சனிக்கிழமை இரவுகள்
*******************************
சனிக்கிழமைகளை
புட்டிகளில் அடைத்து
மொட்டைமாடியில்
விடுதல் அலாதியானது
உருள உருள புரளும்
இரவின் சிமிட்டல்களில்
கொஞ்சம் சிவந்த வானமும்
கொஞ்சம் சிதைந்த நேரமும்
நல்ல கவிதை படித்துவிட்டு
யாரிடமும் பகிர முடியாமல்
இருப்பது போன்றிருக்கும்
ஞாயிறின் விடியல்
இடையிடையே வந்து போகும்
பெருங்கனவுகள் குறித்து
நட்சத்திரங்கள் உதிர்த்ததெல்லாம்
கொஞ்சும் மறதிகளே
தூசு தட்டி
மூலை முடுக்கிலிருந்தெல்லாம்
அள்ளி எடுக்கப்படும்
சனிக்கிழமை இரவுகள்
மூளையில் தங்குவதேயில்லை
மாறாக
இதயத்தில் இசைக்கின்றன…!
*
மறையும் மறைதல்
***************************
யார் கண்ணுக்கும்
தெரியாமலிருந்து
சுகமென பூக்கும் மா கோலம்
தெரிந்தாலும்
தெரியவில்லை என
அகம் மினுங்கும் பூகோளம்
யாரோ அழித்து விட்டதாக
யாரோ மிதித்து விட்டதாக
அவர்களுக்கு தான் அது அப்படி
அது காணுதலின் பிதற்று
என்று எவர் கூறவும்
அதில் அதுவுமில்லை
தினம் ஆகும் பகலின்
புள்ளிக்குள் வரி வரியாய்
மறைவது யுகமெனக்கு
வரிக்கு வரி மறைவதில்
அத்தனை சுகம்
நான்காம் பத்திவரை
இக்கவிதைக்கு..!
*
பூனை மறந்த மதில்
****************************
பித்த நிலைக்குள்
போகும் உன்னத தருணம்
மொத்த கொடியில்
ஒத்த ஆடை
தாவரங்கள் துருவங்கள்
இலைமறையாய்
உள்ளங்கை மறைக்கும்
உயிரோசைக்குள்
காடு கொண்ட ஒற்றையடி
மதி கொண்ட நிறத்தின்
மௌன மொழி மண்டிய
பயத்தில்
முயங்கி திரிவது
பூனை மறந்த மதில்
சொல்லுதல் செய்தல்
இடைவெளி இல்லாத
நூலகத்தில் பாசி படர்ந்து
தூசுகளூடே
சிறு கீற்று வெளிச்சம்
தத்தம் கண்களின்
கவிதை கொன்று குவிக்கும்
குருட்டுச் சிந்தனைக்குள்
மயிரடர்ந்த
மயக்கத் தாழ்
இரு கைகள் ஆணி இறங்க
இன்னும் இரு கைகள்
நீட்டியவனே
கடைசி வரி நிம்மதி
*
நீங்கள் நினைக்காதது
*******************************
குரல்வளை அறுக்கும்
பிறழ்வுநிலை பேரின்பம்
இருண்ட கனவென பின்னிருந்து
ஆவென யாரும் கத்தலாம்
நீள் தேச சிறகின்
அடுத்த நுனி உடைய
படிய காத்திருக்கத்தான் வேண்டும்
ஒற்றையடி நீளும் தாகத்தில்
சொட்டிக் கொண்டே நிரம்ப
காற்றுக்கு கை கூடும்
எதிர்ப்படும் சிலையொன்றின்
சிறு வாயசைப்பில்
கீச்சொலி முத்தமிடும் துணி
அகன்றவளின் மெட்டியொலி
நின்று கவனித்த நிற்காத யாவும்
தீரும் நீரென இப்படியும்
பின் சொல்லாகலாம்
முயன்று நழுவி விழுந்த
நாள் ஒன்றின் ஞாபகத்தில்
மறதி சிறு பிள்ளையென
தவறவிட்ட அஞ்சாம் கல்லாகிறது
கடைசி ஆணியை அடித்த பிறகு
பட்டென்று முடிந்து விடுவதில்லை எதுவும்
மூன்றாம் நாளுக்காகவும் காத்திருக்கலாம்
இக்காகிதத்தில் இன்னும் கொஞ்சம்
இடம் இருப்பதைப் போல
மரிப்பதற்கு முன்பொரு கனா காணும்
மாலைமயக்கம் ஜானகியின்
குரலாகி நீளுதல்
நீங்கள் நினைக்காதது….!
000

கவிஜி
மின்னிதழ்களிலும், இணையதளங்களிலும், முன்னணி பத்திரிக்கைகளிலும் எழுதியவரான கவிஜி கோவையைச் சேர்ந்தவர். ’எதிர்காற்று’ நாவலும், கவிதை மற்ரும் சிறுகதை தொகுப்புகளும் முன்பாக வெளியிட்டிருக்கிறார். ’தட்டு நிலாக்கள்’ கட்டுரைத்தொகுதி சமீபத்தில் வந்துள்ளது. Kaviji Times என்ற பெயரில் ஒரு யூ டியூப் சேனலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர். இவரது ஸ்லோகம், ‘எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன்’.