரிதழ் என்பது வேறு; அச்சு – இணையம் என்பது வேறு. நீங்கள் இரண்டையும் கலந்து, கேள்வியில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இணைய இதழ்களிலும் சிற்றிதழ்கள் – பேரிதழ்கள் உள்ளன. இணைய காலம் என்பதால் அனைத்து இணைய இதழ்களும் பேரிதழ்கள் அல்லது வெகுமக்கள் இதழ்களாக ஆகிவிடவில்லை. இந்த நேர்காணல் வெளியாகிற நடுகல் இதழையே எடுத்துக்கொள்வோம். இது சிற்றிதழும்தான், இணைய இதழும்தான். 

ஊடகம் எவ் வகையில் மாறினாலும், இலக்கியம், கலை, மற்ற சில துறை சார் விஷயங்கள் ஆகியன இதழ் வழி வெளியானால் அது சிற்றிதழ் செயல்பாடாகவே இருக்கும். பேரிதழ் / ஜனரஞ்சகம் எனப்படுகிற வெகுமக்கள் இதழ் தரப்பாக பரவலடையாது.

அச்சுப் புத்தகங்கள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனவா என்பது கேள்விக்குரியது. அது நீங்கள் உள்ளிட்ட சிலரின் கருத்தாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. இணைய காலத்துக்கு முன் இருந்ததைக் காட்டிலும் இணைய காலத்தில் ஜனரஞ்சக அச்சு இதழ்கள் பெருகியுள்ளன. விகடன், குமுதம் உள்ளிட்ட குழுமங்களிலிருந்து பற்பல இதழ்கள் வெளிவருகின்றன. அச்சில் வெளியாகிற சிற்றிதழ்களும் கணிசமான அளவு நீடிக்கவே செய்கின்றன. அதைக் காட்டிலும் அச்சு நூல்கள் வெளியீடு, முன்பு எப்போதும் இருந்ததைவிட இந்தக் காலகட்டத்தில்தான் பன்மடங்கு பெருகியுள்ளது. நகரங்கள்தோறும் நடக்கிற புத்தகக் கண்காட்சிகளில் எத்தனையெத்தனை பதிப்பகங்கள் கலந்துகொள்கின்றன! எத்தனை எத்தனை பிரிவுகளில், எத்தனை எத்தனை நூல்கள் விற்பனையாகின்றன! இதையெல்லாம் பார்த்த பிறகும் எப்படி இது போன்ற கேள்வி உங்களுக்கு எழுந்தது என்று வியப்பாக இருக்கிறது.

மலையாளத்தில் ஆடு ஜீவிதம் நாவல் இரண்டு வருடங்களுக்கு முன்பே நூற்றி ஐம்பது பதிப்புகள் கடந்து சரித்திர சாதனை படைத்தது என்கிற தகவலையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழிலும் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையைத் தொட்ட நூல்கள் உள்ளன.

அடுத்ததாக, அச்சு நூல்கள் அழிவை நோக்கிச் சென்றாலும் நான் அது குறித்து அச்சப்பட மாட்டேன். அதற்குத் தேவையும் இல்லை.

முதலாவதாக, காலந்தோறும் நூல்களின் ஊடகம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படித்தான் ஆகவும் செய்யும். அது கால மாற்றம், முன்னேற்றம். முன்பு நம் நாட்டில் ஓலைச் சுவடிகளில் நூல்கள் இருந்தன. பின்பு அச்சு நூல்களாக ஆயிற்று. அப்போது ஓலைச் சுவடிகள் அழிவை நோக்கிச் செல்வதாக அச்சப்பட்டிருந்தால் அது தேவையற்றதும், புரிதலற்றதும்தானே! இப்போதும் அப்படித்தான், இந்தக் காலகட்ட முன்னேற்றப்படி, இணைய இதழ்கள், மின்னூல்கள் சௌகரியம் வந்துள்ளது.

எனக்கு வேண்டியது நூல்கள்தானே தவிர, அச்சு அல்ல. நூல்கள் அச்சில் இருந்தால் என்ன, மின்னூல் / இணைய வடிவில் இருந்தால் என்ன! மேலும் என்னைப் பொறுத்தவரை அச்சு நூல்களை விலை கொடுத்து வாங்கும் பொருளாதார வசதி எனக்கு இல்லை. அதன் காரணமாக எனது வாசிப்பு பெரிதும் வலைத்தளங்கள், மின்னூல்கள் சார்ந்தே இருக்கிறது.

முக்கியமாக, நவீன தாந்த்ரீக ஓவியன் என்ற வகையில் எனது தேடல் பல்துறை வாசிப்பு கொண்டது. தாந்த்ரீகம், யோகம், ஆன்மிகம், மெய்ஞானம், மீயறி ஆய்வியல் (மெடாபிசிக்ஸ்), மெய்யியல், மதங்கள், இறையியல், மானுடவியல், இயற்பியல், உடலியல் உட்பட பதினைந்துக்கு மேற்பட்ட பிரிவுகளில் வாசிக்கவும், ஆய்வு செய்யவும் வேண்டிய தேவை உள்ளது. இதற்கான ஆங்கில நூல்கள் இலவச மின்னூல்களாகவே எனது சேகரிப்பில் உள்ளன. அவை ஒரு டிஜிட்டல் லைப்ரரி என்கிற அளவுக்கு இருக்கும். அவற்றை அச்சு நூல்களாக விலை கொடுத்து வாங்க வேண்டும் எனில் சுமார் பத்து லட்சம் ரூபாயாவது தேவைப்படும். இதே போல என்னிடமுள்ள ஓவியம் சம்மந்தமான ஆங்கில இலவச மின்னூல் சேகரிப்பை அச்சு நூல்களாக விலை கொடுத்து வாங்க வேண்டுமெனில் இரண்டு – மூன்று லட்சம் ரூபாயாவது ஆகும். இவ்வளவு பணத்துக்கு எங்கே போவது?  அச்சில் அந்த நூல்களை வைக்க, பத்தாயிரம் ரூபாய் மாத வாடகை தரக்கூடிய ஒரு பெரிய வீடும் தேவைப்படும். அதற்கு என்ன செய்வது?

இணையமும் மின்னூல்களும் என் போன்ற ஏழைகளின் வரப் பிரசாதம்.

  • பெண் கவிஞர்களைப் பேசிய பல்லேலக்காவை மறுபடியும் எழுதச் சொன்னால் ஆண் எழுத்தாளர்கள் பற்றி எழுதுவீர்களா?

தவறான புரிதல் கொண்ட கேள்வி. குறிப்பிட்ட சில பெண்ணியப் பெண் கவிஞர்கள் பற்றிய கதை அது. அதை நீங்கள் பெண் கவிஞர்கள் பற்றியதாக பொதுமைப்படுத்துவது எந்த வகையிலும் சரியல்ல. மற்ற யாராவதும் உங்களைப் போல தவறான புரிதல் கொண்டிருக்கக் கூடும் என்பதால் விரிவாகவே விளக்கம் அளிக்கிறேன்.

நான் பெண் கவிஞர்களையோ, பெண்ணியத்தையோ, பெண்ணிய எழுத்தாளர் – எழுத்தாளிகளையோ எதிர்ப்பவன் அல்ல. மேலும், பெண்ணியத்தை ஆதரிக்கிற தரப்பினன்தான். அது மட்டுமல்ல. மலையாளத்திலிருந்து தமிழுக்கு நான் மொழிபெயர்த்த ஒரே நூல், பெண்ணிய எழுத்தாளியான ஸிதாரா.எஸ் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு நூல்தான் என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறேன். (அக்னி மற்றும் பிற கதைகள் – ஆழி பதிப்பகம் வெளியீடு).

இன்னமும் சொல்லப்போனால், பல்லேலக்கா கதையில் இடம்பெற்ற பெண்ணியக் கவிஞிகளின் காத்திரமான கவிதைகள் எனக்கு மிகப் பிடித்தமானவையும் கூட. ஆனால், அவர்களின் சில நடவடிக்கைகளில்தான் உடன்பாடு இல்லை. அதைத்தான் அந்தக் கதையில் வெளிப்படுத்தியிருப்பேன். அது அக் கதையில் தெளிவாகவும், வெளிப்படையாகவும் சொல்லப்பட்டிருக்கும். அப்படியிருந்தும் நீங்கள், “பெண் கவிஞர்களைப் பேசிய” என்று சொல்வதைப் பார்த்துவிட்டு பெண் கவிஞர்கள் என்னை பெண் கவிஞர்களின் விரோதி, ஆணாதிக்கவாதி என்றெல்லாம் தவறாக எண்ணிக்கொண்டால் என்னாவது?

     உங்களின் அந்தப் புரிதலே தவறானது என்பதால், ‘ஆண் எழுத்தாளர்கள் பற்றி எழுதுவீர்களா?’ என்கிற கேள்வியே அர்த்தமற்றதாகவும் ஆகிவிடுகிறது. எனவே, அதற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை அல்லவா!

பகடி இலக்கியம் உங்கள் சிக்னேச்சர் என்று சொல்லலாமா?

நிச்சயமாக சொல்லலாம். அங்கதம், நையாண்டி, பகடி, எள்ளல் ஆகிய அம்சங்களில்தான் என்னை, என் ஆளுமை என நான் அடையாளப்படுத்திக்கொள்வதை, முழுதாக வெளிப்படுத்த முடிகிறது.

அது மட்டுமல்ல; ‘ஓவியம் எனக்குக் கொண்டாட்டம்; எழுத்து எனக்கு வதை’ என்ற எனது முத்திரை வாக்கியத்தை நான் அடிக்கடி சொல்வது உங்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் நன்கு தெரியும். எழுத்தில் ஒரு பகுதி எனக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது என்றால் அது நையாண்டியாக எழுதும்போது மட்டுமே. கதை, கட்டுரை, முகநூல் பதிவு எதுவாயினும், எங்காவது லேசான நக்கல், நையாண்டியாவது இருந்தால்தான் அது என் எழுத்து மாதிரி இருக்கிறது. இல்லையெனில் அது வேறு யாருடையதோ எழுத்து என்பது போல உணர்கிறேன்.

நையாண்டி, நகைச்சுவை ஆகியவற்றுக்கு இடமில்லாத கதைகள், நாவல்கள் எழுத நேரும்போது எனக்கு வதையாகிவிடுகிறது.

எனவே, நையாண்டி என் சிக்னேச்சர் என்பது முற்றிலும் பொருத்தமானதே!

  • நீங்கள் நவீன தாந்த்ரீக ஓவியர். தாந்த்ரீகக் கவிதைகளையும் எழுதியிருக்கிறீர்கள். தாந்த்ரீகம் தொடர்பாக கதைகள் எழுதும் எண்ணம் உண்டா?

தாந்த்ரீகத்தில் ஓவியம் மட்டுமே எனது துறை. அது சார்ந்துதான் எனது இலக்கு, சிந்தனை, தேடல், கலை அனுபவங்கள், இன்ன பிற செயல்பாடுகள் யாவும் உள்ளன. ஓவியத்தில்தான் எனது தரிசனங்களை அடைந்திருக்கி|றேன். அதில்தான் எனது உச்சபட்ச கலை வெளிப்பாடுகளையும், ஆன்மிகப் பேருணர்வுகளையும் மிக இயல்பாகவும், எளிதாகவும் நிகழ்த்த முடிகிறது. உள்ளடக்கம், விலை மதிப்பு ஆகிய வகையில் பார்த்தாலும் எனது முதன்மை ஓவியங்கள் ஒவ்வொன்றுமே, எனது ஒட்டு மொத்த எழுத்தாக்கத்தையும் விட பல மடங்கு மேலானது.

நாலைந்து தாந்த்ரீகக் கவிதைகளை எனது நவீன தாந்த்ரீக ஓவியத்துக்கான அலுவல் வலைத்தளத்தில் வெளியிடுவதற்காகவே எழுதினேன். அதன் பிறகு அவ் வகையில் எழுதவில்லை. அதற்குத் தேவையும் இல்லை.

தாந்த்ரீகம் தொடர்பான கதைகள் எழுதுவதற்கு இப்போதைக்கு யோசனை கிடையாது. அதற்கான கதைக் களங்களும் கைவசம் இல்லை. ஆனால், ஆன்மிகம் (பக்தி அல்ல) தொடர்பாக, சமூகத்தன்மை மிக்க நாவல் ஒன்றை எழுதும் எண்ணம் இருக்கிறது. பெருந்தொற்று நாவலில் இடம் பெறும் துலுக்குவார்பட்டி குக்கிராமத்தை மையமாகக் கொண்டு மும்மை நாவல்கள் எழுதத் திட்டம். அதில் பெருந்தொற்றை அடுத்த இரண்டாவது நாவல் மாதீஸ்வரி. அது ஒரு போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது வெளியான பிறகே மூன்றாவது நாவலான ஆன்மிக நாவலை எழுத இயலும். அதில் தாந்த்ரீகத்தின் சில அம்சங்கள் இடம்பெறும். பெருந்தொற்று நாவலில் ஏசு நபி புத்தர் என்ற மெய்ஞானி ஒருவர் இடம்பெறுவார் அல்லவா,… அவரை மையப் பாத்திரமாகக் கொண்ட நாவல் அது. அது எனது முக்கியமான லட்சியவாத நாவலாக இருக்கும்.

  • தொடர்ந்து போட்டிகளில் பரிசைக் குவிக்கிறீர்கள். வெற்றியின் சூட்சுமம் பிடிபட்டுவிட்டதா?

25 ஆண்டுகளுக்கு மேலாக எழுதியும், போட்டிகளில் நான் பெற்ற பரிசுகள் மிகக் குறைவானவையே. மேலும், பரிசு பெற்றதைக் காட்டிலும் பெறாமல் போன போட்டிகள் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். அடுத்தடுத்து சில பரிசுகள் கிடைத்ததால் பரிசுகளைக் குவிப்பதாக உங்களுக்குத் தோன்றியிருக்கும்.

இலக்கியப் போட்டிகளில் பரிசு பெறுவதற்கு பெரிய சூட்சுமம் ஒன்றும் இல்லை. அந்தந்தப் போட்டிகளுக்குத் தக்கபடி எழுத வேண்டும். நடுவர்களின் தீர்ப்புத் தன்மை, இலக்கியத் திறன், மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப தெரிந்தெடுப்புகள் மாறுபடவும் செய்யும். அகாடமி உள்ளிட்ட விருது அமைப்புகள் பலவற்றிலும் பரிந்துரை, அரசியல், நுண் அரசியல், ஊழல், முறைகேடுகள், தவறான தெரிவுகள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றோ, பலதோ இருப்பது போல சில இலக்கியப் போட்டிகளிலும் திரைமறைவு வேலைகள் நடப்பது உண்டு.

  •  தஞ்சை ப்ரகாஷ் உடன் நேரடியாகப் பழகியவர் நீங்கள். அவர் இன்னும் கொண்டாடப்பட்டிருக்கவேண்டிய படைப்பாளி என்ற எண்ணம் உங்களுக்கும் உண்டா?

ஆம்! அது மட்டுமல்ல. அவர் உயிருடன் இருந்தபோதே கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. ஆனால், இது அவருக்கு மட்டுமல்ல. இங்கு மட்டும் அல்ல. இக் காலத்தில் மட்டுமல்ல. எக் காலத்திலும், உலகம் முழுக்கவும், தீவிர கலை – இலக்கிய படைப்பாளிகள் பலருக்கும் நடப்பதுதான்.

வின்சென்ட் வான்கோவின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் இன்று சில நூறு மில்லியன் டாலர்களுக்கு விலை போகின்றன. எப்பேர்ப்பட்ட மாமேதை அவன்! ஆனால், அவன் வாழ்ந்த காலத்தில் ஒரே ஒரு ஓவியம் கூட, சாதாரண மலிவு விலைக்குக் கூட விற்பனையானதில்லை.

அவனது தம்பி தியோ, இரு வேளை உணவுக்காக அனுப்புகிற தொகையில், ஒரு வேளை உணவை மட்டும் உண்டுகொண்டு, மறு வேளை உணவுக்கான பணத்தில் தூரிகை, சாயம், கித்தான் உள்ளிட்ட ஓவியப் பொருட்களை வாங்கி, ஒப்பற்ற ஓவியங்களை வரைந்தவன் அவன். சக ஓவிய நண்பரான தெர்ஸ்டீக் என்பவரும் அவ்வப்போது அவனுக்கு உணவுக்கான பணத்தைத் தந்து உதவுவார். வான்கோ தன் தம்பிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இப்படி ஒரு வரி இடம்பெற்றுள்ளது: ‘எனது ரொட்டி உன்னிடமும் தெர்ஸ்டீக்கிடமும் உள்ளது. அதை நீங்கள் என்னிடமிருந்து பறித்துவிடுவீர்களா?’

இதைச் சொன்னதும் உங்களுக்கு பாரதியும் புதுமைப்பித்தனும் உடனே ஞாபகத்துக்கு வந்திருப்பார்கள். இதே போல கஷ்டப்பட்ட படைப்பாளிகள், படைப்பாள மேதைகள் பலரும் நினைவுக்கு வரலாம். அவரவர் காலத்தில் கொண்டாடப்படாவிட்டாலும் பரவாயில்லை; சராசரி வாழ்வாவது அமைய வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

  • உங்களுடைய அலைபேசி வாசகமாக கலையே வாழ்வு என்று அமைத்திருக்கிறீர்கள். ஏன்?

புலனம் (வாட்ஸப்) ஸ்லோகனாக கலையே வாழ்வு என்னும் வாசகத்தை வைத்துள்ளது பற்றிக் கேட்கிறீர்கள். நான் கலைஞன். எனக்குக் கலைதான் வாழ்வு. அதைத்தான் ஸ்லோகனாக வைத்திருக்கிறேன். ‘வரையாத நாட்கள் யாவும் வாழாத நாட்கள்’ என்றான் வின்சென்ட் வான்கோ.

  • தாந்த்ரிக் ஓவியங்களை ஆபாச ஓவியங்களாகப் புரிந்து கொள்கிற பொது புத்தி இன்றும் கூட உண்டு. இத்தகைய சூழலில் சுகன் இதழில் நீங்கள் வரைந்த ஓவியங்களை என்னால் இன்றும் கூட மறந்துவிட முடியவில்லை. தொடர்ந்து ஐந்து இதழ்களில் சுகன் வெளியிட்ட உங்கள் நேர்காணலும்தான். அப்போது ஏற்பட்ட சலசலப்புகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?

தாந்த்ரிக் ஓவியங்களை ஆபாச ஓவியங்களாகப் புரிந்துகொள்வது பெரும்பாலும் ஆப்ரகாமிய மதத்தவர்களும், புரிதல் அற்ற சில இந்துக்களும்தான்.

இந்து, பௌத்த, சமண மதங்களில், சில ஆலயங்களிலேயே பாலியல் சிற்பங்கள், ஓவியங்கள் இருக்கும். கஜுராஹோ, கோனார்க் ஆலயங்கள் கலைச் சிறப்பு மிக்க, அப்பட்டமான, பல வகை பாலியல் சித்தரிப்பு சிற்பங்களைக் கொண்டவை. இவை தாந்த்ரீக வழமையில் அன்றி, சாதாரண மக்கள் புழக்கத்திலேயே, அன்றாட வாழ்க்கையில் காணும்படியாக உள்ளவை. நாட்டார் வழிபாட்டு ஆலயங்களிலும் இத்தகைய சிற்பங்கள் உள்ளன. புனிதமானதும் இறை வழிபாட்டுக்கு உரியதுமான ஆலயங்களில் நிர்வாணம், பாலியல், ஆபாசம் ஆகியவை இடம்பெறக் காரணம் என்ன? பாலியல் வாழ்வின் அங்கம் மட்டுமல்ல, அதுவே வாழ்வின், சகல உயிரிகளின், உயிரின் தோற்றத்துக்கும், உலக உயிர் ராசிகளின் தொடர் இயக்கத்துக்கும் காரணம் என்பதை நினைவூட்டவும்; பாலியலும் புனிதமானதே, இறைத்தன்மையோடு தொடர்புடையதே என்பதை சுட்டிக் காட்டவும்தான்.

உலக நாடுகள் முழுக்க பண்டைய கலாச்சாரங்கள் பலவற்றிலும் நிர்வாணம், பாலியல் ஆகியவற்றை சித்தரிக்கும் சிற்பங்கள், ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.

ஆப்ரகாமிய மதங்கள் பாலியலை விலக்கப்பட்ட கனிகளில் ஒன்றாக வைத்துள்ளன. (விலக்கப்பட்ட இரண்டாவது கனி, மெய்ஞானம்). அதனால் அவர்களுக்கு இந்து மதம் மற்றும் அதன் கிளை மதங்களில் காணும் பாலியல் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவை ஆபாசமாக மட்டுமே தெரியும். அவற்றின் தத்துவங்கள், தாத்பரியங்கள் தெரியாது. தெரிந்துகொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முற்படவும் மாட்டார்கள்.

இந்துக்களிலேயே பெரும்பாலானவர்களுக்கு இது பற்றித் தெரியாது. ஏதோ சாஸ்த்திரம், சம்பிரதாயம்; முன்னோர்கள் காலம் காலமாக செய்து வருவது என்ற அளவில் அதைக் கண்டும் காணாத மாதிரி இருந்துவிடுவார்கள். இன்றைய தலைமுறையினர் சிலர், ‘நாகரிகம் குறைந்த முற்காலத்தில் எப்படியோ இருந்திருக்கலாம். இன்றைய காலத்தில் இத்தகைய ஆபாசங்கள் பொதுவெளியில் இருப்பது தகாது’ என்று சொல்கின்றனர். கோவில் சிற்பங்களுக்கே அப்படி எனும்போது, தாந்த்ரீக ஓவியங்களுக்கு ஆபாச ஓவியங்கள் எனும் முத்திரை குத்தப்படுவது ஒன்றும் வியப்பல்லவே!

சுகன் இதழில் அட்டைப் படமாக வெளியான எனது ஓரு யக்ஷி ஓவியம் தொடர்பாக ஒரு வாசகர் கடிதம் அவ்விதழுக்கு வந்திருந்தது. ‘இப்படி நிர்வாண ஓவியத்தை அட்டைப்படமாக வெளியிட்டிருக்கிறீர்களே,… ஆபாசமாக இருக்கிறது. இதழின் மறு பக்கத்திலும் பின் அடித்து பெட்டிக் கடைகளில் தொங்கவிட்டால் நன்றாக விற்பனை ஆகும்’ என்று எழுதியிருந்தார் அவர். சரோஜாதேவி ரக பாலியல் புத்தகங்களை அப்படி இரு புறமும் பின் அடித்து விற்பார்கள். அதைத்தான் அவ்வாறு சொல்லியிருந்தார். அந்தக் கருத்து தவறு என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்காக சுகன் அந்த இதழ் பிரதிகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு, அவரது குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடைக்குச் சென்று, கடைக்காரரிடம் விபரம் தெரிவித்து அட்டைப் படத்தைக் காட்டினார். “இதைப் பார்த்தால் ஆபாசமாகவோ, காம உணர்வுத் தூண்டலாகவோ இல்லையே! பயமாக அல்லவா இருக்கிறது!” என்றார் கடைக்காரர். சுகன் அதோடு நிற்கவில்லை. கைவசம் இருந்த இதழ்களை மறு புறமும் பின் அடித்து, அந்தப் பெட்டிக் கடையில் விற்பனைக்குத் தொங்கவிட்டார். ஒரு மாதம் ஆகியும் ஒரு இதழ் கூட விற்பனையாகவில்லை. இதை அடுத்த இதழில் தெரிவித்து, அந்த வாசகரின் பார்வையும், கருத்தும் தவறு என்பதை நிரூபித்தார்.

ஏ.நாகராஜனின் நிர்வாண தாந்த்ரீக கோட்டோவியம் ஒன்று சுகன் இதழில் வெளியானபோது மேலாண்மை பொன்னுச்சாமி பாலியல் இதழ் போல் இருக்கிறது என வாசகர் கடிதம் எழுதியிருந்தார். நான் அதற்கு எதிர்வினையாக அடுத்த இதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதி, இந்து மதத்திலும், தாந்த்ரீகத்திலும் இது இயல்பான நடைமுறை என்பதை விளக்கியிருந்தேன்.

சில சமயம் எளிய பாமர மக்களுக்கு இது போன்ற விஷயங்களில் போதுமான அறிதலும் புரிதலும் இருக்கும். மெத்தப் படித்தவர்கள், முற்போக்குவாதிகள், சிந்தனாவாதிகள் தரப்பில் சிலருக்கு அந்த அறிதலும் புரிதலும் இல்லாதிருப்பதுதான் முரண்.

  • எழுத்திலும் ஓவியத்திலும் உங்களின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

கடந்த ஆறு வருடங்களாக எனது ஓவியப் பணியும், கண்காட்சித் திட்டமும் முடங்கியிருந்தன. சில மாதங்களாகத்தான் அப் பணியை மீண்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். அடுத்த வருடத்தில் கண்காட்சி நடத்த வேண்டும் என்பதுதான் இப்போது உள்ள முக்கியமான முதல் திட்டம். இனிமேல் எனது செயல்பாடுகளில் அதிகபட்சம் ஓவியத் துறையிலேயே இருக்கும். அடுத்தடுத்த திட்டங்கள் அதை ஒட்டியே அமையும்.

எழுத்தில் அப்படி திட்டங்கள் என்று பெரிதாக எதுவும் கிடையாது. சிறுகதைகளில் இனி நான் எழுத வேண்டியது என்று முக்கியமான எதுவும் கைவசம் இல்லை. சிறுகதைகளில் எனக்கு ஆர்வமும் இல்லை. எழுத்தில் இனி எனது இயங்கு களம் நாவல்தான். நாவல்களாக எழுத வேண்டியவைதான், பாதி எழுதிய நிலையிலும், இனி எழுத வேண்டியதுமாக சில கதைகள் உள்ளன. வாய்க்கும்போது அவற்றை எழுதுவேன்.

இத்தனை காலம் எழுத்தில் இயங்கியிருக்கிறேன். சொல்லிக்கொள்ளும்படியாக சம்பாதிக்கவும் இல்லை; இலக்கிய வரலாற்றில் என் பெயர் இடம்பெறவும் இல்லை; பெரிய விருதுகள் எதுவும் வாங்கியதும் இல்லை. சாஹித்ய அகாடமி விருதாவது வாங்க முடிந்தால், அந்தப் பட்டியலிலாவது என் பெயர் இடம் பெற்று லேசான ஆறுதல் அளிக்கும். நாவல் மூலம் அதை வாங்குவதற்கு வேண்டுமானால் இனி திட்டமிடலாம்.

******

நேர்காணல் : ஜே. மஞ்சுளாதேவி

ஜே. மஞ்சுளாதேவி

கோவை வானம்பாடி இயக்கம் பற்றி, கவிஞர் சிற்பியின் வழிகாட்டலில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். உடுமலையைச் சேர்ந்தவரான இவர், ’பாப்பாவின் நட்சத்திரம்’ ’சுற்றிலும் மனிதர்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்’ ’நிலாத் தெரியாத அடர்வனம்’ ’இனி ஒருபோதும் கடவுளிடம் பேச மாட்டோம்’ ’உழத்தி’ ஆகிய ஐந்து கவிதைத் தொகுப்புகள் உட்பட பதினைந்து நூல்கள் வெளியிட்டுள்ளார். கவிதையே வாழ்வாக என்கிற தலைப்பில்கவிஞர் சிற்பி பற்றிய இவரது அண்மை நூல் வாழ்க்கை வரலாற்று நூல்களின் பதிவில் ஒரு புதிய எழுத்துமுறையைக் கொண்டது. இவரது கவிதைகளில் பொதிந்துள்ள கதை கூறல் இவரது கவிதைகளின் தனித்தன்மையாக திகழ்கிறது. சிற்பிக்கும் கோவை ஞானிக்கும் இவர் மாணவி. திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது, நெருஞ்சி இலக்கிய விருது பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *