கவிஞர்களே,… கதை எழுத்துக்கும் வாருங்களேன்!

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார், எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடித்தார் என்றெல்லாம் சொல்வதும் எழுதுவதும் தமிழில் பொது வழக்கம். கண்டுபிடித்தல் என்னும் வகையில் இந்த இரண்டுக்கும் இடையே பெருத்த வித்தியாசங்கள் உள்ளன. அந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இதை வெவ்வேறு சொற்களால் குறிப்பிடுவார்கள். ஏற்கனவே இருக்கிற, ஆனால் அதுவரை உலகம் அறிந்திராத ஒன்றைக் கண்டுபிடிப்பதை டிஸ்கவரி என்கிறார்கள். இதுவரை இல்லவே இல்லாத ஒன்றைக் கண்டுபிடிப்பது இன்வென்ஷன் எனப்படுகிறது. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது டிஸ்கவரி; மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது இன்வென்ஷன். இந்த அடிப்படையில் டிஸ்கவரி என்பதைக் கண்டறிதல் என்றும், இன்வென்ஷன் என்பதைக் கண்டுபிடிப்பு என்றும் குறிப்பிடுவேன்.

     ஏற்கனவே இருக்கிற, ஆனால் வெளியே அறியப்பட்டிராத ஒன்றை ஒருவர் புதிதாக அறிந்து வெளிப்படுத்துவதால் அதைக் கண்டறிதல் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இன்வென்ஷனை வழக்கம் போல கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம். இதன் மூலம் இவ்விரு சொற்களுக்குமான, துல்லியமான பொருள் வேறுபாடுகள் பதிவுறும் என்பது எனது கருத்து.

குக்கிராமத்தில் பத்தாம்ப்பு மட்டுமே படித்தவன் என்பதால் ஆங்கில மொழி அறிவு அவ்வளவாக இல்லை. கேட்டு, வாசித்து, உணர்ந்த வகையில் இது எனது நிலைப்பாடு. தவறோ, மாற்றுக் கருத்தோ இருந்தால் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

இந்த சொல்லாராய்ச்சி இங்கே எதற்கு என்று சிலருக்குத் தோன்றலாம். அது தொடர்பான விஷயம் பிற்பாடு வர உள்ளது. இப்போது பேசுபொருளுக்குச் செல்வோம்.  

*******

பொள்ளாச்சியில் 4,538 கவிஞர்கள் இருக்கிறார்கள்; ஆனால், சிறுகதை எழுத 4 – 5 பேர்தான் இருக்கிறோம்; இதுவரை நாவல் எழுத அடியேன் ஒருவன்தான் என நான் அடிக்கடி சொல்வதுண்டு. மாத நாவல்கள், தொடர்கதைகள் எழுதும் மசாலாக்காரர்களைக் கணக்கில் கொள்வதில்லை என்பதால் அவர்களைச் சேர்த்தவில்லை. இலக்கியத் தரப்பை மட்டுமே சொல்கிறேன்.

4,538 கவிஞர்கள் என்று மிகைப்படுத்திச் சொல்வது வேடிக்கைக்காக. எனினும், பொள்ளாச்சி இலக்கிய வட்டாரத்தில் ஏராளமான கவிஞர்கள் உள்ளனர் என்பது தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்தது.

இவ்வளவு கவிஞர்கள் உள்ள ஊரில் கதைஞர்கள் ஏன் மிகக் குறைவாக உள்ளனர் என்பது கேள்விக்குரியது. ஆனால், இது பொள்ளாச்சிக்கு மட்டுமல்ல; தமிழகம் முழுமைக்கும் பொருந்தும். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான கவிஞர்கள் இருப்பார்கள். தனக்குத் தானே கவிஞர் பட்டம் சூட்டிக்கொண்டு, அதைத் தனது பெயருக்கு முன்னால் பெருமையோடு போட்டுக்கொள்கிற ‘கவிஞ்சர்’ பட்டங்களையும், பட்டம் சூடாத துணுக்குக் கவிஞர்கள், ஆ – ஓ கவிஞர்கள், மூன்று புள்ளிக் கவிஞர்கள் போன்றவர்களையும் விட்டுவிடுவோம். பொருட்படுத்தத் தக்க சீரிய இலக்கியக் கவிஞர்களை மட்டுமே கணக்கில் கொண்டாலும், கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்; கதைஞர்கள் குறைவு, நாவலர்கள் (நாவலாசிரியர்களை இப்படிச் சொல்லலாமா?) மிகக் குறைவு.

கவிஞர்கள் அதிகம், கதைஞர்கள் குறைவு என்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கணிசமான கவிஞர்கள் கதை எழுத்துக்கு வராததற்கான முக்கிய காரணம் சோம்பேறித்தனம்தான். கவிதை எனில் சில வரிகளில், சொற்களில், சில நிமிடங்களில் எழுதிவிடலாம். கதை எழுத்துக்கு மணிக் கணக்காக, நாள் கணக்காக உழைக்க வேண்டியிருக்கும். ஆகவேதான் அவர்கள் கதை எழுத்துக்கு முன்வராமல், கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்.

கவிஞர்கள் அனைவரும் கதை எழுத்துக்கு வர வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல; அதற்கு அவசியமும் இல்லை. ஆனால், கதைகள் எழுதக் கூடிய தன்மை, திறமை, வாழ்வனுபவம் கொண்டவர்கள் கதை எழுத்துக்கும் வருவது அவர்களுக்கும் நல்லது; இலக்கியத்துக்கும் நல்லது.

கவிதையில் எழுதக் கூடியவற்றை கவிதையாக எழுதுங்கள்; கதையாக எழுதக் கூடியவற்றைக் கதையாக எழுதுங்கள் என்பதே, மேற்கூறிய விதமாக உள்ள கவிஞர்களிடம் நான் சொல்லக் கூடியது.

எண்பது, தொண்ணூறுகளில் எழுதப்பட்ட தமிழ் கவிதைகளில் அனேக கவிதைகள் கதைக் கவிதைகளாக இருக்கும். இன்றுவரை அது தொடர்கிறது. குறிப்பாக, குடும்பக் கவிதைகள், அப்பா, அம்மா, அக்கா, தங்கை, மகள் ஆகியோரைப் பற்றி எழுதப்படும் கவிதைகள் பெரும்பாலானவற்றிலும் சில பல சம்பவங்கள் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். அவை கதையாக எழுதப்படக் கூடியவை என்பது வெளிப்படையாகத் தெரியும். கதாபாத்திரங்கள், குணச்சித்திரங்கள், சம்பவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படுகிற கவிதைகளிலும் இப்படியே. முழுமையான கதை அவற்றில் இல்லாவிட்டாலும், கதைக் கூறுகள் இருக்கும். அவற்றைக் கதையாக விரித்தெடுக்க இயலும்.

பொள்ளாச்சி இலக்கியர்களில் கவிஞராக இருப்பினும் சிறுகதை, கட்டுரை ஆகியவற்றிலும் ஈடுபடுகிறவர் நண்பர் க.அம்சப்ரியா. அவரது கட்டுரைகளிலேயே கதைக் கூறுகள் நிறைய இருக்கும். குறிப்பாக, சொற்களில் ஒளிந்திருக்கும் மௌனம் என்னும் அவரது கட்டுரைத் தொகுப்பில் பல கட்டுரைகளில் கதைக் கூறுகள் உள்ளன. அந்த நூல் வெளியானபோதே அம்சுவிடம் அதைக் குறிப்பிட்டு, அவற்றைக் கதைகளாக எழுதும்படி சொல்லியிருந்தேன். செய்தாரா என்பது தெரியவில்லை.

பொள்ளாச்சி நண்பர் ந.கனகராஜன் கவிதை, சிறுகதை இரண்டும் எழுதக் கூடியவர். அவற்றில் அவர் திறம் பெற்றிருப்பது கதைகளில்தான் என்பதால் அவரைக் கவிஞர் என்பதைவிட கதைஞர் என்பதே பொருந்தும். அவ்வாறே அறியவும்படுகிறார்.

இந்த ஊரின் இந்தப் பட்டியலில் அடுத்ததாக என்னையும் சேர்த்துக்கொள்ளலாம். கனகு போலவே எனக்கும் கவிதை முதன்மை ஊடகமல்ல. கதைதான். இப்போது நாவல்கள்.

கதைஞர்கள் எல்லோராலும் கவிதை எழுத இயலாது. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால், அவர்களால் எழுத முடிந்தால் எழுதுவது அவர்களின் கதை எழுத்துக்கு நல்லது. சிறுகதை & / நாவல் எழுத்தில் திறமும் பேரும் பெற்ற ஒருவர், கவிதைகளில் அவ்வளவாக திறம் பெறாமலும், சிறந்த படைப்புகளைத் தர இயலாமலும், பேர் பெறாமலும் இருக்கலாம். ஆனால், கவிதை எழுத்து அவரது மொழி அழகைக் கூட்டி, கதை எழுத்தின் இலக்கிய நயத்தில் கவித்துவம் சேர்க்க உதவும். கவிதையின் சுருங்கக் கூறி விளக்கும் தன்மை, அவரது கதை கூறலுக்கும் பயன்படும். கவிதை எழுதாத கதைஞர்கள், கவிதை வாசிப்பிலாவது ஈடுபட வேண்டும். மேற்கூறியவாறே அவர்களுக்கு அது மொழி அழகு, சுருங்கக் கூறல் ஆகியவற்றுக்குப் பயன்படும். ஆகவே, கவிதை வாசிப்பு கதைஞர்களுக்கு அவசியம் என்பேன். அதைக் கட்டாயமாக்கிக்கொண்டால் இன்னும் நல்லது.

கவித்துவமான கதை சொல்லல், மொழி நடை ஆகியவை கதை எழுத்துக்கு செவ்வியல் தன்மையைக் கொடுக்க வல்லது. லத்தீன் அமெரிக்க புனைகதை எழுத்தாளரான யுவான் ருல்ஃபோவின் சிறுகதைகள் அவ் வகையில் என்னைப் பெரிதும் கவர்ந்தவை. ஓ.வி.விஜயனின் கஸாக்கின் இதிகாசம், மலையாள செவ்வியல் நாவல்களின் சிகரமாக உள்ளதற்கு அதன் மொழி மிக முக்கிய காரணம். தமிழில் இவ் வகையில் என்னை மிகக் கவர்ந்தவர்கள் லா.ச.ரா, மௌனி, ஜெயமோகன். (லா.ச.ரா., சிறுகதையாளராக மாறுவேடம் போட்டுக்கொண்ட கவிஞர், சொற்களின் இசை வித்தகர் என்றே சொல்வேன்).

நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்துவிட வேண்டும் என்றார் லா.ச.ரா. மந்திரம் போல் சொல் வேண்டும் என்றான் பாரதி. இப்படியான சொல் வன்மைகள் கைவசமாக கவிதை வாசிப்பும், கவிதை எழுத்தும் கதைஞர்களுக்கு மிக உதவும்.

கடந்த சில வருடங்களாக கவிதை எழுத்திலும், வாசிப்பிலும் அவ்வளவாக ஈடுபடாமல் கதை, நாவல் எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருந்த நான் சமீப காலமாக இவற்றில் ஈடுபட்டு வருவதற்கு மிக முக்கிய காரணம் புனைகதை எழுத்தில் மொழி வளம், சொற்சுவை ஆகியவற்றுக்காகவே.

இனி இதற்கு மறுதலையைப் பார்ப்போம்.

கவிஞர்கள் எல்லோராலும் கதை எழுத இயலாது. அது அவசியமும் இல்லை. ஆனால், கதை எழுத்துத் தகுதி உடைய கவிஞர்கள் அதற்கு வந்தால் அவர்களுக்கும் கூடுதல் பலன்; இலக்கியத்துக்கும் பலன்.

முதலாவதாக, கவிதையில் சிலவற்றை மட்டுமே சொல்லவும், வெளிப்படுத்தவும் முடியும். முக்கியமாக, கவிதை என்னும் ஊடகம் உணர்ச்சி அடிப்படையிலானது. ஆகவே, கவிஞர்கள் பாடுபொருள் சார்ந்த தங்களின் உணர்வுகள், உணர்ச்சிகள், உள்ளுணர்வுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாக கவிதை உள்ளது. கதைகள் சம்பவங்களின் அடிப்படையிலானவை. நாவல்களோ, குறுகிய அல்லது நீண்ட கால வாழ்க்கையின் தொடர் சம்பவங்கள், வரலாறுகள், இவற்றாலான பெரும் புனைவுகள் ஆகியவற்றுக்கான பரந்த களமாக உள்ளன. ஆகவே, அவற்றில் நிறைய விஷயங்களைச் சொல்லவும், வெளிப்படுத்தவும் முடியும்.

அடுத்ததாக, கவிதைகளைக் காட்டிலும் கதைகளும், நாவல்களும் அதிகமான வாசகர்களால் விரும்பப்படுகிறது. நூல் வெளியீடுகளைப் பொறுத்த வரை பதிப்பகங்கள், பிரபலமற்றவர்களின் கவிதைத் தொகுப்புகளை வெளியிட அவ்வளவாக விரும்புவதில்லை. சில பதிப்பகங்கள் கவிதைத் தொகுப்புகளை வெளியிடுவதும் கிடையாது. பெரும்பாலான கவிஞர்கள், படைப்பாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களின் நூல்களை வெளியிடுகிற பதிப்பகங்களுக்குப் பணம் கொடுத்து தங்கள் கவிதைத் தொகுப்புகளை வெளியிடுகின்றனர். சிலர் தற்போதைய பி.ஓ.டி. முறையில் சொந்த வெளியீடாக 30 அல்லது 40 பிரதிகள் அச்சடித்துக்கொள்கின்றனர். பணம் கொடுத்து நூல் வெளியிட வசதியோ, விருப்பமோ இல்லாத, பிரபலமற்ற கவிஞர்கள் கவிதைத் தொகுப்பு வெளியிடுவது வெகு சிரமம். பலருக்கு அதற்கு வாய்ப்பே இல்லாமலும் போகலாம். 

சிறுகதைத் தொகுப்புகள் என்றால் வெளியிட வாய்ப்புகள் ஓரளவு உள்ளன. அதைவிட நாவல்கள் என்றால் பதிப்பகங்கள் விரைந்து முன்வரும். கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு வெளியீடுகளுக்குக் கேட்கப் போனாலே, நாவல் இருந்தால் கொடுங்கள், உடனே வெளியிடலாம் என்கிற நிலை, 500 – 1000 பிரதிகள் அச்சடித்த முந்தைய அச்சுக் காலங்களிலும் இருந்தது; 30 பிரதிகள் அச்சிடுகிற இந்த பி.ஓ.டி. காலத்திலும் நீடிக்கிறது.

கதைகள் எழுத வாய்ப்புள்ள கவிஞர்கள் இவற்றைப் பற்றி கவனம் கொள்க.

******

     எனது பழக்கத்தில், கதைகள் எழுதுவதற்குத் தக்கவர்கள் என சிலரைக் கண்டறிய நேர்ந்தபோது, அவர்களிடம் கதைகள், நாவல்கள் எழுதுவதற்குத் தூண்டியிருக்கிறேன். சமீப வருடங்களில் அவ்வாறு நான் சொன்ன மூவரும் பெண் படைப்பாளிகள் என்பதும், அதில் இருவர் கவிஞிகள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

     முதலாமவர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவரான செங்கவின்.

பொள்ளாச்சிக் கவிஞர்கள் கூட்டத்தில் பெரும்பாலானவர்களை எனக்குப் பழக்கமில்லை. ஆறேழு நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்குப் பிடித்தமான, நான் பாராட்டவும் சிலாகிக்கவும் கூடிய காத்திரமான கவிதைகளை எழுதியவர்கள் எனில் இப்போதைக்கு நான்கு பேர்தான். அவர்களின் கவிதைத் தொகுப்புகள் வெளியான கால வரிசைப்படி ஸ்நேகிதன், மௌனம் இரமேசு, செங்கவின், ச.ப்ரியா.

ஸ்நேகிதன், எனக்குத் தெரிய ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். கேரளாவில் உள்ள திருவத்பள்ளி விழா தொடர்பான அக் கதையை வாசித்திருக்கிறேன். அவர் எழுத்தைத் துறந்து, திரைத் துறையில் நடிப்புக்காகச் சென்றுவிட்டார். எழுத்தில் தொடர்ந்து நீடித்திருந்தால் கதை எழுத்திலும் தொடர்ந்து தடம் பதித்திருப்பார்.

மௌனம் இரமேசுவைக் கதை எழுதச் சொல்ல எனக்குத் தோன்றியதில்லை. அவரது தன்மைகள் அப்படி.

ஆனால், செங்கவினிடம் கதை எழுத்துக்கு வரச் சொல்லித் தூண்டியிருக்கிறேன். அதற்குப் பல காரணங்கள். முதன்மையானது, அவரது அரசியல் – சமூகச் செயல்பாடுகள், களப் பணிகள் காரணமாக அவருக்கு சமூக முக்கியத்துவம் உள்ளதும், கதையாக, நாவலாக எழுதத் தக்கதுமான அனுபவங்கள் நிறைய இருக்கும் என்பது. அடுத்ததாக, அவரது கவிதைகளில் உள்ள எழுத்து வன்மை, சொற் செறிவு, பிற கலைச் சிறப்புகள், திடமும் உறுதியும் மிக்க பார்வைகள், துணிச்சலான படைப்பு வெளிப்பாடுகள், மென்மையும் வன்மையும் ஒருங்கே கொண்ட தன்மைகள் ஆகியவை கதை எழுத்துக்கு வலுச் சேர்க்கும் என்பது. அவரிடம் இது குறித்துப் பேசியிருக்கிறேன். அவரும் கதை எழுத்துக்கு வர விரும்பியிருந்தார். ஆனால், பணிச் சூழல் காரணமாக அவரால் இலக்கியப் பணியையே சரிவரத் தொடர இயலவில்லை எனத் தெரிய வருகிறது.

இரண்டாவதாக, நண்பர் கருக்கல் சுரேஷ்வரனின் துணைவி, நிவேதிதா. இலக்கியப் படைப்புகள் எதிலும் ஈடுபட்டிராத நிலையில் இரண்டோ மூன்றோ வருடங்களுக்கு முன்பு அவர் தனது சுய சரிதை அடிப்படையில் சில அனுபவங்களை எழுதியிருந்தார். அதை நூலாக வெளியிடும் எண்ணத்தில் இருந்த தம்பதியர், முன்னதாக என்னிடமும் இன்னொரு நண்பரிடமும் வாசிக்கக் கொடுத்து கருத்து கேட்டிருந்தனர். நிவேதிதாவின் நகைச்சுவை – நையாண்டிகளும், வன்னியல்பும், உறுதிப்பாடும் அவரின் தனிச் சிறப்புகள். அவை அந்த வாழ்க்கை அனுபவங்கள் யாவிலும் காணக் கிடைக்கும். அந்த அனுபவங்கள் பலதும் சிறுகதைகள், குறுநாவல்களாக எழுதத் தக்கவையே. நடந்த சம்பவங்களை அவர் விவரித்திருந்த விதமும கதாசிரியர்களுக்கு உரிய வகையில் இருந்தது.

சுய சரிதமோ, பிறர் சரிதமோ – சரிதம் எழுத்து வேறு; புனைகதை எழுத்து வேறு என்பது தெரிந்ததே. சரித எழுத்தாளர்கள் எல்லோராலும் புனைகதை எழுத இயலாது. நிவேதிதாவின் சுயசரிதப் பிரதியில் புனைகதை எழுத்துக்கான அம்சங்கள் வலுவாகவே இருந்தன. அதனால் அவர் சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதலாம்; அதில் பயிற்சியுற்ற பிறகு நாவலுக்கும் வரலாம் எனத் தெரிவித்து, கதை எழுதத் தூண்டினேன். மகிழ்ச்சியுற்று, முயற்சிக்கிறேன் என்றார். அவரது அந்த நூல் குறித்து ஒரு ரைட் அப் எழுதித் தருமாறு கேட்டனர். ‘கண்டறிந்தேன் ஒரு கதாசிரியையை’ என்ற தலைப்பில், மேலே கூறியவற்றை உட்படுத்தி எழுதிக் கொடுத்தேன்.

போன வருடமோ என்னவோ அந்த நூல் வெளியான தகவலை முகநூலில் பார்த்தேன். நூலின் அச்சுப் பிரதியைப் பார்க்க வாய்க்கவில்லை. அதில் எனது ரைட் அப் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். அவர் கதை எழுத்துக்கு வந்தாரா என்பதும் தெரியவில்லை.

அடுத்ததாக கதை எழுத்துக்கு வரும்படி நான் சொன்ன நபர், பொள்ளாச்சிக் கவிஞியான ச.ப்ரியா. ஆனைமலையைச் சேர்ந்த அவரை 15 – 17 வருடங்களுக்கு முன்பு, அதே ஊரைச் சேர்ந்த ஸ்நேகிதனைச் சந்திக்கச் சென்றபோது ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். அப்போது துவக்க நிலைக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தார். அந்த சமயம் கருக்கல் இதழில் வெளியான, எனது எதிர்கவிதைகளில் ஒன்றான ஜீன்ஸ் ஆண்டாள் கவிதையை அவர் பாராட்டியதும் ஞாபகம். வழக்கமாக பெண்களாலும், பெண்ணியக் கவிஞிகளாலும் கூட எதிர்க்கப்படக் கூடிய தன்மை கொண்ட அக் கவிதையை அவர் பாராட்டியது ஆச்சரியமாகவே இருந்தது.

அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக அவரைச் சந்திக்கவும் இல்லை; கேள்விப்படவும் இல்லை. சென்ற ஆண்டு எனது நீர்க்கொல்லி நாவலுக்கு எழுத்து அமைப்பின் பரிசு பெற்றதற்கு பொள்ளாச்சி இலக்கிய வட்டக் கூட்டத்தில் மரியாதை செய்யும் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. அப்போதுதான் மீண்டும் ச.ப்ரியாவைச் சந்தித்தேன். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த எனது நூல்களில், கௌதம புத்தன் கசாப்புக் கடை என்னும் கவிதைத் தொகுப்பை வாங்கி வந்திருந்த அவர், அதில் கையொப்பம் இட்டுத் தருமாறு கேட்டார்.

“இதையா வாங்குனீங்க? ரொம்பக் கொடூரமான கவிதைகளும் இருக்கும்; அதனால மெல்லியல் வாசகர்கள், படைப்பாளிகள் யாரும் அதை வாங்க வேண்டாம்னு மேடைல என்னோட உரைலயே சொன்னனே…!” என்றேன்.

“பரவால்லீங்க தோழர்” என்றவர், தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான அனலிக்காவை எனக்கு அன்பளித்தார்.

பொள்ளாச்சிக் கவிஞர்களின் பொது நிலவரம் தெரிந்ததே. அரிதிற் பெரும்பான்மையர்களும் மெல்லியல் கவிஞர்கள். எனக்குப் பிடித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்நேகிதன், செங்கவின் ஆகியோர்தான் வன்னியல் கவிஞர்கள். நானும் அந்த வகையினன். எனக்கு மெல்லியல் கவிதைகளும் பிடிக்கும் என்றாலும், அவை சாதாரணமாகவோ, க்ளிஷேவாகவோ, எலிமென்ட்ரியாகவோ இருந்தால் பிடிக்காது. தேவையான இடங்களில் மென்மை, கவித்துவத்தில் செவ்வியல் தன்மை, கூடவே போர்க்குணம் கொண்ட வன்மை, கலகத்தன்மை ஆகியவை கொண்ட கவிதைகள்தாம் மிகப் பிடித்தமானவை. பேருண்மைகளைத் தொடும் ஆன்மிகக் கவிதைகளும் பிடிக்கும்.

இங்கு சொல்லப்பட்ட முந்தைய பட்டியல் தவிர, பொள்ளாச்சிக் கவிஞர்களில் இரா.பூபாலனின் சில கவிதைகளில் சற்றே கலகத்தன்மையும், வன்னியல்பும் காணக் கிடைக்கின்றன. மற்றபடி யாவரும் மெல்லியலாளர்களே என்பதால் ச.ப்ரியாவின் கவிதைகளும் அவ்வாறே இருக்கக் கூடும் எனக் கருதியிருந்தேன்.

அனலிக்கா கவிதைத் தொகுப்பை வாசித்தபோது அது நான் நினைத்ததற்கு மாறாக, வன்னியல்தன்மை கொண்டதும், சிறந்ததுமான கவிதைகள் சிலவற்றைக் கொண்டதாக இருந்தது. அத் தொகுப்பில் உள்ள ஏராளமான காதல் கவிதைகளில் ஒன்று கூட என்னைக் கவரவில்லை; அதில் புதிதாக எதுவும் இல்லை. அவை நீங்கலான மற்ற கவிதைகளை மூன்று தரத்தில் பிரிக்கலாம். முதல் ரகம், தனித்தன்மை, ஆளுமை, வன்மை, ஆழ்ந்த வாழ்க்கை அனுபவங்கள், சமூகப் பார்வைகள், கலைச் சிறப்புகள் கொண்டவை. ச.ப்ரியா மட்டுமே எழுதக் கூடியவை. சுமார் ஏழெட்டு கவிதைகள் இவ் வகையில் உள்ளன. இவற்றை வைத்துத்தான் அவரை நான் பொள்ளாச்சிக் கவிஞர்களில் எனக்குப் பிடித்தமான, நான் பாராட்டக் கூடிய கவிஞர் என்ற பட்டியலில் நான்காவதாகக் குறிப்பிடுகிறேன். இரண்டாவது ரகக் கவிதைகளில் அவரது பெயரை எடுத்துவிட்டு, தனித்துவமற்ற பெருங்கூட்டக் கவிஞர்களில் எவருடைய பெயரை வைத்தாலும் பொருந்தும். மூன்றாவது ரகம் பொருட்படுத்தத் தக்கதல்ல.

     கவிதைத் தொகுப்பை வாசித்துவிட்டு ப்ரியாவை அலைபேசியில் அழைத்து எனது பாராட்டுகளைத் தெரிவித்தேன். அவருடன் பேசும்போது அவர் கூறிய அவரது வாழ்க்கை அனுபவங்களும், அவர் அதைச் சொன்ன விதமும், புனைகதை எழுத்துக்குத் தக்கதாக இருந்தன. அவரது வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிற குறிப்பிட்ட ஒரு சம்பவம் குறுநாவலாக எழுதத் தக்கது என்பதால் அதைக் குறுநாவலாக எழுதும்படியும், ஆனால் அது பொறுமையாக எழுதப்பட வேண்டியது என்றும், அதற்கு முன் பயிற்சியாக சில சிறுகதைகள் எழுதுவது நல்லது என்றும் கூறினேன். சிறுகதைகளும், குறுநாவலகளும் எழுதி, கதை எழுத்து வசமான பிறகு நாவல் எழுத்துக்கு வரலாம் என்றும் சொன்னேன்.

     அவர் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். 

முன்பே ஓரிரு இலக்கியர்கள் அவரிடம் சிறுகதை எழுதச் சொல்லியிருந்தார்களாம். நானும் அதைச் சொன்னதோடு, அது குறித்து விரிவாக உரையாடியிருந்ததால் அவர் மிகுந்த ஊக்கமுற்றார். “முயற்சி செய்கிறேன். எழுதி முடித்து உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். கருத்து சொல்லுங்கள். திருத்தங்கள் தேவையெனில் செய்து கொடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். தாராளமாக செய்து தருகிறேன் என்றேன்.

சில பல மாதங்களுக்குப் பிறகு கதை எழுத்தில் இறங்கி, கடந்த மாதத்தில் தனது முதல் சிறுகதையான அச்சு வெல்லம் கதையை எழுதி முடித்தார்.

‘மடிக் கணினி பழுதாகியிருப்பதால் அலைபேசியிலேயே கதையை எழுதினேன். அதில் பிழை திருத்தம், வரிகள் அமைப்பு ஆகியவற்றை சரிப்படுத்துவது மிகுந்த சிரமமாக உள்ளது. அதனாலேயே உங்களுக்கு அனுப்பவில்லை’ என்றார்.

வழக்கமாக, நெருங்கிய நண்பர்களுடையது எனினும், இத்தகைய ட்ராஃப்ட்டுகளை மட்டுமல்ல; இடைவெளியின்றி நெடுகத்துக்கு தட்டச்சு செய்யப்பட்டுள்ள கவிதை நூல் பிரதிகளைக் கூட வாசிக்க மாட்டேன். இவர் கணினியை சரிசெய்ய தாமதம் ஆகும் என்பதால் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், முன்கூட்டியே பிரதியின் நிலவரத்தைச் சொல்லிவிட்டதாலும், ‘பரவாயில்லை, அனுப்புங்கள். நானே அதைச் சரி செய்துகொள்கிறேன்’ என்றேன்.

     கதைத் தலைப்பு, கதாசிரியை பெயர் உட்பட சரியாக 900 சொற்கள் மட்டுமே கொண்ட சிறிய சிறுகதை அது. சொற்களுக்கிடையே இடைவெளி, பத்திகள் பிரிப்பு, புள்ளி, காற்புள்ளி வகையறாக்கள் இடுதல் உள்ளிட்ட காரியங்களை முதலில் செய்ய வேண்டியதாயிற்று. மூன்று இலக்க எண்ணிக்கையில் இருந்த எழுத்துப் பிழைகளையும் சரி செய்தேன். அவர் என்னிடம் எடிட்டிங்கும் செய்து தரச் சொல்லியிருந்தார். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. மெய்ப்புத் திருத்துநர் வேலையை மட்டுமே செய்தேன். எடிட்டிங் நான் செய்வதை விட, எங்கெங்கே எடிட்டிங் செய்யலாமோ, அதை அவருக்குத் தெரிவித்தால் அவரும் கற்றுக்கொள்வார் என்பதால், நீக்கலாம் எனக் கருதுகிற சொற்கள், வாசகங்களை மட்டும் சிவப்பு எழுத்துகளாக்கி, குறுக்குக் கோடும் போட்டுவிட்டேன். கொங்கு மண்ணில் நடக்கும் இக் கதைக்குப் பொருந்தாமல், பாத்திரங்களின் பேச்சில் மதுரை, நெல்லை வட்டாரச் சொற்கள் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை வேறு வகையில் அடையாளமிட்டுக் காட்டினேன்.

     முழுமையாக எந்த ஒரு வாக்கியமும் நீக்கப்பட வேண்டியதாக இருக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். அவ்வளவு கச்சிதத் தன்மையோடு கதை எழுதப்பட்டிருந்தது. கதைகளில் உரையாடல்களுக்குப் பயன்படுத்த வேண்டிய மேற்கோள்களை எங்கும் பயன்படுத்தவில்லை. அதனால் வசனங்கள் முடிந்த பின் என்று சொன்னார், எனக் கேட்டாள் என்பதாக எழுதுவது தவிர்க்க இயலாமல் ஒவ்வொரு முறையும் வந்திருந்தது. நீக்கத் தக்கதாக இருந்தவை இவைதான். மேற்கோள்குறிகளைப் பயன்படுத்தியிருந்தால் இந்த நீக்கங்களுக்கு அவசியம் இருந்திராது.

     திருத்தம் செய்த பிரதியை அவருக்கு அனுப்பினேன். நீக்கலாம் எனக் குறிப்பிட்ட சொற்கள், வாசகங்களை நீக்கி, சுட்டிக் காட்டிய பிற வட்டாரச் சொற்களைத் திருத்திக்கொண்டுவிட்டார். அந்தக் கதை இப்போது நடுகல் இதழில் வெளியாவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

     கதை வாசிப்பில் ப்ரியாவுக்கு அவ்வளவாக அனுபவம் இருக்காது என்பதால், கதை எழுத்து நுட்பங்களைக் கற்கும் வகையில் கதை, நாவல்கள் வாசிப்பு மிக அவசியம் என சொல்லியிருக்கிறேன். அவருக்கு சில சிறந்த சிறுகதைகள், நாவல்களின் மின்னூல்கள் சிலவற்றை அனுப்பிக் கொடுக்கவும் செய்தேன். இணையத்தில் எங்கெங்கே இலக்கிய இலவச மின்னூல்கள் கிடைக்கும், எப்படியெல்லாம் தேடலாம் என்பதையும் தெரிவித்திருக்கிறேன்.

     பாராட்டுகளை மட்டுமே விரும்புகிற, விமர்சனம் செய்தால் பிடிக்காத படைப்பாளிகள் பெருங்கூட்டத்தில், விமர்சனத்தை ஏற்கும் தன்மையும், அதன் மூலமே மேம்பட இயலும் என்கிற புரிதலும் ப்ரியாவுக்கு உள்ளன. அவை அவரது எல்லா வித எழுத்துப் பணியையும் சிறக்கச் செய்யும். கதை எழுத்தில் தொடர்ந்து ஆவலும், அக்கறையும் காட்டிவருகிறார். அடுத்த வருட இறுதி வாக்கில் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பை எதிர்பார்க்கலாம். அடுத்ததாக நாவல் எழுத்துக்கும் வருவார். கவிதை போலவே புனைகதை எழுத்திலும் பரவலான பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பெறுவார். இதை வெறும் நம்பிக்கையாக அல்ல. அவரது எழுத்துத் திறம், வாழ்க்கை அனுபவங்கள், அவரது குணங்கள், வாய்ப்புகளைப் பயன்படுத்தும் கவனம் உள்ளிட்ட பலதையும் கருத்தில் கொண்டே சொல்கிறேன்.

புனைகதை எழுத்துலகில் அச்சு வெல்லத்தோடு அடியெடுத்து வைத்திருக்கும் ச.ப்ரியாவுக்கு வரவேற்புகளும் வாழ்த்துகளும்!

******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *