“நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வாழ்க்கை அளவுக்கு அதிகமாக அற்புதங்களை சுமந்து கொண்டிருக்கிறது” பழைய கலைஞர் டீவியில் சாமியார் என சொல்லப்படும் ஒருவர் தனக்கு தெரிந்த தத்துவ மெய் ஞானக் கருத்தை கூறிக் கொண்டிருந்தார்.

வெளியே அம்மா தனது கொண்டையை இறுக முடிந்து இறந்த வீட்டின் மிஞ்ச சொச்ச ஞாபங்களை கூட்டி பெருக்கினாள். தாத்தா போஸ்ட்மேனாக வேலை செய்த ஊரில் அவர் மரித்து போனது எங்களுக்கெல்லாம் சந்தோசம் என்றாலும் கூட, அவரை தனியாக விட்டு விட்டு போனதற்காக இனி என் அம்மா காலம் முழுவதற்குள் புலம்பப் போகிறாள்.

அனுமந்தன்பட்டி கிராமமாக இருந்த காலம் முதலே தாத்தா இங்கே போஸ்ட் மேனாக வேலை கிடைத்து இந்த ஊருக்கு வந்துள்ளார். அன்று முதல் இப்போது வரை தாத்தாவை ஊரில் தெரியாத ஆட்கள் என யாருமே இருக்க முடியாது. அவர் பாட்டி இறந்து போன பின்பும் கூட, இந்த ஓட்டு வீட்டில் தான் இருப்பேன், உங்களோடு நகரத்திற்கு வந்து சீப்பட என்னால் முடியாது என பிடிவாதமாக கூறிவிட்டார். அந்த நாளில் தாத்தாவின் கண்கள் பழிங்கு கற்களைப்போல மின்னிக்கொண்டே சூரியனை பார்த்தவாரிருந்தது. நேற்று மதியம் தான் தீடீரென போன் வந்தது. கிழட்டு உடல் மூச்சை நிறுத்தி கொண்டது என்ற சேதி. இதை கேட்டதும், நான் அம்மாவிடம் அவர் இறந்து விட்டதாக சொன்னால் சேலை முந்தானையை விரித்து போட்டு ரோட்டில் கிடந்து உருள்வாள் என அஞ்சியே நான் சொல்லாமல், அவருக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி கூட்டிக் கொண்டு வந்தேன்.

நாங்கள் வரும் முன்பாகவே அவரது உடலை குளிப்பாட்டி இறுதிச் சடங்கிற்கான எல்லா வேலைகளும் அவர்களே செய்ய துவங்கிவிட்டனர். அந்த ஊரில் எல்லா சாதிகளுக்கும் தனி தனியே தேர் உண்டு. ஆனால் இந்த தடவை அசலூரிலிருந்து இஞ்சனை கொண்ட மாடன் ரதத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ஊருக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றாலும் கூட அவர்கள் ஏன் இத்தனை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என எனக்கு தோன்றிக் கொண்டே இருந்தது. நானோ அங்கே பரபரப்பாக ஆட்களுக்கு உத்தரவிட்டு கொண்டிருந்த பெரியவரை மறித்து பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து நீட்டினேன். அவர் என்னை பார்த்து புன்னகையுடன்..

“தம்பி, உள்ள வைங்க தம்பி, எங்க போஸ்ட் மாஸ்டருக்கு நாங்க செய்யாம வேற யாரு செய்வா, நீங்க பாட்டுல காச எடுத்து நீட்டிட்டு இருக்கீங்க” என்றவாறு நடையை கட்டினார்.

காற்று வருவதற்கான சூழலே இல்லாத இந்த ஓட்டு வீட்டில் தாத்தா இத்தனை காலம் எப்படித்தான் வாழ்ந்தாரோ என்ற கேள்வி என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. தாத்தாவை குளிப்பாட்டிய மரச்சேரை தூக்கிக் கொண்டே போன ஒரு பெரியவர்,

“ஆரு? போஸ்ட் மேன் பேரனா? சின்ன பிள்ளையில நம்ம கடையில புரோட்டா திங்க வருவ, அப்ப பாத்தது”

எனக்கும் இந்த முகத்தை நியாகமிருக்கிறது.. புரோட்டா மாவை எப்படி கல்லில் பேப்பரை போல வீசி, அதனை காகிதமாக்கி, பாம்பு போல சுருட்டி, தட்டி, கல்லில் போட்டு எடுக்கும் போது, நான் அதனை அதிசய காட்சி போல பார்ப்பேன். ஒரு முறை புரோட்டாவை தட்டிக் கொண்டிருக்கையில் சிறிய வேர்வை துளி, புரோட்டாவில் விழப் போக அதனை லாவகமாக பிடித்த வித்தை இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கிறது.

பழைய இரும்பு சேரில் தாத்தாவை சாத்தி, ஒருவர் தோளைப் பிடித்து, பிடித்து பதமாக சேவிங் செய்தார். அதே நேரம் ஊதுபத்தி சாம்பிராணி வாசனையை கிளப்பி விட்ட கிழவி, மெல்ல பல் செட்டை விரல் இடுக்கில் விட்டு சரி செய்த கொண்டே, வெற்றிலையை மடித்து வாயில் வைத்தாள். இந்த ஊரில் பிறக்காத இந்த தாத்தாவை பார்க்கவா இத்தனை ஆட்கள் வந்திருக்கிறார்கள் என எனக்கே ஆச்சரியமாக இருந்தது. வரும் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஏதாவது ஒரு கதை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

“உங்க தாத்தா தானப்பா அந்த காலத்துல எங்களுக்கு சாமி, ஒரு சேதிய பூவா கொண்டு வந்து சேக்குறதுல அந்தாள மிஞ்சி ஆரு இருக்கா..”

“மணியார்டர் காசு எம்புட்டு இருந்தாலும், ஒத்தரூபா கூட எடுக்காம அப்படியே கொடுத்துபுட்டு, அஞ்சு, பத்து குடுத்தாலும், வாங்க மாட்டாருயா இந்த போஸ்ட் மேன்”

“ஆத்தே… அன்னைக்கு என் பேத்திக்கு உடம்புக்கு முடியலனு தந்தி வந்தப்ப, மேக்க கரட்டுக்குள்ள ஆடு மேச்சுக்கிருந்த என்னைய தேடி வந்து இவரு தகவல் சொல்லவிட்டியுந்தே, நான் ஓடோடி போய் என் பேத்திய பாத்தேன். இல்லனா, அவ மாஞ்சு போன பிறகு தான பாத்திருக்க முடியும்”

“கொஞ்ச நாளா முட்டி வலினு சொல்லிகிட்டு கிடந்தாரு மனுசேன். பீடி கணக்கு வழக்கில்ல, ஒரு நாளைக்கு ரெண்டு கட்டு பீடியா குடிக்கிறது, நெஞ்சு கூடு என்னாகிறது?”

“அவரு பாட்டுல, நம்ம டீக்கடையில வந்து உக்காந்தார்னா, போற வர ஆளுகளுக்கு வணக்கம் போட்டுகிட்டே பொக்க வாய வச்சு சிரிப்பாரு, ரெண்டு வடைய திண்ணுபுட்டு, டீய குடிச்சுட்டு போனாருனா, அப்பறம் மதிய சாப்பாட்டுக்கு தே வருவாரு”

“இப்ப ஒரு மாசமாதே ஆளு ஒரு மாதிரியா இருந்தாப்புல, என்னனு தெரியல, அவரு பாட்டுல நம்ம ஆத்துக்கு பக்கத்துல இருக்க, ஆழ மரத்துக்கு கீழ உக்காந்து ஓட்ற தண்ணியவே பாத்துட்டு இருப்பாரு”

தாத்தாவிற்கு ஊருக்குள் ஏகப்பட்ட நலம் விரும்பிகளும், நண்பர்களும் இருப்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது. பீடி குடித்து குடித்து, அவரது நரைத்த மீசை மொத்தமும், செம்பட்டை நிறத்தில் இருந்தது. அம்மா உள்ளே ஒப்புக்கு அழுகிறாள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அன்று தாத்தா அவர்களோடு வர விருப்பமில்லை என கூறும் போது கூட, அவள் உள்ளூர சந்தோசப்பட்டுக் கொள்வதை கண்களே காட்டிக் கொடுத்தது. அம்மா சிறு பிள்ளையாக இருக்கும் போது பாட்டி செத்து விட்டாள். பால் கறந்து கொண்டிருக்கையில் மாடு மார்பில் உதைத்ததில் படுத்த படுக்கையானவள், கொஞ்ச நாளில் போய் சேர்ந்து விட்டாள். அவளுக்கு இந்திரா காந்தி என பெயர். ஒவ்வொரு முறை தாத்தா வீட்டுக்கு வரும் போதெல்லாம், பாட்டி போட்டாவிற்கு கீழே உள்ள இந்திரா காந்தி என்ற பெயருக்கு சம்மந்தமே இல்லாமல் கண்டாங்கி சேலையில் சிரித்து கொண்டிருப்பாள்.

டிரம்ஸ் மேளங்கள் எல்லாம் ஒரு சேர முழங்க ஆரம்பிக்க, ஊர் பெரியவர் என்னிடம் வந்து,

“என்னய்யா.. ஒரு மூனு மணி வாக்குள தூக்கிறலாமா, சொந்த பந்தம் யாரும் வர வேண்டியது இருக்கா?”

“இல்லைங்கயா சொந்த பந்தம்னு சொல்லிக்கிற அளவுக்கு யாருமில்லைங்க”

“சரிப்பா, சட்டுபுட்டுனு ஆக வேண்டியத பாப்போம், மேற்படி சாப்பாடு செலவ மட்டும் நீங்க பாத்துங்கங்க.. மத்ததெல்லாம் ஊர் பொறுப்பு.” என்றவாறு விறு விறுவெனெ கட்டளைகளில் மும்முரமானார்.

தாத்தாவின் இறுதி சடங்கு மேள தாளத்தோடு அமர்களமாக நடந்தேறியது. இடுகாட்டுக்கு இத்தனை சனம் வருமென நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. மொத்த ஊரே திரண்டு வந்திருந்தது. தாத்தாவின் உடலை புதைத்த பின்பு, ஊரில் உள்ள எல்லோரிடமும் வசூலித்த போடு வன காசை ஒரு துண்டை விரித்து பங்கு பங்காக பிரித்து வைத்திருந்த பெரியவர், முடி வெட்டியவருக்கும், உடலை புதைக்க குழி தோண்டியவருக்கும், மேளம் அடித்தவருக்கும் என தனிதனியாக பிரித்து கொடுத்தார்.

எப்படியோ எல்லா சடங்குகளும் முடிந்த பின்பு, ஒரே ஒரு விளக்கு ஒளியை மட்டும் வீட்டில் விட்டு ஊர்க்காரர்கள் தங்கள் அன்றாடங்களை தேடி ஓடினார்கள். அம்மா வீட்டை எல்லாம் கூட்டி அள்ளி தாத்தாவின் நினைவுகளை ஒவ்வொன்றாக அந்த வீட்டிலிருந்து அப்புறப்படுத்திக் கொண்டிருந்தாள். வீட்டு வாசலில் கோவை செடியின் கொடிகள் சுற்றிருயிருந்த தாத்தாவின் சைக்கிள் ரிம்மில் துருப்பேறி இருந்தது. சைக்கிள் இடுக்கு கம்பியில் இந்தியன் போஸ்ட் என்ற சிம்பள் வரையப்பட்டிருந்தது.

அந்த காலத்து ஹம்பர் சைக்கிள் அது. கிட்ட தட்ட எப்படியும், அதற்கு நாற்பது வயசுக்கு மேல் இருக்கும். இந்த சைக்கிளில் தான் அவர் ஊரெல்லாம் சுற்றி தபால் செய்திகளை கொண்டு சேர்த்துள்ளார் என நினைத்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு செய்தி இவ்வளவு காலம் நம்மை ஆட்கொள்ளுமா என்ற ஆச்சரியத்துக்கு என்னை அது தள்ளியது.

அம்மா அவரது அறைக்குள் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் காலி செய்யும் வேலையை எனக்கு கொடுத்திருந்தாள். அவளது கணக்கு படி துக்கம் தோயும் இன்னும் இரண்டு நாட்களில், வீட்டை பேரம் பேச ஆரம்பித்து விடுவாள். நான் வீட்டிலிருந்த ஒவ்வொரு பொருளாக அப்புறபடுத்த ஆரம்பித்தேன். தாத்தாவின் பெட்டியில் சில வேட்டி சட்டைகளும், அவர் பணிபுரிந்த காலத்தில் வழங்கப்பட்ட பரிசு கேடயங்களை தவிர பெரியதாக ஒன்றுமில்லை.

அந்த வீட்டின் நடு சுவற்றில் பழைய காலத்து தோள் பை ஒன்று தொங்கி கொண்டிருந்தது. பார்க்க அந்த காலத்து தபால்காரர்கள் பயன்படுத்தும் பை போல தெரிந்தது.  நான் மிக சிரமபட்டு அதனை திறந்து பார்த்தேன். உள்ளே நிறைய கடிதங்கள் இருந்தன. அவை எல்லாம் 30 வருடத்திற்கு, முன்பு எழுதப்பட்ட கடிதங்களை போல் தோன்றின. பழைய INLAND LETTER CARDS, POST CARDS, மற்றும் சில சாதாரண கடிதங்களும் இருந்தன. அவை கரையான்களால் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக இரண்டு மூன்று தடிமனான பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இருந்தது. அவற்றை கலைத்து பார்த்து கொண்டிருந்த போது நிறைய கடிதங்கள் மொத்தமாக ஒரு கயிறால் கட்டப்பட்டு இருந்தது.

அதில் அனுப்புநரின் முகவரியில் வேல் ராஜ், (434), பிளாக் 3,  மெட்ராஸ் மத்திய சிறைச்சாலை. என குறிப்பிட்டிருந்தது. பெறுநராக எல்லா கடிதங்களிலும் ஒரே முகவரியாக தான் இருந்தது. எனக்கு எல்லா கடிதங்களையும் படிக்க வேண்டுமென ஆர்வம் தூண்டியது. அந்த பெறுநரில் உள்ளது பெண்ணின் பெயர் தான். வளர்மதி, 37, வார்ட் 4, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம் வட்டம், மதுரை மாவட்டம் என்ற அந்த முகவரியில் பெண்ணின் பெயரை பார்த்ததும் அதிலிருக்கும் ரகசியத்தை உடைத்து பார்க்கும் எண்ணம் என்னை ஆட் கொண்டது.

ஆனால் அந்த கடிதங்கள் அனைத்தும் மடிக்கப்பட்ட INLAND LETTER CARDS-ஆக இருந்ததால் நான் அதனை திறந்து பார்ப்பது அபத்தம் என தோன்றியது. ஆனாலும் மனம் அதிலிருக்கும் ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டியது. இதனை பற்றி அம்மாவிடம் கேட்டால் ஏதாவது சொல்வாள்.

அக் கடிதங்களில் எழுதப்பட்டிருந்த முகவரிக்கு சென்று பார்கலாம் என முடிவெடுத்து ஒதுங்க வைக்கும் வேலையை அப்படியே போட்டுவிட்டு வீதியில் இறங்கினேன். வெளியே பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசிக்கொண்டே வாசல் பெருக்கிக் கொண்டிருந்த அம்மா, ’எங்க போற?’ என கேட்டாள். ’நா வந்துடறேன்’ என சுருக்கமாக சொல்லிவிட்டு நடந்தேன். எப்பவும் இப்படித்தான் என பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் அம்மா  புலம்பத் தொடங்கினாள். நான் அவை கேட்காத தூரத்துக்கு நடந்து வந்திருந்தேன்.

அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் லெட்டர்களில் இருந்த விலாசத்தை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமானதாக இல்லை. அந்த விலாசம் எழுதியிருந்த வீடு பாழடைந்ததாக காட்சியளித்தது. ’தம்பி இங்க என்ன பண்றீங்க?’ என ஊர் பெரியவர். பின்னால் இருந்து அழைப்பது கேட்டு திடுக்கிட்டவனாக திரும்பினேன். ’இந்த வீடு…’ என அவரிடம் இழுத்தேன். அவர் பெருமூச்சுடன், ’ஒரு காலத்துல ஜேஜேனு இருந்த வீடு இப்போ எங்க எங்கயோ சிதறிப் போயிட்டாங்க!’ என்றார் வருத்தம் தோய்ந்த முகத்துடன்.

பின் குழப்பமாக, ’உனக்கு அவங்கள தெரியுமா?’ என்று கேட்டார். இந்த வீட்டுக்கு டெலிவரி செய்யப்படாமல் கடிதங்கள் குவியல் குவியலாக இருப்பதை அவரிடம் சொல்ல வாயெடுத்தும் ஏனோ தொண்டையத் தாண்டி ஒரு வாரத்தையும் வரவில்லை. மாறாக ’வேல்ராஜ்னு யாராவது இந்த ஊர்ல இருந்தாங்களா?’ எனக் கேட்டேன். சற்று வியப்படைந்த பெரியவர், ’வேல்ராஜா, அந்த பய தான் கொல கேஸ்ல ஜெயிலுக்கு போயி அங்கேயே செத்துட்டானே!’ என ஒருவித கடுகடுப்புடன் சொன்னார். ’இந்த வீட்ல இருந்த வளர்மதி?’ என்று கேட்டேன். ’அந்தப் பொண்ணு இப்போ பட்டணத்துலதான் இருக்கு!’ என்று சுருக்கமாக சொன்னார்

’என்ன தம்பி தாத்தா வீட்டுல கடுதாசி ஏதும் கெடச்சதா?’ என்று பெயர் வினயமாக கேட்டார். பின் எனது பதிலை எதிர்பாராமலேயே பேசத் தொடங்கினார். ’இந்த வீட்டு பொண்ணை அந்த வேல்ராஜ் பய சகவாசம் பிடிச்சு சுத்திகிட்டு இருந்தான். ஆனா அது இவ அப்பன்காரனுக்கு பிடிக்கல. அவன் நேரமோ இல்ல இவன் நேரமோ அந்த பய பக்கத்து ஊர் திருவிழால நடந்த கொல கேஸ்ல மாட்டி ஜெயிலுக்கு போயிட்டான். அப்புறம் கொஞ்ச காலம் பிறகு இந்த பொண்ணுக்கு கடுதாசி எழுதியிருக்கான். அத உங்க தாத்தா இங்க கொண்டுவந்தப்ப அவ அப்பன்காரன் அந்த பொண்ணு கண்ணு முன்னாடியே அத கிழிச்சு அடுப்புல போட்டுட்டான். அந்த பொண்ணு அழுதது தான் மிச்சம். கொஞ்ச மாசத்துலேயே கல்யாணம் பண்ணி பட்டணத்துக்கு அனுப்பி வச்சுட்டான் அப்பன்’.

பெரியவர் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்த போதே எனக்கு முழு கதையும் புரிந்துவிட்டது. இந்த நிறைவேறாத காதல் கதைக்கு எனது தாத்தா சாட்சியாக இருந்திருக்கிறார். அவர்களுக்கிடையேயான காதலின் கடைசி சுவடாக இந்த கடிதங்கள் இருந்திருக்கின்றன. இதை கொண்டு சேர்க்க முடியாதது அவருக்கு நிச்சயம் வருத்தம் தருவதாகவே இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

நான் பெரியவரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு  வீட்டுக்குத் திரும்பினேன். அம்மா கொள்ளைப் புறத்தில் தீமூட்டிக் கொண்டிருந்தாள். நான் தாத்தாவின் அறைக்கு சென்று பார்த்தபோது அது காலியாக கிடந்தது. நான் கொள்ளைக்கு சென்று அம்மாவிடம் கேட்டேன். அவள் இப்படிச் சொன்னாள், ’ஒவ்வொன்னா பாத்து பாத்து எடுத்து வைக்க அங்க என்ன சொத்துப் பத்தரமா குமிஞ்சி கெடக்கு. எல்லாம் பழைய கடுதாசிங்கதான அதான் மொத்தமா போட்டு எரிச்சிட்டேன். இப்போ எவ்ளோ வேல மிச்சம் பாரு’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.

நான் தீயில் உக்கிரமாக எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்த கடிதங்களை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தேன். எனது தாத்தாவால் நிறைவேற்ற முடியாத வேலையை நான் முடிக்க வேண்டும் என்ற கடப்பாடு அதில் எரிந்து கொண்டிருந்ததாகப்பட்டது. வேல்ராஜின் காதலை வளர்மதியிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எனது பெருவிருப்பம் அந்த தீயில்  எரிந்து சாம்பலாகிக்கொண்டிருந்தது.

யாராலும் வாசிக்கப்பாமலேயே அந்த உணர்வுகள் எரிந்து கொண்டிருந்தது வருத்தமாக இருந்தாலும் கடிதங்களில் சிறைப்பட்டு ஸ்தம்பித்து நின்ற காலமும் எழுத்துக்களும் மனப் போராட்டங்களும், ஆண்டாண்டு காலமாய் விழிப்புக்காக உறங்கிக் கொண்டிருந்த ஆன்மாக்களும் தீயினால் விடுதலைபெற்று காற்றோடு கலப்பது ஒருவிதத்தில் ஆறுதலாகவும் இருந்தது. ஆனால் வேலை மிச்சம் என்று அங்கிருந்து நகர்வதற்கு மட்டும் என்னால் முடிந்திருக்கவில்லை.

000

சிபி சரவணன் 

ஊர் : தேனி மாவட்டம், 

வேலை: ஊடகவியலாளர்

அஞர் என்ற நாவலும், எச்சிலை என்ற சிறுகதை தொகுப்பும் எழுதி உள்ளேன். 

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *