கல்லெறிதல்

     கவின் வீட்டுப்பாடங்களைச் செய்துகொண்டிருந்தான். தீபாவளிக்கு ஐந்து நாள்கள் விடுமுறை விட்டிருக்கிறார்கள். அதை முழுமையாக விளையாடிக் கழிக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தான். வாட்ஸ் அப்பில் எல்லோருக்கும் தன்னுடைய குரலில் தீபாவளி வாழ்த்துகளை முன்கூட்டியே அனுப்பியிருந்தான். ஹேப்பி தீபாவளி.. ஜாலி.. ஜாலி.. ஜாலிரொம்ப.. என்று மழலைக் குரலில் கொஞ்சி. ஒன்றாம் வகுப்புதான் படிக்கிறான்.

அழகான கையெழுத்தில் அவன் வீட்டுப்பாடங்களைச் செய்வதைப் பார்க்கையில் சின்ன மான்குட்டி புல்வெளியில் தலையைக் குனிந்து மேய்வதைப்போலிருந்தது.

’கவின் ஹோம் வொர்க் முடிச்சாச்சா?’ என்று சமையலறையிலிருந்து அவன் அம்மா குரல் கொடுத்தாள்.

’அம்மா.. இரண்டு முடிச்சாச்சு.. இன்னும் இரண்டு இருக்கு’ என்றான்.

’சீக்கிரம் முடி’ என்றாள் கவினின் அம்மா.

’சரிம்மா… முடிச்சிடறேன்’ என்று சொல்லிவிட்டு எழுதுவதைத் தொடர்ந்தான்.

கவின் வீட்டுப்பாடங்களை முடித்து கொண்டுபோய் அலமாரியில் வைத்துவிட்டு வருவதற்கும் அவன் அம்மாச்சி கையில் துவைத்த துணிகளுடன் வருவதற்கும் சரியாக இருந்தது.

தீபாவளிக்கு கவின் அவன் அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கிறான்.

’கவின் மாடிக்கு வர்றியா? துணிகளைக் காயப்போட்டுட்டு செடிங்களுக்குத் தண்ணீ ஊத்திட்டு வரலாம்’ என்று கூப்பிட்டாள்.

’வரேன் அம்மாச்சி’.. என்று அவளுடன் மாடிப்படியேறினான்.

மாடியில் கவின் அம்மாச்சி.. துணிகளை உதறிக் காயப்போட ஆரம்பித்தாள்.

கவின் எதையும் நுட்பமாகக் கவனிப்பவன். செய்பவன்.

’எதுக்கு அம்மாச்சி துணிங்கள உதறிப்போடறே.. அப்படியே போட்டாலும் காஞ்சுபோயிடுமே’ என்று கேட்டான்.

’எப்படிப் போட்டாலும் காஞ்சிப்போயிடுந்தான். வாசிங் மெசின்ல போடறதால ஒவ்வொரு துணியும் சுருக்கங்களோட இப்படிப் பாரு இருக்கும். அப்படியே போட்டாக் காஞ்சிப்போனாலும் இப்படியே சுருக்கமா வரும். போட்டுக்க முடியாது.. ஈரமா இருக்கும்போது உதறிப்போட்டா சுருக்கம் போயிடும். அப்படியே காஞ்சிடும்.. காஞ்சவுடனே பார்த்தா அயர்ன் பண்ணமாதிரி இருக்கும்.. அதுக்காகத்தான்..’

’ஓகே அம்மாச்சி.. நானும் இனிமே காயப்போட்டா உதறித்தான் போடுவேன் உங்கள மாதிரி’ என்றான்.

’வெரிகுட்..’ என்றாள் அம்மாச்சி.       

‘அம்மாச்சி செடிங்களுக்குத் தண்ணி விடலாமா?’

’விடலாம்.. இன்னும் ரெண்டு துணிங்க இருக்கு காயப்போட்டுட்டு வரேன் இரு..’ என்று முடித்துவிட்டு சிறிய வாளி ஒன்று அங்கே இருந்தது. அதில் தண்ணீர் எடுத்து பெரிய தொட்டியில் வைக்கப்பட்டிருந்த கொய்யாச் செடியொன்று தண்ணீர் இல்லாமல் இலைகள் சற்றே சுருண்டிருந்தன..

அதைக் கவனித்துவிட்டு கவின் கேட்டான்.. ’ஏன் அம்மாச்சி.. இந்தச் செடி இலைங்க சுருக்கமா இருக்கு.. உதறிப்போடணுமா?’ என்றான்.

அம்மாச்சிக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தாள். ’அப்படி இல்லப்பா இதுங்களுக்கு தினமும் சரியா தண்ணி ஊத்தணும்.. இல்லாட்டிப் இப்படித்தான் வாடிப்போயிடும்..’

‘வாடிப்போயிடும்னா?’ என்றான் கவின்.

‘சுருங்கிப்போயிடும்.. அப்படியே தொடர்ந்து தண்ணீர் ஊத்தாம இருந்தா.. பட்டுப்போய் செத்துப்போயிடும்..’

‘சாமிகிட்டப்போயிடுமா?’

‘ஆமாம்..’

தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தாள்.. அம்மாச்சி. சின்ன குவளை ஒன்றைக் கவின் கையில் கொடுத்து அவனையும் தண்ணீர் ஊற்றச் சொன்னாள். கவின் போய் சட்டென்று அப்படியே ஒரு தொட்டிச் செடிக்குள்  குவளையைக் கவிழ்க்கப் பாதி தொட்டிக்குள் பாதி வெளியிலும் தண்ணீர் சிந்தியது.

‘கவின் அப்படி ஊத்தக்கூடாது. மெதுவா ஊத்தணும். தண்ணீரை வீணாக்கக்கூடாது’.

‘ஏன் அம்மாச்சி மெதுவா ஊத்தணும்?’

‘உனக்கு தாகம் எடுத்த எப்படித் தண்ணி குடிப்பே?’

‘ஸ்ட்ரா டம்ளர்ல குடிப்பேன்.’

‘ஏன்? அப்படியே டம்ளர் தண்ணீ முழுக்க உன் வாயில ஊத்துனா..

குடிக்க முடியாது அம்மாச்சி.. மூக்குல தண்ணி வந்துடும்..’ என்றான் கவின்.

‘வெரிகுட் அப்படித்தான்.. செடிங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமா தண்ணீ ஊத்துனா அதுங்க நிதானமாகக் குடிச்சி வளரும்.. ஓகேவா..’

‘ஓகே அம்மாச்சி..’

தண்ணீர் ஊற்றி முடித்துவிட்டு மாடியை விட்டுக் கீழே இறங்கினார்கள்.

கூடத்தில் கவின் தாத்தா உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அவர் பணியோய்வு பெற்ற ஆசிரியர்.

‘தாத்தா..’ என்றபடி அவர் அருகே போனான்.

‘வாங்க.. வாங்க.. கவின்.. எங்க போனீங்க?’

‘அம்மாச்சி மாடிக்குக் கூப்பிட்டுச்சு.. போனேன் தாத்தா.’.

‘வீட்டுப் பாடம் எல்லாம் எழுதியாச்சா.. கவின்?’

‘எழுதிட்டேன் தாத்தா.. எங்களுக்கு பைவ் டேஸ் லீவு விட்டிருக்காங்க.. ஜாலியா ஜாலி ரொம்பவா விளையாடப்போறேன்.. நீங்க இந்த பைவ் டேசும் பத்துக் கதை சொல்லணும் தாத்தா’ என்றான்.

‘ஓகே டீல் ஓகே. ஆனா தாத்தா என்ன சொல்லியிருக்கேன்?’

‘எதுக்குத் தாத்தா?’

‘நான் கதை சொன்னா நீ என்ன பண்ணணும்னு சொல்லியிருக்கேன்.. சொல்லு பார்ப்போம்..’

’ஒவ்வொரு நாளும் நான் ஏதாவது குட் ஆக்டிவிட்டி செய்யணும்.. அப்படிச் செஞ்சாக் கதை சொல்வேன்னு சொல்லியிருக்கீங்க. கரெக்டா தாத்தா?’ என்றான் கவின்.

‘ரொம்ப சரி.. நல்லது. இன்னிக்கு நீ என்ன செஞ்சே?’

‘நான் அம்மாச்சியோட மாடிக்குப் போய் வாடுன செடிக்கெல்லாம் தண்ணி ஊத்துனேன் தாத்தா..’ என்றான்.

’வாடிய செடியா.. அப்படின்னா?’ தாத்தா தெரியாதது போலக் கேட்டார்.

‘தாத்தா தண்ணீ ஊத்தாட்டி வாடிப்போயிடுமாம்.. சுருக்கமா இருக்குமாம்.. நாம தண்ணீயே ஊத்தாம விட்டுட்டாப் பட்டுப்போய் செத்துப்போயிடுமாம்.. அம்மாச்சி சொன்னாங்க..’

‘உன்னப் பாராட்டறேன் கவின்.. இது உண்மையிலயே நல்ல செயல்தான்..’

‘தாத்தா இன்னொன்னும் அம்மாச்சி சொல்லிக் கொடுத்தாங்க..’ என்றான் கவின்.

‘என்னது?’ என்றார் தாத்தா.

‘வாசிங்க மெசின்ல தோச்ச துணிங்களக் காயப்போடும்போது உதறிப்போடணுமாம்.. சுருக்கம் போயி.. அயர்ன் பண்ணமாதிரி துணி ஆயிடுமாம். நான் இனிமே என்னோட யூனிபார்ம அப்படித்தான் காயப்போடப்போறேன்.. தாத்தா’ என்றான் உற்சாகமாக.

‘நீ ரொம்ப நல்ல பையன் கவின். இன்னிக்கு உன்னோட செயல் ரொம்ப நல்ல செயல்’ என்று தாத்தா கவினை அரவணைத்துப் பாராட்டினார்.

‘தாத்தா கதை சொல்லுங்க’ என்றான்.

‘இப்பவே சொல்றேன்’ என்றார். சொல்ல ஆரம்பித்தார்.

’ஒரு ஊர்ல உன்ன மாதிரி ஒரு பையன் இருந்தான். அவன் பேரு குமரன். அவன் ரொம்ப நல்ல பையன். நல்லாப் படிப்பான். சீக்கிரமா வீட்டுப் பாடங்களைச் செய்து முடிச்சிடுவான். தன்னுடைய யூனிபார்ம அவனே போட்டுக்குவான். அவனோட ஷுவுக்குப் பாலிஷ் போட்டுடுவான்..  தானே பள்ளிக்கூடத்துல சாப்பிட்டுக்குவான்.. அத்தன நல்ல பையன். ஆனா அவன் ரொம்பக் குறும்புக்காரன். எந்தப்பிள்ளையா இருந்தாலும் சட்டுன்னு கைநீட்டி அடிச்சுடுவான். இல்லாட்டிக் கல்லெடுத்து அடிப்பான். அவன் நல்ல பையனா இருக்கறதால யாரும் இதைக் கண்டுக்காம இருந்துட்டாங்க.. போன வருஷம் தீபாவளி வந்தப்ப தெருவுல எல்லாரும் மத்தாப்புக் கொளுத்தி.. வெடி வெடிச்சாங்க.. அந்த குமரனும் மத்தாப்புக் கொளுத்திக் கொண்டாடிக்கிட்டிருந்தான்.. அப்போ ஒரு குட்டிநாய் வந்துடுச்சி. அது வெடிச்சத்தத்துக்குப் பயந்து ஓடுனுச்சி.. பசங்க விடாம அதைத் துரத்திப் பிடிச்சி வந்து தரையில் போட்டு அது பக்கத்துலேயே ஒரு சின்ன வெடியை வெடிக்க வச்சாங்க.. வெடி வெடிச்சதும்.. அந்த நாய்க்குட்டி ரொம்பப் பயந்துபோய் கத்த ஆரம்பிச்சுடிச்சி.. ஓடப் பாத்துச்சி.. இப்போ என்ன பண்ணாங்க.. நாயை ஒரு இடத்துல உக்கார வச்சி.. அது கழுத்து ஒரு கயிறக் கட்டி நல்லாக் கட்டிப்போட்டுட்டு.. அதுக்குப் பக்கத்துலே ஒரு கொட்டாங்குச்சில வெடிய வச்சு வெடிக்க வச்சாங்க.. படார்னு வெடி வெடிசச்துதலே அந்த நாய்க்கு மயக்கம் வந்து விழுந்துடிச்சி.’.

‘அய்யய்போ பாவம் தாத்தா.. அப்புறம் என்னாச்சு தாத்தா?’ என்றான்.

‘சொல்றேன் கேளு.. கொட்டாங்குச்சி வச்சி வெடிச்சதால அதுக்குப் பக்கத்துலே இருந்த சின்ன கல் வெடிச்சத்தத்துல பறந்துபோய் வெடி வெடிச்சான்ல குமரன் அவனோட அம்மாச்சி நெத்தில பட்டு, கிழிச்சு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடிச்சி..

‘என்ன தாத்தா சொல்றீங்க? கல் பறக்குமா?’

‘ஆமாம்.. சாதாரண தரையில வச்சா ஒண்ணுமில்ல. மண்ணுல வெடி வச்சா வெடி வெடிக்கிற அதிர்வுல..’

‘அதிர்வுன்னா தாத்தா…’ என்று இடைமறித்துக் கேட்டான் கவின்.

‘வைபிரேஷன்.. கிடுகிடுன்னு ஆடுறது.. மண், கல் எல்லாத்தையும்  தூக்கிப்போடும்.. அப்படிப் போன கல்தான் குமரனோட அம்மாச்சி நெற்றிலே ரத்தம் வரவழைச்சுடிச்சி.. அப்புறம் ஆசுபத்திரிக்குப் போய் கட்டுப் போட்டு அழச்சிட்டு வந்தாங்க..

           குமரன அவனோட அப்பா, அம்மா, அம்மாச்சி, தாத்தா யாருமே எதுவும் சொல்லாம அவனோட பேசறத நிறுத்திட்டாங்க.. அது குமரனுக்கு ரொம்ப வலிச்சது.. இனிமே அப்படிச் செய்யமாட்டேன்னு சொன்னான். ஒரு சின்ன கல் இப்படிச் செய்யுமான்னு நினைச்சு வருத்தப்பட்டான். அவனோட அம்மாச்சிக்கிட்டப் போயி இனிமே இப்படி செய்ய மாட்டேன் அம்மாச்சி.. என்னோடப் பேசுங்கன்னு சொன்னான்.. அவனோட அம்மாச்சியும் அப்புறம் பேசுனாங்க.. உடனே போய் அந்த குட்டிநாய் மேல தண்ணிய ஊத்தி மயக்கம் தெளியவச்சு.. அதுக்குப் பிஸ்கட் கொடுத்து அப்புறம் நல்லாப் போயிடிச்சு.. அன்னிலேர்ந்து யார் மேலயும் கல்லெடுத்து அடிக்கமாட்டேன்னு குமரன் சொன்னான்’ என்று கதையை முடித்தார் தாத்தா.

கவின் சொன்னான்.. ’தாத்தா நானும் இனிமே யார் மேலயும் கல்லெடுத்து அடிக்கமாட்டேன் தாத்தா’ என்றான்.

‘என்ன சொல்றே?’ என்று தாத்தா தெரியாததுபோலக் கேட்டார்.

‘இல்ல தாத்தா அன்னிக்கு சைக்கிள் ஓட்டும்போது பக்கத்து தெரு பசங்க வந்தாங்க.. எங்க சைக்கிள் மேல இடிச்சுத் தள்ளிவிட்டுட்டாங்க.. எல்லாரும் திட்டுனாங்க.. அவங்கள.. நான் கல்லெடுத்து அடிச்சேன் தாத்தா.. யார் மேலயும் கல் படலே.. ரத்தம் வரலே.. அதான் தாத்தா சொல்றேன்.. இனிமே யார் மேலயும் நான் கல் எடுத்து அடிக்கமாட்டேன்..’ என்றான்.

தாத்தா கவினை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு.. ’இதுவுங்கூட நல்ல செயல்தான் கவின்’ என்றார்.

000

இயற்பெயர்  பேரா.முனைவர். க.அன்பழகன் (ஹரணி) (1961)

தமிழ்ப்பேராசிரியர் (பநி)

1979 முதல படைப்புலகில்.  1000க்கு மேற்பட்ட சிறுகதைகள்.. கொஞ்சம் கவிதைகள்.. குறுநாவல்கள், நாவல்கள், 100க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பெற்றவை. கொஞ்சம் பரிசுகள். விருதுகள். பத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. படைப்புகளில் எம்பில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் பார்வை நூலாக என் நல்கள் வைப்பட்டுள்ளன. இதுவரை 70 நூல்கள் ஆய்வியல், அகராதியியல், மொழிபெயர்ப்பியல், மொழியியல், இலக்கியம், பக்தி இலக்கியம், இலக்கணம், சிறார் இலக்கியம், கட்டுரைகள், நாடகங்கள், கதைப்பாடல்கள் என 45 ஆண்டுகாலம் படைப்புலகில். கற்றது கடுகளவு. இன்னும் கல்லாதது உலகளவு. நன்றி.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *