எப்போதும்

எனக்குள் ஒரு பயம்

எங்கே என்னைத் தொலைத்து

விடுவீர்களோ என

,

பார்க்காமல் இருந்து விடக்கூடாதென்று

உங்களின் பார்வை தூரத்துக்குள்

என் எல்லைகளை சுருக்கிக் கொள்கிறேன்.

,

கவனம் சிதறிவிடக்கூடாது கூடாதென்று

கவன ஈர்ப்புத் தீர்மானங்களுடன்

காத்திருக்கிறேன்

,

பிடிக்காமல் போய்விடுமோ என்று

சில பிரயத்தனங்கள்

சலித்து விடுமோ என்ற பயத்தில்

பல பராக்கிரமங்கள்

தெரியாமல் தொலைத்து

விட்டதாக எண்ணி என்னை நானே

ஏந்தி நிற்கிறேன் எல்லா தடவையும்

,

வேண்டாம் என்று

வெகு தூரம் விட்டு வந்த

நாய்க்குட்டி வீட்டு வாசலில்

வாலாட்டி நிற்பதைப் போல

வெட்கம் கெட்டுக்

கிடைத்து விடுகிறேன்

ஒவ்வொரு முறையும்

,

தேடும்போதெல்லாம்

கிடைத்துவிடுவதாலோ

என்னவோ என்னை

அடிக்கடித் தொலைத்து விடுகிறீர்கள்

,

தொடர்பு எல்லைக்கு அப்பால்

தொலைந்து விட வேண்டும் என்று

தன்மானம் தடுக்கும் போதெல்லாம்

எப்படியோ கண்டுபிடித்து விடுகிறீர்கள்.

இப்போதெல்லாம் தெரிந்தே

தொலைக்க ஆரம்பித்து விட்டீர்கள்

,

இழுத்துப் பிடித்து

என்னை நானே

சமரசம் செய்தாலும்

இறுதி இழையும்

அறுபட நேர்ந்தால்

தொலைந்து போக மாட்டேன்.

துருவங்களுக்கு அப்பால்

தூக்கி எறிந்துவிடுவேன்.

00

அ.ஈடித் ரேனா

புதுக்கோட்டையில் வசிக்கிறார். பணி- கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை. கடந்த 2-3 வருடங்களாக தான் எழுதி வரும் இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *