-சினான் ஆண்டூன்

அம்மாவும் அப்பாவும் பொய் சொல்லிவிட்டார்கள்.

அவர்கள் என்னுடன் இல்லை.

நான்மட்டும் மணிக்கணக்கில்

தனியே நடந்தேன்.

அவர்கள் பொய் சொல்லிவிட்டார்கள்.

அவர்கள் சொன்னதுபோல்

யாருமே தேவதைகள் இல்லை,

நடந்து போய்க்கொண்டிருப்பவர்களில் பலரும் குழந்தைகள்.

ஆசிரியரும் பொய் சொல்லிவிட்டார்.

பள்ளியில் நாங்கள் வாசித்த கவிதையில் இருப்பதுபோல

என் காயங்கள் சிறு பூக்களாக மாறவில்லை.

சித்து பொய் சொல்லவில்லை.

அவன் அங்கேயே இருந்தான்.

செத்துப்போவதற்கு முன் செய்துகொடுத்த

சத்தியத்தின்படி

அவன் அங்கேயே இருக்கிறான்.

ஜாஃபாவை நினைத்துக்கொண்டே

தன்னுடைய ஊன்றுகோலின்மீது சாய்ந்துகிடந்தவனைக் கண்டுபிடித்துவிட்டேன்.

என்னைப் பார்த்ததும்

கழுகைப்போல்

தன் கைகளை அகல விரித்தான்.

ஊன்றுகோலோடு களைத்துப்போயிருந்த

ஒரு கழுகைப் போல….

நாங்கள் அணைத்துக்கொண்டோம்.

அவன் என் கண்களை முத்தமிட்டான்.

***

நாம் ஜாஃபாவுக்குத் திரும்பிப் போகிறோமா சித்து?

நம்மால் போகமுடியாது.

ஏன்?

நாம் இறந்துவிட்டோம்

அப்படியானால் நாம் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறோமா, சித்து?

நாம் பாலஸ்தீனத்தின் ஹபிபியில் இருக்கிறோம்.

பாலஸ்தீனமே சொர்க்கம்

…..

அதுவே நரகம்.

நாம் இப்போது என்ன செய்யலாம்?

நாம் காத்திருக்கலாம்.

நாம் எதற்காகக் காத்திருக்கப் போகிறோம்?

மற்றவர்களுக்காக

……

அவர்கள் திரும்பி வருவதற்காக.

கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத்தன்மைகொண்ட ஈராக்கைச் சேர்ந்த சினான் ஆண்டூன் நியூ யார்க் பல்கலைக்கழகத்தின் ‘கலாட்டின் ஸ்கூல் ஆஃப் இண்டிவிஜூவலைஸ்ட் சொசைட்டி’யில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

**

மொழியாக்கம்- கயல்

கயல்

கவிதைகளை தொடர்ந்து எழுதி புத்தகங்கள் வெளியிட்டவர். மொழியாக்கத்தில் ஆர்வமாய் சமீப காலமாய் இயங்குபவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *