எப்போதும் இரவு நேரத்திற்கு ஐந்து முதல் பத்து தோசைகள் வரை உண்கிற பொன்னான் இரண்டு தோசைகளுக்கு மேலே ஏற்றம் இல்லாமல் நிறுத்திவிட்டான்.
“போதும் மா வகுறு நெம்பிருச்சாட்ட இருக்குது இதுக்கு மேல உண்க முடியலீம்மா” என்றான் பொன்னான்.
“கம்பெனிலிருந்து வரையில எதாவது பசங்க கூட போயி பலகாரம் எதாவது உண்டியா?”
“இல்லீம்மா”
“வகுறு உப்புசுமாட்ட இருக்குமா “
“சரி போதும் எடு”
இரவு நேர வேளையில் தோசையும் தக்காளி துவையல் இருந்தால் மோதும் குறைந்தது பத்து எண்ணங்களாவது உண்டு விடும் பொன்னானுக்கு ஏனோ இரண்டுக்கு மேலே மனம் ஒப்பவில்லை.
“ஏண்டா உனக்கு புடிக்குமின்னுதா கை நோக மாவாட்டி வெச்சுருக்க” என்று கோவித்துக் கொண்டாள் தாய் கன்னியாத்தாள்.
தோசை சுட்டு மாவு மூஞ்சுருது என்று கோவித்துக் கொள்ளும் அதே தாய் தான் இன்று மகன் சாப்பிட மறுக்கும் போது விசனப்படுகிறாள்.
“எப்படியாவது வர வைகாசிகுள்ள என் பையனுக்கு ஒரு புள்ளய பார்த்து கட்டி வெச்சுருனும்” என்று மனதிற்குள் முனுமுனுத்தபடியே நகர்ந்து சென்று தனது கணவனுக்கு தோசை வார்க்க செனறு விட்டாள்.
அடுத்த நாள் அரிசிம் பருப்பு சோறு, நெய்யும் ஆவியும் மணக்க பரிமாறப்பட்டது .
ஒரு அன்னக் கரண்டி கொள்ளவுக்கு மேலாக உண்ண முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன்.
அம்மா இதை கண்டுகொண்டு விட்டார்.
இந்த முறை ஒன்றும் பேசாமல் நகர்ந்து சென்று தந்தையிடம் புகாராக சொன்னார்.
“சரி விடு கம்பெனி முடிஞ்சு வரயில எதாவது பலகாரம் உண்டுட்டு வந்திருப்பான்” என்றார்.
அடுத்த நாள் பெரியாத்தா வீட்டில் இருந்து மதியம் வைத்த நாட்டு கோழி குழம்பை சூடு செய்து தோசை வார்த்து கொடுத்தாள்.
கோழிகறி சாறு என்றால் இரண்டு வட்டல் சோறு திண்பான் என்று நினைத்த அம்மா சோத்து குண்டாவை அருகில் வைத்து விட்டு சென்று விட்டார்.
இரண்டு கரண்டி சோற்றுக்கு மேல நொப்பம் இல்லாமல் இருப்பது போல தோன்றியது அப்படியே வைத்து விட்டேன்.
அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஏதோ கோளாரு இருப்பதாக உணர்ந்து கொண்டார்கள்.
கடந்த ஒரு வாரமாக இதே நிலை தான் தொடர்வதை என்னி கவலை கொண்டார்கள்.
“ஒரெட்டு மேற்க லெட்சுமண டாக்டரை பார்த்தறலாமா” என்றார் பொன்னானின் தந்தை.
“இல்லீங்க இவனெங்கியும் வெளியில உண்டதால வந்த வினையாட்ட தெரியிலீங் யாரோ எவரோ கண்ணு போட்டுருப்பாங்க நாளைக்கு கடைசி சோறு உங்கையில ஒரு கவளம் உருட்டி தலைய சுத்தி நாய்க்கு போட்டா சரியாகுமானு பார்க்கலாங்க”
பொன்னானின் தாய் கண்ணியாத்தாள் திருமணம் ஆன புதிதில் பக்கத்துவீட்டில் இருந்த கணவரின் தம்பி குடும்பத்தினரோடு சகஜமாக பேசி பழக்கம் உண்டாக்கி கொண்டாள்.
ஒரு நாள் ஆறு மாதங்களே ஆன கைக்குழந்தையாக இருந்த பக்கத்து வீட்டு முத்தனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு தனது வீட்டுக்கு வந்து விட்டாள்.
மாலை நேரம் ஆக ஆக குழந்தை முத்தானுக்கு வெப்ப நோவு கண்டது.
அங்கிருந்த முத்தனின் அம்மத்தாகாரி கண்ணியாத்தாள் துக்கி வைத்திருந்ததால் தான் குழந்தைக்கு நோவு கண்டுவிட்டதாக பேசிவிட்டாள்.
புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு பூ மாலை தீட்டு இருக்கும் போது இவ எப்படி குழந்தையை தொடலாம் என்று கேள்வி கேட்டு எல்லோர் முன்னிலையிலும் பேசிவிட்டார்கள்.
முத்தான் சிறுவனாக வளர்ந்து பிறகும் கூட தொட்டு பேசவோ தூக்கவோ தோனவில்லை.
எப்படியோ வருடம் 25 ஓடிவிட்டது நல்லது கெட்டது அனைத்துக்கும் இரு வீட்டார்களும் உறவாடி தான் இருந்தார்கள்.
பொன்னான், முத்தான் இருவருக்கும் பெண் தேடுதல் கடந்த 2 வருடமாக நடந்து கொண்டு இருந்தது.
கல்யாண தரகர் பெண்களின் ஜாதகத்தை முதலில் பொன்னான் வீட்டுக்கு கொடுத்து பொருத்தம் பார்த்து சரியில்லை என்றால் முத்தான் வீட்டுக்கு கொடுப்பார்.
முத்தானுக்கும் வீட்டில் சாதகம் பார்த்து கட்டங்கள் சேராத போது பொன்னான் வீட்டுக்கும் மாறி மாறி சென்று கொண்டிருக்கும்.
சில நாட்களுக்கு முன்பு பொண்ணானுக்கு பொருந்தாத கட்டங்களின் கூட்டு மணியனுக்கு பொருந்திவிட்டது.
அரசம்பாளையத்து பெண்ணின் சாதகம் முத்தனுக்கு பொருந்தி போக மேற்படி பெண் வீட்டார் சார்பில் ஆட்கள் வந்து பேசுவதும், இவர்கள் அங்கே சென்று பேசுவதுமாக இருந்தனர்.
பொன்னானின் அம்மா விசனப்பட்டு தான் இந்த விசயத்தை ஆரம்பித்தார்.
“வுடும்மா அவன் என்னைவிட ஒரு வருசம் மூத்தவன்தான அவனுக்கு மொதல்ல முடிக்கட்டும் இப்ப என்ன கெட்டுப் போச்சு “
பெண் வீட்டார் மாப்பிள்ளை வீடு பார்க்க அளவாக தான் வந்து இருந்தனர்.
பெண்ணின் தாய்மாமன் தான் கொஞ்சம் எடக்காக பேசுகிறார் மற்றவர்களெல்லாம் பரவாயில்லை என்று அம்மா கூறினார்.
“பொண்ணுக்கு பையன, பையனுக்கு பெண்ணையும் புடுச்சா போதும்மா”
“டேய், சாமி இன்னங்கொஞ்ச சோறு போட்டுக்கப்பா”
“வேணாமா அதென்னமோ வகுறு மந்தமா இருக்குறாப்லயே இருக்கு”
டேய் நீ நல்லா சாப்பிட்டு 2 வாரம் ஆச்சுதுடா என்ன ஏதுனு பார்க்க வேண்டாமா,?
“ஓமதீராம் வாங்கி வெக்கற காலையில வெறும் வயித்துல குடுச்சுட்டு போடா” என்றார்.
நல்ல மதிய வேளையில் கண்ணிமாத்தாள் வேசையில் நிற்கும் மாடுகளை கட்டுத்தரிக்கு மாற்றி கட்டிக்கொண்டு இருந்தார்.
அருகில் உள்ள முத்தனின் வீட்டு முன்பு யாரோ
அழைக்கும் சத்தம் கேட்டு முன்பக்கமாக வந்து தலையை தூக்கி பார்த்தாள்.
மூங்கத்தட்டி படலின் முன்பு நின்று கொண்டு இருப்பது ஆறுக்குட்டி என்பதை உணர்ந்து கொண்டாள்.
ஆறுக்குட்டி நல்ல வெளுத்த வெள்ளை துணியால் வேட்டி சட்டை உடுத்தி, தலையில் ஒரு உருமாலை கட்டிக் கொண்டு, மூப்பின் காரணமாக உடல் தளர்ந்து நின்று இருந்தார்.
குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்.
“த்தே ஆறுக்குட்டி அக்கா ஊட்ல இல்லியா? கார்த்தால
ரேசங்கடைக்கு போகோனும்னுட்டு பேசிட்டு இருந்தது
என்னானு தெரியல “
ஆறுக்குட்டி ஒன்றும் பதில் சொல்லாமல் விசனமாக கன்னியாத்தாளை நோக்கி நடந்து வந்தார்.
“இந்த வேகாத வெயில்ல வராட்டி, பொழுதாட வரலாமுல்ல”
“சித்தே குச்சிட்டு இரு மோரு சிலுப்பியுட்டு வெச்சுருக்கேன் எடுத்தாரேன் “
“வேசகாலமுன்னு பார்த்தா ஆகுங்களா போறபக்கம் போயிதான ஆகோனுங்க “
கன்னியாத்தாள் உள்பக்கம் நோக்கி சென்றாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு தனது கைகளில் ஒரு தம்பளரில் மோர் ஊற்றி எடுத்து வந்து ஆறுக்குட்டி அமர்ந்திருக்கும் சிமிண்ட் பலகையின் மீது வைத்தாள்.
ஆறுக்குட்டி மெல்லிய குரலில்
“உங்க முத்தானுக்கு பார்த்த புள்ளயோட தாய்மாமனுக்கு
பையன புடிக்கலீயமாங்கோ இனி இது நல்ல முறையா நடக்காது போல இருக்குதுங்க”
“அட வம்பே” என்று கண்ணியாத்தாள் தனது வலதுகை விரல்களை மடக்கி தாவக்கட்டைக்கு கொண்டு சென்றாள்.
ஆறுக்குட்டியும் தலையை குனிந்தவாறு அமர்ந்து கொண்டு மோர் கிளாஸை பார்த்து நிலைகுத்தி நின்றார்.
“முத்துனுக்கு வேற பக்கந்தா பார்க்கனுமாட்ட இருக்குங்க”
“போன வாரந்தான் வூடு வாசல் பார்த்துட்டு எல்லா பக்கமும் விசாரிச்சுட்டு போனாங்க இப்ப இப்புடி ஆயிடுதே”
“…..”
“என்ன காரணம்னு எதாவது சொன்னாங்களா?”
“அந்த வூட்டு அம்மாவோட தம்பிகாரன் பையனுக்கு நிறமில்லை வேண்டாமுன்னு சொல்லி போட்டானாமா”
என்றார் ஆறுக்குட்டி.
“அவிக இருந்த வெசைக்கு சீக்கிரமா கல்யாணமே முடுஞ்சுரும்னு இருந்தோமே “
“இப்ப இப்படி சொல்றாங்களே “
“உங்ககுட்ட சொல்றதுக்கு என்னங்க துணிமணிய தெப்பி கொடுத்து கவுரதையா கிடந்தனுங்க வயசு ஆகிட்டுது மோழி சுமக்க முடியாம இந்த தொழிலுக்கு வந்தது தப்பாயிடுச்சுங்க”
“ரெண்டு பக்க சுமுகமா பேசிவுட்டா கலியாணத்தன்னிக்கு பவுனு கிடைக்குனு வந்தா இப்படி பட்டு தான் நிக்கோனமாட்ட இருக்குதுங்க”
“நொண்டிக் குதிரைக்கு மொண்டிப் பொழப்பு, வண்டிக்காரனுக்கு ஜம்முன்னு பொழப்பாமா”
தான் சென்று வருவதாக கூறி தளர்ந்த நடையோடு இடத்தை விட்டு நகர்ந்தார் ஆறுக்குட்டி.
முத்தனும், பொன்னனும் ஒத்த வயதுடைய ஏனைய இளந்தாரிகளோடு ஊர் சுற்றிவருவார்கள்,
டவுனுக்கு சென்று சினிமா பார்ப்பது, அருகில் உள்ள கிராமங்களில் நடக்கும் இன்னிசை கச்சேரிகளை இரவு முழுதும் கண் விழிக்கும் கண்டு கழிதது அதிகாலையில் ஊரடைவார்கள்.
முத்துனுக்கு ஒரு சங்கடம் வரும் சூழல் என்றால் பொன்னான் குரல் கொடுக்க தயங்கியதே இல்லை.
மேற்கே செயா கொட்டாயில் இளந்தாரிகள் குழுவினரோடு சினிமா பார்க்க சென்ற இடத்தில் முத்தானை வேறு ஒரு கூட்டத்தினர் கீழே தள்ளி விட்டு நகர்ந்து கொண்டார்கள்.
பொன்னான் முத்தானுக்காக அவர்களோடு மல்லுக்கு
நின்றான்.
அங்கு இருந்த பிற வழிபோக்கர்கள் இரண்டு குழுக்களையும் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருந்தும் வெளியில் காட்டிக் காட்டிக் கொண்டதே இல்லை.
“கண்ணு நம்ம முத்தனுக்கு ஒரு பொண்ணுபார்த்து நல்லபடியா முடியுமாட்ட இருக்குதுன்னு பேசிட்டு இருந்தமில்ல”
என்று கண்ணியாத்தாள் தனது மகன் பொன்னானிடம் பேச்சு கொடுத்தாள்.
ஆர்வமாக பொன்னானும் அருகில் வந்து கேட்டான்.
“இது நடக்காது போல இருக்குடா ஆறுக்குட்டி மத்தியானம் வந்தாப்ல பொண்ணூட்ல பையன புடிக்கலீனு சொல்லி போட்டாங்களாமா”
“…….”
அன்றைய இரவு உணவுக்காக பச்சைபயிறு கத்திரிக்காய்
போட்டு வெறுமனே கடைந்து தான் வைத்திருந்தாள்.
அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்த பிறகு தான் கண்ணியாத்தாள் சோறு உண்பாள்.
பொன்னான் கீழே குனிந்து வட்டலில் உள்ள சோற்றை பார்த்தான். நன்றாக சம்மனமிட்டு அமர்ந்து வட்டலில் சோற்றையும் பருப்பையும் நன்றாக மைய நசுக்கி உண்ண ஆரம்பித்து சோற்று சட்டியை காலி செய்து விட்டு நிம்மதியாக எழுந்து சென்றான்.
000

இரா.சேனா
எனது பெயர் D.ரமேஷ்குமார் நான் கோயமுத்தூரில் பிறந்தேன். எனது பள்ளி கல்லூரி காலத்தில் கோயமுத்தூரில் இருந்தேன். பிறகு மென்பொருள் துறையில் வேலை கிடைத்தது. பிறகு பெங்களூருக்கு சென்று விட்டேன். தற்போது கரூரில் வசிக்கிறேன். புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும்.
தற்போது தான் எனது அனுபவங்களை கதைகளாக எழுதி கொண்டு இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு நன்றி