தாய் வீட்டிலிருந்து திரும்பும் ஒவ்வொரு முறையும் அவள் மீது அவன் சுணக்கமாகவே இருந்தான். சொல்லிவிட்டுப் போனது போல ஒருமுறை கூட அவள் சரியாக திரும்பி வந்ததில்லை. அங்கிருந்து அவள் கிளம்பும் நாளில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போயிருக்கும். படுத்த படுக்கையாகிவிட்ட சில பெரிசுகள் பொசுக்கென உயிரை விட்டிருக்கும். அல்லது கிளம்ப மனமில்லாதபடி தாய் வீடு அவளை முடங்க வைத்திருக்கும். ஏதோ ஒரு காரணம் கிடைத்துவிடும் அவளுக்கு. அவள் என்னதான் சரியான காரணம் கொண்டு வந்தாலும் அவனுக்கு அதிலெல்லாம் உடன்பாடு ஏற்படுவதேயில்லை. ஊடல் ஊடல்தான். சில நாட்கள் வரை அவன் முகம் கொடுத்துப் பேசமாட்டான். அவன் ஒதுங்கி ஒதுங்கிப் போக அவள் நெருங்கி நெருங்கி வந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பாள்.
தாய் வீட்டின் வாசலை மிதிக்கும்போதிருக்கும் சந்தோஷம் ஊரின் எல்லையைக் கடந்து திரும்பும்போது அவளிடம் மங்கிப் போயிருக்கும். கண்ணோரம் சில மணிகள் மின்னிக் கொண்டிருக்கும். வதங்கிப்போன முகத்தோடு புருஷன் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருப்பாள். ஊரின் தெருக்களில் அலைந்து பழகிய கால்கள் தாய் வீட்டின் வாசல்படியைத் தாண்டும்போது தொய்ந்து விடுகின்றன. ஊரில் அவளைத் தெரியாதவர் யாருமே இல்லை. யார் வீட்டில் சின்னஞ்சிறிய குழந்தைகள் உள்ளதோ அங்கெல்லாம் அவள் காலடி பதிந்திருக்கும். அம்மாக்களே பயந்திருக்கும் வேளையில் அவள் தன் வாழைத் தண்டு கால்களை நீட்டிப் போட்டு குழந்தைகளைக் குளிப்பாட்டும் விதமே தனியழகு. சூரிய ஒளியில் மின்னித் தெறிக்கும் நீர்த்திவலைகளின் பின்னணியில் அவளையும் குழந்தையும் ஒருசேரப் பார்க்கும் யாருமே அவள்மீது வாஞ்சை கொள்ளாமல் போக முடியாது.
அதையெல்லாம் பிரிந்து அவனோடு வந்துவிட்டதற்காக அவள் ஒருபோதும் வருந்தியதேயில்லை. அவனது தொடுகை அவளை பொலிவு கூட்டி மெருகாக்கியது. ஒரு சிறுமி போல வளைய வந்தவளை அவனது விரல்கள் வனைந்து வனைந்து ஒரு பருவப்பெண்ணைப் போல நளினமாக்கியது. ஊரில் அவள் எல்லோருக்கும் பிடித்தமானவளாக இருந்தாலும் அவளுக்குப் பிடிக்காத சிலரும் ஊரில் இருந்தனர். அவளை நிழல்போல் தொடர்ந்த பாம்புகளின் கண்களிலிருந்து எப்படியோ தப்பி வந்து அவனுடைய கைகளுக்குள் பாதுகாப்பாய் பொதிந்துவிட்ட ஆசுவாசம், அவன்பால் அவளுக்கு எல்லையற்றப் பிரியம் வைக்க போதுமானதாக இருந்தது.
குழந்தை பிறக்கும் வரை அவனது நேசம் ஒரு இழைகூட அறுபடாமல் அப்படியே அவளைப் பிணைத்துக் கிடந்தது. இப்போதுதான் அவன் பார்வையில் சில புதிர்கள் கிளம்பி கொசுக்களைப் போல அவளைக் கடித்துக் கொண்டும் ரீங்காரமிட்டுக் கொண்டும் கிடக்கின்றன. அவனை நீங்கி தாய் வீட்டு முகங்களைப் பார்த்து வந்தால் தான் சற்று பிடிப்பு கிடைக்கிறது வாழ்வில்.
அது வசந்த காலமாக விரிந்திருந்தது. பொழுது முச்சூடும் பூக்கள் பூப்பதும் காய்கள் கனிவதுமாக இருந்த நேரம். அவன் மடி ஒரு சொர்க்க பூமியாகியிருந்தது. மீண்டும் ஒரு கருவறைக்குள் வந்துவிட்டது போல அவள் நிம்மதி கொண்டிருந்தாள்.
தாய் வீட்டின் புழுதி படிந்த தெருக்களில் அலைந்து திரியும் வெயில் அவளை அழகூட்டிக் கொண்டிருந்த காலத்தை நினைவு கூர்ந்தாள். ஒரு மாலைப் பொழுதில் அவள் ருதுவானது முதல் அவளுடைய அங்கங்களின் வளமையை தாய் வீட்டு மண் கொழித்துக் கொழித்து செழுமையாக்கியது. வட்டக் கரிய விழியால் அவள் எல்லோருடைய மனசுக்குள்ளும் போய் திரும்பிக் கொண்டிருந்தாள். பாவாடையின் கீழ் நுனிகளை விசிறி விசிறி நடக்கும்போது ஒரு பறவை இறகுகளை அசைத்தபடி ஊரின் தெருக்களை வலம் வருவதாகத்தெரியும். பறவை வேட்டையாட நிறைய விடலைகள் மூலை மூலைக்கு திரண்டார்கள். எல்லோர் கவண்களும் குறி தப்பின. அவள் ஒரு மாயப் புள்ளியாகி வித்தை காண்பித்துக் கொண்டிருந்தாள்.
அதிகாலையில் வெளிவாசல் போக செருப்புகளை அவள் பாதங்களில் நுழைக்கும்போதே கழுகுகளின் மூக்குகள் விடைத்துக் கொள்ளும். அவள் உள் ஆடைகளை கொஞ்சம் தூக்கியவாறு ஒரு பறவை போலமர்ந்த ஒரு கருக்கிருட்டில் ஒருவன் மலை மந்திபோல் மரத்திலிருந்து திடீரென அவளருகே குதித்தவேளை அவள் ஒரு நத்தையாகச் சுருங்கிப் போனாள். அன்றிலிருந்து அவள் மலச் சிக்கலுக்கு உள்ளாகி பயந்து பயந்து காலம் கழித்துக் கொண்டிருந்தாள். (அவசரமாயிருந்தாலும் யாரையாவது துணைக்குத் தேட வேண்டிய நிலையில்).
அவன் தோள்களில் முகம் புதைத்துக் கொண்டவளுக்கு அழுகை தாளவில்லை. தாங்க முடியாத அன்பை வெளிப்படுத்தி அவளை அதில் முக்கி முக்கி எடுத்தான் அவன். மோக உச்சத்தில் அவள் வாயில் சொற்கள் புற்றீசல்கள் போல புறப்பட்டு பொதபொதவென பறந்து வந்தன. கள்ளுண்ட மயக்கத்தில் அவள் போதையின் கிறக்கத்தில் பிதற்ற ஆரம்பித்தாள். தேம்பலும் தழுவலுமாக அவள் அவனைப் பின்னிக் கிடந்தாள்.
தாய் வீட்டின் மண்ணில் அவள் பாதத் தடங்களைக் கணக்கில் கொண்டு வல்லூறுகள் அவளைத் துரத்தியடித்த நாட்களை அவனிடம் சொன்னாள். அம்மாவிடமும் அப்பாவிடமும் எதையுமே அவள் வாய் திறந்து சொல்லியதில்லை. அவர்களுக்கு அவள் சொல்லாமலே எல்லாமும் தெரிந்திருந்தது. அவசர அவசரமாக அவளை ஏழு கடல் ஏழு மலை தாண்டி யாரோ ஒருவனின் நெஞ்சுக் குழிக்குள் பத்திரப் படுத்திவிட மூலைக்கு மூலை அலைந்தார்கள். கடைசியாக அவன் கையில் ஒரு புறாக் குஞ்சைப் போல தஞ்சமடைந்திருப்பது அவளது அதிர்ஷ்ட காலம் என்றே அம்மாவும் அப்பாவும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள்.
மார்கழியின் பனிதூவும் வாசலில் அவள் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். தெரு முக்குகளில் மங்கலாக சில உருவங்கள் அவள் விரல் நுனிகளை உரசியவாறு போய் வந்து கொண்டிருப்பதை வைத்துக்கொண்டிருக்கும் புள்ளிகளைக் கொண்டே கணித்துவிடுவாள். கோலங்களின் மையத்தில் வந்து விழும் செக்கச் செவேலென்ற ரோஜாப் பூக்களையும் இதயம் சுமந்த காதல் கடிதங்களையும் அவள் மௌனமாக துடைப்பத்தால் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டு போய் மூலையிலிருக்கும் குப்பைக் குவியலில் சேர்த்துவிடுவாள்.
அவளுக்கு யாரையுமே காதலிக்க விருப்பமிருந்ததில்லை. அதைச் சொன்னபோது அவன் அவளை நம்ப முடியாதவன் போலப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய நெஞ்சின் மேல் அவள் கவிழ்ந்து கிடந்ததால் மாறிய அவனது முகபாவத்தை அவளால் கண்டு கொள்ள முடியவில்லை. வழிந்தோடும் சூடான கண்ணீருக்கிடையே ஒரு ஓடம் போல அவளது வார்த்தைகள் மிதந்து மிதந்து போய்க் கொண்டிருந்தன.
“மனசுல வச்சுக்க முடியல மாமா…” என்றபடி அவனை இறுக்கிக் கொண்டிருந்தாள். சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தபோது அவனுடைய கண்களில் ஏதேதோ மர்மங்கள் புகுந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிப் போய்விட்டாள்.
“மாமா ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க…”குழறிய நாக்குக்கிடையில் வார்த்தைகள் கடிபட்டு மரித்தன.
அவன் பதில் பேசாமல் அவளை இறுக்கிக் கொண்டான்.
தாய் வீட்டிலிருந்து திரும்பியதும் அவன் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பான்.
”ஊர்ல எல்லாரும் சௌக்கியமா…”
அந்தக் கேள்வியை அவன் அதற்கு முன்பே நிறைய தடவைகள் கேட்டிருந்தும் அவள் அதற்குப் பதில் சொல்லி மாய்ந்து போனதையும் அவன் திட்டமிட்டு மறந்து திரும்ப திரும்ப அந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டிருந்தான்.
அவன் கேட்க விரும்பிய வேறொரு செய்தி அவனது கேள்வியில் பொதிந்துக் கிடப்பதை அவள் புரிந்து கொள்ளாமலே வேண்டிய காலம் அலுக்காது பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
தாய் வீட்டு மண் அவளை மெருகூட்டி விடுவதாக அவன் சொல்லியபோது அவளது கன்னங்கள் பூரித்து உப்பின. அவன் குரலில் ஏதோ ஒன்றை மறைத்து வைத்து அவளுக்குக் கன்னம் வைப்பதை அவளால் ஊகிக்க முடியவேயில்லை.
குழந்தை பிறக்கும் முன்புவரை அவனுடைய கதகதப்பில் அவள் ஒரு பொரியாத முட்டையைப் போல அடைகாக்கப்பட்டு வந்ததை நினைக்கும்போது இப்போதும் அவளுக்குத் துளிர்த்துவிடுகிறது.
பிரசவித்த சிசுவோடு தாய் வீட்டில் தங்கியிருந்தபோது ஒருமதிய வேளையில் அவன் திடீரென பிரவேசித்தான். அப்போது பார்த்து லோகு அங்கே உட்கார்ந்து குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
லோகுவைப் பார்த்ததும் அவனது முகம் கருத்துப் போனது. குழந்தையை வாங்கிக் கொண்டு ஏதும் பேசாமல் அதன் முகத்தையே வெறித்தபடி உட்கார்ந்திருந்துவிட்டு அதிகாலையில் கிளம்பிப் போய்விட்டான்.
லோகு அவனிடம் நலம் விசாரித்ததை ஒரு வறண்ட புன்னகையில் அவன் சமாளித்த விதத்தை அவள் துல்லியமாகப் பார்த்து விட்டாள்.
லோகுவைப் பற்றி அவனிடம் அவள் ஏற்கனவே சொல்லி இருந்தாள். விடலைகளுக்கு மத்தியில் லோகு ஒருவன்தான் அவள் கண்களுக்கு மனிதனாகத் தெரிந்தான். அவள் மீது லோகு கருணையோடு இருந்தான். திடீரென ஒருநாள் அவளைக் காதலிப்பதாக லோகு சொன்னதும் அதற்குப் பதிலாக அவள் சிரித்தபடியே மறுத்துவிட லோகு கலங்கியபடியே திரும்பிவிட்டான். அதைச் சொல்லி அவனிடம் மாய்ந்து மாய்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.
லோகுவின் வீடு அவளுடைய தெருவிலேயே இருந்தது. ஊரிலுள்ள் பள்ளியில் வாத்தியார் வேலை பார்க்கும் ஆனந்தன் மாமாவின் இரண்டாவது மகன்தான் லோகு. ஆனந்தன் மாமாவுக்கு மூன்றுமே ஆண்பிள்ளைகள். அதனாலேயே அவள் ஆனந்தன் மாமாவின் பெண் போல அவரது வீட்டில் வளைய வந்தாள். அவள் மூக்கைப் பிடித்து செல்லமாகக் கிள்ளுவதில் மட்டுமே அவர் ஒரு அன்பான மாமாவாக இருந்தார்.
“ஆனந்தன் மாமா வீட்டுல எல்லாரும் சௌக்கியமா… அந்தப் பையன் லோகு இன்னும் ஊருலதான் சுத்திக்கிட்டுத் திரியறானா…’
அவன் கேள்வியின் அர்த்தம் அவளுக்கு அப்போதுதான் புரிய வந்தது. ஊரிலிருந்து திரும்பும் ஒவ்வொரு முறையும் அவன் இந்த கேள்வியை எழுப்பிவிட்டுதான் மறு பேச்சே பேசுவான்.
அது ஒரு ஐப்பசி மாத இளமாலை. வேப்ப மரங்களில் இலைகளின் பச்சை கெட்டியாகிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்து நனைந்து தாவரங்களின் உயிர் செழித்து மினுங்கியது.
ஒரு தவமுனிவன் கண்மூடித் தியானிப்பது போலவும் பின் சிவந்த விழிகளைத் திறந்து உலகை உற்று நோக்குவது போலவும் வானம் மேக இமைகளை திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தது.
அவன் பணி முடித்து வந்திருந்தான். குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அவள் துவண்டுபோய் படுக்கையில் கிடந்தாள். அவன் வந்ததும் துள்ளிக் கொண்டு எழுந்து கொள்ள முடியவில்லை. நேற்று இரவே அவனை உலுப்பி எழுப்பி கதறிவிட வேண்டும் என்று நினைத்தாள்.
இரவின் கனத்த மௌனத்தை கீறிக்கொண்டு அந்தக் கனவு அவளுள் முளைத்தது. திடுக்கிட்டு முழித்தபோது குழந்தை கவிழ்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தது. குழந்தையை அணைத்தபடி அவனும் நினைவற்று கிடந்தான்.
எழுப்ப மனமில்லாமலும் தூங்க வழியில்லாமலும் மரக் கட்டை போல் கிடந்தாள். அதிகாலையில் அயர்ந்து தூங்கும் அவளை எழுப்பாமலே அவன் வேலைக்குப் போய்விட்டான்.
அவன் முகத்தில் விழிப்பதற்கே அவளுக்குப் பயமாகவும் ஏதோ போலவும் இருந்தது. அது அவளுள் எப்போது நுழைந்து ஒளிந்திருந்தது என்று யூகிக்கவே பயந்து தடம் தெரியாத பாதையில் மனதை அலையவிட்டாள். அவளால் இப்போதும் அதிலிருந்து மீளவே முடியவில்லை. கனவின் வரைபடம் அவளைப் போர்த்திக் கொண்டு மௌனமாக கிடந்தது.
“மாமா…ஒரு நிமிஷம் பக்கத்துல வர்றீங்களா…”
அவன் அவளை அர்த்தத்தோடு பார்த்தான். இப்போதெல்லாம் அவன் பார்வையே அப்படித்தான். அவளை நெருங்கவே யோசிப்பது போலிருக்கும் அவனது பாவனை.
அவன் பக்கத்தில் வந்தான். ஒரு புதிர் தன்மையை அவன் முகம்
தேக்கியிருந்தது.
“மாமா… தப்பா எடுத்துக்குவீங்களா…”
அவனது மார்பில் முகம் புதைத்து விம்மியபடி கேட்டாள்.
“சொன்னாதானே என்னன்னு விளங்கும்…”
எரிச்சல் படர்ந்தது அவனது குரலில்.
“நேத்து ஒரு கனவு வந்துச்சு. எப்படின்னு என்னால புரிஞ்சிக்க முடியவே இல்ல மாமா…”
“என்ன அது…’
“ம்… உங்களையும் நம்ப செல்லத்தையும் விட்டுட்டுப் போய் அந்த லோகுவோட நான் வாழற மாதிரி…”
முடிக்க முடியாமல் அவள் துவண்டாள்.
அவள் கேள்வி அவனைச் சபித்தது.
அவன் கல்லானான்.
00
சுப்பு அருணாச்சலம்.
நான், சுப்பு அருணாச்சலம் என்ற பெயரில் 1998 முதல் சிறுகதைகளும் கோகிலாராஜ் என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறேன். நெய்வேலி சொந்த ஊர்.
ரேகை பதிந்த வீடு எனது முதல் தொகுப்பு 2002 -ல் வந்தது. சுந்தரசுகன் எனது யுத்தம் என்ற முதல் கதையை வெளியிட்டது. பிறகு ஆனந்த விகடன், கணையாழி,செம்மலர், சதங்கை,தினமணி கதிர் முதலிய இதழ்களில் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன.