ந்த வீட்டுக்கு வேலைக்குப் போனதுதான் தப்பாப்போச்சு. அதுநா வரை கதிரறுப்பு வேலைக்கும், சித்தாள் வேலைக்கும்தான் போயிட்டிருந்தேன். அதுல  தொடர்ச்சியா வருமானம் இல்லையேன்னு இதுக்கு வந்தேன். மாசங்கூடி சம்பளம்னு ஒண்ணு கிடைச்சாப் பரவால்லன்னு தோணிச்சு. அதான் ஏதாச்சும் வீட்டு வேலை  செய்வோம்னு நினைச்சேன்.  எங்க பக்கத்துல குடியிருக்கிற கருப்பணன் அண்ணன்தான் என்னை அங்க கொண்டு சேர்த்து விட்டாரு. அவுக வீட்டுக்குக் காவக்காரரா இருந்தாராம் வீடு கட்டைல. நல்ல மனுஷாக…ரெண்டு பேரும் வேலை பார்க்குறவுக…பிரச்னை ஒண்ணும் இருக்காது…நீபாட்டுக்குப் போலாம்…வரலாம்னு சொன்னாக….அந்த நம்பிக்கைலதான் ஒத்துக்கிட்டேன்.

            அவுக நல்ல ஆளுகதான். புருஷன் பொஞ்சாதியும், அவரோட மாமியாரும் மட்டும்தான் இருந்தாக. புதுசாக் கண்ணாலம் கட்டி வந்திருப்பாக போல்ருக்கு. வீடு புதுசாத்தேன் இருந்திச்சு. அதுக்கு முன்னாடி வேறே எங்கேயோ குடியிருந்திருக்காக. ஒரு வருஷம்போல  இருக்கும்னு தோணுது…

புதுக் கண்ணாலம் கட்டுனவுகளத் தனியா விடுவாகளா…இப்டிக் கொடுக்கு மாதிரித் தொத்திக்கிட்டுத் திரிவாகளான்னு தோணிச்சு எனக்கு. ஆனா அந்த அம்மா ரொம்ப நல்லவுகளாத்தேன் இருந்தாக.  விகல்பமில்லாதவுகன்னு தோணிச்சு. எடுத்த எடுப்புல ஒரு நா எங்கிட்டக் காப்பியக் கொடுத்து மொட்ட மாடில படிச்சிட்டிருப்பாரு…போய்க் கொடுத்திட்டு வான்னு சொல்லிச்சு. மாடி ஏறிப் போயிக் கொடுத்தேன். அப்போ அந்த அய்யா மொகம் எப்டி மாறிச்சி? கொடுத்த வேகத்துல எம்மேல வீசியடிச்சிடுவாகளோன்னு தோணிடிச்சி எனக்கு. சுத்திலும் இருக்கிற வீடுகள்லர்ந்து யாரும் பார்க்குறாகளான்னு வேறே நோட்டம் விட்டாரு. அம்புட்டுக் கோவம்…! விடுவிடுன்னு கீழ வந்திட்டேன்.

            அதுக்குப்பெறவு வந்து சத்தம் போட்டிருக்காரு. எம் பொண்டாட்டி இல்லையா…அவ கொண்டு வர மாட்டாளா? கீழ கூப்டா வந்து குடிச்சிட்டுப் போறேன்… வேலைக்காரிட்டக் கொடுத்து விடுறீங்க…அறிவில்ல ஒங்களுக்குன்னு ஒரே கூச்சல். அம்மாவத் திட்டிப்புட்டாரேன்னு அவுகளுக்கு ஒரே வருத்தம். பிழியப் பிழிய அழ ஆரம்பிச்சிடுச்சி அந்தம்மா.  அதுவும் நா இருக்கைலயே…இத்தனை சத்தம்….

            இதென்னடா வந்ததும் வராததுமா வம்பாப் போச்சுன்னு…மன்னிச்சிக்குங்கம்மா…நா வேணும்னா வேலய விட்டு நின்னுக்கிறேன்னு சட்டுனு ஒரு முடிவெடுத்துச் சொன்னேன். முதல் கோணல்னு ஆயிப்போச்சு…! அவுக சொன்னதத்தான செய்தேன்…நா என்னா பண்ணுவேன்..எம்மேல என்ன தப்பு? ன்னு தோணிச்சு எனக்கு.

            …அவுக செய்த தப்புக்கு நீங்க எதுக்குப் போறீங்க? …நீங்கபாட்டுக்கு இருங்கன்னு அவருதான் சொன்னாரு….அதுலர்ந்து அந்தப் பெரியம்மா எதுவும் கண்டுக்கிறதில்ல. தெரியாமப் பண்ணிட்டேன்…மன்னிச்சுக்குங்க..ன்னு அந்த அய்யாட்டச் சொன்னதுதான்  பார்க்கப் பரிதாபமா இருந்திச்சு.

            அம்மாவச் சத்தம் போடாதீகய்யா…இனிமே நா கொண்டார மாட்டேன்…இத்தோட விட்ருங்க….ன்னேன் நான். எப்டித்தேன் அதைச் சொன்னேனோ…? அந்தம்மா மேல அவ்வளவு பரிதாபம் வந்திடுச்சி எனக்கு.

            அவுரு சம்சாரம் அதுபாட்டுக்குத்தான் இருந்திச்சு. அந்த ஒரு நா அழுகையோட சரி. எம்மேல பிரியமாத்தேன் இருந்தாக….இந்தாங்க…காபியக் குடிங்க…இந்த இட்லியச் சாப்டுட்டு வேலை பாருங்கன்னு ஒரே உபசாரந்தேன்….அவ்வளவு நம்பிக்கையோட இருந்தாக எம்மேல….ஒரு மாசம் போல இருந்திட்டு அந்தப் பெரியம்மா சென்னைக்குப் போயிட்டாக. போகைல எங்கிட்ட ஐநூறு ரூபாய நீட்டி இந்தா வச்சிக்கோன்னு கொடுத்தாக. அப்டியே விழுந்து வணங்கினேன் ….அவுக ஊருக்குப் போறது என்னவோ பாதுகாப்புக் குறைஞ்ச மாதிரித் தோணிச்சு. எனக்கு எதுக்கு அப்டித் தோணனும்…? எம்மேலயே எனக்கு நம்பிக்க இல்லையா? தேவையில்லாம இந்த நெனப்பு எதுக்கு? அவரு சம்சாரந்தேன் எம்பூட்டு அழகாயிருக்கு? சொக்கிப் போகுற மாதிரி? நீ கழிசடை…நீயா எதையாச்சும் நினைச்சிக்கிட்டா எப்டி?ன்னு என்னையே நா கேட்டுக்கிட்டேன்….

            அவுரு சம்சாரந்தேன் தளதளன்னு….ஒவ்வொரு பாகமும் உருட்டு உருட்டா?….கும்முனு நிக்குதே….அப்டியிருக்கைல என்னையா அந்த அய்யா நோங்கப் போறாரு? என்னத்துக்கு அநாவசியமா இப்டி நினைச்சிக்கிட்டு?.  ஆனா அந்த அய்யாவும் நல்ல அழகுதான். மொழுக்குன்னு முகத்த வழிச்சிருப்பாரு…அதுவே பார்க்குறதுக்கு அம்பூட்டு அழகாயிருக்கும். பச்சப்பசேல்னு செழிப்பா இருக்கிற அந்தக் கன்னத்த,  முகத்த தெனமும் ஒரு வாட்டி பார்க்காட்டி எனக்குச் சோறு எறங்காதுன்னு தோணிச்சு. இந்த நெனப்பே தப்புதேன். ஆனா தோணிடுச்சே…! நாந்தேன் வேல செய்யைல அவுர தற்செயலாப் பார்க்கிற மாதிரி அடிக்கடி நிமிர்ந்து நிமிர்ந்து சாடையாப் பார்த்திட்டிருந்தேன். அவுரு தன் வேலைல கவனமாயிருந்தாரு…

            நா கொல்லப்புறம் பத்துப் பாத்திரம் தேய்ப்பேன். அடுப்படிக்கு அவர் வர்றைல பார்வை எம்பக்கம் இருக்கிறத ஒரு நா கவனிச்சேன். என்ன கள்ளத்தனம்?  அப்பத்தான் எனக்கே தோணிச்சு…பொடவையைச் சுருக்கி, பாவாடைய ஏன் இம்பட்டு வழிச்சி விட்டிருக்கோம்னு….தெனமும் அப்டி ஒக்கார்ந்துதான் பாத்திரம் வௌக்குறேன்…அதுதான் வசதியாயிருக்கு. அவுக எதுவும் சொன்னதேயில்லை இது நா வரைக்கும். இப்போ இவரு பார்த்திட்டாரா….எனக்குப் பயம் வந்திடுச்சி. அன்னைக்கு மாடிக்குக் காபி கொண்டு கொடுத்ததுக்கே அந்தச் சத்தம் போட்டவரு…இன்னைக்கு என்னா கலகமிழுத்தப் போறாரோன்னு பயந்து நடுங்கிட்டிருந்தேன்.

            காபி குடிச்ச வட்டா டம்ளரை வௌக்குறதுக்கு நேரா எங்கிட்டக் கொண்டாந்து கொடுத்தப்பதான் புரிஞ்சிக்கிட்டேன். என்னா பார்வை அது? அப்டியே எந்தொடை மேல படிஞ்சிருந்திச்சி. சட்டுன்னு லேசா நிமிர்ந்து முட்டி வரைக்கும் இழுத்து விட்டுக்கிட்டேன். ஆனா லேசா ஒரு சிரிப்புச் சிரிச்சிட்டுப் போனாரே அதத்தான் என்னால மறக்கவே முடில. மொகத்துக்கு முன்னாடி நிறுத்தி வச்சு அந்தப் புன்னகய நேருக்கு நேரா கண்ணுக்குள்ள வாங்கணும்னு ஆச வந்திடுச்சி. எதுக்குத்தான் மனசுல இப்டியெல்லாம் தோணுதோ? எம்புருஷன் வத்தக்காச்சியா  இருக்காரே…அதனால் இருக்குமோன்னு நெனச்சிக்கிட்டேன்….ஒடம்பக் குடுக்குறது வேறே…மனசக் குடுக்குறது வேறல்லியா? அடுப்படிப் பக்கம் அவரு வர்றப்பல்லாம் என் பார்வை என்னையறியாம அங்க பாயத்தான் செய்திச்சி. அந்த மார்ல நா சாய்ஞ்சன்னா…இம்புட்டாப் போயிடுவேன்…முண்டா பனியனும் வேட்டியுமா அவர் வர்ற அழகு கொள்ள போகும் எனக்கு. லுங்கி கட்டி நா பார்த்ததேயில்ல. அவர்ட்ட லுங்கியே கிடையாதுன்னு நினைக்கிறேன். எப்பயும் பளபளன்னு வேட்டிலதான் இருப்பாரு….

            அன்னைக்குத்தான் ஆரம்பிச்சிச்சு எங்க பழக்கம்.  கரெக்டா ரெண்டாங்காப்பியக் குடிச்சிட்டு, வட்டா டம்ளர அந்தம்மாட்டயே கொடுத்திட்டு,  கமுக்கமா அவுரு ரூமுக்குள்ள போய் கம்பூட்டர் முன்னாடி நல்ல பிள்ளயாட்டம் உட்கார்ந்துக்கிட்டாரு. அந்த ஒரு நா தான் கழுவுறதுக்கு எங்கிட்டக் கொடுத்தாரு. ட்ரயல் பார்த்தாரு போல்ருக்கு. அதுக்கப்புறம் நேரா சமையல் வேலைல ஈடுபட்டிருக்கிற அவுரு பொண்டாட்டிட்டக் கொண்டு வச்சிடுவாரு….அவுக எங்கிட்டக் கொண்டாந்து கொடுப்பாக….என்னா ஒரு நம்பிக்கயா கொடுக்கிறாரு பாருங்க….நா கழுவிக் கொடுத்தப்புறம்தான் எனக்கு அதுல காப்பி கலக்குவாக…வேறே பாத்திரம்லாம் இல்ல. பாத்திரங்கள சுருக்க உபயோகிக்கணுமாம். அவரு வாய வச்ச அந்த வட்டா டம்ளர்ல காபி குடிக்கிறதுல எனக்கு ஒரே சந்தோசம்….சீப்பித்தான் குடிப்பேன். அவுக தூக்கித்தான் குடிப்பாக. ஆனா என்னை ஒண்ணும் சொன்னதில்ல….அதே டம்ளர்ல கொடுத்திட்டு…ஒண்ணும் சொல்லாம இருக்கிறது ஆச்சரியமாயிருந்திச்சு எனக்கு. இப்டியெல்லாம் நாமதான் நினைச்சிக்கிட்டுக் கிடக்கமோ…அவகளுக்கு அப்டி எதுவும் இல்ல போல்ருக்குன்னு தோணிச்சு…பார்த்துப் பார்த்து ஏங்குற சோலியெல்லாம் கெடையாது போல்ருக்கு.

அந்த வீட்டுல மூணு ரூம் உண்டு.. நுழைஞ்சவுடனே இருக்கிற மொத ரூம்தா அவுருது. ஆனா அங்க உட்கார மாட்டாரு. டி.வி. பார்க்கைலதான் அங்க வருவாரு. ஏதாச்சும் பேனா பிடிச்சு எழுதைல டேபிள் முன்னாடி இருப்பாரு.  மத்தப்படி மூணாவது ரூம்ல உள்ள கம்ப்யூட்டர் முன்னாடிதான் எப்பவும் உட்கார்ந்திருப்பாரு. ஜன்னலத் திறந்தா பக்கத்து வீட்டு ஜன்னல் தெரியும். இங்க பேசுறது சத்தம் கேட்கும். அதனால் தெறக்க மாட்டாரு. மத்தப்படி அந்த ரூம்தான் இன்னைக்குத் தேதிக்கு அவருக்கு வசதி. அடுப்படி, உறாலு, அவுரு முன் ரூம்பு, அப்புறம் அடுத்த பெட் ரூம், பெறவு அவுரு உட்கார்ந்திருக்கிற கம்ப்யூட்டரு ரூம்புன்னு வரிசையாக் கூட்டிட்டு வருவேன் நானு. அந்தம்மா அதுபாட்டுக்கு தன் வேலயப் பார்த்திட்டிருக்கும்.  இல்லன்னா அவுரு மொத ரூம்ல வந்து உட்கார்ந்து டி.வி. பார்க்க ஆரம்பிச்சிடும்.  பக்தி சேனல்தான் பார்க்கும் அந்தம்மா. சினிமா பார்க்குற சோலியே இல்ல…சினிமாவே பிடிக்காதாம்….எப்டியிருக்கு பாருங்க…அதுவும் இந்தக் காலத்துல….?

குறிப்பா அங்க ஒண்ணு நா கவனிச்சது என்னன்னா…அவரு அவர்பாட்டுக்கு இருப்பாரு…அது அதுபாட்டுக்கு இருக்கும்…ரெண்டு பேரும் சிரிச்சுப் பேசி, விளையாண்டு நா பார்த்ததேயில்ல…எம்முன்னாடி எப்டி விளையாடுவாக…கூச்சம் இருக்கும்ல..ஆனாலும்..புதுசாக் கண்ணாலம் கட்டுனவுக இப்டியா விலகலா இருப்பாக…அந்தம்மாவ சீண்டி ஒரு நா கூட நா பார்த்ததேயில்ல…அதுக்குள்ளயுமா அலுத்துப் போகும்? ஒத்தப் பிள்ள கூட இன்னும் பொறக்கல? ஒரு வேள நா இல்லாதபோது விளையாண்டுக்குவாகளோ என்னவோ? கவர்ச்சியாத்தான இருக்கு அந்தம்மா…ஏன் நோங்க மாட்டேங்குறாரு? கிணத்துத் தண்ணிதானன்னு விட்டு வச்சிருக்கார் போல்ருக்கு…அவுக எப்டியிருந்தா என்ன? நா ஏன் இதப்பத்தி நினைக்கணும்? வேலயப் பார்த்தமா, கிளம்பினமான்னுல்ல இருக்கணும்…மத்ததுல எதுக்கு கவனம்?

ஆனா பாருங்க…அவுரு உட்கார்ந்திருக்கிற கம்ப்யூட்டர் ரூமுக்கு நான்  போனனா….கதவு இடுக்கெல்லாம் கூட்டுவம்னுட்டு சாத்துனனா….அதான் சமயம்னு வந்து பின்னாடி என்ன இழுத்து அணைச்சாரு பாருங்க……என்னா தைரியம்? அப்டி எதுவும் நடக்கலாம்னுட்டுத்தேன் நானும் கதவு இடுக்குல ஒதுங்கினேன்னு வச்சிக்கங்க…அந்த எதிர்பார்ப்பு எங்கிட்ட எப்டி வந்திச்சு? எந்த சமிக்ஞை அத எனக்குச் சொல்லிச்சு? நினைச்சுப் பார்த்தா புரியலதான். ஆனா மனசுல தோணிட்டே இருந்திச்சே…? தொறந்து போட்டுட்டா அனுமதிக்க முடியும்? எனக்கும் வேண்டியிருந்திச்சுன்னுதான் சொல்லணும்..நினைச்சது நடந்து போச்சு அன்னைக்கி…நா சத்தமே கொடுக்கல….யப்பாடீ….என்னா மணம் அந்தாள் உடம்புல? எம் பின்னாடி வச்சு அழுத்தினாரு பாருங்க…விடுபட மனசேயில்ல…அப்டியே கண்ண மூடி அனுபவிச்சேன்.  வேர்த்து வழியுது ஒடம்பு….என்னத்தக் கண்டார் எங்கிட்டன்னு தெரில….கண்டாங்கிச் சேல உடுத்திட்டுக் கொஞ்சம் கச்சிதமா இருக்கிறவதான் நானும்…பூவும் பொட்டுமா லட்சணமாத்தேன் இருப்பேன். சிரிச்சா அழகாத்தேன் இருக்கும். அதுலதான் என் வீட்டுக்காரரே சொக்கிப் போவாரு…!  என் கண்ணும் அப்டித்தேன். முன்னாடி கே.ஆர்.விசயா மயக்கமாக் கண்ண மூடி ஒதட்ட ஓரமாக் கடிச்சி, போதயாக் கண்ணத் தெறக்கும்ல.…அப்டித்தேன் நானும். அனுபவிக்கிற நேரம் மூழ்கித்தேன் போயிடுவேன்…அந்த மாதிரி இவர்ட்ட என்னைக்கு நா செஞ்சதில்லயே…பெறவு எதைப் பார்த்து மயங்கினாரு? மனசுல நெனப்பு விழுந்திட்ட பெறவு எல்லாமே அழகாத்தேன் தெரியும் போல்ருக்கு….!

வசதி வாய்ப்பு இல்லாமத்தான் எவனுக்கோ வாழ்க்கைப் பட்டுட்டேன். வேற வழி?ன்னுட்டு அவனோட சேர்ந்து மூணு கொழந்தைகள வேறே பெத்து வச்சிருக்கேன். எல்லாம் ஒடம்பு பண்ற வேல…மனசா பண்ணிச்சு…? அது ஒட்டாமத் தனியா அலைஞ்சிட்டிருக்கு… மொதலு இப்ப ஆளாகி நிக்குது….ஆனாலும் கட்டு விடல எனக்கு…என் ஒடம்பு வாகு அப்டி…இந்தக் காலத்துலதான் ஒரு கொழந்த பெத்தவுடனே டொய்ங்ன்னு மாரெல்லாம் எறங்கிப் போயிக் கெடக்காகளே…! எனக்கு அப்டியில்ல. கிண்ணுன்னு தன் ஆசயக் காட்டிக்கிட்டுத்தேன் நிக்குது….அவரானா கைய எங்கெங்கயோ விடுறாரு….அதுபாட்டுக்கு விளு விளுன்னு உள்ள வௌயாடுது…எனக்கா ஒரே கூச்சம்….சந்தோஷம்….மலப்பு…அசிங்கம் பார்க்காத மனசு அவருக்கு. இல்லன்னா கையி இப்டி வெளையாடுமா? சட்டுன்னு குனிஞ்சு என் பின்புறத்தக் கடிக்கப் போயிட்டாரு….வேணா…வேணான்னு கொஞ்சிக்கிட்டே தலைய மட்டும் ஆட்டுனேன்…கேட்கல…தூக்கிக் கொடு…விரிச்சுக் கொடுன்னு கெஞ்சுறாரு….அவுருக்கு எத்திக்கிட்டு நிக்கணுமாம்……..என்னா ஆச பாருங்க….நானும் மடங்கித்தான் போனேன். மோந்து மோந்து பார்க்குறாரு…மொகத்தப் போட்டுப் புறட்டுறாரு…. எனக்கா தாங்க முடில….இப்டி ஒரு சம்போகத்த நா என் புருஷன்ட்ட அனுபவிச்சதேயில்ல….கோயில் சிற்பங்கள்ல பார்த்திருக்கேன்…என் புருஷனே காண்பிச்சிருக்காரு….ஆனா அதுல உள்ளதுல ஒண்ணக் கூட என் புருஷன்ட்ட நா கண்டதுல்ல….அவுரு எல்லாத்தையும் கடமையாச் செய்த மாதிரிதான். கல்யாணம் கட்டுனமா…பிள்ளையப் பெத்தமாங்கிற கததான்….பார்ட்டுப் பார்ட்டா ரசிக்கத் தெரியாத வெள்ளந்தி மனுசன்….நானே கூப்டாத்தான் வருவாரு. அப்டித்தேன் மூணப் பெத்து வச்சிருக்கேன்….ஒண்ணோட நிப்பாட்டியிருக்கணும். இப்ப புத்தி வேல செஞ்சு என்னா பிரயோசனம். எனக்கிருக்கிற ஆசைக்கு இந்த மாதிரி ஆள்ட்டக் கூடப் படுத்து ஒண்ணைப் பெத்துக்கலாம் போல்ருக்கு…பிள்ள அழகா வாய்க்கும்லா….

ஐயோ பாவமே…ஏற்கனவே வேறொருத்தர் ஆண்ட ஒடம்பாச்சே…இந்தச் சின்னஞ்சிறிசுக்கு ஏதாச்சும் ஒடம்புக்குக் கேடு வந்திடக் கூடாதே…கடவுளே..ன்னு திடீர்னு எனக்கு எரக்கம் வந்திடுச்சு…அதெல்லாம் வாண்டாம்…அதெல்லாம் வாண்டாம்னு சொல்றேன்… விடமாட்டேங்கிறாரு… வெறி ஆட்டுது அவுர… ..சட்டுன்னு எந்திரிச்சேன்…பொடவைய இழுத்து விட்டுக் கிட்டேன். ஆசயா அவருக்கு ஒரு முத்தத்தப் பதிச்சேன். இந்தப் பக்கம்னு கேட்குறாருன்னா பாருங்களேன்…யாருக்கு, எங்க…யார் மேலே, எந்த நேரத்துல, எப்படி ஆசை வரும்னு எவனுக்கும் தெரியாது….இந்த ஒடம்பு சங்கதி மட்டும் அப்டித்தேன்….புது கண்ணாலம் கட்டுனவுக…நாம அவுக வாழ்க்கையக் கெடுக்கக் கூடாதுன்னு புத்தி சொல்லிச்சு…..அந்தம்மாவ நெனச்சப்ப பாவமா இருந்திச்சு…இம்புட்டு அழகான பொண்டாட்டி வச்சிருக்கிறவரு…எதுக்கு இப்டி அலையுறாருன்னு தோணிச்சு….என்னமோ சொல்வாகளே…கிளி மாதிரிப் பொண்டாட்டி இருந்தாலும்…கொரங்கு மாதிரி……நா அந்த ரகம் இல்லைன்னு வைங்க….ஆனாலும் படக்குன்னு விழுந்துட்டனே…அத என்னான்னு சொல்றது? அதுக்குன்னே அந்த வீட்டுக்கு வந்தமாதிரி ஆயிப்போச்சு…! கிரகம்…எங்க கொண்டாந்து ஆள நிப்பாட்டுது பாருங்க…?

அதுக்குள்ளே என்ன மறுபடி இழுத்து அணைச்சு வாயோட வாயா வச்சு என் இழுத்து உறிஞ்ச ஆரம்பிச்சிட்டாரு….எங்கிட்ட இருக்கிற வாடை, என் ஒடம்புத் தோலோட வாசனை அவருக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சாம்….கழுத்துல வழிஞ்ச வியர்வைய ஒதட்டால ஒத்தி ஒத்தி எடுத்தாரு…..சட்டுன்னு சுதாரிச்சிக்கிட்ட நானு….போய் உட்காருங்கன்னு அதிகாரமா  சைகை காண்பிச்சிட்டு….பெருக்க ஆரம்பிச்சேன்…அடங்கின மாதிரி உட்கார்ந்ததப் பார்க்கணுமே…! கில்லாடிங்கதான்…உள்ளே துழாவுன தன் கையை மோந்து மோந்து பார்த்திட்டிருந்தாரு…எனக்கா ஒரே சிரிப்பு மனசுக்குள்ள…அதே சமயம்…பாவமாவும் இருந்திச்சு…இந்தாளுக்கு இருக்கிற ஆசைக்கு அஞ்சாறு பிள்ளை பெத்தாத்தான் அடங்குவாருன்னு தோணிச்சு…ஏன் இப்டிப் பாயுறாரு? அந்தம்மா எடம் கொடுக்காதோ?ன்னு  தோணிச்சு…!

பேசுறப்போல்லாம் சண்டை போட்டுக்கிறாகளே…? மனசுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் வன்மம் வச்சிக்கிட்ட மாதிரி நடமாடுறாங்க…? அதான் காரணமோ.

ரொம்பவும் நிதானமா எப்பயும் போலக் கூட்டுறாப்லதான் கூட்டுனேன். ஆனா என்னையும் அறியாம ஏதோவொரு பதட்டம் படிஞ்சு கெடக்கோன்னு எனக்கே சந்தேகமாத்தேன் இருந்திச்சு. அப்டியே படுத்து கண்ண மூடிக் கெடக்கணும் போல இருந்திச்சு. அந்த ரூமக் கூட்டிட்டு உறால் வழியா நா திரும்பக் கொல்லப் புறம் போனப்ப அடுப்படில இருந்த அந்தம்மா பார்வை ஒருவாட்டி என் பக்கம் திரும்பிச்சு. இம்புட்டு நேரமா அந்த ரூம்களக் கூட்டன்னு நினைச்சிச்சோ என்னவோ….!ஆனா ஒண்ணும் கேட்கல. அந்தப் பார்வை ஒண்ணே போதுமே…! எனக்கு நடுங்கித்தான் போச்சு….! ஓங்கி ஒரு அறை கொடுத்திருந்தாங்கன்னா அன்னைக்கே திருந்தியிருப்பேன் நானு. வேலய விட்டுக் கூட நின்னிருப்பேன். கொண்டு விட்ட ஆளுக பேரக் கெடுக்கக் கூடாதே?  கண்ணுக்கு முன்னாடி உறுதி பண்ணனும்னு நினைச்சாகளோ என்னவோ? அப்டீன்னா…லேட்னு நினைக்கைலயே அந்த ரூம் பக்கம் வந்து வேவு பார்த்திருப்பாகள்ல?  ஏன் செய்யல? ஒரு வேள சரியாச் சந்தேகப்படலயோ என்னவோ? அது என் நல்ல நேரமாப் போச்சுன்னுதான் சொல்லணும்….! அவருக்குந்தேன்…அவராச்சும் எப்டியும் சமாளிச்சுக்குவாரு…. பதிலுக்கு அந்தம்மாட்ட ஒரு ராத்திரி படுத்தார்னா சரியாப் போச்சு…. இதுக்கு மடங்காதவ எந்தப் பொம்பள? வளைச்சு அமுத்தத் தெரியாத ஆளா என்ன? அதெல்லாம் கில்லாடின்னுதான் தோணிச்சு.

யம்மா…..இன்னைக்கு மொழுவணுமா…ன்னு சத்தம் கொடுத்தேன். போதும்… நேரமாயிடுச்சு….நாளைக்குப் பார்த்துக்கலாம்னிச்சு….அத்தோட நீ அப்டியே சைடு வழியா வாசலுக்குப் போய்க்கன்னிச்சு….அந்தப் பதில்தான் எனக்கு சந்தேகத்தக் கொடுத்திச்சு…..இருந்தாலும் நா கண்டுக்காம வெளியேறிட்டேன்…. கிளம்பைல .கொல்லப்புறம் வச்சு நா பொடவைய சரி பண்ணிக் கட்டிக்கிட்டத அந்தம்மா பார்த்திட்டே இருந்திச்சு….பாவாடையும் நழுவியிருந்திச்சே…!  உருவி இழுத்து விட்டுட்டாரே…! வழக்கமா வேல முடிச்சிட்டு சரிபண்ணிட்டுக் கௌம்புறதுதான்…இன்னைக்குக் கொஞ்சம் ஸ்பெஷலாச்சே…? பொம்பளைக்குப் பொம்பள சந்தேகப்படுவாதானே..? சன்னல் வழியால்ல எட்டிப் பார்க்குது? மொத மொதல்ல என்னைக் கொண்டு விட்டப்ப…வேலைக்கு ஒடனே சரின்னு சொல்லலியே அந்தம்மா. என்ன அப்டில்ல உத்து உத்துப் பார்த்து அளந்திச்சி….ரெண்டு நா கழிச்சிதான சொல்லி விட்டுச்சி…உஷாரான பார்ட்டிதேன்…

அதுக்கப்புறம் பார்த்தா தெனமும் என்னத் தொந்தரவு பண்ணினாரு அவுரு. கரெக்டா அந்தம்மா குளிக்கப் போகும்போது என்ன உள்ளே வரச்சொல்லுவாரு….அதுக்குள்ளாரயும் பாத்திரத்த எல்லாம் வெரசாத் தேய்ச்சி முடிச்சிட்டு….கரெக்டா அந்த நேரம் பார்த்து எடுத்துக் கொண்டாந்து உள்ளே மேடைல அடுக்குற வேலயப் பார்ப்பேன். தண்ணி பூராவும் வடிஞ்சு பெறவுதான் ஷெல்ப்புல வைக்கணும் அந்தம்மாவுக்கு. தெனம் எதுக்கு ஏத்தி எறக்கிட்டு? ஒரு வலைக் கூடை வாங்கிக்கிட்டா அதுல அடுக்குவேன்லம்மா….அதுலயே தண்ணி வடிஞ்சிடும்லன்னேன். நீ மொத்தமா அடுக்கிட்டுப் போயிடுவ…. ஒண்ணொண்ணா யாரு எடுத்து ஆள்றது? அதது அந்தந்த எடத்துல இருந்தாத்தான் டக்கு டக்குன்னு எனக்கு எடுக்க வசதி….ன்னிச்சு அந்தம்மா…. ஒரு வேலைக்கு இரு வேலைன்னு தோணிச்சு எனக்கு…சொல்ல முடியுமா? சரின்னிட்டு அது சொல்ற பிரகாரமே செய்திட்டிருக்கேன்….மேட பூராவும் தேச்ச பாத்திரத்த அடுக்கிட்டா எப்டி சமையல் வேலை செய்யும்னு தோணும். எடம் பூராவும் அடபட்டுப் போகுமேன்னு நெனப்பேன். கைக்கு முன்னாடி தேவையான பாத்திரங்க இருக்கணுமாம்….

அந்தம்மா குளிக்கைல கொழாத் தண்ணி விழுந்திட்டிருக்கும். அந்தச் சத்தத்துல இவுரோட லீலை அதுங் காதுக்கு விழாதுங்கிற யோசனை அவருக்கு. ஆனா இப்டி ஆசப்பட்ட மனுஷன நா இதுவரைக்கும் பார்த்ததேயில்ல. நாப்பதுல நாய் புத்தின்னுவாக…முப்பதுல பாதிக்கு மேலதான் இருக்காரு….ஆனா முங்கி முங்கிக் குளிச்சாலும் இவர் ஆச அடங்காது போல்ருக்கு…..ஏறக்குறைய இவருக்கு எல்லாமே கொடுத்திட்டேன்…குழந்தைக்குப் பால் கொடுக்கிற மாதிரி மடில படுக்க வச்சி….அத்தனையும் பண்ணிட்டேன்… ஒரு நா அந்தம்மா பின்னாடி தெருவுல இருந்த பிள்ளையார் கோயிலுக்குப் போயிருந்தப்ப, ஒடம்பு பூரா சோப்பு தேச்சு விட்டுக் குளிப்பாட்டி வேற விட்டேன். அந்த ஈரத்தோடயே பிடிச்சு அணைக்கிறாரு அந்த ஆளு…! படுக்கதான் போடல….இத்தன நாள்ல ஒரு நா கூட அந்தம்மா பார்க்கல…அதான் எனக்கு ஆச்சரியம். சந்தேகப்பட்டு எட்டிக் கூடப் பார்த்ததில்ல.  அம்புட்டு நம்பிக்கயா புருசன் மேல…இல்ல அந்த மாதிரி சந்தேகமே எதுவுமில்லயா? தெரிஞ்சு, மனசறிஞ்சு வெட்டி விட்டுட்டாகளா? இந்தக் காலத்துலதான் மூணு மாசம், ஆறு மாசத்துல பிரிஞ்சிடுறாகளே? இது ஒரு வருஷத்துக்கு மேல ஒட்டியும் ஒட்டாமலும் ஓடுதே…! எந்த வீட்டுல என்னா இருக்கும்னு சொல்லவே முடில! மனுசங்களே தப்பாத்தான் இருப்பாகளோ? தப்பும் சரியும் கலந்துதான் இந்த வாழ்க்கையே இருக்குமோ? அதுக்கு ஆம்பள-பொம்பள வித்தியாசமில்லியோ?   சரியான அமுக்குளியால்ல இருக்குது இந்தம்மா? உள்ளூர பயம்தான் எனக்கு. என்னிக்கு குட்டு வெளிப்படப் போகுதோன்னு….வீதிக்கு வந்திச்சின்னா பெரிய அசிங்கம்…! அப்புறம் நானும் அந்தப் பக்கம் தலகாட்ட முடியாது. அவரும் அங்க குடியிருக்க முடியாது…என்ன கெதியாகப் போகுதோன்னு பயந்திட்டேயிருந்தேன்.

இவுரு ஒரு நா லீவுல இருந்தாரு. அந்தம்மா ஆபீஸ் போகுது. கொண்டு விடப் போயிருந்தாரு. நீ சைடு வழியா வந்து தேய்ச்சுட்டு அங்கயே  படில அடுக்கிட்டுப் போ…பெறவு வந்து இவரு எடுத்து வச்சிக்கிடுவாருன்னிச்சு அந்தம்மா….! சரி…நம்ம வேலய நாம பார்த்திட்டு, நாமபாட்டுக்குப் போவோம்னுட்டு அன்னைக்குக் கொஞ்சம் லேட்டா வந்தேன் நானு.  பாத்திரமெல்லாம் தேய்ச்சி முடிச்சிட்டேன். படிலயும் அடுக்கிட்டேன். வாசக்கதவு தெறக்குற சத்தம் கேட்டிச்சி. அதனாலென்னன்னு நா கௌம்பினேன். படார் படார்னு கொண்டி வெலக்கி கொல்லக் கதவத் தெறக்குறாரு….அதிர்ந்து போய் நா நிக்க….உள்ள வந்து வீட்டைக் கூட்டிட்டுப் போங்க…ன்னாரு…..அம்மா இல்லீங்களே….ன்னு நான் தயங்க….வீடு கூட்டுங்க…. கூட்டாமப் போனா எப்டீ? தூசியாக் கெடக்குல்ல….ன்னு அதிகாரமாச் சொன்னாரு…..! சொல்லிப்புட்டு எப்பயும் போல ரூமுக்குள்ள போய் உட்கார்ந்துக்கிட்டாரு…..அதாவது கம்ப்யூட்டர் ரூமுக்குள்ள இல்ல….டி.வி. இருக்கிற மொத ரூம்ல….அம்புட்டுப் பழக்கத்துக்குப் பெறவும் அவரு “ங்க“ போட்டுச் சொன்னதும், அதிகாரமா கொரல உசத்தினதும்…கொஞ்சம் எனக்குக் கடுப்பாத்தான் இருந்திச்சு….எம்பின்னாடி நக்குன ஆளுக்கு அதிகாரம் வேறயா..?ன்னு நெனச்சேன்….

சரி…இன்னைக்கு இந்த ரூம்ல வச்சு அமுக்கப் போறார் போல்ருக்குன்னு நெனச்சிக்கிட்டு…. நாம்பாட்டுக்கு அடுப்படிலர்ந்து கூட்ட ஆரம்பிச்சேன்…..அன்னைக்கு நடந்தது அதுதாங்க அதிசயம்….கூட்டிட்டே இருக்கேன்….வாசல் கேட்டுத் திறக்குற சத்தம். அந்தம்மா வந்திடுச்சி…..எனக்கா கொல நடுங்கிப் போச்சு…!

என்னாச்சு…சாப்பாடு எடுத்திட்டுப் போகலையா….?ன்னு கேட்டாரு அவரு. நீங்கதான் லீவாச்சே…மதியம் வீட்டுக்கு வந்து சுட வச்சு சூடா சாப்பிடுவமேன்னு பர்மிஷன் சொல்லிட்டு வந்தேன்….திரும்பப் போகணும்…வண்டில .கொண்டு விடுவீங்கல்ல…? ன்னுட்டு அடுப்படிக்குள்ள நுழைஞ்சு சோறு கொழம்புன்னு சுடப் பண்ண ஆரம்பிச்சிடுச்சு…அதோட…கூடவே ஒரு கேள்வியும் கேட்டுச்சி…அதான் பிரமாதம்….

நான்தான் இல்லேல்ல…அப்புறம் எதுக்கு வீட்டுக்குள்ளாற வந்து கூட்டுற….நாளைக்குப் பார்த்துக்கலாமுல்ல…என்ன கொள்ள போகுது…?ம்ம்ம்….?

அந்த ம்ம்ம்….என்னை மிரள வைச்சது. இல்லீங்கம்மா…அய்யாதான் உள்ளே கூட்டு…ஒரே தூசியாயிருக்குன்னாரு…அதான்….

அவரு சொல்வாரு…உனக்கெங்கே போச்சு அறிவு? எதுக்காக உன்னை சைடு வழியா வரச்சொன்னேன்? புத்தி கெட்டுப் போயா?  நல்லவேள…நா வந்திட்டேன்… சரியாப் போச்சு….இல்லேன்னா…? இனிமே இப்படிச் செய்யாதே…இதான் முதலும் கடைசியுமா இருக்கணும்…புரிஞ்சிதா…? – அந்தம்மா பேசிய பேச்சு அதுநாள் வரையிலான எல்லாத்துக்குமாய்ச் சேர்த்துச் சொன்னது போல் விளங்கிச்சு எனக்கு. இல்லேன்னா?ன்னு ஒரு வார்த்தை சொன்னாகளே அதுக்கு என்னா அர்த்தம்? தெரிஞ்சு போச்சோ எல்லாம்? ரெண்டு பேரும் சண்டை போட்டிருப்பாகளோ? இன்னைக்கு உள் ரூமுக்குப் போகாம டி.வி. ரூம்ல உட்கார்ந்தாரே…? அது ஏன்? சந்தேகப்பட்டு வந்தாலும் வருவான்னு எதிர்பார்த்தாரோ? ரொம்ப உஷாராத்தான் இருந்திருக்காரு….!! திருடனுக்குதான புத்தி கூர்மையா வேல செய்யும்?

எப்பொழுதும்போல் மறுநாள் நான் வேலைக்கு வந்தபொழுது முன் பாத்ரூமில் அந்தம்மா குளித்துக் கொண்டிருந்தது. நான் வரும் சத்தம் கேட்டு உள்ளிருந்த மேனிக்கே சொன்னது.

சீக்கிரம் தேய்ச்சு முடி. நாளைலேர்ந்து நீ வேலைக்கு வர வேண்டாம்…தெரிஞ்சிதா? ஒரு வாரம் கழிச்சி ஒண்ணாம் தேதி வந்து உன் சம்பளத்தை வாங்கிட்டுப் போ….

அந்த திடீர் அறிவிப்பு என்னை அதிர வைத்தது. தொண்டை அடைத்தது. சரி என்று கூடச் சொல்ல நாக்கு எழவில்லை. கண்களில் நீர் முட்டியது. டி.வி. அறையை எட்டிப் பார்த்தேன். முகத்தை மறைத்துக் கொண்டு அந்தாள் தீவிரமாய்ப் படித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஏதும் சண்ட நடந்திருக்குமோ? இந்தப் பிசாத்துக் காசக் கணக்குத் தீர்த்துக் கொடுக்க எதுக்கு ஒரு வாரம் கழிச்சு வரணும்? அப்பவே கொடுத்துக் கழிக்க வேண்டிதான? அது அதிகாரம்…மாசம் முடிஞ்சிதான் சம்பளம்ங்கிற திமிரு..!

என் புத்தியச் செருப்பால அடிக்கணும்….புருஷன் கொண்டார காசு பத்தாதுன்னுதான வேலைக்கு வந்தேன்…அடங்கிட்டுக் கெடக்கணும்ல…? எனக்கெல்லாம் இது தேவையா? -நொந்து  கொண்டே கொல்லைப்புறம் நோக்கி  நகர்ந்தேன்.

ஒரு வாரம் கழிச்சு ஒண்ணாம் தேதி எப்படா பிறக்கும்னு காத்திருந்து சம்பளப் பணத்தை வாங்குறதுக்காக அந்த வீட்டுக்குள்ள தயங்கித் தயங்கி அடியெடுத்து வச்சேன்.

ஏண்டீ…சொல்லிட்டு வரமாட்டே…நீபாட்டுக்கு நுழைஞ்சிடுவியா…..வாசல்ல பெல் சுவிட்சு எதுக்காக மாட்டி வச்சிருக்கு….? – கேட்டவாறே நெகிழ்ந்திருந்த ஆடையைச் சரி செய்துக்கிட்டு  அந்த டி.வி. முன் அறையிலிருந்து வெளியே வந்திச்சு அந்த அம்மா….பரபரப்பா பாத்ரூமை நோக்கிப் போறதக் கண்டு தயங்கி நின்னேன் நான். அறையின் சூழலும் இருப்பும் ஒரு மாதிரி இருந்திச்சு.  எப்பவும் தெறந்திருக்கிற ஒரு சன்னலும் மூடிக் கெடந்திச்சு. லைட்டு எரியாததால வாசப் பக்கம் அடைச்ச சன்னல் சூரிய வெளிச்சம்தான்…லேசா வந்திட்டிருந்திச்சு…

அவர் இருக்கிறாரா என்று தயக்கத்தோடு திரும்பிப் பார்த்தபோது  அன்று போலவே முகத்தை மறச்சிக்கிட்டு தீவிரமாப் படிச்சிட்டிருந்தாரு. ஆனால் அந்தக் கால்களும், மோதிரம் அணிஞ்ச தடிச்ச கைகளும், புத்தகத்துக்கு மேலே தெரியுற தூக்கி வாருன தலை சீவலும் அது வேறு யாரோன்னு நினைக்கத் தோணிச்சு. கூடவே அந்த உருவம் லுங்கி கட்டியிருக்கிறதும் பார்வைல குறிப்பாப் பட்டுச்சு.  வாசலில் நிற்கும் டூவீலர் இல்லாததும் உடனே கண்ணை உறுத்தியது….!

                                                —–

உஷாதீபன்

இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. ஊர் வத்தலக்குண்டு. தமிழ்நாடு அரசு. கருவூலத்துறை. கணக்கு அலுவலராய் இருந்து ஓய்வு. 1967 முதல் எழுதி அனைத்து பத்திரிக்கைகளிலும், சமீபமாக இணையதளங்களிலும் எழுதிவருகிறார். இலக்கிய சிந்தனை பரிசு, NCBH பொன்விழா பரிசு, தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற விருது, கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கிருஷ்ணன் மணியம் விருது, அமுதசுரபி பொன்விழா போட்டிப்பரிசு என்று பரிசுகள் பெற்றுள்ளார். கட்டுரை, நாவல், சிறார், சிறுகதை, கவிதை, சினிமா என அனைத்து வடிவங்களிலும் புத்தகங்கள் எழுதியுள்ளார். மதுரை லேடி டோக் கல்லூரியில் இவரது ‘வாழ்க்கை ஒரு ஜீவநதி’ பாடமாக வைக்கப்பட்டது. ‘உள்ளே வெளியே’ தொகுதி மதுரை காமராசர் பலகலையில் பாடமானது. ஜெயமோகனின் தளத்தில் பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்துள்லன. அவரது தமிழ் விக்கியில் இடம் பெற்றிருக்கிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *