இரா.சேனா
வேலஞ்சாவடிக்கு கிழபுறமாக இருந்த வளவில் கலியாண வீட்டின் முன்பு ஒரம்பரைகள் கூடி நின்று இருந்தனர். அங்கு மொத்தமாகவே இருபது குடித்தனங்கள் தான் இருந்தன. தென்வடல் நீளியில் தென்னங்கிடுகு வேய்ந்த சாளைகள் வரிசை மற்றும் எதிர் வரிசையில் சரிக்கு சரியாக இருந்தது. ஒவ்வொருவர் வீட்டின் முன்பும் சலதாரி தாரைகள் எப்போதும் ஈரம் பாய்ந்து இருக்கும். முதல் குடி வந்து இன்றைக்கு நாற்பது வருடங்களுக்கு மேலே இருக்கும். வளவில் உள்ள அனைவரும் பக்கம் பாடு பண்ணையங்களுக்கு கூலி வேலைக்கு செல்பவர்களாகவே இருந்தனர்.
தெள்ளான், அவன் மனைவி செங்கி இருவரும் அந்த வளவில் அனைவரும் மெச்சும்படி தங்களது ஒரே மகளுக்கு தான் கலியாண ஏற்பாடு செய்து இருந்தனர். மண் குடிசையின் வாசல் வரை சாணம் மெழுகி கரைகட்டி வீட்டு அரைச்சுவருக்கும் சுண்ணாம்பு பூசியிருந்தார்கள். மணப்பெண்ணின் முறைமைகாரிகள் சுண்ணாம்பு பாலில் கோலம் வரைந்த மண் கலையங்களில் தவசு, தானியங்களை சுமந்து வந்து சீர் செய்தார்கள்.
தெள்ளான், அந்த குடிசை வீட்டு திண்ணையின் ஓரத்தில் தலைக்கு மப்ளர் சுற்றி கால்களை குறுக்கி உட்கார்ந்து இருந்தான். செங்கி ஒரு கிடை நில்லாமல் ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
முகம் வாடி அமர்ந்திருந்த தெள்ளானுக்கு அந்த பாழாய் போன இருமல் வந்து தொலைந்து விடுமோ என்ற பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. ஒரு முறை தொண்டையை காரி விட்டால் அவ்வளவு தான் நாள் முச்சூடும் இருமி தொலைக்க வேண்டியதாகி விடும். ஏற்பாடுகள் எல்லாம் தயாராகத் தான் இருந்தது. மாப்பிள்ளை விட்டார்கள் தான் இன்னும் வந்த பாடில்லை, அவர்கள் வந்ததும் வளவுக்கு முன்னே இருக்கிற தளச்சியாத்தா கோவிலில் வைத்து பெண்ணுக்கு மங்கிலியத்தை கட்ட சொல்ல வேண்டும்.
ஊர்பணமாக ரூபாய் இருபத்து ஒன்று கோவிலுக்கு சேர்த்தினால் தான் அந்த திருமணத்தை உறவினர்கள் ஏற்றுக் கொண்டது போல ஆகும். சாங்கியம் எல்லாம் முடித்து விட்டு பெண் வீட்டில் அனைவரும் விருந்து உண்ட பிறகு பெண்ணை அழைத்துக் கொண்டு மேற்கே இரண்டு மைல் தொலைவில் உள்ள மாப்பிள்ளையின் ஊருக்கு நடைபயணமாக கிளம்பிவிடுவார்கள்.
முன்பு தெள்ளான், பண்ணையங்களின் கிணறுகளில் தண்ணீர் சேந்த தோல்பறி மூட்டி கொடுக்கும் வேலைக்கு போய் வருவான். அப்படி பறிமூட்ட போய் வரும் பொழுதுகளில் வரப்பீடி புகைப்பதை பழகிக் கொண்டான். புகைத்துக் கொண்டே இருந்ததால் நெஞ்சுக் கூட்டில் புகைக்கூண்டு கட்டி அது இறுகிப் போய் காசம் வந்து விட்டது.
இந்த காசநோய் பீடித்ததால் உடல் மெலிந்து காணப்பட்டான். இரண்டு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து தர்மாஸ்பத்திரியில் மாத்திரை வாங்கி உண்ண பழகி உள்ளான். உயிர் வேண்டுமென்றால் பீடி பிடிப்பதை நிறுத்தியே ஆக வேண்டிய கட்டாயம். எந்த வேலை செய்தாலும் சிறிது நேரத்துக்குள்ளாகவே எளப்பு வந்து சுணங்கிப் போய் அங்கேயே அமர்ந்து விடுகிறான். வீட்டுச் செலவுக்கு செங்கியின் காட்டு வேலை கூலி பணம் பற்றும் பற்றாமலேயும் இருந்தது.
அந்த வட்டாரத்தில் எங்கேயோ ஒரு பெரிய பண்ணையக்காரர் கரெண்ட் மோட்டரை மாட்டியதும் ஆளாளுக்கு எசிலி போட்டு தத்தமது பண்ணையங்களில் மோட்டாரை வாங்கி பொருத்திக் கொண்டு சிமிண்டி தொட்டி கட்டி நீரை தேக்கி பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். கவளை நீர் பாய்ச்சல் அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதாக பேசிக் கொண்டார்கள் ஆனால் நேரில் பார்த்தவர் எவரும் இல்லை.
தெள்ளானுக்கு வயதுக்கு வந்த மகளை கலியாணங்கட்டி அனுப்பிவைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. மகளுக்கு நேர் இளைய ஒரே மகன் நல்லகுன்னான். இந்த கெடுவு காரமடை கொடியேத்ததுக்கு அவனுக்கு பன்னிரெண்டு வருடங்கள் நிறைவடைந்து விடும். தெருவில் தன் சோடி பையன்களோடு குதித்து விளையாடிக் கொண்டு இருந்தான். ஒரு இடத்தில் நிற்க மாட்டான் எப்போதும் ஓடியாடி கிடப்பான்.
இந்த கலியாண செலவு காசுகள் அத்தனையும் நல்லகுன்னான் ஒருவனால் தான் கிடைத்தது.
அந்த ஊரின் கரட்டுக்கு மேற்கே இரண்டாவது பண்ணையம் வெள்ளிங்கிரிக்கு பாத்தியப்பட்டது. முதல் பண்ணையத்தில் தற்போது இருக்கும் சுனைகிணற்றோடு சேர்த்து தனது அண்ணன்காரன் பாகம் எடுத்துக் கொண்டதால் அவன் குடும்பத்தாரோடு போக்கும், வரத்தும் நின்று போனது. வயசாளி தாயும் அண்ணனோடு போய் சேர்ந்து கொண்டாள். வெள்ளியங்கிரியின் குழந்தைகளை கூட தொட்டு தூக்க மாட்டாள். காலை வேளையில் பல் துலக்க வடகோட்டில் இருக்கும் வேப்பமரத்திற்கு தான் போவான். அங்கே இருந்து பார்த்தால் அவனது தாய் வாசலில் இருக்கும் கயிற்று கட்டிலில் அமர்ந்து இருப்பது நன்றாக தெரியும். பெற்ற தாய் தன்னோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அடிக்கடி நினைத்துக் கொள்வான்.
எல்லா கெடுவும் தனது பண்ணையத்து பண்டங்களுக்கு மேவுக்கு ஆகும் என்று சரிபாதி பூமியில் சோளம் போட்டு விடுவான். தெவரை, கொள்ளு, நரிப்பயிறும் அங்காங்கே குழிகள் பார்த்து விதைத்து விடுவான். தனது வீட்டுக்காரி செல்லியம்மா, தனது இரு குழந்தைகள் மற்றும் ஏழு, எட்டு உருப்படி மாடுகள் என இருந்தான்.
சில வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் இருந்து காலேஜ் கன்று ஒன்றை பிடித்து வந்தான். தூய வெள்ளை நிறம் ரோமங்கள் புசுபுசு என்று இருந்தது. அந்த ஊருக்கு வந்த முதல் கலப்பின கிடாரி கன்று. சாது குணம், கன்றின் பின் கழுத்துக்கும் முதுகுக்கும் நடுவில் சுழி இருந்த அமைப்பு நல்லதாக பட்டது. அதற்கு “வெள்ளச்சி” என்று பெயர் வைத்து அழைத்தார்கள். இந்த மாடு மிகவும் ராசியான ஒன்றாக வெள்ளியங்கிரியின் பண்ணையத்தில் பார்க்கப்பட்டது. “வெள்ளச்சி” தனது முதல் ஈத்தில் ஒரு கிடாரி கன்று போட்டது யாரும் நம்பமுடியாத வகையில் வேளைக்கு எட்டு படி பால் கறந்தது.
மெல்ல மெல்ல தனது பட்டியில் இருந்த மயிலம்மாடுகளின் இடத்தை இந்த காலேஜ் மாடுகள் நிரப்பின. இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் தனது ஐந்தாம் ஈத்தில் காளை கன்று ஈன்று இருந்தது. கன்றானது பிறந்த சில மணி நேரத்தில் கிடை நில்லாது குதித்துக் கொண்டே இருந்தது. தனது பல்முளைக்காத வாயில் முதல் வாரத்தில் மண்ணை கரண்டி தின்னப் பார்த்தது. வெள்ளிங்கிரி அதற்கு ஒரு வாய்கூடை போட்டு விட்டான். கன்றுக்குட்டிகள் எப்போதும் பிறந்த மூன்றாம் வாரத்துக்கு பிறகு தான் பச்சை மேவு கடிக்கவே தொடங்கும். அது வரை தாய் பசுவிடம் பால் குடிக்கும். வழக்கமாக இந்த ரக காளை மாடுகள் உழவுக்கு பயன்தராது. கிடாரியாக இருந்தால் தான் பட்டி பெருகும் காளை கன்று வேண்டாத ஒன்றாக தான் பண்ணையங்களில் பார்க்கப்படும்.
ஏனைய மாடுகள் கடித்து தின்று போட்ட மேவு கழிசல்களை ஒரு பெரிய மக்கிரியில் தூக்கி வந்து காளை கன்று முன்பு கொட்டிவிடுவார்கள். கன்று மெதுவாக அதில் இருக்கும் சிறு சிறு சோகைகள் சன்னமான தட்டுகள் என கடித்து வாழ்க்கைய ஓட்டும். எப்போதாவது பெய்யும் மழைக்கு முளைக்கும் புல் பூண்டுகளை மேய விடும் போது மட்டும் தான் பச்சை மேவு கிடைக்கும். இரும்பு முளைக்குச்சியை நன்றாக நிலத்தில் ஊணிவிட்டு நீள கயிறு போட்டு கட்டிவிட்டால் போதும் நாள் முழுமைக்கும் அந்த இடத்தையே தான் சுற்றி சுற்றி வர வேண்டும்.
நாளப்போக்கில் அதற்கு “கழிசல்கன்று” என்று பெயரிட்டு விடுவார்கள். தாய் பசுவை தூரத்தில் இருந்து ஏக்கமாக பார்த்து கொள்ளும் அருகில் சேர்க்க பண்ணையக்காரர் விட மாட்டார். தானியங்கள் கழுவி எடுத்த தண்ணீர் ஊற்றினால் நன்றாக குடித்துக் கொள்ளும். பருத்திக் கொட்டை, புண்ணாக்கு தண்ணியெல்லாம் பால்கறவை மாடுகளுக்கு மட்டும் தான் கிடைக்கும். பட்டி நோன்பு அன்று மட்டும் ஏனைய மாடுகளை போல குளியலும், பட்டி பொங்கலும் உண்டு. கழிசல்கன்று ஒரு வருட வளர்ப்புக்கு பிறகு வியாபாரிக்கு தகவல் சொன்னால் போதும் வெட்டுக்கு வாங்கி போவார்கள். அப்போது பிறந்த காளை கன்றை விற்றால் நட்டம் தான் ஆகும். ஒரு வருடம் அதற்கு மேல் சில வாரங்கள் கழித்து விற்றால் எடை கூடி நல்ல விலைக்கு போகும்.
தெள்ளான், செங்கி அவர்களது மகன் நல்லகுன்னானை அழைத்துக் கொண்டு விடியற்காலையில் வெள்ளியங்கிரியின் பண்ணையத்துக்கு வந்தார்கள்.

“வா தெள்ளா, கலியாணமெல்லாம் முடுஞ்சுதா “
“அதெல்லாமுங்க நெல்லபடியா புள்ளைய தாட்டி உட்டுட்டமுங்க, நீங்க வாராதது ஒன்னுதாங்க கொறையா போச்சுதுங்க”
“பண்ணையத்த உட்டு அக்கடால, இக்கட்டாலா போறப்ல இருக்குதா? பண்டங்களை பாக்கோனும் அதுகுளுக்கு மேவு வெச்சு தண்ணிகட்டோனு, காட்டுல இருக்குற வேலையும் பார்க்கோனு, பசங்க சுள்ளானுக அவிகள வீட்டுக்காரி பாக்கவே அவளுக்கு நேரஞ்செரியா போகுது, என்ற ஆத்தாகாரி எங்க அண்ணனூடே கெதினு ஆயிட்டா, அப்பற நீயுங் கல்யாணத்துக்கு காசு வேணும்னு வந்து நின்ன அதான் ரூவா கொடுத்து உன்ற பையன பண்ணயத்துல ஆளுக்காரனா வெச்சுக்கலாம்னு முடிவு பண்ணின…”
“…..”
அனைத்துக்கும் சோர்வாக நின்றிருந்த தெள்ளானால் “சரிங்க” என்று தான் தலையாட்ட முடிந்தது. செங்கி பண்ணையக்காரரிடம் எதுவும் பேசவில்லை மகனை விட்டுபோகும் ஏக்கம் தொண்டையை அடைத்தது.
“நலகுன்னா, பண்ணையக்காரர் சொல்றபடி கேட்டுக்க சாமி….” என்றாள் செங்கி.
நல்லகுன்னான் அங்கே குதியாட்டம் போட்டபடி இருந்த கழிசல் கன்றை வேடிக்கை பார்த்தபடி நின்று இருந்தான்.
“ம்..”
“இந்த ஒரு வருசத்துக்கு தா உன்ற ஐயன் பேசி உட்ருக்குது.”
“…”
“அடுத்த வருசத்துல இருந்து உங்க மாமன் கூட மம்முட்டி வேலைக்கு போவியாமா”
சரியா என்று மகன் தலையை தொட்டு பேசினாள்.
பண்ணையத்தில் ஆளுக்காரனாக போக நல்லகுன்னான் தனது ஆத்தா, அப்பன் சொல்பேச்சு கேட்டு ஒப்புக் கொண்டான். பண்ணையக்காரச்சி எதுவும் பேசாமல் நல்லகுன்னானையே முறைத்து பார்த்து நின்று இருந்தாள்.
பண்ணையக்காரர் அன்று மதியமே சந்தைக்கு சென்று கழிசல் கன்றுக்கு சிகப்பு நிறத்தில் தாம்பு கயிறும், நல்லகுன்னானுக்கு பச்சை நிறத்தில் அங்கராக்கும் வாங்கி வந்தான்.
000

இரா.சேனா
கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்தவர், தற்போது கரூரில் வசிக்கிறார். மென்பொருள் துறை வல்லுநராக பணியாற்றுகிறார். சிறிய வயதில் செவிவழிச் செய்தியாக கேட்ட மற்றும் பார்த்த நிகழ்வுகளை கொண்டு சிறுகதைகள் எழுதி வருகிறார்.

